Showing posts with label 2.இனம். Show all posts
Showing posts with label 2.இனம். Show all posts

Wednesday, December 16, 2009

இந்திய இந்தியனும் மலேசிய இந்தியனும்


‘இந்திய இனத்தவர் கூச்சல் போட விரும்புபவர்கள்’ என்று எழுதி பரபரப்பை ஏற்படுத்திய நாளிகை ஆசிரியர் ஒருவர், ஒரு வாரத்திற்கு தாம் எழுதுவதை நிறுத்திக்கொள்ளப் போவதாக முறுக்கிக் கொண்டிருக்கிறார்.

மலேசியாவில் வெளிவரும் ‘ஊத்துசான் மலேசியா’ எனும் மலாய் நாளேட்டின் முகமை ஆசிரியர் சைனி அசான். அவர் எழுதிவரும் ‘சுவிட்’ (Cuit – தமிழில் சீண்டல்) பகுதியில் இன்று (16.12.2009) ஒரு கேலிச்சித்திரம் போட்டு செய்தியும் எழுதியுள்ளார்.

இந்தக் கேலிச்சித்திரத்தில் சைனி அசானுடைய வாய் ஒட்டப்பட்டது போலவும்; அவருடைய கணினி திரையில் ‘தூதுப்’ (TUTUP தமிழில் ‘மூடு’) என்று எழுதப்பட்டது போலவும் காட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அவருடைய கையும் காலும் கட்டப்பட்டு இருப்பதாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. இதன்வழி, இந்த வாரத்தில் வாயை மூடிக்கொண்டும், எழுதுவதை நிறுத்திக்கொண்டும் இருக்கப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.


வாயை மூடிக்கொள்ள வேண்டிய அளவுக்கு அவருக்கு என்ன நடந்தது என்பதை அறிய விரும்புகிறீர்களா? தொடருங்கள்...

அதாவது கடந்த 9.12.2009இல் தன்னுடைய சிறப்புப் பகுதியில் சைனி அசான் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். ‘இந்திய இந்தியர்கள், மலேசிய இந்தியர்களின் கதை’ என்பது அதன் தலைப்பு.

அக்கட்டுரையில், ‘இந்திய இனத்தவர் கூச்சல் போட விரும்புபவர்கள்’ என்று கூறியிருந்தார். இதற்கு அவர் கூறிய சான்று என்ன தெரியுமா? அண்மையில் அவர் ஐதிராபாத் சென்றிருந்தாராம். அவர் தமிழ், இந்திப் படங்கள் பார்ப்பாராம். இந்தப் பட்டறிவின் அடிப்படையில் அவர் கண்டுபிடித்து எழுதியது இதுதான்.

“இந்திய நாட்டில் வாழும் இந்தியர்கள் கோளாறு குளறுபடிகளோடு வாழ்பவர்களாம். அந்த பண்பாடு இங்கே மலேசியாவில் உள்ள இந்தியர்களிடமும் எதிரொலிக்கிறதாம். இந்தியர்கள் மற்றவரைவிட மாறுபட்டவர்களாம். அதாவது, இந்திப் படங்களிலும் தமிழ்ப் படங்களிலும் அவர்களின் பண்பாட்டைப் பார்க்க முடியுமாம். அவர்கள் எப்போது பார்த்தாலும் கூச்சல்.. கூச்சல்.. கூச்சல் போட்டுக்கொண்டே இருப்பார்களாம்.

அதேபோல, மலேசியாவில் உள்ள இந்தியர்களும் கூச்சல் போடுகிறார்களாம். இங்கே கூச்சல் போடுபவர்கள் அனைவரும் நிபுணர்களாக, வழக்கறிஞர்களாக, அரசியலாளர்களாக இருக்கிறார்களாம். நன்குப் படித்தவர்கள் எல்லாரும் அதிகம் கூச்சல் போடுகிறார்களாம்.”


இது எப்படி இருக்கிறது..?

இந்த எழுத்தாளர் இப்படி ஒரு கருத்தை ஏன் எழுதினார் என்பதையும் இங்குச் சொல்ல வேண்டும்.

மலேசியாவின் நாடாளுமன்ற உறுப்பிராக இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு என்.குலசேகரன் (இவர் ஒரு வழக்கறிஞர்) அண்மையில் “மலாய்க்காரர் மேலாண்மைக் கொள்கையை அடியோடு வேரறுக்க வேண்டும். அதற்குப் பதிலாக மலேசிய மக்கள் மேலாண்மைக் கொள்கையை முன்னெடுக்க வேண்டும்” என்று நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார்.

இந்தப் பேச்சினால் சினமடைந்துபோன சைனி அசான் எனும் மலாய்க்கார ஊடகவியலாளர், மேலே சொன்ன செய்திகளை எல்லாம் குறிப்பிட்டு என்.குலசேகரனை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மலேசிய இந்தியர்களையே வசைபாடி எழுதியிருந்தார்.

மலேசிய இந்தியர்களை மிகவும் இழிவுபடுத்தி எழுதிய அவருக்கு எதிராக மாண்புமிகு என்.குலசேகரன் உள்பட, ஆளும் / எதிர்க்கட்சித் தலைவர்களும், பொது இயக்கங்களும், தனியாட்களும் படையெடுத்துக் காவல்துறையில் பல புகார்களைச் செய்தனர்.

இதனால்தான் அந்த ஊடகவியலாளர் ஒரு வாரத்திற்கு எழுதப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் போலும்.

இது உண்மையிலேயே அவருடைய முடிவா அல்லது அண்டப் புளுகா என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும்.

அடுத்த வாரம் அவருடைய தூவலும் (பேனா) அந்த நாளேடும் மீண்டும் ஒரு நஞ்சை கக்காமல் இருக்குமா?

Wednesday, September 30, 2009

இந்திய நாட்டின் முதல் - மூத்தக் குடிமக்கள் தமிழர்களே

கடந்த 26-9-2009இல் மலேசிய நாளிகைகளில் வெளிவந்த செய்தி இது. 'நேச்சர்' என்ற ஆங்கில ஏட்டில் வெளிவந்த இந்தச் செய்தியைத் தமிழ் நாளிகைகளும் வெளியிட்டுள்ளன.
இந்தியா என்று இன்று சொல்லப்படுகின்ற நாட்டின் ஆதி(பூர்வீக) குடிமக்கள் தென்னிந்தியர்களே அதாவது தமிழர்களே என்றும், இன்றைக்கு இந்தியாவை ஆதிக்கம் செய்யும் வட இந்திய இனம் பிற்காலத்தில் இந்தியாவில் குடியேறியவர்கள் என்றும் இந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.


இப்படியொரு உண்மையை ஒரு தமிழன் கண்டறிந்து சொல்லியிருந்தால் இப்படி நாளிதழ் செய்தியாக வந்திருக்காது. காலங்காலமாக தமிழரை வல்லாதிக்கம் செய்துவருபவர்கள் இந்தச் செய்தியைகூட இந்நேரம் இருட்டடிப்புச் செய்திருப்பார்கள்.

