Wednesday, November 18, 2009

2012 திரைப்படமும் தமிழரின் தாயகம் குமரிக்கண்டமும் (பாகம்1)


2012 திரைப்படத்தின் காட்சிகள் மறைந்த தமிழர் தாயகமாம் குமரிக்கண்டத்தின் பேரழிவை எனக்குக் கண்முன் கொண்டுவந்து காட்டியதாகக் கடந்த பதிவில் எழுதியிருந்தேன். (அதனைப் படிக்க இங்கு சொடுக்கவும்) அதற்கு, அன்பர் நீலகண்டன் இவ்வாறு மறுமொழி எழுதியிருந்தார்.

//அறிவியல் ரீதியில் குமரி கண்டம் என்பது நிரூபிக்கப்படாத ஒரு விடயம். அஃது ஆழிப் பேரலையால் அழிந்துபோனது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இல்லை.//

//தமிழுணர்வு இருத்தல் அவசியம், அதற்காக சரித்திரத்தை உண்மைக்குப் புறம்பாக திரித்து கூறுவதால் அது மனித வரலாற்றிற்கே ஏற்பட்ட கலங்கமென அறிக.//

எனவே, குமரிக்கண்டம் பற்றி அறிஞர் பெருமக்கள் கண்ட சான்றுகளை முன்வைக்க வேண்டும் என்று நினைத்தேன். அதுதான் இந்தக் கட்டுரை. இதன் மூல வடிவத்தை மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் எழுதிய ‘தமிழர் வரலாறு’ எனும் நூலில் காணலாம்.

மறைந்த குமரிக்கண்டம் (Lost Lemuria) என்னும் ஆங்கில நூலின்படி, ஒரு பெருமலையானது மேலைக் கடலில் தொடங்கி வடக்கும் தெற்குமாகக் குமரிக்குத் தென்பகுதிலுள்ள நிலப்பகுதியில் நெடுந்தொலைக்கு இருந்துள்ளது. இது தென்மேற்காகத் திரும்பி ‘மடாகாசுக்கர்’ (Madagascar) என்ற ஆப்பிரிக்கத் தீவுவரை சென்றதாகத் தெரிகிறது. அம்மலைக்குக் கீழ்ப்பக்கம் உள்ள நாட்டில் (இன்றைய இமயமலைப் போன்ற) பெருமலைத் தொடர் ஒன்று இருந்ததாகத் தெரிகிறது. இந்தச் செய்தியை சிலப்பதிகாரத்தின் துணைகொண்டு பேரா.கா.சுப்பிரமணியப்பிள்ளை அறிவிகின்றார்.

இன்றைய இலங்கைக்குத் தெற்கில் முழுகிப்போன குமரிக்கண்டம் என்னும் நிலப்பகுதி ஏறத்தாழ 2500 கல் தொலைவுக்கு நீண்டிருந்தது என்றும், அதன் மேற்குப் பகுதி நெடுகிலும் மேற்சொன்ன பெருமலைத்தொடர் அமைந்திருந்ததாக அறியப்படுகிறது.

“முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி”
என்று நெட்டிமயாரும் (புறம்.9)

“பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும்”
என்று இளங்கோவடிகளும் (சிலப்.11:19-20) பாடியிருப்பதால், குமரிக்கண்டமும் அதன் தென்கோடியின் மலைப்பகுதியிலிருந்த குமரி மலைத்தொடரும், அதிலிருந்து உருவாகி பாய்ந்தோடிய பஃறுளி ஆறும் கட்டுக் கதையோ அல்லது பொய்ப் புரட்டோ அல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது.

