Monday, July 26, 2010

செம்மொழி மாநாட்டு உரை:- மலேசிய அறிஞர் இர.திருச்செல்வம்


மலேசியாவிலிருந்து செம்மொழி மாநாட்டில் கலந்துகொண்டு, கட்டுரை படைத்தவர்களுள் தமிழ் ஆய்வியல் அறிஞர் இர.திருச்செல்வம் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர். இவர் படைத்த கட்டுரையும் அருமையானது மட்டுமல்ல; இதுவரை எவரும் ஆய்வாக வெளியிடாத அரியதும் கூட. அவருடைய உரையின் நிகழ்ப்படத்தைக் காணும் முன்னர், அவரைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொண்டால் நன்றாக இருக்கும்.
ஐயா இர.திருச்செல்வம் கடந்த 25 ஆண்டுகளாக ஆய்வியல் நோக்கிலேயே தமிழைக் கற்றுத் தேர்ந்தவர். மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்தம் வழித்தடத்தில், பன்மொழிப் புலவர் இரா.மதிவாணருக்கும் சொல்லாய்வறிஞர் ப.அருளியார், கு.அரசேந்திரன் போன்றோருக்கு அடுத்து - தமிழகத்துக்கு அப்பால் வேர்ச்சொல் ஆய்வுத்துறையில் ஆழ்ந்து பணியாற்றிக் கொண்டிருப்பவர். இதுவரை வேர்ச்சொல்லாய்வு தொடர்பான 4 நூல்களை எழுதி வெளியிட்டிருப்பவர்.

தமிழ் இலக்கண இலக்கியத்தில் பரந்துபட்ட புலமையும், மொழி ஆய்வுக்குரிய உலக மாந்த ஒப்பாய்வு ஆழமும் பெற்றவர். தமிழ், சமற்கிருதம், மலாய், ஆங்கிலமொழி ஆற்றலும்; ஆங்கிலத்தைச் சார்ந்து இலத்தீன், கிரேக்கம், செருமானியம், இசுபானியம் முதலான மேலைநாட்டு மொழிகளில் தொடர்ந்த பயில்வும்; இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலான திரவிட மொழிகளை நூல்வழி கற்றுணர்ந்த திறமும்; இவற்றோடு உருது, அரபு, சீனம், சப்பானியம் முதலிய இன்னுஞ்சில மொழிகளில் புது முயல்வும் கொண்டவராக விளங்கும் அரும்பெறல் ஆற்றலாளர்.

மாநாட்டில் இவர் வாசித்தளித்த கட்டுரை 'மலாய்மொழிச் சொற்களில் காணும் தமிழ்மொழி வேர்கள்' பற்றினதாகும். இதுவரையிலும் மேலோட்டமாக மலாயில் காணும் முழு தமிழ்ச் சொற்களை மட்டுமே பலரும் வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால், மலாய் அறிஞர்களும் வியந்து நோக்கும் வகையில் வேர்ச்சொல் நிலையில் தமிழுக்கும் மலாய்க்கும் உறவு மூலம் இருப்பதை இந்தக் கட்டுரை நிறுவுகிறது. மறைந்துபோன சில தமிழ்ச்சொல் வடிவங்களை மலாய்மொழி வெளிப்படுத்துகிறது. முன்னைத் தமிழரும் மலாய்மாந்தரும் ஒவ்வொரு மூலக்கருத்தின் இழையறாமல் சொற்புனைந்து அளித்துள்ள அறிவுநுடபம் அதிநுட்பமாக உள்ளதை இக்கட்டுரை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.

ஐயா இர.திருச்செல்வம் அவர்களின் உரை அடங்கிய நிகழ்படம் இதோ:-

பகுதி 1:- (5.52 நிமயத்தில் உரை தொடங்குகிறது)

பகுதி 2:-

பகுதி 3:-


பி.கு:-மலேசியத் தமிழர்கள் செம்மொழி மாநாட்டில் படைத்த கட்டுரைகளின் நிகழ்படங்கள் தொடர்ந்து திருத்தமிழில் வெளிவரும்.

1 comment:

nayanan said...

மலாய்க்கு மூலம் மலையூர் என்று அறிகின்ற போது வியப்பும் மகிழ்வும் ஏற்படுகிறது. கிழக்காசிய மொழிகளுக்கு வேராக தமிழ் மொழி இருந்திருக்கிறது என்பதற்குப் பல்வேறு தரவுகளையும் சொற்களையும் ஆதாரமாகக் காட்டி
விளக்கிய முறையும் உணர்வும் பெருமிதம் கொள்ள வைக்கிறது.

அறிஞர் திருச்செல்வம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்களும், பாவாணர் மரபுக்கு வாழ்த்துக்களும் உரித்தாக்குகிறேன்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

Blog Widget by LinkWithin