Thursday, October 21, 2010

மலேசியாவில் தமிழ் அகவை திருத்த மாநாடு

மலேசியத் தமிழர்களாகிய நாங்கள் தமிழ் செம்மொழி மீதிலான எங்கள் கோரிக்கையை இந்திய நடுவண் அரசு, தமிழக அரசு, மலேசியாவில் இந்தியத் தூதரகம், யுனெஸ்கோ ஆகிய அமைப்புகளுக்கு இதன் வழி முன் வைக்கிறோம்.


Saturday, October 09, 2010

தமிழ் அகவைத் திருத்த மாநாடு

தமிழைச் செம்மொழியாக அறிவித்திருக்கும் இந்திய நடுவண் அரசு, தமிழின் தொன்மையை 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மலேசியாவில் ‘செம்மொழி அகவை திருத்த மாநாடு’ நடைபெறவுள்ளது. அது குறித்து நாளிகையில் வெளிவந்த செய்தி இது. -சுப.ந

கோலாலம்பூர் அக்.9
செம்மொழி எனும் தகுதிபெற்ற மொழியாக அறிவிக்கபட்டிருக்கும் தமிழ்மொழிக்கு இந்திய நடுவண் அரசு 1,500 ஆண்டுகள் எனும் வரையறையை, நாடு முழுவதுமுள்ள அரசியல் சாரா இந்திய அமைப்புகள் மறுத்துள்ளன.

அத்துடன், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது தமிழ் என்று அந்த வரையறையில் உடனடியாக திருத்தம் செய்ய வேண்டும் என்றும் அந்த இயக்கங்களின் சார்பில் அமைக்கப்பட்ட ‘செம்மொழி அகவை திருத்தக் குழுவின்’ தலைவர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் இந்திய நடுவண் அரசைக் கேட்டுக்கொண்டார்.

இதன் தொடர்பாக மாநாடு ஒன்று அக்டோபர் 24ஆம் நாளன்று காலை மணி 9:00 முதல் பகல் 1:00 மணி வரைக்கும், கோலாலம்பூர் ஜாலான் ஈப்போ மூன்றரை மைலில் உள்ள முத்தியாரா காம்பிளக்சு மண்டபத்தில் நடைபெறும். தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் இந்த மாநாட்டிற்குத் திரளாக வருகை தந்து தமிழுக்கு உதவும்படி அவர் கேட்டுகொண்டார்.

இதன் தொடர்பில் முனைவர் ஆறு.நாகப்பன் கூறியதாவது:-

கி.மு1,200 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஆரிய வேதங்களில் தூய தமிழ்ச்சொற்கள் உள்ளன.

எகிப்திய மொழி, பாபிலோனிய மொழி, ஏபிரேய மொழி, அரபு மொழிகளில் பழந்தமிழ் சொற்கள் கலந்துள்ளன. இவ்வாறு தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் தமது தமிழ் வரலாறு எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சங்கங்களில் முதற் சங்கம், இடைச் சங்கம் ஆகியன பற்றி அறிவியல் சார்ந்த முடிவுகள் இல்லையென்றாலும், சங்கப்பாடல்கள் கி.மு.500 முதல் கி.மு100 வரையிலானது என்று முனைவர் மு.வரதராசனார் தமிழ் இலக்கிய வரலாறு எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். இதனைக் கவனத்தில் கொண்டால், இலக்கியப் பொலிவு நிறைந்த சங்கப் பாடல்களின் அகவை 2,500 ஆண்டுகளைக் கடக்கிறது.

இக்காலத்தில் தொல்காப்பியம் எனும் தெளிந்த தமிழ் இலக்கண நூல் எழுந்துள்ளது. இலக்கணத் தெளிவு அமைவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே மொழி தோன்றி வளர்ந்திருக்க வேண்டும் எனும் மொழியியல் கொள்கையை உளம் கொண்டால், தமிழின் தொன்மை 3,000 ஆண்டுகளுக்கு அப்பாற்பட்டது என்பது அறிவு சார்ந்த முடிவே ஆகும்.

திருவள்ளுவர் ஆண்டினைக் கணக்கிட்ட மறைமலை அடிகள் தலைமையிலான குழு திருவள்ளுவர் காலம் இன்றைக்கு 2041 என்று குறித்துள்ளனர்.

உலகச் செம்மொழிகள் பற்றிய ஆய்வினை மேற்கொண்ட யுனேசுகோ நிறுவனம் தமிழ் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட செம்மொழி என்று ஒப்புக்கொண்டுள்ளது.

தமிழின் அகவையை 1,500 ஆண்டுகள் என்று குறித்திருக்கும் இந்திய நடுவண் அரசின் முடிவால், யுனேசுகோ நிறுவனம் அதன் உலகச் செம்மொழி வரிசையிலிருந்து தமிழை நீக்கி விடுவதோடு தமிழுக்கு வழங்கிய தகுதிப்பாடுகளை மீட்டுக்கொள்ளவும் முடிவு செய்யலாம்.

இந்தியச் செம்மொழிகள் நடுவண் அரசின் கல்வி அமைச்சக நிதி உதவிகளைப் பெறும் நிலையில், தமிழ் மட்டும் பண்பாட்டு அமைச்சின் கீழ் வைக்கப்பட்டுள்ளதால் தமிழ் மிகச் சிறிய னிதி ஒதுக்கீட்டையே பெறுகிறது.

உதாரணத்திற்கு, சமஸ்கிருதம் 1,400 கோடி ரூபாய் னிதி ஒதுக்கீட்டைப் பெற்றிருக்கிறது. ஆனால், தமிழ் 3 கோடியே 32 இலட்சம் ரூபாய் மட்டுமே பெற்றுள்ளது.

மேலும், தமிழர் புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழின் நிலை அழியும். அங்குள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் ஆய்வுகள் நலிவடையும். அதோடு மட்டுமல்லாமல், தமிழ் திராவிட குடும்பத்தின் தாய் என்ற தகுதியை இழக்கும் அபாயம் நேரிடும்.

எனவே, நடுநிலை மொழி அறிஞர்களின் கருத்தை ஏற்றுத் தமிழின் தொன்மையை 3,000 ஆண்டுகளுக்கு முந்தியது என்று அறிவிப்பதோடு, இந்தியக் கல்வி அமைச்சின் கீழ் செம்மொழித் தமிழை வைத்து செம்மொழி விதிமுறைகளின் கீழ் உள்ள தகுதிபாடுகளை தமிழுக்கு அளிக்க வேண்டும்.