“தொடியோள் பௌவமும்” என்னும் சிலப்பதிகாரத் தொடரின் உரையில், அடியார்க்குநல்லார் குமரிக்கண்டப் பகுதியைப் பற்றி இவ்வாறு கூறியிருக்கிறார். “தென்பாலி முகத்திற்கு வட எல்லையாகிய பஃறுளி என்னும் ஆற்றுக்கும் குமரி எனும் ஆற்றுக்கும் இடையே ஏழ்தெங்கு நாடு, ஏழ்மதுரை நாடு, ஏழ்முன்பாலை நாடு, ஏழ்பின்பாலை நாடு, ஏழ்குன்ற நாடு, ஏழ்குணக்காரை நாடு, ஏழ்குறுப்பனை நாடு என்னும் 49 நாடுகளும், குமரி, கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடு, நதி அனைத்தும் விளங்கின”. இவ்வாறு குமரிநாட்டைப்பற்றி பகுத்துக் கூறப்பட்டிருப்பது கட்டுச்செய்தியாக இருக்க முடியாது.


“காலமுறைபட்ட உண்மைகளைக் கொண்டு, இன்றைய தென்கிழக்காசியத் (மலையத்) தீவுக்கூட்டம் முற்றிலும் வேறுபட்ட இருபகுதிகளைக் கொண்டது. போர்னியோ (Borneo), சாவா (Jawa), சுமத்திரா (Sumatra) என்னும் பெருந்தீவுகளைக் கொண்ட மேலைப் பிரிவாகிய இந்தோ – மலையத் தீவுக்கூட்டம், முன்காலத்தில் மலாக்காவினால் ஆசியாக் கண்டத்தோடு இணைக்கப்படிருந்தது. ஒருகால், சற்று முந்திக் கூறிய குமரிக்கண்டத்தோடும் அது இனைக்கப்பட்டு இருந்திருக்கலாம். இதற்கு மாறாக, செலிபிசு(Selibis), மொலுக்காசு, நியுகினியா, சாலோமான் தீவுகள் முதலியவற்றைக் கொண்ட கீழைப் பிரிவாகிய ஆத்திரேலிய – மலையத் தீவுக்கூட்டம், முன்காலத்தில் ஆத்திரேலியாவுடன் நேரே இணைக்கப்பட்டிருந்தது” (Castes and Tribess of Southern India Vol.1.p20,21) என்ற நூல் இதனைக் குறிக்கின்றது.

செடிகொடிகளாலும் விலங்குகளினாலும் ஆப்பிரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் மிகப் பழங்காலத்திலேயே இருந்த மிக நெருங்கிய ஒற்றுமைகளைக் கண்டிபிடித்த ஓல்டுகாம் என்பவர், முன்காலத்தில் தென் ஆப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைக்கும் ஒரு நீண்ட நிலப்பரப்பு இருந்தது என முடிவு செய்கின்றார்.

“இந்தியர்க்குப் பெயரே தெரியாத சில பழங்காலத்து மாபெரிய பப்பரப்புளி அல்லது யானைப்புளி அல்லது மேனாட்டுச் சீமைப்புளி (Baobab) என்னும் ஆப்பிரிக்க மரங்கள், இந்தியத் தீபகற்பத்தின் (Peninsula) தென்கோடியில் இருந்திருக்கின்றன. அவை, அயல்நாட்டு வணிகம் நடந்துவந்த சில துறைமுகங்களில் அதாவது குமரிமுனை அருகிலுள்ள கோட்டா ஆற்றிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் தூத்துக்குடி அருகில் இன்னும் இருக்கின்றன” என்ற செய்தியை கால்டுவெல் பதிவு செய்திருக்கிறார்.

இப்படியாக, தமிழ் இலக்கிய நூல்களிலும் மேலை நாட்டவர் ஆய்வு நூல்களிலும் குமரிக்கண்டத்தைப் பற்றிய குறிப்புகள் சான்றுகளாக நிலைபெற்று இருக்கின்றன. இவற்றின் அடிப்படையில், குமரிக்கண்டத்தின் நிலைமை நான்கு படிநிலைகளைக் கடந்து வந்துள்ளதாக அறிய முடிகிறது. அவை:-

1.ஆப்பிரிக்காவோடும் ஆத்திரேலியாவோடும் கூடிய பழம் பாண்டிநாடு
2.ஆப்பிரிக்கா நீங்கிய பழம் பாண்டிநாடு
3.ஆத்திரேலியாவும் நீங்கிய பழம் பாண்டிநாடு
4.சிறிது சிறிதாய்க் குறைந்துவந்த பழம் பாண்டிநாடு


