Friday, July 31, 2009

தமிழர் மரபியல் - பாலியல் நோக்கு


தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் என்று 5 பாகங்கள் கொண்ட திருத்தமிழ் இடுகைகளைப் படித்துவிட்டு, தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் விரிவுரையாளரும், நற்றமிழ்ப் பற்றாளரும், 'வேர்களைத் தேடி' வலைப்பதிவருமாகிய முனைவர் இரா.குணசீலன் அவர்கள் எழுதிய மறுமொழி கீழே உள்ளது.

//நண்பரே தங்கள் மரபியல் தொடர்பான கட்டுரைகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன்.. மிகவும் நன்றாகவுள்ளது.. தங்கள் கருத்துக்கள் யாவும் உண்மையானவை.. ஏற்கத்தக்கவை..!

தமிழர் மரபுகளைப் புறந்தள்ளும் யாருக்கும் தன்னைத் தமிழன் என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் தகுதி இல்லை. தங்கள் இடுகைக்கு மிக நீண்டதொரு கருத்துரையை எனது வலைப்பக்கத்தில் இடுகையாக இட்டுள்ளேன். அதன் முகவரி.. http://gunathamizh.blogspot.com/2009/07/blog-post_30.html//

'தமிழ் மரபியலில் பாலியல் நோக்கு' என்ற தலைப்பில் முனைவர் அவர்கள் எழுதிய அக்கட்டுரையை இங்கே படிக்கத் தருகின்றேன். சங்கப் பாடல்களில் காணும் பாலியல் விடயங்கள் தொடர்பில் நல்லதொரு விளக்கமாக இக்கட்டுரை அமைந்துள்ளது.


**************************
தமிழர் மரபியல் (பாலியல் நோக்கு)

கால வெள்ளத்தில் தமிழர் மரபுகள் பல தவறான புரிதல்களுக்குட்பட்டு வருவது வருத்தமளிப்பதாகவே உள்ளது.

• பழந்தமிழர் மரபுகளின் உயர்வுகளை எண்ணிப் பெருமிதம் கொள்ளுதல்.
•பழந்தமிழர் மரபுகளில் சில காலத்துக்கு ஏற்பில்லாத நிலை கண்டு வருந்துதல்.

என்னும் இரு கருத்தாக்கங்கள் நம்மிடையே உள்ளன.சங்க இலக்கியம், தொல்காப்பியம் ஆகிய நூல்களை முழுமையாகவும், ஆழமாகவும் கற்ற யாரும் தமிழர் மரபுகளைக் குறைத்து மதிப்பிட மாட்டார்கள்.

சங்க கால மக்களின் வாழ்வியல் பதிவுகளாகவே சங்க இலக்கியங்கள் விளங்குகின்றன. இவ்விலக்கியங்கள் வாயிலாகத் தமிழர்தம் மரபுகளைக் காண விழைவோர், சரியான கண்ணோட்டத்தில் காண்பது வேண்டும். தவறான புரிதல்களால்தான் தமிழர் மரபுகள் பிழைபட உணர்தலும், குறைத்து மதிப்பிடும் நிலையும் ஏற்படுகிறது.

இன்றைய சூழலில் வலைப்பதிவுகள், தமிழ்மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வாயில்களுள் முதன்மையானவையாக விளங்குகின்றன. வலைப்பதிவுகள் வழியே,
தமிழர் மரபு குறித்த தேடல்,
தமிழர் மரபு குறித்த புரிதல்,
தமிழர் மரபு குறித்த மதிப்பீடுகள்,
ஆகியவற்றைக் காணும் போது மிகவும் மகிழ்வாக உள்ளது.

சில தவறான புரிதல்களைக் காணும்போது மனம் சிறிது வருத்தம் கொள்கிறது. (விரிவாகப் படிக்க)
  • நன்றி: வேர்களைத் தேடி

Wednesday, July 29, 2009

தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் (பாகம் 5)

இந்தத் தொடரில், நமது சங்க இலக்கியங்கள் ‘பாலியல்’ விடயங்களை எங்ஙனம் அணுகின என்பதைப் பற்றி நுணுகிப் பார்க்கவிருக்கிறோம். கடல் நீரைக் குவளையில் அள்ளியக் கதையாக, மிக விரிந்து பரந்திருக்கும் இவ்விடயத்தைச் சுருக்கமாகச் சொல்வது சிக்கல்தான். முடிந்தவரை முயன்றுள்ளேன்; தேவையென்றால் தொடருவேன்.


“இமையோர் தேஎத்தும் எறிகடல் வரைப்பினும்
அவையில் காலம் இன்மை யான”
என்று பாடுகிறது தொல்காப்பியம். அதாவது, காதலை உயிராகக் கொண்ட அகமும், அகத்தின் தொடர்பில் புறமும் இல்லாத காலமோ அல்லது இடமோ எங்கேயும் கிடையாது என்பதே அதன் பொருள். இதனால்தான் நம் முன்னோர்கள் வாழ்வியலை அகம் – புறம் என இரண்டாகக் கண்டனர்.

இதனை நன்கு ஆராய்ந்தால், உலக வாழ்க்கைக்குக் காதலே அடிப்படையாக இருக்கிறது என அறியலாம். மாந்த வாழ்வில் காதலுணர்வு மிகவும் நுட்பமும் ஆழமும் நிறைந்தது. வாழ்க்கையிலும் சரி, இலக்கியத்திலும் சரி காதலுணர்வை (நவின மொழியில் பாலுணர்வை) மிகவும் பொறுப்போடு கையாளவேண்டும். கொஞ்சமே வழுவினாலும் சமூகத்தில் பேரிழப்பு ஏற்படலாம்.

பாலுணர்வின் இயக்கத்திற்கு உடலே கருவியாக இருக்கிறது. உணர்வுகளை உடலுக்கும் உறுப்புகளுக்கும் அடிமையாக்கிவிட்டால் நுட்பம் நிறைந்த உணர்வுகள் மதிப்பிழந்து போகும். கூடவே, உடலும் உறுப்புகளும் கெட்டுப்போகும்.


இந்த உண்மையை ஆழ்ந்து உணர்ந்ததன் விளைவாகத்தான், சங்க இலக்கியங்கள் பாலியலை மிக நேர்த்தியோடும் – நயத்தோடும் கையாண்டுள்ளன. இந்த அடிப்படை உண்மையை அறியாமல்போனதன் காரணத்தால் பிற்கால இலக்கியங்கள் எல்லாமே செல்வாக்கில்லாமல் போயின என்பது வரலாறு. (இதனை விளக்கினால் நீண்டுபோகும்)

உடல் - உறுப்பு இவற்றைவிட, உணர்வுகளுக்கு முதன்மை கொடுப்பதால் உடலும் உறுப்பும் மறைந்து உணர்வுகளே உடலமாக உருவெடுத்து நிற்கும் என்பது நமது முன்னோர்கள் மரபிவழி கண்டது. இதனையே, சங்க இலக்கியம் முழுவதிலும் காணமுடிகிறது.

இதனை உணர்ந்திருந்த பாரதியார், “செவ்விது,செவ்விது, செவ்விது காதல்” என்றார். இந்தக் காதலால் என்னவாகும் தெரியுமா?

“காதலினால் உயிர் தோன்றும்; - இங்கு
காதலினால் உயிர் வீரத்தில் ஏறும்
காதலினால் அறிவெய்தும் – இங்கு
காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்” என்றும்,

காதலினால் மானுடர்க்கு கலவி உண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலைதீரும்
காதலினால் மானுடர்க்குக் கவிதை உண்டாம்
கானம் உண்டாம்; சிற்பம்முதல் கலைகளுண்டாம்
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே” என்றும் மனிதர்களுக்கு வேண்டுகை விடுக்கிறார் மாபாவலன் பாரதி.

இப்படி பாரதி பாடியதை, அன்றே முன்னுணர்ந்து நமது சங்கப் புலவர்கள் பாடியிருப்பது நம்மை வியக்கச் செய்கிறது. உள்ளங்களால் ஏற்படும் ஆழமான உறவை சங்கப்புலவர்கள் உள்ளப் புணர்ச்சி என்றனர். உள்ளப்புணர்ச்சி நன்றாக அமைந்தால்தான் உடல் புணர்ச்சியும் (உடலுறவு) முழு இன்பத்தைக் கொடுக்கும் என்ற தெளிவான எண்ணக்கருவைச் சங்கப்பாடல்கள் வலியுறுத்துகின்றன.

இப்படியாக, சங்கப் புலவர்கள் உள்ளத்து உணர்வுகளுக்கு முன்னுரிமை கொடுத்தார்களே அன்றி, வெறுமனே பெண்களின் உடல் வருணனையோ அல்லது பாலுறுப்பு வருணனையோ மட்டும் அல்ல. மேலும், இவ்வுணர்வுகளைச் சொல்லுவதற்கு இயற்கையியல் – இன்பியல் (Naturalism & Romanticism) ஆகிய இரண்டுப் பண்புகளைப் பாங்காகப் பயன்படுத்தியுள்ளனர். சங்கப் புலவர்கள் உயர்ந்ததையே எண்ணி, உயர்ந்த நெறிகளையே பின்பற்றி வாழ்ந்தவர்கள் என்பதால் அவர்களுடைய பாடல்களும் மிக உயர்தரத்திலேயே காணப்படுகின்றன.

