Saturday, November 26, 2011

மலேசியாவில் தமிழ்க்காப்பு மாநாடுதமிழ்ப்பள்ளியும் தமிழ்க்கல்வியும் மலேசியத் தமிழர்களின் முக முகாமையான அடையாளங்களாகும். இவற்றில், தெரிந்தோ தெரியாமலோ ஏற்படும் பாதிப்புகள் ஒட்டுமொத்தச் சமுதாயத்திற்கே பேரிழப்பாக அமைந்துவிடும். தமிழ்ப்பள்ளியும் தமிழ்க்கல்வியும் தாழ்ந்து போகுமானால், தமிழ்மொழியின் நிலையும் கவலைக்கிடமாகிப் போகும். தமிழ்மொழிப் பாதுகாப்பினை உறுதிசெய்ய வேண்டிய தமிழர்கள், சிறிதும் அக்கறையின்றிப் பொறுப்பற்ற நிலையில் இருந்தால் காலப்போக்கில் நமது தமிழ்மொழி தானே அழிய நேரிடும். எனவே, தாய்மொழியைப் பேணிக்காக்க வேண்டிய பெரும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு.

பல்வேறு வகைகளில் தாய்மொழிப் பாதுகாப்பினை நாம் உறுதிசெய்ய வேண்டியவர்களாக இருக்கின்றோம். இந்தப் பொறுப்பினை உணர மறுப்பது தமிழ்மொழிக்குத் தீங்கு விளைவிக்கும். இதனைக் கவனத்தில் கொண்டு சற்று விழிப்புடன் செயல்பட தமிழுணர்வாளர்களை மலேசியத் தமிழ்க் காப்பகம் கேட்டுக்கொள்கின்றது.

இதன் தொடர்பாக, மலேசியாவில் தமிழ்மொழியின் நலனைக் காக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் காரணமாக மலேசியாவில் ‘தமிழ்க்காப்பு மாநாடு’ நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மலேசியத் தமிழ்க் காப்பகத்தின் ஏற்பாட்டில் மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ் ஆய்வியல் துறையின் ஆதரவுடன் இந்த மாநாடு நடக்கவுள்ளது. 

அதன் விவரம் பின்வருமாறு:-

      நாள்  :- 11-12-2011 (ஞாயிறு)
      நேரம் :- காலை மணி 9:00 - மாலை மணி 6:00
      இடம்  :- விரிவுரை அரங்கம் ஏ, மலாயாப் பல்கலைக்கழகம்

இம்மாநாட்டில் நான்கு ஆய்வுக் கட்டுரைகள் படைக்கப்பட உள்ளன. 

அவற்றின் விவரம்:-

1)தமிழ்ப்பாட நூல்களில் காணப்படும் குறைகளும் அவற்றைக் களைவதற்கான நடவடிக்கைகளும்.

2)தமிழ் ஒலி ஒளிபரப்பு மின்னூடகங்கள், இதழியல் துறை ஆகியவற்றில் தமிழ்மொழியின் தரம்


3)தமிழ்ப்பள்ளி, இடைநிலைப்பள்ளிகளில் பயிலும் தமிழ் மாணவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களும் தீர்வுகளும்

4) மலேசியாவில் தமிழ்மொழியின் பயன்பாடும் எதிர்காலமும்

இந்த மாநாட்டில் பங்குபெற பேராளர் கட்டணம் RM20.00 (இருபது ரிங்கிட் மட்டும்) செலுத்த வேண்டும். பேராளர்களுக்கு மாநாட்டுப் பை, உணவு, காலை மாலை தேநீர் ஆகியவை வழங்கப்படும். பேராளர்கள் விரைந்து முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.

தமிழ்மொழிப் பாதுகாப்பையும் பயன்பாட்டையும் முழுமயாகக் கொண்டு நடைபெறும் தமிழ்க்காப்பு மாநாட்டில், தமிழ் மொழி, இனம் சார்ந்த சமூக இயக்கங்களின் தலைவர்கள், பொறுப்பாளர்கள், கல்விக்கழகப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், தமிழ்க்கல்வி அதிகாரிகள், தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், தமிழியல் துறை மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்கள், தமிழ்ப்பணியாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ்ப்பள்ளி, தமிழ்க்கல்வி, தமிழ்மொழி மீது அன்பும் அக்கறையும் கொண்ட அனைவரும் கலந்துகொண்டு பேராதரவு வழங்க வேண்டும் என மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொள்கின்றனர்.

