Saturday, May 08, 2010

மலேசியாவில் தமிழ்மணம் இருக்கிறது! நிலைக்குமா? (2/2)


மலேசியாவில் எங்கெல்லாம் தமிழ்மணம் இருக்கிறது என்று கடந்த பதிவில் எழுதி இருந்தேன். இனி, எதிர்வரும் காலத்தில் மலேசியத்தில் தமிழ் நிலைக்குமா? என்பதைத் அலசவிருக்கிறேன். இது தற்காலத்தின் சூழலை அடிப்படையாகக் கொண்ட அலசல்தானே தவிர; முற்றும் முடிந்த முடிவன்று. இந்தச் சூழல் ஆக்கமாக மாறினாலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

நான் இதனை சொல்லுவதற்குக் அடிப்படை ஒன்று இருக்கிறது. கடந்த 52 ஆண்டுகளாக நாட்டின் அரசியல் உரிமை மீது எந்தவித விழிப்புணர்வும் ஈடுபாடும் கொண்டிராத மலேசியத் தமிழர்கள் 2007 நவம்பர் 25இல், ஒரே நாளில் பெரிய மனமாற்றத்திற்கு உள்ளாகினர். அந்த வரலாற்று நாளுக்குப் பின்னர் எமது நாட்டின் அரசியல் கட்டமைப்பே உருமாறி போயிருக்கிறது.

அப்படி ஏதாவதொரு எழுச்சியோ அல்லது மனமாற்றமோ ஏற்படுமேயானால் மலேசியத் தமிழரின் எதிர்காலத்திற்கு உறுதிப்பாடு(உத்தரவாதம்) கிடைக்கலாம்.

கடந்த பதிவில் அலசிய அதே பத்து துறைகளில், இற்றைச் சூழலில் தமிழுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைகளை ஆராய்ந்து பார்ப்போம்.

1.அரசியலமைப்புச் சட்டத்தில் தமிழ் தாழ்கிறது

மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நாட்டின் தேசிய மொழியான மலாய்மொழிக்கு அடுத்த நிலையில் தமிழ், சீனம் ஆகிய இரு மொழிகளுக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதனைப் பாதுகாத்துக் கொள்வதில் சீனர்களுக்கு இருக்கின்ற முனைப்பு தமிழர்களிடத்திலே குறைந்து காணப்படுகிறது. எங்கும் எதிலும் எப்போதும் மொழியையே முன்படுத்துகின்ற சீன சமூகத்தின் தெளிவு தமிழ்ச் சமூகத்திற்கு இருக்கவில்லை. அரசுத் துறைகளாகட்டும், தனியார் துறைகளாகட்டும் அங்கெல்லாம் சீனத்திற்குக் கொடுக்கப்படும் மதிப்பு தமிழுக்குக் கிடைப்பதில்லை.

எடுத்துக்காட்டாக, மலேசியப் பொருளகப் படிவங்கள், தானியங்கி இயந்திரங்கள், காசோலை சேவைகள் என அனைத்திலும் சீனம் இடம் பெற்றுள்ளது அல்லது சீனமொழிப் பயன்பாடு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பொருளகக் காசோலையைச் சீனத்தில் எழுதினால் எல்லாப் பொருளகமும் ஏற்றுக்கொள்ளும். ஆனால், தமிழுக்கு இப்படியொரு நிலைமை இல்லை.

கோலாலம்பூர் அனைத்துலக வானூர்தி நிலையத்தில் மலாய், ஆங்கிலம், சீனம் ஆகிய மொழிகள் இடம்பெற்றுள்ளதே அன்றி தமிழுக்கு அங்கு இடமில்லை. வானூர்தி நிலையத்தில் தமிழும் வேண்டும் என்று போராட வேண்டிய நிலையில்தான் தமிழர்கள் வைக்கப்பட்டுள்ளார்கள்.

2. அரசுத்துறையில் தமிழ் அல்லல்படுகிறது

அரசாங்கத் துறைகளில், அலுவலகங்களில், சேவை இடங்களில் தமிழ் இல்லையே என்று யாரும் வருத்தப்படுவதாகத் தெரியவில்லை. மலேசியத் தமிழருக்கு மலாயும் ஆங்கிலமும் ஏன் சீனமும் கூட சிலருக்கு நன்றாகப் புரிவதால் தமிழ் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்று எண்ணுவதே இல்லை.

அரசாங்க அறிக்கைகள், கையேடுகள் ஆகியவற்றில் தமிழ் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வுகள் நிறைய உள்ளன. அதற்கெல்லாம் தமிழர்கள் பெரிய வருத்தமோ சங்கடமோ பட்டது கிடையாது. அரசாங்கத் தொலைக்காட்சியில் எல்லா மொழிகளிலும் அறிவிப்பு வரும். ஆனால், தமிழில் வராமல் போவதைக் கண்டு இங்கு எவரும் அலட்டிக்கொள்வதில்லை.

