Wednesday, August 27, 2008

இனிமேல் 'F' தமிழ் எழுத்து?


தமிழர்கள் Form, Friend, Fan, Firefox, Frame, Photo, Phenol போன்ற எண்ணற்ற ஆங்கிலச் சொற்களை அன்றாட வாழ்வில் புழங்குகிறோம். ஆனால், மற்ற இந்திய, இலத்தீன-கிரேக்க-ஐரோப்பிய மொழிகளைப் போல் F ஒலியைத் தமிழில் எழுதிக் காட்ட இயலாதது பெரும் குறை.


தொல்காப்பியம், நன்னூல் எழுதியோர் வெளிநாடு சென்ற கடவுச்சீட்டு ஆதாரங்கள் கிடைக்கவில்லை. எனவே, அக்காலத்தில் F அறிமுகம் ஆகாமல் இருந்திருக்கலாம். எனினும், காலம் காலமாக அடுப்பு, சுருட்டு பற்ற வைத்து நெருப்பை அணைக்கும் போது, தமிழர்கள் அனைவரும் ‘foo… foo’ என்றே ஊதுகின்றனர். தற்காலத்திலும், குடித்து விட்டு சாலையில் வருகையில் காவலர்கள் மறித்து ஊதிக் காட்டச் சொன்னால் ‘foo… foo’ என்றே ஊதுகின்றனர். இதில் இருந்து F ஒலி தமிழர்களுக்கு அறிமுகமானதே என்று அறியலாம்.


கிரந்தக் கிறுக்கர்கள் சிந்தனைக்கு...

தமிழ் இணைய உலகில் தமக்கெனத் தனியொரு சிறப்பிடத்தைப் பிடித்துள்ள ஐயா.இரவி சங்கர் அவர்கள் தம்முடைய வலைப்பதிவில் எழுதியுள்ள இந்த இடுகையை, மலேசியத் தமிழர்கள் கண்டிப்பாகப் படித்திடவேண்டும் என்ற நோக்கத்தில் திருத்தமிழில் வெளியிடுகின்றேன். -சுப.நற்குணன்


கிரந்த எழுத்துப் பயன்பாடு குறித்து சிந்திக்கையில் எழும் எண்ணங்கள்:

**thamiழ், thiruஞaanasambandhar, vaள்ள்i, faன், hஆட், jஓக், shஅவர், பs என்று எழுதுவதற்கும் விஜய், ஹாரி, ஜெய் என்று எழுதுவதற்கும் என்ன வேறுபாடு? ஆங்கிலத்தோடு தமிழ் கலந்து எழுதுவது உறுத்துகிறது, பிழை என்றால் கிரந்தத்தோடு தமிழ் கலந்து எழுதுவது மட்டும் ஏன் உறுத்த வில்லை? பழகிப் போவதால் ஒரு பிழை சரியாகுமா?


**டாய்ட்ச், நெதர்லாந்து மொழிகளில் ஜ ஓசை இல்லை. ramanujan என்று எழுதினால் ராமானுயன் என்று தான் வாசிப்பார்கள். அது அவரை மரியாதைக் குறைவாகச் சொல்கிறார்கள் என்று ஆகுமா? தமிழில் இராமானுசன் என்று எழுதினால் மட்டும் ஏன் மரியாதைக் குறைவு என்று நினைக்கிறார்கள்? thamil என்று கூட எழுதாமல் tamil என்று ஆங்கிலேயர் எழுதுவது தமிழரை அவமதிப்பதாகுமா? கிரந்தம் கலந்து ஒலிப்பு பிசகாமல் எழுதி ஒருவரைக் காறித் துப்பவும் முடியும். கிரந்தம் தவிர்த்து எழுதி ஒருவரைப் போற்றவும் முடியும். ஒருவரைப் போற்றவோ தூற்றவோ ஒலிப்பு ஒரு பொருட்டே இல்லை.


