Tuesday, March 16, 2010

தமிழை மீட்பதும் காப்பதும்தான் முதல் வேலை; சீர்மை என்ற பெயரில் சிதைப்பதல்ல: மலேசிய நாளிதழ் செய்தி

செந்தமிழ் அந்தணர், தமிழ்க்கடல் ஐயா.இரா.இளங்குமரனார் மலேசியா, சிங்கை ஆகிய நாடுகளுக்குக் வருகை மேற்கொண்டிருந்தார். பல ஊர்களில் தமிழ் எழுச்சிப் பேருரைகள் நிகழ்த்தி தமிழ் உணர்வைச் செழிக்கச்செய்த்தார். அவ்வகையில், எழுத்துச் சீர்த்திருத்தம் பற்றி ஒரு நிகழ்ச்சியில் ஐயா பேசிய உரைப்பொழிவு மலேசியாவின் முன்னணி நாளிதழ் 'மக்கள் ஓசை'யில் செய்தியாக வெளிவந்துள்ளது. 16-3-2010இல் வெளிவந்த அந்தச் செய்தியின் முழுவடிவம் கீழே தரப்பட்டுள்ளது. - சுப.ந

***************************


பாரிட் புந்தார், மார்சு 16, உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் தமிழ்த்தாயை மீட்பதும் காப்பதும்தான் நமது முதல் வேலை.எழுத்துச் சீர்மை என்ற பெயரில் சிதைப்பதல்ல நமது வேலை என்று மலேசியா வந்துள்ள தமிழகத் தமிழறிஞர் செந்தமிழ் அந்தணர் புலவர் மதுரை இரா.இளங்குமரனார் கூறினார்.

தமிழ் எழுத்துகளைச் சீர்த்திருத்தம் செய்ய வேண்டிய தேவை இல்லை. அப்படி தமிழ் எழுத்துகளைச் சீர்த்திருத்தம் செய்தால் தமிழ்மொழி சிதைந்து சின்னாபின்னப்பட்டுப் போகும் என்று புலவர் பெருமகனார் நினைவுறுத்தினார்.

உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் எனதுத் தாயை மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறேன்.அவளை சோதனை செய்த அந்த மருத்துவர் எனது தாயின் உயிரை மீட்பதில் கவனம் செலுத்தாமல்.என் தாயின் கை வலைந்திருக்கிறது அதை சரி செய்ய வேண்டும் என்கிறார்.

என்தாயின் உயிரை முதலில் மீட்டுத்தாருங்கள்.அவள் கையை சரி செய்வதா காலை சரி செய்வதா என்பது பற்றி பின்னர் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அந்த மருத்துவருக்கு நான் பதிலளிக்கிறேன்.நான் மட்டுமல்ல தாயின் மீது பற்று கொண்ட எந்த மகனும் அதைத்தான் செய்வான்.

அப்படித்தான் இன்று தமிழ்த்தாய் உயிர் மீட்புக்கும் வாழ்வுக்கும் செய்ய வேண்டிய பற்பல பணிகள் அப்படியே செயல் முடங்கிக் கிடக்கும் போது சிலர் தங்களின் தன்னலத்திற்காக எழுத்துச் சீர்மை என்ற பெயரில் தமிழ் எழுத்துக்களை சிதைக்க முற்படுகிறார்கள் என்று புலவர் இளங்குமரனார் எடுத்துரைத்தார்.

இங்கு பேரா மாநில தமிழியல் ஆய்வுக் களம், பாரிட் புந்தார் தமிழ் வாழ்வியல் இயக்க, இணை ஏற்பாட்டில் பாரிட் புந்தார் தமிழியல் நடுவத்தில் நடைபெற்ற “தமிழரின் எழுச்சியும் வீழ்ச்சியும் ” என்ற தலைப்பிலான பொழிவு நிகழ்ச்சியில் செந்தமிழ் அந்தணர் மேற்கண்ட செய்தியை வலியுறுத்தினார்.

தற்போது தமிழ்நாட்டில் சிலர் தமிழ் எழுத்துகளைச் சீர்த்திருத்தம் செய்ய முனைந் திருக்கிறார்கள். அதன்படி இ, ஈ, உ, ஊ ஆகிய நான்கு எழுத்து வரிசைகளில் உள்ள 72 உயிர்மெய் எழுத்துகளை மாற்றி அமைக்க வேலை செய்கிறார்கள்.

