Wednesday, April 14, 2010

சித்திரைப் புத்தாண்டு பலன்கள் + பாடங்கள்

முக்கிய அறிவிப்பு:-இது எந்தத் தரப்பினரையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டது அன்று. உணர்ச்சிவயப்படாமல் அறிவான முறையிலும் தருக்க சிந்தனையோடும் இதனைப் படிக்க தாழ்மையுடன் வேண்டுகிறேன். கேள்வியே கேட்காமல் எல்லாவற்றையும் நம்புகின்ற காலத்தைக் கடந்து, எதையும் அறிவாராய்ச்சி முறையில் நிறுத்துப்பார்த்துச் சரியான முடிவைக் காணும் காலத்தில் வாழ்கிறோம். நமது அடுத்த தலைமுறைக்குத் தக்க வழிகாட்டுதலைச் சொல்ல வேண்டிய தருணத்தில் இருக்கிறோம். ஆதலால், எதையும் ஏன்? எதற்கு? என்று கேட்பது அறிவறிந்த மக்கட்பண்பு. அங்ஙனம் கேட்பது ஒன்றனுடைய சிறப்பைக் குறைக்கும் நோக்கமன்று; மாறாக, உண்மை தேடும் உயர்ந்த இலக்கைக் கொண்டது என்பதைத் தெளிவுபடுத்த விழைகிறேன்.-சுப.ந.
சித்திரைப் புத்தாண்டு. இதனைச் சிலர் தமிழ்ப் புத்தாண்டு என்கிறார்கள். சிலர் இந்துப் புத்தாண்டு என்கிறார்கள். இன்னும் சிலர் “நமக்கேன் வேண்டாத வம்பு” என்றெண்ணி சித்திரைப் புத்தாண்டு என்று மட்டும் சொல்லி சமாளித்துக் கொள்கிறார்கள்.இந்தக் குளறுபடி இன்று நேற்றல்ல. பல ஆண்டுகளாகத் தொடர்கதையாக இழுத்துக் கொண்டிருக்கிறது. உண்மையில், எதுதான் சரி? 
இந்த விவாதத்திற்கு நான் போக விரும்பவில்லை. ஏற்கனவே, திருத்தமிழில் தமிழ்ப் புத்தாண்டு பற்றி நிறைய எழுதியாகிவிட்டது. இங்கு, சித்திரைப் புத்தாண்டை ஒட்டிய வேறொரு சிந்தனையை முன்வைக்க விழைகிறேன்.

சித்திரைப் புத்தாண்டில் மிக மிக முக்கியமான அங்கம் ‘புத்தாண்டு பலன்’ வாசிப்பதுதான் போலும். அதுவன்றி சித்திரைப் புத்தாண்டில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது வேறெதுவும் இல்லாமல் போய்விட்டது. அந்த அளவுக்குச் சித்திரைப் புத்தாண்டின் செல்வாக்கு மழுங்கி - சுருங்கி - தேய்ந்து போய்விட்டது. சோதிடச் சகதியில் அழுந்திபோய் மீட்க முடியாத ஆழத்தில் கிடக்கிறது.


அதிகமான ஆரியத் தன்மைகள் கலப்பினாலும் - சமற்கிருத ஊடுருவல்களாலும் - மதச் சார்பினாலும் - பொருளற்ற சடங்கு முறைகளாலும் - சோதிடத் தாக்கத்தினாலும் சித்திரைப் புத்தாண்டு தன்னுடைய தொன்மையான செம்மையை இழந்து சின்னபின்னப்பட்டுக் கிடக்கிறது.

இதுவெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். இனி நான் சொல்ல வந்த விடயத்தைப் பார்ப்போமா?

சித்திரைப் புத்தாண்டு அன்று குட்டிக் கோயில் தொடங்கி, தெருக்கோயில், தோட்டக் கோயில், சிறுதெய்வக் கோயில், பெரியக் கோயில், மலைக்கோயில், குகைக்கோயில், நகரக் கோயில், புறம்போக்கு நிலக் கோயில் என ஒரு கோயில் விடாமல், புத்தாண்டுச் சிறப்புப் பூசை என்று பத்தர்களைக் கூட்டமாகக் கூட்டி வைத்துக்கொண்டு ‘புத்தாண்டு பலன் வாசிப்பது’ நம் நாட்டில் வழக்கமாகி விட்டது.


இன்னும் சொல்லப்போனால், இப்படி செய்வது என்னமோ மிகப் பெரிய சமயக் கடமை - மிகப் பெரிய இறை நம்பிக்கை - புனிதமான ஆன்மிகச் செயல் போல இன்று ஆகிவிட்டது.