**இந்து, பௌத்த, இன்னும் பல சமய மந்திரங்களின் ஒலிப்பில் மந்திர ஆற்றல் உள்ளதாகவும் அதைக் காக்க கிரந்தம் அவசியம் என்றும் சொன்னால், சீன, சப்பானிய மொழிகளில் இந்த ஒலிப்புகளுக்குத் தொடர்பே இல்லாமல் இம்மந்திரங்கள், பெயர்களைச் சொல்லி வழிபடுகிறார்களே? அவர்களுக்கு அருள் கிடைக்காதா? கிரந்த எழுத்துகளே கலக்காமல் பாடல் பாடிய நாயன்மார்கள், ஆழ்வார்கள் வீடுபேறு அடையவில்லையா? பக்திக்கு ஒலிப்பு எவ்விதத்தில் முக்கியமாகிறது? மொழியின் இயல்பு காரணமாகவோ கவனக் குறைவு காரணமாகவோ இயலாமை காரணமாகவோ ஒருவர் ஒலிப்புப் பிசகிப் பேசினாலும் பாடினாலும் பக்தனின் உள்ளத்தை அறிந்து அருள இயலாத மூடரா கடவுள்? ஒரு கடவுளுக்குப் பல அவதாரங்கள், ஒவ்வொரு அவதாரத்துக்கும் பல பெயர்கள், ஒவ்வொரு மொழி, நாட்டிலும் ஒவ்வொரு ஒலிப்பு என்று இருக்கையில் ஒரு கடவுளின் பெயரை ஒலிப்பு கெடாமல் எழுதுவது அவசியமா? கண்ணன், திருமகள் என்று கிரந்த எழுத்துத் தேவையின்றி பிற மொழிச் சமயப் பெயர்களையும் தமிழாக்கிக் கூட எழுதலாமே? எல்லாம் கடந்த ஒரு ஓசையில் தான் தங்கி இருக்கிறாரா? ஒலிப்பை மாற்றிச் சொன்னால் மதிப்புக் குறைவு என்று கோபப்படுவரானால், பக்கத்துத் தெரு அரசியல்வாதிக்கும் கடவுளுக்கும் அவரது தூதர்களுக்கும் என்ன பெரிய வேறுபாடு?


**கிரந்தம் கலக்காமல் தமிழ் எழுத்துகளில் மட்டும் எழுத வேண்டும் என்று சட்டம் இல்லை. அதே போல், கிரந்தம் கலந்து தான் எழுத வேண்டும் என்றும் சட்டம் இல்லை. தமிழ் இலக்கணப் படி பள்ளியில் சொல்லித் தரப்பட்ட தமிழ் எழுத்துகளை மட்டும் கொண்டு எழுதுவதற்கு எவருக்கும் முழு உரிமை உண்டு.


**“தமிழ் இயல்புக்கு ஏற்ப ஒலிகளை உள்வாங்கியும் கிரந்தத் தவிர்த்தும் எழுதுவது தங்களை, தங்கள் நம்பிக்கைகளை அவமதிப்பதாகும்” என்று எவரும் சொல்வது ஒரு தொன்மையான இனத்தின் தன்மானத்துக்கு விடப்படும் நேரடி மிரட்டலாகும்.


**தமிழில் எழுதும் போது தமிழ் ஒலிகளை மட்டும் பயன்படுத்துங்கள் என்று தமிழரிடம் வேண்டுவது எவ்வாறு தமிழ்த் திணிப்பாகும்?


**பிற மொழி ஒலிப்புகள், அதை எழுதுவதற்கான தேவை ஏதோ புதிதாய் எழுந்தது இல்லை. தொல்காப்பியக் காலத்தில் தமிழருக்கு பிற மொழி, வட மொழியனருடன் தொடர்பு உண்டு. அதனாலேயே அச்சொற்களை எப்படி ஆள்வது என்று இலக்கணம் இயற்றப்பட்டது. வரலாற்றுக் காலம் நெடுகிலும் உலகம் முழுக்க வணிகத் தொடர்புகளைத் தமிழர் கொண்டிருந்திருக்கின்றனர். இத்தனை காலமும் கிரந்தம் இன்றி இருக்க வல்லதாய் இருந்த தமிழுக்குத் தற்போது மட்டும் கிரந்தத்தின் தேவை என்ன?