மூன்றாவது பெரிய இனமான எமக்கு உரிமைப்பொருளாக இருக்கும் தாய்மொழியைத் தேர்வில் எடுத்துப் படிப்பதற்குப் பல்வேறு நெருக்கடிகள் ஏற்படுத்தப்படுகின்றன. எசுபிஎம் எனும் தேர்வில் கடந்த காலங்களில் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் எடுத்துப் படிப்பதில் எந்தத் தடையும் இருந்ததில்லை. ஆனால், இவ்வாண்டில் 10 பாடங்களே எடுத்துப் படிக்க முடியும் என்ற அறிவிப்பினால் தமிழ் இலக்கியப் பாடத்திற்கு ஆபத்து நேர்ந்தது. எனினும், தமிழ் அமைப்புகளின் போராட்டத்தினால் 12 பாடங்கள் எடுக்கலாம் என ஒரு தற்காலிகத் தீர்வு பிறந்துள்ளது.

3.கல்வித்துறையில் தமிழ் கரைகிறது.

நாட்டிலுள்ள 523 தமிழ்ப்பள்ளிகளில் 110,000 மாணவர்கள் படிக்கின்ற அதே வேலையில் தமிழ் அல்லாத பள்ளிகளில் (மலாய், சீனம்) 90,000 தமிழ் மாணவர்கள் பயில்கிறார்கள். 110,000 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு 8,000 ஆசிரியர்கள் இருக்கிறார்கள். மற்ற பள்ளிகளில் படிக்கும் 90,000 மாணவரும் தமிழ்ப்பள்ளியில் சேர்ந்தால் இன்னும் 7,000 தமிழர்களுக்கு ஆசிரியர் தொழில் கிடைக்குமே என்ற எளிமையான கணக்கைக்கூட எமது மக்கள் அறியாமல் இருக்கின்றனர்.

தொடக்கப்பள்ளித் தேர்வில் கிட்டதட்ட 16,000 மாணவர்கள் தேர்வில் தமிழை எடுக்கின்றனர். இந்த எண்ணிக்கை 3ஆம் படிவத்தில் 10,000ஆக குறைகிறது; 5ஆம் படிவத் தேர்வில் 6,000ஆக தேய்கிறது. எசுதிபிஎம் எனும் 6ஆம் படிவத் தேர்வில் தமிழை எடுப்பவர்கள் 1,000ஐ கூட தாண்டுவது கிடையாது. இதிலிருந்து தமிழ்க்கல்வி நாளுக்கு நாள் நலிந்துகொண்டிருப்பதை அறியலாம்.

தமிழ்ப் பள்ளிகளுக்கான பாடநூலில் நல்ல தமிழைப் புறக்கணித்துவிட்டு வடமொழி முதலிய பிறமொழிச் சொற்களை வலிந்து புகுத்தப் பார்க்கின்ற அதிகாரிகள் மலேசியத்தில் உள்ளனர். சுழியம் என்ற தமிழ்ச்சொல்லுக்குப் பதிலாக பூஜ்யம் எனும் வடமொழியைத்தான் பயன்படுத்துவோம் என்று அடம்பிடித்து தமிழை அழிக்கத் துடிக்கின்றனர். சுழியத்தை நிலைநிறுத்த தமிழ் அமைப்புகள் போராடிக்கொண்டிருக்கின்றன.

மலாயாப் பல்கலைக்கழகம் நாட்டில் தமிழ்த்துறை இருந்த ஒரே கல்வி நிறுவனம். கடந்த 50 ஆண்டுகளாக அதன் தலைவராக தமிழரே இருந்துள்ளனர். ஆனால் இன்றோ உட்பகை, பதவிப் போராட்டம் ஆகிய காரணங்களால் அத்துறை பறிபோய்விட்டது. இந்த நிலைமை தொடர்ந்தால் அங்கு உள்ள நூலகமும் மூடப்படலாம்; ஆயிரமாயிரம் தமிழ் நூல்கள் அழிந்துபோகலாம்.

