Friday, May 07, 2010

மலேசியத் தமிழர் வரலாறு பாட(டு)ங்கள் (2/3)


இதன் முதல் பகுதியைப் படிக்க இங்குச் சொடுக்கவும்

இன்றைய மலேசியத் தமிழர்களின் முன்னோர்களும் இரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்காக தென்னிந்தியாவிலிருந்து ஒப்பந்தக் கூலிகளாக இங்கு வந்தவர்கள். இரப்பர் தோட்டங்கள் மலேசியத் தமிழரின் தொட்டில்கள் என்று சொல்லலாம்.

1786 தொடங்கி 1938 வரையில் மலாயாவுக்குக் கொண்டுவரப்பட்ட இந்தியர்கள் மிகப்பெரும் தொகையினர் ஆவர். இவர்களுள் 85% பகுதி தமிழர்கள். காடுகளும் மலைகளும் நிறைந்து கிடந்த இந்த நாட்டை வளமாக்குவதற்கு வந்த எந்தமிழர் பெருமக்கள், துன்பங்கள் – துயரங்கள் நிறைந்த இரப்பர் தோட்டத்து வாழ்க்கையை நாட்டுப்புற பாடல்களில் பதிவு செய்துள்ளனர். இந்தப் பாடல்களிலிருந்து எமது முன்னோர்களின் வலிகளையும் வேதனைகளையும் இன்றைய தலைமுறையைச் சேர்ந்தவர்களால் புரிந்துகொள்ள முடியும் என்பதால் இந்தப் பதிவில் அதனைப் பற்றி விரிவாக எழுதுகிறேன்.

மலாயாவில் அப்போது இரப்பர் தோட்டங்களை உருவாக்குவதற்கும் அங்கு மாடாய் உழைப்பதற்கும் தொழிலாளர்கள் தேவைப்பட்டார்கள். அதற்குப் பொருத்தமானவர்கள் தென்னிந்தியத் தமிழர்கள்தான் என்று வெள்ளையர்களுக்குத் தெரிந்தது. உடனே, தென்னிந்தியாவில் ஆட்களைச் சேர்ந்து மலாயாவுக்குக் கொண்டுவந்தனர். எப்படி தெரியுமா?

பகடியான வார்த்தையிலே
பால்மரத்தில் பணம் காய்க்கும்
ஆவடியில் முந்திக்கிட்டா
அதிர்ஷ்டமும் தானேவரும்
இப்படியும் ஜாலாக்கு
எப்படியும் போட்டாங்க
பொய்சொல்லிக் கப்பலேத்திப்
பொழப்பெல்லாம் போச்சுங்க
கருங்கடல் தாண்டிவந்து
கைகட்டி நின்னோமுங்க
கல்பமும் உண்டின்னு
கையேந்தி ஊமையானோம்.

தென்னிந்தியாவிலிருந்து கப்பல் கப்பலாக தமிழ் மக்களை ஏற்றிவந்து, மலாயாவில் தரை இறக்குகிறார்கள் வெள்ளையர்கள். கடலில் வரும்போது நோயாலும் இன்னபிற காரணங்களாலும் பலர் மாண்டு போயுள்ளனர். அதில் பிழைத்து இங்கு வந்து சேர்ந்த எமது முப்பாட்டன் ஒருவன் தாம் பட்ட துயரத்தை இப்படி பதிவு செய்து வைத்துள்ளான்.

காடுமலை மேடுபள்ளம்
கண்டகண்ட இடங்களிலெல்லாம்
மாடுபோல உழைக்கணும்
மலையேறிப் பாடுபட்டு
ஊடுருவிப் போவுதய்யா இதநினைக்க
ஓடிவர்றார் பூட்சுகாலால் உதைக்க
ஊடுருவிப் போவுதய்யா இதநினைக்க
அப்பப்பா பசிக்கொடுமை...

அன்று இரப்பர் தோட்டங்கள் எப்படி இருந்தன என்று எங்கள் நாட்டுக் கவிஞர் வீரமான் இப்படி பாடிவைத்துள்ளார்.

வாய்பிளந்த மலைப்பாம்பு
வளைபெயர்ந்த கருநாகம்
பேய் உலவும் வெளிக்காடு
பீதியன்று முடிந்ததுண்டோ?
புதர் அடர்ந்த மேடுபள்ளம்
புலி உலவக் கூடுபயம்
உதற வைக்கு பனியிருட்டு...

இரப்பர் தோட்டத்தில் தமிழர்கள் பட்ட பாடுகளையும் செய்த வேலைகளையும் கீழே வரும் பாடல் வழியாகத் தெரிந்துகொள்ளலாம். தாயகத்தில் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித்தவித்து போதாதென்று, வாழ்வுதேடி வந்த இடத்தில் எமது மக்கள் பட்ட பாடுகளைப் பாருங்கள்.

