Monday, July 27, 2009

தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் (பாகம் 4)

‘பாலியல்’ என்றாலே பதகளத்துடன் அணுகும் மலேசிய நவினப் படைப்பாளிகளுக்கு இந்தத் தொடர் பயனாக அமையலாம். பண்பட்ட மனத்தோடு பாலியலை அணுகுவதற்குரிய பண்பாட்டை அறிந்துகொள்ள இது உதவலாம்.

கடந்த பதிவு (பாகம் 3) பின்நவினம் பற்றிய ஒரு முழுமையான புரிதலை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. பின்நவினத்தை மேலோட்டமாகத் தெரிந்துகொள்ளுவதற்கு அல்லது இனி அதனைப் பற்றி ஆராய்ந்தறிவதற்கு உங்களை நகர்த்தியிருக்கலாம் என்று வேண்டுமானால் துணிந்து சொல்லுவேன்.

இதற்குக் காரணம், பின்நவினம் இன்னமும் முழுத் தெளிவோடு வெளிப்படுத்தப்படவில்லை என்பதுதான். இருந்தபோதிலும், பின்நவினம் மகா கேடானது; அடிப்படையே இல்லாதது என குருட்டாம்போக்காக முற்றும் முழுவதுமாக ஒதுக்கவேண்டியதும் அல்ல.

இரண்டுமுறை போர்களைச் சந்தித்துவிட்ட உலகம், கடவுள் உண்மை, மெய்ம்மம்(தத்துவம்), நேர்மை, மாந்தநேயம் ஆகிய அனைத்து நெறிகளின்மீது நம்பிக்கை இழந்துநிற்கிறது. நவினமயச் சூழலில், ‘எதிர்மறை பண்பாடு’ (Counter Culture) ஏற்படுத்திவரும் பல்வேறு தாகுறவுகளில் சிக்கிக்கொண்டு சின்னபின்னமாகிப் போயிருக்கும் இன்றைய உலகத்திற்குப் பின்நவினம் சில தீர்வுகளைகளை முன்மொழிகிறது. நவினச் சூழலுக்கு ஏற்ற புதியவகை ‘உணர்வுவாங்கலை’ (New Sensibility) கொடுப்பதாகச் சொல்லப்படுகிறது.

தமிழ்ச்சூழலில் ‘பின்நவினம்’ சரியாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகத் தெரியவிலை. மலேசியாவில், தமிழ்ப் படைப்பாளிகள் ‘பின்நவினம்’ என்பதை பிறழ்நிலையாகவே உணர்ந்திருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. ‘பின்நவினம்’ என்ற தளத்தில் எழுதப்படும் படைப்புகள் பெரும்பாலும் ‘பாலியல்’ சார்ந்ததாகவே அமைந்திருப்பது இதற்கான காரணமாக இருக்கலாம். அதோடு, பின்நவினப் படைப்பாளிகள் இன்னும் முதிர்ச்சி இல்லாதவர்களாகவும் இலக்கியத்தில் பரந்த நோக்கு இல்லாதவர்களாகவும் இருப்பதுமாகும்.

பின்நவினப் படைப்புகள் எழுதுவதற்கு எத்தனையோ கருக்களும் களங்களும் இருக்கும்போது, இவர்களின் எழுதுகோள் பாலியல் - பாலுறுப்புகளை மட்டுமே செக்குமாடு போல வட்டமடித்துக் கொண்டிருக்கிறது.

இதனைச் சுட்டிக்காட்டினால், எம்பிக்குதித்து ஆர்ப்பாட்டம் செய்கிறார்களே தவிர, அமைதியாக அணுகி ஆராய்ந்துபார்க்க மறுக்கிறார்கள். தமிழ் மரபு – பண்பாடு சார்ந்து பின்நவினம் அணுகப்பட வேண்டும் என்ற கூக்குரல்களில் இருக்கும் அடிப்படைகளை எண்ணிப்பாராமல், மரபிலக்கியங்களில் நயமாக – நாகரிகமாக சொல்லப்பட்ட ‘பாலியல்’ புனைவுகளைக் கொச்சைப்படுத்தி தங்கள் செயல்களுக்கு நியாயம் கற்பிக்கிறார்கள்.

