Thursday, March 04, 2010

புலவர் மதுரை இளங்குமரனார் மலேசியச் சுற்றுச்செலவு

இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தமிழ் அறிஞர் பெருமக்களுள் தமிழ்க்கடல் மதுரை இரா. இளங்குமரனார் குறிப்பிடத் தகுந்தவர்.


தமிழ் இலக்கண இலக்கியங்களில் ஆழ்ந்த பயிற்சியுடைய ஐயா இரா.இளங்குமரனார் பள்ளி ஆசிரியராக விளங்கியவர். பின்னர் நூலாசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், உரையாளர் எனப் பல முகங்களைப் பெற்றுத் தமிழுக்கு ஆக்கமான பல பணிகளைச் செய்துள்ளார்.

இவர் எழுதிய நூல்கள் பல நூறாக விரியினும் இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், பாவாணர் வரலாறு, குண்டலகேசி, யாப்பருங்கலம், புறத்திரட்டு, திருக்குறள் தமிழ் மரபுரை, காக்கைபாடினியம், தேவநேயம் உள்ளிட்ட நூல்கள் இவர்தம் தமிழ்ப்பணிக்கு என்றும் நின்று அரண் சேர்க்கும்.

திருக்குறள் வழியில் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட புலவர் ஐயா இளங்குமர னார் வாழும் வள்ளுவராகவே விளங்குபவர். திருச்சிராப்பள்ளிக்கு மேற்கில் காவிரிக்கரையின் தென்புறம் அமைந்துள்ள உள்ள அல்லூர் என்னும் ஊரில் திருவள்ளுவர் தவச்சாலை அமைத்துப், பாவாணர் நூலகம் கண்டு, தவப் பள்ளியில் உறைந்திருப்பவர்.

எஞ்சியநாளெல்லாம் தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழன்று திருக்குறள் உரைப்பொழிவுகள் வழங்கியும் திருமணங்களைத் தமிழ்வழியில் நடத்தியும் நல்லற மணமக்களை இல்லறப்படுத்தியும் தமிழ் மக்களைத் தமிழ்வழியில் வாழவைத்தும் தாமும் வாழ்வாங்கு வாழ்ந்துவரும் ஒப்பற்ற சான்றாளர் செந்தமிழ் அந்தணர் புலவர் ஐயா மதுரை இரா.இளங்குமரனார்.

புலவர் ஐயா அவர்கள் தற்போது நமது மலேசியாவுக்கு வந்திருக்கிறார். நாடு முழுவதும் சுற்றுச்செலவு மேற்கொண்டு வருகிறார். அடுத்து வரும் இரண்டு வாரக் காலத்திற்கு நாடு முழுவதும் அவருடைய பொழிவுரை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அதன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவ்வந்த ஊர்களில் உள்ள தமிழன்பர் பெருமக்கள் திரளாகச் சென்று நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு புலவர் ஐயா அவர்களின் செறிவான பொழிவுகளைக் கேட்டு பயனடைய வேண்டும்.

1) 1-3-2010 (திங்கள்):- கிள்ளானில் “தமிழின வீழ்ச்சியும் எழுச்சியும்” ஏற்பாடு:- கிள்ளான் தமிழ் நெறிக் கழகம். (தமிழ்த்திரு.மாரியப்பனார் 012-3662286)

2) 3-3-2010 (அறிவன்):- பெட்டாலிங் செயாவில் “நடைமுறை வாழ்க்கைக்கு வள்ளுவம்” ஏற்பாடு:- பெட்டாலிங் செயா த.இ.மணிமன்றம் (தமிழ்த்திரு.சி.மஇளந்தமிழ் 012-3143910)

3) 4-3-2010 (வியாழன்):- தைப்பிங்கில் “கடவுள் வாழ்த்து” ஏற்பாடு:- தமிழியல் ஆய்வுக் களம் (தமிழ்த்திரு.முத்தரசன் 012-5610029)

4) 5-3-2010 (வெள்ளி):- பாரிட் புந்தாரில் “தமிழ் எழுத்துச் சீர்மை தேவையா?” ஏற்பாடு:- தமிழ் வாழ்வியல் இயக்கம் (தமிழ்த்திரு.க.முருகையன் 012-4287965)

5) 6-3-2010 (காரி):- கிள்ளானில் “சீவகாருண்ய ஒழுக்கம்”, ஏற்பாடு:- கிள்ளான் வள்ளலார் மன்றம் (தவத்திரு.கோபாலசாமி அடிகளார்)

6) 7-3-2010 (ஞாயிறு):- கோலாலம்பூர் பத்துமலையில் “மொழித்தூய்மை இனத்தின் காப்பு” காலை மணி 10.00க்கு, ஏற்பாடு:- மலேசியத் தமிழ் நெறிக் கழகம் (தமிழ்த்திரு.இரா.திருமாவளவன் 016-3262479)

7) 7-3-2010 (ஞாயிறு):- கோலாலம்பூர் சோமா அரங்கில், மாலை மணி 7.00க்கு, ஏற்பாடு:- தமிழ்ச்சங்கம் (தமிழ்த்திரு.அன்பழகன் 019-2362321)

8) 8-3-2010 (திங்கள்):- அசுட்ரோ வானவில் தொலைகாட்சி நேர்க்காணல்

9) 11.3.2010 (வியாழன்):- பாகாவ் நெகிரியில் “திருக்குறளும் உயர்தர தமிழரும்” ஏற்பாடு சிரம்பான் இந்தியர் சங்கம் (தமிழ்த்திரு.அருணாசலம் 012-3992574)