இப்படி சித்திரைப் புத்தாண்டுக்குச் சோதிடப் பலன் வாசிப்பவர்கள் அல்லது நம்புபவர்களைப் பற்றி நாம் குறை சொல்லவில்லை. அது அவரவர் தனிப்பட்ட நம்பிக்கை; உரிமை. 

ஆனாலும், பொதுவாகவே சோதிடப் பலன்களை வாசிப்பவர்கள் - நேசிப்பவர்கள் - நம்புபவர்கள் - நாளிதழ்களில் போடுபவர்கள் - வானொலி தொலைக்காட்சியில் பேசுபவர்களை நோக்கி சில வினாக்களைத் தொடுக்க தோன்றுகிறது.
 
1.சித்திரைப் புத்தாண்டுப் பலன்கள் எந்த அளவுக்கு உண்மையானவை. இந்தச் சித்திரை தொடங்கி இன்னும் 12 மாதங்களுக்கு இந்தப் பலன்கள் நடக்குமா? பலிக்குமா? 

2.சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் ஆங்கிலப் புத்தாண்டு 2010 பிறந்தபோது இராசி பலன் சொன்னார்களே சோதிடர்கள். அது பலிக்குமா? அல்லது சித்திரைப் புத்தாண்டு பலன் பலிக்குமா? இவை இரண்டில் எந்தச் சோதிடப் பலன் பலிக்கும்? எந்தப் பலனுக்குச் சத்தி அதிகம்?

3.இவை போக, இடையிடையே குரு பெயர்ச்சி பலன், சனிப் பெயர்ச்சி பலன் என்று நாளிதழ்களில் ஒரு நாளுக்கு ஒரு இராசிக்கான பலன் என்ற கணக்கில் பக்கம் பக்கமாக எழுதுகிறார்களே ஏன்? இதுவும் பலிக்குமா? ஏற்கனவே சொல்லப்பட்ட ஆங்கிலப் புத்தாண்டு பலன், சித்திரைப் புத்தாண்டு பலன் ஆகியவற்றை மிஞ்சியதா இது? 

4.பிறகு, நாள் பலன், வாரப் பலன், மாதப் பலன் என்று சில நாளேடுகள், வார, மாத இதழ்கள் போடுகின்றன. இது எப்படி? இதுவும் வேலை செய்யுமா?

5.இத்தனை இராசி பலன்களுக்கு நடுவில், எண் கணிதம் என்று சிலர் பிறந்த தேதிக்கும், பெயர் எழுத்துகளுக்கும் பலன் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே அது என்ன? இந்த எண்கணிதம் எந்த அளவுக்கு வேலை செய்யும்? இராசி பலனைத் தாண்டி எண்கணிதம் ஆற்றல் கொண்டதா? 

6.எண்கணிதத்தைப் பின்பற்றி பெயரில் உள்ள சில எழுத்துகளை மாற்றி அமைத்துக்கொண்டால், இராசிக் கட்டம் போட்டுச் சொல்லப்படும் சோதிடத்தில் உள்ள பலன்களை அதிகப்படுத்திக் கொள்ளவோ அல்லது அதிலுள்ள ஆபத்துகளைக் குறைத்துக்கொள்ளவோ இயலுமா? 

7."இருள் என்பது விதி; விளகேற்றி இருளை விரட்டுவது மதி! மழை பெய்வது விதி; குடை பிடித்து மழையில் நனையாமல் பாதுக்காப்பது மதி!" என்றெல்லாம் எண்கணிதத்திற்கு வியாக்கியானம் கூறும் எண்கணித நிபுணர்கள் இயற்கை விதியை எண்கணிதத்தால் வெல்ல முடியும் என்கிறார்களா? எப்படி? நிரந்தரமாகவா? தற்காலிகமமகவா? அல்லது ஒரு மனவியல் உத்தி மட்டும்தானா?

8.இதற்கிடையில், அவ்வப்போது பட்டணத்திற்கும் திருவிழாவிற்கும் செல்லும்போது அங்கு யாரேனும் கிளி சோதிடரையோ, குறிசொல்பவரையோ கண்டுவிட்டால், உடனே ஓடிப்போய் பலன் கேட்கும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. ஒரு பருக்கை அரிசிக்காகக் கிளி எடுத்துப் போடும் அட்டையில் எழுதப்பட்டிருக்கும் பலன் பலிக்குமா? அல்லது சோலிகளை உருட்டிப் போட்டு குறி சொல்கிறார்களே அது பலிக்குமா? இவை இரண்டும் இராசி பலன், சென்ம பலன், எண் கணிதம் ஆகியவற்றைவிட சிறந்ததா?

