Tuesday, November 17, 2009

2012 படம்.. தமிழருக்குச் சொல்கிறது ஒரு பாடம்

ஒட்டுமொத்த உலகமே எதிர்ப்பார்த்திருந்த படம்தான் 2012. இப்போது வெளிவந்து உலகத்தையே கதிகலங்க வைத்துக்கொண்டிருக்கிறது.

இப்படியொரு பேரழிவு பூமிப் பந்தைப் புரட்டிப்போட்டுவிடுமா? என்ற ஒரு மெல்லிய அச்சத்தைப் படம் பார்ப்பவர் உள்ளத்தில் விதைத்துவிட்டுப் போகிறது 2012.


உலகம் இதுநாள்வரையில் கண்டிராத மிகப் பூதாகாரமான படமாக இதனைத் துணிந்து சொல்லலாம். கணினி வரைகலைகள் (கிராபிக்சு), ஒளி – ஒலி புதுமைகள், விறுவிறுப்பான படத்தொகுப்பு, வாய்ப்பிளக்க வைக்கும் காட்சியமைப்பு, ‘உச்சு’க்கொட்ட வைக்கும் நச்சென்ற உரையாடல், நெஞ்சத்தை உருக்கும் பாத்திரங்கள், சிரிப்புக்கும் சில இடங்கள் என அனைத்து கோணத்தையும் கவனமாகச் செதுக்கி சிறந்த ஒரு திரைப்படத்தை வழங்கியிருக்கிறார் ரோலண் எமரிச்சு (Rolland Emmerich).

படம் தொடங்கியது முதற்கொண்டு இறுதி வரையில் பார்வையாளரைக் கட்டிப்போட்டு விடுகிறது படம். ஒவ்வொரு காட்சியிலும் அடுத்த கட்டத்தை நோக்கி பார்ப்பவர் மனம் எம்பி ஓடிக்கொண்டே இருக்கும் அளவுக்கு கொஞ்சமும் விறுவிறுப்பு குறையாமல் சூறாவளி வேகத்தில் படம் பறக்கிறது.

அப்பாடா என்று பெருமூச்சு விடும்போது ஐயோ என்று அலறவைக்கின்றன சில காட்சிகள்... ஐயோ என திடுக்கிடும் இடங்களில் அப்பாடா என்று ஆறுதல் தருகின்றன சில காட்சிகள்..!

இப்படியாக, 2012 படத்தில் வரும் காட்சிகள் தமிழர்களுக்கு ஒரு பாடத்தைச் சொல்கிறது.. அதுவும் வரலாற்றுப் பாடம்!

என்ன உங்கள் நெற்றியை மடித்துக்கொண்டு புருவங்கள் மேலே ஏறுகின்றன..! தொடருங்கள்..!

2012 திரைப்படக் காட்சிகள், தமிழ் வரலாற்றில் படித்த குமரிக்கண்ட அழிவை என் கண் முன்னால் கொண்டுவந்து நிறுத்தியது.

“குமரிக்கண்டமா! அது என்ன?” என்று சிலர் வினவக்கூடும்..!


உலகின் முதன் மாந்தன் தோன்றிய மண் குமரிநாடு. அதுவே தமிழரின் முதலாவது தாய்மண். அங்கு பழந்தமிழர்கள் 49 நாடுகளைக் கட்டியெழுப்பி ஆட்சி செய்தனர். குமரிக்கண்ட மாந்தன் பேசிய மொழிதான் தமிழ்.

இறையனார் களவியலுரையிலும் இளம்பூரனார் தொல்காப்பிய உரையிலும் இன்னும் பிற இலக்கியங்களிலும் குமரிக்கண்டம் பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. குமரிநாடு பற்றிய வரலாற்றுக் குறிப்புகளுள் ஒன்று இது:-

“முதன்முதலில் குளிர்ந்தது உலகின் மேற்பரப்பே. அந்நிலம் தமிழ் நிலமே. அப்பகுதி அப்படி முதல் நிலமாக அமையக்காரணம் உலகின் நடுக்கோட்டிற்கு அணித்தாய் இருந்தமையே. அம்முதல் நிலமே குமரிக்கண்டம். குமரிமைல ஆறுகொண்டு குமரிநாடு என்று பெயரிட்டனர். இதன் வடக்கே குமரியாறு தெற்கே பஃறுளியாறு என்பவற்றின் இடையே கீழ்மேலாக எழுநூறு காவதம் பரப்பாக நீண்டு கிடந்தது. இது நாற்பத்தொன்பது நாடுகளாகப் பிரிக்கப்பெற்றிருந்தது. ஏழ்மதுரை நாட்டுக்குத் தென்பால் இருந்த காரணத்தால் மதுரை ‘தென்மதுரை’ எனப்பட்டது. இதனை அரசிருக்கையாகக் கொண்டு ஆண்டவன் ஆழிவடிவம் பலம் நின்ற பாண்டியன் என்ற முதலாம்நிலம் தரு திருவிற்பாண்டியன்....” (தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம், தொகுதி2, ஐந்தினைப் பதிப்பகம், சென்னை. 1987.ப.1670.)

“பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள”
என்று குமரிநாட்டைப் பற்றி கூறப்பட்டுள்ள வரிகளுக்கு 2012 படமே சரியான விளக்கவுரையாக எனக்குப் பட்டது. இந்தப் படம் குமரிக்கண்ட வரலாற்றுப் பேரழிவுக்கு நல்ல பாடமாக இருக்கிறது என்பது என் கருத்து.

