Tuesday, June 15, 2010

சுழியமா? பூச்சியமா? ஒரு கல்வியியல் நோக்கு (1/2)


தமிழ்ப்பள்ளிகளுக்கான கணிதம், அறிவியல் பாடநூலில் சுழியம், பூச்சியம் ஆகிய இரண்டில் எதனைப் பயன்படுத்துவது என்ற கருதாடல்களும் கண்டனங்களும் நமது நாளிதழ்களில் அமளிதுமளியாகி தற்போது சற்றே அமைதியாகி இருக்கிறது.

இந்தச் சிக்கல் தொடர்பான பதிவுகளைப் படித்துப் பார்க்கவும்.
4. பள்ளிப் பாடநூலில் சுழியம்! தமிழுக்கு வெற்றி

தமிழ்ப்பள்ளிப் பாடநூலில் சுழியமே பயன்படுத்தப்பட வேண்டும் எனும் முடிவுக்கு எல்லாத் தரப்பினரும் ஒன்றுபட்டு வந்துவிட்டனர். அந்த முடிவைப் பற்றி விவாதிக்காமல், சுழியமா? பூச்சியமா? எனும் சிக்கலைக் கல்வியியல் நோக்கோடு அலசுகிறது இந்தக் கட்டுரை.

அதற்கு முன், இந்தச் சிக்கல் தொடர்பாக திருத்தமிழ் மேற்கொண்ட கணக்கெடுப்பின் முடிவினைக் கொஞ்சம் பாருங்கள்.

இதன்படி, பதிவாகிய 200 வாக்குகளில் 96% தமிழ்ப் பாடநூலில் சுழியம் என்ற நல்லதமிழ்ச் சொல்லையே முனைந்து பயன்படுத்த வேண்டும் என வாக்களித்துள்ளனர். சுழியத்தை ஆதரிக்காதவர்கள் வெறும் 4% மட்டுமே. அதாவது 8 பேர்தான்.

சுழியமா? பூச்சியமா? என்று முளைத்திருக்கும் இந்தச் சிக்கல் மொழியியல், இனவியல், மதவியல், தொல்லியல் ஆகியவை சார்ந்தது அல்ல.

எனவே, இவற்றை விடுத்து, தமிழ்க் கல்வியியல் சார்ந்த ஒரு சிக்கலாக இதனை அணுக வேண்டும். காரணம், தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கற்கப்போகும் பாடநூலில் எந்தச் சொல்லைப் பயன்படுத்துவது? என்பதே இப்போதைக்கு எழுந்துள்ள சிக்கல்.

கல்வியியல் அடிப்படையில் அறிவுசார்ந்து இந்தச் சிக்கலைப் பார்க்க வேண்டுமே தவிர, மேலே சொன்னது போல பல்வேறு அடிப்படைகளில், உணர்ச்சிவயப்பட்டு சிந்திக்கக் கூடாது; திசை திருப்பவும் கூடாது. அப்படியான எண்ணத்தோடு இச்சிக்கலை அணுகினால் இழுபறி நிலைதான் மிஞ்சுமே தவிர சரியான தீர்வுக்கு வரவே முடியாது.

கற்றல் என்றால் என்ன?

கற்றல் என்பது பட்டறிவின் அடிப்படையில் ஏற்படும் நடத்தை மாற்றம் என்பது ஆய்வாளர்கள் கூற்று. மாணவர்களின் முன்னறிவு, சுற்றுச் சூழல், ஆசிரியரின் கற்பித்தல் ஆகியவற்றால் ஏற்படுகின்ற பட்டறிவின் அடிப்படையில் மாணவர்களிடையே கற்றல் நடைபெறுகிறது. இவ்வாறு கற்றதை எண்ணம், சொல், செயல் ஆகிய வடிவங்களில் மாணவர்கள் வெளிப்படுத்தும்போது அவர்களுடைய நடத்தையில் மாற்றம் ஏற்படுகிறது. மீண்டும் மீண்டும் தொடர்ந்து இவ்வாறு நிகழுவதையே கற்றல் என்கிறோம்.

ஆகவே, சரியான திட்டமிடல், அணுகுமுறை, துணைக்கருவிகள் ஆகியவற்றின் உதவியோடு வகுப்பில் கற்பித்தலை நடத்தி மாணவர்களைக் கற்றவர்களாக ஆக்க வேண்டியவர்களில் முதன்மையானவர்கள் ஆசிரியர்களே ஆவர்.

இந்தச் சூழலில், இது மாணவர்களுக்குத் தெரியும்; அது தெரியாது! இது மாணவர்களுக்குப் பழக்கமானது; அது மாணவர்களுக்குப் பழக்கமில்லாதது! இது மாணவர்கள் அறிந்தது; அது அறியாதது! இது புரியும்; அது புதியாது! என்பன போன்ற பேச்சுக்கே இடமில்லை.