எவனோ இருட்டடிப்புச் செய்வது இருக்கட்டும். வரலாற்று அறிவும் அறிவாராச்சிப் பார்வையும் கெட்டுப்போய்விட்ட தமிழர்களே இந்த ஆராய்ச்சி உண்மையை நம்ப மறுத்திருப்பார்கள்; மறுதளித்திருப்பார்கள். காலந்தோறும் காலத்தோறும் தமிழன் செய்து வந்திருக்கும் வரலாற்றுப் பிழையை இப்போதும் செய்திருப்பார்கள்.

ஆனால், இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு இந்த உண்மையை உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பவர்கள் தமிழர்கள் அல்லர். ஐதராபாத்தில் உள்ள மூலக்கூறு, மூலக்கூறு உயிரியல் ஆய்வு மையம், அமெரிக்காவின் ஆர்வர்டு பொது சுகாதார கல்லூரி, ஆர்வர்டு பிராட் கழகம், மாசசூசட்டு தொழில்நுட்பக் கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து இப்படியொரு ஆய்வினை மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஆய்வின் முடிவுகளை ஐதராபாத் மையத்தின் முன்னாள் இயக்குநரும், இந்த ஆய்வறிக்கையின் ஆசிரியருமான லால்ஜி சிங் என்பவரும் அதே மையத்தின் மூத்த அறிவியலாளர் குமாரசாமி தங்கராஜன் என்பவரும் மேற்கண்ட வகையில் ஆராய்ச்சி உண்மையை அறிவித்துள்ளனர்.

இவர்களின் ஆய்வின்படி, இந்தியாவின் தொன்மை இனங்களாக வட இந்தியரும் தென் இந்தியரும் (தமிழரும்) தான் என்பது தெளிவாகிறது. ஆனால், இந்த இரு தொன்மையான இந்தியர்களில், வடவர்கள் தற்போதைய மேற்கு ஆசிய மக்களிடனும் ஐரோப்பிய மக்களுடனும் மரபியல் அடிப்படையில் 40 முதல் 80 விழுக்காடு வரை ஒத்து இருக்கிறார்கள். அதாவது, அன்னியர்களின் மரபியல் கூறுகளோடு அதிகம் ஒத்துப் போகிறார்கள்.

அனால், தென்னவர்கள் உலகின் எந்த இன மக்களோடும் மரபியல் அடிப்படையில் தொடர்பு அற்றவர்களாக இருக்கிறார்கள். அதாவது, அன்னியரின் கலப்படம் அறவே இல்லாமல் (தூய்மையாக) இருக்கிறார்கள். இதன்மூலம், தென்னக மக்கள்தான், இந்திய நாட்டின் ஆதிமக்கள் அல்லது முதல் குடிமக்கள் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.

இந்திய நாட்டின் தொன்மையான இனம் எது? என்பது மீதான ஆய்விக் கிடைக்கப் பெற்றிருக்கும் இந்தப் புதிய முடிவுகள் மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. காரணம், இதுவரை எழுதப்பட்டுள்ள வரலாற்றை மாற்றி எழுதக்கூடிய அளவுக்குச் சான்றுகள் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்த ஆய்வு முக்கியமான ஒன்றாகவும் அறிஞர்களின் விவாதத்திற்குரிய ஆய்வுப் பொருளாகவும் ஆகியிருக்கிறது.

பாவாணர் என்னும் தமிழன் கண்டுசொன்ன உண்மை

இப்போது வெளிவந்துள்ள இந்தச் செய்தி இப்படி இருக்க, தமிழினத்தில் தோன்றிய மாபெரும் அறிஞர் – ஆய்வாளர் – பன்மொழிப் பயின்ற மேதை மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் இந்த உண்மையயயும்; இதற்கு மேலே இன்னும் பல உண்மைகளையும் தம்முடையை 50ஆண்டுகால ஆய்வுகளின் அடிப்படையில் நிறுவியிருக்கிறார் என்பது நம்மில் பலர் அரியாமல் இருக்கலாம்.

1.மாந்தனின் முதல்மொழி தமிழே.
2.அந்தத் தமிழே ஆரியத்திற்கு மூலம்.
3.தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மாந்தன் பிறந்தகம் குமரிக்கண்டம்.

என்னும் முப்பெரும் உண்மைகளைக் கண்டுகாட்டினார் – மொழியியல் சான்றுகளுடன் நிறுவிக்காட்டினார்.

பாவாணருடைய கண்டிபிடிப்பை ஆதிக்க இனத்தவரும் கற்றறிந்த இந்திய மேதைகளும் தமிழினப் பகைவர்களும் ஏளனமும் ஏகடியமும் செய்தார்களே அன்றி, இதுவரை எவரும் சான்றுபட மறுக்கவில்லை.

பாவாணர் கண்டறிந்து சொன்ன தமிழியற் கண்டுபிடிப்புகளை இருட்டடிப்புச் செய்து மறைப்பதற்கே இந்தியாவின் தலைவர்களாகவும் அறிஞர்களாகவும் ஆய்வாளர்களாவும் சொல்லப்பட்டவர்கள் முனைந்திருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

பாவாணர் என்ற ஒரு பேரறிஞரின் கண்டுபிடிப்புகள் எங்கேயும் எந்தக் காலத்திலும் எந்தச் சூழலிலும் வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதில் தமிழினப் பகைவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளனர்; இப்போதும் இருந்துவருகின்றனர் என்பது மறைக்க முடியாத வரலாறு.

ஆனால், பாவாணர் அன்று கண்டு சொன்ன உண்மைகள் இன்று மற்றவர்கள் வாயிலாக – மாற்றார்கள் மூலமாக வெளிவரத் தொடங்கிவிட்டன என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. இப்போது வந்துள்ள இந்தச் செய்தியும் அதையேதான் பறைசாற்றுகிறது.

காலம் ஒருநாள் கண்டிப்பாக மாறும். உண்மைகள் தற்காலிகமாக மறைக்கப்படலாம். ஆனால், முற்றிலுமாக ஒழித்துக்கட்டி இல்லாமல் செய்துவிட முடியாது.

(மறைந்துபோன பழந்தமிழர் நாடு - குமரிக்கண்டம்)


உலகம் ஒருநாள் நமது தமிழையும் தமிழ் இனத்தையும் தமிழரின் பழந்தமிழ்நாடாகிய குமரிக்கண்டத்தையும் கண்டிப்பாகத் திரும்பிப் பார்க்கும் – திறந்து பார்க்கும் – ஆழந்து அகன்று ஆராய்ந்து பார்க்கும்.

அப்போது, உலகத்தின் பல வரலாறுகள் திருத்தப்படலாம் – உலக இனங்களின் வரலாறுகள் மாற்றி எழுதப்படலாம் – உலக மொழிகளின் வரலாற்று ஆவணங்கள் புதுப்பிக்கப்படலாம்.

அனைத்திற்கும் காலம் கண்டிப்பாக பதில் சொல்லியே தீரும். அப்படி, காலம் பதில் சொல்லும் காலத்தில் அதனை எண்ணிப் பெருமைபடுவதற்கு.. ஒருவேளை பூமிப்பந்தில் எந்த மூலையிலும் ஓர் ஒற்றைத் தமிழன்கூட இல்லாமல் போகலாம்.

