Tuesday, April 13, 2010

கணிதம், அறிவியல் பாடநூலில் தமிழ் புறக்கணிப்பு


மலேசியாவில், தமிழ்மொழியில் உருவாகி வரும் கணிதம், அறிவியல் பாடநூல்களில் தமிழுக்குக் கதவடைப்பு செய்துவிட்டு சமற்கிருதம், கிரந்தத்திற்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு நல்கப்படுவதாக நாளிதழில் வெளிவந்த கண்டனச் செய்தி இது. –சுப.ந.


****************************

தமிழ்மொழியில் இயற்றப்படுகின்ற கணித, அறிவியல் பாட நூல்களில் தமிழ் புறக்கணிக்கப்படுகின்ற நடவடிக்கைக்கு மலேசியத் திராவிடர் கழகம் கண்டனம் தெரிவிக்கிறது என்று அதன் தேசியத் தலைவர் இரெ.சு.முத்தையா தெரிவித்துள்ளார்.

அறிவியல், கணிதப் பாடங்கள் தற்பொழுது ஆங்கில மொழியில் பயிற்றுவிக்கப்படுகின்றன. அவை, அடுத்த கல்வி ஆண்டு முதல் தாய் மொழியிலேயே பயிற்றுவிக்கப்படவிருக்கின்ற நிலையில், ஆரம்ப பாடசாலையில் முதல் வகுப்பு முதல் ஆறாம் ஆண்டு வரை உள்ள கணித, அறிவியல் பாட நூல்கள் தமிழ், மலாய், சீன மொழிகளில் தயாரிக்கப்படுகின்றன.


2012ஆம் கல்வி ஆண்டிலிருந்து தமிழ்ப்பள்ளிகளில் முதல் வகுப்பு மாணவர்கள் கணித, அறிவியல் பாடங்களைத் தாய்மொழியில் கற்க இருக்கின்றனர்.

இதனால் தமிழ்மொழியில் கணித, அறிவியல் பாடங்கள் தயாரிக்கப்படுகின்றன. கல்வி அமைச்சின் தமிழ்மொழிக்கான கலைத்திட்ட மேம்பாட்டுக் குழுவின் வழிகாட்டுதலில் பாடநூல் பிரிவு அதற்கான பணிகளில் மும்முரம் காட்டி வருவது பாராட்டுக்குரியது.

ஆனால், இவ்விரு அமைப்புகளையும் சேர்ந்தவர்கள் நல்லதமிழ்ச் சொற்களை அடியோடு புறக்கணிப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக, சுழியம் என்ற சொல்லுக்குப் பதிலாகப் பூஜியம் என்ற சொல்லை வலிந்து பயன்படுத்துகின்றனராம்.

அரசு தமிழ் வானொலியான மின்னல் வானொலி, தனியார் வானொலியான தி.எச்.ஆர் ராகா, அசுட்ரோ வானவில் தொலைக்காட்சி அலைவரிசை எல்லாம் சுழியம் என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனரே, நாமும் நம் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குப் புதிய தமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்துவோமே என்ற எண்ணமெல்லாம் இல்லாமல், பூஜியம் என்று போடலாமா? அல்லது புஜ்ஜியம் என்று அச்சிடலாமா? என்றெல்லாம் ஆலோசிக்கின்றார்களாம்.

மின்னல் வானொலிக்கு இதற்கு முன்னால் வேறொருவர் தலைவராக இருந்த காலத்தில் இதே குழுவினர் கல்வி அமைச்சின் சார்பில் கடிதம் எழுதி சுழியத்தைப் பயன்படுத்தக் கூடாது என்றெல்லாம் கேட்டுக்கொண்டனராம்.

இந்த நாட்டில் வாழ்கின்ற இந்தியர்களில் ஏறக்குறைய 85 விழுக்காட்டினர் தமிழராக உள்ள நிலையில் தமிழ்மொழிக்காக அரசு ஏற்படுத்தியுள்ள அமைப்புகளில் அமர்ந்துகொண்டு, தமிழ்மொழியின் ஆக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் துணைபுரியாமல், கி.மு 6, 7, 8 ஆம் நூற்றாண்டுகளில் தமிழும் தமிழரும் ஆட்சியை இழந்த நிலையில், தமிழில் இடைசெருகப்பட்ட பூஜியம் என்ற சொல்லுக்கு ஆதரவு தெரிவிக்கும் தமிழ் அதிகாரிகள் சமுதாயத்திற்குப் பதில் சொல்ல வேண்டிய காலம் வரும் என்று இரெ.சு.முத்தையா தெரிவித்தார்.

2002ஆம் ஆண்டில் அறிவியல், கணிதப் பாடங்கள் தாய்மொழியிலிருந்து ஆங்கில மொழிக்கு மாற்றப்பட்டன. அப்போதைய பிரதமர் துன் மகாதீர் மலேசிய மாணவர்கள் ஆங்கில மொழியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக இதைக் கொள்கை முடிவாகவே அறிவித்தார்.

ஆனாலும், தமிழ்மொழியில் இவ்விரு முக்கியப் பாடங்களும் பயில வேண்டும் என்று கல்வியாளர்களும் சமுக ஆர்வலர்களும் ஆரம்பம் முதலே குரல் கொடுத்தனர். 2003ஆம் ஆண்டு நடைமுறைபடுத்தப்பட்ட இத்திட்டத்தின்படி 2008ஆம் யூ.பி.எஸ்.ஆர் மாணவர்கள் கணித அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் எழுதினர்.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, உலக மொழிக்கெல்லாம் சொற்களை ஈகம் செய்து பல மொழிகளை ஈன்று புறம்தந்த தமிழ்மொழியில் காலத்தால் மறுமலர்ச்சி பெறுவதற்கான கடமைகளைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செய்ய வேண்டும்.

