Wednesday, May 05, 2010

பதிவுலகப் பூமாலையில் மலேசிய நறும்பூக்கள்


தமிழ் வலைப்பதிவு உலகம் இன்று விரிந்து வளர்ந்துகொண்டே போகிறது. நாளும் புதிய புதிய வலைப்பதிவுகள் உருவாகி வருகின்றன. எமது மலேசியத்திலும் இன்று நிறைய வலைப்பதிவுகள் எழுதப்படுகின்றன. அவை பல்வேறு துறை சார்ந்தவையாகவும் இருக்கின்றன.

பெரும்பாலும் கேலிக்கைக்கும், மனமகிழ்வுக்கும் முதன்மைக் கொடுக்கும் தளங்களே அதிகம் என்றாலும் சமுதாயப் பயன்கருதும் – மொழியின நலன்கருதும் பதிவுகளும் சில இருக்கின்றன.

இவ்வகை பதிவுகளின்மீது வாசகர்கள் அவ்வளவாக நாட்டம் காட்டுவது கிடையாது. நாளிதழா கிசுகிசு போதும்; வானொலியா திரைப்பாட்டு போதும்; தொலைக்காட்சியா நடிகைகளின் குலுக்கும் சின்னத்திரை சிலுக்கும் போதும், சிறுகதையா நவினம் போதும், கவிதையா உரைவீச்சு போதும், இணையமா கேலிக்கை போதும்; கும்மாளம் போதும் என்று போய்க்கொண்டிருக்கிறது காலம். எதை எடுத்தாலும் எல்லாமும் புலன் இன்பங்களுக்குத் தீனி போடுபவையாகவே உள்ளன. அறிவான செய்திகளையோ அழமான சிந்தனைகளையோ பலரும் அவ்வளவாக விரும்புவது கிடையாது.

இந்தச் சூழலில், உள்ளடக்கமாகட்டும் அல்லது மொழியாகட்டும் அல்லது வடிவமைப்பாகட்டும் அல்லது தரமாகட்டும் அல்லது சூடியிருக்கும் பெயராகட்டும்.. எல்லாவற்றிலும் மலேசிய வலைப்பதிவுகள் சிறப்பாகவே இருப்பதாக என்னுடைய கணிப்பு. அதேவேளையில், அவற்றின் சமூகப் பொறுப்பும் பங்களிப்பும் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது.

மலேசிய வலைப்பதிவுகள் உள்நாட்டு தமிழர்களிடம் இன்னும் பரவலாகப் போய்ச்சேராத அல்லது சேர முடியாத நிலைமை இருக்கிறது. தகவல்களை வழங்குவதில் தமிழ் நாளிதழ், வானொலி, தொலைக்காட்சி முதலிய பாரம்பரிய ஊடகங்கள் போல வலைப்பதிவு அல்லது இணைய ஊடகம் இன்னும் வரவேற்பு பெறவில்லை. இதனை மாற்றியமைத்து இணைய ஊடகம் மாற்று ஊடகமாகப் பரிணாமம் பெறுவதற்கு முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.

அந்தவகையில், மலேசியாவிலிருந்து செயல்படும் சில வலைப்பதிவுகளை இங்கு அறிமுகம் செய்ய விரும்புகிறேன். இவற்றை உங்களில் பலர் அறிந்திருக்கலாம்; சில வலைப்பதிவுகளை இப்போதுதான் அறிய நேரலாம்.

எது எப்படி இருப்பினும், இவை எமது மலேசிய உற்பத்திகள்; மலேசிய மணம் கமழும் ஊடகங்கள்; மலேசிய அச்சில் வார்க்கப்பட்ட வலைப்பதிவுகள். இவற்றைச் சென்று பார்ப்பதன் – படிப்பதன் வாயிலாக எமது மலேசியத்தை – எமது மலேசியத் தமிழர் நிலையை உலகத் தமிழர்கள் அறிந்துகொள்ளலாம்.


