Tuesday, December 21, 2010

வலைப்பதிவர் கலந்துரையாடல் இனிதே நடந்தது

உத்தமம் அமைப்பின் நிருவாக உறுப்பினரும், மலேசியாவின் முன்னணி இணைய முனைப்பாளருமாகிய சி.ம.இளந்தமிழ் ஏற்பாட்டில் தமிழ் வலைப்பதிவர் கலந்துரையாடல் கடந்த 19.12.2010 ஞாயிறன்று நடைபெற்றது. பெட்டாலிங் ஜெயா, காசிங் சாலையில் இருக்கும் தாமரை உணவகத்தில் இந்நிகழ்ச்சி நடந்தது. 14 பேர் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தமிழ் இணைய முன்னோடியும் தமிழ் இணையம் (Tamilnet) தளத்தின் மேம்பாட்டாளருமாகிய திரு.பாலா பிள்ளை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் என்பது இந்நிகழ்ச்சியின் குறிப்பிடத்தக்க அங்கமாகும்.

பிற்பகல் 2:00 மணி தொடங்கி ஒவ்வொருவராக வந்து சேர்ந்ததும், சுப.நற்குணன் வரவேற்புரையுடன் கலந்துரையாடல் தொடங்கியது. தொடர்ந்து, சி.ம.இளந்தமிழ் உரை ஆற்றினார். இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டதன் நோக்கங்களை விவரித்தார். மலேசிய வலைப்பதிவுகள் இன்னும் எட்ட வேண்டிய எல்லைகள் தொலைவில் இருப்பதாகச் சொன்னார். மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள் முற்போக்காகச் சிந்தித்துச் சமூகத்திற்குப் பங்களிப்புகளைச் செய்வதோடு சிந்தனை மாற்றத்தை கொண்டுவர வேண்டும். அதோடு, வலைப்பதிவர்களிடையே பணிப்பின்னலை ஏற்படுத்தி உயர்ந்த இலக்கை முன்வைத்து செயல்படவேண்டும். ஒரு சமூகமாக; ஓர் இனமாகச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டிய காலக்கட்டத்திற்குத் தமிழ்ச் சமூகம் தள்ளப்பட்டிருக்கிறது. அதற்கு வலைப்பதிவர்கள் தக்கனவற்றைத் தங்கள் எழுத்துகள் வழியாகச் செய்யலாம் என்றார்.

அடுத்து, திரு.பாலா பிள்ளையின் சிறப்புரை இடம்பெற்றது. மலேசியாவில் வலைப்பதிவு எழுதுபவர்களைப் பாராட்டினார். தங்களுக்கு விருப்பமான செய்திகளை எழுதும் வலைப்பதிவர்கள் சமூக அக்கறையோடும் செயல்பட வேண்டும். சமூக மாற்றத்திற்கு வித்திடும் கருத்துகளை முன்வைக்க வேண்டும். தெளிவாகச் சிந்திக்கும் ஒரு சமுதாயத்தைத் தங்கள் எழுத்தின் வழியாக வலைப்பதிவர்கள் உருவாக்க முடியும். எனவே, தற்காலச் சூழலில் தமிழ்ச் சமூகத்திற்குத் தேவையான விடயங்களைத் தகுந்த சான்றோடும் செறிவோடும் எழுதுவதை வலைப்பதிவர்கள் அளவுகோளாகக் கொண்டிருத்தல் நல்லது.

முற்காலத்தில் தமிழ்ச் சமூகத்தில் பல கண்டுபிடிப்புகளும் ஆக்கங்களும் நிகழந்திருப்பதைக் காண்கிறோம். ஆனால், அண்மைய நூற்றாண்டில் பல பின்னடைவுகளைக் கண்டிருக்கிறோம். புதிய ஆக்கங்களும் கண்டுபிடிப்புகளும் இல்லாமை இதற்கு ஒரு காரணம். ஆகவே, புதிய ஆக்கங்கள் தமிழுக்குத் தேவை. அதற்கு, முதலில் கற்பனை வளம் நிறைந்த மக்களை உருவாக்க வேண்டும். மாறுபட்ட கற்பனைகளின் வழியாக புதிய கண்டறிதல்கள் நிகழும். எண்னங்களையும் சிந்தனைகளையும் பூட்டி வைத்துக்கொண்டாலோ பிற்போக்குத்தனமான சிந்தனனகளில் ஊறிக்கிடந்தாலோ புதிய கற்பனைகள் தோன்றா; புதிய ஆக்கங்களும் தோன்றா.

தொடக்கக் காலத்தில், தாம் தமிழ் இணையம் (Tamilnet) தளத்தை உருவாக்கிய காலத்தோடு ஒப்பிடும்போது இன்று தமிழ் இணைய உலகம் வெகுவாக வளர்ந்து இருக்கின்றது. ஒரு தனி அரசு அல்லது தனி நிருவாகம், நிறுவனம் செய்த பணிகளை இன்று இணையத்தில் தனியாட்கள் செய்ய முடிகிறது. விக்கிலீக்சு போன்ற தளங்கள் இதற்கு நல்ல சான்று. சூலியன் அசாஞ்சு போன்ற தனியாட்களால் இன்று உலகத்தின் போக்கையே மாற்றி அமைக்க முடிகிறது. வலைப்பதிவர்களும் இப்படி பெரிதாகச் சிந்தித்துப் பொறுப்புடன் செயல்பட முனைதல் வேண்டும். தமிழ்ச் சமூகம் பயன்படும் வகையில் ஆக்ககரமாக எழுதவேண்டும் என்றாரவர்.