(மக்கள் ஓசை நாளிகை (8.10.2010) செய்தி)

இதனை உடனடியாகச் செயல்படுத்த வேண்டி இந்திய நடுவண் அரசிற்கும், தமிழக அரசிற்கும், யுனேசுகோ நிறுவனத்திற்கும் மிக விரைவில் மலேசியாவிலுள்ள இந்தியத் தூதரகத்தில் மகஜர் வழங்கப் போவதாக அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் திரண்டு வந்து இம்மாநாட்டில் கலந்து ஆதரவு வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

இம்மாநாட்டில் நாடு தழுவிய அளவில் செயல்படும் 170 தமிழ் பொது இயக்கங்கள் கலந்துகொள்ளும்.

மேல் விவரங்களுக்கு முனைவர் ஆறு.நாகப்பன் (016-9691090), பாதாசன் (019-2401943), சு.வேலுசுப்பிரமணியம் (013-696-4593) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.

  • நன்றி: மலேசிய நண்பன் (9-10-2010)

Wednesday, October 06, 2010

மலேசியத் தமிழர் வாழ்வியல் மாநாடு 2011

மலேசியாவில் தமிழர்களின் வரலாறு ஆய்வு செய்யப்படவேண்டும் என்ற அடிப்படை நோக்கத்திற்க்காக, மலேசியத் தமிழர் வாழ்வியல் மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மலேசியாவிற்குத் தமிழர்கள் வந்த காலம், மற்றும் தொடர்ந்து மலேசியாவின் மேம்பாட்டிற்குத் தமிழர்கள் ஆற்றிய பங்கு குறித்தும் மாநாட்டில் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படும். கடாரம் கண்டான் இராஜேந்திர சோழன் என்று பெருமையாகப் பேசிக் கொள்ளும் நாம், நம் எதிர்கால சந்ததியினர் விளங்கிக் கொள்வதற்காக என்ன முயற்சிகளை மேற்கொண்டோம் என்பது பரவலான கேள்விக் குறியாக இருக்கிறது.

நம்முடைய எழுத்தாளர்கள் பல ஆய்வு கட்டுரைகளையும் கதைகளயும் எழுதி இருக்கிறார்கள். பல்கலைகழத்தில் பட்டப்படிப்பிற்காக ஆய்வுக் கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால், அக்கட்டுரைகள் தமிழர்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படவில்லை. ஈப்போ க.கலைமுத்து கடுமையாக முயற்சி செய்து நூல் ஒன்றை வெளியிட்டிருகிறார். எழுத்தாளர் சந்திரகாந்தம், ஜப்பானியர் காலத்தில் தமிழர்களின் வாழ்க்கை குறித்து கிள்ளான் அருண், கோல சிலாங்கூர் குணநாதன், இப்படி சிலர் நூல்களை வெளியிட்டிருக்கின்றனர். இப்படி எழுதப்பட்ட நூல்கள் மக்களின் பார்வைக்குப் பரவலாக கொண்டு வரப்படவிலை.

ஆங்கிலேயர்கள் நம்மை சஞ்சிக் கூலிகளாகக் கொண்டு வந்தார்கள் என்ற கதைகள் தான் நம் முன்னே காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இது மட்டும் நமது வரலாறு இல்லை என்பதை உணரவேண்டும். இதற்கு முந்தைய நீண்ட வரலாறு நமக்கு உண்டு. அதற்காகத்தான் இம்மாநாடு கூட்டப்படுகிறது.

மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையுடன் இணந்து மலேசியாவிலுள்ள தமிழர் அமைப்புகளின் கூட்டு அமைப்பான மலேசியத் தமிழ்க் காப்பகம் ஆய்வியல் மாநாட்டை 2011 சனவரித் திங்கள் 22 & 23 ஆகிய நாட்களில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கோலாலம்பூரிலுள்ள மலாயப் பல்கலைக்கழத்தில் நடத்த திட்டமிடப் பட்டுள்ள இம்மாநாட்டில் மொத்தம் 24 ஆய்வு கட்டுரைகள் இடம் பெறவுள்ளன. பல்கலைக்கழக மாணவர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் அனைவரும் பேராளர்களாகக் கலந்துக் கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதாக மாநாடு ஏற்பாட்டுக் குழுத்தலைவரும் மலேசியத் தமிழ் மணி மன்றத்தின் தேசியத் தலைவருமான சு.வை.லிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெர்வித்துள்ளார்.

மாநாட்டின் இணைத்தலைவராக மலாயாப் பல்கலைகழக இந்திய ஆய்வியல் துறையின் தலைவர் இணைப் பேராசிரியர் முனைவர் எஸ்.குமரன் பொறுப்பு வகிப்பார். மாநாட்டின் தலைமைச் செயலாளராக இந்திய ஆய்வியல் துறையின் முன்னாள் தலைவரும் இணைப் பேராசிரியருமான முனைவர் வே.சபாபதி பொறுப்பு வகிப்பார்.
மலேசியத் திராவிடர் கழகத்தலைவர் ரெ.சு.முத்தையா, மலேசிய தமிழ் நெறிக் கழகத்தின் தலைவர் இரா.திருமாளவன், மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றத்தலைவர் துரைசாமி, மலாக்கா தமிழர் சங்கத்தின் தலைவர் தொ.கா.நாராயணசாமி, பாரிட் புந்தார் தமிழ் வாழ்வியல் இயக்கத் தலைவர் க.முருகையன், சொகூர் தமிழர் சங்கத் தலைவர் ந.வேணுகோபால், பேரா மாநில எழுத்தாளர் சங்கத் தலைவர் இராம பெருமாள் ஆகியோர் உதவித் தலைவர்களாகவும்,

இந்திய ஆய்வியல் துறையின் விரிவுரையாளர் குமாரி இரா. சீத்தாலட்சுமி, ஆலமரம் வாரப் இதழின் ஆசிரியர் புலவர் முருகையன், மலேசிய இந்திய கலை கலாச்சார மன்றத்தின் மகளிர் பிரிவு தலைவர் திருமதி பத்மாவதி ஆகியோர் துணைச் செயலாளர்களாகவும் பொருளாளராக மலேசியத் தமிழ் மணி மன்றத்தின் டத்தோ செல்லக்கிருஷ்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

இணைப் பேராசிரியர் முனைவர் கிருஷ்ணன் மணியம், விரிவுரையாளர் த.மணிமாறன், விரிவுரையாளர் கோவி.சிவபாலன், மனித வளத்துறை அமைச்சைச் சார்ந்த நீலமேகன், திருத்தமிழ் வலைப்பதிவர் சுப.நற்குணன் பினாங்கு இந்திய மாணவர் பெற்றோர் சங்கத் தலைவர் ம.தமிழ்ச் செல்வன், திருக்குறள் பணிக் கழகத்தின் பண்டிட் இலக்குமனன், உலகத் தமிழ் மாமன்ற தலைவர் வீரா, கோலாலம்பூர் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர் காரைக் கிழார், மலேசியத் தமிழ் மணி மன்றத்தின் தேசியத் துணைத் தலைவர் கை.சிவப்பிரகாசம்,