 
9.அடுத்து எதைச் சொல்லப் போகிறேன் என்று உங்கள் கற்பனையும் வேகமாக ஒடுவது தெரிகிறது. கைரேகை சோதிடம் தான் அடுத்தது. பிறக்கும் போதே ஒவ்வொருவருடைய வாழ்க்கையை உள்ளங்கையிலேயே கொடுத்து அனுப்புகிறார் இறைவன் என்று சொல்லி கைரேகை பார்த்துக் கணிப்பதே சிறந்த சோதிடம் என்கிறார்கள் சிலர். ஒருவருக்கு இருப்பது போல இன்னொருவருக்குக் கைரேகை இருப்பதில்லை. ஆகவே, கைரேகையே ஒவ்வொருவர் வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது என்கிறார்கள். அப்படியா? கைரேகை வெகு சிறப்பாக ஒருவருக்கு இருக்கும் சூழலில் மற்ற எந்தச் சோதிடப் பலனும் பலிக்குமா? பலிக்காதா?

10.இப்போது நாடி சோதிடம் நாட்டில் புகழ்பெற்று வருகிறது. பெருவிரல் கைரேகை கொடுங்கள் நாடி சோதிடம் சொல்லுகிறோம் என்று ஒரு கூட்டம் நாட்டில் நடமாடிக் கொண்டிருக்கிறது. வேறு எந்த சோதிடத்தையும் விட இந்த நாடிச் சோதிடம்தாம் ஆதியானதாம்; உண்மையானதாம். ஒவ்வொருவருக்கும் ஓர் ஓலைச்சுவடி கண்டிப்பாக இருக்குமாம். இது எந்த அளவுக்கு உண்மை? நாடி சோதிடம் எல்லாவற்றையும் மிஞ்சியதா? அதில் உள்ள பலன்தான் உண்மை என்றால், மேலே சொன்ன பல சோதிடப் பலன்களின் நிலை என்ன?
11.இத்தனையும் போகட்டும். யார் யாரிடமோ போய் பரிகாரம் செய்கிறார்கள், முடிகயிறு கட்டுகிறார்கள், மந்திரித்துக் கொள்கிறார்கள், அருள் வாக்கு கேட்கிறார்கள், நவரத்தினக்கல் அணிகிறார்கள், வீட்டு யாகம் செய்கிறார்கள், மனையடி (வாஸ்த்து) சாத்திரம் பார்த்து வீட்டை மாற்றி அமைக்கிறார்கள், கோமியம் ஊற்றி வீட்டைக் கழுவுகிறார்கள், பசுமாட்டை வீட்டுக்குள் விடுகிறார்கள், சத்திமிகுந்த ஊதுவத்தி கொளுத்துகிறார்கள், மகா யோகம் நிறைந்த எண்ணெயில் விளக்கு ஏற்றுகிறார்கள், மூலிகை கலந்து செய்த திரியைப் பயன்படுத்துகிறார்கள், இன்னும் ஆயிரமாயிரம் பூசைகள், அருச்சனைகள், வேண்டுதல்கள், காணிக்கைகள், தொழுகைகள், தியானங்கள், விரதங்கள், பலிபூசைகள் என்று, சொல்லி மாளாத அளவுக்கு என்னென்னவோ; ஏதேதோ; எப்படி எப்படியோ செய்கிறார்கள் - நம்புகிறார்கள்.

இத்தனை இருக்க..
இவற்றில் எதுதான் உண்மை?
இவற்றில் எதுதான் பலிக்கும்?
இவற்றில் எதைத்தான் நம்புவது?

தெரியாதவன் - அறியாதவன் - புரியாதவன் கேட்கிறேன்... என்னைப் போல் பலரும் கேட்கலாம்.. அல்லது வாய்திறந்து கேட்பதற்கே தயங்கிக் கொண்டிருக்கலாம்..! 

தெரிந்தவர்கள் - அறிந்தவர்கள் - புரிந்தவர்கள் அருள்கூர்ந்து தெளிவு சொல்வார்களா?

10 comments:

PSS SJK(T) LDG CHERSONESE said...