தொடர்ந்து வருகை தந்த வலைப்பதிவர்கள் அனைவரும் தங்களை அறிமுகம் செய்துகொண்டு தங்கள் வலைப்பதிவு பணிகள் குறித்து பேசினர். அதிலிருந்து சில மணிகள் இதோ:-

இல.வாசுதேவன் (விவேகம்): 2004 தொடங்கி வலைப்பதிவு எழுதுகிறேன். பல சிரமங்களுக்கிடையில் இதனைச் செய்ய வேண்டியுள்ளது. சொகூர் மாநிலத்தில் பல முறை இணையக் கருத்தரங்கம், பட்டறை ஆகியன நடத்தி இளையோர்களுக்கு வழிகாட்டி வருகிறேன். தமிழ் ஆசிரியர்கள் நிறைய பேர் வலைப்பதிவு எழுத ஊக்குவித்துள்ளேன்.

துரைசாமி (வாசகர்): மலேசிய தமிழ் வலைப்பதிவுகளை விரும்பி வாசிப்பேன். குறிப்பாக, மலேசியா இன்று, திருத்தமிழ் முதலானவற்றைத் தவறாமல் வாசிப்பேன். வலைப்பதிவு தொடங்கும் எண்ணம் இருக்கிறது.

பவனேஸ்வரி (கணைகள்): 2008 முதல் பதிவெழுதி வருகின்றேன். குறிப்பிட்ட இலக்கு என்று தனியாக எதுவும் இல்லை. சமுதாய சிந்தனைகளைக் கவிதைகளாக எழுதி வருகின்றேன். சில கவிதைகள் பெரும் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கின்றன. பலமுறை வசைமொழிகள் பின்னூட்டங்களாக வந்திருக்கின்றன.

சுப.நற்குணன் (திருத்தமிழ்): 2005இல் வலைப்பதிவு தொடங்கினேன். இல.வாசுதேவன் அவர்களைச் சந்தித்த பின்புதான் வலைப்பதிவு தொடங்க ஆர்வம் உண்டானது. இன்று மலேசியத் தமிழ் வலைப்பதிவுகள் அதிகரித்து இருக்கின்றன. ஆனால், உள்ளடக்கங்களின் தரம் இன்னும் மேம்பட வேண்டும். நமது வலைப்பதிவுகள் மாற்று ஊடகமாக மக்கள் மனங்களில் இடம்பெற வேண்டும் என்பதே என் அவா. மலேசியத் தமிழ் வலைப்பதிவுகள் அனைத்தும் வாசகரைச் சென்று அடைய ‘திருமன்றில்’ எனும் திரட்டி தொடங்கினேன். அதேபோல், ஓலைச்சுவடி பதிவர் நண்பர் சதீசு வலைப்பூங்கா என்ற திரட்டியை வடிவமைத்துள்ளார். இவற்றை நமது பதிவர்களும் வாசகர்களும் பயன்கொள்ள வேண்டும். 2009இல் பாரிட் புந்தாரில் வலைப்பதிவர் சந்திப்பு நடத்தப்பட்டது. தொடர்ந்து தமிழ்க் கணினி, வலைப்பதிவு வளர்ச்சிக்குப் பங்காற்றி வருகிறேன்.

கிருஷ்ணமூர்த்தி (கவித்தமிழ்): ஆங்கிலத்தில் முதல் வலைப்பதிவு தொடங்கினேன். பாரிட் புந்தாரில் நடந்த சந்திப்புக்குப் பிறகு ‘கவித்தமிழ்’ தொடங்கினேன். சமூகத்தில் சிலர்மீது உள்ள கோபத்தை வெளிப்படுத்த பதிவுகள் எழுதுகிறேன். நமது எழுத்துகளை மரபு ஊடகங்களில் முழுமையாக வெளிப்படுத்த முடியவில்லை. நாளிதழ், தாளிகை, வானொலி போன்றவை நமது சிந்தனனகளை வெட்டிக் குத்தி சிதைத்து வெளியிடுகின்றன. ஆகவே, என் சிந்தனைகள் முழுமையாக வெளியிடுவதற்கு வலைப்பதிவு உதவியாக உள்ளது. அந்தவகையில், சமுதாயச் சிந்தனைகளைக் கவிதை மொழியில் தருகிறேன். தமிழில் நிறைய வளங்கள் உள்ளன; உயர்ந்த சிந்தனைகள் உள்ளன; மருத்துவம் உள்ளது; பல அரிய செய்திகள் நமது இலக்கியத்தில் உள்ளன. அவற்றை எளிய முறையில் மக்களுக்கு வழங்க விரும்புகிறேன்.

