Tuesday, September 22, 2009

நாட்டுப்புறப் பாடல்(3) : கும்மிப்பாட்டு


நாட்டுப்புறப் பாட்டுகளில் கும்மிப் பாட்டு எல்லாராலும் அறியப்பட்ட ஒன்றுதான். தொடக்கக் காலத்தில் நமது மலாயாவில் குடியேறிய நமது முன்னோர்கள், தோட்டப்புறங்களிலும் கோயில் திருவிழாக்களிலும் கும்மிப்பாட்டு பாடியிருக்கின்றனர். ஆனால், இன்றோ அதனைப் போலச்செய்து காட்டுவதற்குக்கூட ஆளில்லாத நிலைமை நமக்கு ஏற்பட்டுவிட்டது.


ஆயினும், தமிழகச் சிற்றூர்களில் கும்மிப்பாட்டுக் கலை இன்னமும் வாழ்ந்து வருகிறது. சில தமிழ்த் திரைப்படங்களில் இதனை நாம் பார்க்கலாம். தைப்பொங்கல் முதலான விழாக்காலங்களில் மக்கள் தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சியாக இதனை நாம் காண்பதற்கு வாய்ப்புள்ளது. மற்றபடி, மலேசியாவில் இதனைப் படைப்பதற்கு ஒருசில நடனக் குழுக்கள் இருப்பதாக அறியப்படுகிறது.

தமிழர்களின் பழங்காலக் கலைகளில் ஒன்றான கும்மிப்பாட்டு பற்றிய செய்திகள் பதினென் சித்தர் பாடல்களில் காணப்படுகிறது. பின்னர் வந்த மாபாவலன் பாரதியார்,

“வட்டமிட்டுப் பெண்கள்
வளைகரங்கள் தாமொடு ஒலிக்கக் கொட்டி
இசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்
நெஞ்சத்தைப் பறிகொடுத்தேன்”
என்று தம்முடைய கும்மிப்பாட்டில் சொல்லுகிறார்.

மேலும், 'பெண்கள் விடுதலைக் கும்மியில்' இப்படி ஒரு கும்மிப்பாட்டையும் எழுதியுள்ளார்.

கும்மியடி! தமிழ்நாடு முழுதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோ மென்று கும்மியடி!

கும்மிப்பாட்டு பெண்களால் ஒரு குழுவாக வட்டத்தில் நின்று பாடப்பெறும். வட்டத்திற்கு நடுவில் பூக்கூடை, குத்துவிளக்கு என ஒரு பொருளை வைத்து அதைச் சுற்றிவந்து பாடுவர். கூடவே, குனிந்து நிமிர்தவாறும் கைகளைக் கொட்டிய(தட்டிய)வாறும் நளினமாக ஆடியும் வருவார்கள். கீழே உள்ள காணொளியில் இந்தக் காட்சியைக் காணலாம்.


கும்மிப்பாட்டு பெரும்பாலும் நிலாக்காலங்களிலும், திருவிழாக் காலங்களிலும் இன்னும் பிற ஊர் விழாக்கள், வீட்டு விழாக்களிலும் பாடப்படும். கும்மிப்பாட்டில் எள்ளலும் எகத்தாளமும் இழையோடி கேட்போரையும் இன்புறச் செய்யும். நாட்டுப்புற மக்களிடையே இயல்பாகிவிட்ட வழக்குச் சொற்களாலேயே இப்பாட்டுக் கட்டப்பட்டிருக்கும்.

கும்மியடி பெண்ணே! கும்மியடி!
கொங்க குலுங்கவே கும்மியடி
நம்மப் பொங்களும் சேர்ந்து – அவர
நாடிக் கும்மி யடியுங்கடி – அவரத்
தேடி கும்மி யடியுங்கடி!
நம்பிடக் காத்திட வந்தவண்டி – அவரை
நாடிக் கும்மி யடியுங்கடி - அவரத்
தேடி கும்மி யடியுங்கடி!

அந்தத்த ஊரின் மண்வாசனையைக் கும்மிப்பாட்டில் குழைத்துக் கொடுத்திருப்பது இதனுடைய சிறப்புகளில் ஒன்றாகும். இன்று நாம் அறியத்தக்க பல செய்திகளையும் வரலாற்றுத் தகவல்களையும் கூட சில கும்மிப்பாட்டுக்கள் தம்முள் ஒளித்து வைத்திருக்கின்றன. சான்றுக்கு ஒன்று பார்ப்போமா?

கொட்டடி கொட்டடி தாழம்பூ
குனிஞ்சு கொட்டடி தாழம்பூ
பந்தலிலே பாவக்கா
தொங்குது பார் ஏலக்கா
பையன் வருவான் பாத்துக்கோ
பணங் கொடுப்பான் வாங்கிக்கோ
சுருக்கு பையிலே போட்டுக்கோ
*வீராம் பட்டணம் போகலாம்
வெள்ள இட்டிலி வாங்கலாம்
சவுக்குத் தோப்பு போகலாம்
சமைத்து வச்சுத் தின்னலாம்
புளிய மரத்துப் போகலாம்
புளியங்கொட்டை பொறுக்கலாம்
பனை மரத்துக்குப் போகலாம்
பல்லாங்குழி ஆடலாம்

கிராமத்துச் சிறுபெண்கள் ஒன்றுகூடி தங்களுக்குப் பணம் கிடைத்தால் என்ன செய்யலாம் என்று பாடுவதாக இந்தக் கும்மி அமைந்துள்ளது. இதில் *‘வீராம் பட்டணம்’ என்ற ஓர் ஊரி பெயர் வருகிறது. இது வெளியன் என்பருடைய ஊராகும். இவ்வூர் விழாவுக்குச் சிறப்புப் பெற்றிருந்தது. அங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் செங்கேணியம்மன் திருவிழா நடக்கும். அதற்குப் பல ஊர்களிலிருந்து மக்கள் செல்வார்கள் என்ற செய்தியை இப்பாட்டு சொல்கிறது.

மேலும், அக்காலத்தில் இட்டிலி சுட்டு விற்கும் பழக்கம் கிராமங்களில் இருந்ததில்லை. அது செல்வர்களுக்கு மட்டுமே சொந்தமான உணவாக இருந்தது. ஆகவே, வீராம் பட்டணம் திருவிழா சென்றால் அங்கு வெண்ணிரத்தில் பூப்போன்ற இட்டிலி கிடைக்கும். அதை சுவைத்து உண்டு வரலாம் என்ற அக்கால நிலைமையை நமக்குக் காட்டுகிறது.

இப்படியாக, எழுதா இலக்கியமான நாட்டுப்புறக் கும்மிப்பாட்டு இன்று படித்தாலும் நமக்கு மனதில் மகிழ்வைக் கொடுத்து இதழோரம் சிறு புன்னகையை ஏற்படுத்திச் செல்கிறது.

2 comments:

நிலவன்@NILAVN said...

நாட்டுப்புறவியல் பற்றிய செய்தி இருந்தல் எனக்கு கொடுக்கவும்.

:: விமல் :: said...

வணக்கமுங்க.......... நாட்டர் இயல் பற்றி தேடலின் போது நிங்க தட்டு பட்டிங்க சூப்பரா இருக்கு உங்கட வலைப்பபூ. வாழ்த்துக்கள்..

Blog Widget by LinkWithin