Wednesday, December 29, 2010

திருவள்ளுவராண்டு 2042 தமிழ் நாள்காட்டி

2011 சனவரித் திங்கள் 15ஆம் நாள் தைப்பொங்கல் திருநாள். அன்றுதான் தமிழ்ப் புத்தாண்டும் பிறக்கவுள்ளது. இது திருவள்ளுவராண்டு 2042 ஆகும்.

தமிழையும் தமிழ்ப் புத்தாண்டையும் முன்னிறுத்தி தமிழ் நாள்காட்டி வெளிவந்துள்ளது. அதுவும், மலேசியத் திருநாட்டில் ஐந்தாவது ஆண்டாக இந்தத் தமிழ் நாள்காட்டி வெற்றிகரமாக வெளிவருகின்றது. இந்த நாள்காட்டியைத் தமிழியல் ஆய்வுக் களம் பெருமையோடு வெளியிட்டு வருகின்றது.

2007 தொடங்கி இந்தத் தமிழ் நாள்காட்டி தொடர்ந்து வெளிவந்து தமிழர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. மலேசியத் தமிழறிஞர் இர.திருச்செல்வம் இந்த நாள்காட்டியை வடிவமைப்புச் செய்துள்ளார்.

தமிழ் நாள்காட்டி வரலாற்றில் இதுகாறும் கண்டிராத மாபெரும் முயற்சியாக, இந்த நாள்காட்டி முழுமையாகத் தமிழிலேயே வெளிவந்துள்ளது. தமிழ்க்கூறு நல்லுலகத்திற்குக் கிடைத்திருக்கும் தனித்தமிழ் நாள்காட்டி என இதனைத் துணிந்து குறிப்பிடலாம்.

தமிழ்ப் புத்தாண்டாம் தை முதல் நாளில் தொடங்குகிற இந்த நாள்காட்டியில், ஆங்கில நாள்காட்டியும் உள்ளடங்கி இருக்கிறது. ஆங்கில மாதம், நாள் ஆகியன குறிக்கப்பட்டுள்ளன. அதே வேளையில், தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து நாள், மாதம், திதி, இராசி, நட்சத்திரம் என எல்லாமும் (தனித்)தமிழில் குறிக்கப்பட்டுள்ளன.

எல்லா நாள்காட்டிகளிலும் வழக்கமாக இடம்பெறுகின்ற அனைத்து விவரங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. மலேசியச் சூழலுக்கு ஏற்ற வகையில், பொது விடுமுறைகள், மாநில விடுமுறைகள், பள்ளி விடுமுறைகள், விழா நாள்கள், சிறப்பு நாள்கள் என அனைத்தும் இடம்பெற்றுள்ளன.

தமிழ் நாள்காட்டியின் உள்ளடக்கங்கள்:-
1)தேதியைக் குறிக்கும் எண்கள் தமிழ் எண்களாக உள்ளன. தமிழ் எண்களை அறியாதவர்களுக்கு உதவியாக தமிழ் எண்ணின் நடுப்பகுதியில் ஆங்கில எண்ணும் குறிக்கப்பட்டுள்ளது.

2)திருவள்ளுவர் ஆண்டைப் பின்பற்றி மாதங்கள், கிழமைகள், நாட்கள் என அனைத்தும் தமிழ்ப்பெயர்களோடு அமைந்துள்ளன.

3)கிழமைகள் 7, ஓரைகள் 12 (இராசி), நாள்மீன்கள் 27 (நட்சத்திரம்), பிறைநாள்கள் 15 (திதி) முதலானவை தமிழில் குறிக்கப்பட்டுள்ளன.

4)50க்கும் மேற்பட்ட தமிழ்ச் சான்றோர்கள், அறிஞர்கள், தலைவர்கள் ஆகியோரின் பிறந்த நாள், நினைவு நாள்களோடு தமிழ் அருளாளர்களின் குருபூசை நாட்களும் குறிக்கப்பட்டுள்ளன.

5)மலேசியா, தமிழகம், தமிழீழம் உள்ளிட்ட, 30 தமிழ்ப் பெரியோர்கள் - சான்றோர்கள் - தலைவர்கள் - மாவீரர்கள் உருவப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

6)வரலாற்றில் மறைக்கப்பட்டு; மறக்கப்பட்டுவிட்ட தமிழர்களின் வானியல்(சோதிடக்) கலையை இந்த நாள்காட்டி சுருக்கமாக வெளிப்படுத்திக் காட்டியுள்ளது.

