Wednesday, May 30, 2012

ஈப்போவில் தமிழ்க்கல்வி ஆராய்ச்சி மாநாடு


பேரா மாநிலத்தில் உள்ள சுல்தான் இதுரீசு கல்வியியல் பல்கலைகழகத்தின் ஏற்பாட்டில், மலேசியாவில் முதன் முறையாக ‘தமிழ்க்கல்வி ஆராய்ச்சி மாநாடு’ ஈப்போவில் இன்று 30.5.2012ஆம் தொடங்கியது. 30 - 31 மே 2012 ஆகிய இரண்டு நாட்களுக்கு இந்த மாநாடு நடைபெறுகின்றது.

மலேசியா மட்டுமின்றி இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து ஏறக்குறைய 200 பேராளர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர். தமிழ்க்கல்வி, தமிழ்மொழி கற்றல் கற்பித்தல் தொடர்பாக ஏறக்குறைய 32 ஆய்வுக் கட்டுரைகள் இந்த மாநாட்டில் படைக்கப்படுகின்றன.

மலேசியாவில் தமிழ்க்கல்வியை முன்படுத்தி முதன் முறையாக நடைபெறுகின்ற இந்த மாநாட்டில் ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், பேராசியர்கள் ஆகியோர் திரளாக வந்து கலந்துகொண்டுள்ளது மகிழ்ச்சியளிக்கும் வளர்ச்சியாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, தமிழ் ஆசிரியர்களிடையே நல்லதொரு சிந்தனை மாற்றம் ஏற்பட்டு வருவதை இதன்வழி அறியமுடிகிறது.

முனைவர் சாமிக்கண்ணு ஜபமணி
ஆசிரியர்கள், மாணவர்களின் கற்றல் சிக்கலைக் களையவும், தங்கள் பணித்திறனை மேம்படுத்திக்கொள்ளவும் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்னும் நோக்கத்தை முன்வைத்து இந்த மாநாடு நடைபெறுவதாக இதன் ஏற்பாட்டுக்குழுச் செயலாளர் முனைவர் சாமிக்கண்ணு ஜபமணி தெரிவித்தார்.

தொடக்க நாளான இன்று முதலாவதாக முனைவர் என்.எஸ்.இராஜேந்திரன் ‘கற்றல் கற்பித்தலில் புத்தாக்கம்’ என்ற தலைப்பில் சிறப்புக் கட்டுரை படைத்தார். அவரைத் தொடர்ந்து உப்சி (UPSI) பல்கலைக்கழக விரிவுரைஞர் முனைவர் சாமிக்கண்ணு ஜபமணி ‘ஒவ்வோர் ஆசிரியரும் ஓர் ஆய்வாளர்’ என்ற தலைப்பில் கட்டுரை வாசித்தளித்தார்.

இன்றைய நாளில் மட்டும் மூன்று அரங்குகளில் மொத்தம் 15 ஆய்வுக் கட்டுரைகள் படைக்கப்பட்டன. மாநாட்டில் படைக்கப்படும் கட்டுரைகள் அனைத்து நூல்வடிவில் ஆய்வடங்கலாக அனைத்துப் பேராளர்களும் வழங்கப்பட்டுள்ளது.






தமிழ்நாடு, சிங்கப்பூர் பேராளர்கள் படைத்த கட்டுரைகள் பலருடைய கவனத்தை ஈர்க்கும் வண்ணமாக அமைந்த தருணத்தில், மலேசியக் கல்வியாளர்களின் கட்டுரைகளும் கற்றல் கற்பித்தல் தொடர்பான பல்வேறு கூறுகளை அலசி ஆராயும் வகையில் அமைந்திருந்தன.

நமது நாட்டுச் சூழலில் தமிழ்க் கல்வியாளர்கள் தமிழ்க்கல்வி வளர்ச்சி, தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலில் புத்தாக்கம் ஆகியவை பற்றியெல்லாம் ஆய்வுகளை நடத்தி சிறப்பாகப் படைத்தளிக்க முடியும் என்பதை இந்த மாநாடு உறுதிபடுத்தியுள்ளது என்றால் மிகையன்று.

கல்வியியல் துறையில் சிகரங்களைத் தொடுவதற்கு நமது ஆசிரியர்கள் தங்கள் கரங்களை நீட்டி மேலெறிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்த மாநாட்டில் நேரடியாகக் காண முடிந்தது.