மலேசியத் தமிழப் பாண்பாட்டு இயக்கத்தின் தலைவர் ப.கு.சண்முகம், மலேசிய இந்திய கலை கலாச்சார மன்றத்தின் தலைவர் ப.ஆனந்தன், சிரம்பான் கம்பன் கழகத்தின் செயலாளர் திருமதி துளசி அண்ணாமலை, தமிழாசிரியர் இலக்கிய கழகத்தின் தலைவர் ந.பச்சை பாலன், தமிழ் இலக்கிகழ்கத்தின் மா.கருப்பண்ணன், மற்றும் மூத்தச் செய்தியாளர் வே.விவேகானந்தன், அ.அலெக்சாண்டர், பி.பன்னிர் செல்வம், ஆர்.கணேசன் மலாயாப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரவையின் மாணவர் தலைவர் உ.உகேந்திரன், கிள்ளான் கோவி பெருமாள் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இது தவிர பல்வேறு துணைக்குழுக்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. குழுவில் பணியாற்ற விரும்பும் மற்ற இயக்கங்களையும் இணைத்துக் கொள்ளவும் முடிவு செய்யப் பட்டது.

மாநாடு பற்றிய விபரம் அறிய :-
முனைவர் வே.சபாபதி,
தலைமைச் செயலாளர்,
மலேசியத் தமிழர் வாழ்வியல் மாநாடு ஏற்பாட்டுக்குழு
இந்திய ஆய்வியல் துறை,
மலாயாப் பல்கலைக் கழகம், 50603 கோலாலம்பூர்


அகப்பக்க முகவரி:- tamizsemmozi.blogspot.com
மின்னஞ்சல் முகவரி:- vaiskru @yahoo.com
தொலைப்பேசி தொடர்பு:- சு.வை.லிங்கம் 019 6011569
முனைவர் சு.குமரன் 012 3123753
முனைவர் வே. சபாபதி 012 6754709

Friday, September 24, 2010

தமிழ் 1,500 ஆண்டுக்கு உட்பட்டதா? பிழையைத் திருத்துமா இந்திய அரசு?

தமிம்மொழிக்கு வெறும் 1,500 ஆண்டு வரலாற்றைச் சொல்லி ‘செம்மொழி’ தகுதி வழங்கப்பட்டிருப்பது மாபெரும் வரலாற்றுப் பிழை. அதனைத் திருத்தி குறைந்தது 3,000 ஆண்டுகள் என அறிவிக்க வேண்டும். உண்மையில், தமிழ்மொழி 10,000 ஆண்டுகளுக்கும் குறையாத வரலாற்றைக் கொண்டது. இந்திய அரசு செய்துள்ள வரலாற்றுப் பிழையைத் திருத்தும்படி மலேசியத் தமிழர்கள் விடுக்கும் கோரிக்கை பற்றிய செய்தி இது. - சுப.ந



கோலாலம்பூர் செப் 24,
உலகத்தின் மூத்த மொழிகளுள் ஒன்றான தமிழ்மொழிக்கு 1000 அல்லது 1,500 ஆண்டுகளுக்கு உட்பட்ட மொழி எனக் கணக்கிட்டுச் ‘செம்மொழி’ எனும் தகுதியை இந்திய நடுவண்(மத்திய) அரசு வழங்கி இருப்பதும், அதனைத் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டிருப்பதும் வரலாற்றுப் பிழை என்று தமிழ்ச் ‘செம்மொழி அகவைத் திருத்த ஆய்வுக் குழு’ சுட்டிக்காட்டி இருக்கிறது.

இந்தப் பிழையைச் சுட்டிக்காட்டி, தமிழ்மொழி குறைந்தபட்சம் 3,000 (மூவாயிரம்) ஆண்டுகளுக்கு முற்பட்ட மொழியென்று வரையறுத்து, அந்தப் பிழையைத் திருத்தும்படி கோரும் மகஜர் ஒன்றை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அடுத்த மாதம் மேற்கொள்ளும் மலேசிய வருகையின்போது நேரில் வழங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்தக் குழுவின் தலைவர் ஆறு.நாகப்பன் கூறினார்.

மலேசிய இந்தியப் பொது அமைப்புகளின் ஒருங்கிணைப்புப் பேரவையின் ஏற்பாட்டில் அதன் தலைவர் இராஜரத்தினம் தலைமையில் இங்கு ஓர் உணவகத்தில் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், அமைக்கப்பட்ட மேற்கண்ட குழுவின் தலைவராகப் பணியமர்த்தம் செய்யப்பட்ட ஆறு.நாகப்பன் மேற்கண்டவாறு விளக்கினார். அவர் தொடர்ந்து கூறியதாவது:-

சங்கம் வைத்து வளர்த்த தமிழ் என்பது வரலாறு. ஒரு சங்கம் அல்ல; இரண்டு சங்கங்கள் அல்ல. மூன்று சங்கங்களால் வளர்க்கப்பட்டது செம்மொழியாகியத் தமிழ்மொழி. ஒவ்வொரு சங்கமும் 4,000 முதல் 5,000 ஆண்டுகள் இருந்தது என்பதும் வரலாறுதான். இதன் மூலம் கூட்டிக் கழித்துப் பார்த்தால், எப்படியும் 10,000 (பத்தாயிரம்) ஆண்டுகளுக்கு முற்பட்டது தமிழ் என்பது தெரியவரும்.

இந்த ஆண்டு வரையறை மிகையானது என்று கூறுபவர்கள்கூட தமிழுக்கு இன்றுவரை தொடர்ந்து இருந்துவரும் இலக்கண நூலான ‘தொல்காப்பியம்’ கி.மு.3ஆம்நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பதை ஒப்பவே செய்வார்கள். அப்படியெனில், குறைந்தபட்சம் 2,300 ஆண்டுக்கு முற்பட்ட தமிழை 1,500 ஆண்டுகளுக்கு உட்பட்ட மொழி என்பதற்குள் அடக்கி, செம்மொழியாக அறிவிக்கப்பட்டிருப்பது அபத்தமான வரலாற்றுப் பிழையாகும்.

இதைத் திருத்தி, 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மொழியாகத் தமிழை வரையறுத்துச் செம்மொழி எனும் தகுதியை நிலைநிறுத்த வேண்டுமென்று இந்திய நடுவண் அரசிடம் இக்குழு கேட்டுக்கொள்ளும்.

