Wednesday, November 18, 2009

2012 திரைப்படமும் தமிழரின் தாயகம் குமரிக்கண்டமும் (பாகம்1)


2012 திரைப்படத்தின் காட்சிகள் மறைந்த தமிழர் தாயகமாம் குமரிக்கண்டத்தின் பேரழிவை எனக்குக் கண்முன் கொண்டுவந்து காட்டியதாகக் கடந்த பதிவில் எழுதியிருந்தேன். (அதனைப் படிக்க இங்கு சொடுக்கவும்) அதற்கு, அன்பர் நீலகண்டன் இவ்வாறு மறுமொழி எழுதியிருந்தார்.

//அறிவியல் ரீதியில் குமரி கண்டம் என்பது நிரூபிக்கப்படாத ஒரு விடயம். அஃது ஆழிப் பேரலையால் அழிந்துபோனது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இல்லை.//

//தமிழுணர்வு இருத்தல் அவசியம், அதற்காக சரித்திரத்தை உண்மைக்குப் புறம்பாக திரித்து கூறுவதால் அது மனித வரலாற்றிற்கே ஏற்பட்ட கலங்கமென அறிக.//

எனவே, குமரிக்கண்டம் பற்றி அறிஞர் பெருமக்கள் கண்ட சான்றுகளை முன்வைக்க வேண்டும் என்று நினைத்தேன். அதுதான் இந்தக் கட்டுரை. இதன் மூல வடிவத்தை மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் எழுதிய ‘தமிழர் வரலாறு’ எனும் நூலில் காணலாம்.

மறைந்த குமரிக்கண்டம் (Lost Lemuria) என்னும் ஆங்கில நூலின்படி, ஒரு பெருமலையானது மேலைக் கடலில் தொடங்கி வடக்கும் தெற்குமாகக் குமரிக்குத் தென்பகுதிலுள்ள நிலப்பகுதியில் நெடுந்தொலைக்கு இருந்துள்ளது. இது தென்மேற்காகத் திரும்பி ‘மடாகாசுக்கர்’ (Madagascar) என்ற ஆப்பிரிக்கத் தீவுவரை சென்றதாகத் தெரிகிறது. அம்மலைக்குக் கீழ்ப்பக்கம் உள்ள நாட்டில் (இன்றைய இமயமலைப் போன்ற) பெருமலைத் தொடர் ஒன்று இருந்ததாகத் தெரிகிறது. இந்தச் செய்தியை சிலப்பதிகாரத்தின் துணைகொண்டு பேரா.கா.சுப்பிரமணியப்பிள்ளை அறிவிகின்றார்.

இன்றைய இலங்கைக்குத் தெற்கில் முழுகிப்போன குமரிக்கண்டம் என்னும் நிலப்பகுதி ஏறத்தாழ 2500 கல் தொலைவுக்கு நீண்டிருந்தது என்றும், அதன் மேற்குப் பகுதி நெடுகிலும் மேற்சொன்ன பெருமலைத்தொடர் அமைந்திருந்ததாக அறியப்படுகிறது.

“முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி”
என்று நெட்டிமயாரும் (புறம்.9)

“பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும்”
என்று இளங்கோவடிகளும் (சிலப்.11:19-20) பாடியிருப்பதால், குமரிக்கண்டமும் அதன் தென்கோடியின் மலைப்பகுதியிலிருந்த குமரி மலைத்தொடரும், அதிலிருந்து உருவாகி பாய்ந்தோடிய பஃறுளி ஆறும் கட்டுக் கதையோ அல்லது பொய்ப் புரட்டோ அல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது.

“தொடியோள் பௌவமும்” என்னும் சிலப்பதிகாரத் தொடரின் உரையில், அடியார்க்குநல்லார் குமரிக்கண்டப் பகுதியைப் பற்றி இவ்வாறு கூறியிருக்கிறார். “தென்பாலி முகத்திற்கு வட எல்லையாகிய பஃறுளி என்னும் ஆற்றுக்கும் குமரி எனும் ஆற்றுக்கும் இடையே ஏழ்தெங்கு நாடு, ஏழ்மதுரை நாடு, ஏழ்முன்பாலை நாடு, ஏழ்பின்பாலை நாடு, ஏழ்குன்ற நாடு, ஏழ்குணக்காரை நாடு, ஏழ்குறுப்பனை நாடு என்னும் 49 நாடுகளும், குமரி, கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடு, நதி அனைத்தும் விளங்கின”. இவ்வாறு குமரிநாட்டைப்பற்றி பகுத்துக் கூறப்பட்டிருப்பது கட்டுச்செய்தியாக இருக்க முடியாது.


“காலமுறைபட்ட உண்மைகளைக் கொண்டு, இன்றைய தென்கிழக்காசியத் (மலையத்) தீவுக்கூட்டம் முற்றிலும் வேறுபட்ட இருபகுதிகளைக் கொண்டது. போர்னியோ (Borneo), சாவா (Jawa), சுமத்திரா (Sumatra) என்னும் பெருந்தீவுகளைக் கொண்ட மேலைப் பிரிவாகிய இந்தோ – மலையத் தீவுக்கூட்டம், முன்காலத்தில் மலாக்காவினால் ஆசியாக் கண்டத்தோடு இணைக்கப்படிருந்தது. ஒருகால், சற்று முந்திக் கூறிய குமரிக்கண்டத்தோடும் அது இனைக்கப்பட்டு இருந்திருக்கலாம். இதற்கு மாறாக, செலிபிசு(Selibis), மொலுக்காசு, நியுகினியா, சாலோமான் தீவுகள் முதலியவற்றைக் கொண்ட கீழைப் பிரிவாகிய ஆத்திரேலிய – மலையத் தீவுக்கூட்டம், முன்காலத்தில் ஆத்திரேலியாவுடன் நேரே இணைக்கப்பட்டிருந்தது” (Castes and Tribess of Southern India Vol.1.p20,21) என்ற நூல் இதனைக் குறிக்கின்றது.

செடிகொடிகளாலும் விலங்குகளினாலும் ஆப்பிரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் மிகப் பழங்காலத்திலேயே இருந்த மிக நெருங்கிய ஒற்றுமைகளைக் கண்டிபிடித்த ஓல்டுகாம் என்பவர், முன்காலத்தில் தென் ஆப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைக்கும் ஒரு நீண்ட நிலப்பரப்பு இருந்தது என முடிவு செய்கின்றார்.

“இந்தியர்க்குப் பெயரே தெரியாத சில பழங்காலத்து மாபெரிய பப்பரப்புளி அல்லது யானைப்புளி அல்லது மேனாட்டுச் சீமைப்புளி (Baobab) என்னும் ஆப்பிரிக்க மரங்கள், இந்தியத் தீபகற்பத்தின் (Peninsula) தென்கோடியில் இருந்திருக்கின்றன. அவை, அயல்நாட்டு வணிகம் நடந்துவந்த சில துறைமுகங்களில் அதாவது குமரிமுனை அருகிலுள்ள கோட்டா ஆற்றிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் தூத்துக்குடி அருகில் இன்னும் இருக்கின்றன” என்ற செய்தியை கால்டுவெல் பதிவு செய்திருக்கிறார்.

இப்படியாக, தமிழ் இலக்கிய நூல்களிலும் மேலை நாட்டவர் ஆய்வு நூல்களிலும் குமரிக்கண்டத்தைப் பற்றிய குறிப்புகள் சான்றுகளாக நிலைபெற்று இருக்கின்றன. இவற்றின் அடிப்படையில், குமரிக்கண்டத்தின் நிலைமை நான்கு படிநிலைகளைக் கடந்து வந்துள்ளதாக அறிய முடிகிறது. அவை:-

1.ஆப்பிரிக்காவோடும் ஆத்திரேலியாவோடும் கூடிய பழம் பாண்டிநாடு
2.ஆப்பிரிக்கா நீங்கிய பழம் பாண்டிநாடு
3.ஆத்திரேலியாவும் நீங்கிய பழம் பாண்டிநாடு
4.சிறிது சிறிதாய்க் குறைந்துவந்த பழம் பாண்டிநாடு


மேலே சொல்லப்பட்ட அனைத்தையும் ஒட்டுமொத்தமாகக் கட்டுக் கதைகளென ஒதுக்கிவிட முடியாது. குமரிக்கண்டம் பற்றிய அரிய செய்திகள் பல தமிழ் இலக்கியத்திற்கும் தமிழ் மக்களுக்கும் சொந்தமானதாக இருப்பதால் அவை இன்னமும் தீவிர ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் இருப்பதாக ஒரு கருத்தும் நிலவுகிறது.