சங்க இலக்கியப் பாக்களில் இழையோடும் காமம், காதல், களவு, கற்பு முதலான அகத்தினைப் புனைவுகள் அனைத்தும் மிக கவனமாகச் செய்யப்பட்டவை – மாந்தப் பண்பாட்டுக்கு உட்பட்டவை என்பதை முதலில் இவர்கள் புரிந்துகொள்வது நலமானது. இது, புரியாத காரணத்தால்தான், மரபுகளில் ‘பாலியல்’ இருப்பதால் நாங்களும் படைக்கிறோம் என்று கொச்சையாக - பச்சையாக எழுதுகின்றனர்.

தமிழ்ச் சூழலில் பாலியல் சார்ந்த படைப்புகள் எவ்வாறு சொல்லப்பட வேண்டும் என்று எழுத்தாளர் செயமோகன் தம்முடைய கட்டுரை ஒன்றில் பின்வருமாறு விவரிக்கிறார். எந்தவொரு மாற்றமும் செய்யாமல் அதனை அப்படியே இங்குத் தருகின்றேன்.

பாலுணர்வுக்கதை என்பது தன் மையக்கருவாகவே பாலுணர்வை எடுத்துக் கொண்டிருக்கும். அதைபற்றி கூர்ந்த அவதானிப்புடன் விவாதிக்கும். அதை நுண்ணிய விவரிப்புடன் சித்தரித்துக் காட்டும். அதன் மனநிலைகளை பல தளங்களில் விரித்துச் செல்லும்.

பாலுணர்வெழுத்திற்கும் பாலியல்கவர்ச்சி எழுத்துக்கும் என்ன வேறுபாடு? வெறுமனே சற்று நேரம் நமக்கு ஒரு மனச்சித்திரத்தின் இன்பத்தை மட்டுமே அளித்து நின்றுவிடுவது பாலியல்கவர்ச்சி எழுத்து. இலக்கியம் எந்த வகையானாலும் அது நம்மை நாமே அறியச்செய்யும். கூர்ந்து நோக்க வைக்கும். நமக்குள் நம்மைக் கொண்டுசெல்லும். அதுவே முக்கியமான வேறுபாடு.

என் நோக்கில், நல்ல பாலுணர்வெழுத்து என்பது சில இயல்புகள் கொண்டது. அது எந்நிலையிலும் அழகாகவே இருக்கும். பகற்கனவுகளுக்கு மட்டுமே உரிய மென்மையான அழகு அது. தொட்டால் பொலபொலவென உதிர்ந்துவிடக் கூடிய, பிறரிடம் பகிர முடியாத அழகு. நல்ல பாலுணர்வெழுத்து குறைவாகவே சொல்லி வாசகனின் கற்பனையைத் தூண்டும். அவனுடைய அந்தரங்கமான கனவுகளில் மட்டுமே அது முழுமையடையும்.

மனத்திரிபு நிலைகளை எழுதுவது பாலுணர்வெழுத்து அல்ல. அதை வேறு வகைமையில்தான் சேர்க்க வேண்டும். மனதை சிதைப்பதும் வதைப்பதும் பாலுணர்வெழுத்தின் இயல்பல்ல. பாலுணர்வெழுத்து இனிய மனக்கிளர்ச்சி ஒன்றை மட்டுமே அளிக்கும். அதன் உச்சியில் ஒரு வகை தனிமையின் துயரையும், இழப்பின் ஏக்கத்தையும் சொல்லி முடியக்கூடும். எப்போதும் அது மூளைக்குள் பரவும் இனிய தென்றலாகவும் கற்பனையில் விரியும் இளவெயிலாகவுமே இருக்கும்.

எங்கெல்லாம் இலக்கியம் இருக்கிறதோ அங்கெல்லாம் பாலுணர்விலக்கியமும் உண்டு. பழங்குடிப் பாடல்கள் முதல் பேரிலக்கியப் பரப்பு வரை. வேதங்களில், பைபிளில்.. இந்திய காவிய மரபின் இரு உச்சங்களான கம்பனையும் காளிதாசனையும் பாலுணர்வெழுத்தின் இரு சிகரங்களாகவே சொல்ல வேண்டும்.

ஏனென்றால் மனிதர்களுக்கு பாலுணர்வெழுத்து மிகவும் தேவையாகிறது. அது ஓர் அடிபப்டையான இச்சை. இச்சைகள் அனைத்துமெ ருசிகள். ருசிகளே அழகுகளாக ஆகின்றன. மனிதன் தன் கற்பனையை பாலுறவுசார்ந்து முடிவிலாது விரித்துக் கொண்டாகவேண்டியிருக்கிறது. அது அவன் வாழ்வின் மீது கொள்ளும் ஆசையின் ஒரு வெளிப்பாடேயாகும். நம் கலைகளில் பாலுணர்வென்பது வாழ்வாசையின் மன எழுச்சியாகவே எப்போதும் வெளிப்பாடு கொள்கிறது.

