Wednesday, January 28, 2009

மலேசியத் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு 2

கடந்த 25.1.2009ஆம் நாள் ஞாயிறன்று பேரா, பாரிட் புந்தார் நகரில் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு 2 வெற்றிகரமாக நடைபெற்றது. மொத்தம் 24 பேர் இந்தச் சந்திப்பில் கலந்து சிறப்பித்தனர். மாலை மணி 2.30க்கு கி.விக்கினேசு (தமிழோடு நேசம்) அறிவிப்போடு திருக்குறள் 'கடவுள் வாழ்த்து' பாடலுடன் இனிதே தொடங்கியது.

இந்த நிகழ்வில் சுப.நற்குணன் (திருத்தமிழ்) வரவேற்புரை ஆற்றினார். அவர் தமதுரையில் கூறியவை:-

1.இந்தச் சந்திப்பு மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களை ஒருங்கிணைத்து – வழிகாட்டி – வளர்த்தெடுக்கும் உயர்ந்த நோக்கத்திற்காக நடத்தப்படுகிறது.
2.வலைப்பதிவுகள் தமிழர்களின் முதல்தேர்வு ஊடகமாகவும் ஆற்றல்மிக்க மாற்று ஊடகமாகவும் உருவாக முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.
3.மலேசியத் தமிழ் வலைப்பதிவுகள் மெல்லென வளர்ந்து வருகின்றன – உலக நிலையில் அடையாளத்தைப் பதிக்கத் தொடங்கியுள்ளன.
4.ஓலைச்சுவடி, தமிழுயிர் போன்ற வலைப்பதிவுகள் சமுதால நலன், மொழி நலன் தொடர்பாக மிகத் துணிவோடு செய்திகளை வழங்குகின்றன.
5.வாழ்க்கைப் பயணம் வலைப்பதிவு இடுகைகள் தமிழகத்தின் தமிழ் ஓசை நாளிகையில் வெளிவருவது பெருமைக்குரியதாகும்.
6.நமது வலைப்பதிவு இடுகைகள் தமிழ்மணம், தமிழிசு, மாற்று, மலேசியாஇன்று முதலான முன்னணி ஊடகங்களில் இடம்பெறுவது குறிப்பிட வேண்டிய வெற்றியாகும்.
7.நமது வலைப்பதிவர்கள் தமிழ்ச் சமுதாயத்திற்கு நன்மையளிக்கும் இலக்கை முன்வைத்து மொழி, இன, சமய, பண்பாட்டு உணர்வோடு செய்திகளை வழங்க வேண்டும்.

தொடர்ந்து, மலேசியத் தமிழ் வலைப்பதிகள் பற்றிய ஒளியிழைக்காட்சி (Slide Show) இடம்பெற்றது. கிட்டதட்ட 45 மலேசியத் தமிழ் வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்திய இந்தக் காட்சி பலரையும் கவர்ந்ததோடு மலேசியாவில் இத்தனை தமிழ் வலைப்பதிவுகளா? என வாய்ப்பிளக்கவும் வைத்தது.

அடுத்த அங்கமாக, பதிவர் அறிமுக நிகழ்ச்சி. ஒவ்வொருவராக முன்னிலையில் வந்து தங்களை அறிமுகம் செய்துகொண்ட விதம் மறக்க முடியாதது. இதனையடுத்து, கடந்த 14.12.2008இல் நடந்த முதலாம் வலைப்பதிவர் சந்திப்பு பற்றிய ஒரு பின்னோக்கை (Flashback) இளவல் விக்கினேசுவரன் அடைக்கலம் (வாழ்க்கைப் பயணம்) வழங்கினார்.


அடுத்ததாக, மலேசியாஇன்று இணையத்தள தொழில்நுட்பரும் நாட்டின் முன்னணி தமிழ்க் கணினி இணைய வல்லுநரும் நல்ல தமிழ்ப்பற்றாளருமாகிய திரு.சி.ம.இளந்தமிழ் சிறப்புரை இடம்பெற்றது. திரு.சி.ம.இளந்தமிழ் தன்னுடைய உரையில் சொன்னவை:-

1.மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள் இன்னும் ஏராளமாக எழுதுவதோடு துணிவோடும் சில செய்திகளை எழுதவேண்டும்.
2.வலைப்பதிவர்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டும் வழிகாட்டிக்கொண்டும் செயல்பட வேண்டும்.
3.நாட்டில் பெர்லிசு தொடங்கி சொகூர் வரை 10,000க்கும் மேற்பட்டவர்களுக்கு தமிழ்க்கணினி இணையம் பற்றி தாம் பயிற்றுவித்துள்ளார்.
4.மலேசியாஇன்று இணையத்தளம் செயல்படும் முறைகளும் அதன் வெல்விளி(சவால்)களும் பற்றிய விளக்கம்
5.தொழிநுட்பம் கற்று தமிழ் இணையப் பணி செய்பவர்களைவிட தமிழ்க் கற்று இணையப் பணி செய்பவர்கள் அதிகம் உருவாக வேண்டும்.
6.கணினி இணையம் தொடர்பான கலைச்சொற்களை தமிழிலேயே கையாள்வதுதான் சிறப்பும் தனித்தன்மையும் ஆகும்.
7.மிக விரைவில் நடைபெறவுள்ள மாபெரும் விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு வலைப்பதிவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் தேவை.