வரலாற்றை உண்மைக்குப் புறம்பாகத் திரித்துக் கூறுவது மாபெரும் கலங்கம் என்ற கூற்றில் நம்பிக்கை உள்ளவர்கள் குமரிக்கண்ட ஆராய்ச்சியைத் தீவிரப்படுத்த வேண்டும். முறைசெய்யப்பட்ட நேர்மையான ஆய்வுக்குக் உட்படுத்தப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்.

அப்போதுதான் 2012 படத்தில் நிகழும் பேரழிவை ஒத்ததான பாரியதோர் அழிவு குமரிக்கண்டத்திலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நிகழ்ந்த உண்மை தமிழ் இலக்கிய ஏடுகளிலிருந்து பெயர்த்தெடுக்கப்பட்டு, உலக வரலாற்று ஏட்டில் பொறிக்கப்படும்.

Tuesday, November 17, 2009

2012 படம்.. தமிழருக்குச் சொல்கிறது ஒரு பாடம்

ஒட்டுமொத்த உலகமே எதிர்ப்பார்த்திருந்த படம்தான் 2012. இப்போது வெளிவந்து உலகத்தையே கதிகலங்க வைத்துக்கொண்டிருக்கிறது.

இப்படியொரு பேரழிவு பூமிப் பந்தைப் புரட்டிப்போட்டுவிடுமா? என்ற ஒரு மெல்லிய அச்சத்தைப் படம் பார்ப்பவர் உள்ளத்தில் விதைத்துவிட்டுப் போகிறது 2012.


உலகம் இதுநாள்வரையில் கண்டிராத மிகப் பூதாகாரமான படமாக இதனைத் துணிந்து சொல்லலாம். கணினி வரைகலைகள் (கிராபிக்சு), ஒளி – ஒலி புதுமைகள், விறுவிறுப்பான படத்தொகுப்பு, வாய்ப்பிளக்க வைக்கும் காட்சியமைப்பு, ‘உச்சு’க்கொட்ட வைக்கும் நச்சென்ற உரையாடல், நெஞ்சத்தை உருக்கும் பாத்திரங்கள், சிரிப்புக்கும் சில இடங்கள் என அனைத்து கோணத்தையும் கவனமாகச் செதுக்கி சிறந்த ஒரு திரைப்படத்தை வழங்கியிருக்கிறார் ரோலண் எமரிச்சு (Rolland Emmerich).

படம் தொடங்கியது முதற்கொண்டு இறுதி வரையில் பார்வையாளரைக் கட்டிப்போட்டு விடுகிறது படம். ஒவ்வொரு காட்சியிலும் அடுத்த கட்டத்தை நோக்கி பார்ப்பவர் மனம் எம்பி ஓடிக்கொண்டே இருக்கும் அளவுக்கு கொஞ்சமும் விறுவிறுப்பு குறையாமல் சூறாவளி வேகத்தில் படம் பறக்கிறது.

அப்பாடா என்று பெருமூச்சு விடும்போது ஐயோ என்று அலறவைக்கின்றன சில காட்சிகள்... ஐயோ என திடுக்கிடும் இடங்களில் அப்பாடா என்று ஆறுதல் தருகின்றன சில காட்சிகள்..!

இப்படியாக, 2012 படத்தில் வரும் காட்சிகள் தமிழர்களுக்கு ஒரு பாடத்தைச் சொல்கிறது.. அதுவும் வரலாற்றுப் பாடம்!

என்ன உங்கள் நெற்றியை மடித்துக்கொண்டு புருவங்கள் மேலே ஏறுகின்றன..! தொடருங்கள்..!

2012 திரைப்படக் காட்சிகள், தமிழ் வரலாற்றில் படித்த குமரிக்கண்ட அழிவை என் கண் முன்னால் கொண்டுவந்து நிறுத்தியது.

“குமரிக்கண்டமா! அது என்ன?” என்று சிலர் வினவக்கூடும்..!


உலகின் முதன் மாந்தன் தோன்றிய மண் குமரிநாடு. அதுவே தமிழரின் முதலாவது தாய்மண். அங்கு பழந்தமிழர்கள் 49 நாடுகளைக் கட்டியெழுப்பி ஆட்சி செய்தனர். குமரிக்கண்ட மாந்தன் பேசிய மொழிதான் தமிழ்.

இறையனார் களவியலுரையிலும் இளம்பூரனார் தொல்காப்பிய உரையிலும் இன்னும் பிற இலக்கியங்களிலும் குமரிக்கண்டம் பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. குமரிநாடு பற்றிய வரலாற்றுக் குறிப்புகளுள் ஒன்று இது:-

“முதன்முதலில் குளிர்ந்தது உலகின் மேற்பரப்பே. அந்நிலம் தமிழ் நிலமே. அப்பகுதி அப்படி முதல் நிலமாக அமையக்காரணம் உலகின் நடுக்கோட்டிற்கு அணித்தாய் இருந்தமையே. அம்முதல் நிலமே குமரிக்கண்டம். குமரிமைல ஆறுகொண்டு குமரிநாடு என்று பெயரிட்டனர். இதன் வடக்கே குமரியாறு தெற்கே பஃறுளியாறு என்பவற்றின் இடையே கீழ்மேலாக எழுநூறு காவதம் பரப்பாக நீண்டு கிடந்தது. இது நாற்பத்தொன்பது நாடுகளாகப் பிரிக்கப்பெற்றிருந்தது. ஏழ்மதுரை நாட்டுக்குத் தென்பால் இருந்த காரணத்தால் மதுரை ‘தென்மதுரை’ எனப்பட்டது. இதனை அரசிருக்கையாகக் கொண்டு ஆண்டவன் ஆழிவடிவம் பலம் நின்ற பாண்டியன் என்ற முதலாம்நிலம் தரு திருவிற்பாண்டியன்....” (தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம், தொகுதி2, ஐந்தினைப் பதிப்பகம், சென்னை. 1987.ப.1670.)

“பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள”
என்று குமரிநாட்டைப் பற்றி கூறப்பட்டுள்ள வரிகளுக்கு 2012 படமே சரியான விளக்கவுரையாக எனக்குப் பட்டது. இந்தப் படம் குமரிக்கண்ட வரலாற்றுப் பேரழிவுக்கு நல்ல பாடமாக இருக்கிறது என்பது என் கருத்து.

இன்றைய இந்திய பெருநிலப்பரப்புக்குக் கீழே இருந்ததாகச் சொல்லப்படும் குமரிநாடு அல்லது குமரிக்கண்டம் அல்லது கோண்டுவானா அல்லது லெமூரியா கண்டமும் இப்படிதான் மாபெரும் பேரழிவுக்கு உள்ளானதாக வரலாற்று ஆசிரியர்கள் சொல்லுகின்றனர். அங்கு மூன்று முறை பாரிய கடற்கோள்கள் (சுனாமி) ஏற்பட்டதாகத் தமிழ் இலக்கியம் சான்று சொல்லுகிறது.

மூன்று கடல்கோள்களுள் முதலாவது கடல்கோள் கி.மு. 2387 இல் நிகழ்ந்தது. இரண்டாவது கடல்கோள் கி.மு. 504 இல் நிகழ்ந்தது. மூன்றாவது கடல்கோள் கி.மு. 306 இல் ஏற்பட்டதாக குறிப்புகள் சொல்லுகின்றன. (The Date of Tolkappiyam, Annals of Oriental Research, University of Madras, Vol.XIX part II, 1964, Reprint p. 16-17)

நீங்கள் 2012 படத்தைப் பார்த்தவரா? கொஞ்சம் மெனக்கெட்டு குமரிகண்ட வரலாற்றை தேடிப் படியுங்கள். தமிழரின் வரலாறு தெளிவாகத் தெரியும்.

நீங்கள் குமரிக்கண்ட வரலாற்றைப் படித்தவரா? அருகிலுள்ள பட அரங்கிற்குச் சென்று 2012 படத்தைப் பாருங்கள். தமிழரின் வரலாறு தெளிவாகப் புரியும்.

