Friday, September 21, 2012

STPM தமிழ்மொழி - இலக்கியப் பாடநூல் வந்துவிட்டது
இவ்வாண்டில் எசுடிபிஎம் (STPM) தேர்வில் தமிழ்மொழி - தமிழ் இலக்கியம் எடுக்கும் மாணவர்கள் பாடநூல்கள் இல்லாமல் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். அவர்களுக்கு இஃது ஒரு நல்ல செய்தியாகும்.

தமிழ் தன் தாய்மொழி;
நான் தமிழ்ப்பள்ளியில் படித்தேன்;
தமிழ்மொழி மீது கொண்ட பற்றுதல்;
தமிழ் படித்தால் கண்டிப்பாகச் ‘சோறு போடும்’;
தமிழ் படித்து வாழ்க்கையில் முன்னேற முடியும்..

போன்ற காரணங்களின் அடிப்படையில் எசுபிஎம், எசுடிபிஎம் போன்ற அரசாங்கத் தேர்வுகளில் நமது மாணவர்கள் தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் ஆகிய தேர்வுகளை எழுதுகின்றனர். இவர்களின் தாய்மொழி உணர்வும், தமிழ்மொழிப் பற்றுதலும், தமிழ்க்கல்வியின் மீதுள்ள நம்பிக்கையும் பாராட்டத்தக்கது.

எனினும், மிகுந்த ஆர்வத்தோடு தமிழ்மொழி, தமிழ் இலக்கியப் பாடங்களைத் தேர்வில் எடுக்கும் மாணவர்களைப் பல்வேறு நெருக்கடிகளும் சிக்கல்களும் சூழ்ந்துகொள்கின்றன. இதனால், மாணவர்கள் பெரிதும் மன உலைச்சளுக்கு ஆளாகின்றனர்.

அப்படிப்பட்ட நெருக்கடிகளில் ஒன்றுதான், தமிழ் இலக்கியப் பாட நூல்கள் இல்லாமை. 2012 இறுதி காலாண்டில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பாடநூல்கள் இல்லை என்றால் அதனை மிக எளிமையாக எண்ணிவிட முடியாது. எசுடிபிஎம் தமிழ் இலக்கியப் பாடநூல் இல்லாத குறையை நீக்குவதற்கு யாருமே அல்லது எந்தத் தரப்பினருமே அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை என்பதை நினைத்தால் மனம் வேதனையாக உள்ளது. அதைவிட பெரிய வேதனையும் வருத்தமும் தமிழ் இலக்கியத்தைத் தேர்வுப்பாடமாக எடுக்கும் மாணவர்களை நினைத்தால் நமக்கு ஏற்படுகிறது.

எனினும், கடந்த ஏழெட்டு மாதங்களாகப் பாடநூல்கள் இல்லாமல் மன உலைச்சளுக்கு ஆளாகிப் போன எசுடிபிஎம் மாணவர்களுக்கு இப்பொழுது ஒரு நற்செய்தி வந்திருக்கிறது.

முனைவர் குமரன்
இவ்வாண்டு எசுடிபிஎம் தமிழ்மொழி இலக்கியத்திற்கான முதல் பருவ பாடநூல் அணியமாகிவிட்டது. மலேசியத் தமிழாராய்ச்சி நிறுவனம் இந்தப் பாடநூலை வெளியீடு செய்துள்ளது.

எசுடிபிஎம் தேர்வில் தமிழ்மொழி - தமிழ் இலக்கியம் எழுதவுள்ள மாணவர்களும் இப்பாட ஆசிரியர்களும்  இந்த நூலை விரைந்து பெற்றுக்கொள்ளலாம்.

முதல் பருவத்திற்கான இந்நூலின் விலை RM10.00 (பத்து வெள்ளி மட்டுமே)

நூலைப் பெற விரும்புவோர் கீழ்க்காணும் அதிகாரிகளைத் தொடர்புகொள்ளலாம்.

