Tuesday, December 21, 2010

வலைப்பதிவர் கலந்துரையாடல் இனிதே நடந்தது

உத்தமம் அமைப்பின் நிருவாக உறுப்பினரும், மலேசியாவின் முன்னணி இணைய முனைப்பாளருமாகிய சி.ம.இளந்தமிழ் ஏற்பாட்டில் தமிழ் வலைப்பதிவர் கலந்துரையாடல் கடந்த 19.12.2010 ஞாயிறன்று நடைபெற்றது. பெட்டாலிங் ஜெயா, காசிங் சாலையில் இருக்கும் தாமரை உணவகத்தில் இந்நிகழ்ச்சி நடந்தது. 14 பேர் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தமிழ் இணைய முன்னோடியும் தமிழ் இணையம் (Tamilnet) தளத்தின் மேம்பாட்டாளருமாகிய திரு.பாலா பிள்ளை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் என்பது இந்நிகழ்ச்சியின் குறிப்பிடத்தக்க அங்கமாகும்.

பிற்பகல் 2:00 மணி தொடங்கி ஒவ்வொருவராக வந்து சேர்ந்ததும், சுப.நற்குணன் வரவேற்புரையுடன் கலந்துரையாடல் தொடங்கியது. தொடர்ந்து, சி.ம.இளந்தமிழ் உரை ஆற்றினார். இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டதன் நோக்கங்களை விவரித்தார். மலேசிய வலைப்பதிவுகள் இன்னும் எட்ட வேண்டிய எல்லைகள் தொலைவில் இருப்பதாகச் சொன்னார். மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள் முற்போக்காகச் சிந்தித்துச் சமூகத்திற்குப் பங்களிப்புகளைச் செய்வதோடு சிந்தனை மாற்றத்தை கொண்டுவர வேண்டும். அதோடு, வலைப்பதிவர்களிடையே பணிப்பின்னலை ஏற்படுத்தி உயர்ந்த இலக்கை முன்வைத்து செயல்படவேண்டும். ஒரு சமூகமாக; ஓர் இனமாகச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டிய காலக்கட்டத்திற்குத் தமிழ்ச் சமூகம் தள்ளப்பட்டிருக்கிறது. அதற்கு வலைப்பதிவர்கள் தக்கனவற்றைத் தங்கள் எழுத்துகள் வழியாகச் செய்யலாம் என்றார்.

அடுத்து, திரு.பாலா பிள்ளையின் சிறப்புரை இடம்பெற்றது. மலேசியாவில் வலைப்பதிவு எழுதுபவர்களைப் பாராட்டினார். தங்களுக்கு விருப்பமான செய்திகளை எழுதும் வலைப்பதிவர்கள் சமூக அக்கறையோடும் செயல்பட வேண்டும். சமூக மாற்றத்திற்கு வித்திடும் கருத்துகளை முன்வைக்க வேண்டும். தெளிவாகச் சிந்திக்கும் ஒரு சமுதாயத்தைத் தங்கள் எழுத்தின் வழியாக வலைப்பதிவர்கள் உருவாக்க முடியும். எனவே, தற்காலச் சூழலில் தமிழ்ச் சமூகத்திற்குத் தேவையான விடயங்களைத் தகுந்த சான்றோடும் செறிவோடும் எழுதுவதை வலைப்பதிவர்கள் அளவுகோளாகக் கொண்டிருத்தல் நல்லது.

முற்காலத்தில் தமிழ்ச் சமூகத்தில் பல கண்டுபிடிப்புகளும் ஆக்கங்களும் நிகழந்திருப்பதைக் காண்கிறோம். ஆனால், அண்மைய நூற்றாண்டில் பல பின்னடைவுகளைக் கண்டிருக்கிறோம். புதிய ஆக்கங்களும் கண்டுபிடிப்புகளும் இல்லாமை இதற்கு ஒரு காரணம். ஆகவே, புதிய ஆக்கங்கள் தமிழுக்குத் தேவை. அதற்கு, முதலில் கற்பனை வளம் நிறைந்த மக்களை உருவாக்க வேண்டும். மாறுபட்ட கற்பனைகளின் வழியாக புதிய கண்டறிதல்கள் நிகழும். எண்னங்களையும் சிந்தனைகளையும் பூட்டி வைத்துக்கொண்டாலோ பிற்போக்குத்தனமான சிந்தனனகளில் ஊறிக்கிடந்தாலோ புதிய கற்பனைகள் தோன்றா; புதிய ஆக்கங்களும் தோன்றா.