இன்றைய இந்திய பெருநிலப்பரப்புக்குக் கீழே இருந்ததாகச் சொல்லப்படும் குமரிநாடு அல்லது குமரிக்கண்டம் அல்லது கோண்டுவானா அல்லது லெமூரியா கண்டமும் இப்படிதான் மாபெரும் பேரழிவுக்கு உள்ளானதாக வரலாற்று ஆசிரியர்கள் சொல்லுகின்றனர். அங்கு மூன்று முறை பாரிய கடற்கோள்கள் (சுனாமி) ஏற்பட்டதாகத் தமிழ் இலக்கியம் சான்று சொல்லுகிறது.

மூன்று கடல்கோள்களுள் முதலாவது கடல்கோள் கி.மு. 2387 இல் நிகழ்ந்தது. இரண்டாவது கடல்கோள் கி.மு. 504 இல் நிகழ்ந்தது. மூன்றாவது கடல்கோள் கி.மு. 306 இல் ஏற்பட்டதாக குறிப்புகள் சொல்லுகின்றன. (The Date of Tolkappiyam, Annals of Oriental Research, University of Madras, Vol.XIX part II, 1964, Reprint p. 16-17)

நீங்கள் 2012 படத்தைப் பார்த்தவரா? கொஞ்சம் மெனக்கெட்டு குமரிகண்ட வரலாற்றை தேடிப் படியுங்கள். தமிழரின் வரலாறு தெளிவாகத் தெரியும்.

நீங்கள் குமரிக்கண்ட வரலாற்றைப் படித்தவரா? அருகிலுள்ள பட அரங்கிற்குச் சென்று 2012 படத்தைப் பாருங்கள். தமிழரின் வரலாறு தெளிவாகப் புரியும்.

பழந்தமிழரின் தாயகமாகச் சொல்லப்படும் குமரிக்கண்டம்,
பழந்தமிழின் பிறப்பிடமாகக் கருதப்படும் குமரிநாடு,
தொன்மை மாந்தனின் தோற்றுவாயாக நம்பப்படும் கோண்டுவானா,
குரங்கினத்திலிருந்து மாந்தரினம் பரிணாமம் அடைந்த நிலமாக இருந்து கடலுக்குள் மூழ்கிப்போன லெமூரியா கண்டத்தின் வரலாற்றைத் தமிழர்கள் கண்டிப்பாக அறிந்துகொள்ள வேண்டும்.

அதற்குக் கீழ்க்காணும் சில வலைமணைகள் துணையாக இருக்கும்.

http://www.tamilcc.org/thamizham/ebooks/5/468/468.pdf

http://www.noolaham.net/project/02/151/151.htm

http://thonmai.blogspot.com/2007/12/blog-post.html

http://www.geotamil.com/pathivukal/mayilangkuudal_p_nadarasan_on_tamilinthonmai.htm

http://www.tamilpayani.com/tamilsatiram/viewtopic.php?f=5&t=293&start=0&st=0&sk=t&sd=a#p1033

24 comments:

நீலகண்டன் said...

அறிவியல் ரீதியில் குமரி கண்டம் என்பது நிரூபிக்கப்படாத ஒரு விடயம். அஃது ஆழிப் பேரலையால் அழிந்துபோனது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இல்லை. குமரி கண்டம் என நீங்கள் சுட்டிக்காட்டும் மாபெரும் நிலப்பரப்பு ஆழிப்பேரலையால் மூழ்கடிக்கப்பட்டிருந்தால் பூகோல வரைப்படமே முற்றிலும் மாறுதலை எதிர்நோக்கியிருந்திருக்கும். தெற்கு ஆசியா, மற்றும் தென்கிழக்காசிய நிலப்பரப்புகள் சில லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி இன்றுவரை அதிக மாறுதல்களைப் பெற்றிருக்கவில்லை. இதில் குமரி கண்டம் ஆழிப் பேரலையில் மூழ்கியது அறிவியலுக்கு சற்றும் ஒவ்வாத கருத்தாகும். தமிழினம் என்பது ஆதி மனிதன் ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து இடம்பெயர்ந்து இந்திய துணைக்கண்டத்திற்கு வந்தடைந்து பின்பு தங்களுக்கென தனி நாகரீகமொன்றினை அமைத்துக் கொண்டவர்கள் ஆவர். இக்கூற்றிற்கு உயிரியல் ஆவணங்கள் பக்க பலமாக இருக்கின்றன. மனிதன் தோன்றிய கண்டம் ஆப்பிரக்க கண்டம் எனக் கொள்க. ‘2012’ படத்தின் இறுதியில் ஆழிப்பேரலையில் உலக வரைபடமே முற்றிலும் மாறுபட்டிருப்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

தமிழுணர்வு இருத்தல் அவசியம், அதற்காக சரித்திரத்தை உண்மைக்குப் புறம்பாக திரித்து கூறுவதால் அது மனித வரலாற்றிற்கே ஏற்பட்ட கலங்கமென அறிக.

நன்றி.

யூர்கன் க்ருகியர் said...

ரொம்ப நன்றி நண்பரே

சுப.நற்குணன்,மலேசியா. said...

திருத்தமிழ் அன்பர் நீலகண்டன்,

தங்களின் வருகைக்கும் விளக்கத்திற்கும் நன்றி மொழிகின்றேன்.