கற்பனையில் இருந்து எப்படி காமத்தை விலக்க முடியும்? நல்ல பாலுணர்வெழுத்தும் ஓயாத படிமவெளியை உருவாக்கக் கூடியது. சுவர்களை மறையச் செய்யக்கூடியது. நம்மை கட்டற்ற பசுமை வெளியில் நிறுத்தக் கூடியது. அத்தகைய எழுத்துக்கள் தமிழில் இனிவரும் காலத்தில் உருவாகுமென எண்ணுகிறேன்.


தங்களுடைய படைப்புகளில் ‘பாலியல்’ தொடர்பான கருவை எடுத்துக்கொள்ளும் படைப்பாளிகள் மேற்கண்ட கருத்துகளை ஆழமாகப் புரிந்துகொண்டால், நவின இலக்கியங்களையும் நல்ல – நயமான - நாகரிகமான இலக்கியங்களாகப் படைக்க முடியுமல்லவா?


அடுத்த தொடரில், தமிழ் மரபிலக்கியம் காமம் – காதல் அதாவது நவின மொழியில் சொல்லவேண்டுமானால் ‘பாலியல்’ எண்ணக்கருவை எவ்வாறு அணுகுகிறது என்பதைப் பார்ப்போம்.

(மரபியல் மீண்டும் மலரும்..)

தொடர்பான இடுகைகள்:-

1. தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் (பாகம் 1)
2.தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் (பாகம் 2)

3.தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் (பாகம் 3)
4. புத்திலக்கியவாணர்களுக்குத் தமிழும் தெரியாது தமிழுணர்வும் கிடையாது

12 comments:

Anonymous said...

மலேசிய நவின எழுத்தாளர்கள் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய செய்தியை வழங்கி உள்ளீர்கள் ஐயா. என் படைப்புகளில் அறவே பாலியல் கிளர்ச்சி கலவாமல் எழுதி வருகின்றேன். இனியும் எழுதுவேன்.

அன்புடன்,
மானமுள்ள நவின இலக்கியன்

Anonymous said...

வணக்கம்
கட்டுரை சிறப்பு தொடர்ந்து எழுதுங்கள்


அன்புடன்
மணிமாறன் கூலிம்

Anonymous said...

மனிதன் பண்படவே அன்றைய நிலையில் இலக்கியங்கள் பயன்பட்டன. ஆனால் இன்றைய நிலையில் இளம்பிஞ்சுகளின் மனதில் பாலியல் எனும் நஞ்சை விதைக்கும் போக்கும் அதைச்சரி என்று சொல்வதும் வருத்தத்துக்குரியது

அன்புடன்
கந்தசாமி சுங்கை பட்டாணி

Anonymous said...

சிறந்த கட்டுரைகளை வழ்ங்கும் தங்களுக்குப் பாராட்ட்டுகள்

தொடருங்கள்

மாறன் சிம்பாங்

சுப.நற்குணன்,மலேசியா. said...

>மானமுள்ள நவின இலக்கியன்,

வருகைக்கு நன்றி. நீங்களும் நவின இலக்கியப் படைப்பாளி என்கிறீர்கள்.

//என் படைப்புகளில் அறவே பாலியல் கிளர்ச்சி கலவாமல் எழுதி வருகின்றேன். இனியும் எழுதுவேன்.//

என்று உறுதியும் வழங்கியுள்ளீர்கள். மகிழ்ச்சி. உங்கள் கதைக்கு நல்ல கருவையும் களத்தையும் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். அதனை நயமாக - நாகரிகமாகச் சொல்லும் வழியறிந்து சொல்லுங்கள். அதற்குக் கொஞ்சம் மரபிலக்கணத்தையும் புரட்டிப் பாருங்கள்.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>மணிமாறன், கூலிம்

>கந்தசாமி, சு.பட்டாணி

>மாறன், சிம்பாங்

உங்கள் கருத்துகளுக்கு நன்றி. தொடர்ந்து வருக!

Anonymous said...

வணக்கம் ஐயா.
சிறப்பான பதிவிற்கு வாழ்த்துக்கள். நவின எழுத்தாளர்களின் படைப்புகள் "பாலியல் கிளர்ச்சி" கலவாமல் பயன் தமிழ்ச்சமுதாயத்திற்குப் பயன்மிக்க படைப்பாக விளங்க இப்பதிவு துணை புரியும். தொடர்க...