இதனையே மு.வ தமது குறுந்தொகைச் செல்வம் நூலில் இப்படிக் கூறுகிறார். “இந்த ஓவியங்கள்(சங்கப் பாடல்கள்) காதலரின் மனநிலையை விளக்குவன என்பது சிறப்பாகக் கருதத்தக்கதாகும். இவற்றைத் தீட்டிய கலைஞர்கள், காதலரின் உடல் வனப்பை எடுத்துக் காட்டுவதற்காகத் தம் வண்ணத்தைப் பெரிதும் செலவிடவில்லை; முயற்சியையும் செலவிடவில்லை. ஓவிய அமைப்பிற்கு எந்த அளவுக்கு அவர்களின் தோற்றம் இன்றியமையாததோ, அந்த அளவிற்கே உடலைக் குறித்துள்ளனர். ஓவியத்தைக் காண்பவரின் உள்ளம், காதலர்களின் உடல்வனப்பால் கவரப்படாதவாறு அவர்களின் கலைமுயற்சி அமைந்துள்ளது”

இந்தக் கண்ணோட்டத்தில்தான், சங்கப் பாடல்களைப் பார்க்க வேண்டுமே தவிர, குருடர்கள் ஒன்றுகூடி யானையின் ஒவ்வொரு பாகத்தைத் தொட்டுப் பார்த்தது போன்று அவரவரும் தப்பும் தவறுமாக உணர்ந்ததை தண்டோரா போட்டுச் சொல்லக்கூடாது.

பெண்ணுடல் இயற்கையாகவே முலை, அல்குல், தாய்வயிறு (கருப்பை) எனத் தனித்த அடையாளங்களைக் கொண்டது. பெண்ணுறுப்புப் பெயர்களைச் சங்கப்பாடல்களில் மட்டுமல்ல திருக்குறள் போன்ற அறநூல்களிலும் காணமுடிகிறது. சங்க காலத்தில் ஔவையார், வெள்ளி வீதியார் உள்ளிட்ட நாற்பத்தொரு பெண்பாற் புலவர்கள் பெண்ணிய நிலை, மனவுணர்வு, காதலுணர்வு பற்றி பாடியுள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. அன்றைய புலவர்கள் பெண்ணுறுப்புகளைச் சுட்டும்போது அதில் அருவருப்புத் தன்மையுமில்லை; அது பாலுணர்ச்சியைத் தூண்டியதுமில்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிய சிறப்பான உடலெழில் கூறுகள் அன்றே இலக்கணமாகச் சொல்லப்பட்டுள்ளன.

ஒரு பெண்ணைப் பார்த்து “உமக்கு திண்ணிய தோளும் பரந்த மார்பும் வீரமும் கொடைப்பண்பும் உடைய குலமகன் கணவனாக வாய்ப்பானாக” என வாழ்த்துவது பழந்தமிழர் மரபாகும்.

அதுபோலவே, இல்லறத்தில் வாழும் ஆணைப் பார்த்து, “நீ அறம் அல்லாதவற்றை ஒதுக்கும் கற்புடையவளாகவும், அறம் புகழ்ந்த வலைசூடிய சிறிய நெற்றியும், அகன்ற அல்குலும், குறைந்த பேச்சும், அடர்ந்த கூந்தலும் உடைய குலமகளைத் துணைவியாகக் கொண்டவன்” என்று பாராட்டுவதும் மரபு வழக்கேயாகும்.

*(அல்குல் என்பது பெண்ணின் பாலுறுப்பை மட்டும் குறிப்பதன்று. இடைக்குக் கீழும், கீழ்த்தொடைக்கு மேலுமுள்ள அகன்ற பகுதி முழுவதையும் சுட்டும். அரை என்பதும் இதுவே. இன்றைய வழக்கில் இடுப்பு என்கிறோம். பெண்ணின் தாய்மைக்காக இயற்கை தந்த கருணை கொடை இப்பகுதி)

இன்றைய புத்திலக்கியவாணர்களில் எத்தனை பேர் சங்கப் புலவர்கள் கையாண்ட உத்திகளை – நுட்பங்களை அறிந்து எழுதுகிறார்கள் என்பது ஐயத்திற்குரியதே. நிலைமை இப்படியிருக்க, தங்களின் நவின படைப்புகளில் இடம்பெறும் பாலியல் வழுக்களுக்கு நியாயவாதம் கற்பிக்கும் பொருட்டு சங்க இலக்கியப் பாடல்களை மேற்கோள் காட்டுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதா என்பதை உண்மையாளர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

இதுவரை சொல்லியவையிலிருந்து, தொன்ம இலக்கியம் அனைத்தும் தமிழ் மரபியலின் ஒட்டுமொத்தக் கட்டுமானங்கள் என பொருள்படாது. நன்றும் தீதும் எல்லாவிடத்திலும் இருப்பது போலவே தமிழ் இலக்கியத்திலும் பண்பாட்டுக் கேடுகள் நிகழ்ந்திருக்கின்றன. இவற்றை அறிஞர் உலகம் எடுத்துக்காட்டி கண்டித்தும் இருக்கின்றது என்ற உண்மையை இன்றைய படைப்பாளிகள் அறிந்துகொள்ள வேண்டும்.

நல்லதை உவகையுடன் ஏற்கவும் அல்லதைத் துணிவுடன் மறுக்கவும் கூடிய நடுநிலைச் சிந்தனை தமிழறிஞர்களுக்கு நிரம்பவே உண்டு. அதற்கு சான்றுதான், அறிஞர் அண்ணாவின் ‘கம்பரசம்’ போன்ற நூல்கள்.

ஆகவே, இன்றைய நவின படைப்பாளிகள் பாலியல் தொடர்பான தங்களின் கொச்சைத் தனத்திற்கும் – பச்சைத் தனத்திற்கும் நியாயம் கற்பிக்க வேண்டி, சங்க இலக்கியங்களைத் தூற்றித் திரிவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். எந்தவிதத்திலும் தனித்தன்மை(சுயம்) இல்லாமல் தள்ளாடிகொண்டிருக்கும் நவின படைப்புகளுக்கு முட்டுக்கொடுக்கவும் அவற்றிலுள்ள பாலியல் பண்பழிப்புகளை நியாயப்படுத்தவும் வேண்டி சங்க இலக்கியங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் ‘பக்கா’ பத்தாம்பசளித்தனத்தைக் கைவிட வேண்டும்.

அகத்திணைப் பாடல்களோடு தங்களின் கீழ்த்தரமான படைப்புகளை ஒப்பிடுவது கண்டனத்திற்குரியது மட்டுமல்ல, சொந்த முகத்திலே கரிபூசிக் கொள்ளுவதுமாகும்.

இவைவெல்லாம் நவின படைப்பாளிகளுக்கு நாம் கூறுகின்ற அறிவுரைகள் அன்று. மாறாக, நவின படைப்பாளிகள் மரபியலைப் புரிந்துகொள்வதற்கு நாம் எழுதும் முன்னுரைகள் மட்டுமே.

முன்னுரைகளைப் படிப்பதும் படிக்காததும் அவரவரின் தனியுரிமை. ஆனால், தமிழ் மரபியலை மதிப்பதும் மனதாரப் போற்றுவதும் ஒரு தமிழனுக்கும் ஒரு தமிழச்சிக்கும் பிறந்த தமிழர்க்குப் பிறப்புரிமை!

(முற்றும்)

சான்றாதாரம்:-

1.சங்க இலக்கிய ஒப்பீடு (முனைவர் தமிழண்ணல்)

2.சங்க இலக்கியம் (முனைவர் இரா.தண்டாயுதம்)

3.குறுந்தொகைச் செல்வம் (முனைவர் மு.வரதராசன்)

4.உங்கள் குரல் - சூன் 2004 (கவிஞர் சீனி நைனா முகம்மது)

தொடர்பான இடுகைகள்:-

1. தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் (பாகம் 1)

2.தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் (பாகம் 2)

3.தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் (பாகம் 3)

4.தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் (பாகம் 4)

5. புத்திலக்கியவாணர்களுக்குத் தமிழும் தெரியாது தமிழுணர்வும் கிடையாது

Monday, July 27, 2009

தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் (பாகம் 4)

‘பாலியல்’ என்றாலே பதகளத்துடன் அணுகும் மலேசிய நவினப் படைப்பாளிகளுக்கு இந்தத் தொடர் பயனாக அமையலாம். பண்பட்ட மனத்தோடு பாலியலை அணுகுவதற்குரிய பண்பாட்டை அறிந்துகொள்ள இது உதவலாம்.

கடந்த பதிவு (பாகம் 3) பின்நவினம் பற்றிய ஒரு முழுமையான புரிதலை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. பின்நவினத்தை மேலோட்டமாகத் தெரிந்துகொள்ளுவதற்கு அல்லது இனி அதனைப் பற்றி ஆராய்ந்தறிவதற்கு உங்களை நகர்த்தியிருக்கலாம் என்று வேண்டுமானால் துணிந்து சொல்லுவேன்.

இதற்குக் காரணம், பின்நவினம் இன்னமும் முழுத் தெளிவோடு வெளிப்படுத்தப்படவில்லை என்பதுதான். இருந்தபோதிலும், பின்நவினம் மகா கேடானது; அடிப்படையே இல்லாதது என குருட்டாம்போக்காக முற்றும் முழுவதுமாக ஒதுக்கவேண்டியதும் அல்ல.

இரண்டுமுறை போர்களைச் சந்தித்துவிட்ட உலகம், கடவுள் உண்மை, மெய்ம்மம்(தத்துவம்), நேர்மை, மாந்தநேயம் ஆகிய அனைத்து நெறிகளின்மீது நம்பிக்கை இழந்துநிற்கிறது. நவினமயச் சூழலில், ‘எதிர்மறை பண்பாடு’ (Counter Culture) ஏற்படுத்திவரும் பல்வேறு தாகுறவுகளில் சிக்கிக்கொண்டு சின்னபின்னமாகிப் போயிருக்கும் இன்றைய உலகத்திற்குப் பின்நவினம் சில தீர்வுகளைகளை முன்மொழிகிறது. நவினச் சூழலுக்கு ஏற்ற புதியவகை ‘உணர்வுவாங்கலை’ (New Sensibility) கொடுப்பதாகச் சொல்லப்படுகிறது.

தமிழ்ச்சூழலில் ‘பின்நவினம்’ சரியாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகத் தெரியவிலை. மலேசியாவில், தமிழ்ப் படைப்பாளிகள் ‘பின்நவினம்’ என்பதை பிறழ்நிலையாகவே உணர்ந்திருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. ‘பின்நவினம்’ என்ற தளத்தில் எழுதப்படும் படைப்புகள் பெரும்பாலும் ‘பாலியல்’ சார்ந்ததாகவே அமைந்திருப்பது இதற்கான காரணமாக இருக்கலாம். அதோடு, பின்நவினப் படைப்பாளிகள் இன்னும் முதிர்ச்சி இல்லாதவர்களாகவும் இலக்கியத்தில் பரந்த நோக்கு இல்லாதவர்களாகவும் இருப்பதுமாகும்.

