Saturday, October 09, 2010

தமிழ் அகவைத் திருத்த மாநாடு

தமிழைச் செம்மொழியாக அறிவித்திருக்கும் இந்திய நடுவண் அரசு, தமிழின் தொன்மையை 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மலேசியாவில் ‘செம்மொழி அகவை திருத்த மாநாடு’ நடைபெறவுள்ளது. அது குறித்து நாளிகையில் வெளிவந்த செய்தி இது. -சுப.ந

கோலாலம்பூர் அக்.9
செம்மொழி எனும் தகுதிபெற்ற மொழியாக அறிவிக்கபட்டிருக்கும் தமிழ்மொழிக்கு இந்திய நடுவண் அரசு 1,500 ஆண்டுகள் எனும் வரையறையை, நாடு முழுவதுமுள்ள அரசியல் சாரா இந்திய அமைப்புகள் மறுத்துள்ளன.

அத்துடன், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது தமிழ் என்று அந்த வரையறையில் உடனடியாக திருத்தம் செய்ய வேண்டும் என்றும் அந்த இயக்கங்களின் சார்பில் அமைக்கப்பட்ட ‘செம்மொழி அகவை திருத்தக் குழுவின்’ தலைவர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் இந்திய நடுவண் அரசைக் கேட்டுக்கொண்டார்.

இதன் தொடர்பாக மாநாடு ஒன்று அக்டோபர் 24ஆம் நாளன்று காலை மணி 9:00 முதல் பகல் 1:00 மணி வரைக்கும், கோலாலம்பூர் ஜாலான் ஈப்போ மூன்றரை மைலில் உள்ள முத்தியாரா காம்பிளக்சு மண்டபத்தில் நடைபெறும். தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் இந்த மாநாட்டிற்குத் திரளாக வருகை தந்து தமிழுக்கு உதவும்படி அவர் கேட்டுகொண்டார்.

இதன் தொடர்பில் முனைவர் ஆறு.நாகப்பன் கூறியதாவது:-

கி.மு1,200 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஆரிய வேதங்களில் தூய தமிழ்ச்சொற்கள் உள்ளன.

எகிப்திய மொழி, பாபிலோனிய மொழி, ஏபிரேய மொழி, அரபு மொழிகளில் பழந்தமிழ் சொற்கள் கலந்துள்ளன. இவ்வாறு தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் தமது தமிழ் வரலாறு எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சங்கங்களில் முதற் சங்கம், இடைச் சங்கம் ஆகியன பற்றி அறிவியல் சார்ந்த முடிவுகள் இல்லையென்றாலும், சங்கப்பாடல்கள் கி.மு.500 முதல் கி.மு100 வரையிலானது என்று முனைவர் மு.வரதராசனார் தமிழ் இலக்கிய வரலாறு எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். இதனைக் கவனத்தில் கொண்டால், இலக்கியப் பொலிவு நிறைந்த சங்கப் பாடல்களின் அகவை 2,500 ஆண்டுகளைக் கடக்கிறது.

இக்காலத்தில் தொல்காப்பியம் எனும் தெளிந்த தமிழ் இலக்கண நூல் எழுந்துள்ளது. இலக்கணத் தெளிவு அமைவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே மொழி தோன்றி வளர்ந்திருக்க வேண்டும் எனும் மொழியியல் கொள்கையை உளம் கொண்டால், தமிழின் தொன்மை 3,000 ஆண்டுகளுக்கு அப்பாற்பட்டது என்பது அறிவு சார்ந்த முடிவே ஆகும்.

திருவள்ளுவர் ஆண்டினைக் கணக்கிட்ட மறைமலை அடிகள் தலைமையிலான குழு திருவள்ளுவர் காலம் இன்றைக்கு 2041 என்று குறித்துள்ளனர்.

உலகச் செம்மொழிகள் பற்றிய ஆய்வினை மேற்கொண்ட யுனேசுகோ நிறுவனம் தமிழ் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட செம்மொழி என்று ஒப்புக்கொண்டுள்ளது.

தமிழின் அகவையை 1,500 ஆண்டுகள் என்று குறித்திருக்கும் இந்திய நடுவண் அரசின் முடிவால், யுனேசுகோ நிறுவனம் அதன் உலகச் செம்மொழி வரிசையிலிருந்து தமிழை நீக்கி விடுவதோடு தமிழுக்கு வழங்கிய தகுதிப்பாடுகளை மீட்டுக்கொள்ளவும் முடிவு செய்யலாம்.

