Tuesday, June 19, 2007

தமிழ்ச்சங்கம் - Sanggam



மூன்று சங்கங்கள் வைத்து பாண்டிய மன்னர் முத்தமிழை வளர்த்தனர் என்ற செய்தி பரம்பரை பரம்பரையாகச் சொல்லப்பட்டு வருகிறது. முச்சங்கங்கள் பற்றி பழைய இலக்கிய உரையாசிரியர்கள் ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளனர். அவர்களுள் முச்சங்கம் பற்றி விரிவான விளக்கம் தருபவர், இறையனார் களவியலுரை ஆசிரியர் நக்கீரர் ஆவார்.

பழந்தமிழ் மண்ணில் இருந்து விளங்கிய தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் ஆகிய மூன்றையும் பாண்டிய மன்னர்கள் போற்றிப் புரந்தனர். இந்தச் சங்கங்களில் புலவர்கள் இருந்தார்கள். அவர்கள் தமிழைச் செம்மைப்படுத்தினார்கள்; செழுமைப்படித்தினார்கள்; அரிய நூல்கள் இயற்றினார்கள்; நூல்களை அரங்கேற்றினார்கள். சங்க காலம் தமிழின் பொற்காலமாக விளங்கியது.

முதற்சங்கம் கடல்கொண்ட தென்மதுரையில் இருந்தது. அதற்குப் பிறகு கபாடபுரத்தில் இடைச்சங்கம் இருந்தது. இவை இரண்டும் கடல்கோள்களால் அழிந்து போயின. பின்னர் தோன்றிய மதுரையில் மூன்றாம் தமிழ்ச்சங்கம் இருந்ததாக வரலாறு கூறுகின்றது.

1.தலைச்சங்கம்:- முதற்சங்கத்தில் மொத்தம் 549 புலவர்கள் வீற்றிருந்தனர். அவர்களுள் அகத்தியனார், திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள், குன்றெறிந்த குமரவேல், முரஞ்சியூர் முடிநாகராயர், நிதியின் கிழவன் ஆகியோர் சிலராவர். இவர்களை உள்ளிட்டு 4449 புலவர்கள் இச்சங்கத்தில் பாடியுள்ளனர். அகத்தியம், பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை ஆகிய நூல்கள் இந்தச் சங்கத்தில் எழுந்தவையாகும். அவற்றுள், அகத்தியம் என்பது தமிழில் எழுதப்பட்ட மிகப்பழமையான இலக்கண நூலாகக் கருதப்படுகிறது. இந்தத் தலைச்சங்கம் 4440 ஆண்டுகள் நடைபெற்றன. பாண்டிய மன்னன் காய்ச்சின வழுதி தொடங்கி கடுங்கோன் வரையில் 89 மன்னர்கள் இந்த முதலாவது சங்கத்தைக் காத்து வழிநடத்தினர்.
2.இடைச்சங்கம்:- பாண்டியன் வெண்தேர்ச்செழியன் என்ற மன்னரால் இடைசங்கம் நிறுவப்பட்டது. இம்மன்னன் தொடங்கி முடத்திருமாறன் வரையில் 59 மன்னர்கள் இந்தச் சங்கத்தைப் புரந்து வளர்த்தனர். அகத்தியர், தொல்காப்பியர், இருந்தையூர்க் கருங்கோழி மோசி, வெள்ளூர்க் காப்பியன், சிறுபாண்டுரங்கன், திரையன் மாறன், துவரைக்கோன், கீரந்தை முதலிய 59 புலவர்கள் இடைச்சங்கத்தில் அரங்கேற்றம் கண்டனர். குருகும் வெண்டாளியும் வியாழமாலை அகவலும் இச்சங்கத்தில் பாடப்பட்டன. 3700 ஆண்டுகளாக இந்த இடைச்சங்கம் நடைபெற்றுள்ளது.

3.கடைச்சங்கம்:- மூன்றாவது சங்கமான கடைச்சங்கம் முடத்திரு மாறனால் நிறுவப்பட்டது. உக்கிரப் பெருவழுதி வரையில் 49 மன்னர்கள் இதனைக் காத்து வந்தனர். சேந்தம்பூதனார், அறிவுடையரனார், பெருங்குன்றூர் கிழார், இளந்திருமாறன், மதுரையாசிரியர், நல்லந்துவனார், மருதனிளநாகனார், கணக்காயனார் மகனார் நக்கீரனார் முதலிய 49 புலவர்கள் இச்சங்கத்தில் பங்கேற்றனர். நெடுந்தொகை நானூறு, குறுந்தொகை, நற்றிணை நானூறு, புறநானூறு, பரிபாடல், ஐங்குறுநூறு, கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை ஆகிய கடைச் சங்கத்தில் எழுந்த நூல்களாகும். கடைச்சங்கம் 1850 ஆண்டுகள் நிலவியது.

மேலே சொல்லப்பெற்ற செய்திகளை இறையனார் களவியலுரை கூறுகின்றது. இந்த நூல் பத்துத் தலைமுறைகளில் வாய்மொழியாகக் கூறப்பட்டுப் பின்னர் எழுத்து வடிவம் பெற்றது என்று சொல்லப்படுகிறது. இவ்விளக்கத்தின்படி, 197 அரசர்கள் காலத்தில் ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகள் மூன்று சங்கங்களும் இயங்கின என அறிகின்றோம். சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லாரும் பாண்டிய நாட்டுச் செவ்வூர்ச் சிற்றம்பலக் கவிராயர் வீட்டு ஏட்டுச் செய்தியும் முச்சங்கங்கள் பற்றி மொழிகின்றன.

இவ்வாறு மூன்று தமிழ்ச்சங்கங்கள் இருந்தமை உண்மையே என்பதை டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர், கா.சுப்பிரமணிய பிள்ளை, கா.அப்பாதுரையார், ஞா.தேவநேயப் பாவாணர் போன்றோர் அரிய சான்றுகளோடு நிறுவியும் உள்ளனர்.
Blog Widget by LinkWithin