Monday, March 08, 2010

எழுத்துச் சீர்மை: மலேசியத் தமிழர்களின் 4 கோரிக்கை


தமிழ்க்கடல் புலவர் இரா.இளங்குமரனார் எழுத்துச் சீர்மை குறித்து பேசிய உரைப்பொழிவின் ஒரு பகுதியை முன்னர் பதிவிட்டு இருந்தேன். அதனைப் படிக்க இங்கு சொடுக்கவும். கீழே வருவது அப்பொழிவின் தொடர்ச்சியாகும். –சுப.ந.

***************************

5-3-2010 வெள்ளிக்கிழமை பேரா மாநிலத்தில் உள்ள பாரிட் புந்தார் எனும் ஊரில் புலவர் ஐயாவின் பேருரை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ‘தமிழினத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்’ என்ற தலைப்பில் பேருரை நிகழ்த்திய புலவர் ஐயா மதுரை இரா.இளங்குமரனார், தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தம் தொடர்பாகவும் விரிவாகப் பேசினார். எழுத்துச் சீர்மை பற்றி அவர் பேசியதாவது;


சிலர் ஐ. ஔ ஆகிய இரண்டும் தேவையில்லை. ‘அய்’, அவ்’ என்று எழுதலாம் என்கிறார்கள்.

தமிழில் நெட்டெழுத்து ஏழு என்ற இலக்கணத்திற்கு ‘அய்’, அவ்’ ஆகிய இரண்டும் பொருந்துமா? எனச் சிந்தித்துப் பாருங்கள்.

ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, ஐ, ஔ ஆகிய ஏழும் ச, ரி, க, ம, ப, த, நி என்பதற்கு ஒத்த ஏழிசை எழுத்துகள். திவாகரன் நிகண்டில் பார்த்தால் இது தெரியும்.

மொழி சம்பந்தப்பட்ட வேலைகளை மொழி அறிஞர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மற்றவர்கள் வந்து அதில் தலையிடுவது முறையல்ல. இதனைக் குறித்து தந்தை பெரியாரே “இது மொழி அறிஞர்கள் செய்யவேண்டிய வேலை” என்று சொல்லியிருக்கிறார்.

மலேசியாவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் பாவாணரே குறிப்பிட்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். அதன்படி முப்பது உலக மொழிகளை இலக்கிய இலக்கண மரபுகளோடு கற்றறிந்தவரும், தமிழ் வரலாறு நூலில் 73 மொழிகளை மேற்கோள் காட்டி எழுதியவருமாகிய பேரறிஞர் பாவாணர் எழுத்து வடிவத்தில் எந்தவித மாற்றமும் செய்யக்கூடாது; வடிவ மாற்றம் பெருந்தவறு! பெருந்தவறு! என்று கண்டித்து இருக்கிறார்.

“மாற்றரும் சிறப்பின் மரபு” என்பது தொல்காப்பியம். மரபை நாம் மாற்றக் கூடாது. தென்னை மரத்தை பனை மரமாக மாற்ற நினைக்கக்கூடாது. பனை மரத்தை புன்னை மரமாக மாற்றக்கூடாது. தென்னை தென்னையாக இருக்கட்டும்; பனை பனையாக இருக்கட்டும்; புன்னை புன்னையாக இருக்கட்டும்.

மூவரி அணில் மாற்றரும் சிறப்பு. கோடு வாழ் குரங்கு மாற்றரும் சிறப்பு. மாற்றினால் என்னவாகும். பிறிது பிறிதாகும். மரபுநிலை மயங்கக் கூறக்கூடாது.

எழுத்துக்கு மரபு உண்டு. மொழிக்கு மரபு உண்டு. மரபுநிலை மயங்கல் கூடாது. அவரவர் மனம்போன போக்கில் மாற்றிக்கொள்வது மொழியாக இருக்காது.

ஒரு காலத்தில் எ, ஒ ஆகிய இரண்டின் மேல் புள்ளி வைத்து எழுதினார்கள். ‘க’ மேல் புள்ளி வைத்தால் ‘க்’ ஆகி அரை மாத்திரையாகக் குறைகிறது. அதுபோல, ‘எ’ மேல் புள்ளி வைத்தால் குறிலாக இருந்தது; ‘ஒ’ மேல் புள்ளி வைத்தால் குறிலாக இருந்தது.

இதனை வீரமாமுனிவர் சிறு மாற்றம் செய்கிறார். மேலே இருந்த புள்ளியை நீக்கிவிட்டு, ‘எ’வின் கீழே சிறு கோடு இழுத்து ‘ஏ’ ஆக்குகிறார். ‘ஒ’வின் கீழே சுழித்து ‘ஓ’ ஆக்குகிறார். அது கொஞ்சம் இயல்பாக இருந்ததாலும் அன்றைய அச்சுக்கலை மேலையரிடம் இருந்த கரணியத்தாலும் இந்த மாற்றம் நடப்புக்கு வந்துவிட்டது. இந்த மாற்றமானது தமிழ் எழுத்து வடிவத்தை பெரிதுமாகச் சிதைக்கவில்லை.ஆனால், இன்று அச்சு போடுவதற்கும், தட்டச்சு செய்வதற்கும், கணினியில் எழுதுவதற்கும் எந்தத் தடையும் இல்லை. இன்று இந்த அத்தனை தொழில்நுட்பத்திலும் தமிழர்கள் வல்லவர்களாக இருக்கிறார்கள். அப்படியிருக்க ஏன் இந்த எழுத்து மாற்றம்?