தொடர்பான செய்திகள்:-

தமிழின வரலாறு 1, தமிழின வரலாறு 2

Tuesday, May 12, 2009

தமிழ்நாட்டுத் தமிழருக்கு மலேசிய நாட்டிலிருந்து இரா.திருமாவளவன் உருக்கமான கடிதம்

மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தேசியத் தலைவர் இரா.திருமாவளவன் அவர்கள், தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு எழுதியுள்ள இந்தக் கடிதத்தைத் தயவுசெய்து படிக்க, தமிழக உடன்பிறப்புகளை அன்புடன் அழைக்கிறேன்.

பி.கு: ஐயா இரா.திருமாவளவன் அவர்கள், மலேசியத் திருநாட்டில் தமிழ் - தமிழர் - தமிழ்நெறி விழுமியங்களைக் கட்டிக் காத்து, அதன்வழி தமிழ்த்தேசிய குமுகாயத்தைக் கட்டியெழுப்பும் பாரிய முயற்சியில் ஈடுபட்டு, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மொழியால் இனத்தால் சமயத்தால் நாம் தமிழர்; நம் மறை திருக்குறள் என்ற செம்மாந்தக் கொள்கையை வலியுறுத்தி பல்லாற்றானும் பாடாற்றி வருகின்ற தமிழினமானத் தலைவர்.

Friday, January 30, 2009

உலகத் தமிழ் உறவுகளுக்கு ஒரு கடிதம்


அன்புமிக்க உலகத் தமிழ் உறவுகளே...,

மனித உயிரின் மகத்துவம் பற்றி நாமெல்லாம் நன்றாகவே அறிந்துள்ளோம். எங்கள் உறவுகள் மீது கொண்டுள்ள கருணை வெளிப்பாட்டிற்கு நாமெல்லாம் எம் தாய் தமிழ் உறவுகளுக்கு என்ன கைம்மாறு செய்வோமோ என்று தெரியாமல் ஈடாடுகின்றோம் உறவுகளே!

இனிமேல் முத்துக்குமார்கள் வேண்டாம். எங்களுக்கு வேண்டியதெல்லாம் அகிம்சையின் மூலம், உணர்வுகளின் மூலம் தாய்த் தமிழக உறவுகள் பாரத அரசைப் பணிய வைக்க வேண்டும் என்பதே. உயிரையும், உணர்வுகளையும் காப்பாற்றத் தானே இந்தப் போராட்டங்கள்??? பிறகு ஏன் நீங்களாக உங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும்?

உலகெங்கும் வாழும் எங்கள் உறவுகளே!
இந்த நேரத்தில் எமது கடமை என்ன??
நாம் என்ன செய்யப் போகிறோம்??

எங்கள் உறவுகள் இருக்க இடமின்றி அல்லற்பட்டுத் துடிக்கின்றார்கள். உண்ண உணவின்றி பட்டினியால் வாடி உழல்கின்றார்கள்..! நாங்களோ இங்கிருந்து கடந்த கால வரலாற்றை மட்டும் மீட்டும் மீட்டிப் பார்த்துப் பழமை பேசுகின்றோம்..!

பாசிசம் பற்றியும், பயங்கரவாதம் பற்றியும், விடுதலைப் புலிகள் மீது பல தவறுகள் உள்ளன என்பது பற்றியும் பேசுவதற்கான நேரம் அல்ல இது?? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

இப்போது நாங்கள் செய்ய வேண்டியதெல்லாம். எமது பழைய குரோத விரோதங்களையும் களைந்தெறிந்துவ் விட்டு, பழைய கறை படிந்த விடயங்களைக் களைந் தெறிந்து விட்டு எல்லோரும் ஒன்றாகக் கிளர்ந்தெழுந்து வன்னியில் அல்லற்படும் மக்களுக்குக் குரல் கொடுக்கத் துணிய வேண்டும்.

இப் பொழுது வீடு பற்றி எரிகின்றது. எரிகின்ற வீட்டை அணைக்க முயற்சி செய்வதை விடுத்து நீ முந்தி எனக்கு அது செய்தாய் ஆதலால் ஒரு வாளி தண்ணி கூட ஊற்றி உனது வீட்டை அணைக்க என்னால் முடியாது என்று சொல்லி இருப்பது, ஒதுங்கி வாழ்வது மிக மிக இழிவான விடயம்.

பாசிசம் பற்றியோ பயங்கரவாதம் பற்றியோ இணையத்தில் எழுதித் தமிழர்களைப் படு குழியில் மேலும் மேலும் தள்ளுவதற்கான் நேரம் அல்ல இது. கொஞ்சம் சிந்தியுங்கள்..நாங்கள் இப்போது செயற்படுவதற்கான நேரம்..

துணிந்தெழுங்கள் உறவுகளே! உங்கள் உங்கள் நாடுகளிள் உள்ள சட்ட திட்டங்களிற்கு அமைவாக எமது இரத்த உறவுகளுக்காக, எம் தாயக உறவுகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டிய தக்க தருணம் இது.

இந்த வரலாற்று வேளையில் நாம் அனைவரும் ஒன்று படா விட்டால் ஒரு இனத்தினை அழிவிலிருந்து காப்பாற்றத் தவறிய மாபெரும் வரலாற்றுத் துரோகத்தை இழைத்த பிணியராகி விடுவோம். தயவு செய்து அனைத்துப் பேதங்களையும் மறந்து துடைத்தெறிந்து விட்டு இப்போது எம் தாயக உறவுகளுக்காகக் குரல் கொடுக்கத் துணியுங்கள்.

புலிகள் அடிப்பார்களா?? எப்போது அடிப்பார்கள் என்றெல்லாம் கதை பேசி எம்மைத் தேற்றிக் கொள்ளும் காலமல்ல இது. அவர்களுக்குரியதை அவர்கள் செய்வார்கள். எமக்குரி பணியை யார் செய்வார்கள்? எமது இன்றைய பணி என்ன?? துன்பப்படும் மக்களின் அவலத்தை உலகறியச் செய்வது, அதனை விரைந்து செய்வோம். இன்றே செய்வோம்.

இந்தக் காலப் பெருங் களத்தில் நாம் ஒன்று திரளா விட்டால் வரலாறு எம்மை ஒரு போதும் மன்னிக்காது. சிந்திப்போம். இன்றே செயற்படுவோம்!உலகெங்கும் வாழும் உறங்கிக் கிடக்கும் தமிழர்கள் அனைவரும் இப்போது விழித் தெழ வேண்டிய தக்க தருணம் இது.

உறங்கிக் கிடக்கும் உறவுகளே...
காலத்தின் தேவை கருதி உணர்ந்தெழுங்கள்.

Monday, January 26, 2009

தமிழின் வரலாறு - பாகம் 2

தமிழின் வரலாற்றை ஆராயும் தொடரின் இரண்டாம் பாகம் இது. முதலாம் பாகத்தைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

*இனத் தோற்றம்

மொழிதான் ஒரு இனத்தின் மூலம் மொழியைப் பயன்படுத்தும் இனக் குழுக்களை வகைப்படுத்தும் போது அம்மொழி பேசும் கூட்டம், சமூகம், நாட்டவர்கள் என்கிற பல உள்ளார்ந்த அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒரு இனம் அடையாளம் காணப்படுகிறது.