இந்த மாநாட்டில் கட்டுரை படைத்த மலேசியக் கல்வியாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ‘திருத்தமிழ்’ மனமார்ந்த பாராட்டையும் நல்வாழ்த்தையும் பதிவுசெய்வதில் மகிழ்ச்சி கொள்கிறது.

விரிவுரைஞர் மன்னர் மன்னன்
திரு.வேல்முருகன் - சிங்கை
திருமதி தனலெட்சுமி
விரிவுரைஞர் திரு.மோகன் குமார்
ஆசிரியர் திரு.வாசுதேவன் இலெட்சுமணன்
 
@சுப.நற்குணன், திருத்தமிழ்
 

Monday, May 28, 2012

உலகத்தின் முதல் மொழி எதுவாக இருக்கும்?


பிலேடியன்  (Pleaidians) என்னும் அயல்கிரக வாசிகள் உலகத்தோடு பல காலமாக தொடர்பில் உள்ளனர் என்று அமெரிக்கர்கள் சிலர் நம்புகின்றனர். இவர்கள் நேரடியாக இந்தப் பிலேடியன் என்னும் வேற்றுலக வாசிகளோடு தொடர்பில் உள்ளவர்கள் என்று அறிவித்துள்ளனர். 

உலகில் உள்ள பல விஞ்ஞான முன்னேற்றங்களுக்கு இந்த அயல் கிரக வாசிகள் தான் காரணம் என்று இந்தக் குழு நம்புகின்றது. மொழி, வரலாறு ஆகியவற்றை உலகிற்கு அறியப்படுத்தியது இந்த பிலேடியன்கள் தான் என்று உறுதியாகக் கூறுகின்றனர் இந்த அமெரிக்கர்கள். 

மேலும் உலகில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களுக்கும் இந்த அயல் கிரக வாசிகள் தான் காரணம் என்று சொல்கின்றனர். உலகில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வும் இந்தப் பிலேடியன்கள் சொல்கிறார்கள் என்று இந்த அமெரிக்கக் குழு சொல்கிறது. இந்த குழுவில் உள்ளவர்கள் நூல்கள் படிப்தில்லை. ஆனால் பிலேடியன்கள் உதவியுடன் பல தகவல்கள் அறியத் தந்துள்ளனர். பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வு வழங்கி உள்ளனர். இவர்கள் அயல்கிரக வாசிகளோடு தொடர்பு கொண்டு ஏராளமான தகவல்களை உலகிற்குச் சொல்லி வருகின்றனர்.

அந்த வகையில் 1995 ஆம் ஆண்டு இந்த ப்லேடியன்களோடு தொடர்பு உள்ள பேராசிரியர் அலெக்சு காலியர் தனது குழுவிற்கு பாடம் நடத்துகையில் திடீரென்று உலகின் மொழிகளைப் பற்றி பாடம் நடத்துகிறார். அப்போது அவர் உலகின் முதலில் பேசப்பட்ட மொழி தமிழ் மொழி தான் எனக் கூறியுள்ளார். பின்பு தான் பிலேடியன்கள் உதவியுடன் பல மொழிகள் பல்வேறு நாடுகளுக்குப் பரப்பட்டது என்று பிலேடியன்கள் சொல்வதாக இவர் சொல்கிறார். நிகழ்ப்பட  இணைப்பைப் பாருங்கள்.



தமிழே இந்தியாவின் மூத்த மொழி என்பதோடு மட்டுமல்லாமல், உலக மொழிகளுக்கே தாய்மொழி என்ற அளவுக்குத் தகுதிபடைத்திருக்கிறது என்பது பல அறிஞர் பெருமக்களின் நடுநிலையான முடிவாகும்.

“உலக மொழிகளில் மூத்த முதல்மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும்” என்று ஆகக் கடைசியாக மொழியியல் அறிஞர் நோவாம் சோம்சுகி (Noam Chomsky) அறிவித்துள்ளார்.  

நோவாம் சோம்சுகியின் கருத்தை அவருக்கு முன்னாலேயே மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் உறுதிபட நிறுவியுள்ளார். அவருடைய அயராத மொழியியல் ஆய்வின் பயனாக அவர் கண்டுசொன்ன அரிய உண்மைகள் பற்பல. அவற்றில் ஒன்றுதான் தமிழே உலகின் மூத்தமொழி என்பது.