1.திரு.அ.இராமன் (தமிழ்மொழித் துணை இயக்குநர், சிலாங்கூர் மாநிலம்) 019-2307765

2.திரு.முனுசாமி (ஆசிரியர், சிலாங்கூர் மாநிலம்) 016-2084250

3.திரு.இரா.விஜயன் (தமிழ்மொழித் துணை இயக்குநர், சொகூர் மாநிலம்) 012-7552107

4.திரு.மா.பூபாலன் (தமிழ்மொழித் துணை இயக்குநர், பகாங் மாநிலம்) 09-5715700

5.திரு.தமிழ்ச்செல்வம் (தமிழ்மொழித் துணை இயக்குநர், கெடா மாநிலம்) 019-4807012

6.திரு.நாராயனராவ் (ஆசிரியர், கெடா மாநிலம்) 012-4075529

7.திரு.சபா.கணேசு (ஆசிரியர், பேரா மாநிலம்) 012-5615115

8.திரு.கார்த்திகேசு (ஆசிரியர், பேரா மாநிலம்) 012-4673141

9.திரு.இரா.அவடயான் (ஆசிரியர், நெகிரி செம்பிலாம் மாநிலம்) 019-6456349

10.முனைவர் குமரன் சுப்பிரமணியம் 012-3123753

11.முனைவர் கிருஷ்ணன் மணியம் 016-3164801

12.முனைவர் இரா.மேகனதாஸ் 012-2806345

மேற்கண்ட விவரங்களை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் செயலாளர் இணைப்பேராசிரியர் முனைவர் குமரன் சுப்பிரமணியம் வெளியிடுள்ள ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

@சுப.நற்குணன், திருத்தமிழ்

Thursday, September 06, 2012

சிவா ஐயாதுரை: முதன்முதலில் மின்னஞ்சலைக் கண்டுபிடித்த தமிழன்
இன்று உலக மக்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒரு முகவரி இருக்கிறது. அவரவர் வீட்டு முகவரி என நினைத்துவிடாதீர்கள். ஒரே வீட்டில் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒரு முகவரி இருக்கிறது. அதுதான் மின்னஞ்சல்(e-mail) முகவரி. இன்றைய நவின காலத்தில் எல்லாருக்கும் எல்லாவற்றுக்கும் மின்னஞ்சல் கண்டிப்பாகத் தேவை என்று ஆகிவிட்டது.

இந்த மின்னஞ்சலைக் கண்டுபிடித்தவர் ஒரு ‘தமிழன்’ என அறியும்போது ‘தமிழன் என்று சொல்லடா; தலைநிமிர்ந்து நில்லடா’ என்று நெற்றிப் புருவம் மேலே ஏறுகின்றது! நரம்புகளில் ஏதோ ஓர் உணர்வு முறுக்கேறுகின்றது.

வெள்ளைத் தாளில் தூவலைப்(பேனா)  பிடித்து கடிதம் எழுதிய பாரம்பரிய முறையை மாற்றிப்போட்டு மின்னியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்மடல் எழுதும் புதிய பரிணாமம்தான் இந்த மின்னஞ்சல். ஆனால், இன்றோ அதனுடைய பயன்பாடு பல்வகைப்பட்டதாக மாறிவிட்டது. நவின உலகத்தில் மின்சாரம் இல்லாமல் எப்படி வாழ முடியாதோ அப்படி ஆகிவிட்டது இந்த மின்னஞ்சல். இ-மெயில் எனப்படும் மின்னஞ்சல் இல்லாமல் இன்றைய உலகத்தில் வாழ முடியாது என்னும் நிலைமை வந்துவிட்டது.   

ஆகக் கடைசியாக வந்திருக்கும் முகநூல் (Facebook), டுவிட்டர் (Twitter), கூகிள் + (g+) யூ டியூப் (You Tube) என்று எந்தத் தொழில்நுட்பத்தை எடுத்துக்கொண்டாலும் இந்த மின்னஞ்சல் இல்லாமல் எதுவும் செயல்படாது; எதிலும் நாம் செயல்பட முடியாது.

