Thursday, November 03, 2011

ஏழாம் அறிவு:- மலேசியத் தமிழன் பார்வையில்...


*வரலாற்றில் அழிந்த தமிழர்களுக்கும்; அழியாத தமிழுக்கும் சமர்ப்பணமாக வந்திருக்கும் நல்லதொரு படம் ஏழாம் அறிவு.


*வரலாற்றில் திறக்கப்படாத பக்கங்களை இன்றைய திரைப்படச் சுவையுடன் கலந்து பரிமாறப்பட்டிருக்கும் படம் ஏழாம் அறிவு.

*இப்படியொரு படம் வந்திருப்பது திரைப்பட வரலாற்றில் இதுதான் முதன்முறை என்று சொல்லும் அளவுக்குத் தனித்தன்மையோடு வந்திருக்கும் படம் ஏழாம் அறிவு.

*தமிழின் பெருமைகளைத் தொட்டுக்காட்டி; தமிழரின் வரலாற்றுச் சிறப்பை எடுத்துக்காட்டி தமிழர்களின் மரபணுவைத்(டி.என்.ஏ) தட்டியெழுப்ப முடியுமா? என முயன்று பார்த்திருக்கும் படம் ஏழாம் அறிவு.

*தமிழை வைத்து வணிகம் செய்ய முடியும்; தமிழரின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு பணம் பண்ண முடியும் என்கிற ‘வணிக நுட்பம்’ வாசமடித்தாலும், தமிழுக்கும் பொருளியல் மதிப்பு உண்டு எனப் பெருமைபடுகிற அளவுக்கு அமைந்திருக்கும் படம் ஏழாம் அறிவு.

*வரலாறு தெரியாத இனம் எப்படி அழிந்துபோகும்; போகின்ற ஊரிலும் நாட்டிலும் எப்படியெல்லாம் அடிபடும் - அல்லல்படும் - குண்டுபட்டுச் சாகும் என்பதைச் சொல்லி அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் படம் ஏழாம் அறிவு.

*ஆறாம் அறிவை இழந்துவிட்டு ஐந்தறிவு உயிரிபோல உலகம் முழுவதும் சிதறி சீன்னப்பின்னப்பட்டுக் கிடக்கும் தமிழனுக்கு “இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளா நம்மை இங்கு நாமே தொலைத்தோமே..!” என்று எழுச்சியூட்டும் படம் ஏழாம் அறிவு

*“கழுத்தோடு ஒரு ஆயுதத்தை தினம் களத்தினில் சுமக்கிறோம்” என்று தமிழன் வீரத்திற்கு வணக்கம் செய்ய வந்திருக்கும் படம் ஏழாம் அறிவு.

இப்படியே இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் ஏழாம் அறிவு படத்தைப் பற்றி!

தமிழ் உணர்வு, தமிழினப் பற்று என்ற அடிப்படைக் கருவை வைத்துக்கொண்டு கதையைப் பின்னியிருக்கிறார்; அதற்குப் போதிதர்மன் என்னும் தொன்மக் குறியீட்டை எடுத்து திரைக்கதை பண்ணியிருக்கிறார்; திரைப்பட வரலாற்றில் மாறுபட்ட ப(பா)டத்தைக் கொடுத்து பின்னியிருக்கிறார் இப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசு. இதற்காகவே இவருக்கு மிகப்பெரிய பாராட்டைக் குவிக்கலாம்.இந்தப் படம் மிகச் சிறந்த படைப்பாக வெளிவந்திருக்கிறது என்பதற்கு அடையாளம் என்ன தெரியுமா? இந்தப் படத்தைப் பற்றி இணையத்தில் எழுதப்பட்ட ‘விமர்சனங்கள்’ தாம்.

படத்தில் பாராட்டத்தக்க விடயங்கள் நிறையவே இருக்கின்றன. மாறுபட்ட கதையமைப்பில்  பார்பவரைக் கவரும் வகையில் படம் இருக்கின்றது. வியக்க வைக்கும் வரலாற்றுப் பின்னணி, ‘சினிமா மசாலா’ கூட்டணி; அறிவியல், டி.என்.ஏ, ஆராய்ச்சி, நோக்கு வர்மம் போன்ற அதிரடி;  கூடவே தமிழனைக் கொஞ்சம் சிந்திக்க வைக்கும் 'நெத்தியடி' ஆகியவைப் பாராட்டும் படியாக இருக்கின்றன. ஆனாலும், இப்படத்தைப் பற்றி இதுவரை வந்த ‘விமர்சனங்கள்’ இவற்றை விரிவாக எடுத்துச் சொல்லிப் பாராட்டவில்லை.நான் பார்த்தவற்றில் ஓரிரண்டைத் தவிர மற்ற அனைத்து விமர்சனங்களுமே இந்தப் படத்தைப் பற்றி ‘எதிர்மறையாகவே’ எழுதப்பட்டுள்ளன. என்றாலும்கூட, இதற்கான காரணம் மிக எளிமையான ஒன்றுதான். இந்தப் படம் தமிழனின் பெருமை பற்றி பேசுகிறது என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.