இதனை நிறுவும் வகையில் அவர் கொடுத்திருக்கும் ஆய்வின் அடிப்படையிலான சில ஆதாரங்களின் பட்டியலை இதோ:-
1.மாந்தன் பிறந்தகமாகிய குமரிக்கண்டத்தில் தமிழ் தோன்றி இருத்தல்.

2.இப்போது இருக்கும் மொழிகளுள் தமிழ் மிகப் பழைமையானதாக இருத்தல்.

3.தமிழ் எளிய ஒலிகளைக் கொண்டிருத்தல்.

4.தமிழில் சிறப்புப் பொருள்தரும் சொற்கள் பிறமொழிகளில் பொதுப்பொருள் தருதல் [எ.கா: செப்பு(தெலுங்கு), தா(இலத்தின்)]
5.தமிழ் இயற்கையான சொல்வளர்ச்சி கொண்டதாக இருத்தல். (செயற்கையான சொல்வளர்ச்சி இல்லை)

6.ஆரிய சேமியமொழிச் சொற்கள் பலவற்றின் வேரைத் தமிழ் தன்னகத்தே கொண்டிருத்தல்.

7.பல மொழிகளின் மூவிடப் பதிற்பெயர்கள் தமிழ்ப் பெயர்களைப் பெரிதும் சிறுதும் ஒத்திருத்தல்.

8.தாய் தந்தையரைக் குறிக்கும் தமிழ் முறைப்பெயர்கள், ஏறத்தாழ எல்லா மொழிகளிலும் திரிந்தும் திரியாதும் வழங்கி வருதல்.

9.தமிழ்ச்சொற்கள் வழங்காப் பெருமொழி உலகத்தில் இல்லாமை.

10.ஒரு தனிமொழிக்குரிய தோற்ற வளர்ச்சி முறைகளைத் தமிழே தெரிவித்தல்.

11.சில பல இலக்கண நெறிமுறைகள் தமிழுக்கும் பிற மொழிகளுக்கும் பொதுவாக இருத்தல்.

12.பல மொழிகள் தமிழிலுள்ள ஒருபொருட் பலசொற்களுள் ஒவ்வொன்றைத் தெரிந்துகொண்டிருத்தல். [எ.கா: இல்(தெலுங்கு)), மனை(கன்னடம்), அகம்(கிரேக்கம்), குடி(பின்னியம்)]13.பிறமொழிகளுக்குச் சிறப்பாகக் கூறப்படும் இயல்களில் மூல நிலைகள் தமிழில் இருத்தல். [எ.கா: ஆரிய மொழிகளின் அசை அழுத்தமும் சிந்திய மொழிகளின் உயிரிசைவு மாற்றமும் அமெரிக்க மொழிகளின் பல்தொகை நிலையும் போன்றன]

இப்படியான, பல்வேறு உறுதியான காரனங்களின் அடிப்படையில் இந்தியா மட்டுமல்ல.. உலகத்திற்கே மூத்தமொழி.. முதல்மொழி தமிழாகத்தான் இருக்க முடியும் என்பது  அறிஞர்களின் தெளிவும் முடிபும் ஆகும்.  

@சுப.நற்குணன், திருத்தமிழ்

Thursday, May 24, 2012

UPSI:- தமிழ்க்கல்வி ஆராய்ச்சி மாநாடு


பேரா, தஞ்சோங் மாலிம் சுல்தான் இட்ரிசு கல்வியியல் பல்கலைகழக மொழி தொடர்புத்துறை புலம், மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழக ஆதரவோடு மலேசிய நாட்டில் முதன் முறையாக ‘தமிழ்க்கல்வி ஆராய்ச்சி மாநாடு’ நடத்தவுள்ளது.

இம்மாநாடு எதிர்வரும் 2012, மே திங்கள் 30 - 31 ஆகிய இரண்டு நாட்களுக்கு ஈப்போ மாநகரில் உள்ள இல் சிட்டி தங்கும் விடுதியில் (Hillcity Hotel) நடைபெறும்.