**புஷ்பா, ஹரீஷ் என்று எழுதினாலும் எங்கள் ஊர்க்காரர்களுக்கு புசுப்பா, அரீசு என்றே அழைக்க வருகிறது. அதை ஏன் புசுப்பா, அரீசு என்றே எழுதி விட்டுப் போகக்கூடாது? சார்ச்சு புசு, சாக்கி சான் என்று எழுதினாலும் அவர்கள் யாரும் நம்மோடு சண்டைக்கு வரப் போவதில்லை. அவர்களே கண்டு கொள்ளாத போது நாம் ஏன் விழுந்து விழுந்து ஒலிப்புத் துல்லியம் காட்ட வேண்டும்? கிரந்த ஒலிகள், எழுத்துகள் தேவைப்படுவோரைக் காட்டிலும் அவற்றின் தேவையின்றி வாழும் தமிழர் எண்ணிக்கை மிகக் கூடுதல். கிரந்தத்தை வலியுறுத்துவது தான் அவர்கள் மேலான உண்மையான திணிப்பு.


**கிரந்த எழுத்துகளைப் பொது ஊடகங்களில் பயன்படுத்துவது என்பது ஒரு சிலர் முடிவு எடுத்த, ஒருவரைப் பார்த்து இன்னொருவர் கண்மூடித்தனமாகப் பின்பற்றிய மரபு. கிரந்த எழுத்துப் பயன்பாடு என்பது திறந்த முறையில் மொழியிலாளர்களைக் கலந்துரையாடி எடுக்கப்பட்ட இறுதி முடிவு அல்ல. கிரந்த எழுத்து அறிமுகத்தில் பிற மொழி, சமய, இனத்தினர் நலமே மிகுந்துள்ளதே தவிர தமிழ், தமிழர் நலம் காக்கப்பட்டதாகத் தெரியவில்லை.


**அச்சூடகங்களைக் காட்டிலும் இணைய ஊடகத்தில் ஒலிப்பைச் சுட்ட எழுத்துகளின் தேவை குறைவு. ஒலிக்கோபுகள் மூலமே ஒலிப்பை எளிதாகச் சுட்ட முடியும். வருங்காலம் முழுக்க முழுக்க இணைய மயமான உலகாக இருக்கும் என்பதால் ஒலிப்பைக் கற்பதற்கு எழுத்துகளை மட்டும் தங்கியிருக்கத் தேவை இல்லை.


**ஆங்கிலத்தில் 26 எழுத்துகள் மட்டும் இருப்பது கற்றுக் கொள்ள குழந்தைகளுக்கு இலகுவாக இருப்பதாகவும் தமிழில் 247 எழுத்துகள் இருப்பது சிரமமாக இருப்பதால் அதைக் குறைத்து எழுத்துச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்றும் சொல்பவர்கள் மேற்கொண்டும் கிரந்த எழுத்துகளுக்காக (ஸ, ஷ, ஜ, ஹ, க்ஷ, ஸ்ரீ) 66 மேலதிக எழுத்துகளைக் கற்கச் செய்வது ஏன்?


**பல நாடுகள், சமயங்கள் தோன்றுவதற்கு முன்பே தமிழ் தோன்றியது. பல நாட்டினரும் பல சமயத்தினரும் தமிழ் பேசுகின்றனர். ஒரே பிறப்பில் நாட்டையும் சமயத்தையும் ஒருவர் மாற்றிக் கொள்ள முடியும். ஆனால், தாய்மொழியை மாற்றிக் கொள்ள இயலாது. எனவே, நாடுகள், சமயங்களைக் காட்டிலும் மொழி பெரிது என்று கருதாவிட்டாலும், அவற்றுக்குத் தருவதற்கு ஈடான மதிப்பை மொழிக்கும் தர வேண்டும்.

Tuesday, August 19, 2008

மலேசியாவில் மறைமலையடிகள் விழா

மறைமலையடிகளார் தமிழ் மொழிக்கும் சிவ நெறிக்கும்(சைவ சமயம்) 100 ஆண்டுகளுக்கு முன்னர் அருந்தொண்டாற்றியப் பெருமகனார்.

