Sunday, June 27, 2010

செம்மொழி மாநாடு வரலாறு காணாத நிகழ்ச்சி; தமிழுக்கு எழுச்சி

சூன் திங்கள் 23 தொடங்கி 27 வரையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, தமிழகம் கோவை நகரில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலகமெங்கும் உள்ள பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தற்போது கோவையில் குவிந்துள்ளனர். நூற்றுக்கணக்கில் தமிழ் அறிஞர் பெருமக்கள் பத்துக்கும் மேற்பட்ட ஆய்வரங்கங்களில் கட்டுரைகளைப் படைத்துக்கொண்டிருக்கின்றனர்.


ஆய்வரங்கம், கவியரங்கம், கலந்தாய்வரங்கம், கலைநிகழ்ச்சி, நாடகம், இசைநிகழ்ச்சி, கண்காட்சி எனப் பல பல நிகழ்ச்சிகள் மிகவும் எழுச்சியோடும் நேர்த்தியாகவும் நடந்துகொண்டிருக்கின்றன.


எல்லாவகையில் மிகுந்த கவனமெடுத்து இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது; மிக நேர்த்தியாகவும் கட்டுக்கோப்பாகவும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் நடத்தப்படுகின்றன; நேரக் கட்டுப்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது; பாதுகாப்பு நடவடிக்கைகள் வெகு செப்பமாக இருக்கின்றன.


இன்னும் சொல்லப்போனால், எந்த விதமான பெரிய குறைபாடுகளும் இல்லை என்று எல்லாரும் பாராட்டும் அளவுக்கு இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.



இப்படியொரு எழுச்சியையும் பிரமாண்டத்தையும் நிகழ்த்திக்காட்டி; உலகத்தின் பார்வையைத் தமிழின் பக்கம் திருப்பியிருக்கும் பெருமையும் பெருமிதமும் நிச்சயமாகத் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களையே சாரும் என்றால் அதில் மறுப்பதற்கோ மறைப்பதற்கோ எதுவுமில்லை.


தமிழக முதல்வர் அவர்களுடைய நேரடியான ஈடுபாடும், ஒவ்வொரு நாளும் அவர் மாநாட்டு அரங்கத்திற்கு வந்து தமிழோடு இணைந்து இன்புற்று இருப்பதும் இந்த மாநாட்டின் வெற்றிக்குக் காரணமாகும். தம்முடைய முக்கியமான அலுவல்களுக்கு இடையிலும் மாநாட்டில் தவறாமல் பங்கேற்கும் முதல்வர் அவர்களின் தமிழ் உள்ளம் போற்றுதலுக்கு உரியது; வணக்கத்திற்கு உரியது.


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்கும் கோவை, கொடிசியா தொழிற்கல்வி வளாகத்தில் 9ஆவது தமிழ் இணைய மாநாடும் வெகு சிறப்பாக நடந்துகொண்டிருக்கிறது. பேராளர்களும் பார்வையாளர்களும் மிரண்டுபோகும் அளவுக்குக் கணினி, இணையத் துறையில் தமிழ் வளர்ச்சி தொடர்பான ஆய்வுகளும் புதுப்புதுக் கண்டுபிடிப்புகளும் எடுத்துக்காட்டப்பட்டன; விளக்கிச் சொல்லப்பட்டன.


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - தமிழ் இணைய மாநாடு ஆகிய இரண்டிலும் கலந்துகொள்ள நம் மலேசியாவிலிருந்து 200க்கும் மேற்பட்டோர் இங்கு வந்துள்ளனர். 30க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் மலேசியத் தமிழர்களால் படைக்கப்பட்டன. தமிழ் இணைய மாநாட்டில் மலேசியாவிலிருந்து 7 கட்டுரையாளர்கள் ஆய்வுக் கட்டுரைகளைப் படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


உலகத் தரத்திலான இவ்விரு மாநாடுகளிலும் கலந்துகொண்டதையும் தமிழ் இணைய மாநாட்டில் கட்டுரை படைத்ததையும் மிகவும் பெருமையும் பூரிப்பும் அடைகிறேன். அந்தப் பூரிப்பின் உந்துதலால், தமிழ் இணைய மாநாட்டுக் கணினி அறையிலிருந்து இந்தப் பதிவை இடுகின்றேன்.

மாநாட்டில் எடுக்கப்பட்ட சில படங்களைக் கீழே தருகிறேன்.


>மாநாட்டிற்கு அலையென திரண்ட மக்கள்

>தொல்காப்பியர் அரங்கில் நானும் நண்பர் கோவி.மதிவரனும்

>புத்தகக் கண்காட்சி அரங்கம்

>இனியவை நாற்பது அலங்கார வாகன ஊர்வல ஊர்தி

>தமிழ் இணைய மாநாட்டுக் கண்காட்சி அரங்கு

>தமிழ் - தமிழர் வரலாற்றுக் கண்காட்சி அரங்கு

> மாநாட்டு அரங்கில் மலேசிய அறிஞர் இர.திருச்செல்வம்
> மலேசியக் கல்வியாளர்கள் குழு

> தமிழ் இணைய மாநாட்டில் கட்டுரை படைக்கிறேன்

@தமிழ்ச் செம்மொழி மாநாடு - தமிழ் இணைய மாநாடு அரங்கிலிருந்து சுப.நற்குணன்


Tuesday, June 22, 2010

தமிழ் இணைய மாநாடு 2010இல் மலேசியப் பேராளர்கள்

சூன் 23 தொடங்கி 27 வரையில், தமிழ்நாடு கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கோலாகலமாக நடைபெறவுள்ளது அனைவரும் அறிந்ததே. ஆனால், அதே நாளில்; அதே கோவை நகரில் உலக அளவிலான மற்றொரு மாநாடும் நடைபெறவிருக்கிறது என்பது பலரும் அறியாத செய்தி.


உலகத்தமிழ் தகவல் தொழில்நுடப மன்றம்(உத்தமம்) எனப்படும் அமைப்பின் ஏற்பாட்டில் 9ஆவது தமிழ் இணைய மாநாடு 2010, கோவை நகரத்தில் சிறப்புடன் நடைபெற உள்ளது.