பின்நவினப் படைப்புகள் எழுதுவதற்கு எத்தனையோ கருக்களும் களங்களும் இருக்கும்போது, இவர்களின் எழுதுகோள் பாலியல் - பாலுறுப்புகளை மட்டுமே செக்குமாடு போல வட்டமடித்துக் கொண்டிருக்கிறது.

இதனைச் சுட்டிக்காட்டினால், எம்பிக்குதித்து ஆர்ப்பாட்டம் செய்கிறார்களே தவிர, அமைதியாக அணுகி ஆராய்ந்துபார்க்க மறுக்கிறார்கள். தமிழ் மரபு – பண்பாடு சார்ந்து பின்நவினம் அணுகப்பட வேண்டும் என்ற கூக்குரல்களில் இருக்கும் அடிப்படைகளை எண்ணிப்பாராமல், மரபிலக்கியங்களில் நயமாக – நாகரிகமாக சொல்லப்பட்ட ‘பாலியல்’ புனைவுகளைக் கொச்சைப்படுத்தி தங்கள் செயல்களுக்கு நியாயம் கற்பிக்கிறார்கள்.

சங்க இலக்கியப் பாக்களில் இழையோடும் காமம், காதல், களவு, கற்பு முதலான அகத்தினைப் புனைவுகள் அனைத்தும் மிக கவனமாகச் செய்யப்பட்டவை – மாந்தப் பண்பாட்டுக்கு உட்பட்டவை என்பதை முதலில் இவர்கள் புரிந்துகொள்வது நலமானது. இது, புரியாத காரணத்தால்தான், மரபுகளில் ‘பாலியல்’ இருப்பதால் நாங்களும் படைக்கிறோம் என்று கொச்சையாக - பச்சையாக எழுதுகின்றனர்.

தமிழ்ச் சூழலில் பாலியல் சார்ந்த படைப்புகள் எவ்வாறு சொல்லப்பட வேண்டும் என்று எழுத்தாளர் செயமோகன் தம்முடைய கட்டுரை ஒன்றில் பின்வருமாறு விவரிக்கிறார். எந்தவொரு மாற்றமும் செய்யாமல் அதனை அப்படியே இங்குத் தருகின்றேன்.

பாலுணர்வுக்கதை என்பது தன் மையக்கருவாகவே பாலுணர்வை எடுத்துக் கொண்டிருக்கும். அதைபற்றி கூர்ந்த அவதானிப்புடன் விவாதிக்கும். அதை நுண்ணிய விவரிப்புடன் சித்தரித்துக் காட்டும். அதன் மனநிலைகளை பல தளங்களில் விரித்துச் செல்லும்.

பாலுணர்வெழுத்திற்கும் பாலியல்கவர்ச்சி எழுத்துக்கும் என்ன வேறுபாடு? வெறுமனே சற்று நேரம் நமக்கு ஒரு மனச்சித்திரத்தின் இன்பத்தை மட்டுமே அளித்து நின்றுவிடுவது பாலியல்கவர்ச்சி எழுத்து. இலக்கியம் எந்த வகையானாலும் அது நம்மை நாமே அறியச்செய்யும். கூர்ந்து நோக்க வைக்கும். நமக்குள் நம்மைக் கொண்டுசெல்லும். அதுவே முக்கியமான வேறுபாடு.

என் நோக்கில், நல்ல பாலுணர்வெழுத்து என்பது சில இயல்புகள் கொண்டது. அது எந்நிலையிலும் அழகாகவே இருக்கும். பகற்கனவுகளுக்கு மட்டுமே உரிய மென்மையான அழகு அது. தொட்டால் பொலபொலவென உதிர்ந்துவிடக் கூடிய, பிறரிடம் பகிர முடியாத அழகு. நல்ல பாலுணர்வெழுத்து குறைவாகவே சொல்லி வாசகனின் கற்பனையைத் தூண்டும். அவனுடைய அந்தரங்கமான கனவுகளில் மட்டுமே அது முழுமையடையும்.

மனத்திரிபு நிலைகளை எழுதுவது பாலுணர்வெழுத்து அல்ல. அதை வேறு வகைமையில்தான் சேர்க்க வேண்டும். மனதை சிதைப்பதும் வதைப்பதும் பாலுணர்வெழுத்தின் இயல்பல்ல. பாலுணர்வெழுத்து இனிய மனக்கிளர்ச்சி ஒன்றை மட்டுமே அளிக்கும். அதன் உச்சியில் ஒரு வகை தனிமையின் துயரையும், இழப்பின் ஏக்கத்தையும் சொல்லி முடியக்கூடும். எப்போதும் அது மூளைக்குள் பரவும் இனிய தென்றலாகவும் கற்பனையில் விரியும் இளவெயிலாகவுமே இருக்கும்.

எங்கெல்லாம் இலக்கியம் இருக்கிறதோ அங்கெல்லாம் பாலுணர்விலக்கியமும் உண்டு. பழங்குடிப் பாடல்கள் முதல் பேரிலக்கியப் பரப்பு வரை. வேதங்களில், பைபிளில்.. இந்திய காவிய மரபின் இரு உச்சங்களான கம்பனையும் காளிதாசனையும் பாலுணர்வெழுத்தின் இரு சிகரங்களாகவே சொல்ல வேண்டும்.

ஏனென்றால் மனிதர்களுக்கு பாலுணர்வெழுத்து மிகவும் தேவையாகிறது. அது ஓர் அடிபப்டையான இச்சை. இச்சைகள் அனைத்துமெ ருசிகள். ருசிகளே அழகுகளாக ஆகின்றன. மனிதன் தன் கற்பனையை பாலுறவுசார்ந்து முடிவிலாது விரித்துக் கொண்டாகவேண்டியிருக்கிறது. அது அவன் வாழ்வின் மீது கொள்ளும் ஆசையின் ஒரு வெளிப்பாடேயாகும். நம் கலைகளில் பாலுணர்வென்பது வாழ்வாசையின் மன எழுச்சியாகவே எப்போதும் வெளிப்பாடு கொள்கிறது.

கற்பனையில் இருந்து எப்படி காமத்தை விலக்க முடியும்? நல்ல பாலுணர்வெழுத்தும் ஓயாத படிமவெளியை உருவாக்கக் கூடியது. சுவர்களை மறையச் செய்யக்கூடியது. நம்மை கட்டற்ற பசுமை வெளியில் நிறுத்தக் கூடியது. அத்தகைய எழுத்துக்கள் தமிழில் இனிவரும் காலத்தில் உருவாகுமென எண்ணுகிறேன்.


தங்களுடைய படைப்புகளில் ‘பாலியல்’ தொடர்பான கருவை எடுத்துக்கொள்ளும் படைப்பாளிகள் மேற்கண்ட கருத்துகளை ஆழமாகப் புரிந்துகொண்டால், நவின இலக்கியங்களையும் நல்ல – நயமான - நாகரிகமான இலக்கியங்களாகப் படைக்க முடியுமல்லவா?


அடுத்த தொடரில், தமிழ் மரபிலக்கியம் காமம் – காதல் அதாவது நவின மொழியில் சொல்லவேண்டுமானால் ‘பாலியல்’ எண்ணக்கருவை எவ்வாறு அணுகுகிறது என்பதைப் பார்ப்போம்.

(மரபியல் மீண்டும் மலரும்..)

தொடர்பான இடுகைகள்:-

1. தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் (பாகம் 1)
2.தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் (பாகம் 2)

3.தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் (பாகம் 3)
4. புத்திலக்கியவாணர்களுக்குத் தமிழும் தெரியாது தமிழுணர்வும் கிடையாது

Friday, July 24, 2009

தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் (பாகம் 3)

கடந்த இரு தொடர்களில் மரபியலைச் சுற்றி வட்டமடித்த உங்களை இந்தத் தொடரில் பின்நவினத்துள் அழைத்துச் செல்ல விழைகிறேன்.

மரபு வழியிலிருந்து இன்று உலகம் பின்நவினம்(Post-Modernism) வரையில் பயணித்துக்கொண்டிருக்கிறது. தொழிற்புரட்சியைத் தொடர்ந்து உண்டாகிய நவினக் காலத்தில் மரபு, பண்பாடு, ஒழுக்கம், நெறி, குடும்ப உறவு, பாலுணர்வு ஆகியவற்றில் மேலை நாட்டினர் பெரும் சிதைவுகளுக்கும் போராட்டங்களுக்கும் உள்ளாகினர். அதனையடுத்து, எழும்பியதுதான் பின்நவினம். இது இன்று எல்லாத் துறைகளையும் தழுவிக்கொண்டிருக்கிறது; விழுங்கிக்கொண்டிருக்கிறது.


மாந்த நாகரிகக் காலத்தைக் கற்காலம், செப்புக்காலம், இரும்புக்காலம், நவினக் காலம் என பிரிப்பது வழக்கம். இந்த வரிசையில் அனைத்திற்கும் இறுதியானதாக உருவாகியிருக்கும் காலத்தைக் குறிக்கவே ‘பின்நவினம்’ என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படுகிறது. மேற்கிற்கே உரிய பண்பட்டுப் பின்னணியில் தோன்றியதாக இருந்தபோதிலும் அது என்னவோ உலகம் முழுமைக்கும் உரிய புதிய எண்ணக்கருபோல காத்திரமாக(seriously) முன்னெடுக்கப்படுகிறது.