ஆகவே, மாணவர்களுக்கு ஒன்றைக் கற்பித்து அவர்களுக்குப் புரிய வைப்பது ஆசிரியர்களுடைய பணியாகும். ஆசிரியர்களால் எதையும் கற்பிக்க இயலும் அதேபோல் ஆசிரியர்களின் திறமையான கற்பித்தலால் மாணவர்களால் எதையும் கற்றுக்கொள்ள முடியும் என்பது தெளிவு.

சுழியமா, பூச்சியமா எது புரியும்?

சுழியம் – பூச்சியம் ஆகிய இரண்டையுமே மாணவர்கள் கற்றுக்கொள்ள முடியும். இதில் எந்தவிதச் சிக்கலையும் அவர்கள் எதிர்நோக்க மாட்டார்கள். அதுமட்டுமல்லாமல், இதற்கு மலாய், ஆங்கிலம் முதலான வேறு மொழிகளில் என்ன பெயர் என்பதையும், அதனுடைய கருத்துருவையும் (Concept) அவர்களால் கற்றுக்கொள்ள முடியும். அந்த அளவுக்கு மாணவர்களுக்குக் கற்கும் ஆற்றல் இயல்பாகவே அமைந்திருக்கிறது.

சுழியம் – பூச்சியம் இரண்டில் எதைக் கற்பிப்பது?

இந்தக் கேள்விக்கு, ஏற்கனவே சொன்னதுபோல உணர்ச்சிவயப்பட்டாமல் சிந்தித்தால் விடை கிடைத்துவிடும்.

எங்கே கற்பிக்கப் போகிறோம்? தமிழ்ப்பள்ளியில். எந்த மொழியில் கற்பிக்கப் போகிறோம்? தமிழ்மொழியில். பாடநூல் எந்த மொழியில் இருக்கப் போகிறது? தமிழ்மொழியில். ஆகவே, எந்த மொழியில் கற்பிக்க வேண்டும்? எளிதாக விடை கிடைத்துவிடும், தமிழ்மொழிதான் என்று.

அப்படியென்றால், எது தமிழ்மொழிச் சொல்? சுழியமா? அல்லது பூச்சியமா? நிச்சயமாகச் சுழியம்தாம். இல்லையில்லை, பூச்சியமும் தமிழ்தான் என்று வாதிடுவதற்கு எந்தவித அடிப்படையும் இருப்பதாகத் தெரியவில்லை. காரணம் அது தமிழே அல்ல.

பூச்சியத்தைப் பயன்படுத்தலாம் என்பதற்கு ஒரே ஒரு அடிப்படைதான் இருக்கிறது. நீண்ட காலமாக நம்முடைய பழக்கத்தில், வழக்கத்தில், பேச்சில், எழுத்தில் இருக்கிறது என்பது மட்டும்தான். இந்த ஒரு காரணத்திற்காக மட்டுமே இதனைப் படிக்க வேண்டும் என்பது அறிவுக்குப் பொருந்தாதது மட்டுமல்ல; கல்வியியல் கோட்பாட்டுக்கே எதிரானது. புதியன கற்று நடத்தையில் மாற்றம் பெறுவதுதானே கல்வி.

பழக்கத்தில் இருப்பதால் பாடநூலில் பயன்படுத்தலாம் என்றால், சுழியத்தைக் குறிக்கும் கோசம், சைபர், சீரோ முதலான சொற்களும் நம்மிடையே பழங்காலமாக வழக்கத்தில் இருந்து வருகின்றன. இன்னும் சொல்லப்போனால், பூச்சியத்தை விட ‘கோசம்’ என்ற மலாய் சொல்தான் மக்கள் வழக்கில் அதிகமாக இருக்கிறது.

கோசம், சைபர், சீரோ ஆகிய சொற்களைப் பாடநூலில் பயன்படுத்துவதற்கு யாரும் போர்க்கொடி தூக்கிப் போராட்டம் நடத்தவில்லை. காரணம், அவை பிறமொழிச் சொற்கள் என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால், அதேவேளையில் ‘பூச்சியம்’ என்பதும் பிறமொழிச் சொல்தான் என்பதை அறியாமல் இருப்பது அல்லது அறிந்தும் அறியாததுபோல் நடிப்பது நகைப்புக்குரியதாகும்.

பூச்சியம் என்று தமிழ்வடிவத்தில் எழுதப்படும் ‘பூஜ்யம்’ என்ற தமிழ் அல்லாத சொல்லை தமிழ்ப் பாடநூலில் புகுத்திக் கற்பிப்பதற்குக் கல்வியியலில் எங்குமே இடமிருப்பதாகத் தெரியவில்லை. ஒரு வேளை, குறிப்பிட்ட சொல் தமிழில் இல்லாத சூழலில் பிறமொழியைக் கடன்பெற்று தற்காலிகமாகப் பயன்படுத்தலாம். ஆனால், சரியான சொல் இருக்கும்போது பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்துதல் முறையாகுமா?