அந்த அளவுக்கு முகமைத்தன்மை வாய்ந்த மின்னஞ்சலை முதன் முதலாகக் கண்டுபிடித்து உலகத்திற்கு வழங்கிய அறிவியலாளர் - தொழில்நுட்பர் வி.ஏ.சிவா ஐயாதுரை என்பவராவார். மின்னஞ்சல் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்ததற்கான காப்புரிமையையும் (copyright) இவர் பெற்றிருக்கிறார். இவர் தமிழ்நாட்டில், தமிழ்க் குடும்பத்தில் பிறந்து பின்னர் அமெரிக்காவில் குடியேறிய தமிழர். 

இளவயதில் சிவா ஐயாதுரை
தற்பொழுது 49 அகவை நிரம்பிய சிவா ஐயாதுரை, மின்னஞ்சலைக் கண்டுபிடித்த பொழுது 14 வயது இளைஞராக இருந்தார் என்னும் செய்தியை அறியும்போது நமக்குப் பெரும் வியப்பும் பெருமிதமும் ஏற்படுகிறது.

30 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் மின்னஞ்சல் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்து உலகத்திற்கு அறிமுகப்படுத்திய பொழுது அதனை அமெரிக்க அரசாங்கம் அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை. குடியேற்ற சிறுபான்மை இனத்தவர் என்ற காரணத்தினாலோ என்னவோ இவருக்கு உரிய உறுதிபாட்டையும் காப்புரிமையையும் கொடுக்கவில்லை. இதனால், மின்னஞ்சலுக்குப் பலரும் சொந்தம் கொண்டாடினர்.

ஆனாலும், 4 ஆண்டுகள் கழித்து 1982ஆம் ஆண்டு ஆகத்து 30ஆம் நாள் சிவா ஐயாதுரையின் அரிய கண்டுபிடிப்புக்கு உரிய உறுதிப்பாடும் மின்னஞ்சல் காப்புரிமையும் (e-mail copyright)  வழங்கப்பட்டது.
காப்புரிமை ஆவணம்

இ-மெயில் (e-mail) என்ற பெயரை உருவாக்கியவரும் இவர்தான். அதோடு, மின்னஞ்சலின் உள்ளடக்கங்கள் (inbox, outbox, draft), செயல்முறைகள் (reply, forward, attachment, broadcasting), குறிப்பான்கள் (to, from, subject, Cc, Bcc, Date, Body) ஆகிய எல்லாவற்றையும் உருவாக்கியவரும் பெயரிட்டவரும் இவரேதான்.

சிவா ஐயாதுரை தற்பொழுது அமெரிக்காவின் புகழ்பெற்ற எம்.ஐ.டி பல்கலையில் விரிவுரையாளராக பணியாற்றுகிறார். முன்பு மாணவனாக இருந்தபொழுது தன்னுடைய கண்டுபிடிப்புக்கு சரியான உறுதிப்பாடு கிடைக்காமல் போனதால் மிகவும் மனமுடைந்து போனதன் காரணமாக, தன்னைப்போல் எந்தவொரு மாணவரும் உரிய மதிப்பு கிடைக்காமல் வருத்தமடைய கூடாது என்னும் எண்ணத்தில் இன்னோவேசன் கார்ப்சு (Innovation Corps) என்ற ஒரு நிறுவனத்தை நிறுவியுள்ளார். இந்த நிறுவனம் மாணவர்களின் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தவும் அவற்றைத் தொழில்படுத்தவும் உதவும் என அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் நோவார்க்கு நகர உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தும் வகையில் ஒரு இலக்கம் அமெரிக்க டாலர் (USD100,000) பரிசுத் தொகையை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்க நாளிகை செய்தி - 30.10.1980

சிவா ஐயாத்துரையின் கண்டுபிடிப்பு இன்று உலகத்தையே கட்டிப்போட்டுத் தன் வயப்படுத்தி இருக்கிறது. தமிழனால் முடியும்! தமிழன் சாதிக்கப் பிறந்தவன்! என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் சாதனைத் தமிழன் சிவா ஐயாதுரை.