பழந்தமிழரின் தாயகமாகச் சொல்லப்படும் குமரிக்கண்டம்,
பழந்தமிழின் பிறப்பிடமாகக் கருதப்படும் குமரிநாடு,
தொன்மை மாந்தனின் தோற்றுவாயாக நம்பப்படும் கோண்டுவானா,
குரங்கினத்திலிருந்து மாந்தரினம் பரிணாமம் அடைந்த நிலமாக இருந்து கடலுக்குள் மூழ்கிப்போன லெமூரியா கண்டத்தின் வரலாற்றைத் தமிழர்கள் கண்டிப்பாக அறிந்துகொள்ள வேண்டும்.

அதற்குக் கீழ்க்காணும் சில வலைமணைகள் துணையாக இருக்கும்.

http://www.tamilcc.org/thamizham/ebooks/5/468/468.pdf

http://www.noolaham.net/project/02/151/151.htm

http://thonmai.blogspot.com/2007/12/blog-post.html

http://www.geotamil.com/pathivukal/mayilangkuudal_p_nadarasan_on_tamilinthonmai.htm

http://www.tamilpayani.com/tamilsatiram/viewtopic.php?f=5&t=293&start=0&st=0&sk=t&sd=a#p1033

Sunday, November 01, 2009

தமிழக அரசுக்கு மலேசிய எழுத்தாளரின் கேள்வி


அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றோ
செல்வத்தைத் தேய்க்கும் படை.

இதைச் சொல்பவன் யார்? பொய்யா மொழிப் புலவன். அவனின் வாக்கு ஒரு போதும் பொய்க்காது.

பெருங்கடலாய்ப் பெருகிக் கொண்டிருக்கும் இக்கண்ணீர்ப்படை ஆழிப்பேரலையாய் எழுந்து சிங்களக் கொடுங்கோல் அரசை மட்டுமல்ல அதற்குத் துணை போன அத்தனை நாடுகளையும் விழுங்கி அழித்தொழிக்கும்.

ஈழத்தில் மட்டுமல்ல இலங்கை எங்குமே எங்களின் தமிழ்க்கொடி பறக்கும்! அங்கே ஐ.நா அரங்கத்திலும் நம் கொடி அசைந்தாடும்! அந்நாளே நமக்கு நன்னாள்!

"கேப்பையில் நெய் வடிகிறது என்றால் கேட்பாருக்குப் புத்தி எங்கே போச்சு! " என்பது ஒரு பழமொழி. நடவாத நடக்க இயலாத ஒரு செயலை நடந்ததாக எடுத்துக்கட்டி , பொய் சொல்வது என்பதுதான் இதன்பொருள் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

இதனை இன்று நடைமுறைப் படுத்திக்கொண்டு இருப்பவர் மாண்புமிகு தமிழக முதல்வர் கருணாநிதி என்பதை, உலகமே பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றது.

"இன்னும் இரண்டு வாரத்தில் இலங்கை அகதி முகாமுக்குள் அடைபட்டுக்கிடக்கும் அனைத்துத் தமிழர்களும் விடுவிக்கப்பட்டு, தங்களின் சொந்தக் கிரமங்களுக்குத்திரும்பி விடுவர். அதற்கான பணிகள் அத்தனையும் செய்து முடித்து விட்டேன்" என்று அறிக்கை விடுகின்றார் தமிழக முதல்வர்.

தமிழக முதல்வரையும் பின்னுக்குத் தள்ளி ஒருபடி மேலே நின்று, "தமிழக முதல்வரின் தூதுவர்களில் ஒருவனாக, இலங்கைக்குச்சென்றபோதே, ஆயிரத்து ஐநூறு பேரை விடுவித்து, அவர்களை, அவர்களின் சொந்த வீட்டுக்கு அனுப்பி விட்டுத்தான் வந்துள்ளேன்." என்று முழு பூசனிக்காயைச் சோற்றுக்குள் மறைத்திருக்கிறார் - அதிபர் ராசபக்சேயின் புதிய தம்பி விபீடணன் தொல் திருமாவளவன் அவர்கள்.

இத்தலைவர்களின் இக்கூற்றுக்கு ஈழத்தமிழர்களோ தமிழகத்தமிழர்களோ மறுப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால் கன்னத்தில் அறைந்தார் போன்று சிங்கள முக்கிய அமைச்சர் ஒருவரும் அதிபர் ராசப்பக்சேயும் பதில் அளித்திருக்கின்றனர். எப்படி?

"முகாமுக்குள் அடைப்பட்டுக் கிடக்கும் தமிழ் அகதிகளுக்கு விடுதலையா? அது கனவில் கூட நினைத்துப்பர்க்க முடியாத ஒரு செய்தி! " என்று சிரித்து ஏளனம் செய்திருக்கின்றார் இலங்கை அதிபர் ராசபக்சே!

"முகாமில் அடைக்கப்பட்டிருப்பவர்கள் விரைவில் விடுதலையாகப் போகின்றனர் என்ற செய்தியைப் பத்திரிகைகளில் பார்த்துதான் தெரிந்துக்கொண்டேன், மற்றபடி இதுப்பற்றி எங்கள் அமைச்சர் அவைக்கு எதுவுமே தெரியாது " என்று சொல்கின்றார் சிங்கள அரசின் முக்கிய அமைச்சர் ஒருவர்.

ஆனால் தமிழக முதல்வரும், அவர் தூது அனுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் , "இதோ கேப்பையில் நெய் வடிகின்றது ! நெய் வடிகின்றது ! பாருங்கள் ! பாருங்கள்! " என்று தமிழக மக்களுக்கு 'பியாசு கோப்' படம் காட்டி மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர் !

தமிழக முதல்வரின் தூதுக்குழு இலங்கைக்குச் சென்றதனால், முகாம், ஏதிலிகள் (அகதிகள்) அடைந்த ஒரே நன்மை தூதுக்குழுவுக்கு நேர்காணல் அளித்த பலர் காணாமல் போனதுதான். (ஏன் எப்படி )

இதனால்தான் என்னவோ ஈழநாட்டுத் தமிழ் இதழ் ஒன்று இலங்கைக்குச் சென்ற தூதுக்குழுவுக்குச் தலைமை ஏற்றுச்சென்ற, தி.ஆர்.பாலுவை " சனீசுவரன் வந்திருக்கிறார்" என்று பாராட்டி இருக்கின்றது !

புறநானூறு கண்ட தமிழக முதல்வர் நடுவண் அரசில் உறுப்பியம் வகிக்கும் நாற்பது தி.மு.க உறுப்பினர்களயும் பதவி துறக்கச் செய்து காங்கிரசு ஆட்சியைக் கவிழ்த்து என் அருமை ஈழத்தமிழர்களைக் காப்பாற்றுவேன் என்று அனைத்துக் கட்சிகளின் அவையில் முழங்கி கைத்தட்டல் பெற்றார்.

இந்த வாக்குறுதி என்ன ஆயிற்று? ஒரு காலத்தில் தெற்கு தேய்கிறது வடக்கு வாழ்கிறது என்று வடவரை வசைபாடிய வாய் இன்று சோனியா காந்தியை நாவினிக்க வாழ்த்துவது ஏன்?

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருந்த தமிழ்நெஞ்சன் தமிழ் வெறியன் தமிழ்த்தொண்டன் அல்ல இன்றைய கருணாநிதி அவர்கள். இன்று தமிழகத்தின் பேரரசர். உலகக் கோடீசுவரர்களின் வரிசையில் இடம் பிடுத்துக் கொண்டவர். தேர்தலில் வெற்றி பெற்ற அருமை மகன் அழகிரிக்கு எழுபது பொன் தங்கமாலை அணிவித்துப் பெருமை பெற்றவர்.

இந்தக் குபேர வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ளவே இந்தத் தமிழ் இமயம் இன்று வடவரின் காலடியில் வீழ்ந்து கிடக்கின்றது.

சுண்டைக்காய் நாடு இலங்கை அதன் கடற்படை இந்தியக் குடிமக்களான தமிழக மீனவர்களை அன்றாடம் அழித்துக் கொண்டிருக்கின்றது. அந்த ஏழை மீனவர்களின் அழுகுரல் தமிழக முதல்வரின் காதுகளில் விழ வில்லையே! அந்த ஏழைகளுக்காக கருணா நிதியின் கண்கள் கலங்கவில்லையே!

