Thursday, September 09, 2010

தமிழர் மாற்றமும் ஏற்றமும் மாணவரிடமிருந்து தொடங்கட்டும்

கடந்த 4-9-2010இல், பேரா மாநிலம், தைப்பிங், கம்போங் ஜம்பு தேசிய இடைநிலைப்பள்ளியில் ‘தமிழர் பண்பாட்டு விழா’ மிகவும் நேர்த்தியுடன் நடைபெற்றது. இப்பள்ளியின் தமிழ்மொழிக் கழகத்தினர் இதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஆசிரியர் திரு.பரமேசுவரன் வழிகாட்டுதலில் முழுக்க முழுக்க மாணவர்களே பொறுப்பேற்று நடத்திய இவ்விழா தமிழர் பண்பாட்டை தூக்கி நிறுத்தும் வகையில் வெகு சிறப்பாக நடந்தது. மேலும், திரைப்பட(சினிமா)த் தாக்கம் கிஞ்சிற்றும் இல்லாமல் முழுக்க முழுக்க தமிழ்ப் பண்பாடு சார்ந்து இவ்விழா நடைபெற்றது.
தொல்காப்பியர், திருவள்ளுவர், கம்பர், ஔவையார், மறைமலை அடிகள், பாவாணர், பாரதியார், பாரதிதாசன் என்று தமிழ்ச் சான்றோர்கள் பெயரில் குழுக்களை அமைத்து மாணவர்கள் பல்வேறு போட்டிகளிலும் படைப்புகளிலும் கலந்துகொண்டனர். எல்லா மாணவர்களும் ஆசிரியர்களும் பண்பாட்டு உடையில் வந்திருந்தனர்.

அலங்காரப் பொங்கல், கோலம் போடுதல், தோரணம் கட்டுதல் முதலான பண்பாடு சார்ந்த போட்டிகள் நடந்தன. தமிழ்ச் சான்றோர்கள் தோற்றத்தில் வந்து மாணவர்கள் எழுச்சி ஊட்டினர். மேடைப் பேச்சு அங்கத்தில் தமிழர் பண்பாடு சார்ந்த பல தலைப்புகளில் மாணவர்கள் தங்கள் வாதங்களை முன்வைத்து பாராட்டுகளைப் பெற்றனர். இலக்கியக் காட்சிகளை குறுநாடகங்களாக மேடையில் படைத்தனர். கோலாட்டம், கவிதை, தமிழ் எழுச்சிப் பாடல் என பலவற்றைத் திறம்பட படைத்தனர்.


மிக நேர்த்தியாகவும் கட்டுக்கோப்பாகவும் நடந்த இந்தத் ‘தமிழர் பண்பாட்டு விழா’வில் கலந்துகொண்டு உரையாற்று நல்வாய்ப்பு எனக்குக் கிட்டியது. மாணவர்களுக்கு ஏற்ற வகையில் உரையினை ஆற்றினேன். அதன் தொகுப்பு பின்வருமாறு:-

தமிழர் பண்பாடு சிறப்பு வாய்ந்தது. தமிழர் பண்பாடு இயற்கையோடு இயைந்தது. அந்தத் தமிழர் பண்பாடுகள் இன்று பல்வேறு தாகுதல்களில் சிக்குண்டு சிரழிந்து வருகின்றது. இதனைக் காப்பாற்றும் பெரும் பொறுப்பை இளைஞர்களும் மாணவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். நம் பண்பாடு எது? அன்னியர் பண்பாடு எது? என்று வேறுபடுத்திப் பார்க்கும் சிந்தனை நமக்குத் தேவை.

இளைஞர்களால் பெரிதாக என்ன செய்ய முடியும்? மாணவர்களால் என்ன சாதிக்க முடியும்? என்று தப்புக் கணக்குப் போட்டுவிடாதீர்கள். இளைஞர்களும் மாணவர்களும் நினைத்தால் சமுதாயத்தையே மாற்றிக் காட்ட முடியும். அவர்களுடைய ஆற்றல் பெரிது. தமிழ்மொழியாகட்டும், பண்பாடாகட்டும் இளையோர்களும் மாணவர்களும் மனதுவைத்தால் மாற்றத்தைக் கொண்டுவர முடியும்; ஏற்றத்தை ஏற்படுத்த முடியும்.