மனோகரன் (மனோவியம்): மலாயா பல்கலையில் சி.ம.இளந்தமிழ் நடத்திய பட்டறையில் கலந்துகொண்டபின் வலைப்பதிவு எழுத வந்தேன். என் பதிவில் சமூகம், சமயம், வரலாறு சார்ந்த சிந்தனைகளை எழுதிவருகிறேன். திருத்தமிழ் போன்ற வலைப்பதிவில் சூடான விவாதங்களில் நிறைய எழுதியுள்ளேன். அதனால், சிலர் அழிவியை அனுப்பி என் வலைப்பதிவுக்குத் தொல்லைகள் கொடுத்துள்ளனர். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் எழுதி வருகின்றேன்.

சுரேஸ் (தமிழ் மலர்கள்): புதிதாக வலைப்பதிவு எழுதுகிறேன். இப்போதைக்கு எளிமையான சில செய்திகளை மட்டுமே எழுதி வருகிறேன். இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. (இங்கு இடம்பெற்றுள்ள நிழற்படங்கள் அனைத்தும் சுரேஸின் கைவண்ணம்தாம். படங்களை இரவல் கொடுத்த அவருக்கு நன்றி)

யுவராஜன் (s.yuvaraajan.com): அடிப்படையில் நான் ஓர் எழுத்தாளன். பல இடங்களில் எழுதிய படைப்புகளைத் தொகுத்து ஒரே தளத்தில் வெளியிட வேண்டும் என்று வலைப்பதிவு தொடங்கினேன். வல்லினம் காலாண்டிதழில் எழுதிவருகின்றேன். தமிழ் வலைப்பதிவுகள் மாற்று ஊடகமாக வளர வேண்டும். மலேசிய வலைப்பதிவர்கள் இன்னும் ஆக்கமாக எழுத வேண்டும்.

மு.வேலன் (அரங்கேற்றம்): படிக்கும் காலத்திலிருந்தே இணையத்தில் ஆர்வமுண்டு. கல்லூரி படிப்பு முடிந்த பிறகு அறங்கேற்றம் வலைப்பதிவு தொடங்கி எழுதி வருகிறேன். என்னைப் பின்னொற்றி சிலர் வலைப்பதிவு தொடங்கியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களை இணைப்பதற்கு முயற்சி தேவைபடுகிறது. மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள் மடற்குழுமம் ஒன்று உள்ளது. ஆனால், எல்லா பதிவர்களும் அதில் பங்கேற்பதில்லை. இதனால், பதிவர்களிடையே செய்தி பரிமாற்றம் குறைவாக உள்ளது.

அப்பண்ணா (வாழ்க வளமுடன்): இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மகிழ்ச்சி. சதுரங்கம் பற்றி வலைப்பதிவு எழுதி வருகிறேன். மலேசிய வலைப்பதிவுகளைத் விடாமல் படிக்கிறேன்.

இறுதியாக, பொதுவான விடயங்கள் மீது கலந்துரையாடல் தொடர்ந்தது. அதில் பேசப்பட்டவை சில:

1.மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களை இணைக்க முகநூல் தொடங்க வேண்டும்.

2.சமுதாய மறுமலர்ச்சிக் கருத்துகளை அதிகமாக எழுத வேண்டும்.

3.உலக அளவில் எழும் தமிழ் சார்ந்த சிக்கல்களை மலேசியப் பதிவர்கள் கூர்ந்து கவனித்து கருத்துகளைப் பதிவுசெய்ய வேண்டும்.

4.தமிழ் எழுத்துச் சீர்திருத்தம், ஒருங்குறி தமிழ் எழுத்துச் சிக்கல் முதலான விடயங்களில் மலேசியப் பதிவர்களின் பங்கேற்பும் பங்களிப்பும் குறைவாகவே காணப்பட்டது.

5.உத்தமம் அமைப்பில் மலேசியப் பதிவர்கள் உறுப்பியம் பெற வேண்டும்.

6.அடுத்த ஆண்டில் பெரிய அளவில் வலைப்பதிவர் சந்திப்பும் பட்டறையும் நடத்தப்படும்.

மாலை மணி 4:15அளவில் கலந்துரையாடல் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது. நாட்டில் 60க்கும் மேற்பட்ட வலைப்பதிவர்கள் இருக்கின்ற நிலையில், இன்னும் அதிகமானோர் வந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அடுத்தடுத்த முறை இதனை எதிர்பார்க்கலாம்.


Wednesday, December 15, 2010

மலேசியத் தமிழ் வலைப்பதிவர் கலந்துரையாடல்


மலேசிய உத்தமம் அமைப்பின் ஏற்பாட்டில், தமிழ் வலைப்பதிவர் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாள்: 19-12-2010 (ஞாயிறு)
நேரம்: மாலை மணி 2:00 - 4:00
இடம்: தாமரை உணவகம், ஜாலான் காசிங் பெட்டாலிங் ஜெயாவில் (Lotus Restaurant, Jalan Gasing P.J)
உத்தமம் அமைப்பின் நிருவாகக் குழு உறுப்பினரும், மலேசிய நிகராளியும் ஆகிய சி.ம.இளந்தமிழ் இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வழிநடத்துவார்.