கடந்த 2001இல் ஆகஸ்டு மாதம் 26 முதல் 28 வரை இந்தத் தமிழ் இணைய மாநாடு மலேசியாவில் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். முரசு தமிழ் மென்பொருளைத் தமிழ்க் கணினி உலகத்திற்கு அளித்த மலேசியத் தமிழர் முத்து நெடுமாறன் ஏற்பாட்டில் இந்த மாநாடு மலேசியாவில் நடந்தேறியது.

தற்போது ஒன்பதாவது முறையாக இந்த மாநாடு நடைபெறுகிறது. உலகம் முழுவதிலும் இருக்கும் தமிழ் கணினித்துறை அறிஞர்கள், தொழிநுட்பர்கள், ஆர்வலர்கள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். தமிழ்க் கணினி, இணையத்தை வளர்த்தெடுக்கும் நோக்கத்தோடு நடைபெறும் இம்மாநாட்டின் ஆய்வரங்கங்கள் 4 அரங்குகளில் 36 நிகழ்வுகளாக (Sessions) இடம் பெறவுள்ளன. இதில் 15 தலைப்புகளிலிருந்து 138 ஆய்வு கட்டுரைகள் இடம் பெறுகின்றன.

தமிழ் இணைய மாநாட்டில் மலேசியப் பேராளர்களும் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர். இம்மாநாட்டில் மலேசியப் பேராளர்களின் பங்களிப்பு குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அளவில் இருக்கிறது.

நம் மலேசியாவைச் சேர்ந்த முத்து நெடுமாறன், சி.ம.இளந்தமிழ் ஆகிய இருவரும் இரண்டு அமர்வுகளுக்குத் தலைமயேற்க உள்ளனர். தமிழ்க் கணினி, இணைய வளர்ச்சியில் மிகப்பெரும் பங்காற்றியுள்ள இவர்கள் இருவருக்கும் இப்படியொரு வாய்ப்பு கிடைத்திருப்பது மலேசியத் தமிழர்களுக்குப் பெருமையளிப்பதாக உள்ளது.


மேலும், மலேசியாவிலிருந்து நால்வர் இம்மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகள் படைக்கவுள்ளனர். அதன் விவரம் பின்வருமாறு:-

1.சுப.நற்குணன், (திருத்தமிழ் வலைப்பதிவர்) தலைப்பு: வளர்ந்து வரும் மலேசியத் தமிழ் இணைய ஊடகம்

2.இளங்குமரன், (மலாயாப் பல்கலைக்கழகம் நூலகப் பொறுப்பாளர்) தலைப்பு: மின்னணு நூலகம்


3.மணியரசன் முனியாண்டி, (துவான்கு பைனூன் ஆசிரியர் பயிற்சிக் கழக விரிவுரைஞர்) தலைப்பு ; இணையத்தில் தமிழ் மின் அகராதிகள்: ஒரு பார்வை


4.இரவீந்திரன் கே.பால் (தமிழ் மென்பொருள் மேம்பாட்டாளர்) தலைப்பு: தமிழ்த் தட்டச்சு மென்பொருள்கள் வடிவமைப்பும் வளர்ச்சியும்


5.மன்னர் மன்னன் (மலாயாப் பல்கலைக்கழக விரிவுரைஞர்) தலைப்பு: தொலைதூர தமிழ்க்கல்வியில் இணையம் வழிக் கற்றலின் பங்களிப்பு

உலக அளவில் தமிழ்க் கணினி, இணையத்துறையில் மலேசியத் தமிழர்களும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க பங்களிப்பையும் ஆக்கங்களையும் செய்து வருகின்றனர் என்பதற்கு இதுவொரு நற்சான்றாகும்.

மேல்விவரங்களுக்குக் காண்க:-

1.தமிழ் இணைய மாநாடு இணையத்தளம்
2.மாநாட்டு நிகழ்ச்சி நிரல் / கட்டுரைகள்
3.மாநாட்டுக் கருத்தரங்கம் / கண்காட்சி


Friday, June 18, 2010

மலேசியத் தமிழறிஞருக்கு அஞ்சல் தலை வெளியீடு

தமிழ் அறிஞர் ஒருவருக்கு மலேசியாவில் அஞ்சல் தலை வெளியிடப்பட்டிருக்கிறது. இத்தகு சிறப்பினைப் பெற்றிருக்கும் அந்தத் தமிழறிஞர் பாவலர் அ.பு.திருமாலனார் என்பவர். தமிழ்த் தலைவருக்கு ஒருவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பு செய்யப்படுவது மலேசிய வரலாற்றில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. மலேசியத் தமிழர்கள் அனைவருக்கும் பெருமையளிக்கக்கூடிய இந்தச் செய்தி இங்கு பதிவிடப்படுகிறது. @சுப.ந.


மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தோற்றுநர் பாவலர் அ.பு.திருமாலனாருக்கு ‘போஸ் மலேசியா’ (மலேசிய அஞ்சல் துறை) அஞ்சல் தலை வெளியிட்டிருப்பது, கழகத்திற்கு மட்டும் அல்லாமல் மலேசியத் தமிழ்ச் சமுதாயத்திற்கே பெருமிதம் சேர்க்கும் வரலாற்றுப் பதிவு என்று மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தலைவர் இரா.திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

இனப்பற்றும் மொழிப்பற்றும் இணைந்த தமிழ்நெறி வித்துகளை தமிழ் நெஞ்சங்களில் விதைத்த பாவலர் ஐயா திருமாலனாரின் 79ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சூன் திங்கள் 8ஆம் நாள் அஞ்சல் நிறுவனமான ‘போஸ் மலேசியா’ அவருடைய உருவப்படம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது.

பேரா மாநிலம், செலாமா பட்டணத்தில் தோன்றிய திருமாலனார், ஆரம்பத்தில் சுயமரியாதை இயக்கத்துடன் இணைந்து தமிழியக் கடமைகளை ஆற்றினாலும் காலத்தால் தமிழ் நெறிக்காகத் தனி இயக்கம் கண்டார்.