மேலே சொல்லப்பட்ட அனைத்தையும் ஒட்டுமொத்தமாகக் கட்டுக் கதைகளென ஒதுக்கிவிட முடியாது. குமரிக்கண்டம் பற்றிய அரிய செய்திகள் பல தமிழ் இலக்கியத்திற்கும் தமிழ் மக்களுக்கும் சொந்தமானதாக இருப்பதால் அவை இன்னமும் தீவிர ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் இருப்பதாக ஒரு கருத்தும் நிலவுகிறது.

வரலாற்றை உண்மைக்குப் புறம்பாகத் திரித்துக் கூறுவது மாபெரும் கலங்கம் என்ற கூற்றில் நம்பிக்கை உள்ளவர்கள் குமரிக்கண்ட ஆராய்ச்சியைத் தீவிரப்படுத்த வேண்டும். முறைசெய்யப்பட்ட நேர்மையான ஆய்வுக்குக் உட்படுத்தப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்.

அப்போதுதான் 2012 படத்தில் நிகழும் பேரழிவை ஒத்ததான பாரியதோர் அழிவு குமரிக்கண்டத்திலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நிகழ்ந்த உண்மை தமிழ் இலக்கிய ஏடுகளிலிருந்து பெயர்த்தெடுக்கப்பட்டு, உலக வரலாற்று ஏட்டில் பொறிக்கப்படும்.

8 comments:

ஜீவன்பென்னி said...

எனக்கு இதுவரை தெரியாது இருந்த பல விசயங்கள் உங்களின் வலைப்பூவின் முலமாக தெரிந்துகொள்ள வாய்ப்பு அளித்ததிற்கு நன்றி.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் ஜீவன்பென்னி,

முதன்முறையாகத் தங்களை இங்கு காண்பதில் மகிழ்ச்சி. நன்றி, உங்கள் மறுமொழிக்கு.

தொடர்ந்து வாருங்கள்.

ELANGO T said...

வணக்கம்!இன்றுதான் உங்கள் வலைப் பதிவை பார்த்தேன்.சிறப்பாக உள்ளது.குமரிக்கண்டம் என்றவுடன் உள் வந்து விட்டேன்.விமர்சனங்கள் இருக்கத்தான் செய்யும்.ஒரு காலத்தில் பூமியின் மேற்பரப்பிலுள்ள எல்லா கண்டங்களும் ஒன்றாக இருந்தன என்று சொல்வார்கள்.தொடர்ந்து எழுதுங்கள். ---தி.தமிழ் இளங்கோ

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர்
தி.தமிழ் இளங்கோ,

வருக! முதன்முறையாக உங்களை திருத்தமிழில் காண்கிறேன். மகிழ்ச்சி.

//ஒரு காலத்தில் பூமியின் மேற்பரப்பிலுள்ள எல்லா கண்டங்களும் ஒன்றாக இருந்தன என்று சொல்வார்கள்.//

'பெங்கியா' என்று அதற்குப் பெயர். இன்றைய உலக வரைபடம் உருவாக எத்தனை ஆயிரத்தாண்டுகள் (Millenium) பிடித்தனவோ?

2012 படத்தில் இறுதியில் ஆப்பிக்கா கண்டம் மட்டும் சில சிதைவுகளோடு நிலைபெறுவதாகக் காட்டுகிறார்கள்.

அப்படித்தான், ஒன்றாக - ஒரு கண்டமாக இருந்த உலகம் இன்று உடைந்துபோய் ஏழு கண்டங்களாக - எழுநூறு தீவுகளாக ஆகிவிட்டது.

இப்படியெல்லாம் ஆகுவதற்கு முன்பு இருந்ததுதான் குமரிக்கண்டம் எனும் லெமூரியா என சொல்லப்படுகிறது.

குமரிக்கண்ட உண்மைகள் எப்போதாவது உலகத்திற்குத் தெரிய வரலாம்.