சிவா ஐயாதுரை பேசுகிறார்:-

 

சிவா ஐயாதுரை பற்றி மேலும் அறிய பின்வரும் தொடுப்புகளைச் சொடுக்கவும்.
@சுப.நற்குணன், திருத்தமிழ்


Saturday, September 01, 2012

தமிழ்க் கட்டாயப் பாடம்:- பேராபத்து நிறைந்த பரிந்துரை

தற்போது மலேசியத் திருநாட்டில் 523 தமிழ்ப்பள்ளிகள் செயல்படுகின்றன. மேலும் 6 புதிய தமிழ்ப்பள்ளிகளை அமைப்பதற்கு அண்மையில் நமது மாண்புமிகு பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் இரசாக் அவர்கள் அதிகாரப்படியாக அறிவிப்பு  செய்திருந்தார். இந்நாட்டில் நம்முடைய தாய்மொழி உரிமையாக விளங்கும் தமிழ்ப்பள்ளிகளில் 'தமிழ்மொழி' கட்டாயப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் 103,000 மாணவர்கள் தமிழைக் கட்டாயப் பாடமாகப் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தேசியப் பள்ளிகளில் அதாவது மலாய்ப் பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக ஆக்க வேண்டும் எனச் சிலர் பரிந்துரை செய்துள்ளனர். இதனால், பெரும் பாதிப்புகளையும் இழப்புகளையும் நமது சமுதாயம் எதிர்கொள்ளும் என அஞ்சப்படுகிறது. இந்தக் கட்டாயப் பாடப் பரிந்துரையை எதிர்த்து நான் எழுதிய செய்தி நாளிதழில் வெளிவதிருந்தது. பின்னர் அச்செய்தி முகநூலில் இடம்பெற்று பல்வேறு எதிர்வினைகளை ஏற்படுத்தியது. அவற்றுள் சிலவற்றை இங்குத் தொகுத்து அளித்துள்ளேன்.

மலேசிய நண்பன் நாளிதழ் செய்தி - 23.08.2012

K.s. Senba வாழ்த்துகள் ஐயா!.... இன்னும் நமது தமிழ்மொழியை எப்படி எல்லாம் தத்துக்கொடுத்துச் சீரழிக்க போகிறார்களோ என்று தெரியவில்லை... மொழி உணர்வு ஒருவருக்கு இல்லாவிடில் அவர் மரத்துக்குச் சமம். சீனர்களுக்கு இருக்கும் மொழிப்பற்று நம்மில் பலருக்கு இல்லை என்று உணரும்போது... மனம் வலிக்கிறது.. தேசியப்பள்ளியில் தமிழ்மொழியைக் கட்டாயப்பாடமாக்கினால் என்னவாகும்? ஏற்கனவே தமிழ்ப்பள்ளியில் தமிழ், நன்னெறி மட்டும்தான் தமிழில் போதிக்கப்படுகின்றன.................... அங்கேயே நாம் தத்தளித்துக்கொண்டிருக்கும் போது, தேசியப்பள்ளியில் தமிழைக் கட்டாயப்பாடமாக்கினால்.... விரைவில் தமிழ்ப்பள்ளிகளுக்கு மூடுவிழா காண வேண்டியதுதான்... நம் விரல்களால் கண்களைக் குருடாக்கிக் கொள்ளவும், நம் கழுத்திற்கு நாமே கத்தியை வைத்துக் கொள்ளவும் வழி செய்யும் இந்த யோசனையைக் குழித் தோண்டிப் புதைப்போம்... தமிழையும், தமிழ்ப்பள்ளிகளையும் வாழ வைப்போம்... தமிழுணர்வு கொண்ட அனைவரும் ஒன்றாய் கரம் சேர்ப்போம்.. நம் இனத்தைக் காக்க வேண்டுமானால்; நம் மொழியையையும், பள்ளியையும் காப்போம்!!!