இரத்தத்தின் இரத்தமாம் ஈழத்துத் தமிழ்மக்களைக் காப்பாற்றக் கோரி தன்னையே எரித்துக் கொண்ட மறவர் குல மாணிக்கம் தங்கமகன் முத்துக்குமாரின் தியாகம் கூட கலைஞரின் நெஞ்சைத் தொடவில்லையே ஏன்?

ஏனெனில்,தமிழக முதல்வர் இன்று ஒரு மேட்டுக்குட்டி! ஏழைகளுக்காக இரங்குவதும் கண்ணீர் வடிப்பதும் கேவலம் என்பது மேட்டுக் குடியினரின் மரபு!

ஒரு வல்லரசு நாட்டின் குடிமகன் ஒருவனுக்கு வெளிநாட்டில் துன்பம் விளைந்தால் - அந்த வல்லரசு பொங்கி எழுகின்றது சம்பந்தப்பட்ட நாட்டிடம் காரணம் கோருகின்றது - கண்டனம் செய்கின்றது . எச்சரிக்கை விடுக்கின்றது .


1983 - கொழும்பு இனக்கலவரத்தில் தமிழினம் அழிக்கப்பட்டபோது, அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அம்மையர் அவர்கள், இலங்கை அதிபர் சயவர்த்தானாவை இந்த முறையில் தான் மிரட்டி பணியவைதார். வல்லாண்மை மிக்க ஒரு வல்லரசின் செயல்பாடு இப்படிதான் இருக்க வேண்டும்.

ஆனால், தமிழக மீனவர்கள் நிலையில் இன்றைய இந்திய செயல் பாடு எப்படி இருக்கின்றது என்பதை மானமுள்ளஒவ்வொரு தமிழனும் சிந்திக்க வேண்டும் .

சோனியா காந்தியையும் சிங்கள அரசையும் மகிழ்ச்சி படுத்துவதற்காகவே தமிழர்களுக்கு எதிரான் அனைத்தையும் செய்துக்கொண்டிருக்கின்றது இன்றைய இந்திய அரசு. தமிழக தி. மு .க. கூட்டணி அரசும். தங்களின் நல்வாழ்விற்காக நடுவண் அரசுக்குத் துணை போவதோடு சிங்கள அரசையும் வாழ்த்திகொண்டிருக்கின்றது.

அந்த முறையில்தான் இலங்கை சென்ற தமிழக முதல்வரின் தூதுக்குழுவினர் தமிழினத்தின் முதன்மை பகைவன், கொலைஞனான நவீன இட்லர் ராசபக்சேக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி, அதிபர் அளித்த விருந்தினை உண்டதோடு அவனுடன் கொஞ்சிக் குலாவி நகைச்சுவை ததும்ப உரையாடி மகிழ்ந்து ஆனந்தராகம் பாடி வந்திருக்கின்றனர் என்றால் இவர்கள் தமிழர்களா?

1948இல் விடுதலை அடந்து ஆட்சி அதிகாரம் சிங்களர்களின் கையில் கிடைத்ததிலிருந்து சிங்கள அரசு அனைத்து வகையிலும் தமிழினத்தை அழித்துக் கொண்டேதான் இருக்கின்றது.

இந்த அழிவிலிருந்து தப்பிப் பிழைப்பதற்காகத்தான் ஈழமக்கள் உடுத்திய துணியுடன் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்தனர். புலம்பெயர்ந்த மக்களின் சொத்துகள் அனைத்தையும் சிங்கள மக்களுக்கு வாரி வழங்கியது சிங்கள் அரசு.

தமிழ் சிற்றூர்கள் சிங்களச் சேரிகளாக மாற்றப்பட்டன. பள்ளி கோயில் வளாகங்கள் சிங்களப் படையின் பாசறைகளாயின. காரணமின்றி தமிழ் இளைஞர்கள் தளை செய்யப்பட்டு (கைது) உசாவல் என்ற போர்வையில் சிறைக்குள் ஆயிரம் ஆயிரமாய் கொன்று குவிக்கப் படுகின்றனர். உலகமே கண்டிராத அளவு சிங்கள வெறிப்படை தமிழ்ப் பெண்களைப் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிக் கொன்று குவித்து அவர்களின் உடலை அம்மணப் படுத்தி வீதியில் கிடத்திக் கண்காட்சி நடத்தியிருக்கின்றது.

முகாமுக்குள் ஏதிலிகளாய் வாடிக் கிடக்கின்ற இளைஞர்களையும் இளம் பெண்களையும் கூட சிங்களக் காடையர்கள் விட்டு வைக்கவில்லை. அவர்களை அனைத்துக் கொடுமைகளுக்கும் ஆளாக்கி, அம்மணப் படுத்தி கைகளைக் கட்டி குருவிகளைச் சுடுவது போன்று இன்றும் சுட்டுக் குவித்துக் கொண்டிருக்கின்றது சிங்களப் பேய்ப் படை.

சிங்கள அரசு செய்கின்ற இக்கொடுமைகள் அனைத்தையும் ஆய்ந்து அறிந்து. உண்மையைத் தெரிந்து கொண்ட ஓர் அமெரிக்கப் பெண்மணி கண்ணீர் விடுகின்றார். "இராசபக்சேயின் அரசை உலக நீதிமன்றத்தில் நீறுத்தி தண்டிக்க வேண்டும்" என்று அறைகூவல் விடுகின்றார் அக்கண்மணி. யார் இவர்? தமிழினத்துக்குத் தொடர்பே இல்லாத ஒரு வேற்று நாட்டுப் பெண்.

செய்யாத குற்றத்துக்காக தமது தாலியைப் பறித்துவிட்டான் பாண்டிய மன்னன் என்பதற்காக அவனையும் அவனின் நகரையும் அழித்தாள் அன்றைய தமிழச்சி கண்ணகி. அந்தக் கண்ணகி பிறந்த மண்ணில் பிறந்த இன்றைய தமிழச்சி கனிமொழி இலக்கக் கணக்கானத் தமிழச்சிகளின் தாலிகளைப் பறித்திட்ட கயவன் இராசப்பக்சேயின் விருந்தினராகச் சென்று திரும்பி இருக்கின்றார். தமிழ்க் குலப் பெண்களே சொல்லுங்கள் இவர் தமிழச்சியா?

ஈராயிரத்து ஒன்பது மே திங்கள் பதினெட்டாம் நாள் தமிழ்க் குலத்துக்கு ஒரு கரு நாள். இந்தியப் படையும் சிங்களப் படையும் இணைந்து நின்று ஒரே நாளில் ஈழமண்ணில் ஐம்பதாயிரம் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்து இட்லரையும் வென்ற நாள் அது.

வெள்ளைக் கொடி ஏந்தி சென்ற வீரமறவன் நடேசனையும் அவரது குழுவினரையும் பொதுமக்களையும் கொஞ்சமும் இரக்கமின்றி சுட்டுத் தள்ளி பேயாட்டம் ஆடி நின்றதும் அந்த நாளில்தான்.

இத்தகையத் தமிழினப் படுகொலை நடந்தேறிய பிறகும் நவீன இட்லர் இராசபக்சேயிடம் ஒரு தமிழன் கை குலுக்கி உறவாட நினைக்கிறான் என்றால் அவன் தமிழனே அல்ல!

புலிகளை விட்டுப் பிரிந்து வாருங்கள் உங்களை வாழவைக்கிறோம் என்று வெற்று வாக்குறுதி அளித்த உலக மகாப் பொய்யன் இராசபக்சேயின் பேச்சை நம்பி ஏமாந்து இன்று முகாம்களில் நிரந்தர நரகத்தில் உழன்று கொண்டிருக்கின்ற மக்களை சிங்கள அரசு ஒரு போதும் உயிரோடு விடுதலை செய்யப் போவதே இல்லை. அவர்கள் அனைவரையுமே புலிகள் என்று முத்திரைக் குத்தி வைத்திருக்கின்றது சிங்கள அரசு. எனவே அம்மக்கள் அனைவரையும் சாகடிப்பது என்பதுதான் சிங்கள் அரசின் முடிந்த முடிபு. இந்த உண்மையைத்தான் முகாமில் உள்ள மக்களை விடுவிப்பது என்பது கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒரு செயல் என்று சொல்லாமல் சொல்லி இருக்கின்றார் அதிபர் இராசபக்சே!