குமரிக்கண்டம் பற்றிய பல உண்மைகள் இன்னும் அறியப்படாமல் அல்லது அறிவிக்கப்படாமல் இருக்கலாம். அதற்காக, குமரி வரலாற்றை அறவே இல்லை என மறுத்துவிட முடியாது. குமரிநிலம் இருந்ததற்கும் பின்னர் ஆழிப்பேரலையால் அழிந்ததற்கும் இலக்கியச் சான்றுகள் நிறைய உள்ளன.

குரானிலும் விவிலியத்திலும் கூறப்படும் ஆதாம் ஏவாள் ஆகிய முதல் மாந்தர் பிறந்த இடமாகச் சொல்லப்படும் பகுதியும் இந்த குமரிநிலமாக இருக்கலாம் என்பது ஆய்வாளர்கள் கருத்து.

இன்று உலகம் முழுவதும் படிப்பிக்கப்படும் வரலாறு, நிலவியல், மாந்தவியல் முதலான கல்வி முறையானது குமரிக்கண்டத்தைப் பேசவில்லை என்றாலும், அது ஆய்வுக்குரிய ஒன்றே ஆகும். ஆகவே, குமரிக்கண்ட வரலாற்றை முற்றிலுமாக மறுத்துவிடுவதும் சரியல்லவே.

குமரிக்கண்ட உண்மையைத் தமிழகப் பேரறிஞர் மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் தமது 50ஆண்டுகால ஆய்வுகளின் வழியாக நிறுவியுள்ளார். அவர் வழியில் பலரும் வழிமொழிந்துள்ளனர். இந்திய வரலாற்றை வடக்கிலிருந்து தொடங்காமல் தெற்கிலிருந்தே தொடங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

எந்தவித மறைப்புகளும் இருட்டடிப்புகளும் கீழறுப்புகளும் இல்லாமல் ஆய்வுகள் நடைபெற்று அறிவிக்கப்படுமானால்.. இன்று உலகம் நம்பிக்கொண்டிருக்கும் வரலாற்றுச் செய்திகள் பல பொய்யாகலாம்; புதிய உண்மைகள் வெளிச்சத்திற்கு வரலாம்.

இப்படியொரு காலம் கனியுமா? இன்றைய ஆட்சியாளர்களும் வல்லரசுகளும் தமிழன் வரலாற்றை வெளிப்படுத்தத் துணிவார்களா?

//தமிழுணர்வு இருத்தல் அவசியம், அதற்காக சரித்திரத்தை உண்மைக்குப் புறம்பாக திரித்து கூறுவதால் அது மனித வரலாற்றிற்கே ஏற்பட்ட கலங்கமென அறிக.//

தமிழன் சொன்னால் கலங்கமா? இன்று உலகில் எத்தனை இனத்துக்காரன் தன்னுடைய அதிகார பலத்தால்; ஆட்சி பலத்தால் பொய் புரட்டுகளைச் சொல்லியும் ஆவணப்படுத்தியும் வரலாற்றைத் திரித்து எழுதி வைத்திருக்கிறான் என்று தேடிப்பார்த்தால் தெரியும்.

ஒரு சில இனத்தானைப் போல தமிழன் எந்தக் காலத்திலும் வரலாற்றை மறைத்தவன் அல்லன். மற்றவனை அடிமைப்படுத்தியவனும் அல்லன். மற்றவனை - மற்றவன் மொழியை பழித்தவனும் அல்லன்.

யாதும் ஊரே யாவரும் கேளிர், வாழு வாழ விடு போன்ற உயர்குணத்தினால் கெட்டுச் சீரழிந்து போனவன் தமிழன்.

சுப.நற்குணன்,மலேசியா. said...

திருத்தமிழ் அன்பர் யூர்கன் க்ருகியர்,

வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி.

Anonymous said...

யாரையா இவர்கள் இன்னும் இடையில் புகுந்து இன்னும் நம்மை ஆப்பு
அடிபதிலே குறியாக இருகிறார்கள் .தாங்களின் பதில் நல்ல சூடு .வாழ்த்துக்கள்
அய்யா சி.நா.மணியன்.

தமிழரண் said...

//இதில் குமரி கண்டம் ஆழிப் பேரலையில் மூழ்கியது அறிவியலுக்கு சற்றும் ஒவ்வாத கருத்தாகும்.//

குமரிக் கண்டம் அறிவியலுக்கு ஒவ்வாதது என்பதைவிட நீலகண்டன் புல்லறிவுக்கு எட்டவில்லையென்பதுதான் என் கருத்து.

ஹமோ செபியன் எனும் அறிவு மாந்தன் தோன்றி சற்றேழத்தாழ 1 இலக்கத்திலிருந்து 2 இலக்கத்திற்குள் என்று கூறப்படுகிறது. அப்படியிருக்க ஆப்பிரக்க கண்டத்திலிருந்து 50,000 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவிற்கு எப்படிச் சென்றான் என்பதனைத் தன் அறிவியல் அறிவால் நீலகண்டன் விளக்க முடியுமா??

//தமிழுணர்வு இருத்தல் அவசியம், அதற்காக சரித்திரத்தை உண்மைக்குப் புறம்பாக திரித்து கூறுவதால் அது மனித வரலாற்றிற்கே ஏற்பட்ட கலங்கமென அறிக.//

நல்ல தமிழறிவு இருத்தல் வேண்டும். தமிழ், தமிழர் வரலாறு உணர்தல் வேண்டும். வரலாறு தெரியாமல் வீணெ பிதற்றுவது தமிழின வரலாற்றிற்கே ஏற்படுகிற கலங்கமென அறிக.