வணக்கம் ஐயா, இன்னும் ஒரு சோதிடம் இருக்கிறது. அதுதான் 'உச்சரிப்பு' சோதிடம். நம் பெயரை ஆங்கில மொழியில் அப்படியே ஒலித்து அதில் ஏதேனும் சொல் ஆங்கில மொழி சொல்லோடு ஒலி ஒற்றுமை இருந்தால், அதை வைத்துப் பலன் கூறுவார்கள். காட்டாக, பிரபாகரன் எனும் பெயரில் 'ரன்' run இருக்கிறதான். அதனால்தான் அவர் அங்குமிங்கும் அலைந்து கொண்டு இருக்கிறாறாம். எங்கே போய் முட்டிக் கொள்வதென்று எனக்கே தெரியவில்லை ஐயா. இந்தச்சோதிடத்தையும் நம் நாட்டு நாளிதழில்தான் படித்தேன். என்ன குமுகாய கடப்பாடு நம் நாட்டுச் செய்தியாளர்களுக்குப் பாருங்களேன்?

Unknown said...

இத்தனை இருக்க..
இவற்றில் எதுதான் உண்மை?
இவற்றில் எதுதான் பலிக்கும்?
இவற்றில் எதைத்தான் நம்புவது?


சுப நற்குணன் அவர்களே உங்களுடைய முட்டாள்த்தனமான கருத்துக்களை பொறுமையாக படித்ததற்க்கு நானே என்னை செருப்பால் அடித்துக்கொள்ள வேண்டும்.

உங்களுடைய வலைப்பதிவு தரம் குறைந்து கொண்டே வருகிறது.

சுழியம் தமிழில், சுன்னி ஹிந்தியில் என்னே ஒற்றுமை
பூச்சியத்தில் என்னெ குறை.

பாலாஜி

சுப.நற்குணன்,மலேசியா. said...

@திருத்தமிழ் அன்பர் பாலாஜி,

//சுப நற்குணன் அவர்களே உங்களுடைய முட்டாள்த்தனமான கருத்துக்களை பொறுமையாக படித்ததற்க்கு நானே என்னை செருப்பால் அடித்துக்கொள்ள வேண்டும். //

தெரியாதவன் - அறியாதவன் - புரியாதவன் கேட்கிறேன்... என்று நான் என்னைப் பற்றி மறைமுகமாகச் சொன்னதை ஒரே சொல்லில் சொல்லியிருக்கிறீர்கள்.. அவ்வளவே!

அதற்காக நீங்கள் வீனாகச் செருப்பால் அடித்துக்கொள்ள வேண்டாமே அன்பரே!

//உங்களுடைய வலைப்பதிவு தரம் குறைந்து கொண்டே வருகிறது. //

நான் அப்படி நினைக்கவில்லை. ஒரு வேளை உங்களுடைய அறிவின் தரம் பெருமளவு உயர்ந்திருக்கலாம். அதனால் என் பதிவுகளின் தரம் குறைவாகத் தெரிகிறது போலும்.

உங்கள் தரத்திற்கு உயர முடியுமா எனத் தெரியவில்லை.

//சுழியம் தமிழில், சுன்னி ஹிந்தியில் என்னே ஒற்றுமை//

இந்தி சொல்லை அறியச் செய்தமைக்கு நன்றி. அந்தச் சொல்லுக்கும் சுல்> சுன்> சுன்+இ என்று தமிழில்தான் வேரும் மூலமும் உள்ளது அன்பரே..!

இந்தத் தகவல் உங்களுக்குத் தெரியுமா?

//பூச்சியத்தில் என்னெ குறை.//

அது தமிழல்ல என்பதைத் தவிர வேறு குறைசொல்ல மனமில்லை எனக்கு.

அன்னியச் சொற்களைப் பற்றி குறை சொல்வது பண்பாடல்ல நண்பரே..!

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. மீண்டும் வருவீர்கள் எனக் கண்டிப்பாகத் தெரியும்.. காத்திருப்பேன்!

சுப.நற்குணன்,மலேசியா. said...

@திருத்தமிழ் அன்பர் மு.மதிவாணன்,

//இன்னும் ஒரு சோதிடம் இருக்கிறது. அதுதான் 'உச்சரிப்பு' சோதிடம். //

கேள்விப்பட்டுள்ளேன். Mahathma Gandhiஇல் கன்(gun) டை(dhi) என வருகிறதான். அதனால் துப்பாக்கியால் சூடுபட்டு இறந்தாராம்.

Eswar என்பவர் வாழ்வு அமைதியாக இருக்காதாம். ஏன் தெரியுமா? இறுதியில் war (போர்) என வருகிறதாம்.

Manogaran வாழ்வில் மகிழ்ச்சியே இருக்காதாம், இடையில் no (இல்லை) வருவதால்...!

