Saturday, May 08, 2010

மலேசியாவில் தமிழ்மணம் இருக்கிறது! நிலைக்குமா? (1/2)


கல்வெட்டுகளிலும் பின்னர் ஓலைச்சுவடிகளிலும் அதன் பின்னர் செப்பேடுகளிலும் குடியிருந்த பழந்தமிழ் மொழியானது அடுத்தக் கட்டத்திற்கு முன்னேறுமா? என்றும், உரைநடையில் பீடுநடையிடுமா? என்றும், அச்சுக்கலை அறிமுகமான காலத்தில் தமிழ் கோலோச்சுமா? என்றும், தட்டச்சு கண்டுபிடிக்கப்பட்ட சமயத்தில் தமிழ் மூச்சடக்கி எழுமா? என்றும், தொழிற்புரட்சி ஏற்பட்ட கடந்த நூற்றாண்டில் தமிழ் மீளுமா? என்றும், அறிவியல் வளர்ச்சிக்கிடையில் தமிழ் மலர்ச்சியடைந்து மணம் தருமா? என்றும், தொழில்நுட்பத்தின் தொல்லைக்குள் தமிழ் தொலையாதிருக்குமா? என்றும், ஆகக் கடைசியாக முகிழ்த்திருக்கும் கணினி – இணையத் துறையில் கன்னித்தமிழ் கரைசேருமா? என்றும் தமிழுக்கு எதிராகக் காலாந்தோறும் நம்பிக்கையில்லாத போக்குகள் கட்டவிழத்து விடப்பட்டுள்ளன.

ஆனால், அத்தனைக் காலங்களையும் தடைகளையும் எதிரில் வந்த இடர்களையும் கடந்து இன்று தமிழ்மொழி வாழ்ந்து வருகிறது; உலகமெல்லாம் பரந்து – விரிந்து – மற்றைய மொழிகளைப் போல வளர்ந்து வருகின்றது. உலகின் பல நாடுகளில் தமிழும் தமிழரும் இன்று குடியேறி வளம்பெற்று வருகின்றனர்.

அந்த வகையில், மலேசியாவில் சூழலில் இற்றை நாளில் தமிழ்மொழியின் நிலைமை அல்லது ஆளுமை எந்த அளவுக்கு இருக்கின்றது என்பதை இந்தப் பதிவு அலசவிருக்கிறது.

1.மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தில் தமிழ்

மலேசிய அரசியலமைப்புச் சட்டப்படி, கல்விச் சட்டத்தின் 152-வது விதியின்கீழ் தமிழுக்கு அரசுரிமைமையும் பாதுகாப்பும் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அதாவது:-
வரைவு எண்:152:- அதிகாரப்பூர்வ மொழியாக மலாய் மொழி இருப்பினும் பிற மொழிகளுக்கான நிலைப்பாடு மற்றும் உரிமையைக் கொண்டு, அம்மொழியைப் பயன்படுத்துவதற்கும், கற்றுக்கொள்வதற்கும், மேம்படுத்துவதற்கும், பொது மானியங்களைப் பயன்படுத்தி அவற்றைச் செயல்முறைப்படுத்துவதற்கும் தடை ஒருபோதும் இருக்கக்கூடாது.
வரைவு எண்:152(1)(a):-பிற மொழிகளைப் பயன்படுத்துவதற்கும் (அதிகாரப்பூர்வ காரணங்களைத் தவிர்த்து), அல்லது கற்பிப்பதற்கும் கற்பதற்கும் யாரையும் மறுக்கவோ தடுக்கவோ முடியாது; மற்றும்
வரைவு எண்:152(1)(b):-கூட்டரசில் அங்கம் வகிக்கும் பல்லின மக்களின் மொழிகளைப் பாதுகாப்பதற்கும், தொடர்வதற்கும், கற்பதற்கும் உரிய மத்திய, மாநில அரசாங்கங்களின் உரிமைகளை இங்கு குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு வரைவின் உட்பிரிவும் பாதிக்கலாகாது.

2. அரசாங்கத் துறையில் தமிழ்

மலேசிய அரசாங்கத்தில் பல துறைகளில் தமிழ்மொழிக்கு தகுந்த வாய்ப்பு வழங்கப்படுள்ளது. கல்வித் துறை, தகவல் துறை ஆகிய இரண்டிலும் தமிழுக்குப் பரவலான இடம் வழங்கப்பட்டுள்ளது. நீதித்துறையில் வழக்குமன்ற மொழிப்பெயர்ப்பாளர் பணியில் தமிழ்மொழிக்கு நிரம்ப தேவை இருக்கின்றது. இவைகளைத் தவிர்த்து மற்றைய துறைகளில் தமிழ்மொழிக்குக் குறைவான வாய்ப்புகளே உள்ளன.