7)குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதற்கான எழுத்து அட்டவணை நாள்காட்டியில் பின்னிணைப்பாக வழங்கப்பட்டுள்ளது. *(கிரந்த எழுத்துகள் அறவே கலவாமல் முழுமையாகத் தமிழ் எழுத்துகளையே கொண்டிருக்கும் பெயர் எழுத்து அட்டவணை இதுவாகும்.)

8)ஐந்திரக் குறிப்பு, நாள்காட்டிப் பயன்படுத்தும் முறை, பிறைநாள்(திதி), ஓரை(இராசி), நாள்மீன்(நட்சத்திரம்) பற்றிய விளக்கங்கள் ஆகியவை இரண்டு பக்கங்களில் நாள்காட்டியின் பின்னிணைப்பாக இடம்பெற்றுள்ளன.

9)ஒவ்வொரு ஓரை(இராசி) பற்றிய படத்தோடு அதற்குரிய வேர்ச்சொல் விளக்கமும் மிகச் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

10)தமிழின வாழ்வியல் மூலவர்களான வள்ளுவர் வள்ளலார் ஆகிய இருவரின் உருவப்படத்தை முகப்பாகத் தாங்கி, முழு வண்ணத்தில் தரமாகவும் தமிழ் உள்ளங்களைக் கவரும் வகையிலும் இந்நாள்காட்டி அமைந்திருக்கிறது.


உள்ளத்தில் தமிழ் உணர்வும் ஊக்கமும் கொண்டு தமிழ்நலத்திற்காக முன்னின்று செயலாற்றும் தமிழ் அன்பர்களும் ஆர்வலர்களும் இந்த நாள்காட்டியை வாங்கி ஆதரவு நல்குவதோடு பரப்பும் முயற்சியிலும் துணைநிற்கலாம். எந்த ஒரு வணிக நோக்கமும் இல்லாமல் முழுக்க முழுக்க தமிழ் வளர்ச்சியை மட்டுமே இலக்காகக் கொண்டு வெளிடப்பட்டுள்ள இந்த நாள்காட்டி ஒவ்வொரு தமிழர் இல்லத்திலும் இருக்க வேண்டும்.

இது நாள்காட்டி மட்டுமல்ல; தமிழ் எண்ணியல், வானியலை மீட்டெடுக்கும் ஆவணம். தமிழர் அனைவரும் தமிழில் பெயர்ச்சூட்டிக்கொள்ள உதவும் குட்டி ஐந்திறம்(பஞ்சாங்கம்). தமிழில் இருந்து காணாமற்போன கிழமை, மாதம், திதி, இராசி, நட்சத்திரப் பெயர்களை மீட்டுக்கொடுக்கும் சுவடி. மொத்தத்தில், தமிழர் தமிழராக தமிழோடு தமிழ்வாழ்வு வாழ வழியமைத்துக் கொடுக்கும் வாழ்க்கைத் துணைநலம்.
  • இந்த நாள்காட்டியை அஞ்சல் வழியாகப் பெற்றுக்கொள்ள முடியும். மொத்தமாக வாங்கி விற்பனை செய்ய விரும்பும் அன்பர்களுக்கும், இந்த நாள்காட்டியை மக்களுக்குப் பரப்ப விரும்பும் அன்பர்களுக்கும் சிறப்புச் சலுகை விலையில் தரப்படும்.
  • தொடர்புக்கு: தமிழியல் ஆய்வுக் களம் - Persatuan Pengajian Kesusasteraan Tamil, No.17, Lorong Merbah 2, Taman Merbah, 14300 Nibong Tebal, SPS, Pulau Pinang. Malaysia.