மாநாடு தொடர்பான மேலதிக விவரங்களுக்கு:- 
சு.வை.லிங்கம் (019-6011569) /  முனைவர் சு.குமரன் (012-3123753) / இரெ.சு.முத்தையா (012-7649991)

@சுப.நற்குணன், மலேசியா

Wednesday, November 23, 2011

மதுரை இளங்குமரனார் மலேசியா வருகை#தம்முடைய ஓருடலில் தமிழையும் திருக்குறளையும் ஈருயிராகத் தாங்கி வையத்துள் வாழ்வாங்கு வாழும் தமிழ்ப் பெரியார்..

#திருக்குறள் தவச்சாலை நிறுவி வள்ளுவர் காட்டிய வழியே வையக வழி எனத் தமிழ் வாழ்வியலைப் போற்றிப் பரப்பும் பேரறிஞர்..

#தமிழைத் தமிழாக மீட்கவும் காக்கவும் வாழ்நாளையே ஒப்புக்கொடுத்து, இதுவரை 390க்கும் மேற்பட்ட அரிய நூல்களை எழுதியிருக்கும் ஒப்பற்ற தமிழறிஞர்..

#தமிழியல் கரணங்கள்(சடங்கு) வழியாகவும் தெய்வத் திருமறையாம் திருக்குறளின் சான்றாகவும் இதுவரை 4000க்கும் மேற்பட்ட தமிழ்த்திருமணங்களை நடத்தி வைத்த தமிழ் அந்தணர்..

#ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாகிய குண்டலகேசியை மீட்டெழுதி உயிர்கொடுத்த அரும்பெறல் சான்றாளர்..

#அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் 52 கூட்டமைப்பின் சார்பில் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ அளிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்ட தமிழ்க்கடல்..

செந்தமிழ் அந்தணர் ஐயா மதுரை இளங்குமரனார் மலேசியா வந்துள்ளார். ஐயா அவர்களின் தாள்பணிந்து வணங்கி மலேசியத் தமிழுணர்வாளர்கள் சார்பில் வருக வருகவென வரவேற்பு மொழிகின்றேன்.

தமிழ் இலக்கண இலக்கியங்களில் ஆழ்ந்த பயிற்சியுடைய ஐயா இரா.இளங்குமரனார் பள்ளி ஆசிரியராக விளங்கியவர். பள்ளிக்கூடமே இல்லாத தம்முடைய சொந்த ஊரான வாழவந்தான் புரத்தில் தாமே சொந்தமாக ஒரு பள்ளிக்கூடத்தை நிறுவியவர். நூலாசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், உரையாளர் எனப் பல முகங்களைப் பெற்றுத் தமிழுக்கு ஆக்கமான பல பணிகளைச் செய்துள்ளார்.

இவர் எழுதிய நூல்கள் பல நூறாக விரியினும் இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், பாவாணர் வரலாறு, குண்டலகேசி, யாப்பருங்கலம், புறத்திரட்டு, திருக்குறள் தமிழ் மரபுரை, காக்கைபாடினியம், தேவநேயம் உள்ளிட்ட நூல்கள் இவர்தம் தமிழ்ப்பணிக்கு என்றும் நின்று அரண் சேர்க்கும்.

திருக்குறள் வழியில் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட புலவர் ஐயா இளங்குமர னார் வாழும் வள்ளுவராகவே விளங்குபவர். திருச்சிராப்பள்ளிக்கு மேற்கில் காவிரிக்கரையின் தென்புறம் அமைந்துள்ள உள்ள அல்லூர் என்னும் ஊரில் திருவள்ளுவர் தவச்சாலை அமைத்துப், பாவாணர் நூலகம் கண்டு, தவப் பள்ளியில் உறைந்திருப்பவர்.