10) 12-3-2010 (வெள்ளி):- பந்திங்கில் (மேல் விவரம் பின்னர் அறிவிக்கப்படும்)

12) 13-3-2010 (காரி):- சொகூர் பாருவில், ஏற்பாடு:- தமிழ் நெறிக் கழகம் (தமிழ்த்திரு.துரை.இலக்குவன்)

13) 14-3-2010 (ஞாயிறு):- சிங்கை புறப்பாடு

14) 15-3-2010 (திங்கள்):- தமிழகப் புறப்பாடு

குறிப்பு:- மேலே நேரம் குறிப்பிடப்பட்ட நிகழ்ச்சிகளைத் தவிர்த்து மற்றவை மாலை மணி 7.00க்கு நடைபெறும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

தமிழ்க்கடல் ஐயா மதுரை இரா.இளங்குமரனாரின் மலையகப் பயணம் எல்லாவகையிலும் வெற்றிகரமாக அமைந்திடவும் இப்பயணத்தின் வழியாக மலேசியத் தமிழர்கள் புது நம்பிக்கையும் எழுச்சியும் பெறல் வேண்டும்.

புலவர் ஐயா, நிலையான நலத்துடனும் நீடித்த வாழ்நாளுடனும் இன்றுபோல என்றும் வாழ்வாங்கு வாழ்ந்து தமிழுக்கும் தமிழருக்கும் வலுவும் வளமும் உட்டிட எல்லாம் வல்ல இயற்கை செம்பொருளாம் இறைமைத் திருவருள் துணைநிற்க வேண்டுவோமாக!
  • (புலவர் ஐயா அவர்களைப் பற்றிய குறிப்பு முனைவர் மு.இளங்கோவன் வலைப்பதிவிலிருந்து எடுத்தாளப்பட்டது. - நன்றி)

6 comments:

Ilakkuvanar maraimalai said...

என் ஆசான் இளங்குமரனார்க்கு என் வணக்கங்களைத் தெரிவிக்கவும்.மலேசியத்தமிழர்கள்
தேன்மழையென அவர்தம் தமிழுரையை மாந்தி மகிழ்க.தமிழ் எழுச்சி பெறுக.

Ilakkuvanar maraimalai said...

எழுத்துச் சீர்திருத்தத்தை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றித் தமிழக அரசுக்கு அனுப்புங்கள்.உலகின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் அனைத்துத் தமிழ்ச்சங்கங்களும் உடனடியாக இப் பணியில் முனைக.

Ilakkuvanar maraimalai said...

ஆசான் இளங்குமரனார் தமிழ்க்கடல் எனலாம்.அந்தப் -பாற்கடலை நன்கு பயன்படுத்திக்கொள்க.

சுப.நற்குணன் said...

>மதிப்புமிகு ஐயா,

தங்களின் மறுமொழி கண்டு பேருவகை கொள்கிறேன். என் வலைப்பதிவையும் ஒரு பொருட்டாகக் கருதி பார்வையிட்டு, மறுமொழியிட்டிருக்கும் தங்கள் தமிழ் உள்ளத்தை வணங்குகிறேன்.

//என் ஆசான் இளங்குமரனார்க்கு என் வணக்கங்களைத் தெரிவிக்கவும்.//

5.3.2010 எங்கள் பாரிட் புந்தார் ஊரில் தமிழ்க்கடல் ஐயாவின் தமிழ்த் திருவிழா. தங்கள் வணக்கத்தைக் கண்டிப்பாகத் தெரிவிப்பேன்.

தங்களுக்கு நினைவுண்டா ஐயா? இங்கு வந்தபோது புத்திலக்கியம் பற்றி அரிய உரை நிகழ்த்திய அதே தமிழியல் நடுவத்தில்தான் நிகழ்ச்சி நடக்கிறது.

//எழுத்துச் சீர்திருத்தத்தை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றித் தமிழக அரசுக்கு அனுப்புங்கள்.உலகின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் அனைத்துத் தமிழ்ச்சங்கங்களும் உடனடியாக இப் பணியில் முனைக.//

அவைவரும் உடனடியாகச் செய்ய வேண்டிய பணி. மலேசியாவிலிருந்து கண்டிப்பாகச் செய்கிறோம். அதற்கு தங்களைப் போன்றோரின் வழிகாட்டுதலை விழைகிறேன்.

ரவிசங்கர் said...

ஐயாவின் உரைகள் அனைத்தையும் ஒளிப்பதிவாகவோ ஒலிப்பதிவாகவோ வெளியிட ஏற்பாடு செய்ய முடியுமா?

வேலைப்பளு காரணமாக கூடுதல் செய்தி இதழ்களைப் படிக்க இயலவில்லை. தமிழ் சார்ந்த செய்திகளுக்கு உங்கள் தளம் முக்கியமான ஒன்றாக உள்ளது.

நன்றி.

சுப.நற்குணன் said...

>திருத்தமிழ் அன்பர் ரவிசங்கர்,

ஐயாவின் உரைகளைப் பதிவு செய்துள்ளோம். இணையத்தில் ஏற்றும் முயற்சிக்குக் கொஞ்சம் காலம் தேவை. முயல்கிறோம்.

//தமிழ் சார்ந்த செய்திகளுக்கு உங்கள் தளம் முக்கியமான ஒன்றாக உள்ளது. //

தமிழுக்கு ஊழியம் செய்வது மகிழ்ச்சியானது. தங்கள் பாராட்டுதலும்தான்!

Blog Widget by LinkWithin