Showing posts with label தமிழ்ப் பா. Show all posts
Showing posts with label தமிழ்ப் பா. Show all posts

Tuesday, October 25, 2016

பன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்


மகாகவி பாரதியாரின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி
அக்தோபர் 20 – 23 வரையில் கெடா, எயிம்சு பல்கலைக்கழகத்தில் பார்புகழ் பாவலர் பாட்டுக்கொரு புலவன் மகாகவி பாரதியாரின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி கலந்துகொண்டார். பாரதியாரின் சரவடியாகிய அவருடைய வருகை மாநாட்டிற்கே கலை கட்டியது; மெருகு கூட்டியது என்றுதான் சொல்ல வேண்டும்.

பாரதியின் பாடலைப் படித்தும் இன்புற்றும் உணர்வு பெற்றும் இருக்கின்ற ஆசிரியர்கள்; வகுப்பறையில் பாரதியின் பாடல்களை அழகழகாகக் கற்பிக்கும் தமிழாசிரியர்கள் இந்த மாநாட்டில் நிரஞ்சன் பாரதியை நேரில் கண்டதும் மகிழ்ச்சியும் குதூகலமும் அடைந்தனர். அவருடைய வருகையும் உரையும் வந்தவர்கள் அனைவருக்கும் புதிய உந்துதலை ஏற்படுத்தியது என்பது மிக வெளிப்படையாகவே தெரிந்தது.
வே.இளஞ்செழியன் நிரஞ்சன் பாரதிக்குச் சிறப்பு செய்கிறார்
நிரஞ்சன் பாரதியோடு பேசவும், கைகுலுக்கவும், தாமி எடுக்கவும் பேராளர்கள் அவரைச் சுற்றிச் சூழ்ந்துகொண்டே இருப்பதைக் காண முடிந்தது. நிறைவு விழாவில் உணர்வுகளைத் தொடுகின்ற வகையில் தமிழ்க்கல்வி பற்றியும் மலேசியத் தமிழர்களின் தமிழ்ப்பற்று பற்றியும் அழகாகப் பேசினார் நிரஞ்சன்.

உலகத்தில் பல நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்தாலும் மலேசியத் தமிழர்கள் உள்ளத்தில் தமிழ் என்னும் தீ கொளுந்துவிட்டு எறிவதாகக் குறிப்பிட்ட பொழுதும்; “தாய் தமிழ்நாட்டில் தமிழ் தேய்ந்து போகும் நிலைமையைப் பார்க்கும் பொழுது மனம் சோர்ந்து போனாலும் மலேசியத் தமிழர்களைப் பார்க்கும் பொழுது தமிழை நீங்கள் காப்பாற்றி விடுவீர்கள் என்று புதிய நம்பிக்கை உண்டாகிறது” என்று சொன்ன பொழுதும் மாநாட்டு அரங்கம் கரவொலியால் அதிர்ந்தது.
சுப.நற்குணன், முத்து நெடுமாறன், நிரஞ்சன் பாரதி
மலேசியத் தமிழர்களுக்காக நிரஞ்சன் பாரதி ஓயாத கரவொலிகளுக்கு நடுவில் ஓர் அழகிய கவிதை வாசித்தார்.

லோ லோ லோ
என்று பேசுவோர் பலர் இருக்க
லா லா லா
என்று இசை ததும்ப
பேசுபவர்கள் நீங்கள்;

ஆதலால் உங்களுக்கு
என் வணக்கம் லா
நான் தான் உங்கள்
நிரஞ்சன் லா;

கடாரமே
கடலில் சொலிக்கும் ஆரமே
இராஜேந்திர சோழனின் கண்ணே
தமிழ் பேசும் அழகான பெண்ணே
கீழே குனிந்து கையால் அணைத்து
மனதால் முத்தமிடுகிறேன் உன்னை
ஏற்றுக்கொள்வாய் என்னை;

தாய்த் தமிழகத்தில்
தாய்மொழி தாய்மொழி என்று
தம்பட்டம் அடித்தாலும் அது எங்கள்
வாய்மொழியாக வருவதில்லை;
அப்படியே வந்தாலும் அது
ஆனந்தம் தருவதில்லை;

நாங்கள் “டிஃபன் சாப்டாச்சா” என்கிறோம்
நீங்கள் “பசியாறியாச்சா” என்கிறீர்கள்

தூக்கத்தில் எழுப்பினாலும்
தமிழ்ப் பேசுகிறீர்கள் நீங்கள்
தமிழைத் தூங்க வைத்துவிட்டு
உலவுகிறோம் நாங்கள்;

எதையும் விடாமல்
தமிழ்ப்படுத்தி விடுகிறீர்கள் நீங்கள்;
எப்போதும் விடாமல்
தமிழைப் படுத்துகிறோம் நாங்கள்;

தமிழ் எங்களுக்கு வார்த்தை
தமிழ் உங்களுக்கு வாழ்க்கை;

தாயகத்தில் தமிழ் தளர்கிறதே
என்னும்போது சற்றே வற்றிப்போகிறேன் – எனினும்
அயலகத்தில் தமிழ் வளர்வதைக் கண்டு
என்னைத் தேற்றிக் கொள்கிறேன் நான்

பலநூறு வருடம் முன்னம்
பலநூறு மைல் தாண்டி
பிழைப்பின் பொருட்டு
மலாயம் வந்தீர்கள்;
கூடவே தமிழையும்
கொணர்ந்து வந்தீர்கள்;

கடல்தாண்டி வந்தாலும்
கடலுக்குள் மூழ்காமல்
உங்களுக்குள் மூழ்கியது தமிழ்;

இங்கு வந்து
ரப்பர் மரங்களை
வெட்டியதாலோ என்னவோ
இழுத்து இழுத்து தமிழைத்
தழைக்க வைத்திருக்கிறீர்கள்;

ரப்பர் மரத்தில் வழியும் பால்
உங்கள் மனதிலும் வழிய
அன்பால் பண்பால்
நினைப்பால் முனைப்பால்
துடிப்பால் உழைப்பால்
ஆண்பால் பெண்பால்
என அனைவரும்
தமிழை நிலைக்கச் செய்தீருக்கிறீர்கள்;