படத்தில் திரைக்கதை சரியில்லை.. படத்தொகுப்பு கண்ணைக் கட்டுகிறது.. இசை காதைப் புண்ணாக்குகிறது.. பாடல் பாடாய் படுத்துகிறது.. போதிதர்மன் கதை பொய்க்கதை.. படத்தில் பல இடங்களில் ஏரணம்(Logic) இடிக்கிறது.. என்றெல்லாம் பண்ணிப்பண்ணி எழுதியிருக்கிறார்கள். அதுமட்டுமா போதிதர்மன் தமிழனே அல்லன் என்று வரலாற்று ஆய்வுகளை எல்லாம் பக்கம் பக்கமாக எடுத்துக் காட்டி இருக்கிறார்கள்.இந்தப் படத்தைப் பார்த்த வயிற்றெரிச்சலில் பலர் ‘விமர்சன’ வாந்தி எடுத்திருக்கிறார்கள். இப்படத்தைப் பற்றி யாருக்கும் எந்தவித நல்ல எண்ணமும் எதிர்பார்ப்பும் வந்துவிடக் கூடாது என்ற அவர்களின் கயமைத்தனம் நன்றாகவே தெரிகிறது.போதாக் குறையாக, தமிழை மறந்து திரியும் தமிழர்க்கும்; தமிழை மறைத்து  திரியும் தமிழரல்லாதாருக்கும்; தமிழை விட ஆங்கிலத்தைத் தலையில் வைத்து கொண்டாடும் எல்லாருக்கும் இந்தப் படம் வயிற்றில் புளியைக் கரைக்கும்படியாக; முகத்துக்கு நேராகக் கைநீட்டி கேள்வி கேட்கும்படியாக; வாங்கு வாங்கென்று வாங்கும்படியாக இருக்கிறது என்பது இன்னொரு அப்பட்டமான உண்மை.“800 ஆண்டுக்கு முன் வந்த ஆங்கிலத்தைவிட 20,000 ஆண்டுக்கு முன்னால் தோன்றிய தமிழ் பெரியது”


“நீயும் கிராமத்தான் தானே. செருமனிக்குப் போயிட்டா நீ பெரிய ஆளா?”


“பக்கத்து நாட்டுல தமிழனை அழிக்க ஒன்பது நாடுகள் சேர்ந்து நடத்திய துரோகம்”


“இந்தியன்னா உலகத்துல மதிக்க மாட்றானுங்க; தமிழன்னா இந்தியாவுல மதிக்க மாட்றானுங்க”


“தமிழ் மருத்துவத்தையும் தமிழர் வரலாற்றையும் உலகம் இன்னும் பார்க்காமல் இருக்கிறது”

“இன்றைய அறிவியல் உலகத்தில் கண்டுபிடிக்கப்படும் பல உண்மைகளைத் தமிழர்கள் முன்பே கண்டுபிடித்து எழுதி வைத்திருக்கிறார்கள்”இப்படியெல்லாம் வருகின்ற உரையாடல்கள் மேலே சொன்ன ஆட்களுக்குக் குத்தலாகவும் மண்டைக் குடைச்சலாகவும் கண்டிப்பாக இருந்திருக்கும். 

ஆகவேதான், சொல்லி வைத்ததுபோல பலரும் ‘விமர்சனம்’ என்ற பெயரில் உள்குத்து குத்தி இருக்கிறார்கள். தமிழன் வரலாற்றில் இப்படிப்பட்ட இருட்டடிப்புகளும்.. மறைப்புகளும்.. சிதைவுகளும்.. சொதப்பல்களும் வழக்கமான ஒன்றுதான் என்பதற்கு  இந்த விமர்சனங்களே நல்ல சான்று.எது எப்படி இருந்தாலும், அது அவர்களின் பார்வை.. அவர்களின் உரிமை என்று விட்டுவிட வேண்டும்; மதிக்க வேண்டும்!