எஞ்சியநாளெல்லாம் தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழன்று திருக்குறள் உரைப்பொழிவுகள் வழங்கியும் திருமணங்களைத் தமிழ்வழியில் நடத்தியும் நல்லற மணமக்களை இல்லறப்படுத்தியும் தமிழ் மக்களைத் தமிழ்வழியில் வாழவைத்தும் தாமும் வாழ்வாங்கு வாழ்ந்துவரும் ஒப்பற்ற சான்றாளர் செந்தமிழ் அந்தணர் புலவர் ஐயா மதுரை இரா.இளங்குமரனார்.

புலவர் ஐயா அவர்கள் தற்போது நமது மலேசியாவுக்கு வந்திருக்கிறார். நாடு முழுவதும் சுற்றுச்செலவு மேற்கொண்டு வருகிறார். அடுத்து வரும் இரண்டு வாரக் காலத்திற்கு நாடு முழுவதும் அவருடைய பொழிவுரை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

ஐயா அவர்களின் சொற்பொழிவு நிகழ்ச்சியை தங்கள் ஊர்களில் ஏற்பாடு செய்ய விரும்பும் தமிழன்பர்கள் கீழ்க்காணும் எண்களில் தொடர்புகொள்ளலாம்.

தமிழ்த்திரு அருள்முனைவர்     : 017-3314541
தமிழ்த்திரு மாரியப்பனார்      : 012-3662286


தமிழ்க்கடல் ஐயா மதுரை இரா.இளங்குமரனாரின் மலையகப் பயணம் எல்லாவகையிலும் வெற்றிகரமாக அமைந்திட வேண்டும். இப்பயணத்தின் வழியாக மலேசியத் தமிழர்கள் புது நம்பிக்கையும் எழுச்சியும் பெறல் வேண்டும்.

புலவர் ஐயா, நிலையான நலத்துடனும் நீடித்த வாழ்நாளுடனும் இன்றுபோல என்றும் வாழ்வாங்கு வாழ்ந்து தமிழுக்கும் தமிழருக்கும் வலுவும் வளமும் உட்டிட எல்லாம் வல்ல இயற்கைச் செம்பொருளாம் இறைமைத் திருவருள் துணைநிற்க வேண்டுவோமாக!

@சுப.நற்குணன், மலேசியா.


Saturday, November 19, 2011

ஆசிரியர்கள் உழைப்பில் குளிர்காயும் தனியார் நிறுவனங்கள்
2011ஆம் ஆண்டுக்கான யுபிஎசார் முடிவுகள் வெளியாகிவிட்டன. இவ்வாண்டில் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 1191 மாணவர்கள் அனைத்து ஏழு பாடங்களிலும் ‘ஏ’ பெற்று (7ஏ) சாதனை படைத்துள்ளனர். யுபிஎசார் வரலாற்றிலேயே தமிழ்ப்பள்ளி மாணவர்களின் 7ஏ தேர்ச்சி விகிதம் ஆயிரத்தை தாண்டியிருப்பது இதுவே முதன் முறையாகும்.

இந்த வரலாற்றுச் சாதனைக்குப் பின்னணியில் பலர் இருக்கலாம்; பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், வேறு யாரையும் விட; வேறு எந்தக் காரணத்தையும் விட இந்த வெற்றிக்கு முழுமுதற் காரணமானவர்கள் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள்தாம் என்பது மறுக்கவியலாத உண்மையாகும். ஆசிரியர்களின் அயராத உழைப்பும் ஈகமும் ஒன்றுசேர்ந்ததால் தான் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது என்றால் மிகையன்று.
 
ஆசிரியர்களை அடுத்து பெற்றோர்களின் பங்களிப்பும் அக்கறையும் இந்த வெற்றிக்குக் காரணமாக இருந்திருக்கிறது என்றால் மிகையன்று. ஏனெனில், குழந்தை பிறந்தது முதற்கொண்டு அக்குழந்தை ஆறாம் ஆண்டில் யுபிஎசார் தேர்வு எழுதுகின்ற வரையில் உடனிருந்து கவனித்து வளர்த்தெடுத்து வழிகாட்டியவர்கள் பெற்றோர்களே ஆவர்.