ஐயா, சுப.நற்குணரின் பதில் நடுநிலை நின்ற தெளிந்த விளக்கம்.

நன்றி.

சுப.நற்குணன்,மலேசியா. said...

திருத்தமிழ் அன்பர் தமிழரண்,

மீண்டும் உங்களை இங்கு காண்பதில் மகிழ்ச்சி. நன்றி, உங்கள் மறுமொழிக்கு.

குமரிக்கண்டம் பற்றிய பல அரிய உண்மைகள் இன்னும் வெளிவராமல் இருக்கின்றன. இந்திய தேசியத்திற்கு குந்தகம் வந்துவிடுமோ என்ற குலைநடுக்கம் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

இயற்கை ஒருநாள் உண்மையைச் சொல்லக்கூடும். அந்த நாள் 2112 - 2212, 2912, 3012 என்று எதுவாகவும் அமையலாம். அப்போது, உலகின் எந்த மூலையிலும் ஒற்றைத் தமிழன்கூட இல்லாது போகலாம்.

Jeyapalan said...

நல்ல பதிவு வாழ்த்துகள்.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர்கள்
சி.நா.மணியன்,
செயபால்,

இருவரின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி.

தொடர்ந்து வருக!

மனோவியம் said...

தங்களின் சிறந்த கருத்துக்கு நன்றி ஐயா.தமிழர்களின் பெருமையை சில தமிழர்களே சிறுமைப் படுத்துவது வருந்ததக்க விடயம் ஐயா.

அடியேனும் சில விடயங்களை ஏற்கனவே குறிப்புக்களை எடுத்து எழுதியிருக்கின்றேன்.....

//இலெமூரியா என்ற குமரிக்கண்டம் என்னும் கண்டம் பண்டையக்காலத்தில் ஆழி பேரழிவுவிற்குட்பட்டதாக இலக்கியகூற்றுக்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய காப்பியங்கள் கூறுகின்றன. அஃது இன்றைய சுனாமியைப் போன்று பலமடங்கு பலம் வாய்ந்தவை.

அது போலவே அழிவிற்குட்பட்ட கண்டமான இலெமூரியாவும் குமரிக்கண்டத்துடன் ஒப்பிட்டுக்கூற்றுகள் பல உள்ளன. • புவியியல் காலங்களில் கண்ட ஓட்டங்கள் • புவிஓடு அசைவுகள் ஓர் அறிமுகம் • 1999ஆம் ஆண்டின் கடலியல் கப்பல்களின் புவியியல் கண்டுபிடிப்பு. • சுமதி ராமசாமியின் புத்தகத்தின் ஓர் விமர்சனம் : கற்பனைக் கண்டங்கள். "வட வேங்கடம் தென் குமரி தமிழ் கூறு நல்லுலகு" முன் நூல்களின் படி செந்நெறிக் காலம் தமிழர்களின் தோற்றம் மற்ற திராவிடர்களைப் போலவே இன்னும் தெளிவாக அறியப்படவில்லை. எனினும் அவர்கள் கி. மு. 6000-ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவிற்கு வந்திருக்கலாம் என்று தொல்லியல் மற்றும் மரபியல் ஆய்வுகள் கருதுகின்றன.

பண்டைய ஈரானின் இலாமைட் மக்களுடன் தமிழர்கள் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்பட்டாலும் அதனை நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் இல்லை. சிந்து சமவெளி நாகரிக மக்கள் தமிழர்களோ அல்லது திராவிடர்களோ தான் என்னும் கருத்தும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் குறிப்பாக ஆதிச்ச நல்லூரில் அகழ்ந்தெடுக்கப்பட்ட கி. மு. 1000-ஆம் ஆண்டு காலத்தில் புதைக்கப்பட்ட மண்பாண்டங்கள் தற்காலத் தமிழ்நாட்டில் தமிழர்கள் வாழ்ந்ததற்குச் சான்றாக விளங்குகின்றன. அப்புதை பொருட்களில் உள்ள குறிப்புகளும் பண்டைய தமிழ் இலக்கியங்களில் உள்ள குறிப்புகளும் ஒத்துப் போவதால், அக்கால கட்டத்தில் தென்னிந்தியாவில் தமிழர்கள் வாழ்ந்ததை இது உறுதி செய்கிறது. இவ்விடங்களில் சமீபத்தில் மேற்கொள்ளப் பட்ட அகழ்வுகளில் கிடைத்த பழைய தமிழ் எழுத்துக்கள் குறைந்தது கி. மு. 500 ஆண்டைச் சேர்ந்தவையாகும் என்கிறது. தமிழர் வழிபாட்டு தளங்களைப் பாருங்கள் பெரும் பெரும் கருங்கற்களைச் செதுக்கி வைத்திருபர்கள் இது பழந்தமிழர்கள் பல ஆயிரம் ஆண்டு வருந்தி உழைத்து பெற்ற அறிவு பொக்கிசம்.