பின்நவினத்தைப் புரிந்துகொள்வதற்கு ‘காலம்’ என்பது முதலில் புரிந்துகொள்ளப்பட வேண்டியதாக இருக்கிறது. ‘பின்நவினக் காலம்’ என்பது மின்னல்வேகத்தில் மாறிவரும் மேற்கத்திய நாடுகளின் காலத்தைக் குறிக்கிறது. மேலை நாடுகளின் இடத்தை - காலத்தை எட்டிப்பிடிக்க கிழக்கத்திய நாடுகளுக்கு இன்னும் காலம் தேவைப்படலாம். அதில், தமிழ் மக்களுக்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பது சிந்தனைக்குரியது.

இப்படிப்பட்ட சூழலில், மேற்கு நாடுகளில் பல்துறைகளிலும் ஊடுறுவி வியாபித்திருக்கும் ‘பின்நவின’ எண்ணக்கருவைக் கொண்டுவந்து நம்முடைய தலைக்குள் கொட்டுவது சரியல்ல என்று சொல்வதா இல்லை இப்போதைக்கு சாத்தியமல்ல என்று சொல்லுவதா?

இத்தனைக்கும், பின்நவினத்தின் வரையரைகள் பற்றி முடிவான கட்டுமங்கள் (Construct) இன்றுவரையில் மேற்குச் சமுகத்தாரிடம் ஏற்பட்டிருக்கவில்லை. பின்நவினம் மீது திறனாய்வு மேற்கொண்ட இகாப் அசான் (Ihab Hassan), அஃது இன்னமும் ஆய்வுக்குரிய ஒரு விடயமாகவே இருக்கிறது எனக் கூறுகின்றார்.

பின்நவினம் பற்றி இதுவரையில் வெளிவந்துள்ள ஆய்வுகளிலிருந்து அறியப்பட்ட உண்மை என்னவெனில், பின்நவினம் என்பது ஒழுங்குசெய்யப்பட்ட - ஒருமைப்பட்ட - ஒரு முழுமையான - செறிவான கோட்பாடு அல்லது கட்டுமம் அல்ல.

இந்தப் பின்நவினம் பின்வரும் இயல்புகளைக் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

1. முழுமைப்படுத்தலுக்கும் ஒருமைப்படுத்தலுக்கும் எதிரானது. ஒவ்வொரு பகுதிகளையும் தொடர்புகளற்ற தனி அமைப்பாகக் காட்டுவது.

2. பெரும் தொகுதியான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மைகளை - நெறிகளை – மரபுகளை மறுத்துரைப்பது.

3. ஒற்றைத் தன்மைக்கு எதிராக பன்முக அமைப்பைக் கொண்டிருப்பது.

4. மக்களின் மதிப்பைப் பெற்ற பெருநெறி, பெருங்கதையாடல்கள் (Meta Narratives) முதலானவற்றை மறுத்து சிறுங்கதையாடல்களை வரவேற்பது.

5. தன்னிலை(சுய) முரண்பாடுகளைக் கொண்டிருப்பது.

6. எதற்கும் உரிய பொதுவான தீர்வு என்று தனியாக எதுவுமில்லை என்கிறது.

7. அறிவியலே மேலான அறிவு என்ற வாதத்தைத் தகர்த்தெரிவது

8. எதனையும் மாற்றுவதோ அல்லது தீர்ப்பதோ அல்ல. மாறாக அனைத்தையும் மறுத்துரைப்பது.

9. வரலாற்று நிகழ்வுகளைத் திரும்பிப்பார்த்து புதிய பயணங்களை மேற்கொள்ளத் தூண்டுவது.

10. முதலாளியத்தின் (Capitalism) அடக்குமுறைக்குப் பின்னெழுந்த பின்முதலாளியம், பயனீட்டாளரியல் (Consumerism) ஆகியவற்றின் பின்னனியில் வருவது.

இப்படியாகப் பின்நவினம் பற்றிய பல்வேறு கருத்துகள் இருக்கின்றன. இதில் சிக்கல் என்னவெனில், நேரடிப் பட்டறிவுகள் எதுவும் இல்லாதச் சூழலில் அவற்றைப் புரிந்துகொள்வதில் கிழக்கத்திய மரபுகளோடு வாழ்ந்துகொண்டிருக்கும் நமக்கு சங்கடங்கள் நிறைய இருக்கின்றன. புரிந்துகொள்வதே சிரமாக இருக்கின்ற நிலையில் அவற்றை ஏற்றுக்கொள்வதென்பதைப் பற்றி சொல்லவும் வேண்டுமா?

ஆளானப்பட்ட மேலைநாட்டு அறிஞர்களே திக்குமுக்காடிக் கொண்டிருக்கும் ‘பின்நவினம்’ பற்றி இங்கே இருக்கும் சிலர் கரைத்துக்குடித்துவிட்டது போல எழுதுவதும் பேசுவதும் கேள்விக்குரியதாகும். மாறாக, பொதுவுடைமை, நவினமயம், பின்நவினமயம் ஆகிய வாழ்க்கைச் சூழலில் ஒன்றன்பின் ஒன்றாக உழன்று – அழுந்தி – சிதைந்து – சீரழிந்து பின்னர் வாழ்வைத் தேடி அலையும் மேலையர்களுக்கு வேண்டுமானால் பின்நவினம் ஓரளவுக்குப் புரிதலுக்கு உரிய ஒன்றாக இருக்கலாம்; அவர்களின் வாழ்க்கைமுறைக்கு ஏற்றதாகவும் இருக்கலாம்.

இருந்த போதிலும், பின்நவினத்தைப் பற்றி கருத்துகளை முன்வைத்த லெவின்(Harry Levin), பின்நவினமானது அடிப்படையில் அறிவாண்மைக்கு எதிரானது (Anti intellectual) என்று கூறியுள்ளார்.

இறுதியாக, தமிழ் விக்கிப்பீடியா பின்நவினம் பற்றி என்ன சொல்கிறது என்று பாருங்கள்:-

பின்னை நவீனத்துவம் (பின்நவீனத்துவம்) என்பது குறிப்பாக மேற்கு நாடுகளில் கலை இலக்கிய உலகில் நிலவும் ஒரு சமீபத்திய மனோபாவமாகும்.

கலை இலக்கியம் எனும் எல்லைப்பாடுகளைக் கடந்து தற்போது அது தத்துவம், அரசியல், வாழ்க்கைமுறை, தொழிநுட்பம், கட்டடக்கலை, நாடகம், சினிமா போன்ற களங்களை நோக்கியும் விரிந்து வருகிறது. பின்னை நவீன யுகம் எனும் வரலாற்றுக் காலகட்டத்தை அது குறிப்பதாக பின்னை நவீன வாதிகள் கருதுகின்றனர். பின் அமைப்பியல் சிந்தனையாளர்களான மிஷேல் ஃபூக்கோ, லக்கான், தெரிதா போன்றோர், அவர்களைத் தொடந்து லியத்தார்ட், பௌதலியார்ட், டெலூஸ் ஆகியோர், இன்னும் சமீபத்தில் அறிமுகமாகிவரும் புதிய தத்துவவியலாளர்கள் போன்றோர் பின்னை நவீனத் தத்துவத்தின் தத்துவவியலாளர்களாகக் கருதப்படுகின்றனர்.

பின்னவீனத்துவம் என்பது நவீனத்துவத்துவத்துக்கான ஒரு மறுவினையாகும்.

இப்போக்கானது
இரண்டாம் உலகப்போரின் பின்னான நம்பிக்கைச்சிதைவுகளின் செல்வாக்கால் எழுந்தது எனக் கூறப்படுகிறது.

ஒழுங்குபடுத்தும் கோட்பாடோ, ஒரு தெளிவான மையப் படிநிலையோ அற்ற கலாசார, புலமைத்துவ, கலைத்துவ நிலையாக பின்னவீனத்துவம் குறிப்பிடப்படுகிறது.

இது, தீவிர சிக்கற்றன்மை, முரண்பாடு, குழப்பநிலை, பல்வகைமை, தம்மிடைத் தொடர்புடைமை போன்றவற்றை வெளிப்படுத்துகிறது.

சான்றாதாரம்:-

1.கல்விக் கோட்பாடுகளும் மாற்றுச் சிந்தனைகளும் (பேரா.முனைவர் சபா.செயராசா)
2. உயிர்நிழல்-பிரான்சு), செப்தெம்பர்-அத்தோபர், 1999 (கொ.றொ.கொன்சுரன்ரைன்)
3.உளவியல் முகங்கள் (பேரா.முனைவர் சபா.செயராசா)

4.தமிழ் விக்கிபீடியா

(மரபியல் தொடர்ந்து மலரும்)

தொடர்பான இடுகைகள்:-
1. தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் (பாகம் 1)

2.தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் (பாகம் 2)

3. புத்திலக்கியவாணர்களுக்குத் தமிழும் தெரியாது தமிழுணர்வும் கிடையாது

Tuesday, July 21, 2009

தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் (பாகம் 2)

சங்க இலக்கியம், சங்கம் மருவிய இலக்கியம், பத்தி இலக்கியம், உரைநடை இலக்கியம் என்று காலந்தோறும் தமிழ் இலக்கியம் மாற்றங்கண்டு வந்துள்ளது. இன்றைய நிலையில் நவினம் (Modernism) என்பதையும் கடந்து பின்நவினம் (Post-Modernism) என்பது மிகப் பரவலாகப் பேசப்படுகிறது.

“தன் மொழி - தன் இனம் - தன் பண்பாடு - தன் வரலாறு - தன் முன்னோர் - தன் இலக்கியம் - தன் மெய்யியல் முதலான அனைத்திலும் பற்றுதலும் நம்பிக்கையும் இன்றையத் தமிழர்களுக்கு இல்லை. இந்தக் கீழ்த்தரமான மனச்சிதைவின் பயனாகப் பிறருடைய - அன்னியருடைய - ஏன் பகைவனுக்குச் சொந்தமானதை எல்லாம் கொண்டுவந்து தமிழுக்குள் புகுத்தியும் திணித்தும் தெரிந்தோ தெரியாமலோ தமிழ்ப் பண்பாட்டையும் குமுகாயத்தையும் சிதைவுக்கு உள்ளாக்கி வருகின்றனர்.


