Thursday, September 03, 2009

மீட்கப்பட்டது.. இந்திய ஆய்வியல் துறை மட்டுமல்ல; நமது இனத்தின் மானமும்தான்!

மலாயாப் பல்கலைக்கழகத்தில் கடந்த 53 ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் இந்திய ஆய்வியல் துறை,

- தனித்துறை என்கின்ற அதன் தரம் குறைக்கப்படுகிறது
- அதன் தலைமைப் பொறுப்பு அன்னியர்களிடம் கைமாறுகிறது
- தெற்காசிய ஆய்வியல் துறை என பெயர்மாற்றம் செய்யப்படுகிறது
- அங்கு ‘தமிழ்’ என்று இருந்த நிலை மாறி ‘தமிழும்’ என்ற நிலை உருவாகிறது
- நாட்டில் தமிழ்மொழிக் கல்விக்காக இருக்கும் உச்சமான இடம் பறிபோகிறது


முதலான கசப்பான செய்திகள் கொஞ்ச காலமாக மலேசியத் தமிழர்கள் காதுகளில் இடியாக இறங்கிக்கொண்டிருந்தன - அதனால் தமிழ் உணர்வுள்ள இதயங்கள் வெந்துகொண்டிருந்தன.
இதற்கொரு நல்ல தீர்வு பிறக்காதா என தமிழ் உள்ளங்கள் ஏங்கிக்கொண்டிருந்தன; தமிழ்த்துறை பறிபோனதே என அழுது கொண்டிருந்தன; செய்வதறியாமல் புலம்பிக்கொண்டிருந்தன.

இப்படியொரு இக்கட்டான நிலையிலிருந்து இந்திய ஆய்வியல் துறை காப்பாற்றப்பட்டிருக்கும் - மீட்கப்பட்டிருக்கும் மகிழ்ச்சியான அறிவிப்பை நமது மாண்புமிகு அமைச்சர் டத்தோ டாக்டர் சுப்பிரமணியம் வெளியிட்டுள்ளார்.


இந்த அறிவிப்பின்படி, இந்திய ஆய்வியல் துறை என்னும் பெயர் நிலைநிறுத்தப்படும் எனவும், அதற்குத் தலைவராக ஓர் இந்தியரே நியமிக்கப்படுவார் என்றும் அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

*(தலைவர் என்பவர் தமிழ்மொழியில் நிரம்ப தேர்ச்சியும் தெளிவும் நிருவாகத் திறமும் உள்ளவராக இருக்க வேண்டும் என்பது தமிழ் மக்களின் வேண்டுகையும் உள்ளக்கிடக்கையும் ஆகும்)

இதற்கு முன்னதாக, நமது 127 பொது இயக்கங்கள் ஒன்றுகூடி வழக்குரைஞர் திரு.கா.ஆறுமுகம் தலைமையில் மலாயாப் பல்கலைக்கழக நிருவாகத்திடம் கோரிக்கை மனுவைக் கையளித்தனர். ம.இ.கா. தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு அவர்கள் இந்திய ஆய்வியல் துறை நிலைநிறுத்தப்படும் என உறுதியளித்தார். மேலும், டத்தோ சி.சுப்பிரமணியம் அவர்களும் இந்திய ஆய்வியல் துறை நிலைநிறுத்தபட வேண்டும்; அதன் தரம் குறைக்கப்படக் கூடாது என கோரிக்கை விடுத்திருந்தார். இதுபோலவே, இன்னும் பல தலைவர்களும், தமிழ் ஆர்வலர்களும், பற்றாளர்களும் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்தனர்.*(இந்த விடயம் பற்றி அடியேனும் திருத்தமிழ் வலைப்பதிவில் இடுகையிட்டிருந்தேன். அதனைப் படிக்க இங்கு சொடுக்கவும்)

இத்தனைக்கும் பிறகுதான் நல்ல பலன் நமக்குக் கிடைத்துள்ளது; சமுதாயத்தின் ஒன்றுபட்ட குரலுக்கு மதிப்பு கிடைத்துள்ளது; நம்முடைய ஒற்றுமைக்கு வெற்றி கிடைத்துள்ளது. 1956இல் அமரர் தமிழவேள் கோ.சாரங்கபாணி தலைமையில் தமிழ்த்துறை அமைந்தபோது தமிழ் சமூகம் அடைந்தது போலவே மகிழ்ச்சியும் களிப்பும் இப்போதும் தமிழர் உள்ளங்களில் கரைபுரண்டு ஓடுகிறது.