இது தமிழுக்கு எழுச்சியூட்டும் செயலல்ல. மாறாக வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் செயலாகும்இந்தச் சீர்த்திருத்தால் தமிழ்மொழி பெரிய மாற்றத்திற்கு உள்ளாகும். நாளடைவில் தமிழ் சிதைந்துபோய் காலத்தால் அழிந்துபோகும் என்று புலவர் இரா.இளங்குமரனார் குறிப்பிட்டார்.

தமிழில் சீர்மை உண்டாகும், தமிழை எளிமையாகவும் விரைவாகவும் கற்கலாம் என்று எழுத்துச் சீர்த்திருத்தம் செய்பவர்கள் கூறுகிறார்கள். ஆனால், அதில் சிறிதுகூட உண்மையில்லை. இப்போது இருக்கும் தமிழ் எழுத்து வடிவமே படிப்பதற்கும் எழுதுவதற்கும் எளிதானது.

கருவிலிருககும் குழந்தைக்கே ஆங்கில வழி பள்ளியில் இடம் கிடைக்க முன்பதிவு செய்யும் அளவிற்கு தமிழ்ப் பெற்றோர்களின் மனநிலையை இன்று உருவாகி இருக்கிறது.தமிழ் வழி கல்வி என்பதும்,தமிழ் கற்றால்தான் வேலை என்பதும் பற்றி தமிழ்ப்பெற்றோர்கள் நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை.

அத்தகைய சூழ்நிலையில் தமிழ்த்தாய் குற்றுயிரும் குலை உயிருமாக உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் போது சிலர் சீர்மை என்ற பெயரில் இவ்வாண்டு நடைபெறவுள்ள தமிழ் மாநாடு ஒன்றில் பரிந்துரைக்கப் போகும் இது போன்ற திட்டங்கள் தமிழை அழிக்கவும் சிதைக்கவும் மட்டுமே பயன்படும் என்று புலவர் பெருமகனார் எச்சரித்தார்.

அதுமட்டுமல்லாது, இப்போது நடப்பில் இருக்கும் எழுத்துகள் மிகவும் சிறந்த கட்டமைப்பைக் கொண்டது. வடமிருந்து இடப்பக்கமாக எழுதும் அமைப்பைக் கொண்டிருக்கிறது. ஆனால், சீர்த்திருத்தம் செய்யப்படும் உகர எழுத்து குறியீடுகளை தமிழ் எழுத்து மரபுக்கு மாறாக இடமிருந்து வலமாக எழுத வேண்டிய நிலைமை ஏற்படும். இப்படிப்பட்ட மாற்றங்கள் கண்டிப்பாகத் தமிழைச் சிதைந்த மொழியாக ஆக்கிவிடும்.

வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபினர் கட்டிக்காத்த - தமிழருக்குச் சொந்தமான மரபுகள் பல உண்டு. எழுத்து மரபு அதில் ஒன்று. மரபு கெட்டுப்போனால் தமிழ் மொழியும் தமிழ் இனமும் அடையாளம் இழந்துபோகும். மரபு திரிபின் பிறிது பிறிதாகும் என்று தொல்காப்பியம் கூறுவதை நினைவில் நிறுத்து நம்முடைய மரபுகளை அழியவிடாமல் பாதுகாப்பது நம்முடைய கடமையாகும் என்றவர் வலியுறுத்தினார்.

மேலும் பேசிய அவர் தமிழ் எழுத்துகள் குறித்த வரலாற்றுப் பின்னணிகளையும் தமிழ் எழுத்துகளை எழுதும் முறைகளில் இருக்கும் மனவியல் அணுகுமுறைகளையும் எழுத்துகளை எழுதிக்காட்டி விளக்கம் அளித்தார். தமிழில் எ, ஏ, ஒ, ஓ ஆகிய நான்கு எழுத்துகள் வீரமாமுனிவரால் சீர்த்திருத்தம் செய்யப்பெற்றது. அது மிகவும் சிறிய மாற்றம்தான்.

பிறகு, பகுத்தறிவு பகலவன் பெரியார் சில எழுத்துச் சீர்த்திருத்தங்களைக் கொண்டுவந்தார்.அவையும் ஏற்கனவே கல்வெட்டில் இருந்தவைதான்.பின்னர் ஓலைச்சுவடி வந்த போது பெரியார் பரிந்துரைக்கு முந்திய எழுத்துக்கள் இருந்தன.