அதற்கு பெரிது பெரிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்பதில்லை. சின்ன சின்னதாக சிலவற்றை இளையோர்களால் செய்ய முடியும்; மாணவர்களாலும் செய்ய முடியும். அதனை இங்கே பட்டியல் போட்டு சொல்கிறேன். இவற்றில் எல்லாவற்றையும் உங்களால் செய்ய முடியாது போனாலும், ஓரிரண்டையாவது செய்ய முடியும்; செய்ய வேண்டும்.


1)முதலில் நீங்கள் செய்ய வேண்டிய அடிப்படையானது என்ன தெரியுமா? உங்கள் அம்மாவை அழகாகத் தமிழில் ‘அம்மா’ என்று கூப்பிடுங்கள். அப்பாவை ‘அப்பா’ என்று அழையுங்கள். மம்மி, டாடி என்பதை விட்டொழியுங்கள். வீட்டுக்கு யார்வந்தாலும் ‘அங்கிள்’ என அழைக்காமல், மாமா என்று தமிழில் சொல்லுங்கள். அங்கிள் என்ற ஒரு ஆங்கிலச் சொல் இன்று மாமா, சித்தப்பா, பெரியப்பா ஆகிய எல்லா உறவுமுறைச் சொற்களையும் விழுங்கிவிட்டது. இவர் மாமா, இவர் சித்தப்பா, இவர் பெரியப்பா என உங்கள் அன்பான குடும்ப உறவுகளை அடையாளம் காட்டுவதற்குத் தமிழைப் பயன்படுத்துங்கள்.

2)தமிழர் குழந்தைகளின் பெயர்கள் இன்று தமிழாக இருப்பதில்லை. நவின காலம் என்ற போதையில் பொருள் புரியாத பெயர்களை வைக்கிறார்கள். அதுகூட தாழ்வில்லை. சிலர் அருவருப்பான பொருள்கொண்ட பெயர்களைச் சூட்டி விடுகிறார்கள். தமிழ் அறிவும் பற்றும் குறைந்து போனதுதான் இதற்குக் காரணம். இப்போது உங்கள் பெயர் ‘கொச்சையானதாக’ இருந்தாலும் அதை மாற்ற முடியாது. ஆனால், உங்களுக்குத் தம்பி பிறந்தால், தங்கை பிறந்தால் நல்ல தமிழ்ப் பெயரை வைக்கச் சொல்லுங்கள்.

3)இங்கே இருக்கும் மாணவர்களில் பலர் தமிழ்ப்பள்ளியில் படித்தவர்களாக இருக்கிறீர்கள். சற்றுமுன் மலாய் பள்ளியிலிருந்து வந்த மாணவர்கள் சிலர் தமிழில் அழகாகப் படைப்புகள் செய்தீர்கள். பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களைப் போல உங்கள் தம்பி தங்கைகளைத் தமிழ்ப்பள்ளியில் போடச்சொல்லி உங்கள் பெற்றோருக்குச் சொல்லுங்கள். தெரியாத்தனமாக வேறு பள்ளிக்குச் சென்றுவிட்டாலும், தாய்மொழியாம் தமிழைக் கட்டாயம் படியுங்கள்.

4)தமிழ்ப்பள்ளியிலிருந்து வந்த மாணவர்கள் பிஎம்ஆர், எசுபிஎம், எசுதிபிஎம் போன்ற அரசுத் தேர்வுகளில் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் கண்டிப்பாக ஒரு பாடமாக எடுங்கள். இதன்வழி தமிழைக் கல்விமொழியாக காப்பாற்றிவைக்க நீங்கள் உத முடியும்.

5)உங்கள் வீட்டு நிகழ்ச்சிகளைத் தமிழில் நடத்தச் சொல்லுங்கள். உங்களுக்கு 21ஆவது பிறந்தநாள் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அது நம்முடைய பண்பாடு இல்லாவிட்டாலும், அதைச் செய்யும் போது பதாகை(Banner) அல்லது சுவரில் ‘Happy 21st Birthday’ என்று ஆங்கிலத்தில் மட்டும் எழுதாமல் தமிழிலும் எழுதக்கூடாதா? ஏன் இப்படி சிந்திக்க மறுக்கிறோம். நம் வீட்டில் தமிழுக்கு இடமில்லை என்றால் பிறகு யார்வந்து தமிழுக்கு இடம் கொடுப்பார்கள்?