Ramani Darman வாழ்த்துகள் நண்பரே! இந்தப் போராட்டத்திற்கு இன மானமுள்ள தமிழர்கள் கண்டிப்பாக தோள் கொடுப்பர்.

Johnson Victor எலி வலையானாலும் தனி வலை வேணும். இது என்ன ஒரு வசதியும் இல்லை. நரியின் குகையில் தஞ்சம் புகுந்து கொள்ளலாம் என்று நினைப்பது, தனக்குத் தானே உலை வைப்பதற்குச் சமம். 

Thiagaseelan Ganesan நண்பர்களே, நற்குணன் மிகச் சரியாகத் தான் கூறியிருக்கிறார். தேசிய பள்ளியில் தமிழ் கட்டாயமாக்கப்பட்டால், தமிழ்ப்பள்ளியில்தான் தமிழ் பயில முடியும் என்கிற நிலமை மாறிவிடும். இது தமிழ்ப்பள்ளிகளின் மூடுவிழாவிற்கு வித்திடும். எப்படி சீன மொழிகள் சீன பள்ளிகளில் கற்பிக்கப்படுகின்றதோ, தமிழும் தமிழ் பள்ளியில் மட்டுமே கற்பிக்கப்பட வேண்டும். தலைப்பை தவறாகப் படித்து உணர்ச்சிவசப்பட்டு ஒரு புண்ணியமில்லை. நிதானத்தோடு யோசித்துப்பாருங்கள், நற்குணனின் செயல் உங்களுக்குப் புரியும்.

Kandasamy Chinnayah Kandasamy தமிழ் பற்றாளர்கள் கண்டிப்பாக தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப் பள்ளிக்குத்தான் அனுப்புவார்கள். ஏனென்றால், அங்கு தான் வள்ளுவரைப் பற்றியும் ஒளவையாரைப் பற்றியும் தெரிந்து கொள்ள முடியும். தேசிய பள்ளிகளில் சரஸ்வதியைப் பார்க்க முடியாது , ஆகையினால் தேசியப் பள்ளிகளில் தமிழ் பாடங்களை கட்டடாயப் பாடமாக்குவது பற்றி அஞ்சத் தேவை இல்லை.

Thanesh Balakrishnan தமிழ்ப்பள்ளியில் படிக்கின்றவனால் மட்டுமே மொழியின் சுவை அறிய முடியும் என்றால் ஒரு முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போன்றாகிவிடும். தமிழ்ப்பாடத்தைத் தேசியப் பள்ளிகளில் இந்திய மாணவர்களுக்குக் கட்டாயப் பாடமாக்கப்பட்டால் அது நம் தமிழ்த்தாய்க்குக் கிடைத்த அங்கீகரிப்பாகும். சிந்தனை செய் மனமே சொல்லிவிட்டு, வெறுமனே இல்லாமல் ஆக்கச் சிந்தனையோடு யோசிப்போம்; விவாதிப்போம். நம் தமிழர்கள் வீரத் தமிழர்கள் என்பதனை மனதில் வைத்துக் கொண்டு செயல்படுவோம். 

Elangovan Annamalai என்னைப் பொருத்தவரை.. தேசியப் பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக்கினால் நன்று தானே....சில இடங்களில் தமிழ்ப்பள்ளிகள் வெகு தூரம் இருப்பதால் சில பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளைத் தேசியப் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர்...அவர்களுக்குத் தமிழின் மீது பற்று கிடையாது என்று கூறிவிடமுடியாது... அப்பேற்பட்ட பெற்றோர்கள் வேறு வழியின்றி தேசியப் பள்ளிகளுக்கு தங்களின் பிள்ளைகளை அனுப்புவது யாரும் குறை சொல்லமுடியாது. இப்பள்ளியில் பயிலும் இந்திய மாணவர்களுக்குத் தமிழ்மொழி கட்டாயப் பாடமாக்குவது தான் சிறப்பு.