    கைப்பேசி: ம.தமிழ்ச்செல்வன் (6013-4392016) , சுப.நற்குணன் (6012-5130262)
  • மின்னஞ்சல்: vellumtamil@gmail.com

Tuesday, December 21, 2010

வலைப்பதிவர் கலந்துரையாடல் இனிதே நடந்தது

உத்தமம் அமைப்பின் நிருவாக உறுப்பினரும், மலேசியாவின் முன்னணி இணைய முனைப்பாளருமாகிய சி.ம.இளந்தமிழ் ஏற்பாட்டில் தமிழ் வலைப்பதிவர் கலந்துரையாடல் கடந்த 19.12.2010 ஞாயிறன்று நடைபெற்றது. பெட்டாலிங் ஜெயா, காசிங் சாலையில் இருக்கும் தாமரை உணவகத்தில் இந்நிகழ்ச்சி நடந்தது. 14 பேர் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தமிழ் இணைய முன்னோடியும் தமிழ் இணையம் (Tamilnet) தளத்தின் மேம்பாட்டாளருமாகிய திரு.பாலா பிள்ளை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் என்பது இந்நிகழ்ச்சியின் குறிப்பிடத்தக்க அங்கமாகும்.

பிற்பகல் 2:00 மணி தொடங்கி ஒவ்வொருவராக வந்து சேர்ந்ததும், சுப.நற்குணன் வரவேற்புரையுடன் கலந்துரையாடல் தொடங்கியது. தொடர்ந்து, சி.ம.இளந்தமிழ் உரை ஆற்றினார். இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டதன் நோக்கங்களை விவரித்தார். மலேசிய வலைப்பதிவுகள் இன்னும் எட்ட வேண்டிய எல்லைகள் தொலைவில் இருப்பதாகச் சொன்னார். மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள் முற்போக்காகச் சிந்தித்துச் சமூகத்திற்குப் பங்களிப்புகளைச் செய்வதோடு சிந்தனை மாற்றத்தை கொண்டுவர வேண்டும். அதோடு, வலைப்பதிவர்களிடையே பணிப்பின்னலை ஏற்படுத்தி உயர்ந்த இலக்கை முன்வைத்து செயல்படவேண்டும். ஒரு சமூகமாக; ஓர் இனமாகச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டிய காலக்கட்டத்திற்குத் தமிழ்ச் சமூகம் தள்ளப்பட்டிருக்கிறது. அதற்கு வலைப்பதிவர்கள் தக்கனவற்றைத் தங்கள் எழுத்துகள் வழியாகச் செய்யலாம் என்றார்.

அடுத்து, திரு.பாலா பிள்ளையின் சிறப்புரை இடம்பெற்றது. மலேசியாவில் வலைப்பதிவு எழுதுபவர்களைப் பாராட்டினார். தங்களுக்கு விருப்பமான செய்திகளை எழுதும் வலைப்பதிவர்கள் சமூக அக்கறையோடும் செயல்பட வேண்டும். சமூக மாற்றத்திற்கு வித்திடும் கருத்துகளை முன்வைக்க வேண்டும். தெளிவாகச் சிந்திக்கும் ஒரு சமுதாயத்தைத் தங்கள் எழுத்தின் வழியாக வலைப்பதிவர்கள் உருவாக்க முடியும். எனவே, தற்காலச் சூழலில் தமிழ்ச் சமூகத்திற்குத் தேவையான விடயங்களைத் தகுந்த சான்றோடும் செறிவோடும் எழுதுவதை வலைப்பதிவர்கள் அளவுகோளாகக் கொண்டிருத்தல் நல்லது.

முற்காலத்தில் தமிழ்ச் சமூகத்தில் பல கண்டுபிடிப்புகளும் ஆக்கங்களும் நிகழந்திருப்பதைக் காண்கிறோம். ஆனால், அண்மைய நூற்றாண்டில் பல பின்னடைவுகளைக் கண்டிருக்கிறோம். புதிய ஆக்கங்களும் கண்டுபிடிப்புகளும் இல்லாமை இதற்கு ஒரு காரணம். ஆகவே, புதிய ஆக்கங்கள் தமிழுக்குத் தேவை. அதற்கு, முதலில் கற்பனை வளம் நிறைந்த மக்களை உருவாக்க வேண்டும். மாறுபட்ட கற்பனைகளின் வழியாக புதிய கண்டறிதல்கள் நிகழும். எண்னங்களையும் சிந்தனைகளையும் பூட்டி வைத்துக்கொண்டாலோ பிற்போக்குத்தனமான சிந்தனனகளில் ஊறிக்கிடந்தாலோ புதிய கற்பனைகள் தோன்றா; புதிய ஆக்கங்களும் தோன்றா.