6)இறைவழிபாடு செய்வதற்குத் தமிழ் மந்திரங்களையும், அருட்பாடல்களையும் பயன்படுத்துங்கள். தேவார, திருவாசகப் பதிகங்களைப் பாடி வழிபாடு செய்யுங்கள். சொந்த மொழியில் இறைவனோடு பேசலாம். எல்லாம் வல்ல இறைவனுக்கு இந்த மொழிதான் புரியும் மற்ற மொழி புரியாது என்பது அறிவுக்குப் பொருத்தமான கருத்து அல்ல. உங்கள் வழிபாட்டைத் தமிழில் செய்யுங்கள்.


7)நீங்கள் தமிழர். இன்னொரு தமிழரிடம் தமிழில் பேசுங்கள். தமிழருக்குத் தமிழர் பேசும் போது பிறமொழிகள் எதற்கு?

8)ஏதேனும் ஒரு தமிழ் நாளிதழை வாங்கிப் படியுங்கள். நாள்தோறும் வாங்க முடியாவிட்டாலும் ஞாயிற்றுக் கிழமையாவது வாங்கிப் படியுங்கள். குயில், மயில் போன்ற மாணவர் இதழ்களை வாங்கலாம். உங்கள் குரல், செம்பருத்தி, ஆலமரம் போன்ற நல்ல இதழ்கள் வருகின்றன. ஏதாவது ஒன்றை வாங்குங்கள். இதற்காக நீங்கள் கொடுக்கும் பணம் தமிழ் வளர்ச்சிக்குப் பயன்படுவதோடு, உங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும் தமிழ்மணம் வீசும்.

9)பள்ளியில் அல்லது வெளியில் எந்த ஒரு அறிவிப்பு, அறிக்கை வெளியிட்டாலும் அதனைத் தமிழில் வெளியிடுங்கள். இன்று கணினிக் காலத்தில் வாழ்கிறோம். கணினி, கைப்பேசி வரையில் தமிழ் நன்றாகச் செயல்படுகிறது. தமிழில் தட்டச்சு செய்வதற்கு எந்த சிக்கலும் இப்போது இல்லை. ஆகவே, தமிழர்களுக்காக எழுதப்படும் சுற்றறிக்கை, அறிவிப்பு, கடிதம் எதுவானாலும் அது தமிழாக இருப்பதை உறுதிபடுத்துங்கள்.

10)மாணவர்களே நீங்கள் இப்போதுதான் படித்துக்கொண்டிருக்கிறீர்கள். பெரியவர்கள் ஆனதும் எப்படி கையொப்பம் போடலாம் என்று பழகுவீர்கள் அல்லவா? அந்தக் கையொப்பத்தைத் தமிழில் போடுங்கள். இந்த மொழியில்தான் கையொப்பம் போட வேண்டும் என்று கட்டாயமில்லை. தமிழர்கள் நாம் தமிழில் கையொப்பம் போட யாரும் தடை விதிக்கவும் இல்லை. ஆகவே, இப்போதே தமிழில் கையொப்பம் போடக் கற்றுக்கொள்ளுங்கள்.

11)நாம் பல அரசு, தனியார் அலுவலகம் செல்லுகிறோம். அங்கே பார்த்தால் ஆங்கிலம், மலாய், சீன மொழிகளில் அறிவிப்புகளும், படிவங்களும் இருக்கும். ஆனால், தமிழ் இருக்காது. நமக்கு ஏன் இந்த நிலைமை? வெட்கமாக இல்லையா உங்களுக்கு? இதற்கு என்ன செய்யலாம்? அந்த அலுவலகத்தில் ‘சேவை மறுமொழி படிவம்’ (Borang Maklumbalas) இருக்கும். அதில், இந்த அலுவலகத்தில் தமிழுக்கும் இடம் கொடுக்கவும் என்று எழுதிப் பெட்டியில் போட்டுவிட்டு வாருங்கள். எல்லாரும் இப்படியே செய்வோம். ஓராண்டுக்குச் செய்வோம். மாற்றம் வருமா வராதா? பொருளகம் செல்கிறோம். அங்கும் தமிழுக்கு இடமில்லை. மறுமொழி படிவத்தை எடுத்து “தமிழ் வேண்டும். இல்லாவிட்டால் கணக்கை மூடுவேன்” என்று எழுதிப் போட்டுவிட்டு வாருங்கள். மறுமாதம் சொன்னபடி கணக்கை மூடுங்கள். இப்படியே நாடு முழுவதும் எல்லாத் தமிழரும் செய்வோம். பிறகு பாருங்கள். தமிழுக்குத் தானாக இடம் கிடைக்கிறதா இல்லையா பாருங்கள்.