மாநாட்டு நோக்கம்:-

தமிழ்க் கல்வியாளர்களும் ஆய்வாளர்களும் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை முன்வைக்கும் ஒரு தளமாக இந்த மாநாடு அமையவுள்ளது. தமிழ் ஆசிரியர்களும் கல்வியாளர்களும் தங்கள் புலமைத் திறம், பட்டறிவு, கற்றல் கற்பித்தல் திறன் முதலானவை தொடர்பில் கலந்துரையாடி தங்களுக்குள் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு, புதிய இலக்குகளை நோக்கி இணைந்து செயல்பட ஊக்குவிக்கும் நோக்கத்திலும் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டில் படைக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தும் ‘தமிழ்க் கற்றல் கற்பித்தலில் புத்தாக்கம்’ எனும் கருப்பொருளில் அமைந்திருக்கும். மொத்தம் 32 ஆய்வுக் கட்டுரைகள் படைக்கப்படவுள்ளன. வெளிநாட்டு ஆய்வாளர்களோடு உள்நாட்டுக் கல்வியாளர்களும் அருமைவாய்ந்த கட்டுரைகளைப் படைப்பார்கள்.

தமிழ்க்கல்வி வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் பங்காற்றும் வகையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் கலந்துகொள்ள மலேசியத் தமிழ்க் கவியாளர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் ஆகிய அனைவரும் அழைக்கப்படுகிறார்கள்.

மாநாட்டுக் கட்டணம் :-

உள்நாட்டுப் பேராளர்கள்:- RM200.00 (தங்கும் வசதி உண்டு) / RM150.00 (தங்கும் வசதி இல்லை )

வெளிநாட்டுப் பேராளர்கள்:- USD100.00

மாநாட்டுக் கட்டணத்தை உப்சி பல்கலைகழகப் பொருளகக் கணக்கில் செலுத்திப் பதிவு செய்து கொள்ளலாம். அதன் விவரம் பின்வருமாறு:-

 Bank Islam - Account Number:- 08068010003264

பொருளகத்தில் பணத்தைச் சேர்த்தவுடன் அதன் சான்றுச் சீட்டை (Bank Slip) பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

TERC 2012 Secritariat, Faculty Of Languages and Communication,
Sultan Idris Education University, 35900 Tanjung Malim, Perak, Malaysia.
(Attn: Dr.S.Samikkanu Jabamoney) Fax:-6054583603

பேராளர்களுக்கு மாநாட்டுப் பை, மாநாட்டு மலர், தங்கும் வசதி, உணவு ஆகிய அனைத்தும் செய்து தரப்படும்.

மாநாடு தொடர்பான மேல்விவரங்களுக்கும் தொடர்புக்கும்:
முனைவர் சாமிக்கண்ணு ஜெபமணி (கைபேசி:- 6012-5275943) மின்னஞ்சல்:- samjabarose@yahoo.com.my

தமிழ்க்கல்வியையும் தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலையும் முன்னிருத்தி மலேசியாவில் முதன்முறையாக  நடைபெறும் இந்த மாநாட்டில் மலேசியக் கல்வியாளர்களும் ஆசிரியர்களும் திரளாகக் கலந்துகொண்டு ஆதரவு செய்ய வேண்டும். அறிவு சார்ந்த மாநாடுகளும் கல்வியியல் தொடர்பான மாநாடுகளும் தொடர்ந்து நடைபெறுவதற்கு இந்த மாநாடு ஒரு படிக்கல்லாக அமையட்டும். மலேசியத் தமிழ்க் கல்வியாளர் சமூகத்தில் ஆய்வுப்  பண்பாடும் ஆராய்ச்சிக் கண்ணோட்டமும் உருவாகி வளர்ச்சிபெற இந்த மாநாடு ஒரு தொடக்கமாக - தோற்றுவாயாக இருக்கட்டும்.

வாருங்கள் நண்பர்களே, ஆசிரியர்களே, மலேசியத் தமிழ்க் கல்வியாளர்களே.. மலேசியாவில் தமிழ்க்கல்வி தொடர்பாக அனைவரும் ஒன்றுகூடி அறிவு சார்ந்த நிலையில் பேசுவோம்; ஆய்வு சார்ந்த நிலையில் சிந்திப்போம்; ஆராய்ச்சி நோக்கோடு முன்னேறுவோம். சமூகம் மாற முதலில் நாம் மாறுவோம். தமிழ்ச் சமூகத்தின் மறுமலர்ச்சி  நம்மிடமிருந்து தொடங்கட்டும்.

@சுப.நற்குணன், திருத்தமிழ்

Blog Widget by LinkWithin