தமிழர்கள் கடபிடிக்க வேண்டிய வாழ்வியல் முறைகள், தமிழியச் சிந்தனைகள், தமிழ்க் குழந்தைகளுக்கு நல்ல தமிழில் – பொருள் துலங்கும்படி பெயர் சூட்டுவது; குடும்ப நிகழ்வுகளிலும் பொது நிகழ்வுகளிலும் தமிழியப் பண்பாட்டைப் பின்பற்றுதல்; தாய்மொழியை உயிர்மூச்செனக் கொள்ளுதல் போன்ற சிந்தனைகளை எல்லாம் பல தமிழ் நெஞ்சங்களில் விதைத்தவர் இவர்.

அப்படிப்பட்ட தமிழ்த் தகைமையாளருக்கு இவ்வாண்டு பிறந்த நாளில் சிறப்புச் செய்ய வேண்டும் என்று மலேசியத் தமிழ்நெறிக் கழகத்தின் தேசியத் தலைமையகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட முனைப்புகளுக்கு ஆதரவு தந்துள்ள ‘போஸ் மலேசியா’ நிறுவனத்திற்கு மலேசியத் தமிழ் மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று இரா.திருமாவளவன் கூறினார்.

ஒரு தமிழ்த் தலைவருக்குப் போஸ் மலேசியா சிறப்பு செய்வது மலேசிய வரலாற்றில் இதுவே முதல் முறை என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.

திருமாலனாரின் அஞ்சல் தலைகளை வாங்க விரும்புவோர் 016-3262479 என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம்.

பி.கு: பாவலர் ஐயா அ.பு.திருமாலனார் வாழ்க்கை வரலாற்றை வாசிக்கவும் அன்னாரின் அரிய தமிழ்த் தெண்டூழியங்களைப் பற்றி அறியவும் இங்குச் சொடுக்கவும்.

தொடர்பான செய்திகள்:

1.பாவலர் அ.பு.திருமாலனாரின் நூல்:- வள்ளலார் கண்ட சமயநெறி


  • செய்தி:- மலேசிய நண்பன் நாளிதழ் (18.6.2010)

Thursday, June 17, 2010

சுழியமா? பூச்சியமா? ஒரு கல்வியியல் நோக்கு (2/2)


  • தமிழில் பிறமொழிச் சொற்கள் வந்து வழங்குகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. இன்னும் சொல்லப்போனால், தமிழ்ப்பள்ளிப் பாடநூல்களில் தமிழ் அல்லாத சொற்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கின்றன. அவற்றை எல்லாம் உடனடியாக தூக்கி எறிய வேண்டும் யாரும் இதுவரை போராட்டத்தில் குதித்ததும் இல்லை.
காலந்தோறும் தமிழில் கலைச்சொற்கள்

ஆனால், பத்து, இருபது ஆண்டுக்கு முன்பு இருந்த பாடநூல்களோடு ஒப்பிடுகையில் இன்று ஆயிரமாயிரம் தமிழ்ச் சொற்கள் உருவாகி பிறமொழிச் சொற்கள் இருந்த இடத்தை நிறைவு செய்துள்ளன. (உபாத்தியாயர்)ஆசிரியர், (வியாஸம்)பயிற்சி, (தேகாப்பியாஸம்)உடற்கல்வி, (சுகாதாரம்)நலக்கல்வி, (விஞ்ஞானம்)அறிவியல், (நமஸ்காரம்)வணக்கம், (மலஜலக்கூடம்)கழிப்பறை, (இன்ஸ்பெக்டர்)ஆய்நர், (ஆஸ்பிட்டல்)மருத்துவமனை, (பஸ்)பேருந்து, இப்படியாக ஆயிரக்கணக்கில் சொற்கள் மாறியிருக்கின்றன.

அதுமட்டுமா? நமது கல்வித் துறையில் புதிது புதிதாக அறிமுகமான பாடங்களுக்கு இசைக்கல்வி, வாழ்வியல் திறன், வட்டாரக் கல்வி, குடிமையும் குடியுரிமைக் கல்வியும், நன்னெறிக் கல்வி என்றெல்லாம் அழகுதமிழில் பெயர்சூட்டி கல்வித் துறையில் தமிழை வளப்படுத்தியிருக்கும் கல்வியாளர்கள் பாராட்டுக்கு உரியவர்கள்.

முன்பு பாடத்திட்டம் என்று இருந்ததைப் பின்னர் கலைத்திட்டம், கலைத்திட்ட விளக்கவுரை, ஆண்டுக் கலைத்திட்டம், என்று மாற்றி, இப்போது கலைத்திட்ட தர ஆவணம் என்றெல்லாம் தமிழை முன்படுத்தியிருக்கும் பணிகள் பாராட்டுக்குரியவை அல்லவா? யாராவது பாடத்திட்ட தர தஸ்தாவேஜு என்று சொல்ல முன்வந்தார்களா? தஸ்தாவேஜு(ஆவணம்), பிரஜை(குடியுரிமை), வருஷம்(ஆண்டு) என்பதை யாரும் வலிந்து புகுத்தவில்லை.


பூச்சியம் சிக்கல் ஏன்? எதற்கு?

ஆனால், இப்போது மட்டும் ‘பூச்சியம்’ (பூஜ்யம்) நிலைபெற வேண்டும் என்று சிலர் முனைப்புக்காட்டுவது ஏன்? இதில், ஏதோ ஒரு பின்னணி மறைந்திருப்பதாக ஐயப்படவேண்டியுள்ளது. முப்பது ஆண்டுக்கு முன்பு பாடநூலில் பூச்சியம் இருந்திருக்கலாம். அப்போது படித்த சிலருக்கு இச்சொல்லே மனதில் ஆழமாகப் பதிந்தும் இருக்கலாம்.

ஆனால் இன்று சூழல் மாறி இருக்கிறது; தமிழ்க்கல்வி விரிந்து வளர்ந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், உலகில் வேறு எங்குமே இல்லாத தரமான தமிழ்க்கல்வி மலேசியாவில் வழங்கப்படுகிறது.