இனங்கள் பேசும் மொழி இரு வகைப்படும் ஒன்று இயற்கை மொழி பிரிதொன்று உருவான மொழி. இயற்கை மொழி பலவும் மனித இனத்தொடக்க காலத்திலிருந்து மக்கள் பயன்பாட்டில் இருப்பது.

உருவான மொழி பல இனத்திலிருந்து பிரிந்தவர்கள் கூடி தமக்குள் ஒரு பரிமாற்ற சாதனமாகப் பயன்படுத்தும் பொருட்டு உருவாக்கிக் கொள்ளும் மொழி. காட்டாக ஆங்கிலத்தைக் குறிப்பிடலாம்.

தமிழர் தமிழைத் தங்கள் மொழியாகக் கொண்டதால் தமிழினம் என சுட்டப்படுகிற்து. இயற்கை மொழிக் குடும்பத்தில் தமிழ் பழமையானது. அதன் பழமையின் கால அளவைத் தெளிவாக வரையறை செய்ய இயலாத அளவுக்கு பல்லாயிரம் ஆண்டுகால மனித நாகரீக காலத்தின் வரையரைகளான பழங்கற்காலம், புதிய கற்காலம் என்பவற்றோடு தொடர்புடையது.

மானுடவியல் ஆய்வாளர்கள் உலகளவிலான மானுட சமூகத்தை நான்கு பிரிவாக பிரித்து அறிவித்துள்ளனர்.

1.திராவிட இனம்
2.ஆப்பிரிக்க இனம்
3.மங்கோலிய இனம்
4.ஐரோப்பிய இனம்.

மேற்காணும் இந்த நிலஅளவிலான இனக்குழுக்களின்அடையாளம் உடல் அமைப்பு, தலைமயிரின் வடிவம், தோலின் நிறம், முக அமைப்பு என்கிற பன்முகத் தன்மையான ஆய்வில் மூலமாக விளங்கும். இந்த நான்கு இனப்பிரிவுகளில் தனித்த, ஒன்றுடன் ஒன்று கலந்த மனித இனங்களே இன்று உலகெங்கும் உள்ளனர்.

அந்த வகையில் குவார்ட்சு எனப்படும் இயற்கையாக நிலத்தில் உருவாகும் தனிமமான படிகக் கற்களை பழங்கால திராவிட இனம் பயன்படுத்தத் தொடங்கியது. நிலத்தில் விளையும் இந்த படிகக் கற்கள் உறுதியாகவும், கூர்மையாகவும் விளங்கத்தக்கது. இதனைப் பயன்படுத்திய காலமே பழங்கற் காலம். உலகில் அதே சமயம் பிற இனமக்களும் ஆங்காங்கு நிலத்தில் கிடைத்திட்ட கூர்மையான கூழாங்கற்கள், பாறைக் கற்களை வேட்டைக்குப் பயன்படுத்தினர்.

தொடக்க கால மனிதன் கரடுமுரடான கற்களைப் பயன்படுத்தி, பின்னர் பிரிதொரு கற்களால் ஏனைய ஆயுத கற்களைத் தயாரிக்கும் நிலைக்கு உயர்ந்தனர். இக்காலத்தை வரலாற்றாய்வாளர்கள் "லெவ்ல்லோசியன்" என்பர். வேட்டைக் கருவிகளை குவார்ட்சு கற்களில் தயாரிக்கத் தொடங்கிய திராவிட இனம் காலப்போக்கில் இதர பயன்பாட்டுக் கருவிகளையும் செய்யும் ஆற்றல் பெற்றது. திராவிடர்களின் நுண்ணறிவுத் திறன் வளர வளர கருவிகள் மட்டும் சீராகவில்லை, அவர்கள் உச்சரிக்கும் மொழிகளும் சீராகத் தொடங்கியது.

இவ்வாறுதான் திராவிட இனக் குழுக்களில் மூத்த மொழியான தமிழ் பேசப்பட்டு பெரியதொரு மனித இனத்தின் பயன்பாட்டில் விளங்கியது. காலப்போக்கில் திணை நிலங்களின் தன்மைகளுக்கேற்றவாறும் உணவிற்காகவும் நீர் நிலைகளை நாடி இடம் பெயரத் தொடங்கினர். இவ்வாறு இடம் பெயர்ந்து இந்தியா எங்கும் பரவிய திராவிட இனம், மூல மொழியான தமிழுடன் வேறு வகை ஒலிகளையும் சேர்த்து பிரிதொரு மொழிகளாகப் பயன்படுத்தத் தொடங்கியது.

திராவிட மொழிக் குடும்பத்தை மொழியியலார். தென் இந்தியத் திராவிட மொழிகள், மத்திய இந்திய திராவிட மொழிகள், வடஇந்திய திராவிட மொழிகள் எனப் பகுப்பார்கள். தென்னக திராவிட மொழிகளை இரண்டு பகுதியாக நோக்கப்படுகிறது. இலக்கிய வளமுள்ள திராவிட மொழிகள். இலக்கிய வளமில்லா திராவிட மொழிகள் என இதனை வரையறை செய்கின்றனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்றவை இலக்கிய வளமிக்கவை. மலையின திராவிட மக்களால் பேசப்படும் தோடா, கோத்தர், படுகு, கேடகு, துளு, வர, கொலமி, நயினி முதலான மொழிகள் பேசப்படினும் இலக்கிய வளம் இல்லாதவை. அதே போன்று பலுகிசுதானில் திராவிட பழங்குடி மக்களால் பேசப்படும் பிரோகுய், மத்திய இந்தியாவில் பேசப்படும் பர்சி, ஒல்லரி, குய்யி, கோண்டி, பென்கோ, குவி, போர்ரி, கோய், குரூக், மோசுரா முதலிய தொன்மை திராவிட மொழிகள் பேச்சு வழக்கில் உள்ளதேயன்றி இலக்கிய வளம் இல்லாதவை.

பெருங்கற்காலத் தொடக்கத்திலேயே திராவிட மொழிகளின் தாயான தமிழ் சீரிய பயன்பாட்டில் விளங்கியுள்ளது. அச்சமயம் பதிவு செய்திடும் சாதனமோ, வழிமுறைகளோ, அதனை உருவாக்கும் சிந்தனையோ எழவில்லை.

காலப்போக்கில் பாறைகளைப் பண்படுத்தும் நுட்பம் அறிந்த வெகுகாலத்திற்குப் பின்புதான் பாறையில் செதுக்கத் தொடங்கி இருத்தல் கூடும். இந்தப் பதிவுகளைச் செய்திடும் முன்பு தமிழ் மொழி மனங்களிலும், மனத்திரைகளிலும் நினைவாற்றல் எனும் திறனாலேயே பதிவு செய்யப்பட்டன. மனித மனம் ஒன்றை அறிந்தவுடன் அதனை மறவாமல் நினைவில் நிறுத்தும் பொருட்டு இயல்பான இலக்கண சூத்திரங்கள் தமிழ் மொழியில் அன்றே பயன்படுத்தியுள்ளனர்.

திராவிட மொழிக் குடும்பத்திலிருந்து பலமொழிகள் பிரிந்தாலும் மூலமொழியான தமிழ் இன்றளவும் தன் நயத்தை இழக்காமல் என்றும் இளமையாக விளங்கக் காரணமே அதன் இலக்கண கட்டமைப்புதான்.