தமிழ், ஆங்கிலம் மற்றும் வடமொழி ஆகிய முமொழிகளில் தலைசிறந்த புலவராவார்.

50 நூல்களை எழுதி தமிழுக்கு அரும்பணியாற்றியவர் மறைமலையடிகளார்.

அடிகளாரின் சிறந்த பணியினை நினைவு கூரும் நோக்கத்துடன் மறைமலையடிகளாரின் நிறைதமிழ் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மறைமலையடிகளாரின் நிறைதமிழ் விழா வரும் ஞாயிற்றுக்கிழமை 24.8.2008இல் கோலாலம்பூர் சோமா அரங்கம், விஸ்மா துன் சம்பந்தனில் நடைபெறும். இந்நிகழ்ச்சி காலை மணி 9.00 லிருந்து பிற்பகல் மணி 3.00 வரையில் நடைபெறும்.

இவ்விழா பெட்டாலிங் ஜெயா தமிழ் இளைஞர் மணிமன்ற ஏற்பாட்டில் நடைபெறுகிறது. தமிழ் மக்கள் பெருந்திரளாக வந்து கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகின்றனர்.


  • தொடர்புக்கு: சி.ம. இளந்தமிழ் 012-3143910. elantamil@gmail.com
நன்றி:- மலேசியாஇன்று

**************************************************************************

இவர்தான் மறைமலை அடிகள்

தமிழ்க்கடல் மறைமலை அடிகளாரின் பிறந்த நாள் இந்நாள் (1876). தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படக் கூடியவர் - ஆரியத்தின் கடும் எதிரி - இந்து மதம் வேறு - தமிழர் சமயம் வேறு என்பதில் உறுதியாக இருந்தவர்.

சென்னைப் பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் 1933 திசம்பர் 23, 24 ஆகிய நாள்களில் தமிழ் அன்பர் மாநாடு நடை பெற்றது. சென்னைப் புத்தகால யப் பிரச்சார சங்கத்தார் இம் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்த னர். அதன் தலைவர் கே.வி. கிருஷ்ணஸ்வாமி அய்யர், பொக்கிஷதார் எஸ். ராமஸ்வாமி அய்யர், வரவேற்புச் சபைத் தலைவர் உ.வே. சாமிநாதய்யர் மற்றும் பொறுப்பாளர்கள் எல்லாம் பார்ப்பனர்களே. அம்மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு மறை மலை அடிகளார் அவர்களுக்கு கே.வி. கிருஷ்ணஸ்வாமி அய்யர் 22.12.1933 இல் தந்தி ஒன்றை அனுப்பினார். அதற்கு மறைமலை அடிகள் அளித்த பதில்தான் மிகமிக முக்கியமானது.

கடிதங்கள், அழைப்புகள், தந்தி ஆகியவற்றிற்கெல்லாம் உங்களுக்கும், டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் அவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு, தூய தமிழை வளர்க்க விரும்பாத எந்தத் தமிழ்க் கூட்டத்திலும் கலந்துகொள்வதற்கு எமது மனம் இடந்தரவில்லை என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். பண்பட்ட பழைய மொழிகளெல்லாவற்றி லும் தமிழ்மொழி ஒன்றுதான் இன்னும் தன் பண்டை நலஞ் சார்ந்த புகழோடு வாழ்கின்றது. பிற மொழிக் கலப்பு அதன் தூய தன்மையினைக் கெடுக்குமென்றும், அதன் வளர்ச்சியினை குன்றச் செய்யும் என்றும் யாம் உறுதியாக நம்புகின்றோம். ஆதலால் எமது தனித்தமிழ்க் கொள்கையினைக் கடைபிடிக்காத உங்களுடைய மகாநாட்டிலே கலந்துகொள்ள முடியாமையினைப் பொறுத்துக் கொள்வீர்களாக! என்று பதில் எழுதியவர் தான் நமது போற்றுதலுக்கும், மதிப்புக்கும் உரிய தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் அவர்கள்.

