Monday, December 13, 2010

திருக்குறள் மீது பதவி உறுதிமொழி: கனடா தமிழ்ப் பெண்மணி


2010ஆம் ஆண்டிற்கான நகரசபைத் தேர்தலில் வரலாறு படைத்த முதற் கனடியத் தமிழ்ப் பெண்மணி செல்வி யுணிற்றா நாதன் ஆவார். மார்க்கம் 7ஆம் ஆம் வட்டாரத்தில் இடம் பெற்ற நகரசபைத் தேர்தலில் பாரிய அளவில் வாக்குகளைப் பெற்று பாடசாலைச் சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட இவர் திசம்பர் ஆம் திகதி தனது பதவியேற்பு உறுதிமொழியை (சத்தியப் பிரமாணம்) எடுத்துக் கொண்டார். வாழ்வியலின் வழிமுறைகளை வளமுடன் கூறும் 1330 குறள்களைக் கொண்ட திருவள்ளுவரின் திருக்குறளின் மீது இவர் உறுதிமொழி எடுத்துக் கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது; உளமாறப் பாராட்டப் படக்கூடியது.

மார்க்கம் கல்விச் சபை உறுப்பினர்கள், பாடசாலைச் சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர், அவர்களது உறவினர்கள் நண்பர்கள் ஆகியோர் இந் நிகழ்வில் பங்கு கொண்டனர். "என்மீது நம்பிக்கை கொண்டு என்னைத் தெரிவு செய்த பெற்றோர், மார்க்கம் வாழ் மக்கள் அனைவருக்கும் நன்றியுடன் இருப்பதுடன் என்மீது நீங்கள் அனைவரும் வைத்துள்ள நம்பிக்கையினை எனது ஆதாரமாகக் கொண்டு என்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு ஒரு சிறந்த கல்விச் சூழலை ஏற்படுத்துவேன். அதுமட்டுமல்லாது எங்கள் சமூகத்தினைச் சேர்ந்த பெற்றோருக்கும் பாடசாலைச் சமுகத்தினருக்கும் ஓர் நல்லுறவினையும் தொடர்பினையும் ஏற்படுத்த நான் ஒரு பாலமாக இருப்பேன்" என தனது உரையில் செல்வி யுணிற்றா நாதன் குறிப்பிட்டார்.

செல்வி யுணிற்றா நாதன் 60% உம் அதிகமான வாக்குகளினால் இத் தேர்தலில் வெல்வதற்குக் காரணமாக இருந்தது எமது சமுகத்தினரிடம் மட்டுமல்லாது, பல்லின சமுகத்தினரிடையேயும் அவருக்கு இருந்த மதிப்பும் அனைவருக்கும் உதவும் சேவை மனப்பான்மையுமே என்றால் மிகையாகாது. "பல்லின சமுகத்தினராலும் யுணிற்றா நாதன் அடையாளம் காணப்படுவதும் தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி பலருக்கும் உதவிக் கரங்களை நீட்டி எந்த நேரத்திலும் உதவும் பாங்குமே இவருடைய வெற்றிக்கு மூலகாரணம்" என மார்க்கம் வாழ் சமூக சேவகியுமான மீனா லகானி குறிப்பிட்டார்.

நான்கு ஆண்டு சேவைக் காலத்தினைக் கொண்ட இப்பதவி நவம்பர் 30, 2014ல் முடிவடையும். இப்பதவிக் காலத்தில் இதற்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் கல்வி சம்பந்தமான மாற்றங்கள், படிமுறைகள், கல்வித் தரம் போன்ற விடயங்களிலும் மற்றும் வெவ்வேறு சமுகத்தவர்களுக்கும் கல்விச் சபைக்கும் ஒரு பாலமாகவும் செயல்படுபவர்கள்.

இந்தத் தருணத்தில் கனடா தமிழ்ப் பெண்மணி செல்வி யுணிற்றா நாதன் அவர்களுக்கு மலேசியத் தமிழர்கள் சார்பில் மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்தையும் 'திருத்தமிழ்' தெரிவித்துக்கொள்கிறது.

  • நன்றி: தமிழ்ச்செய்தி

4 comments:

subra said...

இந்த பெருமைக்குரிய விடயத்தில் நாங்களும்
பங்கு கொள்கிறோம் ,அந்த தாய்க்கு எங்களின்
அன்பான வாழ்த்துக்கள் .

Inbachudar.Muthuchandran said...

you are very great lady.we malaysia thamizhians are proud of you.

Inbachudar.Muthuchandran said...

கனடாவில் இருந்தாலும் தாய் தமிழை மறக்காதா மாபெரும் பெண்மணி. வாழ்க அவர்தம் தமிழ்ப்பற்று.

anban ponmuthu said...

வணக்கம். தமிழில் உறுதி மொழி எடுப்பதுவும் ,
வங்கிகளில் தமிழ் பயன்பாடும், தமிழர்கள் பங்களிப்பு
இருக்கின்ற பகுதிகளின் நகராண்மை கழகங்களில்
தமிழ்ச் சேவையும் நூல் நிலையங்களில் தமிழ் நூல்களும்
சீரிய அளவில் மேற்கத்திய நாடுகளில் நிரம்பிக்கிடக்கின்றன.
தட்டுங்கள் திறக்கப்படும் , கேளுங்கள் தரப்படும் என்பது
கூட்டை விட்டு பறந்தவர்களுக்கு மட்டும் தானா ?

பொன்முத்து

Blog Widget by LinkWithin