“மரபுநிலை திரியின் பிறிது பிறிதாகும்” என்ற தொல்காப்பியரின் எச்சரிக்கையை இவர்கள் நினைவில் கொள்ளுவது நல்லது. பன்முகத் தன்மைக்கு முதன்மை வழங்கும் ‘பின்நவினம்’ முதலான வடிவங்கள், மரபு நடைமுறைகளில் திரிபுகளையும் பிறழ்வுகளையும் உண்டாக்குவதால் சமுதாயத்தில் கேடுகளே விளையும்.

இது எப்படி என்கிறீர்களா?

பொதுவாகவே, தமிழர்கள் மட்டுமல்லாது கிழக்கத்திய மக்களிடம் ‘பாலுணர்வு’ தொடர்பாக வெளிப்படையான போக்குகளைக் காணமுடியாது. இதனைக் கிழக்கத்திய மக்களின் உளக்குறைபாடாகவும் ‘காமத்தை எதிர்கொள்ள வலிமையில்லை’ என்றும் பறைசாற்றுவது குற்றமாகும். காரணம், இவர்கள் வெளிப்படையான ‘பாலுணர்வு’ கருத்தாடல்களுக்கும் அணுகுமுறைகளுக்கும் இன்னமும் அணியமாகி (தயாராகி) இருக்கவில்லை என்பதுதான் நடப்பியல்(நிதர்சனம்).

நிலைமை இப்படியிருக்க, மனவியல் நிலையில் இன்னும் அணியமாகாத மக்களிடம் - பாலியல் கல்வியறிவு பெறாத மக்களிடம் - பாலுணர்ச்சி பற்றிய புரிதம்(பிரக்ஞை) அறவே இல்லாத மக்களிடம் ‘பின்நவினம்’, ‘பாலியல்’ என கொண்டுவந்து மண்டைக்குள் திணிப்பதும் புலன்களுக்குள் பூட்டுவதும் சரியான அணுமுறைதானா என்பது சிந்திக்கத்தக்கது.

இவ்வாறு திணித்தல் முயற்சியானது மக்களுக்கு அலற்சியை - ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பது மிகமிக எளிமையான அறிவியல் உண்மைதானே. இப்படிப்பட்ட ஒவ்வாமைக்கு உள்ளாகும் மக்கள்நலம் பாழ்படும்.. இயல்பாக இவர்களுக்கே உரிய மரபை வலுக்கட்டாயமாக முறித்துப்போடுவதால் மனநலம் முடமாகும் என்பதை ‘பின்நவினக்கூட்டம்’ ஒத்துக்கொள்ள மறுப்பதேன்? உண்மைநிலவரத்தை மறைப்பதேன்?

இந்த நிலமைகளை முன்னுணர்ந்து “மரபுநிலை திரியின் பிறிது பிறிதாகும்” என்று சொன்ன நமது தொல்காப்பியத் தாத்தா நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறார் அல்லவா?

இந்தத் தமிழ் மரபியல் அடிப்படையில்தான் நாம் ஒவ்வொரு அன்னிய ஊடுருவல்களைப் பார்க்க வேண்டியுள்ளது. இந்தப் பார்வையில் அறியியல் நோக்கு இல்லை! உளவியல் அணுகுமுறை இல்லை! என்று மறுத்துவிடல் முறையாகுமா?

ஆகவேதான், புதியவரவாகிய எதுவானாலும் அவற்றை கண்ணை மூடிக்கொண்டு ஒதுக்கித்தள்ளாமல், ஏற்கனவே நம்மிடம் இருக்கும் மரபுகளோடு ஒத்துப்பார்த்து வேண்டியதை கொள்ளவும் ஆகாததைத் தள்ளவும் தெரிந்திருக்க வேண்டும்; அதற்குக் கொஞ்சம் மரபியல் சார்ந்த அறிவும் வேண்டும்.

மேலும், புத்திலக்கியவாணர்கள் தமிழியலை முன்படுத்தி அன்னிய வடிவங்களைக் கையாள வேண்டுமே - சிந்திக்க வேண்டுமே தவிர, அன்னிய வடிவங்களுக்காக ஏற்றமிகு தமிழ் மரபியலை வெட்டிக் குத்திக் குதறிப்போடும் குரோதங்களைக் கொஞ்சம் கைவிட வேண்டும்.

மரபியல் நமக்குச் சொல்வது என்ன?

கலை என்பது என்ன? “அஃது ஓர் உள்ளார்ந்த உணர்வை வெளிப்படுத்துவதிலும் தொடர்புப்படுத்துவதிலும் மனிதத்திறன் வெளிப்பட்டுத் தோன்றும் முறைமையாகும்” என்கிறார் ஓனிக்மன் (Honigmon).

“மனிதன் தன்னைச் சுற்றி நிகழும் நடப்புகளில் உய்த்துணரும் உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் தம்முள்ளேயே மீண்டும் மீண்டும் எழச்செய்து அவற்றைத் திட்டவட்டமான வடிவங்களில் வெளியிடும்போது கலை பிறக்கிறது” என்கிறார் உருசிய அறிஞர் பிளாக்கனோவ் (Plekhanov).

இயற்கையின் அழகை ஒழுங்குப்படுத்தி மனிதப் புலன்களை நுண்ணுணர்வுத் திறத்தில் மேம்பட வைப்பதே கலையாகும். மெல்லிய உணர்வுகளின் வெளிப்பாடான அந்தக் கலையானது எழுத்து, இசை, நாடகம் என எதுவாகவும் இருக்கலாம். அந்தவகையில், எழுத்துக்கலைக்குரிய மரபை தொல்காப்பியம் இப்படி கூறுகிறது:-

சிதைவெனப் படுபவை வசையற நாடில்
கூறியது கூறல்; மாறுகொளக் கூறல்;
குன்றக் கூறல்; மிகைபடக் கூறல்;
பொருளில கூறல்; மயங்கக் கூறல்;
கேட்போர்க் கின்னா யாப்பில் ஆதல்;
பழித்த மொழியான் இழுக்கக் கூறல்;
தன்னா னொருபொருள் கருதிக் கூறல்;
என்ன வகையினும் மனங்கோ ளின்மை;
அன்ன பிறவும் அவற்றுவிரி யாகும்.
(தொல்.110)

சிதைவுகள்(எழுத்துப் படைப்பில்) என்று கூறப்படுபவை யாவையென்று குறையில்லாமல் ஆராய்ந்து பார்த்தால், 1.சொன்னதைச் சொல்லல், 2.முன் சொன்னதற்கு மாறுபாடாகச் சொல்லுதல், 3.குறைவாகச் சொல்லுதல், 4.மிகுதியாகச் சொல்லுதல், 5.பொருளற்றவைகளைச் சொல்லுதல், 6.மயக்க உணர்வு ஏற்படும்படியாகக் கூறுதல், 7.கேட்பவருக்குத் துன்பம் தரும்படியாக அமைதல், 8.பழிக்கப்பட்ட சொற்களோடு தாழ்வுண்டாகுமாறு கூறுதல், 9.தனக்குத் தானே ஒரு பொருளை எண்ணிகொண்டு கூறுதல், 10.எவ்வகைப் பொருளையும் உறுதியாகப் பற்றாமல் உணர்த்துதல் ஆகிய இவைகளும், இந்தத் தன்மைகளைக் கொண்ட பிறவுமாகும்.

தொல்காப்பியர் கூறும் இந்த அளவுகோள் இன்றும் பொருந்தும் என்பதை நேரிய உள்ளமும் கூரிய அறிவும் கொண்ட எவரும் ஒப்புவர்.

இப்படிப்பட்ட வரையரைகள் அன்னியப் பின்நவினத்தில் இருக்கிறதா என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். பின்நவினம் என்பதற்கு இன்னும் இலக்கணமே வரையரை செய்ய முடியாமல் தவிக்கிறது மேற்குலகம். “அனைவராலும் மதித்து ஏற்கப்பட்ட ‘புனிதங்களை’ மறுத்துரைப்பது; விதண்டாவாதம் பண்ணுவது” என்றுதான் இன்னமும் போய்க் கொண்டிருக்கிறது.

இப்போது நீங்கள் செய்ய வேண்டியது, இந்த அளவுகோளைக்கொண்டு சிலர் எழுதித் தள்ளும் படைப்புகளை - நவின இலக்கியங்களை - பின்நவினங்களை அளவெடுத்துப் பார்த்து அவற்றில் இழையோடும் குற்றங்களைக் குத்திக்காட்ட வேண்டாம்; பண்போடு சுட்டிக்காட்டவும் வேண்டாம்.
காரணம், எது சரி.. எது தவறு என்று தீர்மானிப்பது அவரவர் உரிமையாகும்!

(மரபியல் இன்னும் மலரும்..)
தொடர்பான இடுகைகள்:-

Monday, July 20, 2009

தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும்

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு பிறந்த ஒவ்வொரு தமிழனும் தமிழ் மரபியலுக்குச் சொந்தமானவன். காலங்காலமாக வாழையடி வாழையென வந்த மரபியலைப் போற்றுவதும், எந்தச் சூழலிலும் அதனைக் கலங்கப்படுத்தாமல் இருப்பதும், அதற்கு நெருக்கடி நேரும்போது ‘தாய்க்கொரு பழிநேர்ந்தால் மகற்கில்லையோ’ என்ற உணர்வின் உந்துதலில் அரணாகி நிற்பதுவும் தமிழ் இனத்தில் பிறந்த ஒவ்வொருவனின் கடமையாகும்.

சொந்த மொழியை - இனத்தை - சமயத்தை - இலக்கியத்தை - பண்பாட்டை - வரலாற்றை - சான்றோரை இழுவுபடுத்தி இன்பம்காணும் பேதையர்கள் நிறைந்ததுதான் தமிழினம் என்பது காலம் கட்டியங்கூறும் வரலாறு.

