Wednesday, August 15, 2012

பூப்பந்து வாகையர் 'பஞ்ச்' குணாளன் இயற்கை எய்தினார்

மலேசிய நாட்டின் பூப்பந்து விளையாட்டு வாகையர்,  'பஞ்ச்' (Punch) என்ற சிறப்பு அடைமொழிக்குச்  சொந்தக்காரர் 'பஞ்ச்' குணாளன் இன்று (15.08.2012) இயற்கை எய்தினார். 1960 - 70களில் பூப்பந்து விளையாட்டுத் துறையில் உலக அளவில் மலேசியாவின்   புகழை உயர்த்திய அவர் புற்றுநோயின் காரணமாக த் தமது 68-ஆவது அகவையில் காலமானார்.

'பஞ்ச்' குணாளன் பூப்பந்து துறையில் மிகவும் புகழ்பெற்ற வீரராக விளங்கினார். பூப்பந்து ஆட்டத்தில் ஒற்றையர் பிரிவிலும், இங் பூன் பீ என்பவருடன் இணைந்து ஆடிய இரட்டையர் பிரிவிலும் இவர் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்து உள்நாட்டு மக்களின் கவனத்தையும் பன்னாட்டு மக்களின் பார்வையையும் ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1960ஆம் ஆண்டில் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நடந்த ஒரு பூப்பந்து போட்டியில் முதன் முதலாக வாகையர் பட்டத்தை வென்று பூப்பந்து துறையில் பெயர் பதித்தார். பின்னர் 1962இல் கோலாலம்பூரில் நடந்த ஆசிய இளைஞர் பூப்பந்து போட்டியில் வென்றதன் மூலமாக நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிரத் தொடங்கினார். 

பத்தாண்டுகள் கழித்து 1970ஆம் ஆண்டு எடின்பர்க்கு மாநகரில் நடந்த காமன்வெல்த்து போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்தார். அதே ஆண்டில் பாங்காக்கில் நடந்த ஆசியப் போட்டியில் தங்கம் வென்றார். பின்னர் அடுத்த ஆண்டிலேயே (1971) 'தோமசு கிண்ணப்' போட்டியில் இரட்டையர் பிரிவில் வாகையர் பட்டத்தை வென்று சாதித்தார். 1974இல்  நியுசிலாந்து நாட்டில் நடந்த காமன்வெல்த்து போட்டியில் தனியாள் பிரிவில் தங்கமும் இரட்டையர் பிரிவில் வெண்கலமும் வெற்றிகொண்டு தமது திறனைப் பறைசாற்றினார்.

பூப்பந்து விளையாட்டுத் துறையில் இவருடைய  சாதனைகளுக்கு மதிப்பளித்து 1969, 1974 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மலேசிய அரசாங்கம் இவருக்குத் தேசிய சாதனையாளர் விருதளித்து சிறப்பு செய்தது. 

பூப்பந்து ஆடுவதிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் இவர் தம்முடைய பட்டறிவையும் விளையாட்டு நுணுக்கங்களையும் இளம் விளையாட்டாளர்களுக்குப் பயிற்றுவிக்கத் தொடங்கினார். தேசிய பயிற்றுனாராகப் பணியாற்றி 1992ஆம் ஆண்டில் 'தோமசு கிண்ணத்தைக்' கைப்பற்றும் அளவுக்கு நாட்டின் பூப்பந்து குழுவினரை உருவாக்கிய பெருமை இவரையே சாரும்.

நமது நாட்டின் புகழ்பெற்ற பூப்பந்து வீரர்களான இரசிட் சிடேக், இரசிவ் சிடேக், பூ கொக் கியாங் போன்றோர் இவரிடம் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசியப் பூப்பந்து சம்மேளனத்தின் (Asian Badminton Confederation) செயலாளராகவும், அனைத்துலகப் பூப்பந்து பேரவையின் (International Badminton Federation) தலைவராகவும் பொறுப்பேற்ற பெருமையும் இவருக்கு உண்டு. அதேபோல, மலேசியப் பூப்பந்து சங்கத்தின் தலைவராக 1985 முதல் 1997 வரை பணியாற்றியுள்ளார்.

1998ஆம் ஆண்டில் காமன்வெல்த்துப் போட்டிக்கான விளையாட்டு தீபத்தை, பங்கீங்காம் அரன்மனையில் இங்கிலாந்து பேரரிசியார் எலிசபெத்திடமிருந்து பெற்றுகொள்ளும் மிக உயரிய தகுதிபாட்டை இவர் பெற்றிருக்கிறார் என்பது பெருமைக்குரிய செய்தியாகும். 'பஞ்ச்' குணாளனின் பங்களிப்பைப் பெருமைபடுத்தும் வகையில் மலேசிய அரசாங்கம் இவருக்கு 'டத்தோ' எனப்படும் உயரிய விருதையும் வழங்கிச் சிறப்பித்துள்ளது.

பூப்பந்து போட்டியில் விரைந்து தாக்குவதில் (Smash) மிக வல்லவராக விளங்கிய காரணத்தினால் இவருக்கு 'பஞ்ச்' (Punch) என்ற அடைமொழி பெயருடன் ஒட்டிக்கொண்டது. இஃது அவருக்கே உரிய தனிச்சிறப்பாகும்.

திருமதி.விஜயகுமாரி என்பாரை வாழ்க்கைத் துணைவியாகவும், ரோசன் என்னும் பெயரில் ஒரே மகனையும் பெற்று மிகச் சிறந்த வாகையராகவும் மிக நல்ல மனிதராகவும் வாழ்ந்து, இறைவன் திருவடி சேர்ந்துவிட்ட மதிப்புமிகு டத்டோ பஞ்ச் குணாளன் அவர்களின் ஆதன் அமைதிபெற எல்லாம் வல்ல இறைமைத் திருவருள் துணைநிற்க வேண்டுவோமாக!

@சுப.நற்குணன், திருத்தமிழ்

No comments:

Blog Widget by LinkWithin