தமிழ் இணைய முன்னோடிகளில் ஒருவரான திரு.பாலா பிள்ளை (Tamilnet- Australia)அவர்கள் சிறப்பு வருகையளிக்கவுள்ளார்.
இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் உள்ளடக்கம் பின்வருமாறு:

1.வலைப்பதிவர் அறிமுகம்
2.மலேசியத் தமிழ் வலைப்பதிவு வாழ்வும் வளர்ச்சியும்
3.மலேசியாவில் தமிழ் வலைபதிவர்களை அதிகரிப்பதற்கான வழிவகைகள்
4.மலேசியத் தமிழ் வலைப்பதிவுகளை மாற்று ஊடகமாக வளர்த்தெடுத்தல்
5.மலேசியத் தமிழ் வலைப்பதிவுலகச் சிக்கல்களும் தீர்வுகளும்
6.மலேசியத் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு / பட்டறை
குறுகிய காலத்தில் இந்த ஏற்பாட்டினைச் செய்திருப்பதால், இதனையே அழைப்பாக ஏற்று மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள் வருகை தருமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

இதற்கு முன்னதாக, இவ்வகையிலான சந்திப்பு நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இப்போது மீண்டுமொரு முறை ‘மலேசியத் தமிழ் வலைப்பதிவர் கலந்துரையாடல்’ நடைபெற உள்ளது.

ஆகவே, இதனை நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள் அனைவரும் கலந்துகொள்ளவும்.
வலைப்பதிவர் நண்பர்கள் தயவுசெய்து தங்கள் வருகையை உறுதிபடுத்தும் வகையில் அழைத்து தெரிவிக்கவும் அல்லது குறுஞ்செய்தி விடுக்கவும்.

மேல் விவரங்களுக்கும் தொடர்புக்கும்:
சி.ம.இளந்தமிழ் - உத்தமம் (012-3143910) சுப.நற்குணன் - திருத்தமிழ் (012-5130262) மின்னஞ்சல்: thirutamilblog@gmail.com

Monday, December 13, 2010

திருக்குறள் மீது பதவி உறுதிமொழி: கனடா தமிழ்ப் பெண்மணி


2010ஆம் ஆண்டிற்கான நகரசபைத் தேர்தலில் வரலாறு படைத்த முதற் கனடியத் தமிழ்ப் பெண்மணி செல்வி யுணிற்றா நாதன் ஆவார். மார்க்கம் 7ஆம் ஆம் வட்டாரத்தில் இடம் பெற்ற நகரசபைத் தேர்தலில் பாரிய அளவில் வாக்குகளைப் பெற்று பாடசாலைச் சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட இவர் திசம்பர் ஆம் திகதி தனது பதவியேற்பு உறுதிமொழியை (சத்தியப் பிரமாணம்) எடுத்துக் கொண்டார். வாழ்வியலின் வழிமுறைகளை வளமுடன் கூறும் 1330 குறள்களைக் கொண்ட திருவள்ளுவரின் திருக்குறளின் மீது இவர் உறுதிமொழி எடுத்துக் கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது; உளமாறப் பாராட்டப் படக்கூடியது.

மார்க்கம் கல்விச் சபை உறுப்பினர்கள், பாடசாலைச் சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர், அவர்களது உறவினர்கள் நண்பர்கள் ஆகியோர் இந் நிகழ்வில் பங்கு கொண்டனர். "என்மீது நம்பிக்கை கொண்டு என்னைத் தெரிவு செய்த பெற்றோர், மார்க்கம் வாழ் மக்கள் அனைவருக்கும் நன்றியுடன் இருப்பதுடன் என்மீது நீங்கள் அனைவரும் வைத்துள்ள நம்பிக்கையினை எனது ஆதாரமாகக் கொண்டு என்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு ஒரு சிறந்த கல்விச் சூழலை ஏற்படுத்துவேன். அதுமட்டுமல்லாது எங்கள் சமூகத்தினைச் சேர்ந்த பெற்றோருக்கும் பாடசாலைச் சமுகத்தினருக்கும் ஓர் நல்லுறவினையும் தொடர்பினையும் ஏற்படுத்த நான் ஒரு பாலமாக இருப்பேன்" என தனது உரையில் செல்வி யுணிற்றா நாதன் குறிப்பிட்டார்.

செல்வி யுணிற்றா நாதன் 60% உம் அதிகமான வாக்குகளினால் இத் தேர்தலில் வெல்வதற்குக் காரணமாக இருந்தது எமது சமுகத்தினரிடம் மட்டுமல்லாது, பல்லின சமுகத்தினரிடையேயும் அவருக்கு இருந்த மதிப்பும் அனைவருக்கும் உதவும் சேவை மனப்பான்மையுமே என்றால் மிகையாகாது. "பல்லின சமுகத்தினராலும் யுணிற்றா நாதன் அடையாளம் காணப்படுவதும் தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி பலருக்கும் உதவிக் கரங்களை நீட்டி எந்த நேரத்திலும் உதவும் பாங்குமே இவருடைய வெற்றிக்கு மூலகாரணம்" என மார்க்கம் வாழ் சமூக சேவகியுமான மீனா லகானி குறிப்பிட்டார்.

நான்கு ஆண்டு சேவைக் காலத்தினைக் கொண்ட இப்பதவி நவம்பர் 30, 2014ல் முடிவடையும். இப்பதவிக் காலத்தில் இதற்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் கல்வி சம்பந்தமான மாற்றங்கள், படிமுறைகள், கல்வித் தரம் போன்ற விடயங்களிலும் மற்றும் வெவ்வேறு சமுகத்தவர்களுக்கும் கல்விச் சபைக்கும் ஒரு பாலமாகவும் செயல்படுபவர்கள்.