இயற்கை மொழியாம் தமிழ் தன் குடும்பத்திலிருந்து பிற திராவிட மொழிகள் பிரிந்த போதும் எவ்வித மாற்றமும் இல்லாமல் எத்தகைய மாற்றங்களுக்கு தன்னை ஆட்படுத்திக் கொள்ளும் வகையில் உரிய கட்டமைப்புடன் இயங்குவதால் கி.மு.ஆயிரமாவது ஆண்டுகளில் அதாவது கற்காலப் பண்பாட்டின் இடைக் காலத்திலேயே கிளை மொழிகள் பிரிந்தாலும் தனித்துவமாக இன்றும் துலங்கி வருகிறது.இவ்வாறு மொழி மட்டுமே துலங்கவில்லை. தமிழும் அதைப் பேசும் தமிழினமும் உலகெங்கும் பரவி உலக மொழிகளில் தனக்கென ஓர் உன்னதமான நிலையை அடைந்துள்ளது. தமிழ் மொழியின் வளர்ச்சிதான் தமிழினத்தின் வளர்ச்சியும் என்பது நோக்கத்தக்கது.

*வரிவடிவ வரலாறு

தமிழ் எழுத்துக்கள் இன்றைய வடிவிற்கு மாற்றம் காண பல நூற்றாண்டுகளைக் கடந்தன. ஒலியாய் விளங்கிய பேச்சுத் தமிழ் மொழி வரிவடிவாய் உருப்பெற்றிட்டது எக்காலம் எனும் ஆய்வு இன்னமும் தொடர்கிறது. எனினும் (ஒலியை வரிவடிவமாக்கும் திண்மை, அச்சிந்தனை எக்காலத்தில் உருவாகி இருக்கலாம் என்று ஊகிப்பதற்கும் அந்த ஊகங்கள் நிலை பெற்றிடவும் ஏராளமான சான்றுகள் அகழ்வு ஆய்வுகளில் கிடைத்துள்ளன.)

பொதுவாக தமிழ் எழுத்து வரிவடிவத்திற்கான சிந்தனை வடக்கிலிருந்து தென்னகமாம் தமிழ் நிலத்தில் புகுந்ததாக பல வரலாற்று தொல்லியலார் கூறுகின்றனர். எனினும் பேரறிஞர் பாவாணரின் கூற்றுப்படி மனித நாகரீக தோற்றமே தென்னகத்தில் தான் நிகழ்ந்தது. எனவே எத்தகைய ஆய்வுகளும் இங்கிருந்து தான் தொடங்க வேண்டும் என்கிறார்.


இது குறித்து அவர் கூறியது,
"ஒரு வீட்டிற்கு ஆவணம் போன்றதே ஒரு நாட்டிற்கு உரிமை வரலாற்று சான்றாகும்.ஆயின் ஓர் ஆவணத்தில் எதிரிகளால் ஏதேனும் கரவடமாகச் சேர்க்கப்படலாம். அது போன்றே ஒரு நாட்டு வரலாறும் பகைவரால் அவரவர்க்கு ஏற்றவாறு மாற்றப் படலாம். ஆதலால் இவ்விரு வகையிலும் உரிமையாளர் விழிப்பாயிருந்து தம் உரிமையைப் போற்றிக் காத்துக் கொள்ள வேண்டும்" என்கிறார்.

இவருக்கு முன்னோடியாக பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, பி.டி.சீனிவாசய்யங்கார், வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர் போன்ற அறிஞர் பெருமக்களும் கூறியுள்ளனர்.

இவர்கள் கூற்று மெய்யே என்பது போல் அரிக்கமேடு, உறையூர் தொடங்கி ஈழம் வரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் காணப்பட்ட திராவிட வரிவடிவம் தமிழே என மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

அரிக்கமேட்டில் கிடைத்த பொருட்களில் பொரித்துள்ள எழுத்து வரி உருக்கள் கி.பி.முதல் நூற்றாண்டுக்கும் முன்னம் பொரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதே போன்ற எழுத்துருக்கள் ஈழத்தில் நிகழ்ந்த அகழ்விலும் கண்டறிந்துள்ளனர் என்பதை இலங்கை வரலாற்று அறிஞர் கருணா இரத்தினா சுட்டிக் காட்டுகிறார்.

புத்தர் காலத்திற்கு முன்பே கி.மு.5ஆம் நூற்றாண்டில் அதாவது அசோகரின் காலத்திற்கு சில நூற்றாண்டிற்கு முன்பே திராவிட நிலத்தில் வழக்கிலிருந்த மொழிகளைப் பற்றியும் வரிவடிவங்கள் பற்றியும் அசோகர் காலத்து பவுத்த நூலான லலிதவிசுதாரம் அன்றைக்கு வழக்கில் இருந்த பிராமி, திராவிட வரிவடிவங்களுடன் மொத்தம் அறுபத்து நான்கு வரிவடிவம் காணப்பெற்றதாகக் கூறுகிறது.

அதைப் போன்றே சமண நூல் சமவயாங்க சூக்தமும், பன்னவான சூக்தமும் கி.மு.5ஆம் நூற்றாண்டில் பதினெட்டு வரிவடிவம் காணப்பட்டதாகவும் அதில் திராவிடமும் ஒன்று எனக் கூறுகிறது. தமிழ்கத்திலும், ஈழத்திலும் காணப்பட்ட தமிழ் வரிவடிவங்கள் ஒன்றுடன் ஒன்று ஒத்திருந்தன என்கிறார் பியூலர் எனும் அறிஞர்.

தமிழின் தொன்மை வரிவடிவம் தொடர்பான ஆய்வுகள் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் பெருமளவு தொடங்கின. தொடக்கத்தில் கல்வெட்டு, பாறை செதுக்கல் வரிவடிவங்களைப் படித்து விளக்கம் கூறி ஆய்வுக்கு வழிவகுத்தவர் பிரின்செப் எனும் ஆய்வாளராவார்.

இவ்வாறு ஆய்வில் வெளிப்பட்ட பல உண்மைகளை மேலும் தெளிவாக அறிஞர்கள் ஆய்வு செய்து ஒரு பட்டியலை வெளிட்டுள்ளனர். அதில் காலம் தோறும் தமிழ் வரிவடிவம் அதைப் பதிவு செய்யும் பொருட்களையொட்டி மாறுதலைக் கண்டே வந்துள்ளதை படத்தில் காண்க.

19ஆம் நூற்றாண்டு வரையுள்ள இந்த வரிவடிவங்கள். 17ஆம் நூற்றாண்டில் அச்சேறிய போது சுவடி எழுத்துக்களை ஒட்டியே காணப்பட்டன. பின்னர் வீரமா முனிவர் தமிழ் நெடுங்கணக்கில் உள்ள எழுத்தில் சீர்மை கண்டவுடன் தமிழின் வரிவடிவம் மேலும் அழகு பெற்றன.