4.ஊடகத்துறையில் தமிழ் வாடுகிறது

அரசாங்க வானொலி, தொலைக்கட்சியைத் தவிர்த்து தனியார் வானொலியும், தொலைக்காட்சியும் தமிழைச் சிதைப்பதிலும் சின்னபின்னப் படுத்துவதிலும் மிக மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றன. தமிழின் தூய்மை அவர்களுக்கு முக்கியமே அல்ல. கைநிறைய காசு வந்தால் போதும் என்ற எண்ணத்தில் போட்டிப் போட்டுக்கொண்டு தமிழை அழிக்கிறார்கள். நிகழ்ச்சி தலைப்புகள், பேசும் பேச்சுகள், அறிவிப்புகள், பாடல்கள் என எல்லாமே தமிழைக் கெடுப்பனவாகவே உள்ளன. ஒரு தனியார் வானொலி “செம்ம ஓட்டு (Hottu) செம்ம (Hittu) என்று அறிவிப்பு செய்து நிகழ்ச்சிகளை நடத்துகிறது. கேட்டால் நேயர்கள் விரும்புகிறார்கள் என்கிறது. பிறகு தமிழ் அமைப்புகளின் பலமான கண்டனத்தைத் தொடர்ந்து அந்த அறிவிப்பை நிறுத்திக்கொண்டது.

5.இதழியல் துறையில் தமிழ் இளைத்துக் கொண்டிருக்கிறது

மலேசிய நாளிதழ், வார, மாத இதழ்களின் பெயர்கள் நல்ல தமிழாக இருந்தாலும், அவை கொடுக்கின்ற செய்திகளில் மொழிக் கலப்பு அதிகமாக இருக்கின்றன. மக்களின் மீது பழிபோட்டு இதனை செய்கின்றனர். அதோடு, தமிழகத்தின் பார்ப்பனிய இதழ்களின் தாக்கம் இங்கே அதிகமாக இருக்கிறது. சில இதழ்கள் புதுக்கவிதை என்ற பெயரில் கைப்பேசிவழி குறுஞ்செய்தியாக (sms) ஆங்கில எழுத்துகளில் எழுதி அனுப்புவதை அப்படியே போடுகிறார்கள். ரோமனைசு எழுத்தில் தமிழ்க் கவிதையை வளர்க்கிறார்கள்.

6.இலக்கியத் துறையில் தமிழ் இழுத்துப்பறிக்கிறது

பத்து இருபது ஆண்டுகளுக்கு முன் ஒப்பிடுகையில் இன்று இலக்கியத்துறை நலிந்துகொண்டிருக்கிறது. மூத்த எழுத்தாளர்கள் ஓய்ந்துபோய்க் கிடக்கிறார்கள். இன்று எழுதப்படும் சிறுகதைகள், நாவல்கள் எல்லாம் உள்ளீடற்றுக் கிடக்கின்றன. இளைஞர்கள் சிலர் எந்த இலக்குமின்றி எழுதித் தள்ளுகிறார்கள். இன்றைய கதைக் களங்கள் பாலியலைச் சுற்றி செக்குமாடாய் சுற்றுகின்றன. வேறு வழியின்றி இதழ்களும் அவற்றை வெளியிடுகின்றன. இன்று யாப்பு அறிந்து எவரும் கவிதை எழுதுவதில்லை. புதுக்கவிதை, ஐக்கூ என்ற பெயரில் எதையோ கிறுக்குகிறார்கள். நடப்பியல் (யதார்த்தம்) எனும் பெயரில் வரையறையின்றி மொழிக்கலப்புகள் நடக்கின்றன.

7.இயக்கங்களில் தமிழ் இயங்காமல் கிடக்கிறது

தமிழின் பெயரால் அமைக்கப்பட்ட இயக்கங்கள் பல முடங்கி போய்விட்டன; அல்லது இலக்கு மாறி சென்றுவிட்டன. தமிழ் இயக்கங்களுக்கும் தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் இன்று மதிப்போ மக்களின் ஆதரவோ கிடைப்பதில்லை. தமிழோடு உயர்வோம் என்று கொள்கை முழக்கம் செய்த இயக்கங்கள் தமிழை ஓட விட்டுவிட்டு உயர்வோம் என்று மட்டும் கூச்சலிடுகின்றன. இன்று அரைகுறையாகத் தமிழ்ப் பேசும் இயக்கம் – நிகழ்ச்சிகளுக்குதான் மரியாதை.

8.தமிழ் நிகழ்ச்சிகள் / மாநாடுகள்

தமிழர் திருநாள் போன்ற நிகழ்ச்சிகளுக்கோ அல்லது தமிழ் சார்ந்த மாநாடுகளுக்கோ வருபவர்கள் பெரும்பாலும் 40, 50, 60ஐ கடந்தவர்களாகவே உள்ளனர். இளைஞர்களுக்குத் தீனி போடுவதற்குக் கூத்தும் கும்மாளமும் குத்தாட்டமும் போடும் நிகழ்ச்சிகளை நடத்துவதற்குப் பலர் வந்துவிட்டார்கள். குறிப்பாக, தனியார் வானொலி, தொலைக்காட்சி நிலையத்தாரைச் சொல்லலாம். தவிர, தமிழ்த்திரைப்பட, சின்னத்திரை நடிகர் நடிகைகளைக் கூட்டிவந்து நிகழ்ச்சிகள் நடத்தினால் அரங்கமே நிரம்பி வழியும். முந்நூறு, நானூறு வெள்ளிக்குச் சீட்டு வாங்கி திரைப்பட நடிகையைக் காண ஓடுகின்ற மக்கள் இலவயமாக நடத்தப்படும் தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளுக்குச் செல்வதில்லை.