‘நீசபாசை’ என்றும், ‘ஐந்தெழுத்தால் ஆனதொரு பாடை’ என்றும், ‘தமிழ் இலக்கியங்களுக்கு ஆரியமே மூலம்’ என்றும், ‘தமிழ் அறிவியல் மொழியாகுமா? என்றும், ‘தமிழ் தொழில்நுட்ப உலகில் தழைக்குமா?’ என்றும், ‘தமிழ் அடுத்த 100 ஆண்டுகளில் அழிந்துவிடும்’ என்றும் பறபல பரிகாசிப்புக்கு உள்ளாகிய வரலாறு தமிழுக்கு உண்டு.

இத்தனைக்கும், இத்துணைக் கொடுமைகளையும் செய்தவர்கள் வேற்று இனத்தாரில்லை. தமிழினத்தில் பிறந்த கோடரிக்காம்புகளும் - தப்பிப் பிறந்த தறுதலைத் தமிழர்களும் ஆகியவரோடு எப்போதுமே தமிழுக்குப் பகையாக நிற்கும் ஆரியப் பார்ப்பனக் கூட்டமும்தான்.

இந்நிலையில், காலந்தோறும் தமிழுக்கு எதிராக வீசப்பட்ட ஏவுகணைகளைத் தகர்த்தெரிந்து மொழியறிஞர் பாவாணர் குறிப்பிட்டதுபோல, 50,000 ஆண்டுகள் வரலாறுகொண்டதும், 3,000 ஆண்டுகளுக்கு முன்னாலேயே செவ்வியல் நிலைக்கு முன்னேறிவிட்ட மொழியாகவும் இன்றைய கணினி இணைய உலகிலும் நின்று நிலைக்கும் மொழியாகவும் தமிழ் இருப்புக்கொண்டிருப்பது உலகில் வேரெந்த மொழிக்கும் இல்லாத தனியுயர்ச் சிறப்பாகும்.

அப்படிப்பட்ட தமிழில், மொழிக்கென்று ஒரு மரபு உண்டு! இனமரபு உண்டு! சமய மரபு உண்டு! பண்பாட்டு மரபு உண்டு! கலை மரபு உண்டு! இசை மரபு உண்டு! இலக்கிய மரபு உண்டு! வாழ்வியல் மரபு உண்டு! இப்படி மாந்த வாழ்வியலைத் தழுவிய எல்லாவற்றிலும் மிக உயரிய மரபுகளை வகுத்தவர்கள் தமிழர்கள்.

அப்படியிருக்க, சொந்த இனத்தின் - சொந்த மொழியின் பண்பாட்டை மதிக்கத் தெரியாத இன்றையத் தமிழர்கள் சிலர் ‘தமிழை’ வழக்குமன்றத்தில் ஏற்றி மரபு என்பதற்கு ஒரு முழுமையான தெளிவான விளக்கம் கொடுக்கவும் என்றெல்லாம் வாதம் செய்கின்றனர்.

இது எப்படி இருக்கிறது என்றால், தன்னைப் பெற்றெடுத்து - பாலூட்டி - சீராட்டி - தாலாட்டி - மார்பிலும் தோளிலுமிட்டு - அன்பொடு அறிவையும் புகட்டி ஆளாக்கி வளர்த்தெடுத்த சொந்த அம்மாவைப் பற்றி சொல்லச்சொல்லி பக்கத்து வீட்டுக்காரனிடம் கேட்டக் கதையாக இருக்கிறது.

மேலை நாடுகளின் பண்பாட்டுச் சிதவுகளினால் உருவெடுத்த ‘நவினம்’, ‘பின்நவினம்’ முதலான வடிவங்களில் ஈர்க்கப்பட்ட இளையோர்கள் மட்டுமல்ல, முதுமையிலும் "இன்பம் எங்கே இன்பம் எங்கே" என்று தேடும் மூத்தவர் சிலரும் இப்படிப்பட்ட குருட்டுக் கணைகளை ஏவிவருவது வழக்கமாகிவிட்டது. அந்த முனைப்பில், தமிழ் மரபியலைச் சிறுமைபடுத்துவதும் சிதைவுக்குள்ளாக்குவதும் இவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், தமிழைப் பழித்துக்கொண்டே - தமிழ் மரபியலைப் பழித்துக்கொண்டே - தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பழித்துக்கொண்டே, அதே தமிழால் வந்துசேரும் பணம், பட்டம், விருது, புகழ், மேடை, மாலை, சிற்றிதழ், கவிதைத் தொகுப்பு, சிறுகதை, நாவல், இலக்கியக்கூட்டம் என்று பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் ‘சோற்றுப் பட்டாளம்’ ஒன்று தமிழகத்தில் கருவாகி இன்று உலகமெங்கிலும் பரவலாகி இருக்கிறது.

இவர்களுக்குத் தமிழின் மூக்குநுனி தெரிகிறதோ இல்லையோ. ஆனால், அன்னியரின் மூளை அணுக்கள்வரையில் துல்லியமாகத் தெள்ளெனத் தெரிகிறது.

அன்னியரின் கண்டுபிடிப்புகள் அனைத்தும் வெறுக்கதக்கவை அல்ல. அன்னியர் கண்டுபிடித்தாலே அவை தமிழுக்கு அன்னியம் என ஒதுக்கத்தக்கவையும் அல்ல. மாறாக, அவர்களின் கண்டுபிடிப்புகளில் இருக்கும் உயர்வுகளை மட்டுமே மதித்து ஏற்கமுடியுமே தவிர, இழிவுகளையும் கழிசடைகளையும் அல்ல.

தங்கத்தை உரசிப்பார்க்கும் தமிழ்க்கல்லில் அன்னியத் தகரங்களைக் கொண்டுவந்து உரசுவது மடமையன்றி வேரென்ன? அப்படியேதான், தமிழ் மரபியலோடு ‘பின்நவினம்’ போன்றவற்றை உரசிப்பார்ப்பதுவும்.

‘பண்புடையார் பட்டுண்டு உலகம்’ என்ற தமிழ் மரபுக்கும் ‘உலகப் பொதுமை என்று என்று எதுவும் கிடையாது’ என்ற மேற்குலகப் பின்நவின மரபுக்கும் எத்துணை வேறுபாடு இருக்கிறது. ‘அறத்தான் வருவதே இன்பம்’ என்ற தமிழ் மரபு மாந்த இனத்தை உய்விக்கும் அளவுக்கு ‘மனித இனத்தின் முதன்மையான உந்துவிசை பாலுணர்வு வேட்கைதான்’ என்ற மேலையர் கண்டிபிடிப்பு எந்தளவுக்கு உய்விக்கும்?

இறைமையை ஒன்றாகவும்,

வாழ்வை இரண்டாகவும்,

மொழியை மூன்றாகவும்,

நெறியை - நிலத்தை நான்காகவும்,

திணையை ஐந்தாகவும்,

அறிவை - சுவையை ஆறாகவும்,

இசையை - கிழமையை ஏழாகவும்,

திசையை - மெய்ப்பாட்டை எட்டாகவும்,

மணிகளை - எண்களை ஒன்பதாகவும்,

கண்டு உலகத்திற்குத் தந்தது தமிழ் மரபியல் அல்லவா? இவை இன்றும் உலகத்திலே எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது மட்டுமல்ல.. இன்றளவும் மாற்றத்திற்கு உள்ளாகாமல் இருப்பதுவும் உண்மையல்லவா?

'மாற்றம் ஒன்றே உலகில் மாறாதது' என்ற கோட்பாட்டைக் கடந்து உலகத்தில் இன்னமும் மாறாமல் இருப்பவை ஏராளம் இருக்கின்றன என்பதை முற்றிலுமாக மறுத்துவிட முடியுமா?

தமிழ் மரபியல் ஒன்றும் மாற்றத்தை மறுதளிக்கும் ஏற்பாடு கிடையாது. காலத்திற்கு ஏற்ற தேவையான மாறுதல்கள் தமிழிலும் ஏற்பட்டே வந்துள்ளன. ஆயினும், தமிழின் ஆணிவேரிலே கைவைக்கும் மாற்றங்கள் அடையாளம் தெரியாமல் பொசுங்கிப் போயுள்ளன என்பதே வரலாற்று உண்மை.

சான்றாக, வடமொழி ஆதிக்கம் பெற்றிருந்த காலத்தில் தமிழில் வழங்கிய 'மணிப்பிரவாள' நடை தோன்றி கோலோச்சியது. மணிப்பிரவாளத்தில் எழுதுபவரே மகா பண்டிதர் என்ற நிலை அன்று உருவாகியது. இதனால், தமிழ்ப் புலவோர் பலரும் மணிப்பிரவாளத்தில் எழுதத் தொடங்கினர். ஆனால், இன்று 'பின்நவினம்' பேசும் கத்துக்குட்டிகளுக்குத் தெரியுமா இந்த மணிப்பிரவாளம்? தெரியுமா இந்த வரலாறு?

ஓர் இடைக்காலத் தொய்வுக்குப் பின்னர் மீண்டும் தமிழ் மரபியலே தலையெடுத்தது. அப்படித்தான் இன்று, நவினமும் பின்நவினமும் பொங்கி எழும்புகிறது. ஆனால், அது விரைவிலேயே மரபியல் சமுத்திரத்தில் பெருங்காயமாகிக் கரைந்துபோகும்.

தமிழ் மரபியலுக்கு விளக்கம் கேட்போருக்கு நாம் ஒரே ஒரு சொல்லில் விளக்கம் சொல்லிவிடலாம். அந்தச் சொல் 'தொல்காப்பியம்'.

ஆம்! 'மரபு என்பதற்கு நிரந்திரமான தேசிய அங்கீகாரம் பெற்ற ஒரு முழுமையான தெளிவான விளக்கம் கொடுக்கவும்’ என்று இன்று கையைநீட்டி கேள்வி கேட்பவர்களுக்கு.. அன்றே நமது தமிழ் முப்பாட்டன் தொல்காப்பியன் பாட்டுவடிவில் பாடமே எழுதிவிட்டான்.