ஆனால், ஆசிரியர்களின் உழைப்பை மறுதளிக்கும் வகையிலும், பெற்றோரின் கவனிப்பை ஏளனப்படுத்தும் வகையிலும் நாளிதழ்களில் சில செய்திகள் வந்த வண்ணமிருக்கின்றன. அதாவது, சில கல்வி நிறுவனங்களும் தனிக்கற்கை (Tuition) வகுப்புகளும் முண்டியடித்துக் கொண்டு இந்த வெற்றிக்காகச் சொந்தம் கொண்டாடுகின்றன. தங்கள் நிறுவனத்தில் அல்லது வகுப்பில் படித்த இத்தனை மாணவர்கள் 7ஏ எடுத்தார்கள்; அத்தனை மாணவர்கள் 5ஏ எடுத்தார்கள் என்றெல்லாம் செய்தி போட்டு (மலிவு)விளம்பரம் தேடுகிறார்கள்.

  • முதலாம் ஆண்டு தொடங்கி ஆறாம் ஆண்டு வரையில், 6 ஆண்டுகள் மாணவர்களுக்கு வகுப்பறையில் கற்றல் கற்பித்தை முறையாக நடத்தியவர்கள் ஆசிரியர்கள்.
  • 6 ஆண்டுகள் பயிற்சிகளைக் கொடுத்தும், அவற்றைத் திருத்தியும், பிழைதிருத்தம் செய்ய வலியுறுத்தியும், வீட்டுப் பாடங்கள் கொடுத்தும் மாணவர்களின் ஆற்றலை வளர்த்தெடுத்தவர்கள் ஆசிரியர்கள்.
  • 6 ஆண்டுகள் குறைதீர் நடவடிக்கை, திடப்படுத்தும் நடவடிக்கை, வளப்படுத்தும் நடவடிக்கை எனப் பல்வேறு வழிகளில் கற்றல் கற்பித்தலைச் செய்தவர்கள் ஆசிரியர்கள்.
  • 6 ஆண்டுகள் நேரம் காலம் பாராமல் கூடுதல் வகுப்பு, சிறப்பு வகுப்பு, விடுமுறை கால வகுப்பு என நடத்தி மாணவர்களை உருவாக்கியவர்கள் ஆசிரியர்கள்.
  • 6 ஆண்டுகள் பல்வேறு தேர்வுகளை நடத்தி மாணவர்களின் கல்வி வளர்ச்சியை முறையாகக் கவனித்து முன்னேற்றியவர்கள் ஆசிரியர்கள்.
  • 6 ஆண்டுகளாக மாணவர்களின் உடனிருந்து அரவணைத்து அவர்கள் துவண்டு விழும்போதெல்லாம் தூக்கி நிறுத்தி, தன்னம்பிக்கை ஊட்டி, ஊக்கப்படுத்தியவர்கள்   ஆசிரியர்கள்.
  • ஆறாம் ஆண்டில் மாணவர்களுக்குப் பல வழிகாட்டிக் கருத்தரங்குகள் நடத்தி, தேர்வு அணுகுமுறைகளைக் கற்பித்து, வினாக்களுக்கு விடையெழுதும் நுட்பங்களைக் கற்றுக்கொடுத்து வழிகாட்டியவர்கள் ஆசிரியர்கள்.
  • யுபிஎசார் தேர்வு நாட்களில் தேர்வு மண்டப வாசலில் நின்று மாணவர்களின் தோள்களில் தட்டிக்கொடுத்து, ஊக்கமூட்டி வழியனுப்பி வைத்தவர்கள் ஆசிரியர்கள்.
  • அதிகாரிகள், தலைமையாசிரியர்கள், பெற்றோர்கள், பொது அமைப்புகள், சமுதாயம் ஆகிய தரப்பினரின் அழுத்தங்களுக்கு இடையில் அயராமல் அல்லும் பகலும் உழைத்தவர்கள் ஆசிரியர்கள்.

