Friday, January 30, 2009

உலகத் தமிழ் உறவுகளுக்கு ஒரு கடிதம்


அன்புமிக்க உலகத் தமிழ் உறவுகளே...,

மனித உயிரின் மகத்துவம் பற்றி நாமெல்லாம் நன்றாகவே அறிந்துள்ளோம். எங்கள் உறவுகள் மீது கொண்டுள்ள கருணை வெளிப்பாட்டிற்கு நாமெல்லாம் எம் தாய் தமிழ் உறவுகளுக்கு என்ன கைம்மாறு செய்வோமோ என்று தெரியாமல் ஈடாடுகின்றோம் உறவுகளே!

இனிமேல் முத்துக்குமார்கள் வேண்டாம். எங்களுக்கு வேண்டியதெல்லாம் அகிம்சையின் மூலம், உணர்வுகளின் மூலம் தாய்த் தமிழக உறவுகள் பாரத அரசைப் பணிய வைக்க வேண்டும் என்பதே. உயிரையும், உணர்வுகளையும் காப்பாற்றத் தானே இந்தப் போராட்டங்கள்??? பிறகு ஏன் நீங்களாக உங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும்?

உலகெங்கும் வாழும் எங்கள் உறவுகளே!
இந்த நேரத்தில் எமது கடமை என்ன??
நாம் என்ன செய்யப் போகிறோம்??

எங்கள் உறவுகள் இருக்க இடமின்றி அல்லற்பட்டுத் துடிக்கின்றார்கள். உண்ண உணவின்றி பட்டினியால் வாடி உழல்கின்றார்கள்..! நாங்களோ இங்கிருந்து கடந்த கால வரலாற்றை மட்டும் மீட்டும் மீட்டிப் பார்த்துப் பழமை பேசுகின்றோம்..!

பாசிசம் பற்றியும், பயங்கரவாதம் பற்றியும், விடுதலைப் புலிகள் மீது பல தவறுகள் உள்ளன என்பது பற்றியும் பேசுவதற்கான நேரம் அல்ல இது?? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

இப்போது நாங்கள் செய்ய வேண்டியதெல்லாம். எமது பழைய குரோத விரோதங்களையும் களைந்தெறிந்துவ் விட்டு, பழைய கறை படிந்த விடயங்களைக் களைந் தெறிந்து விட்டு எல்லோரும் ஒன்றாகக் கிளர்ந்தெழுந்து வன்னியில் அல்லற்படும் மக்களுக்குக் குரல் கொடுக்கத் துணிய வேண்டும்.

இப் பொழுது வீடு பற்றி எரிகின்றது. எரிகின்ற வீட்டை அணைக்க முயற்சி செய்வதை விடுத்து நீ முந்தி எனக்கு அது செய்தாய் ஆதலால் ஒரு வாளி தண்ணி கூட ஊற்றி உனது வீட்டை அணைக்க என்னால் முடியாது என்று சொல்லி இருப்பது, ஒதுங்கி வாழ்வது மிக மிக இழிவான விடயம்.

பாசிசம் பற்றியோ பயங்கரவாதம் பற்றியோ இணையத்தில் எழுதித் தமிழர்களைப் படு குழியில் மேலும் மேலும் தள்ளுவதற்கான் நேரம் அல்ல இது. கொஞ்சம் சிந்தியுங்கள்..நாங்கள் இப்போது செயற்படுவதற்கான நேரம்..

துணிந்தெழுங்கள் உறவுகளே! உங்கள் உங்கள் நாடுகளிள் உள்ள சட்ட திட்டங்களிற்கு அமைவாக எமது இரத்த உறவுகளுக்காக, எம் தாயக உறவுகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டிய தக்க தருணம் இது.

இந்த வரலாற்று வேளையில் நாம் அனைவரும் ஒன்று படா விட்டால் ஒரு இனத்தினை அழிவிலிருந்து காப்பாற்றத் தவறிய மாபெரும் வரலாற்றுத் துரோகத்தை இழைத்த பிணியராகி விடுவோம். தயவு செய்து அனைத்துப் பேதங்களையும் மறந்து துடைத்தெறிந்து விட்டு இப்போது எம் தாயக உறவுகளுக்காகக் குரல் கொடுக்கத் துணியுங்கள்.

புலிகள் அடிப்பார்களா?? எப்போது அடிப்பார்கள் என்றெல்லாம் கதை பேசி எம்மைத் தேற்றிக் கொள்ளும் காலமல்ல இது. அவர்களுக்குரியதை அவர்கள் செய்வார்கள். எமக்குரி பணியை யார் செய்வார்கள்? எமது இன்றைய பணி என்ன?? துன்பப்படும் மக்களின் அவலத்தை உலகறியச் செய்வது, அதனை விரைந்து செய்வோம். இன்றே செய்வோம்.

இந்தக் காலப் பெருங் களத்தில் நாம் ஒன்று திரளா விட்டால் வரலாறு எம்மை ஒரு போதும் மன்னிக்காது. சிந்திப்போம். இன்றே செயற்படுவோம்!உலகெங்கும் வாழும் உறங்கிக் கிடக்கும் தமிழர்கள் அனைவரும் இப்போது விழித் தெழ வேண்டிய தக்க தருணம் இது.

உறங்கிக் கிடக்கும் உறவுகளே...
காலத்தின் தேவை கருதி உணர்ந்தெழுங்கள்.

5 comments:

Anonymous said...