அது மேலும் அண்ட் எனும் அச்சுவியலாளரால் செம்மையாக ஈய அச்சுருக்களின் உதவியால் அதன் மொத்த வடிவமும் ஓர் உலகார்ந்த கட்டமைப்புக்குள் உருப்பெற்றது. காலங்கள் மாறிடினும் இன்று கணியத்தில் அழகுற தமிழ் தன் இளமையான தோற்றப் பொலிவுடன் விளங்கி வருகிறது.
  • தமிழின் வரலாறு - பாகம் 1
  • தமிழின் வரலாறு - பாகம் 2

நன்றி:கணியத்தமிழ்

Sunday, January 25, 2009

தமிழின் வரலாறு - பாகம் 1

தமிழினத்தின் சிறப்பை அறிய வேண்டுமெனில் தமிழ் மொழியைப்பற்றி அறிதல் வேண்டும். மொழியின் இலக்கண கட்டமைப்பில் திகழக்கூடிய திகட்டாத இலக்கியங்களை அறிதல் நலம். இவைகளுக்கெல்லாம் தொடக்கமாகத் திகழும் தமிழ் வரிவடிவங்களைப் பற்றியும் தெளிவாக அறிந்து கொள்வது சிறப்பாகும்.

ஏனெனில் பிறிதொரு உதவி ஏதுமின்றி தமிழினம் தனக்காக, தானே முயன்று உருவாக்கிய மொழியே தமிழ். இத்தனித்துவமே தமிழினத்தின் சிறப்பு. இது குறித்து அறிய இதன் வரலாற்றை நான்கெனப் பகுத்து அதன் தோற்றத்தையும், தனித்துவத்தையும் விரிவாகப் பார்ப்போம். அவையாவன..

*மொழி வரலாறு
*இலக்கிய வரலாறு
*இன வரலாறு
*தமிழ் எழுத்து வரலாறு

*மொழியின் தோற்றம்

ஒரு அமைப்போ, சமுதாயமோ தன் கருத்துக்களை பரிமாறிடவும், ஒத்த கருத்தைப் பகிர்ந்து கொள்ளவும் அவசியம் தேவை மொழி. தமிழர்கள் பேசிய மொழி எக்காலத்தைச் சேர்ந்தது, என்கிற வினாவுக்கு அறிஞருலகம் தெளிவாகவே விடை தருகிறது.


அகழ்வு ஆய்விலும் பல இடங்களில் காணப்படும் கல்வெட்டுக்கள், பாறை செதுக்கல்களில் உள்ள ஆதாரங்கள் கிடைத்த காலம் வரலாற்றுக் காலமெனவும், சான்றுகள் இல்லாத பழமையான மக்கள் வசித்த இருப்பிடங்கள், அங்கு கண்ட சீரற்ற கருவிகளால் கற்காலம் அதாவது கல்வி அறிவு, சிந்திக்கும் திறனற்ற வளர்ச்சியுறா காலத்தை பழைய கற்காலம், புதிய கற்காலம் என பிரித்து வழங்கிடுவர்.

சிந்தனை வளர்ச்சியே நாகரிக காலத்தின் தொடக்கம், அத்துடன் வேட்டை கருவிகளை சீராக செப்பனிட்டுப் பயன்படுத்தத் தொடங்கிய போது ஏற்பட்டதுதான் மொழித் தோற்றத்தின் காலமாகும்.

இவ்வாறான மொழியின் தோற்றம் ஏற்பட பல்வேறு கட்டங்களை புதிய கற்காலம் கொண்டிருந்தது. ஒலிகளைக் கூர்மையாக அறிந்து, புரிந்து கொள்வது தொடக்கமாகும். பின்னர் புள்ளினங்கள், விலங்குகளின் ஓசை போன்றே தாமும் ஒலி எழுப்ப முயன்று ஒலியை வெளிப்படுத்தியது ஒரு கட்டம். இதனைக் கேட்பொலிக் காலம் என்பர்.

செவியால் கேட்ட ஒலிக்குத்தக்கவாறு தாம் பார்த்ததை, கேட்ட ஒலிகளை நினைவில் தேக்கி, சிந்தித்து மறுபடியும் அவற்றை கண்ட போதும், கேட்ட போதும் சக மனிதருக்கு சுட்டிக் காட்டும் அல்லது அந்த உணர்வைப் பகிர்ந்து கொள்ளும், பரிமாறிக் கொள்ளும் காலமே சுட்டொலிக் காலம் எனலாம்.

கேட்பொலியின் செழுமையும் சுட்டொலியின் பயனும் இணைந்த போது அழுத்தமான சைகைகள் வாயிலாக உணர்வுகளை வெளிப்படுத்தும் காலம் தோன்றியிருக்கலாம்.

கேட்பொலி, சுட்டொலி, சைகைகளுக்கு பின் ஒரே விதமான ஓசை நயம் அச் சமூகத்தில் பகிர்ந்திடும் போது ஓசைகள் ஒரு வடிவாகி ஒரு மொழியாய் தோன்றியது. தமிழும் இவ்வாறு தான் தோன்றியதாக மொழியியல் ஆய்வில் தன்னையே ஒப்படைத்த தேவநேயப் பாவாணர் அவர்கள் கருத்துரைக்கிறார்.

இலக்கியத் தோற்றம்

மனித மனங்களில் தோன்றும் கருத்துக்களின் பரிமாற்ற சாதனமே இலக்கிய பதிவுகள். இலக்கியம் என்பது எல்லோரும் அறியத்தக்க, அறியவேண்டிய ஒரு உண்மை போன்றதொரு கருத்து. அந்த கருத்தைச் சொல்பவரின் மேதைத் தன்மை, மேதைமையுடன் இணைந்த கற்பனை, கற்பனையை உருவகமாக்கும் ஒன்றைப் பற்றிய முழுமையான சேதி அறியும் ஆர்வம். இவைகளெல்லாம் ஒருங்கே சேர்ந்தால் தான் இலக்கியம் உருவாகும்.

இது போன்ற தன்மை கொண்ட ஏராளமான இலக்கியங்கள் வேறெந்த இயற்கை மொழியிலும் இந்தளவுக்குப் படைக்கப்படவில்லை. தமிழில்தான் உண்டு.

சங்க காலத்திற்கு முன்பே இலக்கியம் என்பது இருந்துள்ளது. அக்காலப்புலவோர் புனைந்த பல பாடல்கள் வாய் மொழியாக, வழிவழியாகக் கூறி இரசிக்கும் பண்பு மிகுந்திருந்தது. பின்னர் வாய்மொழி இலக்கிய காலத்தின் சீரிய மேம்பாடாக உருவானது பதிவு செய்து பாதுகாக்கும் ஏட்டிலக்கிய காலமாகும்.

ஏட்டிலக்கிய காலம் தொடங்கி பலநூறு ஆண்டிற்குப் பின் அறிவியல் மேம்பாட்டால் ஒரு சுவடி இலக்கியம் ஆயிரக்கணக்கான நூல் பிரதியாக மாறியது. இது இலக்கியப் பதிவு காலமாகும்.

இவ்வாறான இலக்கியப் பதிவின் போதுதான் மூல ஏட்டுச் சுவடிகள் பலவும் பதிப்பிக்கப்பட்டதுடன் மூல இலக்கியங்களுக்கு விளக்கவுரை, பதிப்புரை, பதவுரை என இலக்கியத் தளம் வாசிப்பிற்கு எளிதானது. தமிழின் சங்க இலக்கியம் அனைத்தும் செய்யுள் வடிவங்கள்.

