Saturday, October 03, 2009

தரங்குறைகிறது தமிழ்க்கல்வி! யார் பொறுப்பு?

ப்படியொரு சூடான வினாவை, மலேசிய நாட்டின் தமிழ்மொழி, தமிழ்க்கல்வி இதழாகிய ‘உங்கள் குரல்’ (ஆகத்து / செப்தெம்பர் 2009) முன்வைத்திருக்கிறது. திருத்தமிழ் வலைப்பதிவின் வாசகர்களாகிய ஆசிரிய நண்பர்களுக்கும் மற்றுள்ள தமிழன்பர்களுக்கும் இதனை இங்கு வழங்குகின்றேன். ‘உங்கள் குரல்’ இதழின் இந்தக் கருத்துக்கு மறுமொழியாக, உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன். -சுப.ந


தமிழ்வழிக் கல்வி என்பது, மாணவர்கள் கற்கும் எல்லாப் பாடங்களையும் தமிழில் கற்பது. தமிழ்க்கல்வி என்பது தமிழ்மொழியையே கற்பது. சுருங்கக் கூறின் தமிழில் கற்பது தமிழ்வழிக் கல்வி; தமிழைக் கற்பது தமிழ்க்கல்வி.

தமிழ்ப்பள்ளிகளில் கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களையும் தமிழிலேயே கற்பிக்கும் நல்வாய்ப்பு மீண்டும் கிடைத்திருக்கிறது. இதனால், தமிழ்ப்பள்ளிகளில் தமிழ்வழிக் கல்விக்கு இடையில் ஏற்பட்டிருந்த பாதிப்பு நீங்கிவிட்டது.

ஆனால், தமிழ்ப்பள்ளிகளில் தமிழ்க்கல்வியின் நிலை என்ன? தமிழ்ப்பள்ளிகளில் மட்டுமன்றி, உயர்க்கல்வி நிலையங்களிலுங்கூட தமிழின் தரம் மிகமிகத் தாழ்ந்துபோய்விட்டது. இதை நிறுவப் பெரிய ஆய்வுகள் தேவையில்லை. அங்கே வழங்கும் தமிழின் தரத்தைச் சற்றே கவனித்தால் நிலைமை தெற்றென விளங்கிவிடும்.

இதோ சில எடுத்துக்காட்டுகள்:-

“நான் அனுப்பிய கடிதமும் படங்களும் கிடைத்ததா?”
(படங்கள் – பன்மை, கிடைத்ததா - ஒருமை)

“இதை உங்கள் குரலில் இடம்பெற்றால் மாணவர்களுக்குப் பயன்படலாம்” (இதில் எழுவாய் இல்லை. ‘இது உங்கள் குரலில் இடம்பெற்றால்' என்று இருக்க வேண்டும்)

“நம் தமிழ்மொழி மிக்க இனியது”
(‘மிக்க’ பெயரெச்சம்; ‘இனியது’ என்ற வினைக்கு முன் ‘மிக’ என்ற வினை எச்சம்தாம் வரவேண்டும்)

“அவர்கள் இந்த விளக்கங்களை இதழில் வெளியிட்டு எழுத்தாளர்களும் பிறரும் பயன்பபெறுமாறு வெளியிட்டு வந்தனர்”
(‘வெளியிட்டு’ என்பது இருமுறை வந்தது பிழை)

மேற்கண்டவை, இங்கு பல்வேறு நிலைகளில் தமிழ்க்கல்வி கற்பவர்கள் எழுதிய வாக்கியங்கள்.

*கல்வி அமைச்சின் பாடத்திட்டப் பிரிவு வெளியிட்ட விளக்கவுரையிலே, வழவழ, திருதிரு, சிலுசிலு என்று கட்டாயமாக இணைந்திருக்க வேண்டிய இரட்டைக் கிளவிகள் வழ வழ, திரு திரு, சிலு சிலு என்று பிரிந்தே உள்ளன.

வானவில் தொலைக்காட்சி, தமிழின் இனிமை கூறும் நிகழ்ச்சியிலேயே “கற்க கசடறக் கற்றவை” என்று திருக்குறளைப் பிழையாக ஒலிக்கச் செய்கிறது. ‘மலைக்கள்ளன்’ என்ற திரைப்படப் பெயரை ‘மழைக்கள்ளன்’ என்று எழுதிக் காட்டுகிறது. மற்ற ஊடகங்களிலும் நிலைமை இத்தகையதே.

நம் நாளிதழ்கள், நாளும் தவறாமல் செய்துவரும் தமிழ்க்கொலை இவ்விதழில் (உங்கள் குரல்) மாதந்தோறும் சுட்டப்படுகிறது.

தமிழால் பெயரும் பரிசுகளும் பெறுகிற நமது எழுத்தாளர்களில் பலர் இலக்கியத்தில் இலக்கணமே தேவையில்லை என்று கூறும் அளவுக்கு தமிழ்ப்பகைவர்களாக ஆகிவிட்டனர்.

இவையெல்லாம் மாணவரின் தமிழறிவைக் கெடுப்பவையே.