கார்கள் செல்ல மட்டுமா
சாலை போட்டீர்கள்
கல்வி பயிலவும் அல்லவா
சாலை போட்டீர்கள்;

உங்களை உளமாற
வணங்கி மகிழ்கிறேன்
உங்களையே உந்து சக்தியாக
உளத்தில் வரித்துக் கொள்கிறேன்;

இந்த மாநாட்டில்
கன்னித்தமிழையும் கணிப்பொறியையும்
முயங்க வைத்தீர்கள்
முயங்குவதை நேரில் காட்டி
மயங்க வைத்தீர்கள்
எனக்குள் சோர்ந்து
கிடந்த ஏதோ ஒன்றை
இயங்க வைத்தீர்கள்;

இணைப்பு நிசமாக்கம் மூலம்
இலக்கியம் கற்கலாம் என்றீர்கள்
அசைவுருவாக்கம் மூலம்
இலக்கணம் பயிலலாம் என்றீர்கள்;
இதையெல்லாம் கேட்டுக் கேட்டுக்
குதூகளித்தேன் - தமிழ்மேல்
மீண்டும் காதலில் விழுந்தேன்

தன் மாணாக்கனைச்
சேயாகக் கருதி
தாயாக மாறும்
ஆசிரியைகள் பார்த்து
ஆசிரியம் என்னும்
புத்தறம் தோன்றக் கண்டேன்;

உங்களிடம் கொளுந்துவிட்டு எறிகிறது
தமிழ் என்னும் நெருப்பு – அதனை
என் கண்களால் ஒற்றிக்கொள்கிறேன்
அந்த நெருப்பெடுத்து என் மனதைப்
பற்றிக் கொள்கிறேன் – அந்நெருப்பைத்
தாய்த் தமிழகத்திற்கு அணையாமல்
அணைத்துச் செல்வதே என் பொறுப்பு;

அந்த நெருப்பால்
அங்குத் தமிழுக்கு
ஒளியூட்டுவதே உங்களுக்கு
நான் செய்யும் சிறப்பு..!


@சுப.நற்குணன்

Tuesday, August 31, 2010

சஞ்சியிலே வந்தவங்க தாண்டவக் கோனே!


மனதைத் தொட்ட மரபுக்கவிதை - 3

ரெ.ச என்று எல்லோராலும் அன்பொழுக அழைக்கப்படும் ரெ.சண்முகம் அவர்களின் பாடலை இந்தத் தொடரில் பதிவு செய்கிறேன்.

பாடகர், இசையமைப்பாளர், பாவலர், பாடலாசிரியர், மேடை நாடகாசிரியர், வானொலி நாடக ஆசிரியர், நடிகர், இயக்குநர், கட்டுரையாசிரியர், சிறுகதை எழுத்தாளர் எனப் பன்முக ஆற்றல்பெற்ற அரும்பெறல் கலைஞர் ரெ.சண்முகம். மலேசிய வானொலி அறிவிப்பாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார் என்பது இவருடைய மற்றொரு வரலாறு.

இவருடைய “செந்தாழம் பூவாய்” பாடல் திரைப்பாட்டுகளுக்கே வெல்விளி (சவால்) விடும் அளவுக்கு மிகச் சிறந்த பாடலாக புகழ்பெற்றது என்ற செய்தி பலர் அறிந்ததே. இவருடைய குரலுக்கு மயங்கியோர் நாட்டில் பலர் உள்ளனர்.

இவர் சில நூல்களையும் எழுதி மலேசிய எழுத்துலகைச் செழிக்கச் செய்துள்ளார். அவற்றுள் ரெ.ச.இசைப்பாடல்கள், பிரார்த்தனை (கவிதை), நல்லதே செய்வோம் (கட்டுரை), இந்த மேடையில் சில நாடகங்கள் (சுய சரிதை) ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கன.

மலேசிய தமிழ் இசைக்கலை வாழ்விலும் வளர்ச்சியிலும் ரெ.ச எனும் பெயர் இரண்டறக் கலந்திருக்கிறது. இவருடைய அரும்பணிகளைப் பாராட்டும் வகையில் ‘செவ்விசைச் சித்தர்’ எனும் விருதும் வழங்கப்பட்டுள்ளது.

மலேசியத் தமிழர்களிடையே சாதனை மாந்தராகத் திகழும் செவ்விசைச் சித்தர் ரெ.ச அவர்களின் பாடலொன்று இங்கே பதிவாகிறது. பொருள் விளக்கமே தேவையில்லாமல் புரிந்துகொள்ளும் அளவுக்கு மிக எளிமையான பாடல் இது. மலேசியத் தமிழர்களின் அன்றைய வரலாறு, இன்றைய நிலைமை ஆகிய இரண்டையும் படம்பிடித்துக் காட்டும் ‘சித்தர்’ பாட்டு இது.

**********************
பிரித்தானிய ஆட்சியின்போது தமிழகத்திலிருந்து ஒப்பந்தக் (சஞ்சி) கூலிகளாகத் தமிழ் மக்கள் மலாயாவுக்குக் கொண்டுவரப்பட்ட வரலாற்றிலிருந்து பாடல் தொடங்குகிறது. இங்கு வந்த தமிழர்கள் காட்டுலும் மேட்டிலும் உழைத்து நாட்டைக் கட்டியெழுப்பிய கதைப் போகிற போக்கில் சொல்லிப் போகிறார் கவிஞர். கூடவே, மலேசியத் தமிழர்களின் இன்றைய அவலங்களையும் பாடிக் காட்டுகிறார்.