இதனைக்கூட அறியாதவர்கள் ‘இலக்கியம்’ என்று எதையோ படைக்கிறார்கள். இவர்களுக்கும், கருவிகள் எதுவும் இல்லாமல் உழவுக்குப் போகிறவர்களுக்கும்.. வாளைத் தீட்டாமல் போர்க்களம் புகுகின்றவர்களுக்கும்.. ஆண்மையே இல்லாதவன் ‘முதலிரவுக்காக’ முந்திக்கொண்டு ஓடுவதற்கும்.. எந்தவொரு வேறுபாடுமே கிடையாது.

தமிழ் மரபியல் என்பதற்கு விளக்கம் கேட்பவர்கள் தொல்காப்பியம் போன்ற நூல்களைப் தேடிப்பிடித்துப் படிப்பது நல்லது. படித்தாலும் புரியவில்லை என்றால் அதற்குப் பொறுப்பு தொல்காப்பியத் தமிழல்ல.. அதனைப் புரிந்துகொள்ள முடியாத மொழியறிவும் மொழிமானமும் கெட்டுப்போன தமிழன்தான்!

(மரபியல் மலரும்...)

Wednesday, July 15, 2009

புத்திலக்கியவாணர்களுக்குத் தமிழும் தெரியாது; தமிழுணர்வும் கிடையாது


“புத்திலக்கியம் (நவின இலக்கியம்) என்ற பெயரில் தமிழ்நாட்டிலும் சரி, மலேசியா, சிங்கை முதலான நாடுகளிலும் சரி எழுதிவருகின்ற புத்திலக்கியவாணர்கள் எவருக்கும் தமிழும் தெரியாது; தமிழுணர்வும் கிடையாது” என்று மலேசியாவுக்கு இலக்கியப் பயணம் மேற்கொண்டு வந்துள்ள பேராசிரியர் ஐயா மறைமலை இலக்குவனார் கூறினார்.

கடந்த 11-7-2009இல் பேரா மாநிலம், பாரிட் புந்தார் தமிழியல் நடுவத்தில் நடைபெற்ற பொழிவுரை நிகழ்ச்சியில் பேராசிரியர் ஐயா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

மாந்தவியல் பண்பாட்டை உயர்த்திப் பிடிக்கும் செம்மாந்த இலக்கைக் கொண்டமைவதே இலக்கியம் எனப்படுவது. அத்தகைய உயரிய இலக்கைக் கொண்டிருக்கும் உலக இலக்கியங்களில் முதன்மையானது தமிழ் இலக்கியம்.
தமிழ் இலக்கியமானது மிக நீண்ட நெடிய வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது. உலகில் வேறு எந்த இலக்கியத்திற்கும் இல்லாத மிகச் செம்மையான செழுமையான கட்டமைப்பைக் கொண்டது.

இந்த அடிப்படை உண்மையை உணர்ந்துகொள்ளாமல் - மேற்குலகில் கருக்கொண்டு வளர்ந்த புத்திலக்கியத்தின் வரலாற்றையும் அறிந்துகொள்ளாமல் குருட்டாம் போக்கில் இலக்கியம் படைக்க புறப்பட்டவர்கள் புத்திலக்கியவாணர்கள் என்று ‘பின்நவினத்துத்துவம்’ பற்றி ஆய்வுசெய்தவரும் பல்கலைக்கழகத்தில் கற்பித்தவருமாகிய அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தமிழின் மாண்பையும் தமிழ் இலக்கியத்தின் மேன்மையையும் கண்டு பொறுக்க முடியாத சிலர் ‘நவின இலக்கியத்தை’ படைக்கத் தொடங்கினர்.

தமிழ் இலக்கியத்தின் உச்சங்களை எட்டித்தொட முடியாத இந்த இலக்கிய முடவர்கள் எந்த வரைமுறையும் இல்லாத - எந்தவகை இலக்கணமும் இல்லாத - எந்தவகை கட்டமைப்பும் இல்லாத - எந்தவிதத்திலும் மாந்த உய்வுக்கு உதவாத நவின இலக்கியத்தை ‘நவினத்துவம்’, ‘பின்நவினத்துவம்’ என்றெல்லாம் எழுத முனைந்தனர் என்பதுதான் உண்மை.

தமிழுக்கு எதிராக இப்படியொரு இலக்கிய வடிவத்தைப் புகுத்தி இரண்டகம் புரிந்தவர்களில் சி.சு.செல்லப்பா, எசு.துரைசாமி(நகுலன்) போன்றோர் முன்னோடிகளாவர். இவர்களின் அடியொற்றி, இன்று தமிழகத்தில் புத்திலக்கியம் என்ற பெயரில் பதர்களை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர். அந்தப் பதர்களை மேய்ந்துவிட்டு மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலும் சிலர் வாந்தியெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்தச் சூழலில், மலேசியா வந்திருக்கும் பேராசிரியர் ஐயா, புத்திலக்கியம் பற்றிய தோற்றம் - வரலாறு - வளர்ச்சி பற்றி மிக விரிவாகத் தெளிவுபட விளக்கினார். இவ்வகைப் படைப்புகள் தமிழுக்குள் புகுந்து தமிழ் மக்களின் குடும்பப் பண்பாட்டு நெறிகளில் குழப்பங்களை ஏற்படுத்துவதையும் குறிப்பிட்டு விளக்கினார்.

‘நவினத்துவம்’ என்பதைப் பற்றி விளக்கிய அவர், மேலை நாடுகளில் சீர்கெட்டுச் சின்னபின்னமாகிய வாழ்க்கை முறையில் பிறந்த ஒரு வடிவம் இது. தொழில் புரட்சியின் காரணமாக, மேற்குலகத்தாரிடையே ஏற்பட்ட மனச்சிதைவுகள், மனமுறிவுகள், மணமுறிவுகள், பாலியல் வன்கொடுமைகள், பெண்ணிய வன்முறைகள், சிறார் கொடுமைகள், குடும்பவியல் சிதைவுகள் முதலான குமுகாயக் கொடுங்கேடுகளின் வெளிப்பாடாக முளைத்ததுதான் புத்திலக்கியம்.

மேலை நாட்டவரிடையே தோன்றி, மேற்குலகப் பண்பாட்டில் வளர்ந்த ‘நவினத்துவத்தை’ தமிழுக்குள் கொண்டுவருவது, நம்முடைய செவ்வியல் இலக்கிய மரபுக்கு எதிரானது மட்டுமன்று; நீண்ட காலத்தில் தமிழ் இலக்கியத்தின் கட்டமைப்பையும் வரலாற்றுச் சிறப்பையும் வேரோடு தகர்த்துவிடும்.

புத்திலக்கியத்தின் ஒரு கூறாக இருக்கும் ‘சொற்களின் மீதான வன்முறை’ (Violation On Sintaks) தமிழின் மொழியியல் கோட்பாடுகளையும் இலக்கண வரன்முறைகளையும் சிதறடிக்கக்கூடியது. ஆங்கிலம் போன்ற கலவைமொழிகளுக்கு வேண்டுமானால் ‘சொற்களின் மீதான வன்முறை’ சிறப்பு சேர்க்கலாம். ஆனால், தமிழின் வளமும் வனப்பும் இதனால் சீரழிந்து போய்விடும்.

நவின இலக்கியத்தில் மட்டுமே இருப்பதாகச் சொல்லப்படும் பல்வேறு உத்திமுறைகள், மூவாயிரம் ஆண்டுக்கும் முன்பே முறுக்கேறி நிற்கும் தமிழ் இலக்கியத்தில் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டதைப் புத்திலக்கியவாணர்கள் அறிந்திருக்கவில்லை. தமிழ் இலக்கியத்தில் என்ன இருக்கிறது என்று துளிகூட அறிந்துகொள்ளாமல் நவின இலக்கியத்தை உச்சாணிக்கொம்பில் ஏற்றிக் கொண்டாடுவதை அறியாமை என்று சொல்லாமல் இருக்க முடியாது. புதுமைகள் என்பது பழமையை மறுதளிக்காமல் இருக்க வேண்டும். தொன்மைகளின் தொடர்ச்சியாக முகிழ்க்கும் புதுமைகளில்தாம் உயிர்ப்பும் உயர்வும் காணமுடியும்.

அனைத்திற்கும் மேலாக, 'நவினத்துவம்' எழுதும் புத்திலக்கியவாணர்கள் எவருக்கும் தமிழே தெரியாது; தமிழுணர்வும் கிடையாது. அதனால்தான், தொன்மைச் சிறப்புபெற்ற தமிழைச் சிதைத்தேனும் தங்களை முன்படுத்திக்கொள்ள முயன்று முயன்று எழுதுகிறார்கள். புத்திலக்கியத்தை நிலைநிறுத்திவிட ஆளாய்ப் பறக்கிறார்கள்.

ஒட்டுமொத்தச் சமுதாயமும் சீர்கெட்டுச் சிதைந்துபோன ஐரோப்பிய நாட்டுப் பண்பாட்டில் உருவாகிய ‘நவினத்துவம்’, இன்னமும் கட்டுக்குலையாமல் இருக்கும் தமிழியப் பண்பாட்டைச் சின்னபின்னப்படுத்துவதற்கு எந்த விதத்திலும் வழிவிட முடியாது - கூடாது.

உள்ளதை உள்ளவாறு சொல்லுவது அல்ல கலை; உணர்ந்தவாறு சொல்லுவது. இப்படி அமைவதே சிறந்த இலக்கியமாகும். கலை கலைக்காக என்பது பிறர் பண்பாடு; கலை வாழ்க்கைக்காக என்பது தமிழ்ப் பண்பாடு. மாந்த வாழ்வை ஒருபடி உயர்த்தப் பயன்படுவது மட்டுமே நல்ல இலக்கிய வடிவம். மாறாக, மனித மனங்களில் ‘வக்கிர’ எண்ணங்களையும் ‘உக்கிர’ உணர்சிகளையும் ஏற்படுத்துகின்ற எதுவும் இலக்கியம் ஆகமாட்டா.

உணர்வைப் பக்குவப்படுத்தி, உணர்ச்சியைச் சமன்படுத்தி, மனிதனை மேம்படுத்துவதே இலக்கியமாக இருக்க வேண்டும். இதற்கு மாறானதைக் குப்பையில் வீசுவது தமிழனின் கடமையல்ல.. மனிதனாகப் பிறந்தவனின் கடமை.