இந்தியச் செம்மொழிகள் நடுவண் அரசின் கல்வி அமைச்சக நிதி உதவிகளைப் பெறும் நிலையில், தமிழ் மட்டும் பண்பாட்டு அமைச்சின் கீழ் வைக்கப்பட்டுள்ளதால் தமிழ் மிகச் சிறிய னிதி ஒதுக்கீட்டையே பெறுகிறது.

உதாரணத்திற்கு, சமஸ்கிருதம் 1,400 கோடி ரூபாய் னிதி ஒதுக்கீட்டைப் பெற்றிருக்கிறது. ஆனால், தமிழ் 3 கோடியே 32 இலட்சம் ரூபாய் மட்டுமே பெற்றுள்ளது.

மேலும், தமிழர் புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழின் நிலை அழியும். அங்குள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் ஆய்வுகள் நலிவடையும். அதோடு மட்டுமல்லாமல், தமிழ் திராவிட குடும்பத்தின் தாய் என்ற தகுதியை இழக்கும் அபாயம் நேரிடும்.

எனவே, நடுநிலை மொழி அறிஞர்களின் கருத்தை ஏற்றுத் தமிழின் தொன்மையை 3,000 ஆண்டுகளுக்கு முந்தியது என்று அறிவிப்பதோடு, இந்தியக் கல்வி அமைச்சின் கீழ் செம்மொழித் தமிழை வைத்து செம்மொழி விதிமுறைகளின் கீழ் உள்ள தகுதிபாடுகளை தமிழுக்கு அளிக்க வேண்டும்.

(மக்கள் ஓசை நாளிகை (8.10.2010) செய்தி)

இதனை உடனடியாகச் செயல்படுத்த வேண்டி இந்திய நடுவண் அரசிற்கும், தமிழக அரசிற்கும், யுனேசுகோ நிறுவனத்திற்கும் மிக விரைவில் மலேசியாவிலுள்ள இந்தியத் தூதரகத்தில் மகஜர் வழங்கப் போவதாக அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் திரண்டு வந்து இம்மாநாட்டில் கலந்து ஆதரவு வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

இம்மாநாட்டில் நாடு தழுவிய அளவில் செயல்படும் 170 தமிழ் பொது இயக்கங்கள் கலந்துகொள்ளும்.

மேல் விவரங்களுக்கு முனைவர் ஆறு.நாகப்பன் (016-9691090), பாதாசன் (019-2401943), சு.வேலுசுப்பிரமணியம் (013-696-4593) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.

  • நன்றி: மலேசிய நண்பன் (9-10-2010)

2 comments:

Unknown said...

மலேசியாவிலிருந்து கேட்கப்படுகிறது கேள்வி...
தமிழ்நாட்டில் மௌனம் மட்டுமே!!

munril said...

'தமிழ்' என்ற சொல் இற்றைக்கு 2300 ஆண்டுகளுக்குரியது என்று பெரும்பான்மை அறிவியலாளர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.சிறுபான்மை எழுத்தாளர் அதையும் மறுக்கின்றனர். ஆனால் 3000 ஆண்டுகளென மறைமலையடிகளின் தமிழறிஞர் குழு முடிவுசெய்ததை நாம் அறிந்து கொள்ளல் வேண்டும். அண்மையில் (அப்துல் கலாம்) அவர்கள் புறநாநூற்றின் படலைக் கூறி அப்பாடல் 3000 ஆண்டுகளுக்கு முந்தியது என்று குறிப்பிட்டார். அதையடுத்தே சிந்து(இந்திய) நடுவண் அரசு தமிழரை இழிவுபடுத்தும் நோக்கில் ஆய்வில் இறங்கியுள்ளது. 'தமிழ்' என்ற சொல்லே 2300 ஆண்டுகாலமென முடிவானாலும் அது கொண்டுள்ள சொற்கள் 10,000 ஆண்டு காலத்துக்குரியது என்பதை நாம் ஆங்கிலேயரோடு சேர்ந்து ஆய்வு செய்வதன் மூலம் தான் சிந்தியாவின்(இந்தியா) வாயை அடைக்கமுடியும். மடமை நீக்கும் மன்றமே எழுவாய்.
நன்றியன்பன்
_ச.உதயன்.

Blog Widget by LinkWithin