Tuesday, November 25, 2008

மலேசியத் தமிழர் எழுச்சி நாள் 11/25

ன்று 25 நவம்பர் 2008. கடந்த 2007இல் இதே நாள் உலகத்தின் ஒட்டுமொத்த பார்வையும் மலேசியத் தமிழர் மீது விழுந்த நாள்.

மலேசியா விடுதலை அடைந்த 50ஆவது ஆண்டின் நிறைவின்போது, மலேசியத் தமிழர்கள் தங்களின் உரிமைகளைக் கோரி கோலாலம்பூர் மாநகரே அதிரும்படியாக மாபெரும் அளவில் கவனஈர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்த வரலாற்று நாள்.

நாடு முழுவதிலுமிருந்து சிறியோர், இளையோர், மங்கையர், அன்னையர், பெரியோர் என தமிழ்க் குமுகாயத்தின் உறுப்பினர்கள் அனைவரையும் படிநிகர்த்து தமிழர்கள் பேரணியாகத் திரண்ட வெற்றிப் பெருநாள்.

புறநானூற்றுத் தமிழரின் வீரத்தை மலேசிய மண்ணில் விதைத்துப் போன வீரத் திருநாள்.

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வரலாறாகவும் இனிவரும் 50 ஆண்டுகளுக்கும் மறையாத வரலாறாகவும் இருக்கவல்ல அந்த நவம்பர் இருபது இப்போதும் எல்லாத் தமிழர் உள்ளங்களிலும் மிகவும் பசுமையாகவே இருக்கிறது – மிகவும் பாரமாகவே கணக்கிறது.

மலேசியத் தமிழர்களிடையே இதற்கு முன்னர் என்றுமே இல்லாத அளவுக்கு அரசியல் விழிப்புணர்வையும் – குமுக ஒற்றுமையுணர்வையும் – உரிமைக் காப்புணர்வையும் – இனவியல் வரலாற்றுணர்வையும் ஏற்படுத்திய அந்த நவம்பர் இருபத்து ஐந்து இன்றும்கூட எல்லாத் தமிழர் எண்ணங்களிலும் மிகவும் செழிப்பாகவே இருக்கிறது – மிகவும் சிக்கலாகவே தொடர்கிறது.

அந்த நவம்பர் இருபத்து ஐந்தை வரலாற்று நாளாக உருமாற்றிய உடன்பிறப்புகள் இன்றும் இனி என்றும் எல்லாத் தமிழர் இதயங்களிலும் நிறைந்திருப்பர் – இரத்த அணுக்களில் உறைந்திருப்பர்.

அந்த நவம்பர் இருபத்து ஐந்தும் அந்த இனிய உடன்பிறப்புகளும் தமிழரிடையே ஏற்படுத்திய மாபெரும் சிந்தனைப் புரட்சியை ஓராண்டுக்குப் பின்பு இன்று நன்றியோடு நினைத்துப் பார்ப்போம்!

அந்த நவம்பர் இருபத்து ஐந்தும் அந்த இனிய உடன்பிறப்புகளும் ஏற்றிவைத்த புரட்சிச் சுடரை அணையவிடாமல் பாதுகாப்போம்!

அந்த நவம்பர் இருபத்து ஐந்தும் அந்த இனிய உடன்பிறப்புகளும் தொடக்கிவைத்த உரிமைச் சமரை, இந்நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்ட நிலையில், அண்ணல் காந்தியடிகள் காட்டிய அறவழியில் தொடர்ந்து வழிநடத்துவோம்!

அதற்காகவே நமக்கு வீரத்திலகமிடுகிறார் புரட்சிப் பாவேந்தர் பாரதிதாசனார். இப்படி:-


சிறுத்தையே வெளியில் வா!..


பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!
எலிஎன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலிஎனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!
நம்பினை பகலினை நள்ளிருள் என்றே
சிம்புட் பறவையே சிறகைவிரி! எழு!
சிங்க இளைஞனே திருப்புமுகம்! திறவிழி!
இங்குன் நாட்டுக் கிழிகழுதை ஆட்சியா?
கைவிரித் துவந்த கயவர், நம்மிடைப்
பொய்வி ரித்துநம் புலன்கள் மறைத்துத்
தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி
நமக்குள உரிமை தமக்கென் பார்எனில்,
வழிவழி வந்தஉன் மறத்தனம் எங்கே?
மொழிப்பற் றெங்கே? விழிப்புற் றெழுக!

இகழ்ச்சி நேர்ந்தால் இறப்போம் என்றும்
புகழ்ச்சி யேஎம் பூணாம் என்றும்
வையம் ஆண்ட வண்டமிழ் மரபே
கையி ருப்பைக் காட்ட எழுந்திரு!
குறிக்கும்உன் இளைஞர் கூட்டம் எங்கே?
மறிக்கொணாக் கடல்போல் மாப்பகை மேல்விடு!

நன்மொழிக்கு விடுதலை நல்கிட எழுந்திரு!
பொன்மொ ழிக்குநீ புதுமை ஏற்றுவாய்!
மக்களை ஒன்றுசேர்! வாழ்வை யுயர்த்துக!
கைக்குள திறமை காட்ட எழுந்திரு!
வாழ்க இளைஞனே, வாழ்க நின்கூட்டம்!
வாழ்க *திராவிட நாடு!
வாழ்கநின் வையத்து மாப்புகழ் நன்றே!

*மலையக என மாற்றிப் படிக்கவும்


3 comments:

மு.வேலன் said...

இந்த எழுச்சி என்றென்றும் தொடர மகாகவியின் வரிகளை காண்போம்:

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே – நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் – இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?

http://aranggetram.blogspot.com/2008/11/25112007.html

yatim said...

Let us all make 11/25 a historic day in the annals of Malaysian Indians. Let us teach and our next generation the importance of this day in the history of Malaysian Indians. Let us remember the heroes of this days. Let us pray for them. This a day of new beginning for Indians in this country.

Anonymous said...

எழுப்புவது அருஞ்செயல்.
எழுவது நற்செயல்.
மீண்டும் உறங்குவது கொடுஞ்செயல்.

Blog Widget by LinkWithin