சஞ்சியிலே வந்தவங்க தாண்டவக் கோனே - இன்னைக்கும்
சரியாக அமையலயே தாண்டவக் கோனே
மிஞ்சிப்போயி நிக்குதையா தாண்டவக் கோனே - கொஞ்சம்
மிதிக்கத்தானே பாக்குறாங்க தாண்டவக் கோனே

காரினிலே பறக்குறவங்க தாண்டவக் கோனே – நல்ல
கனவிலயும் மிதக்குறாங்க தாண்டவக் கோனே
தாருபோட்டு ரோடு போட்டவன் தாண்டவக் கோனே – இன்னும்
தரையினிலே தவழுறானே தாண்டவக் கோனே


இவனுக்குள்ளயே ஏமாத்துறான் தாண்டவக் கோனே – அத
எதுத்துபுட்டா திரும்பஒத தாண்டவக் கோனே
கவனத்தோட வாழலயே தாண்டவக் கோனே – இன்னும்
கன்னிகழி யாதவந்தான் தாண்டவக் கோனே

அடுத்துவரும் அடிகள் முக்கியமானவை. தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடியைப் பக்குவமாகச் சொல்லிச் செல்லுவது கவரும்படியாக உள்ளது.

புள்ளைங்கள்ளாம் படிக்கிறாங்க தாண்டவக் கோனே – அங்கே
போடுறதுல கையவச்சான் தாண்டவக் கோனே
அள்ளி அள்ளி ஊட்டுறானே தாண்டவக் கோனே – எதுக்கும்
ஆகாத முண்டங்களுக்குத் தாண்டவக் கோனே

மலேசிய அரசியல் சூழல் இன்று மாற்றத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இந்த மாற்றத்தின் காரணமாக அரசியல் பிழைப்போரிடமும் மேல்மட்டத் தலைவர்கள் தொடங்கி குட்டி குட்டி தலைவர்கள் வரையில் தன்னலப் போக்கு வரம்புமீறி போய்க்கொண்டிருக்கிறது. தன்னலத்துக்காக தன் இனத்தையே அழிக்கும் அளவுக்கு இன்று தமிழர்கள் துணிந்துவிட்டார்கள். இது அரசியல் நிலை என்றால், குடும்ப அளவிலும் இன்று இதே நிலைமைதான். ஒற்றுமை, புரிந்துணர்வு, விட்டுக்கொடுத்தல் முதலிய பண்புகள் நலிந்துபோய்விட்டன. தமிழர்கள் தங்களுக்குள்ளேயே பிளவுபட்டதும் அல்லாமல் அடித்துக்கொள்வது பேரவலமாக இருக்கின்றது. அடுத்த அடிகளில் செவ்விசைச் சித்தரும் இதனையே சொல்லுவதைப் பாருங்கள்.

கோடரிக்கும் காம்புபோல தாண்டவக் கோனே – இவன்
கோளுவச்சான் குடிகெடுத்தான் தாண்டவக் கோனே
மாடுபோல பாடுபட்டான் தாண்டவக் கோனே – இன்னும்
மனுசனாக மாறலியே தாண்டவக் கோனே


ரெண்டாயிரம் வந்திடுச்சி தாண்டவக் கோனே – இன்னும்
ரெண்டு ரெண்டா பிரிஞ்சுருக்கான் தாண்டவக் கோனே
மண்டுத்தனமா வாழுறத தாண்டவக் கோனே – இவன்
மகத்துவமா நினைக்கிறானே தாண்டவக் கோனே

இன்று 53ஆவது மலேசிய தேசிய நாளை முன்னிட்டு, இந்தப் பாடலை உங்கள் சிந்தனைக்காகப் பரிமாறுகிறேன்.

“தேசிய நாள் நல்வாழ்த்து”


Monday, September 14, 2009

இவனா தமிழன்? இருக்காது! யானைக்குப் பூனை பிறக்காது!

  • மனதைத் தொட்ட மரபுக்கவிதை - 2
மலேசியாவில் தமிழ் தமிழாக நிலவுவதற்கும் நிலைபெறுவதற்கும் அரும் பாடாற்றி வரும் விரல்விட்டுச் சொல்லத் தகுந்தவர்களில் குரல்விட்டுச் சொல்லத்தக்கவர் கவிஞர் ஐயா செ.சீனி நைனா முகம்மது அவர்கள். தமிழே தம் மூச்சாக வாழ்ந்து வருபவர் இவர். இதழியல் துறையில் மிக ஆழ்ந்த ஈடுபாடும் நீண்ட பட்டறிவும் கொண்டவர்.

தமிழ் இலக்கணத்தின் மரபியலையும் மரபுக் கவிதையின் மாண்பியலையும் தனியராகவே முயன்று காப்பதோடு, இவ்விரண்டையும் இளையோருக்குப் பயிற்றுவிக்கும் அரிய பணியையும் அயராது மேற்கொண்டு வருபவர். அதற்காகவே, நாடெங்கிலும் பம்பரமாகச் சுற்றிச்சுழன்று வகுப்புகள், பட்டறைகள், பயிலரங்குகள் என செயற்கரிய செய்பவர். இலக்கணமும் மரபுக் கவிதையும் கடுமையானது என்ற பொய்யான பரப்புரைகளை அடித்து நொறுக்கி அவை இரண்டையும் எளிதாகவும் இனிதாகவும் ஆக்கிக்காட்டிய பெருமை இவரையே சாரும்.

இவருடைய தொல்காப்பியத் திருப்பணியைப் போற்றி, தமிழகத்தின் தமிழ்ச்சுரங்கம் அமைப்பு கடந்த 2007ஆம் ஆண்டில் இவருக்கு ‘தொல்காப்பிய விருது’ வழங்கி சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

இறையருட்கவிஞர் நல்லார்க்கினியர் என்று எல்லாராலும் அன்பொழுக அழைக்கப்பெறும் இவர் ‘உங்கள் குரல்’ மாதிகையின் ஆசிரியராகவும் இருந்து நல்லதமிழ் வாழ்வுக்கும் தமிழ்க்கல்வி வளர்ச்சிக்கும் வருந்தி உழைக்கின்றவர். கடந்த 2008இல் தனியொருவராக இருந்து உலக அளவில் முதன்முதலாக ‘தமிழ்ச் செம்மொழி சிறப்புமலரை’ வெளியிட்டு சாதனையை நிகழ்த்திக் காட்டியவர்; மலேசியத் தமிழ் வரலாற்றில் கண்டிப்பாக இடம்பெற வேண்டியவர்.