அப்படிப் பார்த்தால், இன்று வழக்கில் இருக்கும் ஆயிரக்கணக்கான தமிழ்ச்சொற்கள் உருவாகி இருக்க முடியாது. இன்னமும் மணிப்பிரவாளத்தைத்தான் படித்துக்கொண்டு இருந்திருப்போம்.

  • அடுத்த பகுதியில் நிறைவுபெறும்

@திருத்தமிழ் உழியன்; சுப.நற்குணன்

2 comments:

Ravi Devaraj said...

தங்கள் வலைப் பூவைக் கண்டேன். மெத்த மகிழ்ச்சி. சுழியமா? பூச்சியமா? என்பது குறித்து என் கருத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

பூச்சியம் என்ற சொல் வடசொல் அன்று. அந்த மாதிரி சொல் வடமொழியிலே இல்லை. காண்க.

http://dsal1.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.3:1:4616.apte

पूज्य pūjya

पूज्य a. Deserving respect, worthy of honour, res- pectable, venerable. -ज्यः A father-in-law.

சுழியத்தைக் குறிக்கப் பூச்சியம் என்ற சொல் தமிழிலும் பூஜ்யமு என்று தெலுங்கிலும் மட்டுமே பயன்படுத்தப் படுகிறது.

పూజ్యము pūjyamu. adj. Venerable, deserving of respect and reverence. n. Nothing. భోజనానకు పూజ్యమున్నది I have nothing to live upon.

முன்பு பூச்சியத்தைக் குறிக்க நம் புள்ளியிட்டுக் குறித்தோம். காண்க.

http://en.wikipedia.org/wiki/Glyphs_used_with_the_Arabic_numeral_system#Symbols.

அது இன்று பூச்சியம் 0 என்ற வடிவாய் மாறியுள்ளது.


புள்-> புள்ளி Mark, dot, speck, point, jot; பொட்டுக்குறி.

புள்->புள்ளி-> (பூச்சி)-> பூச்சியம். Zero; இன்மைப்பொரு ளுணர்த்தும் சுன்னம்

புள்ளி வெறுமை மற்றும் இன்மையைக் குறித்ததால் சுல் சுன்னம், (சூனம்) சூனியம் (சுல்-> சுழி) என்று தமிழிலும், சுன்னமு என்று தெலுங்கிலும் சுன்னே/சொன்னே என்று கன்னடத்திலும் சூன்ய என்று வடமொழியிலும் பயன்படுத்தப்படுகிறது.

அதனால் பூச்சியம் என்பதைத் தமிழ்ச் சொல் அன்று என்று கருத வேண்டாம் என்று கோருகிறேன்.


இங்ஙனம்

இரவி /రవి
ravivararo.blogspot.com
www.scribd.com/dravivararo

சுப.நற்குணன்,மலேசியா. said...

@ravivararo

தங்களின் வருகைக்கும் நல்லதொரு மறுமொழிக்கும் முதற்கண் நன்றி மொழிகின்றேன்.

நல்ல தகவல்களைத் திரட்டி தந்தமைக்கும் நன்றி.

'0' என்ற எண்ணைக் குறிக்க தமிழில் நிறைய சொற்கள் உள்ளன.

சுழி - சுன்னம் - சுழியம் ஆகியவையோடு இலக்கியத்தில் சுரவு, பாழ் ஆகிய சொல்லாடல்களையும் காண முடிகிறது.

"பாழ் என, கால் என, பாகு என" என்று ஒரு பாடல் உள்ளது.

இன்று ஆங்கிலத்தில் 'சீரோ' (zero) என்பதற்கு மூலமே 'சுரவு' என்னும் தமிழ்ச்சொல்தான் எனவும் வேர்ச்சொல் அறிஞர்கள் சொல்லுகின்றனர்.

ஆயினும், மலேசியச் சூழலில் 'சுழியம்' என்பது மிகப் பரவலாகப் பயன்பாட்டில் உள்ளது. இது குறித்து என கட்டுரையின் இரண்டாம் பகுதியில் எழுதியுள்ளேன். காண்க.

ஆகவே, சுழியம் என்பதே எங்களுடைய தமிழ்ப்பள்ளி பாடநூலில் இடம்பெற வேண்டும் என்பது பலருடைய அவாவாக உள்ளது. இந்த அவாவை வலியுறுத்துவதற்குத் தகுந்த அடிப்படையும் நியாயமான கரணியமும் இருக்கிறது.

Blog Widget by LinkWithin