மேலும், சி.ம.இளந்தமிழ் வலைப்பதிகள் எவ்வாறு அமையவேண்டும், எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என்று ஒளியிழைக் காட்சிகளோடு விளக்கினார். இதற்கடுத்து, புதிதாக வலைப்பதிவு தொடங்கும் வழிமுறைகள் பற்றி விக்கினேசுவரன் அடைக்கலம் செய்முறைகளோடும் (Demonstration) ஒளியிழைக் காட்சியோடும் விளக்கிக் காட்டினார். புதிதாக வந்திருந்த அனைவருக்கும் இவ்வங்கம் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
இறுதியாக, கலந்துரையாடல் அங்கம் நடந்தது. அதில் பற்பல கருத்துகள் பரிமாறிக்கொள்ளப்பட்டது.

1.வலைப்பதிவு மாதிகை (மாத இதழ்) நடத்துவதென்பது இயலாத ஒன்று. காரணம், அதற்கென தனியாக ஆசிரியர் குழு, விளம்பரம், விநியோகம் என்று பல அலுவல்கள் இருந்தால்தான் இது சாத்தியமாகும். –சுப.நற்குணன்

2.மாதிகைக்குப் பதிலாக கூட்டு வலைப்பதிவு அல்லது மின்னிதழ் தொடங்கலாம். இப்போது இருக்கும் வலைப்பதிவர்கள் ஒன்றிணைந்து அதனை உருவாக்கி நடத்தலாம். –கிருஷ்ணமூர்த்தி

3.வலைப்பதிவர்கள் ஒரு வலைப்பதிவைப் படித்தற்கான அடையாளமாக பின்னூட்டம் அல்லது மறுமொழி ஒன்றினை விட்டுச்செல்ல வேண்டும்.-குமரன் மாரிமுத்து

4.தமிழ் வலைப்பதிவர்கள் தமிழ் மொழி, இனம், சமயம், பண்பாட்டுக்கு எந்தவொரு பாதிப்பும் இழுக்கும் ஏற்படாத வண்ணம் செயல்பட வேண்டும். -ம.தமிழ்ச்செல்வன்

5.நாட்டில் தமிழ் மொழி, இனம், சமயம், பண்பாட்டுக்கு ஏதாவது பாதிப்பு அல்லது சிக்கல் ஏற்பட்டால் அனைத்து வலைப்பதிவர்களும் ஒன்றிணைந்து கண்டிக்க வேண்டும். –பாலமுரளி

6.அண்மையில் நாளிதழில் ஒன்று தமிழ்த்தேசியத் தலைவர் ஒருவரை இழிபடுத்தி எழுதியதால் ஏற்பட்ட சிக்கலிலும், மற்றொரு நாளிதழ் தீபாவளி சமயத்தில் மது விளம்பரம் வெளியிட்ட சிக்கலிலும் நமது வலைப்பதிவுகள் முன்னின்று கண்டித்ததோடு சாதகமான தீர்வுக்கும் வழிவகுத்துள்ளன. –சுப.நற்குணன்

7.அடுத்த சந்திப்பைத் தலைநகரில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும். –சி.ம.இளந்தமிழ்

சந்திப்பை முறையாக முடித்துவைத்து கோவி.மதிவரன் (தமிழ் ஆலயம்) நன்றியுரை ஆற்றினார். அனைவருக்கும் நன்றி சொன்னதோடு நமது வலைப்பதிவுகள் தமிழ்மொழி, இனம், சமயம், பண்பாட்டு விழிப்புணர்வுக்கும் வளர்ச்சிக்கும் உதவவேண்டும். எந்தச் சூழலிலும் பாரம்பரிய மரபுகளையும், இலக்கண இலக்கிய விழுமியங்களையும், பண்பாட்டு நெறிகளையும் மீறிவிடாமல் நமது வலைப்பதிவுகள் செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.

வருகைதந்த அனைவருக்கும் தமிழ் நாள்காட்டி ஒன்றும் நாள் வழிபாட்டுக் கையேடு ஒன்றும் அன்பளிபாக வழங்கப்பட்டது. மாலை மணி 6.30 அளவில் சந்திப்பு நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

இச்சந்திப்பில் கலந்துகொண்டவர்களின் (குறுஞ்செய்தி) கருத்துகள் சில:-

1.ம.தமிழ்ச்செல்வன்:-இதுவோர் நல்ல சந்திப்பு. தமிழ்ப் பதிவர்களை நேரடியாக சந்திக்க முடிந்தது. வலைப்பதிவைத் தமிழுக்கும் தமிழருக்கும் பயனளிக்கும் ஊடகமாக உருவாக்குவதற்குத் தேவையான வழிமுறைகள் பற்றி பேச முடிந்தது.