தொடக்கக் காலத்தில், தாம் தமிழ் இணையம் (Tamilnet) தளத்தை உருவாக்கிய காலத்தோடு ஒப்பிடும்போது இன்று தமிழ் இணைய உலகம் வெகுவாக வளர்ந்து இருக்கின்றது. ஒரு தனி அரசு அல்லது தனி நிருவாகம், நிறுவனம் செய்த பணிகளை இன்று இணையத்தில் தனியாட்கள் செய்ய முடிகிறது. விக்கிலீக்சு போன்ற தளங்கள் இதற்கு நல்ல சான்று. சூலியன் அசாஞ்சு போன்ற தனியாட்களால் இன்று உலகத்தின் போக்கையே மாற்றி அமைக்க முடிகிறது. வலைப்பதிவர்களும் இப்படி பெரிதாகச் சிந்தித்துப் பொறுப்புடன் செயல்பட முனைதல் வேண்டும். தமிழ்ச் சமூகம் பயன்படும் வகையில் ஆக்ககரமாக எழுதவேண்டும் என்றாரவர்.

தொடர்ந்து வருகை தந்த வலைப்பதிவர்கள் அனைவரும் தங்களை அறிமுகம் செய்துகொண்டு தங்கள் வலைப்பதிவு பணிகள் குறித்து பேசினர். அதிலிருந்து சில மணிகள் இதோ:-

இல.வாசுதேவன் (விவேகம்): 2004 தொடங்கி வலைப்பதிவு எழுதுகிறேன். பல சிரமங்களுக்கிடையில் இதனைச் செய்ய வேண்டியுள்ளது. சொகூர் மாநிலத்தில் பல முறை இணையக் கருத்தரங்கம், பட்டறை ஆகியன நடத்தி இளையோர்களுக்கு வழிகாட்டி வருகிறேன். தமிழ் ஆசிரியர்கள் நிறைய பேர் வலைப்பதிவு எழுத ஊக்குவித்துள்ளேன்.

துரைசாமி (வாசகர்): மலேசிய தமிழ் வலைப்பதிவுகளை விரும்பி வாசிப்பேன். குறிப்பாக, மலேசியா இன்று, திருத்தமிழ் முதலானவற்றைத் தவறாமல் வாசிப்பேன். வலைப்பதிவு தொடங்கும் எண்ணம் இருக்கிறது.

பவனேஸ்வரி (கணைகள்): 2008 முதல் பதிவெழுதி வருகின்றேன். குறிப்பிட்ட இலக்கு என்று தனியாக எதுவும் இல்லை. சமுதாய சிந்தனைகளைக் கவிதைகளாக எழுதி வருகின்றேன். சில கவிதைகள் பெரும் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கின்றன. பலமுறை வசைமொழிகள் பின்னூட்டங்களாக வந்திருக்கின்றன.

சுப.நற்குணன் (திருத்தமிழ்): 2005இல் வலைப்பதிவு தொடங்கினேன். இல.வாசுதேவன் அவர்களைச் சந்தித்த பின்புதான் வலைப்பதிவு தொடங்க ஆர்வம் உண்டானது. இன்று மலேசியத் தமிழ் வலைப்பதிவுகள் அதிகரித்து இருக்கின்றன. ஆனால், உள்ளடக்கங்களின் தரம் இன்னும் மேம்பட வேண்டும். நமது வலைப்பதிவுகள் மாற்று ஊடகமாக மக்கள் மனங்களில் இடம்பெற வேண்டும் என்பதே என் அவா. மலேசியத் தமிழ் வலைப்பதிவுகள் அனைத்தும் வாசகரைச் சென்று அடைய ‘திருமன்றில்’ எனும் திரட்டி தொடங்கினேன். அதேபோல், ஓலைச்சுவடி பதிவர் நண்பர் சதீசு வலைப்பூங்கா என்ற திரட்டியை வடிவமைத்துள்ளார். இவற்றை நமது பதிவர்களும் வாசகர்களும் பயன்கொள்ள வேண்டும். 2009இல் பாரிட் புந்தாரில் வலைப்பதிவர் சந்திப்பு நடத்தப்பட்டது. தொடர்ந்து தமிழ்க் கணினி, வலைப்பதிவு வளர்ச்சிக்குப் பங்காற்றி வருகிறேன்.