தமிழ்வழிக் கல்விக்கு இடையில் நேர்ந்த பாதிப்பு அரசின் கல்விக் கொள்கை மாற்றத்தால் நேர்ந்தது. இப்போது நீங்கியது. ஆனால், தமிழ்க்கல்வியில் தமிழின் தரத்துக்கு நேர்ந்துவரும் கேட்டுக்குப் பொறுப்பானவர் யார்?

ஆசிரியர்களா? விரிவுரைஞர்களா? பேராசிரியர்களா? கல்வி அதிகாரிகளா? ஊடகங்களா? ஏடுகளா? எழுத்தாளர்களா?

அனைவருமே தம்மளவில் இதற்குப் பொறுப்பானவர்தாம். ஏனெனில், இவர்கள் அனைவரது பொறுப்பின்மையும் எப்படியோ ஒருவகையில் இதற்குக் காரணமாகிறது. எனினும், இதற்கு மூல முதனிலைக் காரணமானவர்கள் கல்வி அமைச்சின் தமிழ்ப் பாடத்திட்டப் பிரிவினரே ஆவர். இவர்களின் செயற்பாடு தமிழின் தரத்தைவிட தங்கள் கருத்தை மேலாகக் கருதும் போக்கையே காட்டுகிறது.

நம் நாட்டுச் சூழலில் தமிழ்க் கல்வியதிகாரிகள் தங்கள் பொறுப்புக்குத் தக்க தமிழறிவு பெற்றிருக்கும் வாய்ப்பு குறைவு. எனவே, அவர்கள் தமிழறிவுக் குறையை நாம் குற்றங்கூற விழையவில்லை. ஆனால், அவர்கள் தங்கள் பொறுப்புக்குத் தேவையான அளவுக்கு தமிழறிவை வளர்த்துக்கொள்ளாததும் இங்குள்ள தமிழ் அறிஞர்களைத் தக்கவாறு பயன்கொள்ள முன்வராததும் குற்றங்களே.

இவர்களுக்கு வாய்த்துள்ள அதிகாரம் பொறுப்பை நிறைவேற்றுவதற்கே அன்றி பொறுப்பை மறுத்தும் மறந்தும் விருப்பம்போல செயற்படுவதற்கன்று என்பதை உணர்ந்து, இவர்கள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.

தவறினால், அதைக் காலம் கட்டாயம் உணர்த்தும். அந்த உணர்த்தும் முறை மிகமிகக் கடியதாய் இருக்கும்!

  • நன்றி:- உங்கள் குரல் (ஆகத்து/செப்தெம்பர் 2009)

*பி.கு:- கல்வி அமைச்சின் பாடத்திட்டப் பிரிவு வெளியிட்ட விளக்கவுரையிலே இருந்த இரட்டைக்கிளவி தொடர்பான தவறுகள், புதிய பதிப்பில் திருத்தப்பட்டுள்ளன. எனினும், முன்னம் இருந்த வேறு சில தவறுகள் இன்னமும் திருத்தப்படாமலே உள்ளன. அவையும் திருத்தப்படுவது சாலச் சிறத்தது. -சுப.ந

9 comments:

அ. நம்பி said...

//`உங்கள் குரல்’ இதழின் இந்தக் கருத்துக்கு மறுமொழியாக, உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.//

பழனத்தில் களை வளர்ப்போர் உணர்ந்தால் சரி.

வேறு ஏதும் கூற விரும்பவில்லை ஐயா.

புலவன் புலிகேசி said...

//ஆசிரியர்களா? விரிவுரைஞர்களா? பேராசிரியர்களா? கல்வி அதிகாரிகளா? ஊடகங்களா? ஏடுகளா? எழுத்தாளர்களா?//

இவர்களை குற்றம் சொல்வதைவிட நமது தமிழில் அறிவியல் கண்டுபிடிப்புகள் ஏன் நிகழவில்லை என சிந்தித்து செயல்பட்டால் நிச்சயம் தமிழ்க் கொலையைத் தவிர்க்கலாம்....

மனோவியம் said...

உண்மைதான் ஐயா.எனக்கே மிகவும் வெட்கமாக இருக்கிறது.எழுத்து பிழைகள் மிகவும் மலிந்து விட்டன.திருத்துவதற்க்கு வழிமுறைகளை சொல்லித் தாருங்கள்.எங்களை போன்றோருக்கு ஏதுவாக இருக்கும்.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் ஐயா அ.நம்பி,

//பழனத்தில் களை வளர்ப்போர் உணர்ந்தால் சரி.//

உணர்த்த வேண்டியவர்கள் உணர்த்திக்கொண்டேதான் இருக்கிறோம்.
உணரவேண்டியவர்கள் உறங்கிக்கொண்டிருக்கிறார்களோ? என்றுதான் எண்ணத் தோன்றுகிறது ஐயா.

தங்கள் வரவுக்கு நன்றி.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் புலவன் புலிகேசி,

தங்களை முதன்முறையாகத் திருத்தமிழில் காண்கிறேன். அன்பு வரவேற்பு சொல்கிறேன்.