தொல்காப்பியப் பாடல், ஏறத்தாழ 6000ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது. இங்கே வாழுகின்ற திராவிட இன மக்களின் தோற்றம் (origin) தொடர்பாகப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர், ஒரு காலத்தில் இந்தியா முழுதும் பரவி வாழ்ந்திருத்த திராவிடர், சிந்து வெளி நாகரீகத்துக்கு உரியவர்களுள் ஒரு பிரிவினராக இருந்தனர் என்று கருதுகிறார்கள். இவ்வினத்தவருடைய தெற்கு நோக்கிய பெயர்வு, ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கையுடன் தொடர்பு படுத்தப்படுகின்றது. இக் கொள்கைப்படி, வடக்கிலிருந்து வந்த ஆரிய ஆக்கிரமிப்பு திராவிடர்களை இன்றைய தென் இந்தியவிற்குள் மையபடுத்தி விட்டது. பழைய மதுரை மாநகரம் அழிப்பேரலையில் தப்பித்து வந்த பாண்டிய மன்னனான குலசேகர பாண்டியனால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. மேலே குறிப்பிடப்பட்ட மதுரை தற்கால மதுரைக்குத் தெற்கே அமைந்திருந்து. பிற்காலத்தில் ஏற்பட்ட கடல்கோளினால் முற்றாக அழிந்து போனதாகப் பழந் தமிழ் இலக்கியங்கள் வாயிலாக அறியக்கிடக்கின்றது//

பாலாஜி said...

///தமிழினம் என்பது ஆதி மனிதன் ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து இடம்பெயர்ந்து இந்திய துணைக்கண்டத்திற்கு வந்தடைந்து பின்பு தங்களுக்கென தனி நாகரீகமொன்றினை அமைத்துக் கொண்டவர்கள் ஆவர். ///
திரு நீலகண்டன் அவர்களுக்கு, தங்களுடைய வாதப்படி பார்த்தால், எகிப்திலிருந்து (ஆப்பிரிக்கவிலிருந்து)அடிமையாக இருந்த மக்களை மோசஸ் கடலைபிளந்து காப்பாற்றி வந்து பின்னர் அவர்கள் எல்லாநாடுகளுக்கும் பரவின்னார்கள் என்ற கூற்றை ஒத்துக்கொள்வதாக இருக்கிறது.
கிறிஸ்தவத்தியும் ஆபிரகாமிய ஆதிக்கத்தையும் நிலை நிறுத்தவே மனித இனம் ஆப்பிரிக்கவில் தோன்றியது என்ற புரட்டு கதையும், கிட்டத்தட்ட அவர்களுடைய பழைய ஏற்ப்பாடு எனப்படும் டுபாக்கூரை ஒத்து கதைக்களம் இருப்பதால் ஆராய்ச்சியும் ஆப்பிரிக்காவை மையப்படுத்திவிட்டது. இஸ்ரவேலரும், அவர்களின் அடிவருடிகளும், இந்தியாவிலிருக்கும் எவாங்கலிக்கர்களும், ஜிகாதிகளும் மறுக்க மாட்டார்கள்.

பாவப்பட்ட தமிழினம் உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியன், முழுமுதல் ஈசன் எம்பெருமான் சிவனின் படைப்புகளாகிய மனித இனம், தமிழ்மொழி தோன்றிய பொதிகைமலை என்றால் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்.

////குரானிலும் விவிலியத்திலும் கூறப்படும் ஆதாம் ஏவாள் ஆகிய முதல் மாந்தர் பிறந்த இடமாகச் சொல்லப்படும் பகுதியும் இந்த குமரிநிலமாக இருக்கலாம் என்பது ஆய்வாளர்கள் கருத்து.///


பகுத்தறிவுப் பாசறையும், அழகிய தமிழறிஞர்களும், தமிழக மற்றும் உலக அறிவு ஜீவிகளும் வெள்ளைத்தோலுக்கு இன்னமும் அடிமைதான் என்று ஆணித்தரமாக நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழோடும் தமிழரின் கலாச்சாரமும் ஆபிரகாமிய வழித்தோன்றல்கள் என்பதை வீட்டின் புறங்கடை வழியாக குள்ளனரித்தனமாக் புகுத்துவதே இவர்களின் நோக்கம்.
ஆதாம் ஏவாள் கூற்றே ஆதாரமற்றது. குருட்டுனம்பிக்கையை கூடையில் இட்டு கூவி விற்க்க சுப. நற்குணன் வழிஅமைக்க கூடாது. ஆதாம் ஏவாள் எந்த தமிழ் இலக்கியத்தில், எந்த் தமிழ் மறையில் சொல்லப்பட்டிருக்கிறது.

மு.முகிலன் said...

2012 படத்தில் இன்னும் ஒரு முக்கியமான பாடத்தை தமிழன் கற்றுக்கொள்ளவேண்டும். வெறும் அரசாங்கத்தையும் அரசியல்வாதியையும் நம்பியிருந்தால் இறுதியில் SATNAM என்ற விஞ்ஞானிக்கு வந்த கதிதான் நமக்கும். படத்தின் படி ஒரு தமிழனும் (இந்தியனும்தான்) பிழைக்கவில்லை.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் பாலாஜி,

//ஆதாம் ஏவாள் கூற்றே ஆதாரமற்றது. குருட்டுனம்பிக்கையை கூடையில் இட்டு கூவி விற்க்க சுப. நற்குணன் வழிஅமைக்க கூடாது. ஆதாம் ஏவாள் எந்த தமிழ் இலக்கியத்தில், எந்த் தமிழ் மறையில் சொல்லப்பட்டிருக்கிறது.//

ஆதாம் ஏவாளுக்கும் எந்தவொரு தமிழ் இலக்கியத்திற்கும் தொடர்பில்லைதான் ஐயா.