கிருஷ்ணமூர்த்தி (கவித்தமிழ்): ஆங்கிலத்தில் முதல் வலைப்பதிவு தொடங்கினேன். பாரிட் புந்தாரில் நடந்த சந்திப்புக்குப் பிறகு ‘கவித்தமிழ்’ தொடங்கினேன். சமூகத்தில் சிலர்மீது உள்ள கோபத்தை வெளிப்படுத்த பதிவுகள் எழுதுகிறேன். நமது எழுத்துகளை மரபு ஊடகங்களில் முழுமையாக வெளிப்படுத்த முடியவில்லை. நாளிதழ், தாளிகை, வானொலி போன்றவை நமது சிந்தனனகளை வெட்டிக் குத்தி சிதைத்து வெளியிடுகின்றன. ஆகவே, என் சிந்தனைகள் முழுமையாக வெளியிடுவதற்கு வலைப்பதிவு உதவியாக உள்ளது. அந்தவகையில், சமுதாயச் சிந்தனைகளைக் கவிதை மொழியில் தருகிறேன். தமிழில் நிறைய வளங்கள் உள்ளன; உயர்ந்த சிந்தனைகள் உள்ளன; மருத்துவம் உள்ளது; பல அரிய செய்திகள் நமது இலக்கியத்தில் உள்ளன. அவற்றை எளிய முறையில் மக்களுக்கு வழங்க விரும்புகிறேன்.

மனோகரன் (மனோவியம்): மலாயா பல்கலையில் சி.ம.இளந்தமிழ் நடத்திய பட்டறையில் கலந்துகொண்டபின் வலைப்பதிவு எழுத வந்தேன். என் பதிவில் சமூகம், சமயம், வரலாறு சார்ந்த சிந்தனைகளை எழுதிவருகிறேன். திருத்தமிழ் போன்ற வலைப்பதிவில் சூடான விவாதங்களில் நிறைய எழுதியுள்ளேன். அதனால், சிலர் அழிவியை அனுப்பி என் வலைப்பதிவுக்குத் தொல்லைகள் கொடுத்துள்ளனர். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் எழுதி வருகின்றேன்.

சுரேஸ் (தமிழ் மலர்கள்): புதிதாக வலைப்பதிவு எழுதுகிறேன். இப்போதைக்கு எளிமையான சில செய்திகளை மட்டுமே எழுதி வருகிறேன். இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. (இங்கு இடம்பெற்றுள்ள நிழற்படங்கள் அனைத்தும் சுரேஸின் கைவண்ணம்தாம். படங்களை இரவல் கொடுத்த அவருக்கு நன்றி)

யுவராஜன் (s.yuvaraajan.com): அடிப்படையில் நான் ஓர் எழுத்தாளன். பல இடங்களில் எழுதிய படைப்புகளைத் தொகுத்து ஒரே தளத்தில் வெளியிட வேண்டும் என்று வலைப்பதிவு தொடங்கினேன். வல்லினம் காலாண்டிதழில் எழுதிவருகின்றேன். தமிழ் வலைப்பதிவுகள் மாற்று ஊடகமாக வளர வேண்டும். மலேசிய வலைப்பதிவர்கள் இன்னும் ஆக்கமாக எழுத வேண்டும்.

மு.வேலன் (அரங்கேற்றம்): படிக்கும் காலத்திலிருந்தே இணையத்தில் ஆர்வமுண்டு. கல்லூரி படிப்பு முடிந்த பிறகு அறங்கேற்றம் வலைப்பதிவு தொடங்கி எழுதி வருகிறேன். என்னைப் பின்னொற்றி சிலர் வலைப்பதிவு தொடங்கியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களை இணைப்பதற்கு முயற்சி தேவைபடுகிறது. மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள் மடற்குழுமம் ஒன்று உள்ளது. ஆனால், எல்லா பதிவர்களும் அதில் பங்கேற்பதில்லை. இதனால், பதிவர்களிடையே செய்தி பரிமாற்றம் குறைவாக உள்ளது.