தொடக்கக் காலத்தில், தாம் தமிழ் இணையம் (Tamilnet) தளத்தை உருவாக்கிய காலத்தோடு ஒப்பிடும்போது இன்று தமிழ் இணைய உலகம் வெகுவாக வளர்ந்து இருக்கின்றது. ஒரு தனி அரசு அல்லது தனி நிருவாகம், நிறுவனம் செய்த பணிகளை இன்று இணையத்தில் தனியாட்கள் செய்ய முடிகிறது. விக்கிலீக்சு போன்ற தளங்கள் இதற்கு நல்ல சான்று. சூலியன் அசாஞ்சு போன்ற தனியாட்களால் இன்று உலகத்தின் போக்கையே மாற்றி அமைக்க முடிகிறது. வலைப்பதிவர்களும் இப்படி பெரிதாகச் சிந்தித்துப் பொறுப்புடன் செயல்பட முனைதல் வேண்டும். தமிழ்ச் சமூகம் பயன்படும் வகையில் ஆக்ககரமாக எழுதவேண்டும் என்றாரவர்.

தொடர்ந்து வருகை தந்த வலைப்பதிவர்கள் அனைவரும் தங்களை அறிமுகம் செய்துகொண்டு தங்கள் வலைப்பதிவு பணிகள் குறித்து பேசினர். அதிலிருந்து சில மணிகள் இதோ:-

இல.வாசுதேவன் (விவேகம்): 2004 தொடங்கி வலைப்பதிவு எழுதுகிறேன். பல சிரமங்களுக்கிடையில் இதனைச் செய்ய வேண்டியுள்ளது. சொகூர் மாநிலத்தில் பல முறை இணையக் கருத்தரங்கம், பட்டறை ஆகியன நடத்தி இளையோர்களுக்கு வழிகாட்டி வருகிறேன். தமிழ் ஆசிரியர்கள் நிறைய பேர் வலைப்பதிவு எழுத ஊக்குவித்துள்ளேன்.

துரைசாமி (வாசகர்): மலேசிய தமிழ் வலைப்பதிவுகளை விரும்பி வாசிப்பேன். குறிப்பாக, மலேசியா இன்று, திருத்தமிழ் முதலானவற்றைத் தவறாமல் வாசிப்பேன். வலைப்பதிவு தொடங்கும் எண்ணம் இருக்கிறது.

பவனேஸ்வரி (கணைகள்): 2008 முதல் பதிவெழுதி வருகின்றேன். குறிப்பிட்ட இலக்கு என்று தனியாக எதுவும் இல்லை. சமுதாய சிந்தனைகளைக் கவிதைகளாக எழுதி வருகின்றேன். சில கவிதைகள் பெரும் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கின்றன. பலமுறை வசைமொழிகள் பின்னூட்டங்களாக வந்திருக்கின்றன.

சுப.நற்குணன் (திருத்தமிழ்): 2005இல் வலைப்பதிவு தொடங்கினேன். இல.வாசுதேவன் அவர்களைச் சந்தித்த பின்புதான் வலைப்பதிவு தொடங்க ஆர்வம் உண்டானது. இன்று மலேசியத் தமிழ் வலைப்பதிவுகள் அதிகரித்து இருக்கின்றன. ஆனால், உள்ளடக்கங்களின் தரம் இன்னும் மேம்பட வேண்டும். நமது வலைப்பதிவுகள் மாற்று ஊடகமாக மக்கள் மனங்களில் இடம்பெற வேண்டும் என்பதே என் அவா. மலேசியத் தமிழ் வலைப்பதிவுகள் அனைத்தும் வாசகரைச் சென்று அடைய ‘திருமன்றில்’ எனும் திரட்டி தொடங்கினேன். அதேபோல், ஓலைச்சுவடி பதிவர் நண்பர் சதீசு வலைப்பூங்கா என்ற திரட்டியை வடிவமைத்துள்ளார். இவற்றை நமது பதிவர்களும் வாசகர்களும் பயன்கொள்ள வேண்டும். 2009இல் பாரிட் புந்தாரில் வலைப்பதிவர் சந்திப்பு நடத்தப்பட்டது. தொடர்ந்து தமிழ்க் கணினி, வலைப்பதிவு வளர்ச்சிக்குப் பங்காற்றி வருகிறேன்.