ஆக, முகாம்களில் அன்றாடம் செத்துக் கொண்டிருக்கும் நம் இரத்தத்தின் இரத்தங்களை விடுவிக்கின்ற பொறுப்பு உலகத் தமிழர்களின் கைகளில் தான் இருக்கின்றது என்பதை உண்மைத் தமிழன் ஒவ்வொருவரும் உள்ளத்தில் பதித்துக் கொள்ளல் வேண்டும்.

கிழக்கே உதிக்கின்ற கதிரவன் ஒருகால் மேற்கே உதிப்பினும் உதிக்கலாம். ஆனால் சிங்களப் பேரினவாத அரசு தமிழினத்துக்குச் சம உரிமை வழங்கி அவர்களை வாழவைக்கும் என்ற பேச்சுக்கே இனி இடம் இல்லை. இதுதான் உண்மை! உண்மை! உண்மை!

மானம் ஒன்றே பெரிதெனக் கொண்டு வாழ்ந்த இனம் தமிழினம். அந்த மானம் காக்கப்படல் வேண்டும். வீடணப் புத்தி கொண்ட தமிழ் இரண்டகர்களைக் கண்டு அஞ்சித் தளர்ந்து விடக் கூடாது தமிழினம்.

'வலியோர் சிலர் எளியோர் தமை
வதையே புரிகுவதா?
குகைவாழ் ஒரு புலியே உயர்
குணமேவிய தமிழா!
கொலை வாளினை எடடா! மிகு
கொடியோர் செயல் அறவே!'

தமிழ்மறவன் தன்மானப் புலவன் பாரதிதாசன் நம்மைத் தட்டி எழுப்புகின்றான்! உலகத் தமிழின மறவர்களே! திண் தோள் தட்டி எழுவீர் ! எழுவீ ர்!

"இனி இது பொறுப்பது இல்லை - தம்பி !
எரி தழல் கொண்டு வா!
கதிரை வைத்திழந்தான் - அண்ணன்
கையை எரித்திடுவோம்!

என்று தருமனின் இளையோன் வீமன் பொங்கி எழுந்தமை போன்று பொங்கி எழுந்து விட்டனர் மறத்தமிழர்.

பேரினவாத சிங்கள அரசை அழிப்பதற்கு இனிக் கொத்துக் குண்டுகள் கூடத் தேவையில்லை. அல்லல்பட்டு ஆற்றாது அழுகின்ற இலக்கக் கணக்கான ஈழத்தமிழர்களின் கண்ணீர்ப் படையே அதை அழித்து விடும்.

அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றோ
செல்வத்தைத் தேய்க்கும் படை.

இதைச் சொல்பவன் யார்? பொய்யா மொழிப் புலவன். அவனின் வாக்கு ஒரு போதும் பொய்க்காது.

பெருங்கடலாய்ப் பெருகிக் கொண்டிருக்கும் இக்கண்ணீர்ப்படை ஆழிப்பேரலையாய் எழுந்து சிங்களக் கொடுங்கோல் அரசை மட்டுமல்ல அதற்குத் துணை போன அத்தனை நாடுகளையும் விழுங்கி அழித்தொழிக்கும்.



ஈழத்தில் மட்டுமல்ல இலங்கை எங்குமே எங்களின் தமிழ்க்கொடி பறக்கும்! அங்கே ஐ.நா அரங்கத்திலும் நம் கொடி அசைந்தாடும்! அந்நாளே நமக்கு நன்னாள்!

எழுந்தது மறவர் படை!
மலர்ந்தது தமிழ் ஈழம்!

வாழ்க! வளர்க! தமிழன் வீரம்!

இக்கண்,

அ.ரெங்கசாமி

நன்றி:திருநெறி

Saturday, October 24, 2009

தொல்.திருமாவளவனுக்கு மலேசியத் திருமாவளவன் கேள்வி



மதிப்பிற்குரிய விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தமிழ்த்திரு தொல் திருமாவளவன் அவர்களுக்கு, வணக்கம்.

அண்மையில் தாங்கள் இலங்கைக்குச் சென்று இலங்கை கொலை வெறி அரசால் வன்னி மண்ணில் படுகொலை செய்யப்பெற்று சொல்லொணா துன்பத்திற்கு ஆளான தமிழ் மக்களில் எஞ்சியவரைக் கொத்தடிமைக் கொட்டடிக்குள் சந்தித்து உரையாடி வந்தமையினை ஊடகங்கள் வாயிலாக படித்தறிந்தேன்.



தமிழின வீரத்தின் மொத்த வடிவமாகவும் தமிழினத்திற்குக் காலம் கொடுத்த அருங்கொடையாகவும் வாய்க்கப் பெற்ற அரும்பெறல் தலைவர் மேதகு பிரபாகரன் கரங்களைக் குலுக்கிய கைகள் தமிழனின் குருதிக் கறைகள் படிந்த கொலை வெறியன் மகிந்தவின் கரங்களைக் குலுக்கியதையும் அவனோடு சிரித்து மகிழ்ந்து உணவுண்டதையும் ஊடகங்களில் கண்டு மனம் நொந்து போன தமிழுள்ளங்களில் நானும் ஒருவன்.
தமிழீழ மக்களுக்காக குரல் கொடுத்த கரணியத்திற்காகவும் தங்கள் இயக்கத் தொண்டர்கள் பலருக்குத் தூயதமிழ் பெயர் சூட்டியமைக்காகவும் மேலும் பல்வேறு மொழி நலன் செயற்பாடுகளுக்காகவும் தங்கள் மீது எனக்கு உயர்ந்த மதிப்பிருந்தது.
  • அதனால், மலேசியாவிற்குத் தங்களை முதன்முறையாக பல்வேறு எதிர்ப்பிற்கிடையே அழைத்து நாடு தழுவிய அளவில் நிகழ்ச்சிகளை நடத்தினேன். இதனைத் தாங்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை எனக் கருதுகின்றேன்.
ஆனால், அண்மை காலமாக தங்களின் செயற்பாடுகளில் பிறழ்ச்சி நிலை தென்படுவது தங்களின் மேல் உலகத் தமிழர்கள் வைத்துள்ள மதிப்பை பாதித்துள்ளது என்பதைத் தாங்கள் அறிவீர்களா?

ஈழ மண்ணில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈடு இணை சொல்ல முடியாத அளவில் வீரஞ்செறிந்த போர் புரிந்து கொண்டிருந்த வேளையில் அதனை முறியடிக்கும் நோக்கில் சிங்கள் இன வெறி அரசுக்கு முட்டு கொடுத்த இந்திய காங்கிரசு கூட்டணிக்குத் தாங்கள் முட்டு கொடுத்தீர்கள். அக்கால் தமிழீழ மக்களைக் குறிவைத்து சிங்களப் படை கொலை வெறி தண்டவம் ஆடியது. ஈழத் தமிழ் மக்கள் அவலக் குரல் எழுப்பினர். கதறினர். காப்பாற்றக் கோரி இந்தியாவை நோக்கிக் கெஞ்சினர்.

உங்கள் அன்பு முதல்வர் நாற்பது ஆண்டுகால போர் நான்கு நாள்களில் நின்று விடுமா என்று கேட்டார். எங்களால் ஒன்றும் செய்ய இயலாது என சட்ட மன்றத்திலேயே அறிவித்தனர். இந்திய நடுவண் அரசின் நிலைப்பாடே எங்களுடைய நிலைப்பாடும் என உங்கள் முதல்வர் திட்டவட்டமாகவே அறிவித்துவிட்டார். மற்றொரு பக்கம் ஈழத் தமிழ் மக்களுக்காக என்னையே நான் தியாகம் செய்யத் துணிந்து விட்டேன் என்று ஒரு நாள் நோன்பிருந்தார். கொடிய தாக்குதல் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப் படுகையிலேயே போர் நிறுத்தம் வந்து விட்டது என்று கூறினார்.

இவை எல்லாம் யாரோ கூறுபவை அல்ல. உங்கள் தமிழகத் தலைவர்களாலேயே பதிப்பிக்கப் பட்டவை. ஏடுகளில் வந்தவை. காட்சிகளில் பதிவானவை. கொலை வேறி சிங்களவனுக்கு எல்லா வகையாலும் ஒத்தாசை வழங்கி விட்டு,

"அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் அங்கே தலைவிரித்தாடுகின்றன. முகாம்களில் மட்டுமின்றி ஒட்டுமொத்த ஈழத் தேசமே ராணுவத்தின் கெடுபிடிக்குள் சிக்கிச் சிதைந்து வருகிறது.