காலுக்குத் தக்கபடிதான் மிதியடி இருக்க வேண்டுமே ஒழிய, மிதியடிக்குத் தக்க காலை வெட்ட முடியுமா?

இன்று தமிழ்நாட்டில் எழுத்துச் சீர்த்திருத்தம் பற்றி பேசுபவர்களுக்கு நான் கைப்பட கடிதம் எழுதி இருக்கிறேன். இந்தச் சீர்த்திருத்தம் தேவையில்லை என்பதை அவர்களிடம் வலியுறுத்தி இருக்கிறேன்.

அதுமட்டுமல்லாது, எழுத்துச் சீர்த்திருத்தம் சம்பந்தமாக தனி நூல் ஒன்றையும் எழுதி முடித்திருக்கிறேன். விரைவில் அந்த நூல் உங்கள் அனைவருடைய பார்வைக்கும் தருகிறேன். அதில் நிறைய வரலாற்றுச் சான்றுகளோடு எழுத்துச் சீர்மை தேவையில்லை என்பதைக் காட்டியிருக்கிறேன்.

நான் தமிழகம் திரும்பியது இந்தச் சிக்கல் குறித்து அடுத்த நடவடிக்கையை மேற்கொள்ளுவேன். நீங்களும் இங்கிருந்து தக்கனவற்றை முன்னெடுத்துச் செய்ய வேண்டும்.

இவ்வாறு, புலவர் ஐயா தம்முடைய உரைப்பொழிவில் பேசினார்.


தமிழகத்தில் சிலர் இ, ஈ. உ, ஊ வரிசை உயிர்மெய்களைச் சீர்மை செய்வதற்கு மேற்கொண்டிருக்கும் முயற்சியைக் கண்டித்து புலவர் ஐயா முன்னிலையில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை:-

1)தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தத்தை மலேசியத் தமிழர்கள் நாங்கள் அனைவரும் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

2)எழுத்துச் சீர்மை தமிழ்மொழிக்குக் கண்டிப்பாகத் தேவையில்லை என்பதை அறுதியிட்டுத் தெரிவிக்கின்றோம்.

3)எழுத்துச் சீர்மையை முன்னெடுக்கும் குழுவினர் உடனடியாக அதனைக் கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

4)தமிழக அரசு எந்த ஒரு எழுத்துச் சீர்த்திருத்தத்தையும் ஏற்றுக்கொண்டு அரசாணை பிறப்பிக்கக் கூடாது என தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் மு.கருணாநிதி அவர்களைத் தாழ்மையுடன் வேண்டுகிறோம்.

தவிர, எழுத்துச் சீர்மையைக் மறுத்தும் கண்டித்தும் எழுதப்பட்டு இணையக் கட்டுரைகளின் தொகுப்பு ஒன்றினை சுப.நற்குணன் அணியப்படுத்தியிருந்தார். அத்தொகுப்பு புலவர் ஐயாவின் பார்வைக்கும் அடுத்தக் கட்டப் பணிக்கும் பயன்படும் வண்ணம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

3 comments:

Araichchi said...

புலவர் இரா.இளங்குமரனார் அவர்களுக்குப் பதில் - எழுத்துச் சீர்மை அவசியம்

http://www.araichchi.net/chiirmai/chiirmai-22-Ilangkumaranar.html

நன்றி

சுப.நற்குணன்,மலேசியா. said...

திருத்தமிழ் அன்பர் சின்னத்துரை சிறிவாஸ்,

//புலவர் இரா.இளங்குமரனார் அவர்களுக்குப் பதில் - எழுத்துச் சீர்மை அவசியம்//

படித்தேன். உங்கள் கருத்துகளைச் சொன்னமைக்கு நன்றி.

புலவர் ஐயாவின் கருத்துகளுக்கு மாற்றுக் கருத்துகளைச் சொல்வதைக் காட்டிலும், ஐயா அவர்களைச் சாடுவதில் அதிக கவனமாக இருந்திருக்கிறீர்கள்.

அதனால், உங்கள் கருத்துகளிலும் எழுத்துகளிலும் ஏகப்பட்ட தவறுகள் நிகழ்ந்திருப்பதுகூட உங்கள் பார்வைக்குப் படாமல் போயிருக்கிறது.

எனினும், உங்கள் தமிழ் ஆராய்ச்சி பணிகள் தொடர நல்வாழ்த்து மொழிகிறேன்.

உங்கள் அரும்பணியும் தமிழுக்குத் தேவைதான்.

Tamil Virtual Forum said...

இணையதளத்தில்கூட Tamil 99 முறையில் shift கூடப் பயன்படுத்தாமல் அச்சேற்றும் நிலை இன்றைய எழுத்துக்களுக்கு அமைந்துவிட்ட பிறகு புதிதாக எழுத்துச் சீர்திருத்தம் ஏன்? வேண்டாத வேலைகளில் ஒன்று இன்றைய நிலையில் எழுத்துச் சீர்திருத்தம்.
பொதுவன் அடிகள்

Blog Widget by LinkWithin