‘தேசியப் பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும்” என்று தற்பொழுது நாட்டில் ஒரு குழுவினர் ஆள் – அம்பு – படை – சேனை ஆகிய அனைத்துப் பரிவாரங்களோடு கிளம்பி இருக்கிறார்கள். இவர்கள் இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு ஒரு முக்கியமான காரணத்தை முன்வைத்திருக்கிறார்கள். அதாவது,
“நாட்டில் உள்ள ஒவ்வொரு தமிழரும் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்” என்பதுதான் அந்தக் காரணம்.
சற்று மேலோட்டமாகப் பார்க்கையில், இந்தக் குழுவினர் முன்னெடுத்துள்ள கட்டாயப் பாடத் திட்டமானது மிகச் சரியானது போலவும்; மிகவும் நன்மையானது போலவும்; தமிழ்மொழியை உயர்த்திப் பிடிப்பது போலவும் தோன்றலாம்.
ஆனால், சற்றே ஆழ்ந்து நோக்கி ஆராய்ந்து பார்த்தால்தான் இந்தத் திட்டத்தினால் ஏற்படப்போகும் பேராபத்துகளும் பேரிழப்புகளும் புலப்படும்.
அவற்றுள் சிலவற்றைப் பின்வருமாறு பட்டியலிடலாம்:-
1)தமிழ்ப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென குறைந்து போகும்.
2) இதனால், தமிழ்ப்பள்ளிகள் ஒவ்வொன்றாக மூடப்படும்.
3) 523 தமிழ்ப்பள்ளிகள் படிப்படியாகக் குறைந்து போகும்.
4)தமிழ்க்கல்வி என்னும் அடிப்படை உரிமை பறிபோய், தமிழ்மொழி ஒரு பாடமாக மட்டுமே இருக்கும்.
5)அரசாங்கத் துறைத் தலைவர் (தலைமையாசிரியர்) பதவிகள் எல்லாம் இல்லாது போகும்.
6)தமிழ்க்கல்வித் துறையில் இருக்கும் ஆசிரியர்கள், அதிகாரிகள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் என்றிருக்கும் பதவிகள், பணிகள், பொறுப்புகள் அனைத்தும் கணிசமாகக் குறைந்து போகும்.
7) தமிழ்ப்பள்ளிகளை நம்பியிருக்கும் அச்சுத்துறை, நூல் பதிப்புத் துறை, பயிற்றுத் துணைப் பொருள் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் முதலான பொருளியல் வாய்ப்புகள் தொலைந்து போகும்.
8)தமிழ்ப்பள்ளிகளைச் சார்ந்து இயங்கும் பெற்றோர் ஆசிரியர் சங்கம், வாரியக் குழு, முன்னாள் மாணவர் சங்கம், தமிழ்ப்பள்ளி ஆசிரியர் சங்கம், தமிழாசிரியர் கூட்டுறவுக் கழகம் முதலான அமைப்புகள் அனைத்தும் முடக்கப்படும்.
9)தமிழ்ப்பள்ளிக் கட்டடங்கள், நில உரிமங்கள், மண்டபங்கள், நிதி வளங்கள் அனைத்தும் கேட்பார் கொள்வாரின்றி நிலைகெட்டுப் போகும்.
10)மலேசியாவில் தமிழ் மக்களின் வரலாற்றுச் சுவடுகள், வாழ்வியல் சுவடுகள் அனைத்தும் படிப்படியாக மறைந்துபோகும்.
11)வருங்காலத் தமிழ்ச் சமூகத்தின் மொழி, இன, சமய பண்பாட்டு, கூறுகள் அனைத்தும் சிதைந்து சின்னபின்னப்பட்டுப் போகும்.
12)இன்னும் 50 அல்லது 100 ஆண்டுகள் கழித்து தமிழுக்காகவும் தாய்மொழிக்காவும் தமிழ்ப்பள்ளிக்காகவும் தமிழ்க்கல்விக்காகவும் நமது குழந்தைகள் போராட வேண்டிய நெருக்கடி நிலைமை உருவாகும் அல்லது இவற்றைப் பற்றி ஒன்றுமே அறிந்திராத எதிலி இனமாக உருமாறும்.