நமது கலைத்திட்டம், பாடநூல்கள், பயிற்சி நூல்கள், துணை நூல்கள், தேர்வுத் தாள்கள் ஆகியவற்றின் தரத்திற்கு நிகராக உலகில் வேறு எங்குமே இல்லை; ஏன் தமிழ்நாட்டில்கூட இல்லை எனத் துணிந்து சொல்லலாம். அறிவியல், கணிதம், உடற்கல்வி, நலக்கல்வி போன்ற பாடங்களுக்கு உலகில் வேறு எங்குமே தமிழ்ப் பாடநூல்கள் இல்லை. அந்தப் பெருமையும் நம்மையே சாரும்.

இன்றைய கணினி உலகத்திற்கு கலைச்சொற்களை கொடையளித்த பெருமையும் மலேசியத் தமிழர்களுக்கு இருக்கிறது. இணையம் என்ற சொல்லை நயனம் இராஜகுமாரனும், www. என்பதற்கு வையக விரிவு வலை என்று மருத்துவர் ஐயா.சி.ஜெயபாரதியும் தமிழ்ச் சொற்களை வழங்கியிருக்கிறார்கள். முரசு செயலியை உருவாக்கி உலகம் முழுவதும் கணினியில் தமிழை எழுத வைத்தவர் நமது முத்து.நெடுமாறன்.

இவ்வாறெல்லாம் தமிழை முன்னெடுத்து வளம்சேர்த்திருக்கும் வரிசையில் ‘சுழியம்’ இணைவதில் எந்தவித குறைபாடும் இருப்பதாகத் தெரியவில்லை.

தமிழ்ப் பாடநூலில் தமிழே இடம்பெற வேண்டும்

தமிழ்ப் பாடநூலில் தமிழ்தான் இடம்பெற வேண்டும் என்ற மிகமிக எளிமையான ஏரணத்தின் (Logical) அடிப்படையில் ‘சுழியம்’ என்ற சொல் இடம்பெறுவதே சாலச் சிறந்தது. சுழியம் தமிழ்ச்சொல். மேலும், சுழியம் இப்போது பொது மக்கள் வழக்காகிவிட்டது. மலேசிய எழுத்தாளர்களின் நூல்கள், மலேசியாவில் உருவாக்கப்பட்ட அகராதிகள், நாளிதழ்கள், வானொலி, தொலைக்காட்சி, பெர்னாமா செய்தி இப்படியாகப் பலதரப்பட்ட நிலையில் சுழியம் இன்று மிகப் பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது என்பதை மறுக்கவியலாது.

தொடக்கத்தில் கூறியதுபோல, மாணவர்களின் முன்னறிவு, சுற்றுச் சூழல், ஆசிரியரின் கற்பித்தல் ஆகியவற்றால் ஏற்படுகின்ற பட்டறிவின் அடிப்படையில் மாணவர்களிடையே கற்றல் நடைபெறுகிறது. அந்த வகையில், சுழியம் தொடர்பான முன்னறிவு, சுற்றுச்சூழல், ஆசிரியரின் கற்பித்தல் ஆகிய சூழல்கள் இப்போது உருவாகிவிட்டதால், சுழியம் எனும் தமிழ்ச்சொல்லை மாணவர்கள் எளிதாகக் கற்றுக்கொள்வார்கள். ஆகவே, எவ்வித ஐயமுமின்றி சுழியத்தைப் பாடநூலில் தராளமாகப் பயன்படுத்தலாம்; பயன்படுத்த வேண்டும்.


@திருத்தமிழ் ஊழியன், சுப.நற்குணன்

Tuesday, June 15, 2010

சுழியமா? பூச்சியமா? ஒரு கல்வியியல் நோக்கு (1/2)


தமிழ்ப்பள்ளிகளுக்கான கணிதம், அறிவியல் பாடநூலில் சுழியம், பூச்சியம் ஆகிய இரண்டில் எதனைப் பயன்படுத்துவது என்ற கருதாடல்களும் கண்டனங்களும் நமது நாளிதழ்களில் அமளிதுமளியாகி தற்போது சற்றே அமைதியாகி இருக்கிறது.

இந்தச் சிக்கல் தொடர்பான பதிவுகளைப் படித்துப் பார்க்கவும்.
4. பள்ளிப் பாடநூலில் சுழியம்! தமிழுக்கு வெற்றி

தமிழ்ப்பள்ளிப் பாடநூலில் சுழியமே பயன்படுத்தப்பட வேண்டும் எனும் முடிவுக்கு எல்லாத் தரப்பினரும் ஒன்றுபட்டு வந்துவிட்டனர். அந்த முடிவைப் பற்றி விவாதிக்காமல், சுழியமா? பூச்சியமா? எனும் சிக்கலைக் கல்வியியல் நோக்கோடு அலசுகிறது இந்தக் கட்டுரை.

அதற்கு முன், இந்தச் சிக்கல் தொடர்பாக திருத்தமிழ் மேற்கொண்ட கணக்கெடுப்பின் முடிவினைக் கொஞ்சம் பாருங்கள்.

இதன்படி, பதிவாகிய 200 வாக்குகளில் 96% தமிழ்ப் பாடநூலில் சுழியம் என்ற நல்லதமிழ்ச் சொல்லையே முனைந்து பயன்படுத்த வேண்டும் என வாக்களித்துள்ளனர். சுழியத்தை ஆதரிக்காதவர்கள் வெறும் 4% மட்டுமே. அதாவது 8 பேர்தான்.

சுழியமா? பூச்சியமா? என்று முளைத்திருக்கும் இந்தச் சிக்கல் மொழியியல், இனவியல், மதவியல், தொல்லியல் ஆகியவை சார்ந்தது அல்ல.

எனவே, இவற்றை விடுத்து, தமிழ்க் கல்வியியல் சார்ந்த ஒரு சிக்கலாக இதனை அணுக வேண்டும். காரணம், தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கற்கப்போகும் பாடநூலில் எந்தச் சொல்லைப் பயன்படுத்துவது? என்பதே இப்போதைக்கு எழுந்துள்ள சிக்கல்.

