Saturday, September 01, 2012

தமிழ்க் கட்டாயப் பாடம்:- பேராபத்து நிறைந்த பரிந்துரை

தற்போது மலேசியத் திருநாட்டில் 523 தமிழ்ப்பள்ளிகள் செயல்படுகின்றன. மேலும் 6 புதிய தமிழ்ப்பள்ளிகளை அமைப்பதற்கு அண்மையில் நமது மாண்புமிகு பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் இரசாக் அவர்கள் அதிகாரப்படியாக அறிவிப்பு  செய்திருந்தார். இந்நாட்டில் நம்முடைய தாய்மொழி உரிமையாக விளங்கும் தமிழ்ப்பள்ளிகளில் 'தமிழ்மொழி' கட்டாயப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் 103,000 மாணவர்கள் தமிழைக் கட்டாயப் பாடமாகப் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தேசியப் பள்ளிகளில் அதாவது மலாய்ப் பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக ஆக்க வேண்டும் எனச் சிலர் பரிந்துரை செய்துள்ளனர். இதனால், பெரும் பாதிப்புகளையும் இழப்புகளையும் நமது சமுதாயம் எதிர்கொள்ளும் என அஞ்சப்படுகிறது. இந்தக் கட்டாயப் பாடப் பரிந்துரையை எதிர்த்து நான் எழுதிய செய்தி நாளிதழில் வெளிவதிருந்தது. பின்னர் அச்செய்தி முகநூலில் இடம்பெற்று பல்வேறு எதிர்வினைகளை ஏற்படுத்தியது. அவற்றுள் சிலவற்றை இங்குத் தொகுத்து அளித்துள்ளேன்.

மலேசிய நண்பன் நாளிதழ் செய்தி - 23.08.2012

K.s. Senba வாழ்த்துகள் ஐயா!.... இன்னும் நமது தமிழ்மொழியை எப்படி எல்லாம் தத்துக்கொடுத்துச் சீரழிக்க போகிறார்களோ என்று தெரியவில்லை... மொழி உணர்வு ஒருவருக்கு இல்லாவிடில் அவர் மரத்துக்குச் சமம். சீனர்களுக்கு இருக்கும் மொழிப்பற்று நம்மில் பலருக்கு இல்லை என்று உணரும்போது... மனம் வலிக்கிறது.. தேசியப்பள்ளியில் தமிழ்மொழியைக் கட்டாயப்பாடமாக்கினால் என்னவாகும்? ஏற்கனவே தமிழ்ப்பள்ளியில் தமிழ், நன்னெறி மட்டும்தான் தமிழில் போதிக்கப்படுகின்றன.................... அங்கேயே நாம் தத்தளித்துக்கொண்டிருக்கும் போது, தேசியப்பள்ளியில் தமிழைக் கட்டாயப்பாடமாக்கினால்.... விரைவில் தமிழ்ப்பள்ளிகளுக்கு மூடுவிழா காண வேண்டியதுதான்... நம் விரல்களால் கண்களைக் குருடாக்கிக் கொள்ளவும், நம் கழுத்திற்கு நாமே கத்தியை வைத்துக் கொள்ளவும் வழி செய்யும் இந்த யோசனையைக் குழித் தோண்டிப் புதைப்போம்... தமிழையும், தமிழ்ப்பள்ளிகளையும் வாழ வைப்போம்... தமிழுணர்வு கொண்ட அனைவரும் ஒன்றாய் கரம் சேர்ப்போம்.. நம் இனத்தைக் காக்க வேண்டுமானால்; நம் மொழியையையும், பள்ளியையும் காப்போம்!!!

Ramani Darman வாழ்த்துகள் நண்பரே! இந்தப் போராட்டத்திற்கு இன மானமுள்ள தமிழர்கள் கண்டிப்பாக தோள் கொடுப்பர்.

Johnson Victor எலி வலையானாலும் தனி வலை வேணும். இது என்ன ஒரு வசதியும் இல்லை. நரியின் குகையில் தஞ்சம் புகுந்து கொள்ளலாம் என்று நினைப்பது, தனக்குத் தானே உலை வைப்பதற்குச் சமம். 

Thiagaseelan Ganesan நண்பர்களே, நற்குணன் மிகச் சரியாகத் தான் கூறியிருக்கிறார். தேசிய பள்ளியில் தமிழ் கட்டாயமாக்கப்பட்டால், தமிழ்ப்பள்ளியில்தான் தமிழ் பயில முடியும் என்கிற நிலமை மாறிவிடும். இது தமிழ்ப்பள்ளிகளின் மூடுவிழாவிற்கு வித்திடும். எப்படி சீன மொழிகள் சீன பள்ளிகளில் கற்பிக்கப்படுகின்றதோ, தமிழும் தமிழ் பள்ளியில் மட்டுமே கற்பிக்கப்பட வேண்டும். தலைப்பை தவறாகப் படித்து உணர்ச்சிவசப்பட்டு ஒரு புண்ணியமில்லை. நிதானத்தோடு யோசித்துப்பாருங்கள், நற்குணனின் செயல் உங்களுக்குப் புரியும்.

Kandasamy Chinnayah Kandasamy தமிழ் பற்றாளர்கள் கண்டிப்பாக தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப் பள்ளிக்குத்தான் அனுப்புவார்கள். ஏனென்றால், அங்கு தான் வள்ளுவரைப் பற்றியும் ஒளவையாரைப் பற்றியும் தெரிந்து கொள்ள முடியும். தேசிய பள்ளிகளில் சரஸ்வதியைப் பார்க்க முடியாது , ஆகையினால் தேசியப் பள்ளிகளில் தமிழ் பாடங்களை கட்டடாயப் பாடமாக்குவது பற்றி அஞ்சத் தேவை இல்லை.