கிருஷ்ணமூர்த்தி (கவித்தமிழ்): ஆங்கிலத்தில் முதல் வலைப்பதிவு தொடங்கினேன். பாரிட் புந்தாரில் நடந்த சந்திப்புக்குப் பிறகு ‘கவித்தமிழ்’ தொடங்கினேன். சமூகத்தில் சிலர்மீது உள்ள கோபத்தை வெளிப்படுத்த பதிவுகள் எழுதுகிறேன். நமது எழுத்துகளை மரபு ஊடகங்களில் முழுமையாக வெளிப்படுத்த முடியவில்லை. நாளிதழ், தாளிகை, வானொலி போன்றவை நமது சிந்தனனகளை வெட்டிக் குத்தி சிதைத்து வெளியிடுகின்றன. ஆகவே, என் சிந்தனைகள் முழுமையாக வெளியிடுவதற்கு வலைப்பதிவு உதவியாக உள்ளது. அந்தவகையில், சமுதாயச் சிந்தனைகளைக் கவிதை மொழியில் தருகிறேன். தமிழில் நிறைய வளங்கள் உள்ளன; உயர்ந்த சிந்தனைகள் உள்ளன; மருத்துவம் உள்ளது; பல அரிய செய்திகள் நமது இலக்கியத்தில் உள்ளன. அவற்றை எளிய முறையில் மக்களுக்கு வழங்க விரும்புகிறேன்.

மனோகரன் (மனோவியம்): மலாயா பல்கலையில் சி.ம.இளந்தமிழ் நடத்திய பட்டறையில் கலந்துகொண்டபின் வலைப்பதிவு எழுத வந்தேன். என் பதிவில் சமூகம், சமயம், வரலாறு சார்ந்த சிந்தனைகளை எழுதிவருகிறேன். திருத்தமிழ் போன்ற வலைப்பதிவில் சூடான விவாதங்களில் நிறைய எழுதியுள்ளேன். அதனால், சிலர் அழிவியை அனுப்பி என் வலைப்பதிவுக்குத் தொல்லைகள் கொடுத்துள்ளனர். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் எழுதி வருகின்றேன்.

சுரேஸ் (தமிழ் மலர்கள்): புதிதாக வலைப்பதிவு எழுதுகிறேன். இப்போதைக்கு எளிமையான சில செய்திகளை மட்டுமே எழுதி வருகிறேன். இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. (இங்கு இடம்பெற்றுள்ள நிழற்படங்கள் அனைத்தும் சுரேஸின் கைவண்ணம்தாம். படங்களை இரவல் கொடுத்த அவருக்கு நன்றி)

யுவராஜன் (s.yuvaraajan.com): அடிப்படையில் நான் ஓர் எழுத்தாளன். பல இடங்களில் எழுதிய படைப்புகளைத் தொகுத்து ஒரே தளத்தில் வெளியிட வேண்டும் என்று வலைப்பதிவு தொடங்கினேன். வல்லினம் காலாண்டிதழில் எழுதிவருகின்றேன். தமிழ் வலைப்பதிவுகள் மாற்று ஊடகமாக வளர வேண்டும். மலேசிய வலைப்பதிவர்கள் இன்னும் ஆக்கமாக எழுத வேண்டும்.

மு.வேலன் (அரங்கேற்றம்): படிக்கும் காலத்திலிருந்தே இணையத்தில் ஆர்வமுண்டு. கல்லூரி படிப்பு முடிந்த பிறகு அறங்கேற்றம் வலைப்பதிவு தொடங்கி எழுதி வருகிறேன். என்னைப் பின்னொற்றி சிலர் வலைப்பதிவு தொடங்கியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களை இணைப்பதற்கு முயற்சி தேவைபடுகிறது. மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள் மடற்குழுமம் ஒன்று உள்ளது. ஆனால், எல்லா பதிவர்களும் அதில் பங்கேற்பதில்லை. இதனால், பதிவர்களிடையே செய்தி பரிமாற்றம் குறைவாக உள்ளது.

அப்பண்ணா (வாழ்க வளமுடன்): இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மகிழ்ச்சி. சதுரங்கம் பற்றி வலைப்பதிவு எழுதி வருகிறேன். மலேசிய வலைப்பதிவுகளைத் விடாமல் படிக்கிறேன்.

இறுதியாக, பொதுவான விடயங்கள் மீது கலந்துரையாடல் தொடர்ந்தது. அதில் பேசப்பட்டவை சில:

1.மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களை இணைக்க முகநூல் தொடங்க வேண்டும்.

2.சமுதாய மறுமலர்ச்சிக் கருத்துகளை அதிகமாக எழுத வேண்டும்.