கல்வியியல் அடிப்படையில் அறிவுசார்ந்து இந்தச் சிக்கலைப் பார்க்க வேண்டுமே தவிர, மேலே சொன்னது போல பல்வேறு அடிப்படைகளில், உணர்ச்சிவயப்பட்டு சிந்திக்கக் கூடாது; திசை திருப்பவும் கூடாது. அப்படியான எண்ணத்தோடு இச்சிக்கலை அணுகினால் இழுபறி நிலைதான் மிஞ்சுமே தவிர சரியான தீர்வுக்கு வரவே முடியாது.

கற்றல் என்றால் என்ன?

கற்றல் என்பது பட்டறிவின் அடிப்படையில் ஏற்படும் நடத்தை மாற்றம் என்பது ஆய்வாளர்கள் கூற்று. மாணவர்களின் முன்னறிவு, சுற்றுச் சூழல், ஆசிரியரின் கற்பித்தல் ஆகியவற்றால் ஏற்படுகின்ற பட்டறிவின் அடிப்படையில் மாணவர்களிடையே கற்றல் நடைபெறுகிறது. இவ்வாறு கற்றதை எண்ணம், சொல், செயல் ஆகிய வடிவங்களில் மாணவர்கள் வெளிப்படுத்தும்போது அவர்களுடைய நடத்தையில் மாற்றம் ஏற்படுகிறது. மீண்டும் மீண்டும் தொடர்ந்து இவ்வாறு நிகழுவதையே கற்றல் என்கிறோம்.

ஆகவே, சரியான திட்டமிடல், அணுகுமுறை, துணைக்கருவிகள் ஆகியவற்றின் உதவியோடு வகுப்பில் கற்பித்தலை நடத்தி மாணவர்களைக் கற்றவர்களாக ஆக்க வேண்டியவர்களில் முதன்மையானவர்கள் ஆசிரியர்களே ஆவர்.

இந்தச் சூழலில், இது மாணவர்களுக்குத் தெரியும்; அது தெரியாது! இது மாணவர்களுக்குப் பழக்கமானது; அது மாணவர்களுக்குப் பழக்கமில்லாதது! இது மாணவர்கள் அறிந்தது; அது அறியாதது! இது புரியும்; அது புதியாது! என்பன போன்ற பேச்சுக்கே இடமில்லை.

ஆகவே, மாணவர்களுக்கு ஒன்றைக் கற்பித்து அவர்களுக்குப் புரிய வைப்பது ஆசிரியர்களுடைய பணியாகும். ஆசிரியர்களால் எதையும் கற்பிக்க இயலும் அதேபோல் ஆசிரியர்களின் திறமையான கற்பித்தலால் மாணவர்களால் எதையும் கற்றுக்கொள்ள முடியும் என்பது தெளிவு.

சுழியமா, பூச்சியமா எது புரியும்?

சுழியம் – பூச்சியம் ஆகிய இரண்டையுமே மாணவர்கள் கற்றுக்கொள்ள முடியும். இதில் எந்தவிதச் சிக்கலையும் அவர்கள் எதிர்நோக்க மாட்டார்கள். அதுமட்டுமல்லாமல், இதற்கு மலாய், ஆங்கிலம் முதலான வேறு மொழிகளில் என்ன பெயர் என்பதையும், அதனுடைய கருத்துருவையும் (Concept) அவர்களால் கற்றுக்கொள்ள முடியும். அந்த அளவுக்கு மாணவர்களுக்குக் கற்கும் ஆற்றல் இயல்பாகவே அமைந்திருக்கிறது.

சுழியம் – பூச்சியம் இரண்டில் எதைக் கற்பிப்பது?

இந்தக் கேள்விக்கு, ஏற்கனவே சொன்னதுபோல உணர்ச்சிவயப்பட்டாமல் சிந்தித்தால் விடை கிடைத்துவிடும்.

எங்கே கற்பிக்கப் போகிறோம்? தமிழ்ப்பள்ளியில். எந்த மொழியில் கற்பிக்கப் போகிறோம்? தமிழ்மொழியில். பாடநூல் எந்த மொழியில் இருக்கப் போகிறது? தமிழ்மொழியில். ஆகவே, எந்த மொழியில் கற்பிக்க வேண்டும்? எளிதாக விடை கிடைத்துவிடும், தமிழ்மொழிதான் என்று.

அப்படியென்றால், எது தமிழ்மொழிச் சொல்? சுழியமா? அல்லது பூச்சியமா? நிச்சயமாகச் சுழியம்தாம். இல்லையில்லை, பூச்சியமும் தமிழ்தான் என்று வாதிடுவதற்கு எந்தவித அடிப்படையும் இருப்பதாகத் தெரியவில்லை. காரணம் அது தமிழே அல்ல.

பூச்சியத்தைப் பயன்படுத்தலாம் என்பதற்கு ஒரே ஒரு அடிப்படைதான் இருக்கிறது. நீண்ட காலமாக நம்முடைய பழக்கத்தில், வழக்கத்தில், பேச்சில், எழுத்தில் இருக்கிறது என்பது மட்டும்தான். இந்த ஒரு காரணத்திற்காக மட்டுமே இதனைப் படிக்க வேண்டும் என்பது அறிவுக்குப் பொருந்தாதது மட்டுமல்ல; கல்வியியல் கோட்பாட்டுக்கே எதிரானது. புதியன கற்று நடத்தையில் மாற்றம் பெறுவதுதானே கல்வி.

பழக்கத்தில் இருப்பதால் பாடநூலில் பயன்படுத்தலாம் என்றால், சுழியத்தைக் குறிக்கும் கோசம், சைபர், சீரோ முதலான சொற்களும் நம்மிடையே பழங்காலமாக வழக்கத்தில் இருந்து வருகின்றன. இன்னும் சொல்லப்போனால், பூச்சியத்தை விட ‘கோசம்’ என்ற மலாய் சொல்தான் மக்கள் வழக்கில் அதிகமாக இருக்கிறது.