கவிஞர் ஐயா செ.சீனி நைனா முகம்மது அவர்கள் தம்முடைய உங்கள் குரல் இதழில் (ஆகத்து 2007) எழுதிய இவனா தமிழன்? என்ற கவிதை பற்றிய எனது பார்வையை இங்கு பதிவு செய்வதில் பெருமிதம் கொள்கிறேன்.
***************

டுத்த எடுப்பிலேயே இவனா தமிழன்? என்று நச்சென்று தொடங்கும் சீர்களில் கொப்பளிக்கும் அறச்சீற்றம் கவிதையை ஆறவமர இறுதிவரை படிக்கச் செய்துவிடுகிறது. சொல்லுக்குச் சொல் தமிழுக்கு எதிரான கேடுகளையும் மொழிமானங்கெட்டக் கேடர்களையும் பல்லுக்குப் பல் தட்டுகிறார்.

இவனா தமிழன்? இருக்காது
யானைக்குப் பூனை பிறக்காது!
இவனுக்குப் பாட்டன் பாண்டியன் என்றால்
எதிரிக்கும் கூடப் பொறுக்காது – இவன்
இனத்துக்கு நேர்ந்த குறைபேறு!

தமிழ்மரபுவழி வந்த தமிழர்களே இன்று கோடரிக் காம்புகளாக மாறி, தமிழையே வெட்டிச் சாய்க்கவும் வெறித்தனமாக சிதைக்கவும் செய்கின்றனர். சொந்த மொழிக்கு எதிராக இப்படியொரு ஈவிரக்கமற்றச் செயலை எப்படித்தான் செய்கிறார்களோ? என்று நாம் நினைப்பதற்குள் இப்படித்தான் செய்கிறார்கள் என்று கவிஞரே சொல்லிவிடுகிறார்.

தமிழால் வேலையில் சேருகிறான்
தமிழால் பதவியில் ஏறுகிறான்
தமிழ்ப்பகை கூடி தன்னலம் நாடி
தமிழ்மர பெல்லாம் மீறுகிறான் – அதை
தடுத்தால் பாம்பாய்ச் சீறுகிறான்!

மலேசியாவைப் பொறுத்தவரையில் தமிழர்களுக்கான அரசுப்பணிகள் பெரும்பாலும் தமிழ்ப் படித்ததன் பயனாகவே கிடைக்கிறது. தமிழ் போட்ட பிச்சையால் பிழைப்பு நடத்திக்கொண்டே நன்றிகெட்டத்தனமாகத் தமிழுக்கு இரண்டகம் செய்கிறார்கள். அண்மையில் மலாயாப் பல்கலைகழகத் தமிழ்த்துறையில் அரங்கேறிய அவலங்களை இதற்குச் சான்றாகச் சொன்னால் மிகப் பொருந்தும். இப்படியான இரண்டகச் செயல்களைக் கண்டு நற்றமிழர் பலரும் நொந்துகொண்டிருக்கின்றனர்; கவிஞரும் வருந்திக்கொண்டிருக்கிறார். இந்த நோவும் வருத்தமும் இத்தோடு நின்றதா? என்றால் இல்லை. இன்னும் தொடர்கிறது இப்படி,

வடமொழி சொல்லைப் போற்றுகிறான்
வம்புக்கு தமிழில் ஏற்றுகிறான்
கடுமொழி என்றே கனித்தமிழ்ச் சொல்லைக்
கண்டவர் மொழியில் மாற்றுகிறான் – அதைக்
கடிந்தால் உடனே தூற்றுகிறான்!

வேண்டுமென்றே, வேண்டாத சொற்களைத் தமிழில் கலப்பது இன்று நவினமாகிவிட்டது. மக்கள் பேசுகிறார்கள், தோட்டத்தில் பேசுகிறார்கள், நகர மக்களுக்கு இதுதான் புரிகிறது, இதுதான் நடப்பியல் என்றெல்லாம் நியாயங்கள் கூறிக்கொண்டு ஆங்கிலம், மலாய், சமற்கிருதம் என இன்னும் பிற அன்னிய மொழிகளை அளவுக்கதிகமாகக் கலந்து தமிழைச் சீரழிக்கின்றனர்.

இதைவிட கொடுமை ஒன்றும் உண்டு. நவின படைப்பாளிகள் என கூறிக்கொண்டு ஒருதரப்பினர் இப்போது கொச்சை மொழிகளையும் பச்சைப் பச்சையாகவும் எழுதத் தொடங்கிவிட்டனர். இவற்றால், எதிர்காலத்தில் ஏற்படப்போகும் எதிர்விளைவுகளை இவர்கள் அறிந்தார்களில்லை. யாராவது அதனை எடுத்துச்சொன்னாலும் கொஞ்சமும் காதுகொடுப்பதே இல்லை. இந்த நிலைமை தொடர்ந்தால் நம் கண்முன்னாலேயே தாய்மொழி அழியும் என்றால் பொய்யில்லை. ஆனால், இவர்கள் இதனை நம்புவதே இல்லை. சரி, இவர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள் தெரியுமா?

தானும் முறையாகப் படிப்பதில்லை
தகுந்தவர் சொன்னால் எடுப்பதில்லை
தானெனும் வீம்பில் தாங்கிய பணியில்
தன்கடன் பேணி நடப்பதில்லை – நல்ல
தமிழே இவனுக்குப் பிடிப்பதில்லை!

இப்படியெல்லாம் தமிழை அழிக்கிறார்களே என வருந்தி அழுதுகொண்டிருக்கும் உணர்வாளர்கள் பற்பலர். அவர்களுக்கெல்லாம் கவிஞர் ஓர் ஆறுதலையும் சொல்லிவைக்கிறார் அடுத்து.

இவனுக்கு முன்னே பலபேர்கள்
இவனுக்கும் பின்னே வருவார்கள்
தவணைகள் தீரும் தவறுகள் மாறும்
தமிழுக்கு நன்மை புரிவார்கள் – இவன்
தந்ததைத் தெருவில் எறிவார்கள்!