அதற்கேற்ப மகஜர் தயாரிக்கப்பட்டு, அது முதலில் இங்குள்ள இந்தியத் தூதரகத்திடமும், தமிழ்நாடு அரசிடமும், யுனேஸ்கோ எனும் ஐ.நா நிறுவனத்திடமும் வழங்கப்படும். அதேவேளையில், அந்த மகஜர் கோலாலம்பூரில் ஜாலான் துன் சம்பந்தனில் அமைக்கப்பட்டுவரும் ‘லிட்டல் இந்தியா’ நகரைத் திறந்து வைக்க இந்தியப் பிரதமர் வரும்போது அவரிடம் நேரடியாகவே வழங்கப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதற்கும் முன்பதாக, அக்டோபர் மாதம் 24ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று தலைநகரில் தமிழ் செம்மொழி அகவை திருத்தக் ஆய்வுக் குழு சார்பில் மாநாடு ஒன்று நடத்தப்படும். இந்த மாநாட்டுக்குத் தமிழறிஞர் தமிழ்ச் செம்மொழிக் காவலர் மணவை முஸ்தப்பா சிறப்புச் சொற்பொழிவு ஆற்ற அழைப்பதெனவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

அதனைத் தொடர்ந்து, அக்டோபர் 27ஆம் நாளில் நடைபெறும் பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா திறப்புவிழாவில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தங்களின் கோரிக்கை மகஜர் வழங்கப்படும்.

நன்றி: மலேசிய நண்பன் 24.9.2010

Thursday, September 09, 2010

தமிழர் மாற்றமும் ஏற்றமும் மாணவரிடமிருந்து தொடங்கட்டும்

கடந்த 4-9-2010இல், பேரா மாநிலம், தைப்பிங், கம்போங் ஜம்பு தேசிய இடைநிலைப்பள்ளியில் ‘தமிழர் பண்பாட்டு விழா’ மிகவும் நேர்த்தியுடன் நடைபெற்றது. இப்பள்ளியின் தமிழ்மொழிக் கழகத்தினர் இதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஆசிரியர் திரு.பரமேசுவரன் வழிகாட்டுதலில் முழுக்க முழுக்க மாணவர்களே பொறுப்பேற்று நடத்திய இவ்விழா தமிழர் பண்பாட்டை தூக்கி நிறுத்தும் வகையில் வெகு சிறப்பாக நடந்தது. மேலும், திரைப்பட(சினிமா)த் தாக்கம் கிஞ்சிற்றும் இல்லாமல் முழுக்க முழுக்க தமிழ்ப் பண்பாடு சார்ந்து இவ்விழா நடைபெற்றது.
தொல்காப்பியர், திருவள்ளுவர், கம்பர், ஔவையார், மறைமலை அடிகள், பாவாணர், பாரதியார், பாரதிதாசன் என்று தமிழ்ச் சான்றோர்கள் பெயரில் குழுக்களை அமைத்து மாணவர்கள் பல்வேறு போட்டிகளிலும் படைப்புகளிலும் கலந்துகொண்டனர். எல்லா மாணவர்களும் ஆசிரியர்களும் பண்பாட்டு உடையில் வந்திருந்தனர்.

அலங்காரப் பொங்கல், கோலம் போடுதல், தோரணம் கட்டுதல் முதலான பண்பாடு சார்ந்த போட்டிகள் நடந்தன. தமிழ்ச் சான்றோர்கள் தோற்றத்தில் வந்து மாணவர்கள் எழுச்சி ஊட்டினர். மேடைப் பேச்சு அங்கத்தில் தமிழர் பண்பாடு சார்ந்த பல தலைப்புகளில் மாணவர்கள் தங்கள் வாதங்களை முன்வைத்து பாராட்டுகளைப் பெற்றனர். இலக்கியக் காட்சிகளை குறுநாடகங்களாக மேடையில் படைத்தனர். கோலாட்டம், கவிதை, தமிழ் எழுச்சிப் பாடல் என பலவற்றைத் திறம்பட படைத்தனர்.


மிக நேர்த்தியாகவும் கட்டுக்கோப்பாகவும் நடந்த இந்தத் ‘தமிழர் பண்பாட்டு விழா’வில் கலந்துகொண்டு உரையாற்று நல்வாய்ப்பு எனக்குக் கிட்டியது. மாணவர்களுக்கு ஏற்ற வகையில் உரையினை ஆற்றினேன். அதன் தொகுப்பு பின்வருமாறு:-

தமிழர் பண்பாடு சிறப்பு வாய்ந்தது. தமிழர் பண்பாடு இயற்கையோடு இயைந்தது. அந்தத் தமிழர் பண்பாடுகள் இன்று பல்வேறு தாகுதல்களில் சிக்குண்டு சிரழிந்து வருகின்றது. இதனைக் காப்பாற்றும் பெரும் பொறுப்பை இளைஞர்களும் மாணவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். நம் பண்பாடு எது? அன்னியர் பண்பாடு எது? என்று வேறுபடுத்திப் பார்க்கும் சிந்தனை நமக்குத் தேவை.

இளைஞர்களால் பெரிதாக என்ன செய்ய முடியும்? மாணவர்களால் என்ன சாதிக்க முடியும்? என்று தப்புக் கணக்குப் போட்டுவிடாதீர்கள். இளைஞர்களும் மாணவர்களும் நினைத்தால் சமுதாயத்தையே மாற்றிக் காட்ட முடியும். அவர்களுடைய ஆற்றல் பெரிது. தமிழ்மொழியாகட்டும், பண்பாடாகட்டும் இளையோர்களும் மாணவர்களும் மனதுவைத்தால் மாற்றத்தைக் கொண்டுவர முடியும்; ஏற்றத்தை ஏற்படுத்த முடியும்.

அதற்கு பெரிது பெரிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்பதில்லை. சின்ன சின்னதாக சிலவற்றை இளையோர்களால் செய்ய முடியும்; மாணவர்களாலும் செய்ய முடியும். அதனை இங்கே பட்டியல் போட்டு சொல்கிறேன். இவற்றில் எல்லாவற்றையும் உங்களால் செய்ய முடியாது போனாலும், ஓரிரண்டையாவது செய்ய முடியும்; செய்ய வேண்டும்.