என்ன சொன்னாலும்.. எதைச் சொன்னாலும்..கண்ணை மூடிக்கொண்டு நம்பி ஓடும் தமிழர் சிலரைக் கண்டால்.. சிரிப்புதான் வருகிறது.

இறைவன் அளித்த மூளையை.. அறிவை.. சிந்தனையை.. முயற்சியை.. உழைப்பை எல்லாம் சோதிடத்திற்கு அடகுவைத்து பிழைக்கும் பிழைப்பு பிழைப்பவர்கள் பிழைத்துவிட்டுப் போகட்டும்..!

அடி மடையர்களாக வாழ் விரும்புவோர் வாழ்வில் நீங்களும் நானும் ஏன் அறிவொளி பாய்ச்சி மண்ணைப் போட வேண்டும்?

Vignes Krishnan விக்கினேசு கிருட்டிணன் said...

நல்ல பதிவு அன்பரே,
சிந்திக்க வேண்டிய செய்திகள் பல தங்கள் பதிவில்.
இறைவன் நமக்கு மூளை கொடுத்தது சிந்திக்கவே என்பதில் மிகுந்த நம்பிக்கை எனக்கு.
அதற்கு நல்ல வேலை கொடுத்து இருக்கிறீர்கள்.
அறிவுடையாரை ஆண்டவனும் விரும்புவார்!

மகரன் said...

"எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாது" என்று ஏதோ ஒரு படத்தில் விவேக் சொல்லுவாரே..அதுதான் ஞாபகம் வருது...!

Thuara,com said...

பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரசோத்பத்தி, ஆங்கீரச, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈசுவர, வெகுதானிய, பிரமாதி, விக்ரம, விஷு, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய, சர்வஜித்த, சர்வதாரி, விரோதி, விகிர்தி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துன்முகி, ஏவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விஸ்வாவசு, பராபவ, பிலவங்க, கீலக, சவுமிய, சாதாரண, விரோதி கிருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, இராக்ஷஸ, நள, பீங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, ரவுத்ரி, துன்மதி, துந்துபி, உருத்ரோத்காரி, இரத்தாக்ஷி, குரோதன், அக்ஷய - ஒன்று கூடத் தமிழ்ச் சொல் இல்லை! எப்படி இவை தமிழ்ப் புத்தாண்டு?

Raja said...

Athnaalthan chithrai puththandai hindu puththaandu endru etruk kolkirom. Ponggal thamil puththaandu endru kondaadukiroom. Thamilargal muslimagavo, kristuvargalakavo irukkalaam. aanal hinduvaaga irukkak kuudaatha? matra mathanggalai pinpaTrum thamazarkal thelivaaga irukkirarkal polum.

Goopi N. Chellapan said...

vanakkam aiya, kelvi keddhalthan nyaanam pirakkum enbathai Nyanigal solli keddhu irukkiren. Athurkku eerppe ippothu neengal keddhu irkkum kelvigalukku nitchayam Neenggal Nyanam peruveergal enbathil tuli alavum aiyamillai.

Aiya, neengal sonna atthunaiyum Hindakkalthan pinpadrugirargal, yenthe oru Tamil Kristuvano allathu muslimo pinpandruvathu kidaiyathu. Aageve neengal Hindukkalai kelvi ketgirirgala allathu Tamilargalai kelvi ketgurirgala?

telivu padutthunggal....

unggalin Gavanatthirkku, Aiya, ithunai Jhotidangalum enthe alavukku unmai enbathai neenggaley padithu aarainthalthan unmai tenpadum.. illaiyel yaar sonnalum athai erkke nam manam idam kudukkathu...

Anonymous said...

அன்புள்ளவனின் தமிழ் வணக்கம்.
உங்கள் படைப்பில் பல விடையங்கள் அறிந்து நன்மை அடைகி்ன்றேன்
அதற்கு மிகுந்த நன்றிகள்

நான் உங்களிடம்..


தமிழ் வருடங்கள் மாதங்கள் திகதிகள் என வகையுள்ளன.

அவ்வகைப்படுத்தியை பலர் ஆசைக்கும் ஆர்வத்திற்கும் தெளிவு படுத்த முடியுமா..?

காரணம்-
சூன்- என்று உங்கள் பதிவில் உள்ளன
அவை தமிழ்ப்பெயருள்ள மாதமா..?
இப்படி பலர் எழுதுகின்றனர்.
அதனால் தான் தமிழ் அறிந்த உங்களிடம் வினவுகின்றேன்...
தயவுடன் தாருங்கள்

வாழ்க தமிழ்
தமிழருடைய தாகம் தமிழீழத்தாயகம்.

Blog Widget by LinkWithin