இப்படியாக இன்னும் பல்வேறு இழப்புகளைப் பட்டியலிட்டுச் சொல்லலாம். இவை ஒவ்வொன்றையும் சான்றுபட விரிவாக விளக்கினால் இந்தக் கட்டுரை நீண்டுவிடும் என்பதால் இதனைச் சுருக்கமாகச் சொல்லி நிறுத்த வேண்டியுள்ளது.
“நாட்டில் உள்ள ஒவ்வொரு தமிழரும் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்” என்னும் ஒரே ஒரு நோக்கத்தை அடைவதற்கு நமது குமுகாயம் மேலே சொன்ன அத்தனை இழப்புகளுக்கும் அணியமாக (தயாராக) வேண்டுமா?
“நாட்டில் உள்ள ஒவ்வொரு தமிழரும் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்” என்னும் ஒரே ஒரு காரணத்திற்காக நமது இனம் இத்தனை ஆபத்துகளையும் எதிர்கொள்ள வேண்டுமா?
எதையும் இழக்காமல் எதனையும் அடைய முடியாது என்னும் கூற்றில் உண்மை இருந்தாலும்..
ஒன்றை எய்த நூறை இழக்க வேண்டுமா? ஒற்றை நன்மைக்காக ஒரு தலைமுறையை பலியிட வேண்டுமா? ஒரே ஒரு ‘தமிழ்ப் பாடத்திற்காக’ நமது அடிப்படை உரிமையாக இருக்கும் ‘தமிழ்ப்பள்ளியையும்’ - ‘தமிழ்க்கல்வியையும்’ இழக்கத்தான் வேண்டுமா? இன்றைய நமது தேவைக்காக அடுத்த தலைமுறையின் தாய்மொழி உரிமையை; தமிழ்ப்பள்ளி உரிமையை; தமிழ்க்கல்வி உரிமையைப் பறிக்கத்தான் வேண்டுமா?
“நாட்டில் உள்ள ஒவ்வொரு தமிழரும் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்” என்பதுதானே நோக்கம்! இலக்கு! குறிக்கோள்! அதற்காக ஏன் நாம் வேறு வழிகளையும் மாற்றுத் திட்டங்களையும் சிந்திக்கக் கூடாது? சான்றுக்குச் சில இதோ:-
1)நாடு முழுவதும் செயல்படும் அரசாங்க பாலர் பள்ளிகளில் (Tadika Perpaduan) தமிழையும் ஒரு பாடமாகக் கற்பிக்க வேண்டும் என்ற கோரிகையை முன்னெடுக்கலாம்.
2)நமது ஆலயங்கள் ஒவ்வொன்றும் கல்வி அமைச்சின் இசைவுடன் தமிழ் பாலர் பள்ளிகளை நிறுவி; நடத்துவதற்கு அவன செய்யலாம்.
3)தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க பரப்புரை இயக்கங்களை நடத்தலாம்.
4)தமிழ்ப்பளிகளில் சேரும் மாணவர்களுக்குச் சிறப்பு ஊக்குவிப்புப் பரிசுகளை வழங்கலாம். காட்டாக, 2013 தொடங்கி தமிழ்ப்பள்ளியில் முதலாம் ஆண்டில் பதிந்துகொள்ளும் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு மடிக்கணினி வழங்க நமது அரசு சார்பற்ற அமைப்புகள் முன்வரலாம்.
5)தமிழ்ப்பள்ளிகளின் அடிப்படை ஏந்துகளை (வசதிகளை) மேம்படுத்த அமைப்புகளும் இயக்கங்களும் அரசாங்கத்தை வலியுறுத்தலாம்.
5)தமிழ்ப்பள்ளிகளின் அடிப்படை ஏந்துகளை (வசதிகளை) மேம்படுத்த அமைப்புகளும் இயக்கங்களும் அரசாங்கத்தை வலியுறுத்தலாம்.