1)முதலில் நீங்கள் செய்ய வேண்டிய அடிப்படையானது என்ன தெரியுமா? உங்கள் அம்மாவை அழகாகத் தமிழில் ‘அம்மா’ என்று கூப்பிடுங்கள். அப்பாவை ‘அப்பா’ என்று அழையுங்கள். மம்மி, டாடி என்பதை விட்டொழியுங்கள். வீட்டுக்கு யார்வந்தாலும் ‘அங்கிள்’ என அழைக்காமல், மாமா என்று தமிழில் சொல்லுங்கள். அங்கிள் என்ற ஒரு ஆங்கிலச் சொல் இன்று மாமா, சித்தப்பா, பெரியப்பா ஆகிய எல்லா உறவுமுறைச் சொற்களையும் விழுங்கிவிட்டது. இவர் மாமா, இவர் சித்தப்பா, இவர் பெரியப்பா என உங்கள் அன்பான குடும்ப உறவுகளை அடையாளம் காட்டுவதற்குத் தமிழைப் பயன்படுத்துங்கள்.

2)தமிழர் குழந்தைகளின் பெயர்கள் இன்று தமிழாக இருப்பதில்லை. நவின காலம் என்ற போதையில் பொருள் புரியாத பெயர்களை வைக்கிறார்கள். அதுகூட தாழ்வில்லை. சிலர் அருவருப்பான பொருள்கொண்ட பெயர்களைச் சூட்டி விடுகிறார்கள். தமிழ் அறிவும் பற்றும் குறைந்து போனதுதான் இதற்குக் காரணம். இப்போது உங்கள் பெயர் ‘கொச்சையானதாக’ இருந்தாலும் அதை மாற்ற முடியாது. ஆனால், உங்களுக்குத் தம்பி பிறந்தால், தங்கை பிறந்தால் நல்ல தமிழ்ப் பெயரை வைக்கச் சொல்லுங்கள்.

3)இங்கே இருக்கும் மாணவர்களில் பலர் தமிழ்ப்பள்ளியில் படித்தவர்களாக இருக்கிறீர்கள். சற்றுமுன் மலாய் பள்ளியிலிருந்து வந்த மாணவர்கள் சிலர் தமிழில் அழகாகப் படைப்புகள் செய்தீர்கள். பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களைப் போல உங்கள் தம்பி தங்கைகளைத் தமிழ்ப்பள்ளியில் போடச்சொல்லி உங்கள் பெற்றோருக்குச் சொல்லுங்கள். தெரியாத்தனமாக வேறு பள்ளிக்குச் சென்றுவிட்டாலும், தாய்மொழியாம் தமிழைக் கட்டாயம் படியுங்கள்.

4)தமிழ்ப்பள்ளியிலிருந்து வந்த மாணவர்கள் பிஎம்ஆர், எசுபிஎம், எசுதிபிஎம் போன்ற அரசுத் தேர்வுகளில் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் கண்டிப்பாக ஒரு பாடமாக எடுங்கள். இதன்வழி தமிழைக் கல்விமொழியாக காப்பாற்றிவைக்க நீங்கள் உத முடியும்.

5)உங்கள் வீட்டு நிகழ்ச்சிகளைத் தமிழில் நடத்தச் சொல்லுங்கள். உங்களுக்கு 21ஆவது பிறந்தநாள் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அது நம்முடைய பண்பாடு இல்லாவிட்டாலும், அதைச் செய்யும் போது பதாகை(Banner) அல்லது சுவரில் ‘Happy 21st Birthday’ என்று ஆங்கிலத்தில் மட்டும் எழுதாமல் தமிழிலும் எழுதக்கூடாதா? ஏன் இப்படி சிந்திக்க மறுக்கிறோம். நம் வீட்டில் தமிழுக்கு இடமில்லை என்றால் பிறகு யார்வந்து தமிழுக்கு இடம் கொடுப்பார்கள்?

6)இறைவழிபாடு செய்வதற்குத் தமிழ் மந்திரங்களையும், அருட்பாடல்களையும் பயன்படுத்துங்கள். தேவார, திருவாசகப் பதிகங்களைப் பாடி வழிபாடு செய்யுங்கள். சொந்த மொழியில் இறைவனோடு பேசலாம். எல்லாம் வல்ல இறைவனுக்கு இந்த மொழிதான் புரியும் மற்ற மொழி புரியாது என்பது அறிவுக்குப் பொருத்தமான கருத்து அல்ல. உங்கள் வழிபாட்டைத் தமிழில் செய்யுங்கள்.


7)நீங்கள் தமிழர். இன்னொரு தமிழரிடம் தமிழில் பேசுங்கள். தமிழருக்குத் தமிழர் பேசும் போது பிறமொழிகள் எதற்கு?

8)ஏதேனும் ஒரு தமிழ் நாளிதழை வாங்கிப் படியுங்கள். நாள்தோறும் வாங்க முடியாவிட்டாலும் ஞாயிற்றுக் கிழமையாவது வாங்கிப் படியுங்கள். குயில், மயில் போன்ற மாணவர் இதழ்களை வாங்கலாம். உங்கள் குரல், செம்பருத்தி, ஆலமரம் போன்ற நல்ல இதழ்கள் வருகின்றன. ஏதாவது ஒன்றை வாங்குங்கள். இதற்காக நீங்கள் கொடுக்கும் பணம் தமிழ் வளர்ச்சிக்குப் பயன்படுவதோடு, உங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும் தமிழ்மணம் வீசும்.

9)பள்ளியில் அல்லது வெளியில் எந்த ஒரு அறிவிப்பு, அறிக்கை வெளியிட்டாலும் அதனைத் தமிழில் வெளியிடுங்கள். இன்று கணினிக் காலத்தில் வாழ்கிறோம். கணினி, கைப்பேசி வரையில் தமிழ் நன்றாகச் செயல்படுகிறது. தமிழில் தட்டச்சு செய்வதற்கு எந்த சிக்கலும் இப்போது இல்லை. ஆகவே, தமிழர்களுக்காக எழுதப்படும் சுற்றறிக்கை, அறிவிப்பு, கடிதம் எதுவானாலும் அது தமிழாக இருப்பதை உறுதிபடுத்துங்கள்.

10)மாணவர்களே நீங்கள் இப்போதுதான் படித்துக்கொண்டிருக்கிறீர்கள். பெரியவர்கள் ஆனதும் எப்படி கையொப்பம் போடலாம் என்று பழகுவீர்கள் அல்லவா? அந்தக் கையொப்பத்தைத் தமிழில் போடுங்கள். இந்த மொழியில்தான் கையொப்பம் போட வேண்டும் என்று கட்டாயமில்லை. தமிழர்கள் நாம் தமிழில் கையொப்பம் போட யாரும் தடை விதிக்கவும் இல்லை. ஆகவே, இப்போதே தமிழில் கையொப்பம் போடக் கற்றுக்கொள்ளுங்கள்.