குமரிநிலம் இருந்ததை உறுதிபடுத்தும் பொருட்டு அதனைச் சொல்ல நேர்ந்தது. ஏதன்சு நகரமும் இங்குதான் இருந்தது என்ற செய்தியும் உள்ளது.

வரலாற்றுக் காலத்தை அறிந்துகொள்ள இந்தக் குறிப்புகள் உதவலாம் என கருதினேன்.

தங்கள் வருகையைக் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். நல்ல தகவலுடன் கூடிய மறுமொழிக்கும் மிக்க நன்றி ஐயா.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் மு.முகிலன்,

//படத்தின் படி ஒரு தமிழனும் (இந்தியனும்தான்) பிழைக்கவில்லை.//

புவியின் வெப்பநிலையை முதலில் கண்டு சொல்லி, அதனால் புவி வெடிக்கக்கூடும் என்பதையும் உறுதிபடுத்தி, இறுதியில் தப்பிக்க முடியாமல் ஏமாந்துபோன சத்னம் எனும் இந்தியனின் நிலைமை கவலைக்குரியதுதான்.

என்ன செய்வது! தமிழன் போல ஏமாந்த ஆயிரத்தில் ஓர் இந்தியனோ அவன்...!! அல்லது வடநாட்டில் குடியேறிய தமிழன் வழித்தோன்றலோ அவன்..!!

உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி. தொடர்ந்து வருக!

மனோவியம் said...

//ஆதாம் ஏவாள் கூற்றே ஆதாரமற்றது. குருட்டுனம்பிக்கையை கூடையில் இட்டு கூவி விற்க்க சுப. நற்குணன் வழிஅமைக்க கூடாது. ஆதாம் ஏவாள் எந்த தமிழ் இலக்கியத்தில், எந்த் தமிழ் மறையில் சொல்லப்பட்டிருக்கிறது.//

//ஆதாம் ஏவாளுக்கும் எந்தவொரு தமிழ் இலக்கியத்திற்கும் தொடர்பில்லைதான் ஐயா.//

எந்த ஒரு கருத்தும் ஆதார பூர்வ்மாக நிறுவாத வரை இந்த உலகம் சந்தேக கண்கொண்டுதான் பார்க்கும்.உண்மைகளைக்கூட மறுக்கத்தான் செய்யும்.ஒரு வட்டம் போட்டு அதிலே கட்டம் போட்டு வாழம் மனிதனின் சட்டம் ஐயா அது,,,
உண்மைகளை வெளிக்கொணர கடல் அகழ் ஆராச்சியில் இறங்கினால் தான் உண்டு....தங்கம் இருந்தால் தோண்டுவார்கள்.தமிழன் புதையுண்ட இடம்,யார் முன் வருவார்கள்?

பண்டைக் காலத்தில் வாழ்ந்து வந்த நம் முன்னோர் வாழ்க்கைபற்றி அறிய நம் உள்ளங்கள் கொந்தளிப்பது இயற்கை.

ஆதியில் பிறந்தாதனால் ஆதம் என்றும் அவனுக்கு ஏவள் செய்ததாதனால் ஏவாள் என்று கூறப்ப்டுகிறது.

ஆதாம் ஏவாளின் பிள்ளைகளின் சமாதி. சமம் + ஆதி = ஆதிக்கு சமம் சமாதி....இனறும் இராம நாதபுரத்தில் வட்டாரத்தில் இருப்பாதாக கூறுகின்றனர்.12 அடி நீளம் உள்ள சமாதிகள் அவை.சில வருடங்களுக்கு முன் தீவி மூன்றில் "ஜெஜாக் ரசுல்" என்ற இஸ்லாமிய்ரின் சரித்திரத்தை ஆராயும் ஒரு சிறப்பு தொடரில் நான கண்ட சில விடயம்.

இலங்கையில் உள்ள சிவனொளி பாதம் ஆதாவது ஆதாம் இறங்கிய ஆதம் பிக் எனப்படும் பாத சுவடுகள் இருப்பதும் எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை.

பல ஆயிரம் ஆண்டுகள் செவிவழி வந்த கருத்துக்களை அவை.அறிவுக்கு
சில கருத்துக்கள் புறம்பாக இருக்கலாம், ஆனாலும் அவைகளிலும் உண்மைகள் இருப்பதை யாரால் மறுக்கமுடியும்?
ஏன் என்றால் மனித நாகரீகம் வடக்கில் இருந்து வந்ததில்லை.நாகரீகத்தின் பிறப்பிடம் குமரி கண்டம் அல்லது "மூய்" என்று சொல்லப்டுகின்ற பசிபிக் கடல் பகுதியில் இருந்து இன்றயா தென் அமெரிக்கா வரையுளள நிலப்பகுதியாகும். கடற்க்கோல்களினால் அழிந்த நாகரீக ம்க்கள் வட்க்கு நோக்கி சென்றதானால் ஏற்ப்பட்ட இன்றைய நாகரீக வளர்ச்சி மையங்கள் எகிப்து.பாபிலோன் கிரக்கம் சிந்து. சீன நாகரீகங்கள்.