2010 படத்தில் எவரசுட்டு மலை முக்கால்பகுதி மூழ்குவது போல முன்னாளில் மூழ்கிய குமரிநாடு எதிர்காலத்தில் மேல் எழும்பலாம்.

அன்று உலக வரலாறு புதுப்பிக்கப்படலாம்.

நீலகண்டன் said...

11'பெங்கியா' என்று அதற்குப் பெயர். இன்றைய உலக வரைபடம் உருவாக எத்தனை ஆயிரத்தாண்டுகள் (Millenium) பிடித்தனவோ?//

ஆயிரத்தாண்டுகள் இல்லை! முன்னூறு மில்லியன் ஆண்டுகள் பிடித்தன.

//இப்படியெல்லாம் ஆகுவதற்கு முன்பு இருந்ததுதான் குமரிக்கண்டம் எனும் லெமூரியா என சொல்லப்படுகிறது.//

அப்பொழுது மனித குலம் இன்னும் தோன்றவில்லை. இதில் எங்கு குமரி கண்டமும், அதனைப் பாடி வைத்த புலவர்களும் வந்தார்கள்?

குமரி கண்டத்தைப் பற்றி சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதானே பாடப்பெற்றன. அப்படியென்றால் அந்நிலப்பரப்பு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலப்பரப்பாகத்தானே இருக்க முடியும்?

லெமுரியா எனும் நிலப்பரப்பு குறித்து ஒரு வெள்ளையன் சொல்லிவிட்டுச் சென்றதை அப்படியே குமரி கண்டத்தோடு ஒப்பிட்டுக் கொண்டு இன்றுவரை வரலாற்றை திரித்துக் கொண்டிருக்கிறார்களே, என்னவென்று சொல்வது?!

தமிழறிவு இருந்தால் மட்டும் போதாது, அறிவியல் அறிவும் இருக்க வேண்டும். மொழி ஆராய்ச்சியாளர்கள் பெரும்பாலும் அறிவியலையும் வரலாற்றையும் திரிப்பது ஒரு சடங்காகிவிட்டது! அதுவும் தமிழ் மொழி ஆராய்ச்சியாளர்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை!

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் நீலகண்டன்,

மீண்டும் வந்ததற்கும் மறுமொழி இட்டதற்கும் நன்றி.

//குமரி கண்டத்தைப் பற்றி சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதானே பாடப்பெற்றன. அப்படியென்றால் அந்நிலப்பரப்பு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலப்பரப்பாகத்தானே இருக்க முடியும்?//

வரலாற்றுக் காலத்திற்கு முன்பாகவே கடலுக்குள் மூழ்கிப்போன குமரி வரலாற்றைத் துல்லியமாக அறியமுடியாவிட்டாலும், அப்படி ஒன்று இருந்தது என்பதை நீங்களும் மறுக்கவில்லை என்பது தெரிகிறது.

//தமிழறிவு இருந்தால் மட்டும் போதாது, அறிவியல் அறிவும் இருக்க வேண்டும். மொழி ஆராய்ச்சியாளர்கள் பெரும்பாலும் அறிவியலையும் வரலாற்றையும் திரிப்பது ஒரு சடங்காகிவிட்டது! அதுவும் தமிழ் மொழி ஆராய்ச்சியாளர்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை!//

வரலாற்றை கண்டுபிடித்துச் சொல்வதற்கு நிலவியல், குமுகவியல், மாந்தவியல், தொல்பொருளியல், கடலாய்வியல் முதலான துறைகள் எந்த அளவுக்குப் பயன்படுகிறதோ அதேபோல் மொழியியலும் பயன்படும் - பயன்படுத்தப்படுகிறது என்பதை தாங்கள் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

அந்தவகையில், குமரிக்கான சான்றுகளும் ஆவணமும் தமிழ் இலக்கியத்தில் மட்டுமே இருக்கிறது என்பதைக் கண்டுசொன்னதே தமிழ் அறிஞர்கள்தாம். அவர்கள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் குமரிக்கண்டம் என்ற ஒன்று பற்றி இந்தியாவிலும் சரி மேல்நாட்டிலும் சரி ஒருத்தரும் மூச்சு பரிந்திருக்க மாட்டார்கள்.