மக்களிடையே மன அழுத்தங்களும் அச்சமும் பீதியும் மேலோங்கி நிற்கின்றன.
தமிழ் மக்களிடையே அச்சத்தாலான அடிமைத்தனமும் பரவுவதை அவர்கள் கால் வயிற்றுக் கஞ்சிக்காகக் கையேந்தி நிற்கும் நிலைமைகளிலிருந்து அறிய முடிகிறது.

மெலிந்த உடல்களிலிருந்து ஏக்கப் பெருமூச்சுகளும், முனகல்களும் மட்டுமே வெளிப்படுகின்றன. நாவிலிருந்து வார்த்தைகள் வராமல் விழிகளிலிருந்து தாரை தாரையாய் நீர் கொட்டுவதை காண முடிகிறது.

2 பேர் மட்டுமே வசிக்கக்கூடிய கூடாரங்களில் 8 பேர், 10 பேர்களை அடைத்து வைத்திருக்கும் மனிதநேயமற்ற கொடுமைகள் திணிக்கப்பட்டுள்ளன. இந்த மனித அவலங்களை மனிதநேயமுள்ள எவராலும் சகித்துக் கொள்ள முடியாது. "

என்று தாங்கள் அறிக்கை விட்டிருப்பதைக் கண்டு நாங்கள் யாரிடம் சொல்லி அழ? இவற்றுக் கெல்லாம் ஏதொவொரு வகையில் தாங்களும் துணையாகி விட்டீர்களே! அதை உங்கள் மனச்சான்றிலிருந்து மறைக்க முடியுமா? மறுக்க முடியுமா?

"நல்ல வேளை நீங்கள் பிராபாகரனோடு அன்று இல்லை. இருந்திருந்தால் நீங்களும் செத்திருப்பீர்கள்" என்று இந்திய நாடாளுமன்ற குழுவில் தங்களைப் பார்த்து அந்தக் கொலை வெறியன் கேளி செய்தானே! அதைக் கண்டு என் நெஞ்சம் கொதித்தது. ஆனால் அது தங்களுக்கு நகைச்சுவையாகப் பட்டது.

பிரபாகரன் என்கின்ற தமிழினத்தின் உயர் தலைவனின் பக்கத்தில் நின்று உரையாடியவர் தாங்கள். விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தாங்கள்.
கொஞ்சமாவது அந்த வீரத்தின் வாடை வீசியிருக்க வேண்டாவா?

ஆனால், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இந்தக் கொடுமைகளை எப்படி வேடிக்கை பார்க்கின்றன என்பது தான் பெரும் கொடுமையாக உள்ளது. இந்திய அரசு ஈழத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக மேலும் ரூ.500 கோடி வழங்கத் தீர்மானித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது நீங்கள் வெளியிட்ட அறிக்கையில் உள்ள குறிப்பு. இது என்ன இந்தியா புதிதாக செய்கின்ற வேலையா? அன்று களத்தில் நின்ற தமிழனைக் கொல்ல துணை நின்ற இந்தியா, இன்று கொத்தடிமைக் கொட்டடிக்குள் கிடக்கும் தமிழனை அழிக்க உதவுகிறது. அப்படிப் பட்ட கூட்டணி தானே உங்கள் கூட்டணி.

அடங்க மறு திருப்பி அடி என்பதெல்லாம் ஏட்டளவில் இருந்தால் போதுமா?

உண்மையான அப்பழுக்கில்லாத உணர்வு மிக்க செயல் வீரம் கொண்ட தமிழனாகவே தங்களை உலகத் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஐயா பழ நெடுமாறன் மலேசியா வந்த பொழுது ஒரு கருத்தைக் குறிப்பிட்டார். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் பங்காற்ற கூடிய முழு பொறுப்புக்குரியவர்கள் முந்தைய தலைமுறையோ பிந்திய தலைமுறையோ அல்ல. இன்றைய தலைமுறையினராகிய நாம் தான். நாம் நம்முடைய கடமையை சரிவர ஆற்றத் தவறி விட்டால் வரலாற்றுப் பழிப்பிலிருந்து தப்ப முடியாது.

உங்கள் முதல்வர் இன்று பொறுப்பிலிருக்கின்ற இக்கால்தான் ஆயிரக்கணக்கான் தமிழீழத் தமிழர்கள் சிங்களக் காடையர்களால் ஊரறிய உலகறிய பச்சைப் படுகொலை செய்யப் பட்டார்கள். தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒடுக்கப் பட்டிருக்கிறது. இலக்கக் கணக்கான தமிழ் மக்கள் முள்வேலிக் கம்பிகளுக்குள் அடைக்கப் பட்டு வதைப் படுத்தப்படுகின்றனர்.

இவற்றை எல்லாம் தடுப்பதற்கு ஆட்சியிலிருக்கும் உங்கள் கூட்டணிக்கு எண்ணம் இல்லையே?

தமிழினத்தை அழிக்கும் இந்திய அழிப்பாற்றலுக்குக் கைகொடுத்துக் கொண்டு ஒப்பாரி வைப்பது வேடிக்கையாக இல்லையா?


இக்கண்;
இரா.திருமாவளவன்,
மலேசியா.




Thursday, October 15, 2009

எசுபிஎம் தமிழ் இலக்கியம் இனி எட்டாக் கனிதானா?

14-10-2009இல் மலேசிய நண்பன் வெளியிட்ட செய்தி இது. எசுபிஎம் தேர்வில் தமிழ் இலக்கியப் பாடத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பைக் கருத்தில்கொண்டு அக்கறையோடு செயல்பட்டிருக்கும் ஐயா.சு.வை.லிங்கம், அவர்தம் குழுவினர் மலேசிய நண்பன் நாளிதழ் ஆகிய தரப்பினரை நன்றியோடு நினைத்துப்பார்த்து இதனை இங்கு பதிவிடுகின்றேன். –சுப.ந.


ந்தாம் படிவத்தின் தேர்வு முறையில் பாடங்களின் எண்ணிக்கையைப் பத்தாகக் குறைக்கும் நடவடிக்கையை 2012இல் செயல்படுத்த மலேசிய கல்வி அமைச்சு அறுதியிட்டு முடிவு செய்துள்ளது. அந்த முடிவினால், தமிழ் இலக்கியப் பாடம் எடுக்கும் மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், தமிழ்மொழியின் எதிர்காலம் பாதிப்படைய போகிறது. இச்சிக்கலுக்குத் தீர்வுகாண 20 இயக்கங்களின் சார்பில் கல்வி அமைச்சிடம் அறிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது.

தலைமைக் கல்வி இயக்குநரிடமும் நேரடியாகப் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. தமிழ் இலக்கியம் படிக்க முழுமையாக வரையறுக்கப்பட வேண்டுமென்று வற்புறுத்தப்பட்டது. தலைமை இயக்குநரும் பரிசீலிப்பதாகக் கூறினார். ஆனால், இதுவரை பதில் இல்லை. ம.இ.கா உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மலேசியத் தமிழ்க் காப்பகத்தின் தலைவரும் மலேசியத் தமிழ்மன்றத்தின் தேசியத் தலைவருமான சு.வை.லிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டிருக்கிறார்.



மனிதவளத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் ஏற்பாட்டில் கல்வி அமைச்சின் தலைமை இயக்குநருடன் நடத்தப்பட்டச் சந்திப்பில் ம.இ.கா.வின் சார்பில் பிரதமர் துறை துணை அமைச்சர் எஸ்.கே.தேவமணி, ம.இ.கா. கல்விக்குழுத் தலைவர் டாக்டர் மாரிமுத்து, மனிதவளத் துறை அமைச்சின் செயலாளரும் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இயக்கங்களின் சார்பாக மலேசியத் தமிழ் காப்பகத்தின் தலைவர் சு.வை.லிங்கம், துணைத்தலைவர் டாக்டர் எஸ்.குமரன், உதவித் தலைவர் ரெ.சு.முத்தையா, செயலாளர் இரா.திருமாவளவன், தமிழாசிரியர் இலக்கியக் கழகத்தின் தலைவர் பச்சைபாலன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இலக்கியப்பட்டம் குறித்து பரிசீலனை செய்வதாக ஒப்புக்கொண்ட தலைமைக் கல்வி இயக்குநர் பதில் எதுவும் தெரிவிக்காமல் பள்ளிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பியிருப்பது கவலைக்குரியதாக இருக்கிறது.

