Sunday, May 23, 2010

முனைவர் மு.இளங்கோவனுடன் மறக்கவியலா மணித்துளிகள்



புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரி தமிழ்ப் பேராசிரியரும், தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழன்று இணையப் பயிலரங்குகளை நடத்தி இணையத் தமிழைச் செழிக்கச் செய்பவரும், முன்னணி வலைப்பதிவருமாகிய முனைவர் மு.இளங்கோவன் மலேசியா வந்திருக்கிறார். கடந்த 18.5.2010 தொடங்கி அவர் இங்கே இருக்கிறார். 25.5.2010இல் மீண்டும் தமிழகம் திரும்புகிறார்.

மலேசியாவில் பல ஊர்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டிருக்கிறார். நாட்டுப்புற இலக்கியம், அயலகத் தமிழ்ச் சான்றோர்கள், இணையப் பயிலரங்கு என்று பல தலைப்புகளில் பேசி மலேசியாவில் தமிழ்மணம் பரப்பிக்கொண்டிருக்கிறார்.

கடந்த 20.05.2010ஆம் நாள் நானும் தமிழ் ஆலயம் வலைப்பதிவர் அருமை நண்பர் கோவி.மதிவரனும் முனைவரோடு சுற்றுலாவில் இணைந்துகொண்டோம். அன்று இரவே பினாங்கு சென்றடைந்தோம்.

பயணப்படகின் வழியாகப் பினாங்குத் தீவை அடைந்தோம். 25 நிமிட பயணம் தமக்குப் புதிய பட்டறிவாக இருப்பதாக முனைவர் மகிழ்ச்சி அடைந்தார். மின் விளக்குகளில் ஒளிவெள்ளத்தில் பினாங்கின் அழகை முனைவர் மிகவும் மகிழ்ந்து பார்த்தார். பினாங்கிலிருந்து வெளிவரும் ‘உங்கள் குரல்’ இதழின் ஆசிரியர் கவிஞர் சீனி.நைனா முகம்மது அவர்களைச் சந்தித்து பேசினார். அவர்கள் இருவரும் மொழி, இலக்கியம், இலக்கணம், தொல்காப்பியம், எழுத்துச் சீர்திருத்தம், மலேசியாவில் தமிழின் நிலை என்பன போன்ற செய்திகளைப் பரிமாறிக்கொண்டனர்.

நாங்கள் கவிஞர் சீனி ஐயாவின் அலுவலகத்தை அடையும்போதுதான் தமிழகத்திலிருந்து ஐயா மறைமலை இலக்குவனார் அவருடன் தொலைபேசியிருக்கிறார். அப்போது, எழுத்துச் சீர்த்திருத்தத்தை அறிவிக்கப் போவதில்லை என வந்திருக்கும் அறிவிப்பு குறித்து பேசியதாகக் கவிஞர் ஐயா கூறினார். முனைவர் தம்மைச் சந்திக்க வருவதைக் கவிஞர், ஐயா மறைமலையாரிடம் தெரிவித்திருக்கிறார். முனைவருக்குத் தம்முடைய வாழ்த்தைத் தெரிவிக்குமாறு மறைமலை ஐயா தெரிவித்ததைக் கவிஞர் கூறினார்.

நள்ளிரவு 12.30க்கு கவிஞர் ஐயாவிடமிருந்து விடைபெற்று பாரிட் புந்தார் எனும் என் ஊரை வந்தடைதோம். முனைவரை விடுதியில் தங்கவைத்துவிட்டு வீடு திரும்பினேன்.

மறுநாள் காலையில் நான் பணியாற்றும் பள்ளியைப் பார்வையிட முனைவர் வந்திருந்தார். காலை 8.00 மணியளவில் ஆசிரியர்கள், மாணவர்கள் முன்னிலையில் “மாணவர்கள் கல்வியோடு தமிழ் மரபையும் கற்றுக்கொள்ள வேண்டும்” என வலியுறுத்திப் பேசினார். தமிழின் சிறப்பு, நாட்டுப்புறப் பாடல், சிறுவர் பாடல், தமிழர் விளையாட்டு, கணினிக் கல்வி, இணைய அறிவு ஆகியன அவருடைய உரையின் உள்ளடக்கங்களாக இருந்தன.