3. தமிழ்க் கல்வித்துறை

பாலர் வகுப்பு தொடங்கி (6வயது), தொடக்கப்பள்ளி (7–12வயது), இடைநிலைப் பள்ளி (13-17வயது), பிறகு உயர்க்கல்வி, ஆசிரியர் பயிற்சிக் கழகம், பல்கலைக்கழகம் வரையில் தமிழ்மொழிக் கல்விக்கு மலேசியாவில் விரிவான அளவில் வாய்ப்புகள் இருக்கின்றன.

மொத்தம் 523 தமிழ்ப்பள்ளிகள் நாட்டில் இருக்கின்றன. இப்பள்ளிகளில் ஏறக்குறைய ஒரு இலக்கத்து பத்தாயிரம் (110,000) மாணவர்கள் பயில்கின்றனர். தொடக்கப்பள்ளியில் 6ஆம் ஆண்டில் அரசுத் தேர்வு நடைபெறும். அதேபோல் இடைநிலைப் பள்ளியில் 3ஆம் படிவத்திலும்(பிஎமார்) 5ஆம் படிவத்திலும்(எசுபிஎம்) அரசுத் தேர்வுகள் நடைபெறும். பிறகு ஆறாம் படிவத்தில் எசுதிபிஎம் எனும் தேர்வு நடத்தப்படும்.

தொடக்கத் தமிழ்ப்பளிகள், இடைநிலைப்பள்ளிகளில் தமிழைப் படிப்பதற்கான பாடநூல்கள், கலைத்திட்டங்கள், பயிற்சி நூல்கள், தேர்வுகள் ஆகிய அனைத்தையும் அரசின் செலவிலேயே வழங்கப்படுகின்றன. ஆசிரியர்களுக்கு அரசாங்கமே பயிற்சியளிக்கிறது. தமிழாசிரியர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய பத்தாயிரம் இருக்கும்.

பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழியில் இளங்கலை, முதுகலை, முனைவர் படிப்பு வரையில் படிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆசிரியர் பயிற்சி தனியாக ஆசிரியர் பயிற்சிக் கழகங்கள் வாயிலாக வழங்கப்படுகிறது. இதுவும் பட்டப் படிப்பாகும்.

4. தமிழ் ஊடகத் துறை

அரசாங்க ஊடகமான மலேசிய வானொலி தொலைக்காட்சி (Radio Televisyen Malaysia) ஆகிய நிறுவனம் வாயிலாக 24 மணி நேர தமிழ் வானொலி(Minnal FM) நடத்தப்படுகிறது. தொலைக்காட்சியில் தமிழ் நிகழ்ச்சிகள் ஒலியேறுகின்றன. அரசாங்கச் செய்தி நிறுவனமாகிய ‘பெர்னாமா’ (Bernama TV) தொலைக்காட்சியில் தமிழ்ச் செய்திகள் ஒவ்வொரு நாளும் 3 முறை ஒளியேறுகின்றது.

மேலும், தனியார் தொலைக்காட்சி (Astro) நிறுவனத்திலிருந்து 24 மணி நேரமும் தமிழ் நிகழ்சிகள் ஆறு அலைவரிசைகளில் ஒளிபரப்பாகின்றன. அதேபோல், தனியார் தமிழ் வானொலிகள் இரண்டு (THR Raga / Osai) உள்ளன.

5. தமிழ் இதழியல் துறை

தற்சமயம் மூன்று தமிழ் நாளிதழ்கள் வெளிவருகின்றன. 1924 தொடங்கி இன்றுவரை நிற்காமல் வெளிவரும் ஒரே நாளிதழ் உலகத்திலேயே தமிழ் நேசன் எனும் மலேசிய நாளிகைதான். கடந்த மே 1 தொடங்கி மலேசிய வரலாற்றில் முதன்முறையாக ஒரு மாலையிதழ் வெளிவரத் தொடங்கியுள்ளது. அரசாங்கத்தின் தகவல் ஏடாக புதிய உதயம் எனும் இதழ் இலவயமாக வழங்கப்படுகிறது. வார, மாத இதழ்கள், மாணவர் இதழ்கள் என இருபதுக்கும் மேற்பட்ட இதழ்கள் வெளிவருகின்றன.

6. தமிழ் இலக்கியத் துறை

மலேசியத் தமிழ் இலக்கியம் ஒரு சீரான தன்மையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. மரபுக் கவிதைகள், உரைவீச்சுகள், சிறுகதை, நாவல், கட்டுரை இலக்கியம், குழந்தை இலக்கியம் என பல்வேறு வடிவங்களில் இலக்கியப் படைப்புகள் நிறைய வெளிவருகின்றன. இலக்கியத்தை வளர்த்தெடுப்பதில் நாளிதழ்களும், அரசாங்க வானொலியும் பெரும் பங்காற்றுகின்றன. உள்நாட்டு எழுத்தாளர்களால் எழுதப்பெற்று அதிக அளவில் நூல்களும் வெளிவருகின்றன. அவற்றுள் மொழியியல், இனவியல் சார்ந்த ஆய்வு நூல்களும் அடங்கும். கடந்த 4 ஆண்டகளாக தமிழ் நாள்காட்டி வெளிடப்பெறுகிறது. இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் இலக்கியத்தை ஒரு பாடமாக எடுத்துப் படிப்பதற்கு வாய்ப்பும் இருக்கிறது.