இதை உணர்ந்து ம.இ.கா. தமிழ் இலக்கியம் படிக்க ஐந்தாம் படிவத்தில் 11 பாடங்களைத் தேர்வில் எழுத அனுமதிக்க வேண்டுமென்று ம.இ.கா. பேராளர் மாநாட்டில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பேராளர் மாநாட்டில் முன்மொழியப்பட்ட தீர்மானம் எந்தவிதமான விவாதமும் இன்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஆனால், கல்வி அமைச்சு அந்தத் தீர்மானத்திற்கு முக்கியத்துவம் வழங்காமல் தனது திட்டத்தை நிறைவேற்றுவதில் குறியாக இருக்கிறது. இடைநிலைப் பள்ளிகளுக்குப் 10 பாடங்கள் மட்டுமே என்ற உத்தரவு அறிக்கையும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ம.இ.கா.வின் கேரிக்கையைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாமல் புறக்கணித்திருப்பது ஏமாற்றத்தைத் தருகிறது. கல்வி அமைச்சின் திட்டம் நிறைவேற்றப்பட்டால், அறிவியல் துறை மாணவர்கள் தமிழ் இலக்கியம் படிப்பது முற்றாகத் தடைசெய்யப்படுகிறது. தற்போது குறைந்தது 1,000 (ஆயிரம்) அறிவியல் துறை மாணவர்கள் தமிழ் இலக்கியம் எடுப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.

கல்வி அமைச்சுக்கு இச்சிக்கல் தெரிந்திருந்தும் ஏன் 10 பாடம் முடிவை வற்புறுத்துகிறது என்பது ஓரளவு ஊகிக்க முடிகிறது. எதிர்காலத்தில் தமிழ்ப்பள்ளிகளுக்கே ஆபத்து வரலாம். இந்திய ஆய்வியல் துறையும் மூடப்படலாம் என்ற நிலைக்குக் கொண்டுசெல்லாமல் ம.இ.கா உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்று வற்புறுத்துவது எங்களின் கடமையாகும்.

15 மாணவர்கள் என்ற கொள்கையை வைத்துக்கொண்டு தமிழ்ப்படிக்க வாய்ப்பு வழங்காமல், சில முதல்வர்கள் பிடிவாதம் பிடிக்கின்றனர். 10 பாடம் மட்டுமே என்ற சுற்றறிக்கை பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுவிட்டதால், பள்ளி முதல்வர்கள் தமிழ் இலக்கியம் படிக்கின்ற வாய்ப்பை முற்றாகத் தவிர்த்துவிடுவார்கள். கேட்டால், கல்வி அமைச்சின் அறிக்கையைக் காட்டுவார்கள் என சு.வை.லிங்கம் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Saturday, October 10, 2009

நோபல் தமிழர் வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன்

பெரும்பாலும் மேலை நாட்டுத் தலைவர்களையும் அறிஞர்களையும் அறிவியலாளர்களையும் எப்போதுமே தேடிச் செல்லும் நோபல் பரிசு, இந்த 2009இல் ஒரு தமிழரைக் கட்டித் தழுவியிருக்கிறது. இதன்வழி தமிழ் இனத்திற்கே பெருமை வந்து குழுமியிருக்கிறது.


தமிழகம், சிதம்பரத்தில் பிறந்து; அமெரிக்காவில் குடியிருந்து; இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்சு நகரில் உயிரியல் ஆய்வாளராகப் பணியாற்றும் முனைவர் வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் (வயது 57) அவர்கள் இவ்வாண்டுக்கான நோபல் பரிசு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இப்படியொரு சாதனையை நிகழ்த்திக் காட்டியிருப்பவர் ஒரு தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

வேதியல் துறைக்கான (Chemistry) இந்தப் பரிசு வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் அவர்களுக்கும், இவருடன் இணைந்து ஆய்வினை மேற்கொண்ட அமெரிக்கர் தாமசு ஏ. இஸ்டெல்ட்ஸ் (Thomas A. Steitz), இசுரேல் நாட்டைச் சேர்ந்த பெண் அறிவியலாளரான ஆடா இ யோனத் (Ada E. Yonath) ஆகிய மூவருக்கும் வழங்கப்படுகிறது.

இவர்கள் மேற்கொண்ட ஆய்வு என்பது மிகவும் நுட்பமானது. மனிதனுக்கும் மற்றைய உயிரினங்களுக்கும் உடலில் புரதம் (Protein) என்று இருக்கிறது. இதனை நாம் அறிவோம். புரதம் உடலில் நிகழும் வேதியல் மாற்றங்களைக் கட்டுப்படுத்துகிறது. இந்தப் புரதத்தை உருவாக்கும் ‘ரிபோசம்’ (Ribosome) என்கிற அணுக்களின் செயல்பாடுகளை இவர்கள் ஆராய்ந்துள்ளனர்.

‘ரிபோசம்’ 25நானோ மீட்டர் அளவு கொண்ட ஒரு நுண்மையான அணு. 25 நானோ மீட்டர் என்பது ஒரு மில்லி மீட்டரைப் பத்து இலக்கம்(இலட்சம்) பங்காகப் பிரித்தால் அதில் உருவாகும் ஒரு பகுதி அளவினது. (1 மில்லி மீட்டரை 100,000ஆல் வகுத்தல்).




இவ்வளவு நுண்மையான ஒரு பொருளைக் கண்டுபிடித்து – அதன் செயல்பாட்டைத் துல்லியமாகக் கண்டறிந்து சொன்னதோடு மட்டுமல்லாமல், அதனைப்பற்றி முப்பரிமாணப் படத்தையும் உருவாக்கி மாபெரும் சாதனை படைத்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு மருந்துகளை புதிய நுட்பங்களோடு உருவாக்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இது உலக மாந்த இனத்திற்கே பெரும் நன்மையளிக்கும் என கருதப்படுகிறது.

வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் 1952இல் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.யூ.சி படிப்பும் குசராத் பரோடா பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி –யும் படித்தவர். பிறகு, ஓகாயோ பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் முனைவர் (பி.எச்.டி) பட்டம் பெற்றார். கலிபோர்னியா பல்கலைக்கழகம், யேல் பல்கலைக்கழகம், யாத் பல்கலைக்கழகம், புரூக்கெலன் தேசிய ஆய்வுக்கூடம் ஆகிய இடங்களில் பேராசிரியராகவும் ஆய்வாளராகவும் பணியாறினார்.

1999ஆம் ஆண்டில் இங்கிலாந்து கேம்பிரிட்சு பல்கலைகழகத்தில் இணைந்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அதில் ஒன்றுதான் ‘ரிபோசம்’ தொடர்பானது. இந்த ஆராய்ச்சியில் அவர் கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளார். தம்முடைய ஆய்வுகளைப் பற்றி இதுவரை 95 ஆய்வேடுகளை இவர் எழுதியுள்ளார். தற்போது இவருக்கு நோபல் விருதைப் பெற்றுக்கொடுத்துள்ள ‘ரிபோசம்’ பற்றி மட்டும் மூன்று ஆய்வுக்கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.


உலகத்திலேயே மிக உயரிய விருதாகப் போற்றப்படுவது நோபல் பரிசு. சுவிடன் நாட்டின் அறிவியலாளர், மறைந்த ஆல்பிரட் நோபல் என்பாரின் நினைவாக நிறுவப்பட்டுள்ள நோபல் பரிசு தேர்வுக் குழு, ஒவ்வொரு ஆண்டும் இந்த மாபெரும் பரிசை வழங்கி வருகிறது.


வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் அவர்களையும் சேர்த்து, இதுவரையில் மூன்று தமிழர்களுக்கு இந்த நோபல் பரிசு கிடைத்திருக்கிறது. 1930ஆம் ஆண்டில் இயற்பியல் துறைக்காக சர்.சி.வி.இராமன், 1988இல் அதே இயற்பியலுக்காக சந்திரசேகர் சுப்பிரமணியன் ஆகிய இரு தமிழர்கள் ஏற்கனவே நோபல் விருதைப் பெற்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நோபல் விருது பெற்றுள்ள, வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் அவர்கள் தமிழினத்தில் பிறந்ததினால் தமிழராகப் பிறந்த அனைவருக்குமே பெருமைதான்.