இச் செய்யுள் வடிவ இலக்கியங்களுக்கு குறுகிய அடிகளைக் கொண்ட தனிப்பாடல்கள், நூற்றுக்கு மேற்பட்ட அடிகளைக் கொண்ட பாடல்கள், தொடர் நிலைச் செய்யுளாக வரும் காப்பியங்கள் எனப்பல வகையுள்ளது.

இச்செய்யுள்களை படைக்கும் புலவர்கள் அதற்கென வகுக்கப்பட்டுள்ள இலக்கண நெறிகளைக் கையாண்டுள்ளனர். அந்த இலக்கண நெறிகள் இன்றும் கையாளப்பட்டு மரபு செய்யுள்களில் பாடல்கள் புனைகின்றனர்.

விருந்தே தானும்புதுவது கிளந்த யாப்பின் மேற்றே
என தொல்காப்பியர் யாப்பு எனும் செய்யுள் படைப்புக்கு நெறிவகுக்கிறார். இதனால் எத்துறையாயினும் தமிழ் மொழியை அத்துறைக்கு ஏற்றவாறு பயன்படுத்திட இயல்கிறது.

இன வரலாறு, தமிழ் எழுத்து வரலாறு ஆகியவைப் பற்றி அடுத்தப் பகுதியில் விரைவில் வரும்...
  • தமிழின் வரலாறு - பாகம் 1
  • தமிழின் வரலாறு - பாகம் 2
நன்றி:கணியத்தமிழ்

Thursday, November 27, 2008

மாவீரர் நாளில் வீர வணக்கம்


உலக உருண்டையில் தமிழருக்குத் தனிநாடு காணும் உயிர்ப்போராட்டத்தில் வீரச்சாவடைந்த தமிழீழப் போராளிகளை நினைவுகூரும் வீரத்திருநாள் மாவீரர் நாள். தமிழ் – தமிழினம் – தமிழ்மண் – தமிழியல் ஆகிவற்றுக்காகப் போராடிப் போராடி தங்கள் இன்னுயிரை ஈகப்படுத்திய மாத்தமிழர் - மறத்தமிழர் அனைவருக்கும் வீரவணக்கம் செலுத்த இப்பதிவை இடுகிறேன்.

1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வாக, எழிற்சியாக, புனிதமாக உணர்வார்ந்த நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.


ஏனைய நாடுகளில் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும், தமிழீழ மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும் பெரும் வேறுபாடுகள் உண்டு.

ஏனைய நாடுகளில் எல்லாம் விடுதலைக்குப் பின் அமைந்த அரசுகளால் விழாக்கள் எடுக்கப்படுகின்றனவே தவிர போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலங்களில் விழாக்கள் எடுக்கப்படுவதில்லை.

ஆனால், விடுதலைப் போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் எதிரியின் அச்சுறுத்தல்கள், தாக்குதல்களுக்கு இடையிலும் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையிலும் போராட்டத்தையும் நடத்திக் கொண்டு தமிழீழ மக்கள் மண்ணின் விடிவிற்காகத் தம் இன்னுயிர்களை ஈந்த மாவீரர்களை எழிற்சியோடு நினைவு கூர்ந்து வருகின்றனர். மாவீரர்களின் பெற்றோர்கள் குடும்பத்தினரை போற்றிச் சிறப்பிக்கப்படுகின்றனர்.


வீரச்சாவடையும் தமிழீழ மாவீரர்களது வித்துடல்கள் மாவீரர் துயிலும் இல்லங்களில் கல்லறைகளில் விதைக்கப்பட்டும், நடுகற்கள் நாட்டப்பட்டும் வழிபாடு இயற்றப்படுகின்றது. மாவீரர் நாளில் மாவீரரின் பெற்றோர், குடும்பத்தினர் மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக எல்லா ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டு அன்று தமிழீழ மக்களால் போற்றி மதிப்பளிக்கப்படுகின்றனர். உலகிலே எங்குமே மாவீரர் நாள் நிகழ்வுகள் போல மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள், அவர்களின் பெற்றோரும், குடும்பத்தினரும் போற்றப்பட்டு மதிப்பளிக்கப்படும் நிகழ்வுகள் நடைபெற்றதாகவோ, நடைபெறுவதாகவோ வரலாறுகள் இல்லை.


மாவீரர் எழுச்சி நாட்களின் நிகழ்வுகளும், நடைமுறை ஒழுங்குகளும்

1989ஆம் ஆண்டில் நவம்பர் 27ஆம் நாளை மாவீரர் நாளாகவும் 1990ஆம் ஆண்டில் இருந்து 1994ஆம் ஆண்டுவரை நவம்பர் 21ஆம் நாளிலிருந்து 27ஆம் நாள் வரை மாவீரர் எழுச்சியாகவும்(வாரமாகவும்) தமிழீழ மக்கள் எழுச்சி நிகழ்வாக நடைபெற்று வந்த தமிழீழ மாவீரர் எழுச்சி நாள் நிகழ்வுகள் 1995ஆம் ஆண்டிலிருந்து நவம்பர் 25ஆம் நாள் முதல் 27ஆம் நாள்வரை மூன்று நாட்களில் எழுச்சி நாட்களாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

"தமிழின மாவீரர்களுக்கு வீர வணக்கம் செய்குவோம்"

Tuesday, November 25, 2008

மலேசியத் தமிழர் எழுச்சி நாள் 11/25

இன்று 25 நவம்பர் 2008. கடந்த 2007இல் இதே நாள் உலகத்தின் ஒட்டுமொத்த பார்வையும் மலேசியத் தமிழர் மீது விழுந்த நாள்.

மலேசியா விடுதலை அடைந்த 50ஆவது ஆண்டின் நிறைவின்போது, மலேசியத் தமிழர்கள் தங்களின் உரிமைகளைக் கோரி கோலாலம்பூர் மாநகரே அதிரும்படியாக மாபெரும் அளவில் கவனஈர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்த வரலாற்று நாள்.

நாடு முழுவதிலுமிருந்து சிறியோர், இளையோர், மங்கையர், அன்னையர், பெரியோர் என தமிழ்க் குமுகாயத்தின் உறுப்பினர்கள் அனைவரையும் படிநிகர்த்து தமிழர்கள் பேரணியாகத் திரண்ட வெற்றிப் பெருநாள்.

புறநானூற்றுத் தமிழரின் வீரத்தை மலேசிய மண்ணில் விதைத்துப் போன வீரத் திருநாள்.

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வரலாறாகவும் இனிவரும் 50 ஆண்டுகளுக்கும் மறையாத வரலாறாகவும் இருக்கவல்ல அந்த நவம்பர் இருபது இப்போதும் எல்லாத் தமிழர் உள்ளங்களிலும் மிகவும் பசுமையாகவே இருக்கிறது – மிகவும் பாரமாகவே கணக்கிறது.