11)நாம் பல அரசு, தனியார் அலுவலகம் செல்லுகிறோம். அங்கே பார்த்தால் ஆங்கிலம், மலாய், சீன மொழிகளில் அறிவிப்புகளும், படிவங்களும் இருக்கும். ஆனால், தமிழ் இருக்காது. நமக்கு ஏன் இந்த நிலைமை? வெட்கமாக இல்லையா உங்களுக்கு? இதற்கு என்ன செய்யலாம்? அந்த அலுவலகத்தில் ‘சேவை மறுமொழி படிவம்’ (Borang Maklumbalas) இருக்கும். அதில், இந்த அலுவலகத்தில் தமிழுக்கும் இடம் கொடுக்கவும் என்று எழுதிப் பெட்டியில் போட்டுவிட்டு வாருங்கள். எல்லாரும் இப்படியே செய்வோம். ஓராண்டுக்குச் செய்வோம். மாற்றம் வருமா வராதா? பொருளகம் செல்கிறோம். அங்கும் தமிழுக்கு இடமில்லை. மறுமொழி படிவத்தை எடுத்து “தமிழ் வேண்டும். இல்லாவிட்டால் கணக்கை மூடுவேன்” என்று எழுதிப் போட்டுவிட்டு வாருங்கள். மறுமாதம் சொன்னபடி கணக்கை மூடுங்கள். இப்படியே நாடு முழுவதும் எல்லாத் தமிழரும் செய்வோம். பிறகு பாருங்கள். தமிழுக்குத் தானாக இடம் கிடைக்கிறதா இல்லையா பாருங்கள்.

12)தமிழர்களாகிய நாம் தேவைப்படும் போதெல்லாம் நமது பண்பாட்டு உடைகளை விரும்பி உடுத்த வேண்டும். இன்று மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என எல்லாரும் பண்பாட்டு உடையணிந்து வந்திருப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. இதேபோல், வீட்டு நிகழ்ச்சிகளிலும், ஆலயம் செல்லும்போதும் பண்பாட்டு உடைகளை உடுத்துவதைப் பழக்கப்படுத்திக்கொள்வோம். நாம் தமிழர் என அடையாளம் காட்டுவதற்கு உடையும் மிக முக்கியம்.

இப்படிச் சிலவற்றை உங்களால் செய்ய முடியும். ஏற்கனவே சொன்னது போல மாணவர்கள் நீங்கள் மனதுவைத்தால் சீர்கெட்டுக் கிடக்கும் தமிழர்களைத் தட்டி எழுப்ப முடியும். நீங்கள் மனது வைத்தால் தமிழ்மொழியையும் பண்பாட்டையும் தூக்கி நிறுத்த முடியும். முடிவெடுங்கள் தம்பிகளே.. முடிவு செய்யுங்கள் தங்கைகளே.. மாற்றங்கள் மாணவர்களாகிய உங்களிடமிருந்து தொடங்கட்டும்.

(திரு.பரமேசுவரன், சுப.நற்குணன், கோவி.மதிவரன்)
இவ்வாறு என்னுடைய உரை அமைந்திருந்தது. அனைவரும் மிகவும் கவனமெடுத்து உரையினைச் செவிமடுத்தனர். எனக்கு முன்னதாக அருமை நண்பர் தமிழ் ஆலயம் வலைப்பதிவர் கோவி.மதிவரன் ‘தமிழ்ச் செம்மொழி’ எனும் தலைப்பில் உரை ஆற்றினார். தமிழின் செம்மொழிச் சிறப்பு, தமிழைப் பற்றி அறிஞர்களின் கருத்து, தமிழின் செம்மொழித் தகுதிகள், செம்மொழி மாநாட்டுக் காட்சிகள் ஆகியவை பற்றி கணினி திரைக்காட்சி வழியாகக் காட்டிப் பேசினார். இதே நிகழ்ச்சியில், தமிழியில் ஆய்வுக் களத்தின் தலைவர் ஐயா.இர.திருசெல்லவம் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

மொத்தத்தில், தமிழ் மாணவர்களிடத்தில் தமிழைப் பற்றிய தப்பான கருத்துகளையும் தாழ்வு எண்ணங்களையும் நீக்கி, தமிழின் மீதும் தமிழ்ப் பண்பாட்டின் மீதும் புதிய பார்வையையும் தமிழ் வழியில் தன்னம்பிக்கையையும் இந்த விழா ஏற்படுத்தி உள்ளது.

இப்படியான விழாக்கள் எல்லாப் பள்ளிகளிலும், கல்லூரிகள், பக்கலைகளில் நடைபெற வேண்டும். இதன்வழி நாட்டில் தமிழுக்குப் புத்தெழுச்சியும் மறுமலர்ச்சியும் ஏற்படும் என்பது திண்ணம்.

Tuesday, August 31, 2010

சஞ்சியிலே வந்தவங்க தாண்டவக் கோனே!


மனதைத் தொட்ட மரபுக்கவிதை - 3

ரெ.ச என்று எல்லோராலும் அன்பொழுக அழைக்கப்படும் ரெ.சண்முகம் அவர்களின் பாடலை இந்தத் தொடரில் பதிவு செய்கிறேன்.

பாடகர், இசையமைப்பாளர், பாவலர், பாடலாசிரியர், மேடை நாடகாசிரியர், வானொலி நாடக ஆசிரியர், நடிகர், இயக்குநர், கட்டுரையாசிரியர், சிறுகதை எழுத்தாளர் எனப் பன்முக ஆற்றல்பெற்ற அரும்பெறல் கலைஞர் ரெ.சண்முகம். மலேசிய வானொலி அறிவிப்பாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார் என்பது இவருடைய மற்றொரு வரலாறு.

இவருடைய “செந்தாழம் பூவாய்” பாடல் திரைப்பாட்டுகளுக்கே வெல்விளி (சவால்) விடும் அளவுக்கு மிகச் சிறந்த பாடலாக புகழ்பெற்றது என்ற செய்தி பலர் அறிந்ததே. இவருடைய குரலுக்கு மயங்கியோர் நாட்டில் பலர் உள்ளனர்.

இவர் சில நூல்களையும் எழுதி மலேசிய எழுத்துலகைச் செழிக்கச் செய்துள்ளார். அவற்றுள் ரெ.ச.இசைப்பாடல்கள், பிரார்த்தனை (கவிதை), நல்லதே செய்வோம் (கட்டுரை), இந்த மேடையில் சில நாடகங்கள் (சுய சரிதை) ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கன.

மலேசிய தமிழ் இசைக்கலை வாழ்விலும் வளர்ச்சியிலும் ரெ.ச எனும் பெயர் இரண்டறக் கலந்திருக்கிறது. இவருடைய அரும்பணிகளைப் பாராட்டும் வகையில் ‘செவ்விசைச் சித்தர்’ எனும் விருதும் வழங்கப்பட்டுள்ளது.