அருமை தோழர் சதீசுகுமார் அவர்களுடைய வலைப்பதிவு ஓலைச்சுவடி. மலேசியத் தமிழர்களுக்கு விடியலாய் முகிழ்த்தது. எமது மக்களின் இன்னல்கலையும் எழுச்சிகளையும் பதிவு செய்திருக்கும் இணைய ஆவணம் இது. எதிர்காலத்தில் மலேசியத் தமிழரின் வரலாற்றை ஆய்வுசெய்யும் ஒருவருக்குத் தேவையான பல விடயங்கள் ஓலைச்சுவடியில் கிடைக்கும்.


நனவுகள், அன்பின் ஐயா அ.நம்பி அவர்களின் வலைப்பதிவு. மொழி, இன நலச் செய்திகள் இங்கு நிறைய கிடைக்கும். தமிழகத்தின் அரசியல் கூத்தடிப்புகளை பற்றி மலேசியத் தமிழனின் பார்வை என்னவாக இருக்கிறது என்பதை அழகாக எழுதுவதில், அதுவும் அழகழகாய் படம்போட்டு எழுதுவதில் இவருக்கு நிகரில்லை. தமிழ் இலக்கணம், இலக்கியம், யாப்பு ஆகியவையும் அ.நம்பி ஐயாவுக்குக் கைவந்த கலை.


அருமை இளவல் விக்னேஷ்வரன் அடைகலம் எழுதும் வாழ்க்கைப் பயணம் இதமான வாசிப்புக்கு ஏற்ற வலைப்பதிவு. அரிய செய்திகளை அழகாய் படைக்கும் நல்ல படைப்பாளி. இவருடைய பல பதிவுகள் தமிழகத்தின் மக்கள் ஓசை ஏட்டில் வெளிவந்துள்ளது.


அருமை நண்பர் மனோகரன் கிருட்டிணன் ‘மனோவியம்’ வலைப்பதிவின் சொந்தக்காரர். இவர் உரைவீச்சுகளில் எமது மண்ணின் நீள அகலங்களைக் காணலாம். ஆன்மிகத்திலும் வரலாற்று ஆய்விலும் ஈடுபாடு உடையவர். இவர் எழுதிய ‘தென்கிழக்காசியாவில் தமிழர்களின் சுவடுகள்’ தொடர் உலகத் தமிழர் படிக்க வேண்டிய ஆவணத்தொடர்.

மலேசியத் தமிழன்:- மலேசியத் தமிழரின் நடப்பு நிலைமையை பிரித்துப்போட்டு மேய்ந்திருக்கிறது இவ்வலைப்பதிவு. மலேசியத் தமிழரின் பிற்போக்குத் தனங்களை அலசி ஆராய்ந்து இருப்பதோடு, முன்னேறுவதற்கான வழிகளையும் காட்டியிருக்கிறது.

தமிழுயிர்:- மலேசியாவின் முதலாவது தமிழ்த்தேசிய வலைப்பதிவாக வலம்வருகிறது. மலேசியத் தமிழர்களிடையே நிலவும் மொழி, இன, சமய, பண்பாட்டு, கலை, இலக்கியச் சீரழிவுகளைச் சூடாக விவாதிக்கும் தளம்.

கருத்து மேடை:- வழிமாறிச் சென்றுகொண்டிருக்கும் மலேசியத் தமிழ் இலக்கியம், பண்பாட்டின் மீது கருடப் பார்வை செலுத்தும் வலைப்பதிவு இது.

திருநெறி:- தமிழியச் சிந்தனைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் வலைப்பதிவு. எழுச்சிமிகு உரைகள், பாடல்கள் ஒலி வடிவில் இங்கு கிடைக்கும். தமிழறிஞர் இரா.திருமாவளவன் இதன் பதிவர். ஓயாத தமிழ்ப்பணிகளுக்கு இடையிலும் இவர் பதிவெழுதுவது வியப்புதான்.