ஆங்கில மொழிகளில்கூட எத்தனையோ மாற்றம் பெற்றுள்ள நிலைமையில் தமிழும் வளர்ச்சி காணவேண்டும். அப்போதுதான் அது காலத்தால் தழைக்கும்; நிலைக்கும். இதற்கு, அனைவரின் பங்களிப்பும் அவசியம் என்று இரெ.சு.முத்தையா வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

  • நன்றி: மலேசிய நண்பன் (11-4-2010)

2 comments:

Karthigasu said...

அழிந்துகொண்டிருக்கும் தமிழ் மொழியையும், தமிழ் இனத்தையும் மீட்டெடுக்க சில தமிழ் உள்ளங்களும், அரசு சார்பற்ற இயக்கங்களும் முயன்றுகொண்டிருக்கும் இன்றையச் சூழ்நிலையில் இது போன்ற செய்தி நம்மை வேதனையடையச் செய்கின்றது.

தமிழ் பள்ளியில் வேலை செய்து, இதுநாள் வரையில் பிழைப்பு நடத்தி இப்பொழுது அந்தத் தமிழ்மொழிக்கே கேடு விளைவிக்க முனைந்திருக்கும் இத்து போன்ற அதிகாரிகள் நம் தமிழ் பள்ளிக்குத் தேவைதானா?

தனித்தமிழை நீக்கி பயன்பாட்டிலேயே இல்லாத அந்த சமசுகிரிதம், கிரந்த எழுத்துகளுக்கு முன்னுரிமை கொடுக்க முனைந்திருக்கும் கல்வி அமைச்சின் தமிழ்மொழிக்கான கலைத்திட்ட மேம்பாட்டுக் குழுவும், பாடநூல் பிரிவும் இவ்வளவு காலமும் பருகிய இனியத் தமிழின் அருமையை புறக்கணிப்பது ஏனோ?

2012ஆம் கல்வி ஆண்டிலிருந்து தமிழ்ப்பள்ளிகளில் முதல் வகுப்பு மாணவர்கள் கணித, அறிவியல் பாடங்களைத் தாய்மொழியில் கற்க இருக்கின்றனர்.

ஆகவே....,
இந்த அதிகாரிகள் மேலும் மேலும் விதண்டாவாதம் செய்யாமல் தமிழ்மொழியில் இயற்றப்படுகின்ற கணித, அறிவியல் பாடநூல்களில் தனித்தமிழ் மட்டுமே இடம்பெற வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

இதற்கு எதிராக பொறுப்பற்ற அந்த அரிகாரிகள் தொடர்ந்து செயல்படுவார்களெனில்.. தமிழ் ஆசிரியர்களும், தமிழ் உணர்வுமிக்கவர்களும், தமிழ்ச்சார்ந்த அரசு சார்பற்ற இயக்கங்களும் கண்டிப்பாகப் போர்க்கொடி தூக்கவேண்டிய சூழல் உருவாகும்.

ஒரு மொழியின் வளர்ச்சிக்கு காலத்திற்கேற்ற மாற்றம் கண்டிப்பாகத் தேவையே. அதுவும் தமிழ்ப்பள்ளிகளின் பாடநூல்களில் தனித்தமிழ் இடம்பெறச் செய்வது செயல்முறைப்படுத்தப்படவேண்டிய ஒன்றே... இதனை பல்கலைகழகங்களின் தமிழ்ப்பிரிவு பேராசிரியர்கள், மாநில, மாவட்ட கல்வி இலாகாக்களின் தமிழ்ப்பிரிவு அதிகாரிகள், தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் உறுதிசெய்ய வேண்டும்.

இதற்குப் பொறுப்பான அந்த அதிகாரிகள் தமிழ்ச்சார்ந்த இயக்கங்களைக் கலந்தாலோசித்து செயல்படலாமே..!

அப்படித் தனித்தமிழ் பாடநூல்களில் இடம்பெற்றால் வரும் காலங்களில் தமிழ்க்கூறும் நல்லுலகம் நிச்சயம் இவர்கள் பேர் நிலைக்கச் செய்யும்.

ஆகவே....
தமிழ்மொழியில் இயற்றப்படுகின்ற கணித, அறிவியல் பாட நூல்களில் தமிழ் புறக்கணிக்கப்படுகின்ற இந்த நடவடிக்கையை ஒரு தமிழன் என்ற முறையிலும், ஒரு தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர் என்ற முறையிலும் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

நன்றி, வணக்கம்.

வாழ்க தமிழ்... வளர்க தமிழ் இனம்.

தமிழ்க்குமரன்,
கோல கெட்டில்,
கெடா.

சுப.நற்குணன்,மலேசியா. said...

@திருத்தமிழ் அன்பர் தமிழ்க்குமரன்,

தங்களின் வளமான கருத்துக்கு மனமார்ந்த நன்றி.

உங்கள் கருத்துகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைச் சிந்திக்க வைத்தால் நல்லது.

தொடர்ந்து வாருங்கள். உங்கள் மறுமொழிகளைத் தாருங்க.

Blog Widget by LinkWithin