3.உலக அளவில் எழும் தமிழ் சார்ந்த சிக்கல்களை மலேசியப் பதிவர்கள் கூர்ந்து கவனித்து கருத்துகளைப் பதிவுசெய்ய வேண்டும்.

4.தமிழ் எழுத்துச் சீர்திருத்தம், ஒருங்குறி தமிழ் எழுத்துச் சிக்கல் முதலான விடயங்களில் மலேசியப் பதிவர்களின் பங்கேற்பும் பங்களிப்பும் குறைவாகவே காணப்பட்டது.

5.உத்தமம் அமைப்பில் மலேசியப் பதிவர்கள் உறுப்பியம் பெற வேண்டும்.

6.அடுத்த ஆண்டில் பெரிய அளவில் வலைப்பதிவர் சந்திப்பும் பட்டறையும் நடத்தப்படும்.

மாலை மணி 4:15அளவில் கலந்துரையாடல் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது. நாட்டில் 60க்கும் மேற்பட்ட வலைப்பதிவர்கள் இருக்கின்ற நிலையில், இன்னும் அதிகமானோர் வந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அடுத்தடுத்த முறை இதனை எதிர்பார்க்கலாம்.


Wednesday, December 15, 2010

மலேசியத் தமிழ் வலைப்பதிவர் கலந்துரையாடல்


மலேசிய உத்தமம் அமைப்பின் ஏற்பாட்டில், தமிழ் வலைப்பதிவர் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாள்: 19-12-2010 (ஞாயிறு)
நேரம்: மாலை மணி 2:00 - 4:00
இடம்: தாமரை உணவகம், ஜாலான் காசிங் பெட்டாலிங் ஜெயாவில் (Lotus Restaurant, Jalan Gasing P.J)
உத்தமம் அமைப்பின் நிருவாகக் குழு உறுப்பினரும், மலேசிய நிகராளியும் ஆகிய சி.ம.இளந்தமிழ் இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வழிநடத்துவார்.

தமிழ் இணைய முன்னோடிகளில் ஒருவரான திரு.பாலா பிள்ளை (Tamilnet- Australia)அவர்கள் சிறப்பு வருகையளிக்கவுள்ளார்.
இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் உள்ளடக்கம் பின்வருமாறு:

1.வலைப்பதிவர் அறிமுகம்
2.மலேசியத் தமிழ் வலைப்பதிவு வாழ்வும் வளர்ச்சியும்
3.மலேசியாவில் தமிழ் வலைபதிவர்களை அதிகரிப்பதற்கான வழிவகைகள்
4.மலேசியத் தமிழ் வலைப்பதிவுகளை மாற்று ஊடகமாக வளர்த்தெடுத்தல்
5.மலேசியத் தமிழ் வலைப்பதிவுலகச் சிக்கல்களும் தீர்வுகளும்
6.மலேசியத் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு / பட்டறை
குறுகிய காலத்தில் இந்த ஏற்பாட்டினைச் செய்திருப்பதால், இதனையே அழைப்பாக ஏற்று மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள் வருகை தருமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

இதற்கு முன்னதாக, இவ்வகையிலான சந்திப்பு நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இப்போது மீண்டுமொரு முறை ‘மலேசியத் தமிழ் வலைப்பதிவர் கலந்துரையாடல்’ நடைபெற உள்ளது.

ஆகவே, இதனை நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள் அனைவரும் கலந்துகொள்ளவும்.
வலைப்பதிவர் நண்பர்கள் தயவுசெய்து தங்கள் வருகையை உறுதிபடுத்தும் வகையில் அழைத்து தெரிவிக்கவும் அல்லது குறுஞ்செய்தி விடுக்கவும்.