எகிப்து.பாபிலோன் கிரக்கம் சிந்து
நாகரீகங்கள் அடிப்படை நம்து தமிழர் நாகரீக பண்பாடு கூறுகளை கொண்ட்டிருக்கும்.அந்த மக்களின் மூதாயார்களின் சரித்திர கூறுகளை ஆராய்ந்தால் அவர்களும் பெரும் ஊழிக் காற்றில் அல்லது கடற்க்கோள்களினால் தப்பித்த வரலாற்றைக் கூறுவார்கள்.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் மனோகரன் கிருஷ்ணன்,

உங்கள் மறுமொழிகள் எனக்கு மேலும் ஊக்கத்தை அளிப்பனவாக உள்ளன. ஒரு உண்மைக்காக போராடும்போது அதற்குத் துணையாகத் தோள்கொடுக்கும் தோழமை உணர்வை உங்கள் மறுமொழிகளிக் காண்கிறேன்.

உங்களை என் உள்ளத்தோடு நெருங்கவைத்த தமிழன்னைக்கு நன்றி.

இனிய தமிழை இணைந்து காப்போம் நண்பரே.

balaji said...

////குமரிநிலம் இருந்ததை உறுதிபடுத்தும் பொருட்டு அதனைச் சொல்ல நேர்ந்தது. ஏதன்சு நகரமும் இங்குதான் இருந்தது என்ற செய்தியும் உள்ளது////


\\\ஆதாம் ஏவாளின் பிள்ளைகளின் சமாதி. சமம் + ஆதி = ஆதிக்கு சமம் சமாதி....இனறும் இராம நாதபுரத்தில் வட்டாரத்தில் இருப்பாதாக கூறுகின்றனர்.12 அடி நீளம் உள்ள சமாதிகள் அவை\\\\\


நகைச்சுவைத் ததும்பும் எழுத்துக்கள். செவி வழியோ, செய்யுள் வழியோ வராத கதைகள் வெள்ளையனின் மதம் பரப்பும் எவாங்கலிக்கர்களின் புரட்டு வார்த்தைகளினூடே வந்தால் ஏற்றுக்கொள்வீர்கள? திருவள்ளுவரையும், திருக்குறளையும், திருவாசகத்தையும் கிறிஸ்த்தவ நூல்களென புரட்டு ஆராய்ச்சிமூலம் நிரூபிக்கவும், தமிழ்னுடைய உயர்ந்த நாகரீகம் ஆபிரகாமிய இற்க்குமதி சரக்கு என நிருபிக்க கங்கணம் கட்டித்திரியும் நேரத்தில் ஆதமும், ஏவளும் இலங்கையில் எற்ங்கி கால் டாக்ஸி பிடித்து இஸ்ரேல் போனார்கள் என சொல்லித்திரியுங்கள்.

\\ஏதன்சு நகரமும் இங்குதான் இருந்தது என்ற செய்தியும் உள்ளது.///

இனி உரக்கச்சொல்லுங்கள் பாலஸ்தீனம்மும் அரசன் சாலமன் கட்டிய கோவில் தஞ்சாவூரில் உள்ளது என்று. ரொம்ப வசதியாப்போகும்.

என் கண்முன்னால் இடிக்கப்பட்டு இன்று பெறிய வான் முட்டும் கிரேக்க கட்டிடகலையில் ச்ர்ச்சுகள் தமிழ்னாட்டில் எப்படி உருவாகி கொண்டேபோகிறது. அதன் காலடியில் விழுந்து ந்ட்டெலும்பு முறிக்கப்பட்டு நிமிர்ந்து விட முடியாமல் அங்கே மடிந்துவிட்ட அய்யநார்கள், சுடலைமாடன்கள், எத்தனை பேர் தெரியுமா? அவர்களோடு சேர்ந்தே தமிழும் தமிழ் வரலாறும், தமிழ்கலாச்சாரமும் புதைக்கப்பட்டுவிட்டன. தமிழ் நாட்டிலிருந்து தமிழ்படும் அவஸ்த்தையை பார்த்து மனம் நொந்து மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். என் தாய்த்தமிழோடு விளையாடாதீர்கள். அமெரிக்கடாலர்களின் அரவணைப்புடன் தமிழ் இன தமிழ் மொழி, தமிழ் கலாச்சார அழிப்பு தமிழ் நாட்டிலும், ஈழத்திலும் நடந்து கொண்டிருக்கிறது. வாள்முனையில் வென்றார்கள் அன்று. வாய் நுனியில் வெல்கிறார்கள் இன்று. எப்போதும் தமிழன் தன்சுய சிந்தனையற்றவன் அவர் அப்படி சொன்னார் அவர் இப்படி சொன்னார் என்று அடுத்தவறின் (அய்ரோப்பியரின்) கூற்றையே நம்புகிறோம். அவர்களின் நோக்கமே நாம் ஒன்றுமற்றவர்கள் நாகரீகமெல்லாம் இற்க்குமதி செய்யப்பட்டவை என்று நிரூபிப்பதுதான். மலேசிய தமிழர்களுக்கு தமிழ்நாட்டு நடப்பு தெரியாது.

பின் குறிப்பு: ஏட்டு சுரைக்காய் கறிக்குதவாது.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் பாலாஜி,

ஒரு குறிப்பிட்ட மதத்திற்குச் சார்பாக நான் எழுதுவதாக நினைக்கிறீர்கள் போலும். சொல்லப்போனால், மதங்களின் மீது நம்பிக்கை இழந்துவிட்டவன் நான். எழுதப்பட்ட அனைத்தும் வரலாற்றில் நான் படித்தவையே அன்றி.. திணிக்கப்பட்டதல்ல என்பதை தாழ்மையுடன் கூற விரும்புகிறேன்.