மலேசியத் தமிழர்களிடையே சாதனை மாந்தராகத் திகழும் செவ்விசைச் சித்தர் ரெ.ச அவர்களின் பாடலொன்று இங்கே பதிவாகிறது. பொருள் விளக்கமே தேவையில்லாமல் புரிந்துகொள்ளும் அளவுக்கு மிக எளிமையான பாடல் இது. மலேசியத் தமிழர்களின் அன்றைய வரலாறு, இன்றைய நிலைமை ஆகிய இரண்டையும் படம்பிடித்துக் காட்டும் ‘சித்தர்’ பாட்டு இது.

**********************
பிரித்தானிய ஆட்சியின்போது தமிழகத்திலிருந்து ஒப்பந்தக் (சஞ்சி) கூலிகளாகத் தமிழ் மக்கள் மலாயாவுக்குக் கொண்டுவரப்பட்ட வரலாற்றிலிருந்து பாடல் தொடங்குகிறது. இங்கு வந்த தமிழர்கள் காட்டுலும் மேட்டிலும் உழைத்து நாட்டைக் கட்டியெழுப்பிய கதைப் போகிற போக்கில் சொல்லிப் போகிறார் கவிஞர். கூடவே, மலேசியத் தமிழர்களின் இன்றைய அவலங்களையும் பாடிக் காட்டுகிறார்.


சஞ்சியிலே வந்தவங்க தாண்டவக் கோனே - இன்னைக்கும்
சரியாக அமையலயே தாண்டவக் கோனே
மிஞ்சிப்போயி நிக்குதையா தாண்டவக் கோனே - கொஞ்சம்
மிதிக்கத்தானே பாக்குறாங்க தாண்டவக் கோனே

காரினிலே பறக்குறவங்க தாண்டவக் கோனே – நல்ல
கனவிலயும் மிதக்குறாங்க தாண்டவக் கோனே
தாருபோட்டு ரோடு போட்டவன் தாண்டவக் கோனே – இன்னும்
தரையினிலே தவழுறானே தாண்டவக் கோனே


இவனுக்குள்ளயே ஏமாத்துறான் தாண்டவக் கோனே – அத
எதுத்துபுட்டா திரும்பஒத தாண்டவக் கோனே
கவனத்தோட வாழலயே தாண்டவக் கோனே – இன்னும்
கன்னிகழி யாதவந்தான் தாண்டவக் கோனே

அடுத்துவரும் அடிகள் முக்கியமானவை. தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடியைப் பக்குவமாகச் சொல்லிச் செல்லுவது கவரும்படியாக உள்ளது.

புள்ளைங்கள்ளாம் படிக்கிறாங்க தாண்டவக் கோனே – அங்கே
போடுறதுல கையவச்சான் தாண்டவக் கோனே
அள்ளி அள்ளி ஊட்டுறானே தாண்டவக் கோனே – எதுக்கும்
ஆகாத முண்டங்களுக்குத் தாண்டவக் கோனே

மலேசிய அரசியல் சூழல் இன்று மாற்றத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இந்த மாற்றத்தின் காரணமாக அரசியல் பிழைப்போரிடமும் மேல்மட்டத் தலைவர்கள் தொடங்கி குட்டி குட்டி தலைவர்கள் வரையில் தன்னலப் போக்கு வரம்புமீறி போய்க்கொண்டிருக்கிறது. தன்னலத்துக்காக தன் இனத்தையே அழிக்கும் அளவுக்கு இன்று தமிழர்கள் துணிந்துவிட்டார்கள். இது அரசியல் நிலை என்றால், குடும்ப அளவிலும் இன்று இதே நிலைமைதான். ஒற்றுமை, புரிந்துணர்வு, விட்டுக்கொடுத்தல் முதலிய பண்புகள் நலிந்துபோய்விட்டன. தமிழர்கள் தங்களுக்குள்ளேயே பிளவுபட்டதும் அல்லாமல் அடித்துக்கொள்வது பேரவலமாக இருக்கின்றது. அடுத்த அடிகளில் செவ்விசைச் சித்தரும் இதனையே சொல்லுவதைப் பாருங்கள்.

கோடரிக்கும் காம்புபோல தாண்டவக் கோனே – இவன்
கோளுவச்சான் குடிகெடுத்தான் தாண்டவக் கோனே
மாடுபோல பாடுபட்டான் தாண்டவக் கோனே – இன்னும்
மனுசனாக மாறலியே தாண்டவக் கோனே


ரெண்டாயிரம் வந்திடுச்சி தாண்டவக் கோனே – இன்னும்
ரெண்டு ரெண்டா பிரிஞ்சுருக்கான் தாண்டவக் கோனே
மண்டுத்தனமா வாழுறத தாண்டவக் கோனே – இவன்
மகத்துவமா நினைக்கிறானே தாண்டவக் கோனே

இன்று 53ஆவது மலேசிய தேசிய நாளை முன்னிட்டு, இந்தப் பாடலை உங்கள் சிந்தனைக்காகப் பரிமாறுகிறேன்.

“தேசிய நாள் நல்வாழ்த்து”


Tuesday, August 24, 2010

ஐ-போன் 4 வருகிறது; தமிழை ஒருபடி உயர்த்த போகிறது


எதிர்வரும் செப்தெம்பரில் ‘ஐ-போன் 4’ எனப்படும் புதுவகை கையடக்க இணைய பேசி மலேசியாவில் அறிமுகம் காண விருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஆங்கிலத்திலும் சிறப்பாகத் தமிழ்மொழியிலும் செயல்படும் ஆற்றல் கொண்டது என அறியப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனம் தனது மேம்படுத்தப்பட்ட "ஐபோன்" புதிய பதிப்பை வெற்றிகரமான அறிமுகப்படுத்தியுள்ளது. மலேசியாவில் இந்தப் புதிய ஐபோன் - 4ஆம் பதிப்பு வரும் செப்தெம்பரில் வெளியிடப்படவுள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

‘ஐபோன்’ எனும் புதிய வகையிலான தொழில்நுட்பத் தொடர்பு கருவி 2007இல் சந்தைக்கு வந்தன. இதுவரையில் 5 கோடி ஐபோன்கள் விற்பனையாகி உள்ளதாக அறியப்படுகிறது. தற்போது மேலும் பல புதிய ஏந்து(வசதி)களுடன் மேம்படுத்தப்பட்ட "ஐபோன்-4" சந்தைக்கு வந்துள்ளது.