Chan Mathi தேசியப் பள்ளிகளில் தமிழ்க்கட்டாயப் பாடமாகும் போது இயல்பாகவே தமிழ்ப்பள்ளி மாணவர்கள் குறைவர் என்பது திண்ணம். PPSMI என்ற திட்டம்(அறிவியல், கணிதம் ஆங்கிலத்தில் போதித்தல்) தொடங்கப்பட்டபோது தமிழ்ப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால் இன்று மாணவர் எண்ணிக்கை குறைகின்றது. இவ்வாறு பலவற்றை நாம் இழக்க நேரிடும். தமிழ்ப்பள்ளியில் கலைமகள் வழிபாடு, பொங்கல் விழா, திருமுறை விழா அகியவற்றை நடத்துகின்றோம். ஆனால், தேசியப் பள்ளியில் இவை சாத்தியமா???? தேசியப்பள்ளியில் தமிழைக் கட்டாயமாக்குவதை விடுத்து இடைநிலைப்பள்ளியில் தமிழ்மொழி, இலக்கியத்தைக் கட்டாயப்பாடமாக்கினால் சிறப்பு.

Suba Nargunan சுப நற்குணன் காணி நிலம் இருக்கும் பொழுது கைப்பிடி மண்ணுக்காகப் போராடுவது புத்திசாலித்தனம் என்று நினைக்கிறீர்களா நண்பரே?
1) நம்மிடம் தமிழ்ப்பள்ளி என்ற உரிமை இருக்கிறது.
2 )அங்கு தமிழ்க்கல்வி என்ற உரிமை இருக்கிறது.
3 ) அங்கு நமது கலை, பண்பாடு, சமயம், இலக்கியம் என யாவற்றையும் வளர்த்துக்கொள்ள உரிமை இருக்கிறது.
4 ) தமிழின் பெயரால் நமது மக்கள் ஒன்று கூடுவதற்கு உரிமை இருக்கிறது.

இப்படிப்பட்ட பல உரிமைகளைப் பறிகொடுத்துவிட்டு ஒரே ஒரு ‘தமிழ்ப் பாடம்’ போதும் எங்களுக்கு என்று போராடுவது நமது புத்திசாலித்தனத்திற்கு நல்ல எடுத்துக்காட்டு என்று நான் நினைக்கவில்லை.

Suba Nargunan சுப நற்குணன் வாருங்கள் அன்பர்களே.. கை கோர்ப்போம் நாம்!
தமிழையும் தமிழ்ப்பள்ளிகளையும் ஒருசேர காக்க வேண்டிய தருணம் இது. இப்போது விட்டால்..பிறகு என்றைக்குமே காப்பாற்ற முடியாமல் போய்விடக்கூடும். இன்னும் 50 ஆண்டுகள் கழித்து நம் குழந்தைகள் தமிழுக்காக.. தாய்மொழிக்காக.. தமிழ்ப்பள்ளிக்காக..தமிழ்க்கல்விக்காக.. இந்த நாட்டில் போராட வேண்டிய நெருக்கடியான சூழலை நாம் ஏற்படுத்தி வைக்க வேண்டாம். நிகழ்காலத்தில் நாம் செய்யும் தவறுகள் எதிர்காலத்தில் நம் அடுத்த தலைமுறையைப் பெரிதும் பாதிக்கலாம். நம் குழந்தைகளின் தாய்மொழி உரிமையை.. தமிழ்ப்பள்ளி உரிமையை.. தமிழ்க்கல்வி உரிமை.. நாமே கெடுத்துவிட வேண்டாம். ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைப்போம்! ஒவ்வொரு முடிவையும் மிக மிகப் பொறுமையாக எடுப்போம்!

தேசியப் பள்ளிகளில் தமிழ்க் கட்டாயப் பாடப் பரிந்துரை தொடர்பான செய்திகளைப் படிக்க கீழ்க்காணும் தொடுப்புகளைச் சொடுக்கவும்:-

@சுப.நற்குணன், திருத்தமிழ்

Blog Widget by LinkWithin