Thanesh Balakrishnan தமிழ்ப்பள்ளியில் படிக்கின்றவனால் மட்டுமே மொழியின் சுவை அறிய முடியும் என்றால் ஒரு முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போன்றாகிவிடும். தமிழ்ப்பாடத்தைத் தேசியப் பள்ளிகளில் இந்திய மாணவர்களுக்குக் கட்டாயப் பாடமாக்கப்பட்டால் அது நம் தமிழ்த்தாய்க்குக் கிடைத்த அங்கீகரிப்பாகும். சிந்தனை செய் மனமே சொல்லிவிட்டு, வெறுமனே இல்லாமல் ஆக்கச் சிந்தனையோடு யோசிப்போம்; விவாதிப்போம். நம் தமிழர்கள் வீரத் தமிழர்கள் என்பதனை மனதில் வைத்துக் கொண்டு செயல்படுவோம். 

Elangovan Annamalai என்னைப் பொருத்தவரை.. தேசியப் பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக்கினால் நன்று தானே....சில இடங்களில் தமிழ்ப்பள்ளிகள் வெகு தூரம் இருப்பதால் சில பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளைத் தேசியப் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர்...அவர்களுக்குத் தமிழின் மீது பற்று கிடையாது என்று கூறிவிடமுடியாது... அப்பேற்பட்ட பெற்றோர்கள் வேறு வழியின்றி தேசியப் பள்ளிகளுக்கு தங்களின் பிள்ளைகளை அனுப்புவது யாரும் குறை சொல்லமுடியாது. இப்பள்ளியில் பயிலும் இந்திய மாணவர்களுக்குத் தமிழ்மொழி கட்டாயப் பாடமாக்குவது தான் சிறப்பு.

Chan Mathi தேசியப் பள்ளிகளில் தமிழ்க்கட்டாயப் பாடமாகும் போது இயல்பாகவே தமிழ்ப்பள்ளி மாணவர்கள் குறைவர் என்பது திண்ணம். PPSMI என்ற திட்டம்(அறிவியல், கணிதம் ஆங்கிலத்தில் போதித்தல்) தொடங்கப்பட்டபோது தமிழ்ப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால் இன்று மாணவர் எண்ணிக்கை குறைகின்றது. இவ்வாறு பலவற்றை நாம் இழக்க நேரிடும். தமிழ்ப்பள்ளியில் கலைமகள் வழிபாடு, பொங்கல் விழா, திருமுறை விழா அகியவற்றை நடத்துகின்றோம். ஆனால், தேசியப் பள்ளியில் இவை சாத்தியமா???? தேசியப்பள்ளியில் தமிழைக் கட்டாயமாக்குவதை விடுத்து இடைநிலைப்பள்ளியில் தமிழ்மொழி, இலக்கியத்தைக் கட்டாயப்பாடமாக்கினால் சிறப்பு.

Suba Nargunan சுப நற்குணன் காணி நிலம் இருக்கும் பொழுது கைப்பிடி மண்ணுக்காகப் போராடுவது புத்திசாலித்தனம் என்று நினைக்கிறீர்களா நண்பரே?
1) நம்மிடம் தமிழ்ப்பள்ளி என்ற உரிமை இருக்கிறது.
2 )அங்கு தமிழ்க்கல்வி என்ற உரிமை இருக்கிறது.
3 ) அங்கு நமது கலை, பண்பாடு, சமயம், இலக்கியம் என யாவற்றையும் வளர்த்துக்கொள்ள உரிமை இருக்கிறது.
4 ) தமிழின் பெயரால் நமது மக்கள் ஒன்று கூடுவதற்கு உரிமை இருக்கிறது.

இப்படிப்பட்ட பல உரிமைகளைப் பறிகொடுத்துவிட்டு ஒரே ஒரு ‘தமிழ்ப் பாடம்’ போதும் எங்களுக்கு என்று போராடுவது நமது புத்திசாலித்தனத்திற்கு நல்ல எடுத்துக்காட்டு என்று நான் நினைக்கவில்லை.

Suba Nargunan சுப நற்குணன் வாருங்கள் அன்பர்களே.. கை கோர்ப்போம் நாம்!
தமிழையும் தமிழ்ப்பள்ளிகளையும் ஒருசேர காக்க வேண்டிய தருணம் இது. இப்போது விட்டால்..பிறகு என்றைக்குமே காப்பாற்ற முடியாமல் போய்விடக்கூடும். இன்னும் 50 ஆண்டுகள் கழித்து நம் குழந்தைகள் தமிழுக்காக.. தாய்மொழிக்காக.. தமிழ்ப்பள்ளிக்காக..தமிழ்க்கல்விக்காக.. இந்த நாட்டில் போராட வேண்டிய நெருக்கடியான சூழலை நாம் ஏற்படுத்தி வைக்க வேண்டாம். நிகழ்காலத்தில் நாம் செய்யும் தவறுகள் எதிர்காலத்தில் நம் அடுத்த தலைமுறையைப் பெரிதும் பாதிக்கலாம். நம் குழந்தைகளின் தாய்மொழி உரிமையை.. தமிழ்ப்பள்ளி உரிமையை.. தமிழ்க்கல்வி உரிமை.. நாமே கெடுத்துவிட வேண்டாம். ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைப்போம்! ஒவ்வொரு முடிவையும் மிக மிகப் பொறுமையாக எடுப்போம்!

தேசியப் பள்ளிகளில் தமிழ்க் கட்டாயப் பாடப் பரிந்துரை தொடர்பான செய்திகளைப் படிக்க கீழ்க்காணும் தொடுப்புகளைச் சொடுக்கவும்:-

@சுப.நற்குணன், திருத்தமிழ்

No comments:

Blog Widget by LinkWithin