//இவர்களை குற்றம் சொல்வதைவிட நமது தமிழில் அறிவியல் கண்டுபிடிப்புகள் ஏன் நிகழவில்லை என சிந்தித்து செயல்பட்டால் நிச்சயம் தமிழ்க் கொலையைத் தவிர்க்கலாம்//

எந்த மொழியும் தானாகக் கண்டுபிடிப்புகளைச் செய்துகொள்ளாது. அந்த மொழிக்குச் சொந்தக்காரன்தான் முனைந்து கண்டுபிடிப்புகளைச் செய்ய வேண்டும்.

ஒன்று சொல்கிறேன். தன் சொந்த கண்டுபிடிப்பு.. உருவாக்கம்.. தன் சொந்த இரத்தம்.. தன் சொந்த பிள்ளைக்குத் தமிழன் அன்னிய மொழியில் பெயர் வைக்கிறானே!

எங்கே போய் முட்டிக்கொள்வது?

இந்த நிலையில் அறிவியல் கண்டுபிடிப்புக்கு இவன் தமிழில் பெயர்வைப்பான்.. தமிழை வளர்ப்பான் என்று நினைக்கிறீர்களா நண்பர் புலவர் புலிகேசி?

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் மனோகரன் கிருஷ்ணன்,

எழுத்துபிழைகள் சமயங்களில் சில இடங்களில் நம்மையும் அறியாமல் வந்துவிடுவது உண்டுதான்.

ஆனால், அதற்காக கொஞ்சமும் வருத்தமே படாமல்.. தக்கவர் சுட்டும்போது திருத்திக் கொள்ளாமல்.. தகுதியானவரின் தகவுரையைக் கேட்காமல்.. போவதென்பது கண்டிக்கப்பட வேண்டியதுதான்.

//திருத்துவதற்க்கு வழிமுறைகளை சொல்லித் தாருங்கள்.எங்களை போன்றோருக்கு ஏதுவாக இருக்கும்.//

நீங்கள் சொல்லும் இந்தப் பண்பு இருந்துவிடாலே போதுமானது. தமிழில் பிழைகளைப் காலப்போக்கில் பெருமளவில் குறைத்துவிடலாம்.

பி.கு:-நான் எழுதிய "இனியத் தமிழ் ஏடு; இலவய இதழ் - புதிய உதயம்" என்ற இடுகையில் "இனியத்" என்று வலிமிகுந்து வந்த பிழையை அன்புடை ஐயா அ.நம்பி அவர்கள் சுட்டி மின்மடல் விடுத்தார்.

ஆம்! தவறு என்று உணர்ந்தேன். உடனே திருத்தி விட்டேன். ஐயாவின் அன்பான சுட்டுதலுக்கு நன்றியும் சொன்னேன்.

இப்படி நம்மையும் அறியாமல் ஏற்படும் பிழைகளைத் திருத்திக்கொள்ள எல்லாரும் அணியமாக இருந்தால் தமிழ் வளம்பெறும்.

Anonymous said...

//.... பாடத்திட்டப் பிரிவினரே ஆவர். இவர்களின் செயற்பாடு தமிழின் தரத்தைவிட தங்கள் கருத்தை மேலாகக் கருதும் போக்கையே காட்டுகிறது.//

உண்மை ஐயா இது. தங்களின் தெளிவான உண்மையான கருத்தை அவர்கள் மேலாகக் கருதினால் பரவாயில்லை. ஆனால், தங்களுக்கே ஒழுங்காகத் தமிழ்தெரியாமல் இருக்க, நாம் சுட்டிக்காட்டினாலும், "எங்களுக்குத் தெரியும், தமிழில் எதை எழுதலாம் எழுதக்கூடாது என்பதை நாங்கள்தான் முடிவு செய்வோன் என்கின்றனர் சில முக்கிய அதிகாரிகள். இவர்கள் என்ன சங்கம் வைத்துத் தமிழ் வளத்தவர்களா? வளர்த்துக்கொண்டிருப்பவர்களா?

மாணவர்கள் செய்யும் மீண்டும் மீண்டும் தொடர்ந்து அதே தவற்றைச் செய்தால், ஆசிரியரே சினங்கொண்டு அடித்துவிடுகிறார். அப்படியிருக்க இந்தப் பாடத்திட்டப் பிரிவினரை என்ன செய்வது? சொன்னாலும் விளங்கமாட்டது? அவர்களே சொந்தமாக உணர்ந்தும் திருத்திக்கொள்ளுவதும் இல்லை.

உடனடியாக இலக்கண இலக்கிய விளக்கவுரையில் உள்ள தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும் பாடத்திட்ட அதிகாரிகள்!!

இப்படிக்கு;

அவர்களின் ஒரு சில பட்டறையில் கலந்துகொண்ட தமிழாசிரியர்.

இரா. சிவா said...

தமிழைச் சரியாக கற்காத தமிழாசிரியர்களும் பொறுப்பு என்பேன்.

அடலேறு said...

இரா. சிவா கருத்தை ஆமோதிக்கின்றேன்

Blog Widget by LinkWithin