Tuesday, June 22, 2010

தமிழ் இணைய மாநாடு 2010இல் மலேசியப் பேராளர்கள்

சூன் 23 தொடங்கி 27 வரையில், தமிழ்நாடு கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கோலாகலமாக நடைபெறவுள்ளது அனைவரும் அறிந்ததே. ஆனால், அதே நாளில்; அதே கோவை நகரில் உலக அளவிலான மற்றொரு மாநாடும் நடைபெறவிருக்கிறது என்பது பலரும் அறியாத செய்தி.


உலகத்தமிழ் தகவல் தொழில்நுடப மன்றம்(உத்தமம்) எனப்படும் அமைப்பின் ஏற்பாட்டில் 9ஆவது தமிழ் இணைய மாநாடு 2010, கோவை நகரத்தில் சிறப்புடன் நடைபெற உள்ளது.

கடந்த 2001இல் ஆகஸ்டு மாதம் 26 முதல் 28 வரை இந்தத் தமிழ் இணைய மாநாடு மலேசியாவில் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். முரசு தமிழ் மென்பொருளைத் தமிழ்க் கணினி உலகத்திற்கு அளித்த மலேசியத் தமிழர் முத்து நெடுமாறன் ஏற்பாட்டில் இந்த மாநாடு மலேசியாவில் நடந்தேறியது.

தற்போது ஒன்பதாவது முறையாக இந்த மாநாடு நடைபெறுகிறது. உலகம் முழுவதிலும் இருக்கும் தமிழ் கணினித்துறை அறிஞர்கள், தொழிநுட்பர்கள், ஆர்வலர்கள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். தமிழ்க் கணினி, இணையத்தை வளர்த்தெடுக்கும் நோக்கத்தோடு நடைபெறும் இம்மாநாட்டின் ஆய்வரங்கங்கள் 4 அரங்குகளில் 36 நிகழ்வுகளாக (Sessions) இடம் பெறவுள்ளன. இதில் 15 தலைப்புகளிலிருந்து 138 ஆய்வு கட்டுரைகள் இடம் பெறுகின்றன.

தமிழ் இணைய மாநாட்டில் மலேசியப் பேராளர்களும் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர். இம்மாநாட்டில் மலேசியப் பேராளர்களின் பங்களிப்பு குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அளவில் இருக்கிறது.

நம் மலேசியாவைச் சேர்ந்த முத்து நெடுமாறன், சி.ம.இளந்தமிழ் ஆகிய இருவரும் இரண்டு அமர்வுகளுக்குத் தலைமயேற்க உள்ளனர். தமிழ்க் கணினி, இணைய வளர்ச்சியில் மிகப்பெரும் பங்காற்றியுள்ள இவர்கள் இருவருக்கும் இப்படியொரு வாய்ப்பு கிடைத்திருப்பது மலேசியத் தமிழர்களுக்குப் பெருமையளிப்பதாக உள்ளது.


மேலும், மலேசியாவிலிருந்து நால்வர் இம்மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகள் படைக்கவுள்ளனர். அதன் விவரம் பின்வருமாறு:-

1.சுப.நற்குணன், (திருத்தமிழ் வலைப்பதிவர்) தலைப்பு: வளர்ந்து வரும் மலேசியத் தமிழ் இணைய ஊடகம்

2.இளங்குமரன், (மலாயாப் பல்கலைக்கழகம் நூலகப் பொறுப்பாளர்) தலைப்பு: மின்னணு நூலகம்


3.மணியரசன் முனியாண்டி, (துவான்கு பைனூன் ஆசிரியர் பயிற்சிக் கழக விரிவுரைஞர்) தலைப்பு ; இணையத்தில் தமிழ் மின் அகராதிகள்: ஒரு பார்வை


4.இரவீந்திரன் கே.பால் (தமிழ் மென்பொருள் மேம்பாட்டாளர்) தலைப்பு: தமிழ்த் தட்டச்சு மென்பொருள்கள் வடிவமைப்பும் வளர்ச்சியும்


5.மன்னர் மன்னன் (மலாயாப் பல்கலைக்கழக விரிவுரைஞர்) தலைப்பு: தொலைதூர தமிழ்க்கல்வியில் இணையம் வழிக் கற்றலின் பங்களிப்பு

உலக அளவில் தமிழ்க் கணினி, இணையத்துறையில் மலேசியத் தமிழர்களும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க பங்களிப்பையும் ஆக்கங்களையும் செய்து வருகின்றனர் என்பதற்கு இதுவொரு நற்சான்றாகும்.