இந்தத் தருணத்தில் கனடா தமிழ்ப் பெண்மணி செல்வி யுணிற்றா நாதன் அவர்களுக்கு மலேசியத் தமிழர்கள் சார்பில் மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்தையும் 'திருத்தமிழ்' தெரிவித்துக்கொள்கிறது.

  • நன்றி: தமிழ்ச்செய்தி

Wednesday, November 03, 2010

செம்மொழி அகவைத் திருத்தக் கோரிக்கை இந்தியத் தூதரிடம் கையளிப்பு

தமிழ் செம்மொழி அகவை திருத்த ஆய்வுக் குழுவின் கோரிக்கை இன்று (3-11-2010) காலை மணி 11.00 அளவில் இந்தியத் தூதரிடம் வழங்கப்பட்டது. ஆய்வுக் குழுவின் தலைவர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம், ஆய்வுக் குழுவின் துணைத்தலைவர் கவிஞர் பாதாசன், ஒருங்கிணைப்பாளர் டாக்டர் வி.சுப்பையா ஆகியோர் இந்தியத் தூதரைச் சந்தித்து ஆய்வுக்குழுவின் கோரிக்கையை விளக்கிக் கூறினர்.

மலேசியாவுக்கான இந்தியத் தூதர் விஜய் கோகலே, துணைத்தூதர் பி.என். ரெட்டி, கவுன்சிலர் திருமதி பூஜா ஆகியோர் ஆய்வுக் குழுவினர் முன் வைத்து விளக்கிய கோரிக்கையைச் செவி மடுத்தனர்.

தொடர்ந்து இந்தியத் தூதர் விஜய் கோகலே இந்திய அரசின் சார்பான தமது கருத்துகளைக் கூறினார்.

“தமிழ் மொழியின் வயதை ஆயிரம் ஆண்டு என்று இந்திய நடுவண் அரசு கூறவில்லை. இந்திய செம்மொழிகளின் குறைந்தபட்ச தொன்மை 1000 ஆண்டு என்றுதான் இந்திய அரசு கூறியுள்ளது. தமிழில் உள்ள சங்க இலக்கியங்கள் பற்றியும் அதன் தொன்மை பற்றியும் இந்திய அரசுக்குத் தெரியும். இந்திய செம்மொழிகளின் குறைந்த பட்ச தொன்மை ஆயிரம் ஆண்டு என்று கூறி முதன் முறையாகத் தமிழைச் செம்மொழி என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. இதைப் பற்றித் தமிழர்கள் பெருமைப்படுவதோடு மன நிறைவும் அடைய வேண்டும்”, என்றார் தூதுவர்.

தமிழ் 2000 ஆண்டுகளுக்கு முந்திய செம்மொழி என்று யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்திருக்க இந்திய நடுவண் அரசு ஆயிரம் ஆண்டு என்று ஏன் அறிவிக்க வேண்டும் என்று கேட்டதற்கு, “அது இந்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட விஷயம். அதைப் பற்றி இந்தியாவுக்கு வெளியில் இருப்பவர்கள் பேசுவது சரியல்ல”, என்றார்.

தமிழை ஆயிரம் ஆண்டுக்கும் உட்பட்ட செம்மொழி என்று அறிவித்த காரணத்தால் அது இந்திய அரசின் கல்வி அமைச்சின் கீழ் வராமல் பண்பாட்டு அமைச்சின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ் அதன் வளர்ச்சிக்குப் போதுமான அரசு மான்யம் பெற முடியமால் போகலாம் என்று குழுவினர் கருத்து தெரிவித்தனர்.

அப்போது, “எந்த மொழிக்கு எவ்வளவு நிதி ஒதுக்குவது என்பதும் நடுவண் அரசின் அதிகாரத்துக்கு உட்பட்ட விஷயம். அதன் அதிகாரத்தில் மற்றவர்கள் தலையிட முடியாது”, என்று தூதுவர் கூறினார். தொடர்ந்து,

“எங்கள் கோரிக்கையை இந்திய நடுவண் அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் அனுப்பி வையுங்கள். அவர்களின் எதிரொலியை அறிந்த பின்பு நாங்கள் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றிச் சிந்திப்போம்” என்று குழுவினர் கூறினர்.

”இன்று இந்தச் சந்திப்பு குறித்து தமிழக அரசுக்கு நாங்கள் அறிவித்துவிட்டோம். உங்கள் கோரிக்கையை உரியவர்களிடம் கட்டாயம் சேர்ப்பிப்போம்”, என்று தூதுவர் கூறினார்.

பின்னர் செய்தியாளர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தபோது மலேசியத் தமிழ் சார்ந்த அமைப்புகளின் பொறுப்பாளர்களையும் தமிழ் அறிஞர்களையும் கொண்ட புதிய அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு நமது கோரிக்கைகள் மீது இந்திய நடுவண் அரசு, தமிழ்நாடு அரசு ஆகியவற்றின் நிலைப்பாடுகள் ஆராயப்படும் என்றும் அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்குச் செல்வோம் என்று தமிழ் செம்மொழி அகவை திருத்த ஆய்வுக் குழுவின் தலைவர் முனைவர் நாகப்பன் கூறினார்.