அச்சுப்பணிகளையும் தட்டச்சுக்களையும் காரணம் காட்டி பெரியார் மீண்டும் பழைய எழுத்துககளையே முன் மொழிந்தார். அதனைத் தமிழறிஞர்கள் எதிர்த்தனர். இருந்தாலும், பிறகு பதின்மூன்று எழுத்துகளை மட்டும் சீர்த்திருத்தம் செய்தார்கள். இது தமிழ் எழுத்து வடிவங்களை மாற்றி அமைத்தாலும் பெரிய பாதகம் ஏற்பட்டு விடவில்லை.

ஆனால், இப்போது சிலர் மேற்கொண்டுள்ள எழுத்துச் சீர்த்திருத்தம் மிகவும் பாதகமானது. தமிழ் எழுத்துகளின் தனித்தன்மை முற்றிலுமாகச் சீரழிந்து போகும். தமிழின் அடையாளம் அற்றுப்போகும். ஆகவே இந்தப் புதிய எழுத்துச் சீர்த்திருத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாட்டில் இந்தச் சீர்த்திருத்ததைச் செய்ய முயலும் முனைவருக்கு தாம் கைப்பட கடிதம் எழுதியிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்த எழுத்துச் சீர்த்திருத்தம் குறித்து தனி நூல் ஒன்றை எழுதி முடித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

திருக்குறள் வழியில் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட என்பத்தொரு அகவையை அடைந்துள்ள புலவர் ஐயா இளங்குமரனார் வள்ளுவத்தை வாழ்விக்க வந்த தமிழ்ச்சான்றோராக விளங்குபவர். திருச்சிராப்பள்ளிக்கு மேற்கில் காவிரிக்கரையின் தென்புறம் அமைந்துள்ள உள்ள அல்லூர் என்னும் ஊரில் திருவள்ளுவர் தவச்சாலை அமைத்துப், பாவாணர் நூலகம் கண்டு, தவப் பள்ளியில் உறைந்திருப்பவர்.நூற்றுக்கணக்கான நூல்களை தமிழ்கூறும் நல்லுலகிற்குத் தந்திருப்பவர்.

தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழன்று திருக்குறள் உரைப்பொழிவுகள் வழங்கியும் திருமணங்களைத் தமிழ் வழியில் நடத்தியும் நல்லற மணமக்களை இல்லறப்படுத்தியும் தமிழ் மக்களைத் தமிழ்வழியில் வாழவைத்தும் தாமும் வாழ்வாங்கு வாழ்ந்துவரும் ஒப்பற்ற சான்றாளர் செந்தமிழ் அந்தணர் புலவர் ஐயா மதுரை இரா.இளங்குமரனார்.

இதே நிகழ்ச்சியில் புலவர் இரா.இளங்குமரானார் முன்னிலையில் நிகழ்ச்சி ஏற்பாட்டு அமைப்புக்களான பேரா தமிழியல் ஆய்வுக் களம்,பாரிட் புந்தார் தமிழ் வாழ்வியல் இயக்க பொறுப்பாளர்கள் ஏற்கனவே செய்திருந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் புதிதாக பரிந்துரைக்கப்படவுள்ள தமிழ் எழுத்துச் சீர்திருத்தற்கு கண்டனம் தெரிவித்தனர்.

வந்திருந்த பொது அமைப்புகளின் பொறுப்பாளர்களும் தமிழ்ப் பெருமக்களும் முன்னிலையில் அவை அறிவிக்கப்பட்டு,அனைவரும் ஒன்றிணைந்து இந்த எழுத்துச் சீர்த்திருத்தத்திற்கு எதிராகக் கண்டனம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அதற்கு அடையாளமாக எழுத்துச் சீர்த்திருத்தத்தால் தமிழுக்கு ஏற்படப்போகும் விளைவுகள் தொடர்பாக சுப.சற்குணன் தொகுத்திருந்த இணையத்தில் வெளிவந்துள்ள ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு ஒன்று புலவர் இரா.இளங்குமரனாரிடம் தமிழியல் ஆய்வுக் களத்தின் தலைவர் இர.திருச்செல்வமும் வாழ்வியல் இயக்கத் தலைவர் க.முருகையனும் ஒப்படைத்தனர்.

தொடர்பான செய்திகள்:-

1.எழுத்துச் சீர்மை தேவைற்ற வேலை: புலவர் இரா.இளங்குமரனார்

2. எழுத்துச் சீர்மை: மலேசியத் தமிழர்களின் 4 கோரிக்கை

No comments:

Blog Widget by LinkWithin