கோசம், சைபர், சீரோ ஆகிய சொற்களைப் பாடநூலில் பயன்படுத்துவதற்கு யாரும் போர்க்கொடி தூக்கிப் போராட்டம் நடத்தவில்லை. காரணம், அவை பிறமொழிச் சொற்கள் என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால், அதேவேளையில் ‘பூச்சியம்’ என்பதும் பிறமொழிச் சொல்தான் என்பதை அறியாமல் இருப்பது அல்லது அறிந்தும் அறியாததுபோல் நடிப்பது நகைப்புக்குரியதாகும்.

பூச்சியம் என்று தமிழ்வடிவத்தில் எழுதப்படும் ‘பூஜ்யம்’ என்ற தமிழ் அல்லாத சொல்லை தமிழ்ப் பாடநூலில் புகுத்திக் கற்பிப்பதற்குக் கல்வியியலில் எங்குமே இடமிருப்பதாகத் தெரியவில்லை. ஒரு வேளை, குறிப்பிட்ட சொல் தமிழில் இல்லாத சூழலில் பிறமொழியைக் கடன்பெற்று தற்காலிகமாகப் பயன்படுத்தலாம். ஆனால், சரியான சொல் இருக்கும்போது பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்துதல் முறையாகுமா?

அப்படிப் பார்த்தால், இன்று வழக்கில் இருக்கும் ஆயிரக்கணக்கான தமிழ்ச்சொற்கள் உருவாகி இருக்க முடியாது. இன்னமும் மணிப்பிரவாளத்தைத்தான் படித்துக்கொண்டு இருந்திருப்போம்.

  • அடுத்த பகுதியில் நிறைவுபெறும்

@திருத்தமிழ் உழியன்; சுப.நற்குணன்

Thursday, June 10, 2010

திருக்குறள் வகுப்பு ஓராண்டு நிறைவு விழா

பினாங்கு மாநிலம், நிபோங் திபால் எனும் ஊரில் மிகச் சிறப்பாக இயங்கிவருகின்றது ‘கலிடோனியா இளைஞர் மன்றம்’. தனக்கென தனி மண்டபத்தைக் கொண்டிருக்கும் இந்த இளைஞர் மன்றம் தமிழ் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறது.


அவற்றுள் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய அரிய பணியாகத் ‘திருக்குறள் வகுப்பு’ நடக்கிறது. இவ்வகுப்பு ஒவ்வொரு காரி(சனி)க்கிழமையும் மாலை 4.00 மணி தொடங்கி 6.00 வரையில் நடக்கிறது. 50 மாணவர்கள் இவ்வகுப்பில் கலந்து பயில்கின்றனர். கடந்த 2009 சூன் திங்கள் தொடங்கிய இவ்வகுப்பு தன்னுடைய ஓராண்டு நிறைவை கடந்த 6-6-2010இல் கொண்டாடியது.

திருமதி பிரேமா அமிர்தலிங்கம் அவர்களுடைய பொறுப்பில் இவ்வகுப்பு கடந்த ஓராண்டு காலமாக மிகச் சிறப்பாக நடைபெற்று வருவது பாராட்டுக்குரியது மட்டுமன்று சாதனையுமாகும். இவ்வகுப்பு நடைபெறுவதற்கு திரு.அமிர்தலிங்கம், திரு.ம.தமிழ்ச்செல்வன், திரு.அர்ச்சுணன் போன்றோரும் கலிடோனியா இளைஞர் மன்றமும் உற்றத் துணையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஓராண்டு நிறைவையொட்டி நடைபெற்ற சிறப்பான விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும் வாய்ப்பினைப் பெற்றேன். அவ்விழாவில் நான் பேசியதாவது:-

மலேசியாவில் சிறுபான்மை இனமாக இருக்கும் தமிழர்களிடையே இன்று பல்வேறு சீர்கேடுகள் நிகழ்ந்துவருகின்றன. ஒட்டுமொத்த குமுகாயமும் மிகவும் நெருக்கடியான சூழலில் வாழ்ந்துகொண்டிருப்பது போன்ற தோற்றம் இன்று தவிர்க்க முடியாததாகிவிட்டது. உண்மையில் நமது குமுகாயம் சீரழிவுப் பாதாளத்தை நோக்கி மிக வேகமாக உருண்டுக்கொண்டிருக்கிறது.

கல்வி, பொருளாதாரம், அரசியல், தொழில் வாய்ப்பு, சமூகவியல் ஆகிய அனைத்துத் துறைகளிலும் மிகவும் மோசமான பின்னடைவுகளுக்கு தமிழ் மக்கள் இன்று ஆளாகியிருக்கிறார்கள். இதைவிட பரிதாபமான நிலையில் தமிழர்களின் மொழி, இன, சமய உணர்வுகள் மழுங்கிக்கொண்டிருக்கின்றன. இன்றையச் சூழலில் தமிழ் மரபுகளைப் பற்றியோ; கலை பண்பாடு பற்றியோ; இலக்கியம் பற்றியோ தமிழர்கள் கொஞ்சமும் அக்கறைப்படுவதாகத் தெரியவில்லை.

இதற்கு நேர்மாறாக, எதிர்மறையான போக்குகள் இன்று கணக்கு வழக்கில்லாமல் மலிந்துகொண்டிருக்கின்றன; மலைபோல் வளர்ந்துகொண்டிருக்கின்றன. வன்முறைகள் எல்லைமீறிவிட்டன; குடும்பச் சிதைவுகள் பெருகிவிட்டன; மனவிலக்குகள் அதிகமாகிவிட்டன; பாலியல் குற்றங்கள் வஞ்சமில்லாமல் நடக்கின்றன.