மேல்விவரங்களுக்குக் காண்க:-

1.தமிழ் இணைய மாநாடு இணையத்தளம்
2.மாநாட்டு நிகழ்ச்சி நிரல் / கட்டுரைகள்
3.மாநாட்டுக் கருத்தரங்கம் / கண்காட்சி


4 comments:

Tamilvanan said...

தமிழ் இணைய மாநாடு சிற‌ப்பாக‌ ந‌ட‌ந்தேறிட‌ வாழ்த்துக்க‌ள். த‌ங்க‌ள‌‌து ஆய்வுக் க‌ட்டுரையை ப‌திவாய் இட்டால் மாநாட்டில் க‌ல‌ந்து கொள்ள‌ இய‌லாத‌வ‌ர்க‌ளுக்கு ப‌ய‌னாய் அமையும்.

subra said...

வாழ்த்துக்கள் அய்யா.சி.நா.மணியன்

Unknown said...

தமிழே தங்க தமிழே சந்தி சிரிக்குது உன் சூன் மாத மொழிபெயர்ப்பால். ஆகா ஓகோ தமிழ் வாழ்க? ? ? நல்லா வாழும்???

அன்புடன் பாலாஜி

சுப.நற்குணன்,மலேசியா. said...

@திருத்தமிழ் அன்பர் பாலாஜி,

//தமிழே தங்க தமிழே சந்தி சிரிக்குது உன் சூன் மாத மொழிபெயர்ப்பால்//

செம்மொழி மாநாடு - தமிழ் இணைய மாநாடு செய்தி, விளம்பரம் எதையும் நீங்கள் பார்க்கவில்லையா?

பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். அதான் நான் மொழி பெயர்த்ததாக எண்ணி மனம் குமைந்துள்ளீர்கள்..!!

ஆங்கில ஒலிப்புக்கு ஏற்ப ஒலிக்க வேண்டும் என்று மற்ற மொழிகளுக்கு சட்டம் போடுவது மொழி அறிவும் தெளிவும் இல்லாதவர்களின் பேச்சு என்பதை உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

ஒவ்வொரு மொழிக்கும் ஒரு இயல்பு உண்டு. ஒரு மொழிபோல இன்னொரு மொழியில் உச்சரிக்க முடியாது.

சான்றுக்கு:- எங்கள் நாட்டு மலாய் மொழிக்குத் தனி எழுத்தே கிடையாது. ரோமன் எழுத்துகளை அப்படியே பயன்படுத்துகிறார்கள். அவர்கள் ஆங்கில மாதப் பெயர்களை எப்படி எழுதுகிறார்கள் என்று பாருங்கள்.

ஆங்கிலம் - மலாய்
January - Januari
February - Februari
March - Mac
April - April
May - Mei
Jun - Jun
July - Julai
August - Ogos
September - September
October - Oktober
November - November
December - Disember

ரோமன் எழுத்தையே பயன்படுத்தினாலும் மலாய் மொழி தன்மைக்கு ஏற்ப அவர்கள் எழுத்துகளை மாற்றி எழுதுவதைக் கவனிக்கவும். சில மாதங்களின் ஒலிப்புகள் மாறியிருப்பதையும் கவனிக்கவும்.

இப்படி இன்னும் நிறைய சொல்ல முடியும். உங்கள் பெயரில் 'ஜி' இருப்பதால் கிரந்தத்தைக் கட்டி அழுவதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை என்பது எனக்குப் புரிகிறது.

'ஜி'யைத் தூக்கி எறியவோ அல்லது பெயரைத் தமிழ்ப்படுத்திக்கொள்ளவோ உங்களுக்குத் துணிவில்லை என்பதும் எனக்குத் தெரிகிறது.

Blog Widget by LinkWithin