மலேசியாவில் தமிழ்க்கல்வி 200 ஆண்டுகள் கொண்டாட்டத்தின்
தொடர்பில் பன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாடு நடைபெறவுள்ளது. எதிர்வரும் 20.10.2016
தொடங்கி 23.10.2016 வரையில் நான்கு
நாள்களுக்கு ‘21ஆம் நூற்றாண்டில் தமிழ்க்கல்வி’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு நடைபெறும். கெடா மாநிலத்தில் அமைந்துள்ள
எயிம்ஸ்ட் பல்கலைக்கழகம் இந்த மாநாட்டுக்குரிய இடமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
கல்வித் துணையமைச்சர் மாண்புமிகு டத்தோ ப.கமலநாதன்
அவர்களின் தலைமையில் மாநாடு நடைபெறும். மலேசியச் சுகாதார அமைச்சர் மாண்புமிகு
டத்தோ ஸ்ரீ டாக்டர்.சுப்பிரமணியம் அவர்கள் இம்மாநாட்டினை அதிகாரப்படியாகத் தொடக்கி
வைப்பார். மேலும் கல்வி அமைச்சர் மாண்புமிகு டத்தோ மாட்சீர் காலிட் அவர்களும்
கல்வி அமைச்சின் இயக்குநர்கள், உயர் அதிகாரிகள், விரிவுரையாளர்கள்,
தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பொது இயக்க பொறுப்பாளர்கள் ஆகியோர் மாநாட்டின் தொடக்க விழாவில்
கலந்துகொள்வர்.
மாநாட்டுத் தொடக்கவிழா 22.10.2016ஆம் நாள் மாலை மணி 2:00 தொடங்கி 5:00 வரையில்
நடைபெறும். தொடக்க விழாவில் கலந்து சிறப்பிக்க பொதுமக்கள் அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள்.
மலேசியாவிலிருந்து 250 தமிழாசிரியர்களும் கல்வி அதிகாரிகளும்
உள்பட சிங்கப்பூர், இந்தியா, இலங்கை,
அமெரிக்கா, பிரான்சு,
சுவிசர்லாந்து, மியான்மார், தாய்லாந்து, மொரிசியஸ், ஆஸ்திரேலியா முதலான வெளிநாடுகளைச்
சேர்த்த மொத்தம் 300 பேராளர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்வார்கள்
என எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியாவில் தமிழ்க்கல்வியின் வரலாறு, கலைத்திட்டம்,
கற்றல் கற்பித்தல், மதிப்பீடு, 21ஆம் நூற்றாண்டுக் கல்வி முதலான கோணங்களில் மாநாட்டில் அமர்வுகள்
நடைபெறவுள்ளன. மலேசியத் தமிழாசிரியர்கள் 24 பேர் எழுதிய
ஆய்வுக் கட்டுரைகளும் மாநாட்டில் படைக்கப்படவுள்ளன. மேலும் தமிழ்க்கல்வியின்
மேம்பாட்டுக்கு உரிய வழிவகைகளை ஆராய்வதற்கு 2 பட்டறைகளும் ஒரு
கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெறும்.
பன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டைப் பொறுப்பேற்று
நடத்துவதற்கு வே.இளஞ்செழியன் தலைமையில் ஓர் ஏற்பாட்டுக்குழு அனைத்துப் பணிகளையும்
செய்துவருகின்றது. இந்தக் குழுவில் கல்வி அமைச்சைச் சேர்ந்த அதிகாரிகள், தலைமையாசிரியர்கள்,
ஆசிரியர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெறுள்ளனர் என்பது
குறிப்பிடத்தக்கது.
மலேசியாவில் 200 ஆண்டுகளைக் கடந்துவந்துள்ள தமிழ்க்கல்வி 21ஆம்
நூற்றாண்டிலும் மாணவர்களுக்குப் பொருத்தப்பாட்டைக் கொண்டிருப்பதோடு திறன்மிக்க
மாந்த மூலதனத்தை உருவாக்குவதற்கு ஏற்புடையதாக அமைவதற்கு இந்த மாநாடு வழிவகுக்கும்
என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாடு தொடர்பான மேல் விவரங்களை www.tamilkalvi.my என்ற இணையத் தளத்தில் பெற்றுக்
கொள்ளலாம்.
நன்றி: www.tamilkalvi.my
No comments:
Post a Comment