உதயன்,
மலேசியா.

Tamilvanan said...

வணக்கம் 28- 8- 2009

எழுத்தாளர் செயமோகனின் கருத்து

// எங்கெல்லாம் இலக்கியம் இருக்கிறதோ அங்கெல்லாம் பாலுணர்விலக்கியமும் உண்டு. பழங்குடிப் பாடல்கள் முதல் பேரிலக்கியப் பரப்பு வரை. வேதங்களில், பைபிளில்.. இந்திய காவிய மரபின் இரு உச்சங்களான கம்பனையும் காளிதாசனையும் பாலுணர்வெழுத்தின் இரு சிகரங்களாகவே சொல்ல வேண்டும். //

உங்கள் கருத்து

தமி்ழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் ( பாகம் 2 )

பாலுணர்வு’ கருத்தாடல்களுக்கும் அணுகுமுறைகளுக்கும் இன்னமும் அணியமாகி (தயாராகி) இருக்கவில்லை என்பதுதான் நடப்பியல்(நிதர்சனம்).

நிலைமை இப்படியிருக்க, மனவியல் நிலையில் இன்னும் அணியமாகாத மக்களிடம் - பாலியல் கல்வியறிவு பெறாத மக்களிடம் - பாலுணர்ச்சி பற்றிய புரிதம்(பிரக்ஞை) அறவே இல்லாத மக்களிடம் ‘பின்நவினம்’, ‘பாலியல்’ என கொண்டுவந்து மண்டைக்குள் திணிப்பதும் புலன்களுக்குள் பூட்டுவதும் சரியான அணுமுறைதானா என்பது சிந்திக்கத்தக்கது.

தமி்ழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் ( பாகம் 2 )பின்னோட்டத்தில்

அறிவு நோக்கோடு அணுகினால் 'பாலியல்' கல்வியாக படியும். கதை, கவிதை என்று உணர்வுகளோடு அணுகினால் 'பாலியல்' வன்கொடுமையில் போய் முடியும் என்பது என் கருத்து.

கேள்விகள்

செயமோகனின் கருத்துப்படி "பாலியல் இலக்கியம் ( கதை, கவிதை ,பாடல் ,காப்பியம் ,செய்தி, உரை, கலாகலேட்சபம் மற்றும் மக்களிடையே உலா வந்த பலனவும்) ஆதி காலம் தொட்டே உள்ளது". அப்படியிருக்க நீங்கள் எப்படி நம் மக்களை" மனவியல் நிலையில் இன்னும் அணியமாகாத மக்களிடம் - பாலியல் கல்வியறிவு பெறாத மக்களிடம் - பாலுணர்ச்சி பற்றிய புரிதம்(பிரக்ஞை) அறவே இல்லாத மக்களிடம்" என்று எப்படி கூற்று இடலாம் ? யார் கூற்று சரி ? யார் கூற்று தவறு?

செயமோகனின் கருத்துப்படி "பழங்குடிப் பாடல்கள் ,வேதங்களில்,கம்பனையும் காளிதாசனையும் பாலுணர்வெழுத்தின்" ,இப்படி கதை ,கவிதை ,காப்பியம் அதையெல்லாம் தாண்டி மத நீதி நூல்களிலும் பாலியல் இருக்க , உங்களின் கருத்துப்படி"கதை, கவிதை என்று உணர்வுகளோடு அணுகினால் 'பாலியல்' வன்கொடுமையில் போய் முடியும்" . மேற்கண்ட நிலையினை நோக்கினால் நீங்கள் பாலியல் பற்றிய தவறான கருத்தினை உடையவராக உள்ளீர்கள் போலிருக்குதே?

நீங்கள் உங்கள் தரப்புக்காக எடுத்துக் கொண்ட செயமோகனின் பதிவு உங்கள் கருத்துக்களுக்கே முரண் படுகிறதே?

சுப.நற்குணன்,மலேசியா. said...

>தமிழ்வாணன்,

உங்கள் கருத்துகளை 'அமுக்குப் போட்டுவிடுவேன்' என்று நினைத்து அடுத்தமுறை இரண்டு தடவை பின்னூட்டம் போட வேண்டாம் அன்பரே.

கருத்து வேறுபாடுகள் இயல்புதானே. அதனால், ஆக்கமான கருத்துமோதல் நலம்தானே!