9.இணையத்தில் தமிழ் எட்டாமல் இருக்கிறது

இணையத் தமிழ் மலேசியத் தமிழருக்கு எட்டாத் தொலைவில் இருக்கிறது. கணினி, இணையத்தில் தமிழைப் பயன்படுத்தும் பயனாளர்கள் மிகக் குறைவாகவே இருக்கின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழாசிரியர் பெருமக்கள் பலரும், தமிழால் பிழைக்கும் பலரும் கணினி, இனையத்தில் தமிழைப் பயன்படுத்த அறியாமல் இருக்கின்றனர்.

10.குடும்ப நிகழ்ச்சிகள் / சமய நிகழ்ச்சிகளில் தமிழ் ஓரங்கட்டப்படுகிறது

குடும்ப விழாக்கள், சமய விழாக்கள் அனைத்திலும் இன்று சமற்கிருதமும் வடமொழியும் ஆங்கிலமும் கண்டபடி புகுந்து விளையாடுகின்றது. மக்களிடையே பணவசதி இருப்பதால் என்ன எதுவென்று ஆராயாமல், சரியா தப்பா என்று சிந்திக்காமல் குடும்ப நிகழ்ச்சிகளையும் சமய விழாக்களையும் தங்கள் விருப்பம்போல நடத்துகின்றனர். இதற்கு பூசாரிகள், குருக்கள், சமயத் தலைவர்கள் என எல்லாரும் ஒத்து ஊதுகிறார்கள். ஆலய வழிபாடுகளில் தமிழுக்கு இடமில்லாமல் போய்விட்டது. தேவாரத் திருவாசகப் பாடல்களை ஆங்கிலத்தில் எழுதிவைத்து பாடுகிறார்கள். தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுவதில்லை. இன்று தியான மன்றங்களும், யோக வழிபாட்டு குழுக்களும் மலேசியாவில் காளான்களாய் வளர்ந்துவிட்டன. ஆயிரக்கனக்கில் பணத்தைக் கொடுத்து ஏமாறுவதற்கு அனியமாக உள்ளனர். தமிழைப் பற்றியெல்லாம் இவர்களுக்கு எந்தவித அக்கறையும் இருப்பதில்லை.

இப்படியாக, தமிழுக்குத் தேய்மானங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. உள்ளிருந்தே அமைதியாகக் கொல்லும் நோய்போல இது புரையோடிக் கொண்டிருக்கிறது. இவற்றைக் களைவது என்பது இன்று தொடங்கி நாளை முடித்துவிடக்கூடிய செயலல்ல. ஆனாலும், மலேசியத் தமிழர் மனம் வைத்தால் இது முடியாததும் அல்ல.

தமிழர்களைப் போலவே மலாயாவுக்கு வந்த சீனர்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்தை வசப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இருந்தாலும், தங்களுடைய மொழியை மறந்துவிடாமல் வாழ்கின்றனர். ஆனால், தமிழர்களோ நாலு காசு சேர்த்தவுடன் முதலில் தாய்மொழியாகிய தமிழைத்தான் தூக்கிப்போடுகிறார்கள். மொழிமானமுள்ள சீனர்களுடன் வாழ்கின்ற போதிலும் தமிழர்கள் பெரும்பகுதியினர் மொழிமானங் கெட்டவர்களாக இருப்பதைக் காண்பதற்கு வியப்பிலும் வியப்பாக இருக்கிறது.

செந்தமிழே உயிரே நறுந்தேனே
செயலினை மூச்சினை உனக்களித்தேனே
நைந்தாயெனில் நைந்துபோகும் என் வாழ்வு
நன்நிலை உனக்கெனில் எனக்கும்தானே!
என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடிய வரிகளில் பொதிந்திருக்கும் உண்மையை எமது மக்கள் உணர்ந்துகொள்ளும் நன்நாள் விரைவிலேயே வரவேண்டும்.

நனிநன்றியுடன்:-



1 comment:

Hai said...

படிக்கையில் கணக்கிறது. நல்லது நடக்க வேண்டும்.

Blog Widget by LinkWithin