Thursday, October 15, 2009

எசுபிஎம் தமிழ் இலக்கியம் இனி எட்டாக் கனிதானா?

14-10-2009இல் மலேசிய நண்பன் வெளியிட்ட செய்தி இது. எசுபிஎம் தேர்வில் தமிழ் இலக்கியப் பாடத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பைக் கருத்தில்கொண்டு அக்கறையோடு செயல்பட்டிருக்கும் ஐயா.சு.வை.லிங்கம், அவர்தம் குழுவினர் மலேசிய நண்பன் நாளிதழ் ஆகிய தரப்பினரை நன்றியோடு நினைத்துப்பார்த்து இதனை இங்கு பதிவிடுகின்றேன். –சுப.ந.


ந்தாம் படிவத்தின் தேர்வு முறையில் பாடங்களின் எண்ணிக்கையைப் பத்தாகக் குறைக்கும் நடவடிக்கையை 2012இல் செயல்படுத்த மலேசிய கல்வி அமைச்சு அறுதியிட்டு முடிவு செய்துள்ளது. அந்த முடிவினால், தமிழ் இலக்கியப் பாடம் எடுக்கும் மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், தமிழ்மொழியின் எதிர்காலம் பாதிப்படைய போகிறது. இச்சிக்கலுக்குத் தீர்வுகாண 20 இயக்கங்களின் சார்பில் கல்வி அமைச்சிடம் அறிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது.

தலைமைக் கல்வி இயக்குநரிடமும் நேரடியாகப் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. தமிழ் இலக்கியம் படிக்க முழுமையாக வரையறுக்கப்பட வேண்டுமென்று வற்புறுத்தப்பட்டது. தலைமை இயக்குநரும் பரிசீலிப்பதாகக் கூறினார். ஆனால், இதுவரை பதில் இல்லை. ம.இ.கா உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மலேசியத் தமிழ்க் காப்பகத்தின் தலைவரும் மலேசியத் தமிழ்மன்றத்தின் தேசியத் தலைவருமான சு.வை.லிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டிருக்கிறார்.மனிதவளத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் ஏற்பாட்டில் கல்வி அமைச்சின் தலைமை இயக்குநருடன் நடத்தப்பட்டச் சந்திப்பில் ம.இ.கா.வின் சார்பில் பிரதமர் துறை துணை அமைச்சர் எஸ்.கே.தேவமணி, ம.இ.கா. கல்விக்குழுத் தலைவர் டாக்டர் மாரிமுத்து, மனிதவளத் துறை அமைச்சின் செயலாளரும் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இயக்கங்களின் சார்பாக மலேசியத் தமிழ் காப்பகத்தின் தலைவர் சு.வை.லிங்கம், துணைத்தலைவர் டாக்டர் எஸ்.குமரன், உதவித் தலைவர் ரெ.சு.முத்தையா, செயலாளர் இரா.திருமாவளவன், தமிழாசிரியர் இலக்கியக் கழகத்தின் தலைவர் பச்சைபாலன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இலக்கியப்பட்டம் குறித்து பரிசீலனை செய்வதாக ஒப்புக்கொண்ட தலைமைக் கல்வி இயக்குநர் பதில் எதுவும் தெரிவிக்காமல் பள்ளிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பியிருப்பது கவலைக்குரியதாக இருக்கிறது.

இதை உணர்ந்து ம.இ.கா. தமிழ் இலக்கியம் படிக்க ஐந்தாம் படிவத்தில் 11 பாடங்களைத் தேர்வில் எழுத அனுமதிக்க வேண்டுமென்று ம.இ.கா. பேராளர் மாநாட்டில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பேராளர் மாநாட்டில் முன்மொழியப்பட்ட தீர்மானம் எந்தவிதமான விவாதமும் இன்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஆனால், கல்வி அமைச்சு அந்தத் தீர்மானத்திற்கு முக்கியத்துவம் வழங்காமல் தனது திட்டத்தை நிறைவேற்றுவதில் குறியாக இருக்கிறது. இடைநிலைப் பள்ளிகளுக்குப் 10 பாடங்கள் மட்டுமே என்ற உத்தரவு அறிக்கையும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ம.இ.கா.வின் கேரிக்கையைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாமல் புறக்கணித்திருப்பது ஏமாற்றத்தைத் தருகிறது. கல்வி அமைச்சின் திட்டம் நிறைவேற்றப்பட்டால், அறிவியல் துறை மாணவர்கள் தமிழ் இலக்கியம் படிப்பது முற்றாகத் தடைசெய்யப்படுகிறது. தற்போது குறைந்தது 1,000 (ஆயிரம்) அறிவியல் துறை மாணவர்கள் தமிழ் இலக்கியம் எடுப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.