7. தமிழ் இயக்கங்கள்

தமிழ்மொழியை முன்னெடுத்து நடத்தும் தமிழ் இயக்கங்கள் பல இருக்கின்றன. மலேசியத் திராவிடர் கழகம், தமிழ்நெறிக் கழகம், தமிழ்க் காப்பகம், தமிழ் மணி மன்றம், தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், தமிழ் இலக்கியக் கழகம், திருக்குறள் இயக்கம், தமிழியல் ஆய்வுக் களம், தமிழ் வாழ்வியல் இயக்கம் முதலான இன்னும் பல அமைப்புகள் தமிழ்மொழி வளர்ச்சிப் பணிகளை இடையறாது நடத்தி வருகின்றன. தமிழுக்கு எதிராக அவ்வப்போது ஏற்படும் சிக்கல்களையும் இவ்வமைப்புகள் தீர்த்து வைக்கின்றன.

8. தமிழ் நிகழ்ச்சிகள் / மாநாடுகள்

தமிழ் நிகழ்ச்சிகளுக்கும் மாநாடுகளுக்கும் பஞ்சமே இல்லை என்ற அளவுக்குத் தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகள் அடிக்கடி நடத்துகொண்டே இருக்கும். குறிப்பாக, கோலாலம்பூர், பேரா, பினாங்கு முதலான ஊர்களில் தமிழ் எழுச்சிமிக்க நிகழ்ச்சிகளும் மாநாடுகளும் அதிகமாக நடைபெறும். முதலாவது உலகத்தமிழாராய்ச்சி மாநாடு, திருக்குறள் மாநாடு, சிலப்பதிகார மாநாடு, வள்ளலார் ஆன்மநேய மாநாடு, கம்பன் விழா, பாரதிதாசன் விழா, கண்ணதாசன் விழா, தமிழர் திருநாள், சித்தர் மாநாடு போன்றவை குறிப்பிடத்தக்க பெரிய மாநாடுகள். வரும் மே திங்கள் 21–23இல் ஐம்பெரும் காப்பிய மாநாடு முதன்முறையாக நடைபெறவுள்ளது.

9. தமிழ் இணையம்

மலேசியாவில் தமிழ் இணையம் மெல்லென வளர்ந்து வருகின்றது. முரசு தமிழ் செயலியை உலகத்திற்கு அளித்த பெரும் மலேசியத் தமிழர் முத்து நெடுமாறனைச் சாரும். இவர் கைப்பேசியில் இயங்கும் ‘செல்லினம்’ எனும் செயலியையும் உருவாக்கியுள்ளார். அதேபோல சிவகுருநாதன் என்பவர் நளினம் செயலியையும், இரவிந்திரன் என்பார் துணைவன் செயலியையும் உருவாக்கி தமிழ்க் கணிமை உலகத்திற்கு அளித்தவர்கள்.

மலேசியாவில் இன்று தமிழில் சில இணையத்தளங்களும் பல வலைப்பதிவுகளும் உருவாகி இருக்கின்றன. இது குறித்து ஏற்கனவே விரிவாக எழுதியுள்ளேன்.
1.இணைய வெளியில் இனிய பயணம்
2.பதிவுலகப் பூமாலையில் மலேசிய நறும்பூக்கள்

மலேசியப் பிரதமருடைய இணையத் தளமும் தமிழில் செயல்படுகிறது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. இரு நாளிதழ்கள் இணையப் பதிப்பாக வெளிவருகின்றன. மின்னிதழ்களும் இணையத்தில் வலம்வருகின்றன.

10. தமிழில் குடும்ப நிகழ்ச்சிகள் / சமய நிகழ்சிகள்

குடும்ப நிகழ்ச்சிகளையும் சமயம் சார்ந்த வழிபாட்டு நிகழ்ச்சிகளையும் முழுக்க முழுக்க தமிழிலேயே நடத்திக்கொள்ள விரும்பும் மக்கள் இங்குக் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருக்கின்றனர். குழந்தைக்குப் பெயர்சூட்டு விழா, திருமணம், புதுமனை புகுவிழா, இறப்பு, ஆதனாற்று, கோயில் குடமுழுக்கு, குருபூசை முதலியவற்றில் தமிழையும் தமிழ் அருட்பாடல்களையும் திருக்குறளையும் முன்படுத்துகின்ற சூழலைக் காண முடியும். பொங்கல் விழா இங்கு பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது.

இப்படியெல்லாம் தமிழ்மணம் செழிக்கும் நாடாக மலேசிய விளங்குகிறது. இருப்பினும், இந்த நிலைமை எதிர்காலத்திலும் தொடருமா? மலேசியாவில் தமிழ் நிலைக்குமா? என்பதை அடுத்தத் தொடரில் ஆராய்வோம். மறவாமல் வாருங்கள்.

நனிநன்றியுடன்:-

No comments:

Blog Widget by LinkWithin