தொடர்பான செய்திகள்:-

Thursday, October 21, 2010

மலேசியாவில் தமிழ் அகவை திருத்த மாநாடு

மலேசியத் தமிழர்களாகிய நாங்கள் தமிழ் செம்மொழி மீதிலான எங்கள் கோரிக்கையை இந்திய நடுவண் அரசு, தமிழக அரசு, மலேசியாவில் இந்தியத் தூதரகம், யுனெஸ்கோ ஆகிய அமைப்புகளுக்கு இதன் வழி முன் வைக்கிறோம்.


Saturday, October 09, 2010

தமிழ் அகவைத் திருத்த மாநாடு

தமிழைச் செம்மொழியாக அறிவித்திருக்கும் இந்திய நடுவண் அரசு, தமிழின் தொன்மையை 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மலேசியாவில் ‘செம்மொழி அகவை திருத்த மாநாடு’ நடைபெறவுள்ளது. அது குறித்து நாளிகையில் வெளிவந்த செய்தி இது. -சுப.ந

கோலாலம்பூர் அக்.9
செம்மொழி எனும் தகுதிபெற்ற மொழியாக அறிவிக்கபட்டிருக்கும் தமிழ்மொழிக்கு இந்திய நடுவண் அரசு 1,500 ஆண்டுகள் எனும் வரையறையை, நாடு முழுவதுமுள்ள அரசியல் சாரா இந்திய அமைப்புகள் மறுத்துள்ளன.

அத்துடன், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது தமிழ் என்று அந்த வரையறையில் உடனடியாக திருத்தம் செய்ய வேண்டும் என்றும் அந்த இயக்கங்களின் சார்பில் அமைக்கப்பட்ட ‘செம்மொழி அகவை திருத்தக் குழுவின்’ தலைவர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் இந்திய நடுவண் அரசைக் கேட்டுக்கொண்டார்.

இதன் தொடர்பாக மாநாடு ஒன்று அக்டோபர் 24ஆம் நாளன்று காலை மணி 9:00 முதல் பகல் 1:00 மணி வரைக்கும், கோலாலம்பூர் ஜாலான் ஈப்போ மூன்றரை மைலில் உள்ள முத்தியாரா காம்பிளக்சு மண்டபத்தில் நடைபெறும். தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் இந்த மாநாட்டிற்குத் திரளாக வருகை தந்து தமிழுக்கு உதவும்படி அவர் கேட்டுகொண்டார்.

இதன் தொடர்பில் முனைவர் ஆறு.நாகப்பன் கூறியதாவது:-

கி.மு1,200 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஆரிய வேதங்களில் தூய தமிழ்ச்சொற்கள் உள்ளன.

எகிப்திய மொழி, பாபிலோனிய மொழி, ஏபிரேய மொழி, அரபு மொழிகளில் பழந்தமிழ் சொற்கள் கலந்துள்ளன. இவ்வாறு தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் தமது தமிழ் வரலாறு எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சங்கங்களில் முதற் சங்கம், இடைச் சங்கம் ஆகியன பற்றி அறிவியல் சார்ந்த முடிவுகள் இல்லையென்றாலும், சங்கப்பாடல்கள் கி.மு.500 முதல் கி.மு100 வரையிலானது என்று முனைவர் மு.வரதராசனார் தமிழ் இலக்கிய வரலாறு எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். இதனைக் கவனத்தில் கொண்டால், இலக்கியப் பொலிவு நிறைந்த சங்கப் பாடல்களின் அகவை 2,500 ஆண்டுகளைக் கடக்கிறது.

இக்காலத்தில் தொல்காப்பியம் எனும் தெளிந்த தமிழ் இலக்கண நூல் எழுந்துள்ளது. இலக்கணத் தெளிவு அமைவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே மொழி தோன்றி வளர்ந்திருக்க வேண்டும் எனும் மொழியியல் கொள்கையை உளம் கொண்டால், தமிழின் தொன்மை 3,000 ஆண்டுகளுக்கு அப்பாற்பட்டது என்பது அறிவு சார்ந்த முடிவே ஆகும்.

திருவள்ளுவர் ஆண்டினைக் கணக்கிட்ட மறைமலை அடிகள் தலைமையிலான குழு திருவள்ளுவர் காலம் இன்றைக்கு 2041 என்று குறித்துள்ளனர்.

உலகச் செம்மொழிகள் பற்றிய ஆய்வினை மேற்கொண்ட யுனேசுகோ நிறுவனம் தமிழ் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட செம்மொழி என்று ஒப்புக்கொண்டுள்ளது.

தமிழின் அகவையை 1,500 ஆண்டுகள் என்று குறித்திருக்கும் இந்திய நடுவண் அரசின் முடிவால், யுனேசுகோ நிறுவனம் அதன் உலகச் செம்மொழி வரிசையிலிருந்து தமிழை நீக்கி விடுவதோடு தமிழுக்கு வழங்கிய தகுதிப்பாடுகளை மீட்டுக்கொள்ளவும் முடிவு செய்யலாம்.

