Wednesday, April 28, 2010

முரசு அஞ்சல் 10ஆவது பதிப்பு வந்துவிட்டது


1985ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருக்கும் மலேசியத் தயாரிப்பான முரசு அஞ்சல் எனும் தமிழ்ச் செயலி புத்தம் புதிய செயல்பாடுகளுடன் பத்தாவது பதிப்பாக மலேசியாவில் வெளியீடு கண்டுள்ளது.

கணினியில் தமிழ் தோன்றுவதே ஒரு சாதனையாக இருந்த காலம் கடந்து இப்போது மின்-அஞ்சல், இணையம், வலைப்பதிவு (பிளாக்), டிவிட்டர் போன்ற செயல்பாடுகளுக்குத் தமிழ்ச் செயலிகள் எந்தவித தடையும் இன்றி உதவ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நம்மிடையே இருக்கிறது. இந்த எதிர்பார்ப்பை நிறைவு செய்யவதோடு எதிர்பாராத செயல்பாடுகளையும் சேர்த்து வருகிறது முரசு அஞ்சல் 10.

முழுக்க முழுக்க யூனிகோட் தரத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இந்தப் பதிப்பு நவீன இயங்கு தளங்களான விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ்-7ழோடு மட்டும் இல்லாமல் மெக்கிண்டாஷ் கணினிகளிலும் இயங்கக் கூடியதாக மேம்படுத்தப்பட்டுள்ளது. பழைய தளமான விண்டோஸ் எக்ஸ்பி-யிலும் இயங்கும் இந்தச் செயலி, ஆவண மாற்றம், பி.டி.எஃப் (PDF) உருவாக்கம் முதலிய வசதிகளோடு நின்றுவிடாமல் முழுமையான லிப்கோ தமிழ்ப் பேரகராதியையும் சேர்த்துள்ளது.

"முரசு அஞ்சல் நிறுவனம் பல சாதனைப் படைப்புகளைத் தமிழ் உலகத்துக்குத் தந்துள்ளதை நாம் அறிவோம். தமிழை பிழையின்றி கணினியில் எழுதவும், நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரவும் அவர்கள் எடுத்துக் கொண்டுள்ள முயற்சி பாராட்டுக்குறியது. கணினியில் எழுதும்போதே சொற்களின் பொருளைத் தெரிந்துகொளும் வசதியை தமிழுக்கு முதன்முதலில் கொடுத்த மென்பொருள் முரசு அஞ்சல் தான். அவர்களோடு பணியாற்றுவதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி!” என்று தமிழ் நாட்டில் உள்ள எண்பத்திரண்டு ஆண்டுகளான லிப்கோ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. தி. ந. ச. வீரராகவன் கூறியுள்ளார்.

மலேசியப் பதிப்புத் துறையின் அடையாளத்தையே மாற்றியது முரசு அஞ்சல் தான் என்று கூறினால் அது மிகையாகாது. 25 ஆண்டுகளாக பல கணினிகளிலும் கருவிகளிலும் தமிழைத் தடையின்றி தவழ வைத்த பெருமை முரசு அஞ்சலுக்கு உண்டு.

அதை நினைவு கூர்ந்த தொழில்நுட்ப வல்லுநரான முத்து நெடுமாறன் “கணினியோடு தமிழின் புழக்கம் நின்றுவிட்டால் எனது நோக்கம் நிறைவேறிவிட்டதாகக் கொள்ள முடியாது. கணினிகள் இப்போது கைகளுக்குள் அடங்கி விட்டன, கைப்பேசிகளோ கணினியோடு போட்டிப் போடுகின்றன. இவை அனைத்தும் தமிழ் பேசவேண்டும் - அதுவும் நல்ல தமிழ் பேச வேண்டும். அதுவே எமது கனவு. அந்தக் கனவு நிறைவேறி வருகிறது. அப்படி வரும் வழியில் முரசு அஞ்சல் 10 ஒரு மைல் கல்" என்கிறார்.

முரசு அஞ்சல் 10, 2010 மார்ச்சு 14ஆம் நாள் முதல் மலேசிய சந்தைக்கு வந்தது. வசதிகள் கூடினாலும் விலையில் குறைந்துள்ளது இந்தப் பத்தாம் பதிப்பு. தனி நபர்களின் சொந்தப் பயனுக்கு இதன் விலை 100 ரிங்கிட் மட்டுமே.

இதனைப் பெற்றுக் கொள்வதற்கு இணைய வசதி தேவைப் படும். மேலும் விவரங்களை http://anjal.net/ இணைய முகவரியில் காணலாம்.
தொடர்புக்கு:- 03-23811141.


1 comment:

அறிவன் said...

யுனிகோட்டை மட்டும் கொண்டுள்ள முரசில் Indesign, Coreldraw போன்ற மென்பொருட்களில் பயன்படுத்த முடியாது என்றால் இது முழுமையான செயலியாக தோன்றவில்லை. தட்டச்சு செயலிகளை பல நிறுவனங்கள் இப்பொழுது இலவசமாகவே வழங்குகின்றன. அகராதிகளையும் இலவசமாக பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். இப்பொழுது தமிழுக்கு மிகத் தேவையாக தோன்றுவது OCR மற்றும் Translation ஆகும். இதில் முரசு கவனம் செலுத்தி இருக்கலாம். Google கூட தமிழில் மொழிமாற்றும் வசதியை தமிழுக்கு செய்யவில்லை. மலாய் மொழிக்கு கொடுத்த முக்கியவத்துவத்தைக்கூட செம்மொழியான தமிழுக்கு இது கொடுக்கவில்லை என்பது மிகவும் வருத்தத்திற்கு உரியது.

Blog Widget by LinkWithin