//நீங்கள் உங்கள் தரப்புக்காக எடுத்துக் கொண்ட செயமோகனின் பதிவு உங்கள் கருத்துக்களுக்கே முரண் படுகிறதே?//

நிச்சியமாக முரண்படவில்லை.

"காதலும் காமமும் தமிழ் இலக்கியத்தில் புதிதல்லவே!"

என்று அதே பின்னூட்டத்தில் நான் எழுதியிருப்பதைக் கவனிக்கவும்.

//மனவியல் நிலையில் இன்னும் அணியமாகாத மக்களிடம் - பாலியல் கல்வியறிவு பெறாத மக்களிடம் - பாலுணர்ச்சி பற்றிய புரிதம்(பிரக்ஞை) அறவே இல்லாத மக்களிடம்" என்று எப்படி கூற்று இடலாம்? யார் கூற்று சரி ? யார் கூற்று தவறு?//

அப்படியானால், நமது மக்கள் தமிழ் மரபு இலக்கியங்களை கசடற கற்று வைத்துள்ளார்கள்; பாலியல் விடயத்தில் முழுப்புரிதம் கொண்டுள்ளார்கள் என்று சொல்ல வருகிறீர்களா?

அப்படியிருந்தால், இன்று 'பாலியல்' பற்றி பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கும் நிலைமை நமக்கு வந்திருக்காதே!

மரபு இலக்கியத்தை ஒழுங்காய் படித்திருந்தால் 'பாலியல்' பற்றிய நெறியை ஊட்டியிருக்கும்; பண்பாட்டை ஊட்டியிருக்கும்.

மரபை விட்டதன் காரணமாகத்தான் இன்று நமது மக்கள் 'பாலியல்' என்றாலே பதகளத்தோடு பார்க்கிறார்கள்.

//கதை, கவிதை என்று உணர்வுகளோடு அணுகினால் 'பாலியல்' வன்கொடுமையில் போய் முடியும்" . மேற்கண்ட நிலையினை நோக்கினால் நீங்கள் பாலியல் பற்றிய தவறான கருத்தினை உடையவராக உள்ளீர்கள் போலிருக்குதே?//

இந்த வரிகளை அதற்கு மேலே இருக்கும் //பாலியல் ஒழுக்கக்கேடுகளைச் கதைகளில் சித்தரிப்பதால் 'பாலியல் அறிவு' வளர்ந்துவிடுமா?// என்ற செய்தியோடு அல்லவா நீங்கள் படித்திருக்க - புரிந்திருக்க வேண்டும்.

பாலியலில் தவறான கருத்து உடையவனாக இருந்தால்..

//'மலரினும் மெல்லிது காமம்' என்ற உயரிய பண்பாட்டை நோக்கி மாந்த மனங்களை உயர்த்த நினைப்பதும் அதனை நோக்கி இலக்கியம் படைப்பதும் முடியாதா? தேவையற்றதா?//

என்று எழுதியிருப்பேனா?

எதிர்மறையில் நின்று வினாக்களைத் தொடுத்து, உங்களைப் போல் ஐயப்பட்டவர்களுக்கு நல்ல விளக்கம் கிடைக்கச் செய்தமைக்கு மிக்க நன்றி தமிழ்வாணன்.

மீண்டும் வருக! உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>மரத்தமிழன் கணேசன்,கடாரம்

உங்கள் மறுமொழியை வெளியிடாமைக்கு வருந்துகிறேன். அதில், 'சிண்டுமுடிக்கும்' சூட்சுமம் நிறைந்திருந்தது. ம.நவின் என்பவரை இங்கு ஏன் வீணே வம்புக்கு இழுக்கிறீர்கள்?

உங்களுக்கு மனவுரமிருந்தால் அவரிடம் நேரடியாக அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கலாம்.

Anonymous said...

என்னய்யா இது, தமிழில் பாலியல் வேண்டாம் என்று சொல்கிறீர்கள், அப்படிப் பாலியலைப் பச்சையாக எழுதியிருந்த நவீனின் கவிதையைக் கொடுத்தால் சிண்டு முடிப்பது என்று இப்படி அப்பட்டமாக பேசுகிறீர்கள்.
அப்படியென்றால் யாரோ சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து அதுவும் "பெயரிட்டு" தாக்குவதற்காக ஒரு கூட்டத்தை anounymous என்று பேசி முடிவெடுக்கப்பட்ட திட்டமோ ஐயா உங்களது?