"நான் சொல்வதை நம்பாத தமிழர்கள், நாளை இதையே மேலை நாட்டுக்காரர் வந்து சொல்லும்போது வாய்ப்பொத்திக் கேட்பார்கள்" என்று இராமலிங்க வள்ளலார் சொன்னார். நீங்கள் கூறுவதும் அப்படித்தான் இருக்கிறது.

தமிழ் அறிஞர்கள் மீது உங்களுக்கு அப்படியென்ன நம்பிக்கையின்மை..!!

குமரிக்கண்ட வரலாற்றை நம்பாமல் இருப்பது உங்களுடைய தனிப்பட்ட உரிமை..! ஆனால், அப்படி ஒன்று இருப்பதாக இலக்கியச் சான்றுகள் உறுதியாக இருப்பதால் அதனை நம்புவதும்.. அனைவருக்கும் சொல்லுவதும் எனது பிறப்புரிமை!!

simbu said...

திரு நீலகண்டன் அவர்களே ....

குமரி காண்டம் இருந்த காலத்தில் இந்த உலகில் வேறு எந்த இடத்திலும்
மனிதர்கள் வாழ்ந்திருக்கவில்லை என்பது உண்மை .... .....

அதனால்தானே ... கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடிகளானோம் ....... ?

எஸ் வி எசிச்டேது பிரோம் Ice Age........


சுப.நற்குணன் அவர்களே .....

திரு நீலகண்டன் போன்றோர் தமிழின் வளர்ச்சியை தடுக்க பிறந்துகொண்டே இருப்பார் ....
பார்பனன் தமிழன் அல்ல என்று புரிந்துகொள்ளும் ஞானம் அவர்களுக்கு இல்லை ....

இந்தியாவில் தொல்பொருள் துறையினரால் தமிழர்களுக்கு சாதகமாக கண்டுபிடிக்கப்படும் எல்லா தடயங்களும் அழிக்கபடுகின்றது .....

வட இந்தியர்கள் இதற்க்கு முழு முதற் காரணம் .....

வீரமாமுனிவன் மறுபடி வந்து இவர்களுக்கு புரியவைப்பான் ....


இங்ஙனம்
சிலம்பரசன்

Somz said...

எத்தனை காலம் தான் உண்மையை மூடி வைக்க முடியும்? For all those who are interested to know more search for "Graham Hancock".
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13433%3A2011-03-08-15-11-05&catid=25%3Atamilnadu&Itemid=137

Hancock's book 'Underworld' talking about kumarikandam in .epub format

http://www.wupload.com/file/753837256/

இப்படி ஒரு ஆய்வு 2002-லேயே நடந்து முடிந்திருக்கிறது. ஆனால் ஒரு துண்டு செய்தியோடு வழக்கம்போல் உதறித் தள்ளி இருக்கிறார்கள். இது திட்டமிட்டு செய்யப்பட்டதா இல்லை இந்தியப் பரம்பரை வியாதியான "அண்மை இகழ்ச்சி"-யா இன்று தெரியவில்லை. ஆனால் அப்போது social media கிடையாது, youtube கிடையாது. அவர்களால் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடிந்தது. இப்போது நம்மால் நிறைய செய்ய முடியும். தகவல் அறியும் திட்டத்தின் (RTI act) கீழ் எழுதிக் கேட்போம் இப்போதைய நிலைமையை , இந்த புத்தகத்தை மேற்கோள் காட்டியோ அல்லது மொழி பெயர்த்தோ இன்றைய தமிழ்ச் சூழலுக்கு இதை அறிவிப்போம், ஆவணப் படங்கள் எடுத்து youtube-ல் போடுவோம் அல்லது குறைந்த பட்சம் நம்மால் முடிந்த வரை இந்த செய்தியை பரப்புவோம்.

Blog Widget by LinkWithin