Tuesday, February 21, 2012

பிப்பிரவரி 21 - அனைத்துலகத் தாய்மொழி நாள்


பிப்பிரவரி 21-ஆம் நாள் அனைத்துலகத் தாய்மொழி நாள் என யுனெசுகோ நிறுவனம் அறிவித்துள்ளது. 2000ஆம் ஆண்டுத் தொடங்க இந்த நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.  உலகில் உள்ள ஒவ்வொரு மொழியும் அந்த மொழிக்குரியவர்களும் தங்களின் தனித்தன்மையையும் தனி அடையாளத்தையும் பேணிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தத் 'தாய்மொழி நாள்' உருவாக்கப்பட்டது.

அனைத்துலகத் தாய்மொழி நாளாகப் 'பிப்பிரவரி 21'-ஐ தெரிவு செய்ததற்கு ஒரு சிறப்புக் காரணம் இருக்கிறது. 1952-இல் இந்த நாளில் அன்றைய கிழக்குப் பாக்கிசுதான் (இன்றைய வங்காளதேசம்) தலைநகரமாக இருந்த டாக்காவில் மொழிப் போராட்டம் வெடித்தது. வங்காள மொழியை ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும் என்று நடத்தப்பட்ட அந்தப் போராட்டத்தில் உயர்க்கல்வி மாணவர்கள் 4 பேர் சூடுபட்டு இறக்க நேரிட்டத்து. தாய்மொழிக்காக உயிர்நீத்த அந்த மாணவர்களின் நினைவாக இந்த நாள் உலகம் முழுவதும் நினைவுக் கூரப்படுகிறது. 

இந்த அனைத்துலகத் தாய்மொழி  நாளில் தமிழர்களாகிய நாம் நமது தாய்மொழியாம் தமிழ்மொழியை நினைந்துப் போற்றி, நம்முடைய தாய்மொழிக் கடமைகளை நிறைவாகச் செய்ய உறுதிகொள்ள வேண்டும். உலக இனங்கள் எல்லாம் தம்முடைய தாய்மொழியையும் பண்பாட்டு விழுமியங்களையும் மீட்டுக்கொள்ளவும் காத்துக்கொள்ளவும் முனைந்து செயல்படுவதை உணர்ந்துபார்த்து நாமும் அவ்வண்ணமே செயல்பட வேண்ட்டும். 

இல்லையேல், அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு.. அல்லது அடுத்த நூற்றாண்டில் நமது தமிழ்மொழியானது வரலாற்றில் மட்டுமே வாழும் மொழியாக மாறிப்போய்விடலாம்; அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட மொழியாக ஆகிப்போய்விடலாம்.

தமிழ்மொழி ஆளும் மொழியாக இருந்த நூற்றாண்டுகளை  வரலாற்றில்  கண்டிருக்கிறோம்; தமிழ் மக்களிடையே புழங்கும் மொழியாக இருப்பதைக் கண்டிருக்கிறோம்; புலம்பெயர்ந்து பரவிய மொழியாகக் கண்டிருக்கிறோம்;  பன்மொழிகட்கும் சொற்கடன் கொடுத்த மொழியாகக் கண்டிருக்கிறோம்.  இப்படியாகக் கடந்த நூற்றாண்டுகளைக் கடந்து வந்துவிட்ட  தமிழ்மொழி   இனிவரும் காலத்திலும் வாழும் மொழியாக தமிழ் மக்கள் வழக்கில்..  தமிழ் மக்கள் வீட்டில்..  தமிழ் மக்கள் நாவில் வாழ வேண்டடும்.

அதற்குப் பின்வருவனவற்றில் சிலவற்றையேனும் நாம் உடனடியாகச் செய்தாக வேண்டும்:-

1.குழந்தைக்குத் தமிழ்ப் பெயரைச் சூட்டுவோம்.
2.குழந்தைகளுக்குத் தமிழ்க்கல்வி கற்றுக்கொடுப்போம்.
3.குழந்தைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவோம்.
4.இல்லங்களுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டுவோம்.
5.இல்ல நிகழ்ச்சிகளைத் தமிழில் நடத்திக் கொள்வோம்.
6.தமிழரிடம் தமிழில் பேசுவோம்.
7.தமிழ்ப் பண்பாட்டைப் பேணுவோம்.
8.தமிழினம் என்ற இன அடையாளத்தை மீட்டமைப்போம்.
9.தமிழ் இனத்தின் பெயரால் ஒன்றுபட்டு நிற்போம்.
10.நாம் தமிழர் என்று மார்தட்டி முழங்குவோம்.
11.தமிழனுக்குத் தமிழன் கைகொடுத்து உதவிடுவோம்.
12.தமிழிய நெறியில் குடும்பத்தை வழிநடத்துவோம்.
13.தமிழால் பூசித்து இறைமையை வழிபடுவோம்.
14.தமிழ் மொழி, இன, பண்பாட்டு, வரலாற்று அறிவு பெறுவோம்.
15.தமிழே மூச்சு, தமிழே உயிர், தமிழே வாழ்வு என வாழ முற்படுவோம்.
-சுப.நற்குணன்

Blog Widget by LinkWithin