மேல் விவரங்களுக்கும் தொடர்புக்கும்:
சி.ம.இளந்தமிழ் - உத்தமம் (012-3143910) சுப.நற்குணன் - திருத்தமிழ் (012-5130262) மின்னஞ்சல்: thirutamilblog@gmail.com

Monday, December 13, 2010

திருக்குறள் மீது பதவி உறுதிமொழி: கனடா தமிழ்ப் பெண்மணி


2010ஆம் ஆண்டிற்கான நகரசபைத் தேர்தலில் வரலாறு படைத்த முதற் கனடியத் தமிழ்ப் பெண்மணி செல்வி யுணிற்றா நாதன் ஆவார். மார்க்கம் 7ஆம் ஆம் வட்டாரத்தில் இடம் பெற்ற நகரசபைத் தேர்தலில் பாரிய அளவில் வாக்குகளைப் பெற்று பாடசாலைச் சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட இவர் திசம்பர் ஆம் திகதி தனது பதவியேற்பு உறுதிமொழியை (சத்தியப் பிரமாணம்) எடுத்துக் கொண்டார். வாழ்வியலின் வழிமுறைகளை வளமுடன் கூறும் 1330 குறள்களைக் கொண்ட திருவள்ளுவரின் திருக்குறளின் மீது இவர் உறுதிமொழி எடுத்துக் கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது; உளமாறப் பாராட்டப் படக்கூடியது.

மார்க்கம் கல்விச் சபை உறுப்பினர்கள், பாடசாலைச் சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர், அவர்களது உறவினர்கள் நண்பர்கள் ஆகியோர் இந் நிகழ்வில் பங்கு கொண்டனர். "என்மீது நம்பிக்கை கொண்டு என்னைத் தெரிவு செய்த பெற்றோர், மார்க்கம் வாழ் மக்கள் அனைவருக்கும் நன்றியுடன் இருப்பதுடன் என்மீது நீங்கள் அனைவரும் வைத்துள்ள நம்பிக்கையினை எனது ஆதாரமாகக் கொண்டு என்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு ஒரு சிறந்த கல்விச் சூழலை ஏற்படுத்துவேன். அதுமட்டுமல்லாது எங்கள் சமூகத்தினைச் சேர்ந்த பெற்றோருக்கும் பாடசாலைச் சமுகத்தினருக்கும் ஓர் நல்லுறவினையும் தொடர்பினையும் ஏற்படுத்த நான் ஒரு பாலமாக இருப்பேன்" என தனது உரையில் செல்வி யுணிற்றா நாதன் குறிப்பிட்டார்.

செல்வி யுணிற்றா நாதன் 60% உம் அதிகமான வாக்குகளினால் இத் தேர்தலில் வெல்வதற்குக் காரணமாக இருந்தது எமது சமுகத்தினரிடம் மட்டுமல்லாது, பல்லின சமுகத்தினரிடையேயும் அவருக்கு இருந்த மதிப்பும் அனைவருக்கும் உதவும் சேவை மனப்பான்மையுமே என்றால் மிகையாகாது. "பல்லின சமுகத்தினராலும் யுணிற்றா நாதன் அடையாளம் காணப்படுவதும் தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி பலருக்கும் உதவிக் கரங்களை நீட்டி எந்த நேரத்திலும் உதவும் பாங்குமே இவருடைய வெற்றிக்கு மூலகாரணம்" என மார்க்கம் வாழ் சமூக சேவகியுமான மீனா லகானி குறிப்பிட்டார்.

நான்கு ஆண்டு சேவைக் காலத்தினைக் கொண்ட இப்பதவி நவம்பர் 30, 2014ல் முடிவடையும். இப்பதவிக் காலத்தில் இதற்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் கல்வி சம்பந்தமான மாற்றங்கள், படிமுறைகள், கல்வித் தரம் போன்ற விடயங்களிலும் மற்றும் வெவ்வேறு சமுகத்தவர்களுக்கும் கல்விச் சபைக்கும் ஒரு பாலமாகவும் செயல்படுபவர்கள்.

இந்தத் தருணத்தில் கனடா தமிழ்ப் பெண்மணி செல்வி யுணிற்றா நாதன் அவர்களுக்கு மலேசியத் தமிழர்கள் சார்பில் மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்தையும் 'திருத்தமிழ்' தெரிவித்துக்கொள்கிறது.

  • நன்றி: தமிழ்ச்செய்தி

Wednesday, November 03, 2010

செம்மொழி அகவைத் திருத்தக் கோரிக்கை இந்தியத் தூதரிடம் கையளிப்பு

தமிழ் செம்மொழி அகவை திருத்த ஆய்வுக் குழுவின் கோரிக்கை இன்று (3-11-2010) காலை மணி 11.00 அளவில் இந்தியத் தூதரிடம் வழங்கப்பட்டது. ஆய்வுக் குழுவின் தலைவர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம், ஆய்வுக் குழுவின் துணைத்தலைவர் கவிஞர் பாதாசன், ஒருங்கிணைப்பாளர் டாக்டர் வி.சுப்பையா ஆகியோர் இந்தியத் தூதரைச் சந்தித்து ஆய்வுக்குழுவின் கோரிக்கையை விளக்கிக் கூறினர்.