கடந்த ஒரிரு மாத அளவீட்டில், இப்படியொரு பரிதாப நிலை இந்திய ஆய்வியல் துறைக்கு ஏற்பட்டதற்குக் காரணமாக இருந்த அதன் அதிகாரிகள் – உட்பகை எனும் புகையினுள் பூசலாட்டம் ஆடியவர்கள் மீது ஒட்டுமொத்த தமிழர்கள் சீற்றம் கொண்டிருந்தனர் – இன்னமும் அந்தச் சீற்றம் ஓயவில்லை! ஓய்ந்தும் போகாது!! அதுமட்டுமா? அதற்கான, கழுவாயை அவர்கள் கண்டிப்பாகச் செய்தாலன்றி அவர்களின் மீது விழுந்த கறை காலத்திற்கும் போகாது!!

நமது மொழி – இன – சமய – பண்பாட்டு – வரலாற்று விழுமியங்களைக் கட்டிக்காப்பதற்கு இம்மாதிரியான சீற்றங்களும் அறக்கோபங்களும் கண்டிப்பாகத் தேவை. அத்தோடு சேர்ந்து அறிவார்ந்த நடவடிக்கையும் தேவை. வெறும் ஆவேசமும் உணர்ச்சிப் பொங்கும் ஆர்ப்பாட்டமும் எப்போதும் முழுப் பயனைத் தந்துவிடாது. மாறாக, ஒன்றுபட்ட கோரிக்கையும் அறவழிப்பட்ட போராட்டமும் நிச்சியமாகப் நல்லப் பலனளிக்கும் என்பதற்கு இப்போது நடந்திருக்கும் நிகழ்வு நல்ல சான்று.

இருப்பினும் ஒன்றை மறக்கலாகாது. எப்போது, நல்லதை நோக்கிய நியாயமான சீற்றம் சமுதாயத்தில் நின்று போகிறதோ, அப்போது நமது சலுகைகள் மட்டுமல்ல சட்டபடியான உரிமைகள்கூட காணாமல் போகலாம்.

அவ்வகையில், தமிழ்க் குமுகாயத்தின் சீற்றமும் பொது இயக்கங்களின் ஊக்கமும் பொறுப்புள்ள தலைவர்களின் தலையீடும்தாம் நம்முடைய பாரம்பரிய உரிமைப் பொருளான தமிழ்த் துறையைக் காப்பாற்றிக் கொடுத்திருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.

1956இல் தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்கள் தமிழ்த் துறைக்காக முன்னெடுத்து நடத்திய ‘தமிழ் எங்கள் உயிர்’ எனும் எழுச்சிமிகு போராட்டத்தின் எச்சங்கள் இன்றையத் தமிழர்கள் – தலைவர்கள் சிலரின் உள்ளங்களில் இன்னமும் எஞ்சியிருக்கிறது என்பதை இந்த வெற்றியின் பின்னணியில் கண்கூடாகக் காணமுடிகிறது.

மலேசியத் தமிழுக்கும் தமிழருக்கும் உச்சமான அடையாளமாக விளங்கும் இந்திய ஆய்வியல் துறையை மீட்டெடுக்கும் ‘தார்மிக’ பணியினைத் தாளராமல் முன்னெடுத்த தமிழர் (இந்தியர்) சார்ந்த பொது இயக்கங்கள், மலாயாப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள், தமிழ் ஊடகவியலாளர்கள், தமிழ்ப் பற்றாளர்கள், கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள் ஆகிய அனைவருக்கும் தமிழ்ச் சமுதாயம் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறது.