Saturday, October 03, 2009

தரங்குறைகிறது தமிழ்க்கல்வி! யார் பொறுப்பு?

ப்படியொரு சூடான வினாவை, மலேசிய நாட்டின் தமிழ்மொழி, தமிழ்க்கல்வி இதழாகிய ‘உங்கள் குரல்’ (ஆகத்து / செப்தெம்பர் 2009) முன்வைத்திருக்கிறது. திருத்தமிழ் வலைப்பதிவின் வாசகர்களாகிய ஆசிரிய நண்பர்களுக்கும் மற்றுள்ள தமிழன்பர்களுக்கும் இதனை இங்கு வழங்குகின்றேன். ‘உங்கள் குரல்’ இதழின் இந்தக் கருத்துக்கு மறுமொழியாக, உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன். -சுப.ந


தமிழ்வழிக் கல்வி என்பது, மாணவர்கள் கற்கும் எல்லாப் பாடங்களையும் தமிழில் கற்பது. தமிழ்க்கல்வி என்பது தமிழ்மொழியையே கற்பது. சுருங்கக் கூறின் தமிழில் கற்பது தமிழ்வழிக் கல்வி; தமிழைக் கற்பது தமிழ்க்கல்வி.

தமிழ்ப்பள்ளிகளில் கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களையும் தமிழிலேயே கற்பிக்கும் நல்வாய்ப்பு மீண்டும் கிடைத்திருக்கிறது. இதனால், தமிழ்ப்பள்ளிகளில் தமிழ்வழிக் கல்விக்கு இடையில் ஏற்பட்டிருந்த பாதிப்பு நீங்கிவிட்டது.

ஆனால், தமிழ்ப்பள்ளிகளில் தமிழ்க்கல்வியின் நிலை என்ன? தமிழ்ப்பள்ளிகளில் மட்டுமன்றி, உயர்க்கல்வி நிலையங்களிலுங்கூட தமிழின் தரம் மிகமிகத் தாழ்ந்துபோய்விட்டது. இதை நிறுவப் பெரிய ஆய்வுகள் தேவையில்லை. அங்கே வழங்கும் தமிழின் தரத்தைச் சற்றே கவனித்தால் நிலைமை தெற்றென விளங்கிவிடும்.

இதோ சில எடுத்துக்காட்டுகள்:-

“நான் அனுப்பிய கடிதமும் படங்களும் கிடைத்ததா?”
(படங்கள் – பன்மை, கிடைத்ததா - ஒருமை)

“இதை உங்கள் குரலில் இடம்பெற்றால் மாணவர்களுக்குப் பயன்படலாம்” (இதில் எழுவாய் இல்லை. ‘இது உங்கள் குரலில் இடம்பெற்றால்' என்று இருக்க வேண்டும்)

“நம் தமிழ்மொழி மிக்க இனியது”
(‘மிக்க’ பெயரெச்சம்; ‘இனியது’ என்ற வினைக்கு முன் ‘மிக’ என்ற வினை எச்சம்தாம் வரவேண்டும்)

“அவர்கள் இந்த விளக்கங்களை இதழில் வெளியிட்டு எழுத்தாளர்களும் பிறரும் பயன்பபெறுமாறு வெளியிட்டு வந்தனர்”
(‘வெளியிட்டு’ என்பது இருமுறை வந்தது பிழை)

மேற்கண்டவை, இங்கு பல்வேறு நிலைகளில் தமிழ்க்கல்வி கற்பவர்கள் எழுதிய வாக்கியங்கள்.

*கல்வி அமைச்சின் பாடத்திட்டப் பிரிவு வெளியிட்ட விளக்கவுரையிலே, வழவழ, திருதிரு, சிலுசிலு என்று கட்டாயமாக இணைந்திருக்க வேண்டிய இரட்டைக் கிளவிகள் வழ வழ, திரு திரு, சிலு சிலு என்று பிரிந்தே உள்ளன.

வானவில் தொலைக்காட்சி, தமிழின் இனிமை கூறும் நிகழ்ச்சியிலேயே “கற்க கசடறக் கற்றவை” என்று திருக்குறளைப் பிழையாக ஒலிக்கச் செய்கிறது. ‘மலைக்கள்ளன்’ என்ற திரைப்படப் பெயரை ‘மழைக்கள்ளன்’ என்று எழுதிக் காட்டுகிறது. மற்ற ஊடகங்களிலும் நிலைமை இத்தகையதே.

நம் நாளிதழ்கள், நாளும் தவறாமல் செய்துவரும் தமிழ்க்கொலை இவ்விதழில் (உங்கள் குரல்) மாதந்தோறும் சுட்டப்படுகிறது.

தமிழால் பெயரும் பரிசுகளும் பெறுகிற நமது எழுத்தாளர்களில் பலர் இலக்கியத்தில் இலக்கணமே தேவையில்லை என்று கூறும் அளவுக்கு தமிழ்ப்பகைவர்களாக ஆகிவிட்டனர்.

இவையெல்லாம் மாணவரின் தமிழறிவைக் கெடுப்பவையே.

தமிழ்வழிக் கல்விக்கு இடையில் நேர்ந்த பாதிப்பு அரசின் கல்விக் கொள்கை மாற்றத்தால் நேர்ந்தது. இப்போது நீங்கியது. ஆனால், தமிழ்க்கல்வியில் தமிழின் தரத்துக்கு நேர்ந்துவரும் கேட்டுக்குப் பொறுப்பானவர் யார்?

ஆசிரியர்களா? விரிவுரைஞர்களா? பேராசிரியர்களா? கல்வி அதிகாரிகளா? ஊடகங்களா? ஏடுகளா? எழுத்தாளர்களா?

அனைவருமே தம்மளவில் இதற்குப் பொறுப்பானவர்தாம். ஏனெனில், இவர்கள் அனைவரது பொறுப்பின்மையும் எப்படியோ ஒருவகையில் இதற்குக் காரணமாகிறது. எனினும், இதற்கு மூல முதனிலைக் காரணமானவர்கள் கல்வி அமைச்சின் தமிழ்ப் பாடத்திட்டப் பிரிவினரே ஆவர். இவர்களின் செயற்பாடு தமிழின் தரத்தைவிட தங்கள் கருத்தை மேலாகக் கருதும் போக்கையே காட்டுகிறது.

நம் நாட்டுச் சூழலில் தமிழ்க் கல்வியதிகாரிகள் தங்கள் பொறுப்புக்குத் தக்க தமிழறிவு பெற்றிருக்கும் வாய்ப்பு குறைவு. எனவே, அவர்கள் தமிழறிவுக் குறையை நாம் குற்றங்கூற விழையவில்லை. ஆனால், அவர்கள் தங்கள் பொறுப்புக்குத் தேவையான அளவுக்கு தமிழறிவை வளர்த்துக்கொள்ளாததும் இங்குள்ள தமிழ் அறிஞர்களைத் தக்கவாறு பயன்கொள்ள முன்வராததும் குற்றங்களே.

இவர்களுக்கு வாய்த்துள்ள அதிகாரம் பொறுப்பை நிறைவேற்றுவதற்கே அன்றி பொறுப்பை மறுத்தும் மறந்தும் விருப்பம்போல செயற்படுவதற்கன்று என்பதை உணர்ந்து, இவர்கள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.

தவறினால், அதைக் காலம் கட்டாயம் உணர்த்தும். அந்த உணர்த்தும் முறை மிகமிகக் கடியதாய் இருக்கும்!

  • நன்றி:- உங்கள் குரல் (ஆகத்து/செப்தெம்பர் 2009)

*பி.கு:- கல்வி அமைச்சின் பாடத்திட்டப் பிரிவு வெளியிட்ட விளக்கவுரையிலே இருந்த இரட்டைக்கிளவி தொடர்பான தவறுகள், புதிய பதிப்பில் திருத்தப்பட்டுள்ளன. எனினும், முன்னம் இருந்த வேறு சில தவறுகள் இன்னமும் திருத்தப்படாமலே உள்ளன. அவையும் திருத்தப்படுவது சாலச் சிறத்தது. -சுப.ந

Blog Widget by LinkWithin