இப்படிப்பட்ட சமுதாயக் குறைபாடுகள் எல்லா இனத்திலும் நாட்டிலும் இருக்கின்றன என்றாலும்கூட, சிறுபான்மை மலேசியத் தமிழரிடையே இப்படி காணப்படுவது மிகுந்த அச்சமூட்டுவதாக உள்ளது. நிலைமை இப்படியே போகுமானால் அடுத்த 50 ஆண்டுகளில் நமது குமுகாயம் அல்லது நமது குழந்தைகளுடைய எதிர்காலம் பயங்கரமான நெருக்கடி நிலைக்கு ஆளாவதை யாராலும் தடுக்க முடியாது. ஓர் இருண்ட காலத்தை அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துச்சென்ற பழிக்கு இன்றைய சமுதாயம் கண்டிப்பாக ஆளாக நேரிடும்.

தென்னாபிரிக்கா, மொரிசியசு முதலிய நாடுகளில் வாழும் தமிழர்கள் போல, மொழி அறியாத, இனம் புரியாத, சமயம் தெரியாதவர்களாக நம்முடைய குழந்தைகளும் இந்த நாட்டில் வாழுகின்ற பரிதாபம் ஏற்படும்.

இதற்கு உடனடியாகத் தீர்வு கிடைக்க வேண்டுமானால், யாரோ ஒரு அரசியல் தலைவர் வருவார்; அல்லது ஒரு வலுவான அரசியல் கட்சி உருவாகும்; சமுதாயத் தலைவர்கள் தோன்றுவார்கள்; அரசாங்கம் செய்யும் என்று தயவுசெய்து யாரும் நம்பவேண்டாம். இது ஒருகாலும் நடக்காது.

இதற்கு ஒரே வழி, தமிழர்கள் அனைவரும் உடனடியாக மனமாற்றம் பெறவேண்டும் – சிந்தனைப் புரட்சி பெறவேண்டும் – அறிவு தெளிவு பெற வேண்டும் – நல்ல கல்வியறிவு பெற வேண்டும். இதனைவிட முக்கியமாக நாம் தமிழர் என்ற இன உணர்வையும்; நம் தாய்மொழி தமிழ் என்ற உணர்வையும் உடனடியாகப் பெற வேண்டும். நம்மோடு வாழும் சீனர்கள் மிகவும் உறுதியாக மொழி உணர்வும் இன உணர்வும் பெற்றிருப்பதால்தான் இன்று வலிமையான சமுதாயமாக அவர்களால் வாழ முடிகிறது; தலைநிமிர்ந்து நிற்க முடிகிறது.

சீனர்களுடைய மொழி, இன உணர்வை அவர்கள் சீனப்பள்ளிகளின் வழியாக எடுத்துக்காட்டுகின்றனர். நாட்டில் உள்ள 95% சீனர்கள் தங்கள் குழந்தைகளைச் சீனப்பள்ளிகளில் படிக்கவைப்பதன் வழியாக தங்களுடைய மொழி உணர்வையும் இன ஒற்றுமையையும் தெளிவாகக் காட்டுகின்றனர். அதனால், அவர்களுக்குக் கிடைக்கவேண்டியவை அனைத்தும் குறைவில்லாமல் கிடைக்கின்றன. அதுபோல நாட்டில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களுடைய குழந்தைகளைத் தமிழ்ப்பள்ளிகளில் சேர்ப்பதன் வழியாக நமது ஒற்றுமையைப் புலப்படுத்துவதோடு உரிமைகளையும் இன்னும் பல்வேறு வாய்ப்பு வசதிகளையும் பெற்றுவிட முடியும்.

அதுமட்டுமல்ல, நமது மொழி, கலை, இலக்கியம், பண்பாட்டுக் கூறுகளையும் காத்துக்கொள்வதற்கு இதுவே சரியான வழியாகவும் அமையும். 2020இல் மலேசியா தன் சொந்த அடையாளத்தோடு வளர்ச்சிபெற்ற நாடாக உருவாக வேண்டுமென முன்னனள் பிரதமர் துன் மகாதீர் கனவு கண்டது போல, நாமும் நம்முடைய மரபுகளோடு முன்னேறுவதை உறுதிபடுத்த வேண்டும். நம்முடைய மரபியல் அடையாளங்களை அழித்துப்போட்டுவிட்டு, பணக்காரராகவும், தொழிலதிபராகவும், உயர்ந்த பதவிகளிலும் இருப்பதை உண்மையான முன்னேற்றமாகக் கருத இடமில்லை. சீனர்கள் எவ்வளவு பெரிய நிலைமைக்கு உயர்ந்தாலும் தங்கள் மொழியின, கலை, பண்பாட்டுக் கூறுகளை விட்டுவிடாமல் பாதுகாத்து வருவதை நாம் பாடமாகக் கொள்ளவேண்டும்.

கலிடோனியா இளைஞர் மன்றம் நடத்தும் இந்த திருக்குறள் வகுப்பு மொழிவளம் பெற்ற; ஒழுக்கம் நிறைந்த மாணவர்களை நிச்சயமாக உருவாக்கும். தமிழ் மரபியல் அறிந்த மாணவர்களைக் கண்டிப்பாக வளர்த்தெடுக்கும் என்பது உண்மை. இந்த வகுப்புக்குத் தங்கள் குழந்தைகளை அனுப்பியுள்ள பெற்றோர்கள் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள். இங்கே பயிலும் மாணவர்கள் தொன்மைத் தமிழின் தொடர்ச்சிகளாக இருந்து தமிழை மேன்மைப்படுத்துவார்கள். எதிர்காலத்தில் தமிழையும் தமிழரையும் தாங்குகின்ற தூண்களாக இருப்பார்கள்.


திருக்குறளை வெறும் நீதிநூல் என்று நினைத்துப் படிக்கவும் மனனம் செய்து ஒப்புவிக்கவும் பயன்படுத்த வேண்டாம். அஃது தமிழருடைய அறிவுச் செல்வத்தின் அடையாளமாகும். தமிழர்களுடைய வாழ்வியல் நூலாகும்; தமிழர் மறையாகும். இன்று திருக்குறளை வாழ்க்கை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டவர்கள் பல ஆயிரம் இருக்கின்றனர். காலப்போக்கில் இந்த எண்ணிக்கை பெருகுவதற்கு இதுபோன்ற திருக்குறள் வகுப்புகள் கண்டிப்பாக பயனளிக்கும்.