தமிழுக்கு எதிராகக் கேடுகளும் கீழறுப்புகளும் நடப்பது வரலாற்றில் புதிதல்ல. ஒரு காலத்தில் முக்கால் பங்கு வடமொழி கலந்து எழுதப்பட்ட ‘மணிப்பிரவாளம்’ இன்று சுவடு இல்லாமல் அழிந்துபோயிருப்பது இதற்கொரு நற்சான்று. காலந்தோறும், கெடுபுத்திகொண்டு தமிழுக்கு கேடிழைத்த கேடர்கள் செத்தொழிந்தார்களே அன்றி தமிழ் இன்றும் வளமோடு வாழுகின்றது. இன்று அப்படியே ஆங்கிலம் போன்ற அன்னிய மொழிகளைக் கலந்தெழுதும் கயவர்களும் காலத்தால் காணாமல் போய்விடுவர்; அவர்களின் படைப்புகளும் கரைந்துபோய்விடும் என்று கவிஞர் உணர்த்துவதாகவே தோன்றுகிறது. அடுத்து வரும் கண்ணியும் இதைத்தான் வலியுறுத்துகிறது.

தமிழ்நலம் கொன்றே பிழைப்பவனும்
தமிழுக்குத் தீங்கே இழைப்பவனும்
அமுதென நஞ்சை அருந்துவர் போலே
அழிவினைக் கூவி அழைப்பவனே – தான்
அடந்ததை எல்லாம் இழப்பவனே!

இவனா தமிழன்? என்ற கவிஞரின் வினாவுக்கு இந்நேரம் விடை கிடைத்திருக்க வேண்டுமே!
  • பி.கு: கடந்த 11-9-2009இல் தம்முடைய 62ஆம் அகவையை எட்டியிருக்கும் கவிஞர் ஐயா அவர்களுக்குத் திருத்தமிழ் வழியாகப் பணிவான வணக்கத்தைத் தெரிவிப்பதில் மகிழ்வடைகிறேன். ஐயா அவர்கள் நிலையான உடல்நலமும் நீடித்த ஆயுளும் பெற்று தமிழுக்குப் பணிசெய்ய இறைமைத் திருவுளம் வாய்க்கப்பெற வேண்டுமென மனதார இறைஞ்சுகிறேன். -சுப.நற்குணன்

Saturday, August 15, 2009

பண்பாட்டை வரலாற்றை உள்ளிக்கொடு; சொரணை படுமாறு கிள்ளிக்கொடு

  • மனதைத் தொட்ட மரபுக்கவிதை - 1

மலேசியத் திருநாட்டின் மூத்த - முன்னணிப் பாவலர்களுள் ஒருவர்; தம் மரபுக் கவிதைகளால் மலேசிய இலக்கியத்தின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் இன்றுவரையில் நீரூற்றி வருபவர். மலேசியத் தமிழர்களின் பிற்போக்கு எண்ணங்கள், கொடுங்கேடுகள், மனச்சிதைவுகள், மரபுமீறல்கள் முதலியவற்றைக் கண்டு ‘கணைகளாகப்’ பாய்ந்தவர் – இன்றும் அதே வீறோடு நிமிர்ந்து நிற்பவர். ஆழந்த மொழிப் பற்றும் குழுகாய நோக்கும் கொண்டவர். தமிழர்தம் மரபியல் விழுமியங்களைக் காப்பதற்காக முன்னின்று குரல் கொடுப்பவர். இப்படி இன்னும் அடுக்கிச் சொல்லத்தக்கவர்; மரபுக்கவிதைத் துறையில் தனியொரு சாதனையை நிகழ்த்திக் காட்டியவர் கவிச்சுடர் காரைக்கிழார்.

அவர் எழுதி அண்மையில் நாளிகையொன்றில் வந்த மரபுக் கவிதை என் மனதைத் தொட்டது – உணர்வுகளைத் தட்டியது. அவ்வுணர்வுகளைப் பதிவாக்கும் முயற்சியில் மலர்ந்துதான் இந்தப் படைப்பு.

பொன்னென்றும் பூவென்றும் புதுப்பாட்டுத் தேனென்றும்
பொழுதெல்லாம் பாடிநிற்பான் – அவன்
புகழ்க்கூட்டம் கூடிநிற்பான் – அந்தத்
திண்ணென்ற தடியன்தான் திறம்கெட்டத் தமிழன்தான்
திசையெங்கும் மோடிவைப்பான் – தாய்க்கு
வசையெங்கும் தேடிவைப்பான்

என்று எடுத்த எடுப்பிலேயே, புதுமை - நவினம் என்ற பெயரில் புழுக்கறைகளைப் படைப்புகளாக வழங்கிவரும் திறங்கெட்டவர்களை நையப்புடைக்கிறார். வெறும் விளம்பரத்திற்கும் பணத்திற்கும் புகழுக்கும் மயங்கி அலையும் இந்தப் போக்கற்றப் படைப்பாளிகள் தாய்(மொழி)க்கு வசைதேடி வைப்பவர்கள் என்று சாடுகின்றார்.

இப்படிச் சாடும் அளவுக்குப் புதுமைப் படைப்பாளிகள் என்னதான் செய்துவிட்டார்கள்? என்று நாம் சிந்திக்கத் தொடங்கும் அடுத்த கணமே அவர்களின் கெடுபுத்திகளைப் பட்டியலாகப் பாட்டில் சொல்லுகிறார் இப்படி:-

கனியென்ற மணியிங்கே அணிசெய்தல் நனிகண்டும்
காய்நாடிக் கலக்கம்செய்வான் – மொழிக்
கலப்புக்கோர் உலக்கம்செய்வான் – இந்தப்
பிணியாளன் நாவெங்கும் புண்ணாகிப் புரையாகிப்
பிறசொல்லே புழக்கம்செய்வான் – அவனே
பித்தன் போல் முழக்கம்செய்வான்


இவ்வாறு, தமிழில் பிறமொழிச் சொற்களைக் கலந்து படைப்புகளை ஆக்குகிறார்கள். தமிழ்க் கலை இலக்கிய மரபுக்குள் அன்னியப் பண்பாடுகளைக் கலந்து தருகிறார்கள். தான் பெரிய ஆளாவதற்குத் தமிழையே அழிக்கும் அவலச்செயலைச் செய்கிறார்கள். இப்படியான கேடுகளை எல்லாம் நீட்டி முழக்கி நியாயப்படுத்தும் இவர்களைப் பிணியாளன் – பித்தன் எனப் பறைசாற்றுகிறார் கவிஞர்.