*காண்டா வாளி தூக்கணும்
கடுமையான (நா)நூறு மரத்தை
நாங்க வெட்டனும்
உழைபாளியா நாங்க இருந்து
ஓடாத் தேயணும்
உழைக்கும் மக்கள் நாங்க
வறுமையால வாடணும்
இட்ட வேலையை நாங்களே
எடுத்துக் கூறிச் செய்யணும்
செய்யாவிட்டால் பின்முதுகில்
பிடரி பிடித்துத் தள்ளுவார்
ஏனென்று கேட்க நாதியில்லே
எடுத்துரைக்கக் கதியும் இல்லே..

*காண்டா வாளி:- மேலே படத்தில் பெண் தொழிலாளி தோளில் தூக்கிச் செல்லும் கருவி. இரப்பர் பாலை வாளியில் நிரப்பி 'காண்டாவில்' மாட்டி தோளில் சுமந்து செல்வர்.



அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் தோட்டத்து மக்களை *‘சாமக்காரன்’ விடுவீடாகச் சென்று மணியடித்து, கூவி எழுப்பி விடுவான். வீட்டில் குழந்தைகளுக்குத் தேவையானதைச் செய்துகொடுத்து, குழந்தைகளைப் பாதுகாக்க *‘ஆயக்கொட்டகை’யில் விட்டுவிட்டு ஆறு மணிக்கெல்லாம் *‘பெரட்டுக்குப்’ போக வேண்டும். அங்கு *‘கங்காணி’யிடம் தங்கள் வருகையை உறுதிப்படுத்திவிட்டு, இன்று எந்தக் *காட்டில் வேலை என தெரிந்துகொண்டு கல்லிலும் முள்ளிலும் காலால் நடந்து வேலைக்காட்டுச் சென்று மாலைவரை மாடாய் உழைத்துவிட்டு வீடு திரும்பும் அந்தப் பால்மரகாட்டுக் கொடுமை சொல்லி மாளாது.


தோட்டத்து நிருவாகிகளாக இருந்த துரைமார்கள் (வெள்ளையர்கள்) எமது மக்களை அடிமாடுகள் போல மதித்து வேலை வாங்கினர். துரைமார்கள் பண்ணிய கொடுமைகள் தாங்காமல் ஊருக்குத் திரும்பும் வழியும் அறியாமல் தவியாய் தவித்த மக்களின் இன்னல்கள் ஏராளம் உள்ளன. துரைமார்கள் ஒருப்பக்கம் என்றால், தோட்டத்தில் வெள்ளிக்காரர்களின் ஏவலாளிகளாய் இருந்து தொழிலாளர்களைக் கவனிக்கும் *‘கங்காணி’கள் பண்ணிய எகத்தாளங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

*சாமக்காரன் – அதிகாலையில் தொழிலாளர்களின் வீடு வீடாகச் அவர்களை எழுப்பும் வேலையாள்.
*ஆயக்கொட்டகை – தொழிலாளர்களின் குழந்தைகளைப் பராமரிக்கும் இடம். அங்கு வேலை செய்யும் பெண்கள் ‘ஆயா’ என்று அழைக்கப்பட்டனர்.
*பெரட்டு – தொழிலாளர்கள் வருகையைப் பதிவுசெய்த்து அவர்களுக்கான வேலைகள் பகிர்ந்தளிக்கப்படும் நிகழ்வு
*கங்காணி – தொழிலாளர்களைக் கவனித்துக்கொள்ளவும் வேலை வாங்கவும் வெள்ளைக்கார துரைகளால் நியமிக்கப்பட்ட பணியளர்கள்
*காடு – இரப்பர் மரங்கள் பயிரப்பட்டுள்ள காடுகள். அவை 1, 2, 35, 48 என்று எண்களால் பெயரிடப்பட்டிருக்கும்.

இந்தப் பதிவிலே தொடரை முடித்துவிடலாம் என்று நினைத்தேன். ஆனால், சொல்ல வேண்டிய செய்திகள் நிறைய இருப்பதால் அடுத்த தொடரில் இதனைத் தொடருகிறேன். மீண்டும் வருக.

நனிநன்றியுடன்:-

3 comments:

வலைப்பதிவாளர் said...

வணக்கம்.

மலேசியத் தமிழர்கள் கடந்த இன்னல்களைப் பாட்டைய்ச் சொன்ன பாங்குச் சிறப்பு. சிந்திக்க வேண்டிய வரலாற்றுப் பதிவு.

நன்றி.

Anonymous said...

தொடக்கம் நன்று; மிக நன்று.

அடுத்த பகுதியில் மேலும் விரிவாகச் சொல்லலாமே ஐயா. தேவையெனில் மூன்று பகுதிகளாக எழுத முயலுங்கள்.

- அ. நம்பி

மனோவியம் said...

இன்னும் நிறைய இருக்கிறது எழுதுங்கள் ஐயா

Blog Widget by LinkWithin