(மலேசியாவில் நல்லதமிழை முன்னெடுக்கும் ஏடாகிய 'உங்கள் குரல்' திங்களிதழில் அதன் ஆசிரியர் கவிஞர் செ.சீனி நைனா முகம்மது அவர்கள் எழுதிய கட்டுரை)
தமிழ் சோறு போடுமா? இப்போதெல்லாம் இப்படி வினவுவது தமிழரில் பலருக்குப் புது மரபாகி(Trend) விட்டது.
தங்களை முற்போக்குச் சிந்தனையாளர்கள் என்று நம்பிக் கொண்டிருக்கின்ற சிலர், தங்களின் 'முன்போக்கை' வெளிப்படுத்தும் முயற்சியில், வாயினிக்க எழுப்பும் வழக்கமான வினா இது. இவர்கள் சோறு உண்பது மட்டுமே வாழ்க்கை என்றும், எது சோறு போடுமென்று தோன்றுகிறதோ அதை மட்டுமே செய்வதுதான் வெற்றிக்கு வழி என்றும் கருதுபவர்கள்.
இன்னும் கொஞ்சம் நாளில் இவர்கள், சமயம் சோறு போடுமா? பண்பாடு சோறு போடுமா? உண்மை சோறு போடுமா? ஒழுக்கம் சோறு போடுமா? என்று வரிசையாக வினாக்களை எழுப்பி இவற்றுள் எதுவுமே சோறு போடாது என்றும், எனவே இவையெல்லாம் தேவையில்லை என்றும் கூறத் தொடங்கினாலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை.
இந்தச் சோற்றுப் பட்டாளத்தை நோக்கி நாமும் சில வினாக்களை எழுப்பலாம்.
1.தமிழ் என்பது மொழி. மொழியின் முதற்பயன் நம் கருத்தைப் புரிந்து கொள்ளுமாறு வெளிப்படுத்தவும் பிறர் கருத்தை நாம் சரியாகப் புரிந்து கொள்ளவும் கருவியாக இருப்பது. இந்தப் பணியைச் சரியாகவும் திறம்படவும் செய்வதில் வேறு எந்த மொழியையும் விடத் தமிழ் தாழ்ந்ததன்று.
2.இன்று அனைத்துலக மொழியாக முதனிலை பெற்றுள்ள ஆங்கிலத்தையும் மிஞ்சிய கருத்துக் தெளிவு கொண்டது தமிழ். எடுத்துக் காட்டுகள் எத்தனையோ உள. ஆங்கில வாக்கியத்தில் "யூ" (You) என்னும் சொல் ஒருவரைக் குறிக்கிறதா பலரைக் குறிக்கிறதா என்பதை நாம் புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் ஆங்கிலத்தில் ஒருவருக்கும் பலருக்கும் அந்த ஒரே சொல்தான் பயனீட்டில் உண்டு. தமிழில் நீ என்றும் நீங்கள் என்றும் தனித்தனி சொல் உண்டு. அ•றிணையான 'அவை'க்கும் உயர்திணையான 'அவர்'களுக்கும் ஆங்கிலத்தில் 'தேய்' (They) என்னும் ஒரே சொல்தான். மாமாவும் 'அங்கிள்'தான் சிற்றப்பாவும் 'அங்கிள்'தான். அத்தையும் 'ஆண்டி'தான். சிற்றன்னையும் 'ஆண்டி'தான்.
3.மலேசியாவில் நடந்த முதலாவது தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் மறைந்த பேராசிரியர் தனிநாயக அடிகள் ஒரு வினா எழுப்பினார். "நீ உன் தந்தைக்கு எத்தனையாவது பிள்ளை?" என்றும் வினாவை ஆங்கிலத்தில் ஒரே வாக்கியத்தில் கூற இயலுமா என்றார். இன்று வரை முடியும் என்று யாரும் முன்வந்து விளக்கக் காணோம்.
4.இன்றைய அறிவியலுக்குத் தேவையான பல சொற்கள் தமிழில் இல்லையே என அலுத்துக் கொள்கிறார்கள் சிலர். அன்றைய அறிவியல் ஆக்கங்களுக்கான சொற்கள் எல்லாம் ஆங்கிலத்தில் மட்டும் முன்னரே இருந்தனவா என்ன? ஆய்வுகளும் கண்டு பிடிப்புகளும் ஆங்கிலத்திலேயே செய்யப்படுவதால் அவற்றுக்கான புதிய சொற்களும் அதிலேயே உருவாக்கப்படுகின்றன.
5.பாதிக்குமேல் பிறமொழிச் சொற்களை வைத்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் ஆங்கிலத்தில் புதிய சொற்களை உருவாக்க முடியும்போது தன்காலிலேயே நிற்கவல்ல தமிழில் அதைச் செய்ய முடியும். அப்படிச் செய்யாமலிருப்பது தமிழரின் குறையே அன்றித் தமிழின் குறையன்று.
1.தமிழ் சோறு போட வேண்டுமா? (பகுதி 1)