இவ்விழாவில், திருக்குறள் வகுப்பாசிரியர் திருமதி பிரேமா அமிர்தலிங்கம் அறிவிப்பாளராகப் பணியாற்றினார். இவருடைய கணவர் திரு.கோ.அமிர்தலிங்கம் விழாவின் ஏற்பாட்டுக் குழுத் தலைவராவார். கலிடோனியா தோட்ட நல்லுறவு இயக்கத்தின் தலைவர் திரு.அர்ச்சுணன் நிகழ்ச்சிக்குத் தலைமையேற்றார். திருக்குறள் வகுப்பில் பயிலும் மாணவர்கள் பாடல், ஆடல், கட்டுரை, ஒப்புவித்தல் என பல்வேறு வடிவங்களில் திருக்குறள் படைப்புகளை வழங்கினர். அமிர்தலிங்கம் பிரேமா வாழ்விணையரின் அருமை மகள் செல்வி.அன்புமலர் 10 அதிகாரங்களில் உள்ள 100 குறட்பாக்களை மனனம் செய்ததோடு அதனைக் கவனகம் அமைப்பில் மேடையில் படைத்தும் காட்டி பலருடைய பாராட்டையும் பெற்றார்.


செல்வி அன்புமலரின் அரிய திறனைக் கண்டு மெய்சிலிர்த்துப்போய், அடுத்த ஆண்டில் 500 குறள்களை மனனம் செய்து ஒப்புவித்து மலேசியச் சாதனை புத்தகத்தில் பெயர்பதிக்க வேண்டுமென ஓர் வேண்டுகையை மேடையில் முன்வைத்தேன். அதனை வழிமொழியும் வகையில் மண்டபமே அதிரும்படி கரவொலி எழுந்தது.

Tuesday, June 01, 2010

வள்ளலார் வழி குடும்பங்கள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி



திருவருட்பேரொளி வள்ளலார் அருளிய வழியில், தங்கள் வாழ்வை அமைத்துக்கொண்டுள்ள அல்லது அமைத்துக்கொள்ள விரும்பும் குடும்பங்கள் ஒன்றுகூடி மனம் மகிழும் வகையில் ‘குடும்ப ஒன்றுகூடல் நிகழ்ச்சி’ நடைபெறவிருக்கிறது. மலேசிய சமரச சுத்த சன்மார்க்க சத்தியப் பேரவையின் ஆதரவோடு இந்த அருமை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

மலேசியா அளவில் முதன்முறையாக நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சி ஆன்மிக ஈடுபாட்டை ஏற்படுத்தும் வகையில் அமைவதோடு குடும்ப உறவை வலுப்படுத்தவும், மனமகிழ்ச்சியுடன் ஒன்றுகூடி மகிழவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின்வழியாக நாடு முழுவதும் உள்ள வள்ளலார் வழி குடும்பங்கள் ஒன்றிணைந்து பழகவும் குடும்ப நல்லுறவை வளர்த்துக்கொள்ளவும் வழி உண்டாகும்.

எனவே, அகத்தே கறுத்துப் புறத்தே வெளுத்திருக்கும் உலகர் அனைவரையும் சகத்தே திருத்தி சன்மார்க்க வழிகாட்டும் திருவருட்பேரொளி வள்ளலார் வழியில் அருட்பெரும் வாழ்வும் தனிப்பெரும் நலமும் பெற்று, வையத்துள் வாழ்வாங்கு வாழ அருட்சோதி அன்பர்கள் அனைவரும் அழைக்கப்படுகிறார்கள்.

நாள்:- 5-6-2010 (காரிக்கிழமை)
நேரம்:- காலை மணி 7.00 தொடங்கி, இரவு மணி 7.00 வரை
இடம்:- சிங்கமுகக் காளியம்மன் திருக்கோயில் வளாகம், தெலுக் பகாங், பினாங்கு

நிகழ்வன:- அகவல் ஓதுதல், வரவேற்புரை, தொடக்க விழா, சன்மார்க்க கேள்வி பதில், மனமகிழ் விளையாட்டு, மதிய உணவு, வண்ணம் தீட்டும் போட்டி, சமையல் போட்டி, கோலப் போட்டி, பூச்சரம் தொடுத்தல், திருவருட்பா இசை பரத நாட்டியம், திருவருட்பா பாடல் போட்டி, சன்மார்க்க சொற்பொழிவு, சன்மார்கக் கலந்துரையாடல் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகள் காலை முதல் இரவு வரை நடைபெறும்.

இதில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். பதிவு செய்யும் குடும்பங்களுக்குத் தங்கும் வசதி ஏற்பாடு செய்து தரப்படும்.

ஒரு முழுநாள் நிகழ்வாக நடைபெறும் இந்தக் குடும்ப ஒன்றுகூடல் நிகழ்ச்சியைப் பினாங்கில் செயல்படும் ஒளிபொருந்திய இல்லம் ஏற்பாடு செய்துள்ளது. ஒளிபொருந்திய இல்லம் ஆன்மிகச் சேவையோடு ஆதரவற்றோருக்கு அன்புவழிச் சேவையையும் வழங்கி வருகின்ற ஓர் அமைப்பாகும். இவ்வில்லம் பினாங்கு, பத்து மவுங்கில் செயல்பட்டு வருகின்றது.

வள்ளற் பெருமான் அருளிய அருட்பெருஞ் சோதி தனிப்பெருங்கருணை எனும் மகா மந்திரத்தை உள்ளுணர்ந்து, உண்மை ஆன்மிக நெறியில் வாழ்வியலை அமைத்துக்கொண்டுள்ள அன்பர்கள் அனைவரும் இந்த அரிய நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்கலாம்.

தொடர்புக்கும் மேல் விளக்கம் பெறவும்:-
திரு.கிருஷ்ணன் (019-4740959) / திரு.மாறன் (013-4922223)
திருமதி.காளியம்மாள் (04-6265101) / செல்வன் கோபுர கலசம் (013-4050607)
Blog Widget by LinkWithin