தொழில்நுட்பக் கோளாறுகள் இருந்தால் என்ன? ஏரணப் பிழைகள் இருந்தால் என்ன? படத்தொகுப்பு வெட்டி வெட்டி ஓடினால் என்ன? கதையமைப்பில் / திரைக்கதையில் குறைபாடுகள் இருந்தால் என்ன? திரைப்பட விதிகளோ அல்லது நாட்டுச் சட்டமோ மீறப்பட்டிருந்தாலும் அதற்கென்ன..?

எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு 'தமிழனைச் சொன்ன காரணத்திற்காக.. தமிழன் வரலாற்றைச் சொன்ன காரணத்திற்காக.. இரண்டரை மணி நேரத்திற்குத் ''தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா" என்று மார்தட்ட வைத்த காரணத்திற்காக இந்தப் படத்தைத் தவறாமல் பார்க்கலாம்!ஏழாம் அறிவு திரைப்படம் மாறுபட்ட கதையமைப்பைக் கொண்டிருக்கும் அதே வேளையில், வழக்கமாகத் தமிழ்த் திரைப்படங்களில் வரும் எல்லாமும் இருக்கின்றன. தமிழனைப் பற்றி தமிழ் இளையோர்களுக்குச் சொல்லுவதற்கு இயக்குநர் பயன்படுத்தியிருக்கும் இந்த உத்திமுறையைப் பாராட்டலாம்.

நகைச்சுவை:-தனியாக இல்லாமல் படத்தோடு   ஒன்றி வந்திருக்கிறது. பத்துப் பதினைந்து பேரை அடித்து வீழ்த்தும் கதைநாயகன் ‘கேனைத்தனமாக’ கோணங்கி வித்தையெல்லாம் காட்டி சிரிக்க வைக்கும் காட்சிகள் இதில் இல்லாமால் இருப்பது வரவேற்கக்கூடியது.இசை:- அரிசு செயராசு இசை நன்றாகவே இருக்கிறது. சீன இசையைத் தமிழ்நடை கலந்து கொடுத்திருக்கிறார். இறுதிச் சண்டைக் காட்சியில் ‘மாரியாத்தா’ இசை கவர்கிறது.பாடல்:- ‘முன் அந்திச் சாரல் நீ’ பாட்டு காதுக்கு இனிமை. ‘இன்னும் என்ன தோழா’ பாடல் தமிழர் நெஞ்சங்களுக்கு வலிமை.காதல்:- இதற்காகவே பாதிப் படத்தை இழுத்து வீணடிக்காமல் ஒரே காட்சியில் சுருதி ஆசனின் தொடுதிரைக் கைப்பேசியில்  சொல்லி முடிந்துவிடுகிறது.சூர்யா:- போதிதர்மன் வேடத்தில் மாறுபட்ட தோற்றத்தில் அசத்தியிருக்கிறார். அரவிந்தாக வந்து இயல்பான நடிப்பால் கலக்கியிருக்கிறார். இவருடைய கண்களை இந்தப் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். படம் முடியும்போது சூர்யா நம்முடைய மனத்தில் மறைந்துபோகிறார்; அந்த இடத்தில் போதிதர்மன் வந்து உட்கார்ந்துகொள்கிறார்.சுருதி ஆசன்:- முதல்படம் என்றாலும் நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறார். நல்ல குரல்வளம். இவரின் மிடுக்கான பேச்சு கவர்கிறது. டி.என்.ஏ. ஆராய்ச்சியாளர்கள் கூட்டத்தில் இவர் பேசும் உரையாடல் அரங்கம் அதிர கைத்தட்டலைப் பெறுகின்றது. ‘முன் அந்திச் சாரல்’ பாடல் காட்சியில் மாலை வெயில் போல அழகாக வருகின்றார்.டொன் லீ:- அரவிந்தனையும் சுபாவையும் விரட்டி விரட்டிக் கொல்லப் பார்க்கும் பயங்கரம். எதிரில் வரும் எல்லாரையும் ‘நோக்கு வர்மம்’ (Hypnotism) மூலமாக வசியப்படுத்தி நாராசமாகக் கொன்று குவிக்கிறார். இவர் வரும் ஒவ்வொரு காட்சியிலும் கொலையும்  கொடூரமும் தான்.

கதைக்காகச் எத்தனையோ படங்களைப் பார்த்திருப்போம்!

பாடல்களுக்காகச் சில படங்களைப் பார்த்திருப்போம்!

தொழில்நுட்பத்திற்காகச் சில படங்களைப் பார்த்திருப்போம்!

நகைச்சுவைக்காகவே ஓடிய படங்களைப் பார்த்திருப்போம்! ஏன்?