தலைமையாசிரியர், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர், ஆசிரியர்கள், மாணவர்களுடன் முனைவர் மு.இளங்கோவன்

ஆசிரியர்களோடும் மாணவர்களோடும் முனைவர் கலந்துரையாடி மகிழ்ந்தார். பள்ளியைச் சுற்றிப் பார்த்ததோடு வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் நடவடிகைகளைப் பார்வையிட்டார். பள்ளியில் ஒவ்வொரு அறைக்கும் தமிழ் அறிஞர்கள், தலைவர்கள் ஆகியோரின் பெயர்கள் சூட்டப்பட்டு பெயர்ப்பலகையும் வைக்கப்பட்டிருந்தது தன்னை வெகுவாகக் கவர்ந்ததாகக் குறிப்பிட்டார். பாவாணர் பேரணி மண்டபம், நீலாம்பிகை மழலையர் மன்றில், முத்தெழிலன் கணினியகம், பாவேந்தர் பாடநூல் அறை, கம்பர் கருவள நடுவம் என பெயரிடப்பட்டிருந்த எல்லா அறைகளையும் படமெடுத்துக் கொண்டார்.
இர.திருச்செல்வம் வீட்டு நூலக அறையில் முனைவர்

பிறகு, காலை மணி 10.00க்கு எனது பள்ளியிலிருந்து விடைபெற்று, மலேசியத் தமிழறிஞர் இர.திருச்செல்வம் இல்லம் சென்றார். அவருடன், செலாமா சர் சூலான் தமிழ்ப்பள்ளிக்குச் சென்றார். சோழன் என்பதைத்தான் மலாய்மொழியில் சூலான் என்கிறார்கள். அங்கும் ஆசிரியர்களையும் மாணவர்களையும் சந்தித்து அளவளாவினார்.


பிறகு, அவ்வூரில் பிறந்து வளர்ந்து தமிழ்நெறிக் கழகம் எனும் அமைப்பைக் கண்டு, மலேசியாவில் தமிழ்த்தொண்டு செய்து மறைந்த பாவலர் அ.பு.திருமாலனார் வாழ்ந்த இல்லத்திற்குச் சென்றார். அங்கு, பாவலர் ஐயாவின் துணைவியார், மகள் ஆகியோரைச் சந்தித்தார். பின்னர், பாவலர் ஐயா நிறுவிய இயக்கப் பணிமணையைப் பார்வையிட்டு, பாவலருடைய நினைவகம் சென்றார். அங்கு பாவலருக்கு அமைதி அஞ்சலி செலுத்தினார். பாவலர் அ.பு.திருமாலனார் பற்றி தம்முடைய ‘அயலகத் தமிழறிஞர்கள்’ நூலில் முனைவர் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அங்கிருந்து நேராகப் புறப்பட்டு மீண்டும் பாரிட் புந்தாருக்குத் திரும்பி மதிய உணவை முடித்துக்கொண்டு பிற்பகல் 2.00 மணிக்கு, பாரிட் புந்தார் தமிழியல் நடுவத்தில் ‘தமிழ் வளர்ச்சிப் பணியில் அயலகத் தமிழறிஞர்கள்’ எனும் தலைப்பில் பொழிவுரை ஆற்றினார். தமிழறிஞர் இர.திருச்செல்வம் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடந்தது. தமிழ் வாழ்வியல் இயக்கத் தலைவர் க.முருகையனும் உடனிருந்தார். நான் வரவேற்பும் முனைவரை அறிமுகப்படுத்தியும் பேசினேன்.



தமிழ் வளர்ச்சிப் பணிகளில் தமிழர்கள் மட்டுமின்றி அயலகத்தாரும் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர். அவர்களுள் கால்டுவெல், சான் இரால்சுடன், போப் அடிகளார், சுசுமு ஓனோ, சார்சு ஆர்ட்டு, கமில் சுவலபெல், பிரான்சுவா குரோ, அலெக்சந்தர் துபியான்சுகி போன்றவர்களும் அடங்குவர். வேற்று இனத்தாரும் நாட்டாரும் மதிக்கக்கூடிய, உலகத்தின் மிகச் சிறந்த மொழியாக விளங்கும் தமிழைத் தமிழர்கள் போற்றிப் பாதுகாக்க வேண்டும். தமிழைப் பற்றியும், உலகமெங்கிலும் நடைபெறும் தமிழ்ப் பணிகள் பற்றியும், தமிழுக்குத் தொண்டாற்றும் அறிஞர்கள் பற்றியும் இணையத்தில் செய்திகளைப் பதிவுசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

நேரப் பற்றாக்குறையின் காரணமாக ஒரு மணி இருபது மணித்துளிகள் மட்டுமே முனைவர் உரை நிகழ்த்தினார். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு நானும் கோவி.மதிவரனும் முனைவர் ஐயாவை மகிழுந்தில் அழைத்துக்கொண்டு கிள்ளானை நோக்கிப் பறந்தோம். அங்கு திரு.மாரியப்பன் ஏற்பாட்டில் “நாட்டுப்புற இலக்கியம்” எனும் தலைப்பில் முனைவர் பேசினார். அங்கும் நானேதான் முனைவரை அறிமுகப்படுத்திப் பேசினேன். வருகைப் பேராசிரியர் முரசு.நெடுமாறன், மலாயாப் பல்கலைகழக விரிவுரைஞர் மன்னர் மன்னன், செம்பருத்தி குழுவைச் சேர்ந்த கிள்ளான் அருண் போன்றோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.