சுவாமி வேதாசலம் என்ற தம் பெயரை மறைமலை அடிகள் என்று மாற்றிக் கொண்டவர். சைவக் கொள்கையால் மாறு பட்டு இருந்தாலும்கூட, தந்தை பெரியார் அவர்களைப் பெரிதும் போற்றி மதித்தவர். இந்தி எதிர்ப் புக்களத்தில் தந்தை பெரியார் அவர்களுக்குத் துணை நின்றவர். தந்தை பெரியார் அவர்களைப் பல்லாவரத்துக்கு அழைத்துச் சென்று தாம் அரிதிற் சேர்த்துக் குவித்த நூல்கள் கொண்ட நூலகத்தைக் காட்டி மகிழ்ந்தவர். அவர் உடலால் மறைந்திருக்கலாம்; தமிழ் உணர்வால் நம்மோடு நிறைந்திருக்கிறார்.

இனம் எது - இனப் பகைவர் யார் என்பதை இனம் பிரித்துக் காட்டிய அந்தத் தமிழ்க் கடலின் நினைவைப் போற்றுவோம்!குறைந்தபட்சம் தமிழன் வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழில் பெயரைச் சூட்டும் உணர்வு கிளர்ந்தெழட்டும் - அதுதான் அந்தப் பெருமகனாருக்கு தமிழர்கள் காட்டும் உண்மையான மதிப்பாகும்.

நன்றி:- மயிலாடன் அவர்கள் (விடுதலை" 15-7-2008 இதழ்)

Saturday, August 16, 2008

தமிழின் சிறப்புணர்த்தும் அடைமொழிகள்


1)அந்தமிழ்:- அம் + தமிழ் = அழகிய தமிழ்

2)அருந்தமிழ்:- அருமை + தமிழ் = அருமைபாடுடைய தமிழ்

3)அழகுதமிழ்:- எல்லாவகையிலும் அழகுநலம் மிக்க தமிழ்

4)அமுதத்தமிழ்:- அமுதம் போன்று வாழ்வளிக்கும் தமிழ்

5)அணித்தமிழ்:- அணிநலன்கள் அமைந்த தமிழ், தமிழினம் பெருமிதமுறும் அணியாக இலங்கும் தமிழ்

6)அன்னைத்தமிழ்:- நம் அன்னையாகவும் மொழிகளுக்கெல்லாம் அன்னையாகவும் விளங்கும் தமிழ்

7)இசைத்தமிழ்:- முத்தமிழில் ஒரு பிரிவு (இசை மொழியின் கூறாவது ஏனைய மொழிகளுக்கு இல்லாத சிறப்பு)

8)இயற்றமிழ்:- முத்தமிழின் மற்றொரு பிரிவு. ஆயகலை அறுபத்து நான்கும் அவற்றின் வழிவந்தனவும் உணர்த்தும் அறிவுநூல்கள் அடங்கியது

9)இன்றமிழ்:- இனிக்கும் தமிழ் (ஒலிக்க, உரைக்க, சிந்திக்க, செவிமடுக்க, எழுத, இசைக்க என எதற்கும் இனியது)

10)இன்பத் தமிழ்:- இன்பூட்டும் ஒலியமைப்பும் மொழியமைப்பும் இலக்கண இலக்கிய மரபும் கொண்டு, கற்பவர்க்கு எஞ்ஞான்றும் இன்பம் பயப்பது.

11)எந்தமிழ்:- எம் + தமிழ் (கால்டுவெல், போப்பு போன்ற பிறமொழிச் சான்றோரும், கற்றதும் 'எந்தமிழ்' என்று பெருமித உரிமை பாராட்டும் தமிழ்)

12)உகக்குந்தமிழ்:- மகிழ்ச்சியளிக்கும் தமிழ்

13)ஒண்டமிழ்:- ஒண்மை + தமிழ் (அறிவின் செறிவும் நுட்பமும் கொண்டு ஒளிதரும் தமிழ்)