அப்பண்ணா (வாழ்க வளமுடன்): இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மகிழ்ச்சி. சதுரங்கம் பற்றி வலைப்பதிவு எழுதி வருகிறேன். மலேசிய வலைப்பதிவுகளைத் விடாமல் படிக்கிறேன்.

இறுதியாக, பொதுவான விடயங்கள் மீது கலந்துரையாடல் தொடர்ந்தது. அதில் பேசப்பட்டவை சில:

1.மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களை இணைக்க முகநூல் தொடங்க வேண்டும்.

2.சமுதாய மறுமலர்ச்சிக் கருத்துகளை அதிகமாக எழுத வேண்டும்.

3.உலக அளவில் எழும் தமிழ் சார்ந்த சிக்கல்களை மலேசியப் பதிவர்கள் கூர்ந்து கவனித்து கருத்துகளைப் பதிவுசெய்ய வேண்டும்.

4.தமிழ் எழுத்துச் சீர்திருத்தம், ஒருங்குறி தமிழ் எழுத்துச் சிக்கல் முதலான விடயங்களில் மலேசியப் பதிவர்களின் பங்கேற்பும் பங்களிப்பும் குறைவாகவே காணப்பட்டது.

5.உத்தமம் அமைப்பில் மலேசியப் பதிவர்கள் உறுப்பியம் பெற வேண்டும்.

6.அடுத்த ஆண்டில் பெரிய அளவில் வலைப்பதிவர் சந்திப்பும் பட்டறையும் நடத்தப்படும்.

மாலை மணி 4:15அளவில் கலந்துரையாடல் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது. நாட்டில் 60க்கும் மேற்பட்ட வலைப்பதிவர்கள் இருக்கின்ற நிலையில், இன்னும் அதிகமானோர் வந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அடுத்தடுத்த முறை இதனை எதிர்பார்க்கலாம்.


6 comments:

Vasudevan Letchumanan வாசுதேவன் இலட்சுமணன் said...

முதன் முறையாக இத்தகையக் கூட்டத்தில் கலந்து கொண்டது புதிய அனுபவம். இனிய நண்பர், திரு.சுப நற்குணன், அண்ணன், திரு.சி.மா.இளந்தமிழ் அகிய இருவர் மட்டுமே தெரிந்தவர்கள். மற்றவர்கள் அனைவருமே புதியவர்கள். தமிழ்.நெட் முன்னோடி திரு.பாலா பிள்ளையை இணையம் வழி மிகப் பிரபலமானவர்.மலேசிய இளம் எழுத்தாளர்களில் அதிலும் இணையத்தில் கவனிக்கத்தக்க படைப்பாளர்களில் ஒருவர், திரு.யுவராஜன். அவரது நன்பார் திரு.வேலன் அவர்களை எங்கோ எப்போதோ பார்த்த ஞாபகம். மற்றவர்கள் அனைவருமே எனக்குப் புதியவர்கள்தான். இது போன்ற கலந்துரையாடல் மேலும் தொடரப்பட வேண்டும்.

மு.வேலன் said...

சுமார் இரண்டு மணி நேரம் இனிதே நடந்த கலந்துரையாடலை இவ்வளவு தெளிவாக தொகுத்து தந்தமைக்கு நன்றி. அருமை.

மனோவியம் said...

வணக்கம் வாழ்க வளமுடன்! பதிவாளர்களின் சங்கமத்தை அழகுத் தமிழில் அருமையான வார்த்தைகளில் எடுத்து இயம்பியத்தில் மிக்க மகிழ்ச்சி.
வலைப்பதிவாளர்கள் என்பது ஒரு மாபெரும் சக்தி. அச்சக்தியை ஒன்று திரட்டுவத்ற்கு மிக்க நன்றி ஐயா.

கோவி.மதிவரன் said...

முதலாவது வலைப்பதிவர் சந்திப்பில் கலந்துக் கொண்ட எனக்கு இச்சந்திப்பில் கலந்துக் கொள்ள இயலவில்லை. இருப்பினும் நிகழ்வினைச் சிறப்பாக ஏற்பாடு செய்த அண்ணன் சி.ம அவர்களுக்குப் பாராட்டுகள்.

Murugeswari Rajavel said...

பதிவர் கலந்துரையாடல் வாசித்து மகிழ்ந்தோம்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன்!!

Inbachudar.Muthuchandran said...

nandri mindum ithu pondra negalchi seiya vendum

Blog Widget by LinkWithin