மொழிமானங்கெட்ட இவர்களை என்னசெய்யலாம்? என்று வழியும் சொல்லுகிறார்; கூடவே களுக்கென்று சிரிக்கவும் வைக்கிறார் அடுத்த கண்ணியில்.

எடுப்பார்கைப் பிள்ளைபோல் இருக்கின்றான் இவனாலே
இங்கிலீசு கூத்தாடுது – தமிழ்
இதுகண்டு வேர்த்தாடுது – உதை
கொடுப்பார்கள் கொடுத்தால்தான் குரங்காட்டம் நிற்குமெனில்
கொடுப்போமே எத்தாவது – ஓங்கிக்
கொடுப்போமே குத்தாவது!

எத்தும் குத்தும் விட்டால் போதுமா? இல்லை, அவர்களுக்கு நமது மரபு - வரலாறு – வாழ்வியல் – பண்பாடு பற்றி தகுந்த தெளிவுகளைச் சொல்லி வழிகாட்டவும் வேண்டும் என்கிறார். என்னதான் கேடுகளை அவர்கள் செய்தபோதும் தமிழினத்தில் பிறந்துவிட்ட உறவை எண்ணி தாயன்போடு அரவணைப்பும் செய்கின்றார் கவிஞர்.

தமிழ்மானம் மறைத்தானாம் தரங்கெட்ட வடநாட்டான்
தலைமீது கல்லேற்றினான்! – தென்னன்
தலைதூக்கச் சொல்லேற்றினான் – அந்தத்
தமிழ்வீரம் மணியாரம் தரிக்கும்நம் தமிழன்னை
தலைமீது முள்ளேற்றினான் – அடஓ!
தாங்காத சுள்ளேற்றினான்

பசிகண்டு பால்தந்த தாய்தன்னை இகழ்கின்ற
பதடியாய் இருக்கலாமா? – இந்தப்
பாரும்தான் பொறுக்கலாமா? – கண்ணில்
கசிகின்ற நீர்கண்டு மகனேநீ உன்தாயைக்
காப்பாற்ற மறுக்கலாமா? பகையைக்
கழுவேற்ற மறக்கலாமா?

புதுமை – நவினம் என்ற மாயைக்குள் சிக்குண்டு மனம்தடுமாறும் தமிழர்க்குக் குறிப்பாக இன்றைய இளையோருக்கு வழிகாட்ட வேண்டிய கடமையும் பொறுப்பும் தக்காருக்கு உள்ளது. யாரின் கருத்தையும் சொற்பேச்சையும் கேட்பதற்குக்கூட முரண்டுபிடிக்கும் வன்மத்தை மண்டைக்குள் ஏற்றிக்கொண்டு தலைக்கணம் பிடித்தலையும் இளையப் படைபாளிகள் இதனைக் கேட்பார்களா என்பது கேள்விக்குறியே. இருந்தாலும், சொல்லவேண்டியதைப் பதமாகவோ தேவைப்பட்டால் கடிந்தோ சொல்லித்தானே ஆகவேண்டும்.

வீட்டுக்குள் விளைகின்ற பயிர்போலும் பிள்ளைக்கு
வீரத்தைச் சொல்லிக்கொடு – தமிழின்
விவரத்தை அள்ளிக்கொடு – பத்துப்
பாட்டுக்குள் வருகின்ற பண்பாட்டை வரலாற்றைப்
பதமாக உள்ளிக்கொடு – சொரணை
படுமாறு கிள்ளிக்கொடு!

சொல்லியும் கேட்காத மூடர்களாக - முரட்டுப்புத்தியராக - மக்கட்பதடிகளாக இருப்பார்களேயானால் அதற்கும் வழி சொல்லுகிறார்; அதனை வலியுறுத்தியும் சொல்லுகிறார் கவிஞர்.

வீணைபோல் நாதமொழி தமிழைநீ – படிஎன்றே
விரட்டுகிறேன் ஏடா! தப்பா? – இதிலே
விட்டுவைத்தல் கூடாதப்பா? – நெஞ்சில்
விருப்பத்தால் குழைந்தாலும் தானாக
மாணஓரு மயிலிறகு போடாதப்பா! – ஒட்ட
வாலறுப்போம் வாடாகுப்பா!

இன்றையச் சூழலில், தமிழுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளையும் தாக்குறவுகளையும் இக்கவிதை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது. பெரியவர்களுக்கு – பண்பாளர்களுக்கு – பட்டறிவுள்ள நல்லோர்களுக்கு நமது தாய்மொழியும் மரபும் கலைபண்பாடும் அடைந்திருக்கும் இனி அடையப் போகும் நலிவும் நலக்கேடும் தெள்ளென தெரிகிறது. அதனால், மனம் அஞ்சுகின்றனர் – அழுகின்றனர் – ஆபத்தைத் தடுக்க ஆவன செய்கின்றனர்.

ஆனால், இளங்கன்று பயமறியாது எனச் சொன்னதுபோல, இளம் படைப்பாளர்களோ கலை, கவிதை, இசை, நடனம், எழுத்து, இலக்கியம், திரைப்படம், சின்னத்திரை என எந்தவகை படைப்பாக இருந்தாலும் மதம்பிடித்த யானையொன்று கரும்புத் தோட்டத்துள் புகுந்தது போல அழித்தொழிக்கின்றனர்; நமது மரபியல் விழுமியங்களைச் சிதைத்தொழிக்கின்றனர்.

  • மரபுக்கவிதை இன்னும் வரும்..

Sunday, June 07, 2009

வீழ்ந்த வீரர்களும்.. வென்ற கோழைகளும்..


முள்ளிவாய்க்கால்....
தமிழர் பிணங்கள் பல வீழ்ந்து....
மலைகள் பல சாய்ந்து.....

இரத்தத்தில்
நிலமெல்லாம் குளமாகி......
தசைகளிலே மண்ணெல்லாம் சேறாகி.....