14)கனித்தமிழ்:- கனிகள் போன்ற இயற்கைச் சுவையுடைய தமிழ்

15)கற்கண்டுத்தமிழ்:- கற்கண்டு கடிதாய் இருப்பினும் சுவைக்கச் சுவைக்கக் கரைந்து இனிமை தருவது போல, அடர்ந்து செறிந்த நிலையிலும் மாந்தமாந்த மேலும் மேலும் இன்பம் பயக்கும் தமிழ்

16)கன்னித் தமிழ்:- எந்நிலையிலும் தனித்தன்மை கெடாமலும் இளமைநலம் குன்றாமலும் விளங்கும் தமிழ்

17)சங்கத்தமிழ்:- மன்னர்களாலும் புலவர்களாலும் சங்கங்கள் அமைத்துப் போற்றி வளர்க்கப்பட்டத் தமிழ்

18)சுடர்தமிழ்:- அறிவுக்கும் உணர்வுக்கும் சுடர்தரும் தமிழ்

19)சுவைத்தமிழ்:- சொற்சுவை, பொருட்சுவை, கலைச்சுவை, கருத்துச்சுவை என எல்லாச் சுவையும் செறிந்தது

20)செந்தமிழ்:- செம்மை + தமிழ் = எல்லா வகையிலும் செம்மை உடையது (செந்தமிழ் தகைமையால் அன்றே செந்தமிழ் எனப்பட்டது தமிழ்)

21)செழுந்தமிழ்:- செழுமை + தமிழ் - வளம் குன்றாத தமிழ்

22)தனித்தமிழ்:- தன்னேரிலாத தனித்தன்மை வாய்ந்த தமிழ்

23)தண்டமிழ்:- தண்மை + தமிழ் - குளிர்ச்சி நிறைந்தது

24)தாய்த்தமிழ்:- தமிழினத்தின் தாயாகவும் மொழிகளுக்கெல்லாம் தாயாகவும் மூலமாகவும் விளங்கும் தமிழ்

25)தீந்தமிழ்:- (தேன் > தேம் > தீம்) இனிமை நிறைந்த தமிழ்

26)தெய்வத்தமிழ்:- தெய்வத்தன்மை வாய்ந்தது

27)தேன்தமிழ்:- நாவுக்கும் செவிக்கும் சிந்தைக்கும் இனிமை பயக்கும் தமிழ்

28)பசுந்தமிழ்:- பசுமை + தமிழ் – என்றும் தொடந்து செழித்து வளரும் தமிழ்

29)பைந்தமிழ்:- பைம்மை + தமிழ் (பசுமை > பைம்மை)

30)பழந்தமிழ்:- பழமையும் தொடக்கமும் அறியாத தொன்மையுடைய தமிழ்

31)பாற்றமிழ்:- பால் + தமிழ் – பால் போன்று தூய்மையிலும் சுவையிலும் தன்மையிலும் இயற்கையானது

32)பாகுதமிழ்:- வெம்மையிலும் வெல்லம் உருகிப் பாகாகி மிகுசுவை தருவது போன்று, காய்தலிலும் கடிதலிலும் நயம் குறையாதது

33)நற்றமிழ்:- நன்மை + தமிழ் – இனிய, எளிய முறையில் எழுதவும் கற்கவும் பேசவும் கருவியாகி நன்மைகள் விளையத் துணைபுரிவது

34)நாடகத்தமிழ்:- முத்தமிழுள் ஒன்று – நாடகத்தின் மெய்ப்பாடுகளை நுட்பமாய் உணர்த்தும் சொல்வளமும் பொருள்வளமும் ஒலிநயமும் நிறைந்தது

35)மாத்தமிழ்:- மா – பெரிய – பெருமைமிக்க தமிழ் (மங்கலப் பொருளுணர்த்தும் உரிச்சொல் மா)

36)முத்தமிழ்:- இயல், இசை, நாடகம் என முத்திறம் கொண்டு அமைந்த தமிழ்

37)வண்டமிழ்:- வண்மை + தமிழ் (வளஞ்செறிந்த தமிழ்)

38)வளர்தமிழ்:- காலந்தொறும் வளர்ந்துகொண்டே வரும் தமிழ்

தரவு: பேராசிரியர் முனைவர் இ.மறைமலை
Blog Widget by LinkWithin