2.கோவி.மதிவரன்:-சிறப்பான முயற்சி. பதிவர்கள் மொழி, இன, சமயத்தைக் காத்திட முனைப்புக் காட்ட வேண்டும்.

3.ப.தமிழ்மாறன்:-மிக அருமையான சந்திப்பு. நிறைய பயனான தகவல்கள். நல்ல முயற்சி. நல்ல பயனை நல்கும்.

4.இராசகுமாரன்:- அருமையான நிகழ்ச்சி. மனதில் தோன்றும் கருத்துகள், எண்ணம், அனுபவங்களை பிறரிடம் பகிர்ந்துகொள்ள நீண்ட நாள் கனவு.. இன்று நடந்த நிகழ்ச்சியில் தமிழில் இப்படியும் செய்யலாம் என அறிந்தேன். விரைவில் என்னை இணையத்தில் காண்பீர்.

5.து.பவனேசுவரி:- என் கருத்துகளை விரைவில் என் வலைப்பதிவில் இடுவேன். சிறப்பான ஏற்பாட்டுக்கு நன்றி.

6.ம.ஜீவன்:-மிகவும் அற்புதமான நிகழ்வு. அனுபவமிக்க பதிவர்கள் நிறைய வந்தார்கள். அவர்கள் முன் எனக்கு முதலில் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது. ஆனால், நானும் அவர்களைப் போல் வரவேண்டும் என்ற வைராக்கியம் என்னுள் ஏற்பட்டுள்ளது. கண்டிப்பாக நானும் ஒரு வலைப்பதிவு தொடங்குவேன்.

7.அனந்தன்:-சிறப்பாக நடந்தேறியது. பெரிய வெற்றிதான். உங்கள் முயற்சி, உழைப்பு போற்றுதலுக்கு உரியவை.

8.கிருஷ்ணமூர்த்தி:-நல்ல முயற்சி. நற்பணி தொடர தோள் சேர்ந்து உழைப்போம்; தமிழ் சேவை ஆற்றுவோம்.

இந்தச் சந்திப்பைப் பற்றி மேலும் படிக்க:-

1.இரண்டாம் தமிழ்ப்பதிவர் சந்திப்பு -அனந்தன்
2.மலேசியத் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு 2 -விக்கினேசுவரன் அடைக்கலம்

3.மலேசியத் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு - மலேசியாஇன்று.காம்

5 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

முழுமையான பதிவுக்கு மிக்க நன்றி ஐயா... ஒரு மாத இடைவெளியில் அடுத்தடுத்த சந்திப்புகளை நடத்தினால் மலேசிய தமிழ் வலைப்பதிவர்களின் எண்ணிக்கை நிச்சயம் உயர்வடையும் என்பது எமது கருத்தாகும்....

ஏற்பாட்டுக் குழுவினருக்கு எனது நன்றி...

முனைவர் மு.இளங்கோவன் said...

மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு குறித்த பதிவுக்கு நன்றி. மலேசியாவில் தமிழர்கள் மிகுதியாக இருப்பதால் அனைவரிடத்தும் வலைப்பதிவின் தேவை குறித்து விளக்கவேண்டும்.

தமிழகத்தில் பல இடங்களில் இதுபோன்ற பயிலரங்குளை நடத்திப் பலருக்குப் பயிற்சியளிக்கிறோம்.
நீங்களும் பயிற்சியளிக்கவும்.வாய்ப்பு நேர்ந்தால் மலேசியாவுக்கு வந்து இதுபோன்ற பயிலரங்குகளில் பயிற்சியளிக்கவும் அணியமாக உள்ளேன்.

திரு.இளந்தமிழ் அவர்களை நன்கு பயன்படுத்திக்கொள்ளவும்.

அனைவருக்கும் வாழ்த்துகள்.
மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா

துளசி கோபால் said...

அட! ஓசைப்படாமல் அருமையாக நடத்தி முடிச்சுருக்கீங்க!!!!!

இனிய வாழ்த்து(க்)கள்.

விவரங்களுக்கு நன்றி.

பிரான்சிஸ் சைமன் said...

உங்கள் பணி மேழும் சிறப்பாக அற்ற என் உளங்கனிந்த நழ்வாழ்த்துக்கள்!!!

பிரான்சிஸ் சைமன்,பினாங்கு
http://bryanisaac.blogspot.com

நற்கீரன் said...

அடுத்தமுறை தமிழ் விக்கிப்பீடியா பற்றி பகிர்ந்தாலும் சிறப்பாக இருக்கும்.

மலேசிய மலைப்பதிவர் சதீசு குமார் உதவ முடியும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தகவலுக்கு:

http://ta.wikipedia.org/wiki/WP:tawiki_workshop

Blog Widget by LinkWithin