வேய்ங்குழல்:- அழகுதமிழ் பெயரில் ஐயா.தமிழ்மாறன் எழுதும் பதிவிது. தமிழ்வளம் நிறைந்த வலைப்பதிவு.

இப்படியாக இன்னும் ஏராளமான வலைப்பதிவுகள் எமது மலேசியப் பதிவர்களின் கைவண்ணத்தில் பதிவுலகப் பூமாலையில் நறும்பூக்களாக மணக்கின்றன.­­­­­­ தமிழின் சிறப்பைக் கெடுக்காத வகையில் எமது பதிவர்கள் பெயர்சூட்டி இருப்பது சொல்லத்தக்கச் சிறப்பாகும். இதற்காகவே அவர்களை மனதார பாராட்டலாம்.


வலைப்பதிவுகளைத் தவிர்த்து மலேசிய செய்திகளைச் சுடசுட தரும் செய்தித் தளங்களும் உள்ளன. குறிப்பாக மலேசியாஇன்று இணையத்தளம் மிகவும் புகழ்பெற்றதாகும். உலக அளவில் அதிகமாகப் பார்க்கப்படும் தளமாக இது வெற்றிபெற்றுள்ளது. அதுபோலவே, அண்மையில் வெளிவந்துள்ள விடுதலை மலேசியாஇன்று இணையத்தளத்திலும் மலேசியத் தமிழர் சார்ந்த செய்திகள் இடம்பெறுகின்றன. இதே அமைப்பில் வணக்கம் மலேசியா எனும் தளமும் நீண்ட காலமாகத் தமிழ்சேவை வழங்கி வருகிறது.

இவை போன்று இன்னும் பல வலைப்பதிவுகளை மொத்தமாகப் பார்ப்பதற்குத் திருமன்றில் அல்லது வலைப்பூங்கா ஆகிய இரு திரட்டிகளுக்குச் செல்லவும்.

வருங்காலத்தில் இன்னும் அதிகமான வலைப்பதிவுகள் உருவாகி மலேசியத் தமிழர் எண்ணங்களும் கைவண்ணங்களும் உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.

நனிநன்றியுடன்:-

­­­­­­­­­

3 comments:

மனோவியம் said...

தமிழ் மணம் பரப்பும் மலேசிய வலைப்பதிவுகளை தமிழ் மனம் கமழ முகவுரை எழுதிய தங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் ஐயா.. சொல்லப்போனால் மலேசிய வலைப்பதிவுலகம் மயக்கம் தரும் நிலையில்தான் இருக்கின்றன. இன்னும் வளரவேண்டிய தூரம் மிகவும் அதிகம்..எத்தனையோ அருமையாக எழுதிய வலைப்பதிவாளர்கள் இப்பொழுது எழுதுவதில்லை. ஏன் என்று தெரியவில்லை. புதிய பதிவாளர்கள் வருகையும் குறைவுதான் என்றே எனக்கு தோண்றுகிறது. தமிழக மற்றும் உலகத் தமிழ் வலைப்பதிவாளர்கள் அட்டகாசமாக வலைப்பூவில் வலம் வந்துக்கொண்டிருக்கும் போது மலேசிய வலைப்பதிவாளர்கள் எங்கே பிந்தங்கிவிடுவோமே என்ற கவலை அதிகரித்திருக்கின்றது.. இதற்கு எதாவது செய்யவேண்டும் தகமைமிக்க சான்றோர்கள்.நன்றி ஐயா..வாழ்க வளமுடன்

தமிழ் said...

உண்மைதான்

Sathis Kumar said...

மிக்க மகிழ்ச்சி.. ‘ஓலைச்சுவடி’யையும் அங்கீகரித்து தமிழ்மண வாசகர்களுக்கு அறிமுகம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி ஐயா. வாழ்க உங்கள் தமிழ்த் தொண்டு!

Blog Widget by LinkWithin