மேலே சொன்ன எல்லாவற்றையும் மறுதளிக்கும் வகையில்; இருட்டடிப்புச் செய்யும் வகையில் சில கல்வி நிறுவனங்கள் செயல்படுவது வருத்தமளிக்கிறது. ஒட்டுமொத்த தமிழ் ஆசிரியர்களின் உள்ளத்தையும் வேதனையில் ஆழ்த்துகிறது.

ஆறாம் ஆண்டில் மட்டும் சில மாதங்களுக்கு வகுப்புகளை நடத்திவிட்டு, கல்வி விரதம், கல்வி புரட்சி என்றெல்லாம் படம் காட்டிவிட்டு மாணவர்களின் வெற்றிக்கும் தேர்ச்சிக்கும் தாங்களே முழுக் காரணம் என உரிமை கொண்டாடுவதும் நாளிதழ்களில் பக்கம் பக்கமாகச் செய்திகள் போடுவதும் விளம்பரம் போடுவதும் கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு செய்கின்ற கல்வி நிறுவனங்கள் மாணவர்கள் பயின்ற தமிழ்ப்பள்ளிகளைப் பற்றி செய்தியில் எதுவும் குறிப்பிடுவதே இல்லை. மாறாக, ஏதோ அந்த நிறுவனத்திலேயே மாணவர்கள் படித்து தேர்வு எழுதியதைப் போன்ற தோற்றத்தைப் பெரிதுபடுத்திக் காட்டுகிறார்கள்.

அதுமட்டுமல்லாது, இவர்களின் செய்தியிலும் விளம்பரத்திலும் 5ஏ பெற்ற தேசியப் பள்ளி மாணவர்கள் பற்றியும் கொட்டை எழுத்துகளில் போட்டுக்கொள்கிறார்கள். இதனால், தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்கின்ற பெற்றோர்களின் மனநிலையில் தடுமாற்றம் ஏற்படுகின்றது. இதன் விளைவாக, தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் ஆண்டுப் பதிவு குறைந்து போகலாம் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

இந்த விடயத்தில் தனியார் கல்வி நிறுவங்களை மட்டும் குறைசொல்வதில் பயனில்லை. நமது தமிழ் நாளிதழ்கள் குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தின் செய்திகளுக்கு முதலிடம் கொடுத்து விளம்பரப்படுத்துகின்றன. இவ்வாறான செய்திகளால் காலப்போக்கில் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஏற்படப்போகின்ற விளைவுகளைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காமல் செயல்படுகின்றனர். ஆகவே, தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்குப் பெரிதும் பங்களித்துவரும் நமது தமிழ் நாளிதழ்கள் இதுபோன்ற செய்திகளைத் தவிர்ப்பது நல்லது.

தனியார் கல்வி நிறுவனகளும், தனிக்கற்கை வகுப்புகளும் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் உழைப்பில் குளிர்காய்வதை உடனடியாக நிறுத்திகொள்ள வேண்டும். ஆசிரியர்களின் ஈகத்தைப் பயன்படுத்திக்கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு ஈட்டத்தைத் தேடிக்கொள்ளும் தன்னலப் போக்கைக் கைவிட வேண்டும். இயலுமானால், அவர்கள் தங்கள் பங்களிப்பை சமுதாய உணர்வோடு செய்ய முன்வர வேண்டும். இங்குச் சொல்லப்பட்ட கருத்துகள் அவர்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டவை என நினைக்காமல், தமிழ்ப்பள்ளி, தமிழ்க்கல்வி, சமுதாய நலன் ஆகியவற்றின் அடிப்படையில் சொல்லப்பட்டவை என பொறுப்புணர்வுடன் எண்ணிப்பார்க்க வேண்டும்.