இவ்வாறு பேசிய பேராசிரியர் ஐயா, இடையிடையில் தமிழகத்திலும் மலேசியாவிலும் எழுதப்பட்ட சில நவினத்துவப் படைப்புகளை மேற்கோள்காட்டி விளக்கமளித்தார். இது நிகழ்ச்சிக்கு வந்திருந்த கூட்டத்தினரைப் பாரிய சிரிப்பலைக்குள் தள்ளியது மட்டுமல்ல, தமிழ்ப் பண்பாட்டைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கும் புத்திலக்கியவாணர்கள் மீது கடும் சீற்றத்தையும் ஏற்படுத்தியது.

Wednesday, July 08, 2009

கணிதமும் அறிவியலும் மீண்டும் தாய்மொழிக்கே திரும்புகிறது

அறிவியல் கணித பாடங்களை ஆங்கிலத்தில் கற்பிக்கும் கொள்கை அதன் நோக்கங்களை அடையத் தவறி விட்டது என்பதை அரசாங்கம் வெளிப்படையாக இன்று(7-7-2009) ஒப்புக் கொண்டுள்ளது. ஆகவே அந்தக் கொள்கை கைவிடப்படவிருக்கிறது.

2012ஆம் ஆண்டு தொடக்கம் தேசியப் பள்ளிகளில் அவ்விரு பாடங்களும் மலாய்மொழியிலும் தமிழ் சீனப்பள்ளிகளில் தாய்மொழிகளிலும் கற்பிக்கப்படும் என்று துணைப் பிரதமரும் கல்வி அமைச்சருமான முகிதின் யாசின் இன்று அறிவித்தார்.

2003ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், பல்வேறு தரப்பினரின் பலத்த எதிர்ப்புக்கு இடையில் அந்தக் கொள்கையை அறிமுகம் செய்தார்.

மலாய் மொழியை மீண்டும் பயன்படுத்துவதற்கும் பள்ளிக்கூடத்தில் எல்லா நிலைகளிலும் ஆங்கில மொழி கற்பிக்கப்படுவதையும் வலுப்படுத்தவும் கல்வி அமைச்சு தெரிவித்த கருத்துகளை அமைச்சரவை இன்று ஏற்றுக் கொண்டதாக அவர் சொன்னார்.

அறிவியல் கணிதப் பாடங்களை ஆங்கிலத்தில் போதிக்கும் கொள்கை 2003 ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது முதல் அது குறித்து கல்வி அமைச்சு மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இப்புதிய எடுக்கப்பட்டிருப்பதாக முகிதின் குறிப்பிட்டார்.

இந்த முடிவினால் என்ன நன்மை?

2003 தொடங்கி இந்தத் திட்டம் பல்வேறு குறைகூறல்களுக்கு உள்ளாகி வந்திருக்கிறது. இப்போது எடுக்கப்பட்ட இந்த முடிவு பெரும்பான்மை மக்களின் மனதில் பாலை வார்த்துள்ளது எனலாம்.
கணிதமும் அறிவியலும் மீண்டும் தாய்மொழிக்குத் திரும்புவதால் தமிழ்க்கல்விக்கு சில நன்மைகள் விளையக்கூடும்.

1.தமிழ்மொழிக் கல்விக்கு உரிய உரிமை மீண்டுள்ளது.
2.தமிழ்மொழியும் கணிதம் அறிவியலுக்கு உரிய அறிவுமொழியாக விளங்கும்.
3.இவ்விரு பாடங்களுக்கான பாடநூல்கள் தமிழ்மொழியில் வெளிவரும்.
4.கணிதம், அறிவியலுக்குரிய கலைச்சொற்கள் மீட்டெடுக்கப்படும்.
5.தமிழ்ப்பள்ளி மாணவர்களின் அறிவும் அடைவுநிலையும் மேம்படும்.
6.தமிழ்ப்பள்ளி மாணவர்களின் தாய்மொழி ஆளுமை பலப்படும்.
7.இவ்விரு பாடங்களுக்கான தமிழ் ஆசிரியர்களின் தேவை பெருகும்.

ஆங்கிலத்தில் கணிதமும் அறிவியலும் கற்பிக்கும் திட்டம் படுதோல்வி அடைந்துள்ளதை ஒப்புக்கொண்ட அரசாங்கம், அதனை மாற்றியமைக்க இனியும் 2012வரையில் காத்திருக்கத்தான் வேண்டுமா?

முந்தையக் கட்டுரைகள்:-

1.கணிதமும் அறிவியலும் தமிழிலா? ஆங்கில தமிழிலா?

2.அறிவியல் கணிதம்:- ஏழு தெரிவுகளில் எது முடிவு?

Monday, July 06, 2009

சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு

சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.

(தமிழோடு சீன எழுத்துகள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு)


சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.

தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறைமுகங்களிலும் தங்கிப் பிறகு வியத்து நாம் சென்று அங்கிருந்து சீனநாட்டை அடைந்துள்ளனர்.

தமிழ் நாட்டிலிருந்து நேரடியாகச் சீனாவிற்குக் கடல் வழியாகச் செல்லவேண்டுமானால் வங்காள விரிகுடாவைக் கடந்து உள்ள மாலக்கா வழியாகத் தென்சீனக் கடலை அடையலாம். மலேசியத் தீபகற்பத்தைச் சுற்றி இவர்கள் செல்லவேண்டியிருக்கும். ஆனால் இந்தவழி சுற்றுவழியாகும். ஆயிரம் கல்களுக்கு அதிகமாகப் பயணத்தொலைவு நீளும். மேலும் பயணநேரத்திலும் பல மாதம் கூடிவிடும்.

சீனாவில் தமிழர்கள் காண்டன் நகரில் மட்டுமன்று. வேறு சில இடங்களிலும் வணிகக் குடியேற்றங்களை அமைத்திருந்தனர். பிற்காலச் சோழர் காலத்தில், புகழ்பெற்ற வணிகக் குழாமான திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் எனும் குழுவினர் சீனநாட்டின் பல்வேறு பகுதியிலும் வணிகம் செய்துள்ளனர் என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

(குப்லாய் கான்)

சூவன்லிசௌ துறைமுக நகரில் சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் நிறுவப் பெற்றுள்ள சில விக்கிரகம் குப்லாய்கான என்னும் புகழ்ப் பெற்ற சீனச் சக்கரவர்த்தியின் ஆணையால் அமைக்கப் பட்டதாகும். இவருக்குச் சேகாசைகான் என்ற பெயரும் உண்டு. இவரின் உடல் நலத்திற்காக இந்த ஆலயம் எழுப்பப்பட்டது.

இந்தக் கோயில் திருக்கதாலீசுவரம் என வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தில் உள்ள சிவன் திருக்கதாலீசுவரன் உதயநாயனார் என அழைக்கப்பட்டார். சீனச் சக்கரவர்த்தியின் இந்த ஆணையை நிறைவேற்றியவரின் பெயர் தவச்சக்கரவர்த்திகள் சம்பந்தப் பெருமாள் என்பதாகும்.

சக யுகம் சித்திராபவுர்ணமி அன்று இந்த ஆலயம் நிறுவப்பட்டது. கி.பி 1260ம் ஆண்டு குப்லாய்கான் முடிசூடினான். இவன் உலகையே நடுங்க வைத்த மங்கோலியச் சக்கரவர்த்தியான செங்கிசுகானின் பேரனாவான. மங்கோலியச் சக்கரவர்த்திகள் ஆளுகையில் சீனாவும் இருந்தது.

இவன்தான் பெய்சிங் நகரைக்கட்டி அதைத் தனது பேரரசின் தலைநகராக்கினான். அவருடைய பேரரசு விரிந்து பரந்திருந்தது. வலிமை வாய்ந்த சக்கரவர்த்தியாக அவன் திகழ்ந்தான் புகழ்பெற்ற யுவான் அரசமரபை இவனே தொடங்கியவனாவான். தமிழ்நாட்டில் பிற்காலப் பாண்டியப் பேரரசு அரசோச்சிய காலத்தில் இவன் சீனப்பேரரசின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தான். பாண்டிய அரச குலமும் குப்லாய்கானும் மிகுந்த நட்புறவுடன் திகழ்ந்தனர். அப்போதிருந்த பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் ஆவான். இருநாடுகளுக்கிடையேயும் தூதர்கள் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டது.


சீனாவில் எழுப்பப்பட்ட இந்த சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு இக்கோவிலில் உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிக அபூர்வமான தமிழ்க்கல்வெட்டு இதுவாகும்.

  • மூலம்:- தமிழ்க்காவல்.நெட்

Saturday, July 04, 2009

நாளை - சூலை 5:- உலகமெலாம் 'உயிர்த்தெழுவோம்'

மலேசியாவில் - உயிர்த்தெழுவோம்
நாள் :- 5 சூலை 2009 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் :- இரவு மணி 7.00 முதல்
இடம் :- சாரணியர் மண்டபம், பிரிக்பீல்ட்டு. கோலாலம்பூர்.
தொடர்புகளுக்கு : 016-3262479 / 012-3142900 / 016-6031085

ஒசுலோவில் - உயிர்த்தெழுவோம்

ஆத்திரேலியா, சிட்னியில்- உயிர்த்தெழுவோம்

இத்தாலியில் - உயிர்த்தெழுவோம்

இத்தாலியில் - உயிர்த்தெழுவோம்

நெதர்லாந்தில் - உயிர்த்தெழுவோம்

நியுசிலாந்தில் - உயிர்த்தெழுவோம்

டென்மார்க்கில் - உயிர்த்தெழுவோம்

கனடா, குயின்சுபர்ககில் - உயிர்த்தெழுவோம்

கனடா, கல்கரியில் - உயிர்த்தெழுவோம்

சுவிசில் - உயிர்த்தெழுவோம்

பெங்களூரில் - உயிர்த்தெழுவோம்

Blog Widget by LinkWithin