முத்துக்குமார் ஈழத்திற்க்காக தன்னுயிர் ஈந்து தமிழ் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறாய். அன்பான தமிழ் பேசும் அன்னிய தேச தமிழர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன், இனியும் தமிழ் நாட்டிலிருக்கும் அரசியல் வாதிகளின் சித்துவிழையாட்டுகளை நம்பி ஏமாந்துவிடாதீர்கள். இவர்கள் சுயனலவாதிகள். சுயநலத்திற்க்காக தமிழையும் தமிழ்மக்களையும் கூறுபோட்டுவிற்றுவிடுவார்கள். இவர்கள் இந்திய அரசிடமும், சிங்கள அரசிடமும் விலை போனவர்கள். தமிழை சோற்றுக்காகவும், சுகபோக வாழ்விற்க்கும் பயன்படுத்திவிட்டு எச்சில் இலை போல் தூக்கி எறிந்து விட்டார்கள். இன்று இந்தியம், தேசியம் பேசுகிறார்கள். இவர்கள்தான் காரணம் இன்று தமிழன் வீடிழந்து, மானமிழந்து நிற்ப்பதற்க்கு. பாவம் விடுதலைப்புலிகள் இவர்களின் அரசியல் சித்துவிழையாட்டிற்கு பலியாகி விட்டனர். இனிமேல் தமிழுக்கு ஒரு தலைவன் என்றால் அது மாவீரன் பிரபாகரனாக மட்டுமே இருக்க முடியும். தமிழ் நாட்டில் தமிழர்களோ, தமிழ்த்தலைவர்களோ இல்லை. தமிழினமே போராடு தன்காலில் நின்று. இந்திய தமிழனின்? ஊன்று கோல் வேண்டாம்.
முத்துக்குமார் சிவனடி எய்திவிட்டார்.
கண்ணீருடன் பாலாஜி....

Anonymous said...

இதயம் கிழிந்து
இரத்தம் உறைகின்றது..?!
ஈழத்தில்
என் தமிழ்மக்கள்
படும் துயர்கண்டு..!!

தினம்..தினம்..
என் தேசத்தில்
குண்டுமழை...!
தினம்..தினம்..
என் தமிழ்மக்கள்
மண்ணறையில்
பதுங்கி
கண்ணீர்ப் போராட்டம்..!?

ஈரமற்ற..இதயமற்ற..
தேசத்து மண்ணில்
வெடித்துச்
சிதறுவது..
என் தமிழ் இரத்தம்தான்..!!
சிதறி தெறித்து
விழும்
ஒவ்வொரு
இரத்தத் துளியும்
இப்பூமியில்
மீண்டும் உயிர்த்தெழும்...!!

ஈழம் எரிகிறது...
ஈவிரக்கமற்ற உலகம்
பார்த்து
இரசிக்கிறது...!
உலகின்
எங்கோ ஒரு மூலையில்
போரில்
மடிந்துபோகும்..
உயிர்களுக்காக
உலகமே
கண்டனம் தெரிவிக்கிறது..
கண்ணீர் விடுகின்றது...!!
தவறில்லை..
அவர்களும்
மனிதர்கள்தானே...!!

ஆனால்...,
என் தமிழீழத்தில்
கேட்கப்படும்
கதறல்கள்...
அழுகைகள்...
ஓலங்கள்...
பாலாய்ப்போன
இவ்வுலகத்தின்
காதில்
ஏனோ விழுவதில்லை...!??

மனித நேயமற்ற
என் உலகமே....
ஈழத்தில்
உள்ளவனும்
மனிதன்தானே...!!
பிடுங்கி எறியும்
மயிரல்லவே...!!?

கனத்த இதயத்துடன்,
சந்திரன் இரத்தினம்
ரவாங், சிலாங்கூர்

சுப.நற்குணன்,மலேசியா. said...

திருத்தமிழ் அன்பர் பாலாஜி,

தங்கள் மறுமொழியில் பொதிந்துள்ள உண்மையை நன்கு அறிந்துள்ளோம்.

தமிழக அரசியல் தலைவர்கள் தமிழ் மக்களைக் கூறுபோட்டு, ஆளாளுக்கு ஒரு சித்தாந்தத்தில் வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஊறுகாய் மாதிரி அவ்வப்போது தமிழையும் தமிழரையும் தொட்டு பேசியும்.. கவிதை கக்கியும்.. வருகின்றனர்.

ஈழச்சிக்கலில் தமிழ்நாடு வாழாவிருப்பதற்கும் தமிழகத் தமிழர்கள் தூங்கிக்கிடப்பதற்கும் அரசியல் தலைவர்கள் என்கிற ஓட்டுப் பொறுக்கிகள்தாம் முக்கியக் காரணம் என்பதை இன்று உலகத் தமிழர்களுக்குப் புரிந்திக்கிறது.

உங்கள் தெளிவுறுத்தளுக்கு நன்றி ஐயா.

சுப.நற்குணன்,மலேசியா. said...

திருத்தமிழ் அன்பர் சந்திரன் இரத்தினம்

உங்கள் உரைவீச்சில் நெஞ்சம் நெகிழ்வது மட்டுமல்ல எரிமலையாய் வெடிக்கவும் செய்கிறது.

//மனித நேயமற்ற
என் உலகமே....
ஈழத்தில்
உள்ளவனும்
மனிதன்தானே...!!
பிடுங்கி எறியும்
மயிரல்லவே...!!?//

துப்புக்கெட்ட உலக நாடுகளுக்கு சாட்டை அடி..!

விண்ணும் மண்ணும் said...

ருத்தமிழ் அன்பர் சந்திரன் இரத்தினம்

உங்கள் உரைவீச்சில் நெஞ்சம் நெகிழ்வது மட்டுமல்ல எரிமலையாய் வெடிக்கவும் செய்கிறது.

Blog Widget by LinkWithin