அப்படிப் பார்த்தீர்களென்றால் தமிழ் நவீன எழுத்தாளர்களள (இதுவரை பாலியலை எழுதியவர்கள்), அவர்களின் நட்பு வேண்டும், அதனால் அவர்களளத் தாக்கினால் உங்களுக்கு மன வலிமை இல்லையா ஐயா?

திருத்தமிழின் அவுள்பொடிக்கு கடாரத்தில் உள்ள ஒரு இளம் எழுத்தாளர்தான் பலிகடாவா?

மமனமிக்க தமிழனின் குரலின் பொய்மை. தனிப்பட்ட நபரின் பெயர் சிண்டு முடிப்பது என்றறல் ஆரம்பத்தில் இருந்தே நீங்கள் யாருடைய தனிமனிதர் சாடலையும் அனுமதிருக்கக்கூடாது. ஆனால் நிலைமை அப்படீ இல்லை. உங்களின் தனிப்பட்ட குரோதமும் பழி தீர்க்கும் எண்ணமும் ஈடேறிவிட்டது.

வாழ்த்துகள். என்னைப் பொறுத்தவரையில் தவறு செயதவன் எவனாக இருந்தாலும் நியாயமாக தட்டிக் கேட்க வேண்டும்

கணேசன் கடாரம்

சுப.நற்குணன்,மலேசியா. said...

>கணேசன்,

//யாரோ சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து அதுவும் "பெயரிட்டு" தாக்குவதற்காக ஒரு கூட்டத்தை anounymous என்று பேசி முடிவெடுக்கப்பட்ட திட்டமோ ஐயா உங்களது?//

பதிவு எழுதுவதன்றி யாதொன்றும் அறியேன் பராபரமே!!

திட்டம் போட்டுத் தாக்குவதற்கு எனக்கு எந்த அடிப்படைக் காரணமும் கிடையாது. தமிழ்மரபுக் காப்பைத் தவிர.

//அப்படிப் பார்த்தீர்களென்றால் தமிழ் நவீன எழுத்தாளர்களள (இதுவரை பாலியலை எழுதியவர்கள்), அவர்களின் நட்பு வேண்டும், அதனால் அவர்களைத் தாக்கினால் உங்களுக்கு மன வலிமை இல்லையா ஐயா?//

அடிப்படையே இல்லாக் குற்றச்சாட்டு.

//திருத்தமிழின் அவுள்பொடிக்கு கடாரத்தில் உள்ள ஒரு இளம் எழுத்தாளர்தான் பலிகடாவா?//

இந்த எழுத்துப்போரை முதலில் தொடங்கியது திருத்தமிழ் அல்ல என்பதை நினைவுறுத்துகிறேன். யாருடனும் போர் புரியும் முனைப்பிலும் திருத்தமிழில் பதிவிடவில்லை.

//ஆரம்பத்தில் இருந்தே நீங்கள் யாருடைய தனிமனிதர் சாடலையும் அனுமதிருக்கக்கூடாது. //

அப்படியானால் நீங்கள் எழுதியதும் தனிமனிதர் சாடல்தான் என்று சொல்ல வருகிறீர்கள். அப்படித்தானே?

பின்னூட்டங்களுக்கு மறுமொழியாளர்களே பொறுப்பு.

//உங்களின் தனிப்பட்ட குரோதமும் பழி தீர்க்கும் எண்ணமும் ஈடேறிவிட்டது.//

தனிப்பட்ட குரோதமா?
எனக்கா?
யாருடன்?
எப்படி?
ஏன்?
எவ்வளவு காலமாக?

//என்னைப் பொறுத்தவரையில் தவறு செயதவன் எவனாக இருந்தாலும் நியாயமாக தட்டிக் கேட்க வேண்டும்//

சிறுமைகண்டு பொங்கும் உங்கள் போர்குணம் வாழ்க!

ஐயா.. ஒன்று...
ம.நவினைத் தட்டிக்கேட்க விரும்பும் நீங்கள் மற்றவர்களையும் அப்படியே கேட்க வேண்டும்.

அல்லது...
மற்றவர்கள் படைக்கும் நவினத்திலும் பின்நவினத்திலும் பாலியலிலும் உங்களுக்கும் உடன்பாடு என்றால் ம.நவினோடும் உடன்பட வேண்டும்.

உங்கள் நிலைப்பாடு எதுவோ?

Blog Widget by LinkWithin