இறுதிவரை
வீரம் சொல்லிய மண்.....
வேங்கைகை பல சாய்ந்த மண்....

வல்லரசின்
வீரர்களைச் சேர்த்து....

வாங்கி வந்த
குண்டுகளைப் போட்டு....

பறந்து வந்து
எரிமலையை போட்டு....

பாய்ந்து வரும்
பீரங்கியால் தாக்கி...

எத்தனை படுகொலையை
இலகுவாய் செய்துவிட்டு......
வெற்றியாம் வெற்றி....!
அவர்கள் வீரராம் வீரர்....!

கோழையின் வெற்றி
உன் கொல்லைப்புறம் மட்டும் தான்....
வந்தவர்கள் போய்விட்டால்
உன் வாழ்க்கை மட்டம் தான்....

நம் வீரர் பலர் வீழ்ந்தாலும்
விடாத பயம் உனக்கேன்....?
நீ நூற்றுவிட்ட விடுதலை தீ
நாட்களானால் பற்றுமென்றா....?

பதறாதே கோழைகளே
பதில் அதற்கு உன்னிடம் தான்....!
என் நாளும் பக்கத்தில் வரமாட்டார்.....
உலக சன சமூகந்தான்....!

ஓர் இனத்தின் விடுதலையை
ஏளனமாய் பார்க்காதே...
வரலாறுகள் படித்துப் பார்
பின்னர் உன்கண்ணும் தூங்காதே....!

நீ வீரர்களை வீழ்த்திவிட்டாய்
நம் வீரம் விழவில்லை.....!
விடுதலை கிடைக்கும் வரை
நாம் தூங்கப் போவதில்லை....!


ஆக்கம்:-இளங்கவி

Sunday, March 08, 2009

இரத்தம் வெவ்வேறு நிறம்



கவிக்கோ அப்துல் ரகுமான் ஐயா தற்போது மலேசியா வந்துள்ளார். ஐயாவை வருக வருகவென வரவேற்பதில் பெரிதும் மகிழ்கின்றேன். மலேசியாவில், ஒரு நாளிகை நேர்க்காணலின்போது தமிழீழச் சிக்கல் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அப்போது, ஐயா அவர்கள் வழங்கிய 'புதுக்கவிதை' இது.

*******************************
**********************
*************





இரத்தம் வெவ்வேறு நிம்

அங்கே
பிணங்கள் விழுந்து கொண்டிருக்கின்றன
நாம் "எத்தனை விக்கெட்டுகள் விழுந்தன?" என்று
விசாரித்துக் கொண்டிருக்கிறோம்!

அங்கே
குண்டுகள் வெடித்துக் கொண்டிருகின்றன
நாம் பட்டாசு வெடித்துப்
பரவசப்பட்டுக் கொண்டிருக்கிறோம்!

அவர்கள்
வேட்டையாடப்பட்டுக்
கதறிக் கொண்டிருக்கிறார்கள்
நாம்
வெள்ளித் திரைகளுக்கு முன்
விசிலடித்துக் கொண்டிருக்கிறோம்!

அவர்கள்
கற்பழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்
நாம்
"கற்பில் சிறந்தவள் கண்ணகியா? சீதையா?"
என்று
பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிறோம்!

அவர்கள்
வெளிச்சத்தின் விளைச்சலுக்கு
இரத்தம் சொரிந்துக் கொண்டிருக்கிறார்கள்
நாம்
இருட்டுக்காடுகளுக்கு
வேர்வை வார்த்துக் கொண்டிருக்கிறோம்!

அவர்கள்
சயனைட் அருந்திக் கொண்டிருக்கிறார்கள்
நாம்
அதர பானம் பருகிக் கொண்டிருக்கிறோம்!


இதில் வியப்பேதும் இல்லை
அவர்கள் கவரிமான்கள்
நாம் கவரிகள்

இதோ
தேவவேடம் போட்ட சாத்தான்கள்
வேதம் ஓதுகின்றன!

இதோ
இரத்தப் பற்களை மறைத்த ஓநாய்கள்
நீரைக் கலக்கிய பழியை
ஆடுகளின் மீது சுமத்திக் கொண்டிருக்கின்றன!


இதோ
சித்தாந்த வித்துவான்கள்
ஒப்பாரியில்
ராகப் பிழை கண்டுபிடித்துக்
கொண்டிருக்கிறார்கள்!


இதோ
வெள்ளைக்கொடி வியாபாரிகள்
விதவைகளின் புடவைகளை
உருவிக் கொண்டிருக்கிறார்கள்!

அன்று
அசோகன் அனுப்பிய
போதிமரக் கன்று
ஆயுதங்கள் பூக்கின்றது!

இன்று
அசோகச் சக்கரத்தின்
குருட்டு ஓட்டத்தில்
கன்றுகளின் இரத்தம்
பெருகிக் கொண்டிருக்கிறது!

தாய்ப் பசுவோ
கவர்ச்சியான சுவரொட்டிகளைத் தின்று
அசைபோட்டுக் கொண்டிருக்கிறது!!!

-கவிக்கோ அப்துல் ரகுமான்


Saturday, February 21, 2009

அனைத்துலகத் தாய்மொழி நாள் (21-2-2009)

இன்று 21-2-2009 அனைத்துலகத் தாய்மொழி நாள். கடந்த 1999ஆம் ஆண்டில் ஐக்கிய நாட்டு அவையின் யுனெசுகோ மன்றம் உலகத் தாய்மொழி நாளை அதிகாரப்படியாக அறிவித்தது. இன்று பத்தாவது ஆண்டாக உலகத் தாய்மொழி நாள் கொண்டாடப்படுகிறது.

"எந்த நாட்டில் வாழ்கின்ற மக்களாக இருந்தாலும், அவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தம் கருத்தை உறுதியாக உரைக்கவும் - பாரம்பரியம் பண்பாட்டைப் பேணவும் - இன ஒற்றுமைக்குக் கருவியாகவும் அவரவர்க்கு இயற்கையாகவே அமைவது தாய்மொழி ஒன்றுதான்" என்று யுனெசுகோ அறிவித்துள்ளதை உலகத் தமிழர்கள் அனைவரும் தம் உள்ளங்களில் ஆழப் பதிந்துகொள்ள வேண்டும்.