மலாயாப் பல்கலைக்கழக வரலாற்றில் தமிழ்மொழியின் நீடுநிலவலுக்கு உரம் சேர்த்திருக்கும் நல்லோர்கள் அனைவருக்கும் வரலாற்றில் நிச்சியமாக இடமிருக்கும்; மலேசியத் தமிழ் வரலாற்றில் அவர்களின் இந்த நற்பணி அழியாப் பதிவாக நிலைத்திருக்கும்.

நம்புங்கள் அன்பர்களே.. இன்று, மீட்கப்பட்டது...

நமது முன்னோர்களின் வியர்வையிலும் செந்நீரிலும் உருவாக்கப்பட்ட.. உண்டியல் காசிலும் உழைத்தப் பணத்திலும் எழுப்பப்பட்ட.. ஒன்றுபட்ட உணர்வின் எழுச்சியிலும் மொழி – இன மான உணர்ச்சியிலும் நிறுவப்பட்ட.. நமது இதயங்களோடும் உணர்வுகளோடும் கலந்துவிட்ட.. ‘தமிழ் எங்கள் உயிர்’ என்ற வீர முழக்கத்தில் கட்டியெழுப்பட்ட...


இந்திய ஆய்வியல் துறை.. மட்டுமல்ல..,
ஒட்டுமொத்த மலேசியத் தமிழர்களின் மானமும்தான்!

6 comments:

அ. நம்பி said...

இப்பிரச்சினை அமைச்சரின் அறிவிப்போடு நிற்கிறது; பல்கலைக்கழகத்திலிருந்து அறிவிப்பு வந்ததாகத் தெரியவில்லை.

Anonymous said...

வணக்கம் ஐயா.

மகிழ்ச்சியான செய்தியைப் பதிவுசெய்ய்திருக்கிறீர்கள். கட்டுரையின் தலைப்பே மிக சிறப்பு.

மீட்கப் பட்ட நமது இனத்தின் மானம் மீண்டும் காற்றில் பறக்கவிடாமல் பார்த்துக் கொள்வார்களா 'அவர்கள்'???

நன்றி.

மு.மதிவாணன்
கூலிம்.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் அ.நம்பி ஐயா,

பல்கலைக்கழக நிருவாகம் அல்லது துணை வேந்தரிடமிருந்து அதிகாரப்படியான அறிவிப்பு விரைவில் வரும் என தங்களைப் போலவே நானும் எதிர்பார்க்கிறேன்.

இதில் எந்தவித அரசியலோ நுண்ணரசியலோ இருக்காது.. இருக்கக்கூடாது என நம்புவோம்!

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் மு.மதிவாணன்,

//மீட்கப் பட்ட நமது இனத்தின் மானம் மீண்டும் காற்றில் பறக்கவிடாமல் பார்த்துக் கொள்வார்களா 'அவர்கள்'???//

'அவர்கள்' இனி பொறுப்பாக இருப்பதைச் சமுதாயம் பொறுப்போடு இருந்து கவனிக்கவும்.. தேவை ஏற்பட்டால் கண்டிக்கவும் வேண்டும்.

உடையவன் பாரா பயிர் பாழ் என்பதுபோல.. இனி 'உடையவனாக' இந்தச் சமுதாயமே மாறிட வேண்டும்.

Tamilvanan said...

//(தலைவர் என்பவர் தமிழ்மொழியில் நிரம்ப தேர்ச்சியும் தெளிவும் நிருவாகத் திறமும் உள்ளவராக இருக்க வேண்டும் என்பது தமிழ் மக்களின் வேண்டுகையும் உள்ளக்கிடக்கையும் ஆகும்)//

தலைவர் என்பவர் மலேசிய தமி்ழராக இருக்க வேண்டும் என்ற விதி உருவாக்கப் படவேண்டும்.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் தமிழ்வாணன்,

//தலைவர் என்பவர் மலேசிய தமி்ழராக இருக்க வேண்டும் என்ற விதி உருவாக்கப் படவேண்டும்.//

உங்கள் கருத்தை 100% வழிமொழிகிறேன் நண்பரே..!

Blog Widget by LinkWithin