மலேசியத் தமிழர்களிடையே இதற்கு முன்னர் என்றுமே இல்லாத அளவுக்கு அரசியல் விழிப்புணர்வையும் – குமுக ஒற்றுமையுணர்வையும் – உரிமைக் காப்புணர்வையும் – இனவியல் வரலாற்றுணர்வையும் ஏற்படுத்திய அந்த நவம்பர் இருபத்து ஐந்து இன்றும்கூட எல்லாத் தமிழர் எண்ணங்களிலும் மிகவும் செழிப்பாகவே இருக்கிறது – மிகவும் சிக்கலாகவே தொடர்கிறது.

அந்த நவம்பர் இருபத்து ஐந்தை வரலாற்று நாளாக உருமாற்றிய உடன்பிறப்புகள் இன்றும் இனி என்றும் எல்லாத் தமிழர் இதயங்களிலும் நிறைந்திருப்பர் – இரத்த அணுக்களில் உறைந்திருப்பர்.

அந்த நவம்பர் இருபத்து ஐந்தும் அந்த இனிய உடன்பிறப்புகளும் தமிழரிடையே ஏற்படுத்திய மாபெரும் சிந்தனைப் புரட்சியை ஓராண்டுக்குப் பின்பு இன்று நன்றியோடு நினைத்துப் பார்ப்போம்!

அந்த நவம்பர் இருபத்து ஐந்தும் அந்த இனிய உடன்பிறப்புகளும் ஏற்றிவைத்த புரட்சிச் சுடரை அணையவிடாமல் பாதுகாப்போம்!

அந்த நவம்பர் இருபத்து ஐந்தும் அந்த இனிய உடன்பிறப்புகளும் தொடக்கிவைத்த உரிமைச் சமரை, இந்நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்ட நிலையில், அண்ணல் காந்தியடிகள் காட்டிய அறவழியில் தொடர்ந்து வழிநடத்துவோம்!

அதற்காகவே நமக்கு வீரத்திலகமிடுகிறார் புரட்சிப் பாவேந்தர் பாரதிதாசனார். இப்படி:-


சிறுத்தையே வெளியில் வா!..


பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!
எலிஎன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலிஎனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!
நம்பினை பகலினை நள்ளிருள் என்றே
சிம்புட் பறவையே சிறகைவிரி! எழு!
சிங்க இளைஞனே திருப்புமுகம்! திறவிழி!
இங்குன் நாட்டுக் கிழிகழுதை ஆட்சியா?
கைவிரித் துவந்த கயவர், நம்மிடைப்
பொய்வி ரித்துநம் புலன்கள் மறைத்துத்
தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி
நமக்குள உரிமை தமக்கென் பார்எனில்,
வழிவழி வந்தஉன் மறத்தனம் எங்கே?
மொழிப்பற் றெங்கே? விழிப்புற் றெழுக!

இகழ்ச்சி நேர்ந்தால் இறப்போம் என்றும்
புகழ்ச்சி யேஎம் பூணாம் என்றும்
வையம் ஆண்ட வண்டமிழ் மரபே
கையி ருப்பைக் காட்ட எழுந்திரு!
குறிக்கும்உன் இளைஞர் கூட்டம் எங்கே?
மறிக்கொணாக் கடல்போல் மாப்பகை மேல்விடு!

நன்மொழிக்கு விடுதலை நல்கிட எழுந்திரு!
பொன்மொ ழிக்குநீ புதுமை ஏற்றுவாய்!
மக்களை ஒன்றுசேர்! வாழ்வை யுயர்த்துக!
கைக்குள திறமை காட்ட எழுந்திரு!
வாழ்க இளைஞனே, வாழ்க நின்கூட்டம்!
வாழ்க *திராவிட நாடு!
வாழ்கநின் வையத்து மாப்புகழ் நன்றே!

*மலையக என மாற்றிப் படிக்கவும்


Saturday, October 13, 2007

ஐயா பழ.வீரனார்க்கு வீரவணக்கம்


மலேசியத் திருமண்ணில் வந்துதித்த தமிழ்நெறி ஞாயிறு பாவலர் ஐயா அ.பு.திருமாலனார் அவர்களின் தமிழ்ப் பாசறையில் உருவாகி, தமிழே தன்னுடைய உயிராகி, தமிழரே தன்னுடைய உணர்வாகி காலமெல்லாம் தமிழ்மொழி இன சமய விடுதலைக்கும் வாழ்வுக்கும் தன்னை ஈகப்படுத்திக்கொண்ட தமிழ்ப் போராளி ஐயா பழ.வீரனார் அவர்கள்(வயது 54) கடந்த 1-9-2007ஆம் நாள் காரிக்கிழமை இரவு மணி 10.10க்குத் தமிழ்ப்பற்றாளர்களை ஆழந்த துயரத்தில் ஆழ்த்திவிட்டு இறைவன் திருவடி சேர்ந்தார்கள். அன்னாரின் தமிழ்ப்பணிகள் மலேசியத் திருமண்ணில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியன. பின்னாளின் மலேசியத் தமிழரின் வரலாற்றை எவரேனும் எழுதப் புகுந்தால் ஐயா பழ.வீரனாரின் அரும்பணிகளை விட்டுவிடுவாரானால் அது மிகப்பெரும் வரலாற்றுப் பிழையாகப் போய்முடியும். அந்த அளவுக்குத் தமிழுக்கும் தமிழருக்கும் பெரும்பணி செய்துள்ள அன்னாரின் ஆதன் அமைதிபெற எல்லாம் வல்ல அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் தனிப்பெரும் கருணையை வேண்டிக்கொள்கிறேன். அன்னாரின் அன்புசால் குடும்பத்தினர் எல்லாருக்கும் எனது ஆழந்த இரங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரின் வாழ்க்கை வரலாற்றை அறிய கீழ்க்காணும் இணைய இணைப்பைச் சொடுக்கவும்.
இணைய இணைப்பு:- http://www.mozhi.net/palaveerar/Palaveerar.htm

Thursday, January 05, 2006

உலகில் 7 கோடி தமிழர்

உலகில் 7 கோடியைத் தொடுகிறது தமிழினம்

இன்றைக்கு பார் எங்கும் தழைத்து விளங்கும் தமிழ் இனம் அதன் வேர்களை இந்தியாவிலும், ஈழத்திலும் கொன்டு தழைத்து நின்று எண்ணற்ற விழுதுகளைப் பார் எங்கும் பரப்பி தோற்றமளிக்கிறது.

தோராய தமிழின மக்கள்

வேர்கள்

தமிழ் நாடு(இந்தியா) - 6,10,90,000
தமிழீழம்(இலங்கை) - 50,00,000

விழுதுகள்

மலேசியா - 16,00,000
ரீயூனியன் - 3,50,000
இங்கிலாந்து - 3,00,000
தென் ஆப்பிரிக்கா - 3,00,000
பர்மா(மியன்மார்) - 2,50,000
சிங்கப்பூர் - 1,20,000
கனடா - 1,20,000
பிரான்சு - 1,00,000
மொரிசியஸ் - 1,00,000
ஆஸ்த்திரேலியா - 75,000
வளைகுடா நடுகள் - 25,000
கயனா - 10,000
பிஜி - 7,000

மேலும் 50 க்கு மேற்பட்ட நாடுகளில் 3,06,000

மொத்தம் 7 கோடியைத் தொடுகிறது தமிழினம்.
Blog Widget by LinkWithin