இந்த அனைத்துலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு மலேசியப் பாவலரும் - 'உங்கள் குரல்' இதழாசிரியரும் – தொல்காப்பிய அறிஞருமாகிய கவிஞர் செ.சீனி நைனா முகம்மது அவர்களின் இனியப் பாவொன்றை இங்கே வெளியிடுவதில் 'திருத்தமிழ்' பேருவகைக் கொள்கிறது.

*********************************************
தமிழ்ப்பேறு! தவப்பேறு!

*********************************************


தாய்மொழி என்பது தாயின்மொழி- அது
தாயும் நீயும் பேசும்மொழி
ஆயிரம் மொழிகள் நீயறிந் தாலும்
ஆன்மா உணர்மொழி அந்தமொழி – அது
அன்னையின் கருவில் வந்தமொழி!

அன்னையின் மடியில் கிடக்கையிலே – அவள்
அன்பினைப் பாலாய்க் குடிக்கையிலே
சின்னவுன் செவியில் சில்லெனப் பாய்ந்து
தேனாய் இனித்திடக் கேட்டமொழி – உன்
சிந்தையில் விதைகள் போட்டமொழி!

தோளிலும் மார்பிலும் சாய்கையிலே – நீ
தொட்டிலில் ஆடி ஓய்கையிலே
ஏழிசை மிஞ்சிடும் தாயிசை கேட்டே
இதமாய்த் தூங்கிய பாட்டுமொழி – அது
இதயங்கள் பேசிடும் வீட்டுமொழி!

அன்னையை அழைத்தே அழுகையிலே – அவள்
அணைத்ததும் உடன்நீ சிரிக்கையிலே
தன்னிலை மறந்தே தாய்மனம் பொங்கி
தவிப்புடன் உன்னைக் கொஞ்சுமொழி – அது
தரணியில் எதையும் மிஞ்சுமொழி!

தொல்லைகள் அறியாப் பருவத்திலே – நீ
துருதுருத் தாடிய உருவத்திலே
பல்லுமில் லாமல் சொல்லுமில் லாமல்
பலகதை சொல்லிய மயக்குமொழி – அது
பயிலுமுன் பேசிய இயற்கைமொழி!

உன்னுடன் இணைந்தே பிறந்தமொழி – உன்
உள்ளமும் உணர்வும் புரிந்தமொழி
எண்ணியல் என்ன மின்னியல் என்ன
எதையும் பயின்றிடச் சிறந்தமொழி – அது
இறைவன் உனக்கென வரைந்தமொழி!

தமிழினம் எய்திய பெரும்பேறு – அது
தாய்மொழி தமிழெனும் அரும்பேறு
அமிழ்தினை உரிமை அடைந்தவர் யாரும்
அருந்தா திருந்தால் அவப்பேறு – தமிழ்
அமிழ்தம் அருந்துதல் தவப்பேறு!

Saturday, February 14, 2009

ஈழத்தாலாட்டு

ஆராரோ ஆரிரரோ
என் செல்ல மகனே
ஈழம் காக்க இங்கு பிறந்த
வேழம் தானே நீயடா
என் செல்ல மகனே !

எங்கோ ஒரு மூலையிலோ
ஏழை வயிற்றினிலோ
அங்கு நீயும் பிறக்காமல்
இங்கு வந்து பிறந்தாயே
என் ஈழ மகனே ..

ஆராரோ ஆரிரரோ
என் செல்ல மகனே
ஈழம் காக்க இங்கு பிறந்த
வேழம் தானே நீயடா
என் செல்ல மகனே !

நீ தூங்க நான் பாடும்
தாலாட்டல்ல இது
என் செல்ல மகனே
தாலாட்டுக்குக் கேட்டுத் தூங்கும்
தலையெழுத்தும் நமக்கில்லை
என் செல்ல மகனே ..

பாட்டின் வழி
நான் ஊட்டும் பாசமடா
தாய்மண் பாசமடா
என் செல்ல மகனே
நாளை இங்கு தமிழ் வாழ
தூக்கம் கொள்ளாது போராடும்
துணிச்சல் வேணுமடா
என் செல்ல மகனே ..

ஆராரோ ஆரிரரோ
என் செல்ல மகனே
ஈழம் காக்க இங்கு பிறந்த
வேழம் தானே நீயடா
என் செல்ல மகனே !

நேற்றுனக்கு தொட்டில் கட்டிய
வேப்பமரம் இப்போதில்லையே
என் செல்ல மகனே
சமாதிக்குப் பறித்துப்போட்ட
பூக்கள் வாடும்முன்னே
நாம் கூட சமாதியாகலாம்
என் செல்ல மகனே ..

சிந்திய நம் குருதியால்
இந்தியப் பெருங்கடல்
சிவந்தது என் செல்ல மகனே
மார்பினில் குண்டு தாங்கி
மண்ணில் உரமான
மாவீரனின் வாரிசு நீ
என் செல்ல மகனே ..

ஆராரோ ஆரிரரோ
என் செல்ல மகனே
ஈழம் காக்க இங்கு பிறந்த
வேழம் தானே நீயடா
என் செல்ல மகனே !

மண்ணைக் கரைத்துதான்
சேனை வைத்தான் உன்
மாமன்காரன்
என் செல்ல மகனே
ஈழக்குருதி சிந்திய
யாழ்மண்ணில் செய்த
பொம்மைதான் உன் கையிலிருக்கு
என் செல்ல மகனே ..

ஆராரோ ஆரிரரோ
என் செல்ல மகனே
ஈழம் காக்க இங்கு பிறந்த
வேழம் தானே நீயடா
என் செல்ல மகனே !

நாளைய சூரியன்
நமக்காகத்தான் என் செல்ல மகனே
நம்பிக்கையோடு போராடுவோம்
என் செல்ல மகனே ..

ஆராரோ ஆரிரரோ
என் செல்ல மகனே
ஈழம் காக்க இங்கு பிறந்த
வேழம் தானே நீயடா
என் செல்ல மகனே !

-உழவன்

Blog Widget by LinkWithin