12)தமிழர்களாகிய நாம் தேவைப்படும் போதெல்லாம் நமது பண்பாட்டு உடைகளை விரும்பி உடுத்த வேண்டும். இன்று மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என எல்லாரும் பண்பாட்டு உடையணிந்து வந்திருப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. இதேபோல், வீட்டு நிகழ்ச்சிகளிலும், ஆலயம் செல்லும்போதும் பண்பாட்டு உடைகளை உடுத்துவதைப் பழக்கப்படுத்திக்கொள்வோம். நாம் தமிழர் என அடையாளம் காட்டுவதற்கு உடையும் மிக முக்கியம்.

இப்படிச் சிலவற்றை உங்களால் செய்ய முடியும். ஏற்கனவே சொன்னது போல மாணவர்கள் நீங்கள் மனதுவைத்தால் சீர்கெட்டுக் கிடக்கும் தமிழர்களைத் தட்டி எழுப்ப முடியும். நீங்கள் மனது வைத்தால் தமிழ்மொழியையும் பண்பாட்டையும் தூக்கி நிறுத்த முடியும். முடிவெடுங்கள் தம்பிகளே.. முடிவு செய்யுங்கள் தங்கைகளே.. மாற்றங்கள் மாணவர்களாகிய உங்களிடமிருந்து தொடங்கட்டும்.

(திரு.பரமேசுவரன், சுப.நற்குணன், கோவி.மதிவரன்)
இவ்வாறு என்னுடைய உரை அமைந்திருந்தது. அனைவரும் மிகவும் கவனமெடுத்து உரையினைச் செவிமடுத்தனர். எனக்கு முன்னதாக அருமை நண்பர் தமிழ் ஆலயம் வலைப்பதிவர் கோவி.மதிவரன் ‘தமிழ்ச் செம்மொழி’ எனும் தலைப்பில் உரை ஆற்றினார். தமிழின் செம்மொழிச் சிறப்பு, தமிழைப் பற்றி அறிஞர்களின் கருத்து, தமிழின் செம்மொழித் தகுதிகள், செம்மொழி மாநாட்டுக் காட்சிகள் ஆகியவை பற்றி கணினி திரைக்காட்சி வழியாகக் காட்டிப் பேசினார். இதே நிகழ்ச்சியில், தமிழியில் ஆய்வுக் களத்தின் தலைவர் ஐயா.இர.திருசெல்லவம் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

மொத்தத்தில், தமிழ் மாணவர்களிடத்தில் தமிழைப் பற்றிய தப்பான கருத்துகளையும் தாழ்வு எண்ணங்களையும் நீக்கி, தமிழின் மீதும் தமிழ்ப் பண்பாட்டின் மீதும் புதிய பார்வையையும் தமிழ் வழியில் தன்னம்பிக்கையையும் இந்த விழா ஏற்படுத்தி உள்ளது.

இப்படியான விழாக்கள் எல்லாப் பள்ளிகளிலும், கல்லூரிகள், பக்கலைகளில் நடைபெற வேண்டும். இதன்வழி நாட்டில் தமிழுக்குப் புத்தெழுச்சியும் மறுமலர்ச்சியும் ஏற்படும் என்பது திண்ணம்.

1 comment:

seeprabagaran said...

சிறந்த கருத்துக்கள்.
குறைவாகப் பேசி அதிகமாக செயல்படுவோம்.
தமிழினம் செயல்படவேண்டிய காலமிது.

Blog Widget by LinkWithin