மலேசியாவுக்கான இந்தியத் தூதர் விஜய் கோகலே, துணைத்தூதர் பி.என். ரெட்டி, கவுன்சிலர் திருமதி பூஜா ஆகியோர் ஆய்வுக் குழுவினர் முன் வைத்து விளக்கிய கோரிக்கையைச் செவி மடுத்தனர்.

தொடர்ந்து இந்தியத் தூதர் விஜய் கோகலே இந்திய அரசின் சார்பான தமது கருத்துகளைக் கூறினார்.

“தமிழ் மொழியின் வயதை ஆயிரம் ஆண்டு என்று இந்திய நடுவண் அரசு கூறவில்லை. இந்திய செம்மொழிகளின் குறைந்தபட்ச தொன்மை 1000 ஆண்டு என்றுதான் இந்திய அரசு கூறியுள்ளது. தமிழில் உள்ள சங்க இலக்கியங்கள் பற்றியும் அதன் தொன்மை பற்றியும் இந்திய அரசுக்குத் தெரியும். இந்திய செம்மொழிகளின் குறைந்த பட்ச தொன்மை ஆயிரம் ஆண்டு என்று கூறி முதன் முறையாகத் தமிழைச் செம்மொழி என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. இதைப் பற்றித் தமிழர்கள் பெருமைப்படுவதோடு மன நிறைவும் அடைய வேண்டும்”, என்றார் தூதுவர்.

தமிழ் 2000 ஆண்டுகளுக்கு முந்திய செம்மொழி என்று யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்திருக்க இந்திய நடுவண் அரசு ஆயிரம் ஆண்டு என்று ஏன் அறிவிக்க வேண்டும் என்று கேட்டதற்கு, “அது இந்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட விஷயம். அதைப் பற்றி இந்தியாவுக்கு வெளியில் இருப்பவர்கள் பேசுவது சரியல்ல”, என்றார்.

தமிழை ஆயிரம் ஆண்டுக்கும் உட்பட்ட செம்மொழி என்று அறிவித்த காரணத்தால் அது இந்திய அரசின் கல்வி அமைச்சின் கீழ் வராமல் பண்பாட்டு அமைச்சின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ் அதன் வளர்ச்சிக்குப் போதுமான அரசு மான்யம் பெற முடியமால் போகலாம் என்று குழுவினர் கருத்து தெரிவித்தனர்.

அப்போது, “எந்த மொழிக்கு எவ்வளவு நிதி ஒதுக்குவது என்பதும் நடுவண் அரசின் அதிகாரத்துக்கு உட்பட்ட விஷயம். அதன் அதிகாரத்தில் மற்றவர்கள் தலையிட முடியாது”, என்று தூதுவர் கூறினார். தொடர்ந்து,

“எங்கள் கோரிக்கையை இந்திய நடுவண் அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் அனுப்பி வையுங்கள். அவர்களின் எதிரொலியை அறிந்த பின்பு நாங்கள் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றிச் சிந்திப்போம்” என்று குழுவினர் கூறினர்.

”இன்று இந்தச் சந்திப்பு குறித்து தமிழக அரசுக்கு நாங்கள் அறிவித்துவிட்டோம். உங்கள் கோரிக்கையை உரியவர்களிடம் கட்டாயம் சேர்ப்பிப்போம்”, என்று தூதுவர் கூறினார்.

பின்னர் செய்தியாளர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தபோது மலேசியத் தமிழ் சார்ந்த அமைப்புகளின் பொறுப்பாளர்களையும் தமிழ் அறிஞர்களையும் கொண்ட புதிய அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு நமது கோரிக்கைகள் மீது இந்திய நடுவண் அரசு, தமிழ்நாடு அரசு ஆகியவற்றின் நிலைப்பாடுகள் ஆராயப்படும் என்றும் அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்குச் செல்வோம் என்று தமிழ் செம்மொழி அகவை திருத்த ஆய்வுக் குழுவின் தலைவர் முனைவர் நாகப்பன் கூறினார்.

தொடர்பான செய்திகள்:-

Blog Widget by LinkWithin