ஐபோன்-4 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கையடக்க இணைய பேசி எல்லா வகையான ஏந்துகளையும் உள்ளடக்கியதாகத் திகழ்கிறது. iOS 4 எனும் இயங்குதளத்தில் மிகவேகமாக இயங்கும் ஆற்றல் கொண்ட இந்த புதிய கையடக்கப் பேசியில், வீடியோ அழைப்பு, உயர்தரமான கணித்திரை, 5 மெகா பிக்சல் படக்கருவி, லெட் ஃப்ளாச், உச்ச திறன் கொண்ட வீடியோ பதிவு, கம்பியில்லா இணையச் சேவை என ஏராளமான நவினமய சிறப்புத் தன்மைகள் உள்ளன.

(மலேசியாஇன்று தளத்திலிருந்து ஒரு செய்தி)

முந்தைய ஐபோனை விட தற்போதைய "ஐபோன்-4" வடிவத்தில் மெலிதாகவும் சிறியதாகவும் உள்ளது. இதில், தொடர்ச்சியாக 7 மணி நேரம் பேசவும், 10 மணி நேரம் இணையத்தில் உலாவவும் முடியுமாம்.

இத்தனைக்கும் மேலாக, தமிழர்கள் அனைவரும் பெருமைபடும் வகையில் ‘ஐபோன் 4’ தமிழில் உள்ள வரிகளை அப்படியே தமிழில் கொடுக்கும் வகையில் உருவாக்கம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

iOS4இல் இயல்பாகச் சேர்க்கப்பட்டுள்ள தமிழ் இயக்கத்திற்கு மேலும் மெருகூட்டும் வகையில் மலேசியக் கணிஞர் முத்து நெடுமாறன் செல்லினம் எனும் தமிழ்ச் செயலியை வடிவமைத்துச் சாதனைப் புரிந்திருக்கிறார். இதன்வழி தமிழ்மொழியை அடுத்த தொழில்நுட்பத்திற்கு மேம்படுத்தியிருப்பதோடு, தமிழை மேலும் ஒரு படி உயர்த்தியிருக்கிறார்.

ஐபோன்-3G, ஐபோன்-3GS மற்றும் ஐபோன்-4 ஆகிய நான்கு வகை ஐபோன் கருவிகளிலும், இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறை ஐ-பாட் டச் (iPod Touch) கருவிகளிலும் iOS4 இயங்குதளம் இயங்கும். இந்த இயக்கத்தைப் பெற்ற அனைவருமே தமிழ் வரிகளைத் திரைகளில் அனுபவிக்கலாம். மலேசிய உருவாக்கமான செல்லினத்தைக் கொண்டு தமிழ் வரிகளைக் கோர்த்து, மின் அஞ்சலாகவும் குறுஞ்செய்தியாகவும் தமிழ் வரிகளை அனுப்பலாம். மேலும் இந்தக் கருவிகளில் வடிவமைக்கப்பட்ட முகநூல்(Facebook) டிவிட்டர் (Twitter) போன்ற செயலிகளிலும் தமிழ் வரிகளைத் தடையின்றிக் காணலாம்.

(விக்கிபீடீயாவில் இருக்கும் தமிழ்ப் பக்கம்)

நவின தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தமிழ்மொழியும் செயல்பட முடியும் என்பதற்கு இந்தப் புதிய கண்டுபிடிப்பு நல்ல சான்றாக அமைந்திருக்கிறது. தமிழின் நிலையை அல்லது இருப்பை உறுதிபடுத்தும் வகையில் இந்த ஆக்கம் அமைந்திருக்கிறது.

(ஐபோனில் மோபைல்கினி செய்தி)

இவ்விடயம் குறித்து திரு.முத்து நெடுமாறனுடன் உரையாடினேன். அதனை அப்படியே கீழே தருகின்றேன்.

சுப.ந:- ஐபோன் 4 கருவியில் தமிழ் நிலையை மேலும் ஒரு படி உயர்த்தியுள்ளீர்கள்....
முத்து:-இன்னும் உயர்த்த திட்டம் இருக்கிறது .... அவற்றிற்கான வேலையை செய்து கொண்டிருக்கிறேன்
சுப.ந:-மகிழ்ச்சியும்... பெருமையும் ஒரு சேர ஏற்படுகிறது....
முத்து:-தமிழகத்தில் இதன் பயன்பாடு அவ்வளவு இல்லாவிட்டாலும், நமது நாட்டிலும் சிங்கப்பூரிலும் அதிகம் பேர் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்
சுப.ந:-தங்கள் பணிகள் அளப்பரியன...
முத்து:- அடுத்த மாதம் ஐ-போன்4 நமது நாட்டில் வெளிவர வாய்ப்பிருக்கிறது
சுப.ந:-அப்படியா?
முத்து:-கடந்த வாரம் இதை நான் சிங்கப்பூரில் வாங்கினேன்.....தமிழ் எழுத்துகள் மிகவும் அழகாகத் தோன்றுகின்றன. அஞ்சல் உள்ளீட்டு முறையையும் அதில் சேர்த்துவிட்டேன்
சுப.ந:-கேட்கவே பெருமிதமாக உள்ளது.
முத்து:-தமிழிலேயே மின்-அஞ்சல், குறுஞ்செய்தி, ஃபேஸ்புக் போன்ற செய்திகளை அதில் இருந்து அனுப்பலாம்
சுப.ந:-கணித்தமிழைப் பயன்படுத்தும் ஆர்வம் இப்போது கொஞ்சம் கூடியுள்ளது நம் நாட்டில்... அதைத் தங்கள் கண்டுபிடிப்புகள் மேலும் வளர்த்தெடுக்க கண்டிப்பாக உதவும்.....
முத்து:-நானும் அதையே விரும்புகிறேன்

(ஐ-டியூன்சில் தமிழ் பாடல்களின் பெயர்கள்)

திரு.முத்து நெடுமாறன் சொன்னது போல, இந்தப் புதிய வகை ‘ஐபோன் 4’இல் தமிழிலேயே எல்லா வேலைகளையும் செய்ய முடியும் என்பது தமிழுக்குக் கிடைத்த பெரும் பேறு என்றால் மிகையன்று. மேலும், ‘ஐ-டியுன்’ எனப்படும் இசை நிரலியில் பாடல்களின் பெயர்களையும் பாடல் விவரங்களையும் தமிழிலேயே பதிவுசெய்து கொள்ள முடியும்.

‘ஐ-போன் 4’ தமிழிலேயே வழங்கும் சேவைகளை இப்பதிவின் இடையிடையே உள்ள படங்கள் வழியாக நீங்களே பார்த்திருப்பீர்கள். உங்களையும் அறியாமல் உங்கள் புருவங்கள் இரண்டும் மேலே உயர்ந்தனவே கவனித்தீர்களா?

  • மேலதிக தகவல்களுக்குப் பின்வரும் தொடுப்புகளைச் சொடுக்கவும்:-
3. செல்லினம் முகநூல் (http://facebook.com/sellinam)

Blog Widget by LinkWithin