கவர்ச்சிக்காகவும்.. காம உணர்ச்சிக்காகவும்.. ‘ஆபாசத்திற்காவும்’ கூட சிலர் சில படங்களைப் போய்ப் பார்த்திருப்போம்!!ஆனால், தமிழுக்காக, தமிழின உணர்வுக்காக, தமிழன் வரலாற்றுக்காக இந்த ‘ஏழாம் அறிவு’ படத்தை ஒரு முறை அல்ல.. ஒன்றுக்கும் மேற்பட்ட முறை திரையரங்கு சென்று கண்டிப்பாகப் பார்க்கலாம்..! பார்க்க வேண்டும்!இதுபோன்ற படத்தை வெற்றிப்படைப்பாக ஆக்க வேண்டும். வசூல் சாதனைப் படமாக ஆக்க வேண்டும். இதுவொரு மொக்கைப் படம் என்று தமிழ்நாட்டுக்காரர்கள் முத்திரை குத்தினாலும், நம் மலேசியா போன்ற அயலகத் தமிழர்கள் இதனை வெற்றிப்படமாக மாற்றிக்காட்டி முத்திரைப் பதிக்க வேண்டும். 

வரலாற்றில் தமிழன் எங்கெல்லாம் வீழ்ந்தான்; தமிழன் வரலாறு எப்படியெல்லாம் அழிக்கப்பட்டது; தமிழினம் எவ்வாறு நசுக்கப்படுகிறது; தமிழன் மீண்டும் உயிர்த்தெழ என்ன செய்யலாம்; அந்த முயற்சியை எங்கிருந்து எப்படி தொடங்கலாம் என்பதைப் பற்றியெல்லாம் படத்தில் வெற்றிகரமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.


அதுமட்டுமல்ல, படத்தின் ஓர் இடத்தில் ஒற்றை வரி உரையாடலில் மலேசியத் தமிழர்களின் 'நவம்பர் 25' வரலாற்றைப் பதிவு செய்திருக்கும் இயக்குநருக்கு நாம் பாராட்டுச் சொல்லத்தான் வேண்டும்.எனவே, படத்தை இன்னும் பார்க்காதவர்கள் கண்டிப்பாகத் திரையரங்கிற்குச் சென்று பாருங்கள். உங்கள் குழந்தைகளையும் அழைத்துச் சென்று படத்தைக் பார்க்கச் செய்யுங்கள்.தமிழகத்தில் மனிதனாகப் பிறந்து பின்னாளில் சீனா, சப்பான், கொரியா, தாய்லாந்து ஆகிய அயலக மக்களுக்கு மருத்துவம் கற்பித்து - தற்காப்புக் கலையைக் கற்றுக்கொடுத்து இறுதியில் தெய்வமாகவே ஆகிவிட்ட ‘போதிதர்மன்  ஒரு தமிழன்’ என்று திரையில் சொல்லும்போது தரையில் எல்லாரையும் நிமிர்ந்து உட்கார வைக்கும்; நெற்றிப் புருவங்களை உயர வைக்கும்; நானும் தமிழன்தான் என்று பெருமைபட வைக்கும்...

இந்தப் படத்தைப் பார்க்கும் இரண்டரை மணி நேரமாவது மானமுள்ள தமிழனாக வாழ்ந்துவிட்டு வாருங்கள்!

ஏழாம் அறிவு முன்னோட்டம்:-


-சுப.நற்குணன்

7 comments:

Sathis Kumar said...

// இந்தப் படத்தைப் பற்றி ‘எதிர்மறையாகவே’ எழுதப்பட்டுள்ளன. என்றாலும்கூட, இதற்கான காரணம் மிக எளிமையான ஒன்றுதான். இந்தப் படம் தமிழனின் பெருமை பற்றி பேசுகிறது என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.//

சரியா சொன்னீங்க...

இப்படத்தின் மீது வெளிவரும் நூற்றுக்கணக்கான எதிர்மறை கருத்துகளும் ஒருவகையில் இப்படத்திற்கான வெற்றிதான். அதற்கு இயக்குனரை பாராட்டியாக வேண்டும்.

இந்நாட்டிலும் தமிழர்கள் அடிவாங்கியதை நம்மாட்களே மறந்துவிட்டார்கள், ஆனால் இயக்குனர் நினைவில் வைத்து, வசனத்தில் புகுத்திருக்கிறார்.. அதற்கு ஒரு சபாஷ்! அதனையும் பல திரையரங்குகளில் தணிக்கை செய்து வீட்டது மலேசிய அரசாங்கம், இது ஒரு வெட்கக்கேடு!