  • பி.கு:- இந்தச் செய்தி மலேசியாவில் வெளிவரும் மூன்று நாளிதழ்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

@சுப.நற்குணன்

Friday, November 18, 2011

இணையம் வழி தமிழ் கற்றல் கற்பித்தல் (பாகம் 4)
4.0   இணைய வழிக் கற்றல் கற்பித்தலின் மேன்மைகள்

இணையம் வழியாகத் தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தல் நடைபெறுவதால் குறிப்பிடத்தக்க நன்மைகள் விளைகின்றன. அவற்றைப் பின்வருமாறு பட்டியலிடலாம்:-

1)  மாணவர்கள் பாடங்களை எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது.
2)  ஒன்றைப் பற்றிய மேலதிக தகவலை அறிந்துகொள்ளும் வகையில்
    தொடுப்புகளைக் (hypelinks) கொண்டிருக்கிறது.
3) வெவ்வேறு ஆற்றலும் விருப்பமும் கொண்ட மாணவர்கள் தாங்கள் விரும்பும்
   வகையில்  கற்பதற்கு வாய்ப்பினை வழங்கிகின்றது.
4)  எழுத்து (text), ஒலி (sound), காட்சி (visual), அசைவுப்படம் (graphics),
   நிகழ்ப்படம் (video), உடலியக்கம் (psychomotor), இருவழித் தொடர்பு (interactive)
   எனப் பலதரப்பட்ட வகையில் கற்பதற்குரிய சூழல் இருக்கின்றது.
5)  மாணவர்களின் கற்றல் திறனையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கிறது.
6)  தனியாகக் கற்பதற்குரிய (individualise learning) வாய்ப்பு கிடைக்கிறது.
7) மாணவரை இலக்காகக் கொண்ட கற்றல் கற்பித்தல் சிறப்பாக நடைபெறுகிறது.
8) மனமகிழ்ச்சியுடன் கற்பதோடு வெல்விளி(சவால்) நிறைந்த கற்றல் சூழலை
   உருவாக்கிக் கொடுகின்றது.
9) மாணவர்களின் ஆக்கச் சிந்தனையையும் ஆய்வுச் சிந்தனையையும்
   வளர்த்துகொள்ள உதவுகிறது.
10) குறிப்பிட்ட காலம், இடம், சூழல் என எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல்
    கற்பதற்குரிய வாய்ப்பு கிடைக்கிறது.
11) கிடைப்பதற்கு அரிய தகவல்களை விரைவாகவும் விரிவாகவும் பெற முடிகின்றது.
12)  குறைந்த செலவில் விலைமதிப்பில்லாத் தகவல்களையும் தரவுகளையும்
    நொடிப்பொழுதில் மிக எளிதாகப் பெற முடிகிறது. 
13) கற்றலில் ஏற்படும் சிக்கல்களுக்குரிய தீர்வுகளைப் பல முனைகளிலிருந்தும்
   மூலங்களிலிருந்தும் உடனடியாகப் பெற முடிகிறது.
14) உலகத்தின் எந்தப் பகுதியில் இருந்தாலும் ஒருவரோடு ஒருவர் தொடர்பு
    கொள்ளவும், இணைய உரையாடல் கருத்துப் பரிமாற்றம் செய்யவும், நிகழ்ப்பட
    கலந்துரையாடல் நடத்தவும், மின்னஞ்சல் வழி தகவல்களைப் பரிமாறவும்
    வாய்ப்புகள் திறந்து கிடக்கின்றன.
15) தகவல்களைத் திரட்டவும், சேமிக்கவும், புதிய தகவல்களை இற்றைப்படுத்தவும்
    (update), தேவையற்ற விவரங்களை நீக்கவும், விரும்பியபடி மாற்றங்களைச்
    செய்துகொள்ளவும் முடிகிறது. 