கல்வி அமைச்சுக்கு இச்சிக்கல் தெரிந்திருந்தும் ஏன் 10 பாடம் முடிவை வற்புறுத்துகிறது என்பது ஓரளவு ஊகிக்க முடிகிறது. எதிர்காலத்தில் தமிழ்ப்பள்ளிகளுக்கே ஆபத்து வரலாம். இந்திய ஆய்வியல் துறையும் மூடப்படலாம் என்ற நிலைக்குக் கொண்டுசெல்லாமல் ம.இ.கா உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்று வற்புறுத்துவது எங்களின் கடமையாகும்.

15 மாணவர்கள் என்ற கொள்கையை வைத்துக்கொண்டு தமிழ்ப்படிக்க வாய்ப்பு வழங்காமல், சில முதல்வர்கள் பிடிவாதம் பிடிக்கின்றனர். 10 பாடம் மட்டுமே என்ற சுற்றறிக்கை பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுவிட்டதால், பள்ளி முதல்வர்கள் தமிழ் இலக்கியம் படிக்கின்ற வாய்ப்பை முற்றாகத் தவிர்த்துவிடுவார்கள். கேட்டால், கல்வி அமைச்சின் அறிக்கையைக் காட்டுவார்கள் என சு.வை.லிங்கம் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

5 comments:

Anonymous said...

MIC perlu mengambil tindakan segera mengenai perkara ini. rakyat tunggu jawapan MIC

சுப.நற்குணன்,மலேசியா. said...

>பெயரில்லாத் திருத்தமிழ் அன்பரே,

கல்வியியல் நிலையில் பார்க்கும்போது, இத்திட்டமானது சில நன்மைகளைக் கொடுக்கலாம்.

ஆனால், பல இனம் - பல மொழி கொண்ட மலேசியச் சூழலில் கூடவே சிக கடுமையான சிக்கல்களும் ஏற்படுகின்றன என்பது மறுப்பதற்கில்லை.

நீண்ட கால நோக்கில் பார்க்கப்போனால், இத்திட்டத்தால் தமிழ்மொழிக்குச் சில பாதகமும் பின்னடைவும் ஏற்படக்கூடும் என்பதை முற்றிலுமாக மறுத்துவிட முடியாது.

ஆனால், தன் சொந்த மொழியை - இலக்கியத்தைக் கட்டாயம் காத்துநிற்க வேண்டும் என்ற காப்புணர்வு தமிழனுக்கு இருந்தால்.. அல்லது தமிழனுக்கு அத்தகைய உணர்வு ஏற்படுத்தப்பட்டால்..

தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் யாராலும் எந்த வகையிலும் அழித்திட முடியாது.

அப்படியான தமிழர்கள் நாட்டில் எத்தனை பேர்..?

அ. நம்பி said...

நம் சமுதாயத்தில் தலைவர்களுக்குப் பஞ்சம் இல்லை; தொலைநோக்கோடு செயல்படுவார்கள் ஆயின் அடுத்த தலைமுறையினருக்குப் பிரச்சினைகள் குறையும்.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் அ.நம்பி,

//நம் சமுதாயத்தில் தலைவர்களுக்குப் பஞ்சம் இல்லை//

உண்மைதான். ஆனால், அவர்களுள் மொழி, இன, சமய, கலை, இலக்கிய, பண்பாட்டு உணர்வுள்ள தலைவர்களுக்குத்தான் பஞ்சமோ.. பஞ்சம்!!

//தொலைநோக்கோடு செயல்படுவார்கள் ஆயின் அடுத்த தலைமுறையினருக்குப் பிரச்சினைகள் குறையும்.//

தொலைநோக்கோடுதான் செயல்படுகிறார்கள். ஆனால், அது அவர்களின் சொந்த குடும்ப தலைமுறைக்கே அன்றி.. சமுதாயத்தின் அடுத்த தலைமுறைக்கல்ல..!!

இந்தக் கருத்தில் நீங்களும் உடன்படுவீர்கள் என நினைக்கிறேன்.

Tamilvanan said...

தாய்மொழிக் க‌ல்வியை க‌ட்டாய‌ தேர்வுப் பாட‌மாக‌ ஆக்க‌ப் ப‌ட‌வேண்டும்.இல்லையேல் கால‌ ஓட்ட‌த்தில் ந‌ம் நாட்டில் த‌மிழ் மொழி வெறும் பேச்சு மொழியாக‌ ம‌ட்டுமே இருக்கும். அதுவும் குறைந்த‌ அள‌வில்

Blog Widget by LinkWithin