இந்தியச் செம்மொழிகள் நடுவண் அரசின் கல்வி அமைச்சக நிதி உதவிகளைப் பெறும் நிலையில், தமிழ் மட்டும் பண்பாட்டு அமைச்சின் கீழ் வைக்கப்பட்டுள்ளதால் தமிழ் மிகச் சிறிய னிதி ஒதுக்கீட்டையே பெறுகிறது.

உதாரணத்திற்கு, சமஸ்கிருதம் 1,400 கோடி ரூபாய் னிதி ஒதுக்கீட்டைப் பெற்றிருக்கிறது. ஆனால், தமிழ் 3 கோடியே 32 இலட்சம் ரூபாய் மட்டுமே பெற்றுள்ளது.

மேலும், தமிழர் புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழின் நிலை அழியும். அங்குள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் ஆய்வுகள் நலிவடையும். அதோடு மட்டுமல்லாமல், தமிழ் திராவிட குடும்பத்தின் தாய் என்ற தகுதியை இழக்கும் அபாயம் நேரிடும்.

எனவே, நடுநிலை மொழி அறிஞர்களின் கருத்தை ஏற்றுத் தமிழின் தொன்மையை 3,000 ஆண்டுகளுக்கு முந்தியது என்று அறிவிப்பதோடு, இந்தியக் கல்வி அமைச்சின் கீழ் செம்மொழித் தமிழை வைத்து செம்மொழி விதிமுறைகளின் கீழ் உள்ள தகுதிபாடுகளை தமிழுக்கு அளிக்க வேண்டும்.

(மக்கள் ஓசை நாளிகை (8.10.2010) செய்தி)

இதனை உடனடியாகச் செயல்படுத்த வேண்டி இந்திய நடுவண் அரசிற்கும், தமிழக அரசிற்கும், யுனேசுகோ நிறுவனத்திற்கும் மிக விரைவில் மலேசியாவிலுள்ள இந்தியத் தூதரகத்தில் மகஜர் வழங்கப் போவதாக அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் திரண்டு வந்து இம்மாநாட்டில் கலந்து ஆதரவு வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

இம்மாநாட்டில் நாடு தழுவிய அளவில் செயல்படும் 170 தமிழ் பொது இயக்கங்கள் கலந்துகொள்ளும்.

மேல் விவரங்களுக்கு முனைவர் ஆறு.நாகப்பன் (016-9691090), பாதாசன் (019-2401943), சு.வேலுசுப்பிரமணியம் (013-696-4593) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.

  • நன்றி: மலேசிய நண்பன் (9-10-2010)

Wednesday, October 06, 2010

மலேசியத் தமிழர் வாழ்வியல் மாநாடு 2011

மலேசியாவில் தமிழர்களின் வரலாறு ஆய்வு செய்யப்படவேண்டும் என்ற அடிப்படை நோக்கத்திற்க்காக, மலேசியத் தமிழர் வாழ்வியல் மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மலேசியாவிற்குத் தமிழர்கள் வந்த காலம், மற்றும் தொடர்ந்து மலேசியாவின் மேம்பாட்டிற்குத் தமிழர்கள் ஆற்றிய பங்கு குறித்தும் மாநாட்டில் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படும். கடாரம் கண்டான் இராஜேந்திர சோழன் என்று பெருமையாகப் பேசிக் கொள்ளும் நாம், நம் எதிர்கால சந்ததியினர் விளங்கிக் கொள்வதற்காக என்ன முயற்சிகளை மேற்கொண்டோம் என்பது பரவலான கேள்விக் குறியாக இருக்கிறது.

நம்முடைய எழுத்தாளர்கள் பல ஆய்வு கட்டுரைகளையும் கதைகளயும் எழுதி இருக்கிறார்கள். பல்கலைகழத்தில் பட்டப்படிப்பிற்காக ஆய்வுக் கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால், அக்கட்டுரைகள் தமிழர்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படவில்லை. ஈப்போ க.கலைமுத்து கடுமையாக முயற்சி செய்து நூல் ஒன்றை வெளியிட்டிருகிறார். எழுத்தாளர் சந்திரகாந்தம், ஜப்பானியர் காலத்தில் தமிழர்களின் வாழ்க்கை குறித்து கிள்ளான் அருண், கோல சிலாங்கூர் குணநாதன், இப்படி சிலர் நூல்களை வெளியிட்டிருக்கின்றனர். இப்படி எழுதப்பட்ட நூல்கள் மக்களின் பார்வைக்குப் பரவலாக கொண்டு வரப்படவிலை.

ஆங்கிலேயர்கள் நம்மை சஞ்சிக் கூலிகளாகக் கொண்டு வந்தார்கள் என்ற கதைகள் தான் நம் முன்னே காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இது மட்டும் நமது வரலாறு இல்லை என்பதை உணரவேண்டும். இதற்கு முந்தைய நீண்ட வரலாறு நமக்கு உண்டு. அதற்காகத்தான் இம்மாநாடு கூட்டப்படுகிறது.

மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையுடன் இணந்து மலேசியாவிலுள்ள தமிழர் அமைப்புகளின் கூட்டு அமைப்பான மலேசியத் தமிழ்க் காப்பகம் ஆய்வியல் மாநாட்டை 2011 சனவரித் திங்கள் 22 & 23 ஆகிய நாட்களில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கோலாலம்பூரிலுள்ள மலாயப் பல்கலைக்கழத்தில் நடத்த திட்டமிடப் பட்டுள்ள இம்மாநாட்டில் மொத்தம் 24 ஆய்வு கட்டுரைகள் இடம் பெறவுள்ளன. பல்கலைக்கழக மாணவர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் அனைவரும் பேராளர்களாகக் கலந்துக் கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதாக மாநாடு ஏற்பாட்டுக் குழுத்தலைவரும் மலேசியத் தமிழ் மணி மன்றத்தின் தேசியத் தலைவருமான சு.வை.லிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெர்வித்துள்ளார்.

மாநாட்டின் இணைத்தலைவராக மலாயாப் பல்கலைகழக இந்திய ஆய்வியல் துறையின் தலைவர் இணைப் பேராசிரியர் முனைவர் எஸ்.குமரன் பொறுப்பு வகிப்பார். மாநாட்டின் தலைமைச் செயலாளராக இந்திய ஆய்வியல் துறையின் முன்னாள் தலைவரும் இணைப் பேராசிரியருமான முனைவர் வே.சபாபதி பொறுப்பு வகிப்பார்.
மலேசியத் திராவிடர் கழகத்தலைவர் ரெ.சு.முத்தையா, மலேசிய தமிழ் நெறிக் கழகத்தின் தலைவர் இரா.திருமாளவன், மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றத்தலைவர் துரைசாமி, மலாக்கா தமிழர் சங்கத்தின் தலைவர் தொ.கா.நாராயணசாமி, பாரிட் புந்தார் தமிழ் வாழ்வியல் இயக்கத் தலைவர் க.முருகையன், சொகூர் தமிழர் சங்கத் தலைவர் ந.வேணுகோபால், பேரா மாநில எழுத்தாளர் சங்கத் தலைவர் இராம பெருமாள் ஆகியோர் உதவித் தலைவர்களாகவும்,

இந்திய ஆய்வியல் துறையின் விரிவுரையாளர் குமாரி இரா. சீத்தாலட்சுமி, ஆலமரம் வாரப் இதழின் ஆசிரியர் புலவர் முருகையன், மலேசிய இந்திய கலை கலாச்சார மன்றத்தின் மகளிர் பிரிவு தலைவர் திருமதி பத்மாவதி ஆகியோர் துணைச் செயலாளர்களாகவும் பொருளாளராக மலேசியத் தமிழ் மணி மன்றத்தின் டத்தோ செல்லக்கிருஷ்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

இணைப் பேராசிரியர் முனைவர் கிருஷ்ணன் மணியம், விரிவுரையாளர் த.மணிமாறன், விரிவுரையாளர் கோவி.சிவபாலன், மனித வளத்துறை அமைச்சைச் சார்ந்த நீலமேகன், திருத்தமிழ் வலைப்பதிவர் சுப.நற்குணன் பினாங்கு இந்திய மாணவர் பெற்றோர் சங்கத் தலைவர் ம.தமிழ்ச் செல்வன், திருக்குறள் பணிக் கழகத்தின் பண்டிட் இலக்குமனன், உலகத் தமிழ் மாமன்ற தலைவர் வீரா, கோலாலம்பூர் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர் காரைக் கிழார், மலேசியத் தமிழ் மணி மன்றத்தின் தேசியத் துணைத் தலைவர் கை.சிவப்பிரகாசம்,

மலேசியத் தமிழப் பாண்பாட்டு இயக்கத்தின் தலைவர் ப.கு.சண்முகம், மலேசிய இந்திய கலை கலாச்சார மன்றத்தின் தலைவர் ப.ஆனந்தன், சிரம்பான் கம்பன் கழகத்தின் செயலாளர் திருமதி துளசி அண்ணாமலை, தமிழாசிரியர் இலக்கிய கழகத்தின் தலைவர் ந.பச்சை பாலன், தமிழ் இலக்கிகழ்கத்தின் மா.கருப்பண்ணன், மற்றும் மூத்தச் செய்தியாளர் வே.விவேகானந்தன், அ.அலெக்சாண்டர், பி.பன்னிர் செல்வம், ஆர்.கணேசன் மலாயாப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரவையின் மாணவர் தலைவர் உ.உகேந்திரன், கிள்ளான் கோவி பெருமாள் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இது தவிர பல்வேறு துணைக்குழுக்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. குழுவில் பணியாற்ற விரும்பும் மற்ற இயக்கங்களையும் இணைத்துக் கொள்ளவும் முடிவு செய்யப் பட்டது.

மாநாடு பற்றிய விபரம் அறிய :-
முனைவர் வே.சபாபதி,
தலைமைச் செயலாளர்,
மலேசியத் தமிழர் வாழ்வியல் மாநாடு ஏற்பாட்டுக்குழு
இந்திய ஆய்வியல் துறை,
மலாயாப் பல்கலைக் கழகம், 50603 கோலாலம்பூர்


அகப்பக்க முகவரி:- tamizsemmozi.blogspot.com
மின்னஞ்சல் முகவரி:- vaiskru @yahoo.com
தொலைப்பேசி தொடர்பு:- சு.வை.லிங்கம் 019 6011569
முனைவர் சு.குமரன் 012 3123753
முனைவர் வே. சபாபதி 012 6754709

Blog Widget by LinkWithin