குறுகிய கால அளவீட்டில் முனைவர் மு.இளங்கோவன் இங்கே வந்திருப்பதால், அதிகமான நிகழ்ச்சியில் அவரால் கலந்துகொள்ள இயலாமல் போய்விட்டது. மேலே சொன்ன நிகழ்ச்சிகளைத் தவிர்த்து, 21.5.2010 காரிக்கிழமையன்று பந்திங் நகரில் இணையப் பயிலரங்கை வழிநடத்தினார். அன்று மாலையில் கோலாலம்பூர் சோமா அரங்கில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். 23.5.2010இல் ஈப்போவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ‘ஐம்பெருங்காப்பிய மாநாட்டில்” கலந்துகொள்கிறார். 24.5.2010இல் மலாயாப் பல்கலைகழக மாணவர்களுக்காக இணையப் பயிலரங்கை வழிநடத்துகிறார்.

இப்படியாக, முனைவருடைய மலேசியப் பயணம் மிகவும் பயனுள்ளதாகவும் பொருளுள்ளதாகவும் அமைந்திருக்கிறது. நான் பார்த்த அளவில் முனைவர் அவர்கள் நாட்டுப்புற இலக்கியம் குறித்து மிகவும் ஆழமாகவும் அழகாகவும் பேசுகிறார். நாட்டுப்புற இலக்கியம் குறித்து அவர் சொல்லும் பல செய்திகள் வியக்கச் செய்தன. சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் போன்றவற்றை மேற்கோள்காட்டி நாட்டுப்புறப் பாடல்களைப் பாடிக்காட்டும் விதம் மனத்தைக் கவருகின்றது. திரைப்பாடல்களில் நாட்டுப்புறப் பாடல்களின் தாக்கம் பேரளவில் இருப்பதை முனைவர் சுவைபட எடுத்துச் சொன்னார்.

எழுத்தில் மட்டுமல்லாது பாடுவதிலும் இவர் வல்லவர் என்பது தெரிந்தது. என்னமாகப் பாடுகிறார் தெரியுமா? வாய்ப்புக் கிடைத்தால் இவர் தாராளமாகத் திரைப்படங்களில் பின்னணி பாடலாம். அந்த அளவுக்குத் தேர்ந்தவராக இருக்கிறார். நாட்டுபுறப் பாடல்களையும், சங்கப் பாடல்களையும், செய்யுள்களையும், திரைப்பாடல்களையும் மாறிமாறிப் பாடியும், ஒன்றை ஒன்றோடு ஒப்பிட்டுப் பாடியும் விளக்கிக் காட்டும் இவருடைய உரையை மணிக்கணக்கில் சலிக்காமல் கேட்கலாம்.

இணையத்தில் தமிழின் பயன்பாடு பற்றியும், வலைப்பதிவு எழுதுவது குறித்தும் மிகவும் எளிமையாக இவர் விளக்கமளிக்கிறார். தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட இணையப் பயிலரங்குகளை நடத்திய பட்டறிவு இவருக்கு பெரும் பலமாக அமைந்திருக்கிறது. அதனால்தானோ என்னவோ, தமிழகத்தில் ‘வெட்டுரு’ (கட் அவுட்) வைத்து வரவேற்கும் அளவுக்கு இவர் இணையப் பயிலரங்கு நடத்திப் புகழ்பெற்றிருக்கிறார் போலும்.

மொத்தத்தில், முனைவர் மு.இளங்கோவன் அவர்களின் மலேசிய வருகை மிகவும் மகிழ்ச்சியானதாகவும் பயன்மிக்கதாகவும் அமைந்திருக்கிறது. மிகவும் குறுகிய காலமே அவர் வந்திருக்கிறார் என்ற குறையைத் தவிர வேறொன்றுமில்லை. அவரிடமிருந்து மலேசியத் தமிழர்கள் பெற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கின்றன.

ஆகவே, அடுத்த முறை நீண்ட விடுமுறை எடுத்துக்கொண்டு அவர் மலேசியா வரவேண்டும்; நாடு முழுவதும் எல்லா ஊர்களுக்கும் சென்று பல மேடைகளில் சொற்பொழிவுகள் ஆற்றி தமிழ் விருந்து பரப்புவதோடு, இணையப் பயிலரங்குகளும் நடத்தி மலேசியாவில் தமிழ்மணம் செழிக்க துணைசெய்ய வேண்டும் என முனைவர் மு.இளங்கோவன் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

No comments:

Blog Widget by LinkWithin