5.0   முடிவுரை

மொழிக் கற்றல் கற்பித்தல் எளிமையான ஒன்றல்ல. அதுவும் இணையத்தில் தமிழ்மொழியைக் கற்பதும் கற்பிப்பதும் மிகக் கடுமையான ஒன்றாகும். இருந்தபோதிலும், ஒலியியல், எழுத்தியல், வரிவடிவம், இலக்கணம், இலக்கியம் என விரிந்து கிடக்கும் தமிழ்மொழியை இணையத்தின் துணைகொண்டு கற்கவும் கற்பிக்கவும் கூடிய வாய்ப்புகள் இன்று நடைமுறைக்கு வந்திருக்கின்றன. தற்போதைய சூழலில் இருக்கின்ற வாய்ப்புகளையும் ஏந்துகளையும் முழுமையாகப் பயன்படுத்தி தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலை முன்னெடுக்கும் முயற்சிகள் நடைபெற வேண்டும். மரபு வழியான கற்றல் கற்பித்தலுக்கு இடையில் இணையம் சார்ந்த நவின முறையிலான கற்றல் கற்பித்தலுக்கும் இடங்கொடுக்க வேண்டும். இணையம் வழி கற்பித்தலானாலும் சரி அல்லது இணையத்தளங்களைப் பயன்படுத்தி கற்பதானாலும் சரி, இவ்விரண்டினையும் விரிவுபடுத்தி வளர்த்தெடுக்கும் வழிகளை ஆராய வேண்டும்.

தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலைப் புதிய இலக்கு நோக்கி நகர்த்த வேண்டிய பொறுப்பும் கடமையும் கல்வியாளர்களுக்கும் கணிஞர்களுக்கும் இருக்கின்றது. ஆகவே, உலக உருண்டையில் தமிழும் தமிழ்க் கல்வியும் நிலைபெற வேண்டுமானால், இணையம் வழியாகவும் இணைய ஏந்துகளின் வழியாகவும் தமிழைக் கற்கவும் கற்பிக்கவும் வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இதனை உணர்ந்து, தமிழ்மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர்களும் தமிழைக் கற்கும் அல்லது கற்க விரும்பும் மாணவர்களும் இனையத்தையும் இணைய ஏந்துகளையும் பயன்படுத்த முன்வர வேண்டும்.

இனிவரும் காலம் இணையத்தோடு இரண்டறக் கலந்துவிடப்போகின்றது. அதற்கேற்றால்போல, தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலும் இணையத்தை உள்வாங்கிக்கொள்ள வேண்டும். அப்பொழுதான், தமிழும் தமிழ்க்கல்வியும் நீடுநிலவ முடியும்; தமிழ்மொழி தனது தொன்மையின் தொடர்ச்சியைத் தொலைத்துவிடாமல் நிலைத்து வாழும்.  

மேற்கோள்கள்

குழந்தைவேல் பன்னீர்செல்வம்.சு. (2009). இணையம்வழி மொழிக் கற்றல் கற்பித்தலில்
புதிய அணுகுமுறைகள், தமிழ் இணைய மாநட்டு மலர், செருமானியம்.

ரபி சிங். எம்.ஜே. (2010). மின்னனு வழியில் தமிழ்மொழி கற்பித்தல் மற்றும் கற்றல்,
தமிழ் இணைய மாநாட்டு மலர், கோவை

நக்கீரன்.பி.ஆர். (2010). தமிழ் இணையப் பல்கலைக்கழக மென்பொருள்கள் – ஒரு
கண்ணோட்டம். தமிழ் இணைய மாநாட்டு மலர், கோவை

இளஞ்செழியன்.வே & இளந்தமிழ்.சி.ம. (2011). தமிழில் தகவல் தொழில்நுட்பத்தைக்
கற்பித்தல்: வாய்ப்புகளும் சிக்கல்களும். தமிழ் இணைய மாநாட்டு மலர்,
பென்சில்வேனியா.

பெரியண்ணன்.கோ. (2011). இணையம் மற்றும் கணினி வழி தமிழ் கற்றல் கற்பித்தல்.
தமிழ் இணைய மாநாட்டு மலர், பென்சில்வேனியா.

Dr. Seetha Lakshmi. (2011). Facebook and Tamil Language in Singapore's Teacher
Education . தமிழ் இணைய மாநாட்டு மலர், பென்சில்வேனியா.

Dr.Sajap Maswan. (1998). Kelebihan Penggunaan Internet dan Laman Web dalam
Pengajaran dan Pembelajaran. Institut Perguruan Tuanku Bainun. Pulau
Pinang, Malaysia.

Collins,B. (1996). The Internet As An Educational Innovation: Lesson From
Experience With Computer Implementation. Educational Technology, 36 (6),
pg. 21- 30

@சுப.நற்குணன்
Blog Widget by LinkWithin