6)தமிழ்ப்பள்ளிகளில் தரமான கற்றல் கற்பித்தல் நடைபெறுவதை உறுதிபடுத்தும் நடவடிக்கைகளை உருவாக்கிச் செயற்படுத்தலாம்.
7)இடைநிலைப் பள்ளிக்குச் செல்லும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் தமிழைக் கட்டாயப் பாடமாக்கலாம்.
8)இடைநிலைப் பள்ளிகளில் தமிழையும் தமிழ் இலக்கணத்தையும் கால அட்டவணைக்குள் பயிற்றுவிக்க வேண்டும் எனக் கல்வி அமைச்சைத் தொடர்ச்சியாக வலியுறுத்தலாம்.
9) அரசுத் தேர்வுகளில் தமிழ்மொழி, தமிழ் இலக்கியப் பாடங்களில் சிறப்பாகத் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு வெகுமதிகள் வழங்கலாம்.
10)அரசாங்க வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பம் செய்யும் தமிழ் மாணவர்கள் தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் ஆகிய பாடங்களில் கண்டிப்பாகச் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற ஆணையைப் பிறப்பிக்க பொதுச்சேவைத் துறையிடம் கோரலாம்.
இவற்றுள் சிலவற்றையேனும் நாம் செய்வோமானால்.. இவற்றுள் ஓரிரு நடவடிக்கையை ஒழுங்காகத் திட்டமிட்டுச் செய்வோமானால்.. இவற்றுள் தெரிவு செய்யப்பட்ட சில திட்டங்களை முன்னெடுத்துச் செய்வோமானால்.. இவற்றை எல்லாம் சிந்திக்கவும் - ஆய்வுச் செய்யவும் – திட்டமிடவும் – செயற்படுத்தவும் – மேம்படுத்தவும் தேவையான இயங்கமைவு (Mechanism) நம்மிடம் இருக்குமானால்..
“நாட்டில் உள்ள ஒவ்வொரு தமிழருக்கும் கண்டிப்பாகத் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்கும்”.
கூடவே..
கூடவே..
“நாட்டில் உள்ள ஒரு தமிழ்ப்பள்ளி கூட மூடப்படாமல் நிலைத்து இருக்கும்! தலைநிமிர்ந்து நிற்கும்!”.
தேசியப் பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக்கி உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா? என்று ஆகப் போகிறோமா? அல்லது
தமிழ்ப்பள்ளிகளையும் தமிழ்க்கல்வியையும் மேம்படுத்தி காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளப் போகிறோமா?
முடிவு நமது கைகளில்!!!
@சுப.நற்குணன், திருத்தமிழ்
5 comments:
விவேகமுடன் சிந்தித்துப் பிரச்னைக்கான மாற்றுப் பரிந்துரைத்துள்ளீர்கள், அன்பரே!
கருத்துக்கு உடன் படுகிறேன்.
நன்றி.
இல.வாசுதேவன்,
ஸ்கூடாய்,ஜொகூர்.
பல கருத்துக்கள்...
நன்றி... வாழ்த்துக்கள்...
செறிவான கருத்துகள் ஐயா. தமிழ் நலம், தமிழர் நலம் பயக்கும் செய்திகள். கல்வி சார்ந்தும் பொருளாதாரம் சார்ந்தும் திறம்பட எடுத்துச் சொன்ன கருத்துகள் நம் தலைவர்களும் தலைமுறையினரும் சிந்திக்க வேண்டும்...தமிழ் படித்தால் சோறு போடுமா என்று கேட்பவருக்கு சரியான பதில்! இப்போது சாப்பிடுபவருக்கும் செம்மையான விக்கல்!
நல்ல பகிர்வு நல்ல கருத்துகள். இடைநிலை பள்ளிகளில் தமிழைக் கட்டாய பாடமாக்க வேண்டும் என்ற கருத்த நான் வழிமொழிகிறேன்.
எனது நீண்ட கருத்தை இங்குப் பதிவு செய்ய முடியாது என்பதால் www.facebook.com/rawangjohnson என்ற எனது வதன நூலில் பதிப்பித்திருக்கிறேன்.
Post a Comment