R.Puratchimani said...

நான் படம் இரண்டு முறை பாத்துவிட்டேன். எனக்கு படம் பிடித்துள்ளது. எதிர்மறையான விமர்சனங்கள் பல படித்ததால்
என் விமர்சனம் கூட சற்று எதிர்மறையாகிவிட்டதோ என்ற குற்ற உணர்ச்சி எனக்கு உண்டு. உங்கள் விமர்சனம் அருமை.

arjun said...

nalla padam idhu thamilanin vetri .. overu thamilnum parkka vendiya padam

Tamilvanan said...

ந‌ல்ல‌தொரு விம‌ர்ச‌ன‌ம்,க‌ருத்து.இப்ப‌ட‌ம் த‌மிழ் சினிமாவின் இன்னொரு புதிய‌ ப‌ரிணாம‌ வ‌ள‌ர்ச்சி என்றும் சொல்ல‌லாம்.

து. பவனேஸ்வரி said...

அருமையான திரைப்படம். நான் திரையரங்கில் இரண்டு முறை பார்த்துவிட்டேன்! திரைப்படங்கள் பார்த்து நமது அடையாளத்தைத் தொலைத்த தமிழர்களை இம்மாதிரியான திரைப்படங்கள் மூலமாகத்தான் வழிக்குக் கொண்டு வர முடியும்!

Prema said...

வணக்கம். அருமையான படத்திற்கு அம்சமான விமர்சனம். வாழ்த்துகள். இந்தப் படம் அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு நெத்தியடி... படத்தைப் பார்த்து எனக்காக நானே வெட்கப்படேன். வேதனைப் பட்டேன். எத்தனையோ படங்களைப் பார்த்திருந்தாலும் என்னுள் இருந்து ஒரு புரியாத உணர்வு.தடுமாற்றம். இத்தனைப் பெருமைக்குறிய நம் தமிழர்களுக்கு தலை வணங்கச் செய்தப் படம்.தலைவணங்குகிறேன். ஒரு தமிழச்சியாக என்னை நினைத்து கூனிக்குருகச் செய்தப் படம். கற்றுக்கொண்ட கலைகளையும் திறமைகளையும் மற்ற இனத்தவர்களுக்கு கற்றுக் கொடுத்தோம்.ஆனால் நமக்கும் நம் தலைமுறைக்கும் கற்றுக் கொடுக்க மறந்துவிட்டோம். இனி எத்தனை நாளுக்கு இப்படியே இருக்கப் போகிறோம்.ஒவ்வொரு மரத் தமிழனும் பார்த்து சிந்தித்து செயல்பட வேண்டிய ஒரு படம்.தமிழுக்கும் தமிழனுக்கும் இரண்டரை மணி நேர பெருமை மட்டும் போதாது.தமிழையும் தமிழனையும் தரணியில் தலைநிமிறச்ச செய்ய கடவுள் நமக்குக் கொடுத்த வரப் பிரசாதம். இவற்றைக் கொண்டு இனியாவது மொழியால் இனத்தால் சாதியால் பதவியால் பிளவுபடாமல் நமது மொழி, கலை, கலாசாரம், பண்பாடு, இப்படி மறந்துப் போன எத்தனையோ விசயங்களை இனியாவது மீண்டும் தூசுத் தட்டி எடுத்து பார்போம். நம் சந்ததியினருக்கு சொல்லிச் செல்வோம்,: கற்றுத் தருவோம். இனிவரும் காலத்தில் அவர்களையாவது தலைநிமிந்து நடக்கச் செய்வோம்.

sanjukta said...

பல எதிப்புகள் இருக்கிறது, விமர்சனங்கள் எழுகிறது என்றால் அது நம்மை(படத்தை) பலர் ஊன்றி கவனித்திருக்கிறார்கள் என்றல்லவா பொருள்படுகிறது... தமிழ்ச் சினிமா எனும் ஜனரஞ்சகமான ஊடகம் முதல் முறையாக தமது தமிழுக்கான,தமிழர்களுக்கான பணியை செய்துள்ளதை எண்ணி பெருமைபடுவோம். வரலாற்றில் அழிந்த தமிழர்களுக்கும் அழியாத தமிழுக்கும் சமர்பணம் என திரையில் கண்ட தருணத்தில் நெஞ்சை ஏதோ நெருடுகிறது, படத்தின் நேர்த்திக்குச் சமர்பணமாய் கண்ணீர் துளிகள் கண்களில் பனிக்கிறது...

Blog Widget by LinkWithin