//தமிழ் நாட்டிலிருந்து தமிழ்படும் அவஸ்த்தையை பார்த்து மனம் நொந்து மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். என் தாய்த்தமிழோடு விளையாடாதீர்கள். //

தங்களின் இந்த தமிழ்க்காப்பு உணர்வுக்கு நிகராக எந்த வகையிலும் குறைத்து மதிப்பிட முடியாத அன்பும் பற்றுதலும் தாய்த்தமிழ் மீது அடியேனுக்கும் இருப்பதாக நினைக்கிறேன்.

தமிழை மீட்டெடுக்கவும் - தமிழர் ஆட்சியைக் கட்டமைக்கவும் முன்னெடுக்கப்படும் எந்தவித செயற்பாட்டுக்கும் ஆதரவாக இருக்கவே எப்போதும் விரும்புகிறேன்.

//மலேசிய தமிழர்களுக்கு தமிழ்நாட்டு நடப்பு தெரியாது.//

முற்றிலுமாகத் தெரியாது என்பது உண்மை. அதற்காக, அறவே தெரியாது என்பதில் உண்மையில்லை.

உங்கள் தொடர் வருகைக்கு நன்றி. உங்கள் கருத்தாடல்களை விரும்பி வரவேற்கிறேன்.

Se.Gunalan said...

oru varalaadru unmaiyai vilakka murppadumpothu muthalil athanai aaivukku yeduthukkolla vehndume tavira udane atharkku maruppu karuthu therivithu nam athaavathu yenggal tamilargalin pathivugalai puraddi vida ninaippathu tavaraana seyalaagum yenbathe adiyenin thaazmaiyaana karuthu. nanri.

balaji said...

என்கருத்துக்களை பதிவிட துணிவில்லாத தொடைந‌டுங்கி ச்முதாயம். கடைசியில் நீங்களும் நிரூபித்துவிட்டீர்கள் அன்னிய மதம் பரப்பும் ஏவாஞ்சலிகளின் ஒத்து ஊதி என்று. தமிழ் போர்வைக்குள் மிசனறிகள். தமிழ் ரத்தம் குடிக்க வந்த ப‌சுந்தோல் போர்த்திய ......,.

என்றும் அன்புடன் நன்றியுடன்
பாலாஜி

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் பாலாஜி,

//என்கருத்துக்களை பதிவிட துணிவில்லாத தொடைந‌டுங்கி சமுதாயம். கடைசியில் நீங்களும் நிரூபித்துவிட்டீர்கள்//

இதற்கு கீழ்க்கண்ட எனது பதிவில் பதில் இருக்கிறது. தயவு செய்து பார்க்கவும்.

http://thirutamil.blogspot.com/2009/11/2010.html

எனக்கு வந்த பல மறுமொழிகளும் அவற்றுக்கு நான் கொடுத்த பதில்களும் மாயமாக மறைந்திருக்கின்றன.

என்ன நடந்தது? யார் செய்தார்? தெரியாமல் குழம்பியிருக்கிறேன் அன்பரே.

இதில் தொடை நடுங்க எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆக்கமான கருதாடல்களில் எனக்கு நம்பிக்கையும் ஈடுபாடும் இருக்கிறது.

உங்கள் மறுமொழிகள் அனைத்தும் "ம" திரட்டியில் சேமிக்கப்பட்டுள்ளன. பார்க்கவும். அதனைப் படியெடுத்து மீண்டும் அனுப்பினால், அதேபோல எனது மறுமொழிகளையும் எடுத்து மீண்டும் எழுதுகிறேன்.

இதில், எனக்கு உங்களால் உதவ முடிந்தால் நல்லது.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் பாவலர் செ.குணாளன்,

உங்களை முதன்முறையாகத் திருத்தமிழில் காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.

உங்கள் மறுமொழிக்கு மிக்க நன்றி.

தொடர்ந்து வாருங்கள். விரைவில், தமிழோடு வருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

தமிழந்தான்யா said...

எந்த ஊரு லூசப்பா நீயி ?

தமிழன் இன்னைக்கு ,நாளைக்கு எப்படு முன்னேறமுடியும் என சொல்லு , ஆதாரம் இல்லாத கதைவிட்டு எங்களை கொல்லாத

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் தமிழந்தான்யா,

//தமிழன் இன்னைக்கு ,நாளைக்கு எப்படு முன்னேறமுடியும் என சொல்லு , ஆதாரம் இல்லாத கதைவிட்டு எங்களை கொல்லாத//

சொந்த வரலாற்றை அறிந்துகொள்வதும் முன்னேறுவதற்கான ஒரு தகுதிதான் என நினைக்கிறேன்.

நிறைய ஆதாரம் சொல்லப்பட்டுவிட்டது.

நீங்கள் எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள் என்றே சொல்லாமல் என் ஊரை கேட்கிறீர்களே ஐயா..?

அதைகூட வெளியிடுகிறேனே.. லூசுதான் நானு. இருந்துவிட்டுப் போகட்டும்.

கடவுளைக்கூட திட்டுகிற இனம்தானே இது...!!

Blog Widget by LinkWithin