Thursday, August 06, 2009

தமிழா! நீ பேசுவது தமிழா?




தமிழா! நீ பேசுவது தமிழா?
தமிழா! நீ பேசுவது தமிழா?

அன்னையைத் தமிழ்வாயால் 'மம்மி' என்றழைத்தாய்...
அழகுக் குழந்தையை 'பேபி' என்றழைத்தாய்...
என்னடா, தந்தையை 'டாடி' என்றழைத்தாய்...
இன்னுயிர்த் தமிழைக் கொன்று தொலைத்தாய்...

தமிழா! நீபேசுவது தமிழா?

உறவை 'லவ்' என்றாய் உதவாத சேர்க்கை...
'ஒய்ப்' என்றாய் மனைவியை பார் உன்றன் போக்கை...
இரவை 'நைட்' என்றாய் விடியாதுன் வாழ்க்கை
இனிப்பை 'ஸ்வீட்' என்றாய் அறுத்தெறி நாக்கை...

தமிழா!நீ பேசுவது தமிழா?

வண்டிக்காரன் கேட்டான் 'லெப்ட்டா? ரைட்டா?
'வழக்கறிஞன் கேட்டான் என்ன தம்பி 'பைட்டா?
'துண்டுக்காரன் கேட்டான் கூட்டம் 'லேட்டா?'
தொலையாதா தமிழ் இப்படிக் கேட்டா?

தமிழா!நீ பேசுவது தமிழா?

கொண்ட நண்பனை 'பிரண்டு' என்பதா?
கோலத் தமிழ்மொழியை ஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம் 'சார்' என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழி சாவது நல்லதா?

தமிழா!நீ பேசுவது தமிழா?

பாட்டன் கையில 'வாக்கிங் ஸ்டிக்கா'
பாட்டியின் உதட்டிலே 'லிப்ஸ்டிக்கா?'
வீட்டில பெண்ணின் தலையில் 'ரிப்பனா?'
வெள்ளைக்காரன்தான் நமக்கு அப்பனா?

தமிழா! நீ பேசுவது தமிழா!

15 comments:

சுப.நற்குணன்,மலேசியா. said...

>பெயரில்லா அன்பரே,

உங்கள் நீண்ட மறுமொழியைக் கண்டேன். நிறைய செய்திகளைக் கொடுத்துள்ளீர்கள். எல்லாமே அதிர்ச்சிக்குரியவை. ஆனாலும், அவற்றின் உண்மைநிலையை நான் அறிந்தேனில்லை.

கூடவே, கொப்பளித்து வந்திருக்கும் உங்கள் சீற்றத்தின் மறுபக்கத்தில் இருக்கும் நியாயங்கள் ஏற்கத் தக்கவையே.

உங்கள் மறுமொழியை இங்கே வெளியிட்டு யாரையும் களங்கப்படுத்த நான் விரும்பவில்லை. ஆகவே, உங்கள் இசைவோடு அதனைத் தவிர்க்கிறேன். பொறுத்தருள்க!

இருந்தாலும், உங்கள் தகவலுக்கு நன்றி.

Tamilvanan said...

//பாட்டன் கையில 'வாக்கிங் ஸ்டிக்கா'
பாட்டியின் உதட்டிலே 'லிப்ஸ்டிக்கா?'
வீட்டில பெண்ணின் தலையில் 'ரிப்பனா?'
வெள்ளைக்காரன்தான் நமக்கு அப்பனா?//

உடனடியாக அதன் கடைசி வரிகளை நீக்கி,தமி்ழ் இனத்திடமும் குறிப்பாக ஒவ்வொரு தமி்ழரின் தாய்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க பணிவாக கோருகிறேன். இல்லையெனில் கடுமையான பின்னோட்டம் எதிர்கொள்ள நேரிடும்.

தமிழர் மரபியல் (பாலியல் நோக்கு) பதிவிற்காக நான் அனுப்பிய 2 பின்னோட்டங்களை அமுக்கியது போல் இதையும் அமுக்கைனால் என் பின்னோட்டங்கள் பதிவாகவே வரும்.

மீண்டும் கூறுகிறேன், உடனடியாக அதன் கடைசி வரிகளை நீக்கி,தமி்ழ் இனத்திடமும் குறிப்பாக ஒவ்வொரு தமி்ழரின் தாய்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க பணிவாக கோருகிறேன்.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் தமிழ்வாணன்,

இந்தப் பாடல் வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. காசி ஆனந்தன் அவர்களின் இப்பாடலைத் தமிழிசைப் பாடகர்கள் தேனிசை செல்லப்பாவும் புஷ்பவனம் குப்புசாமியும் பல மெட்டுகளில் பாடியிருக்கிறார்கள்.

இது உங்களுக்குத் தெரியாது போலும்.

//உடனடியாக அதன் கடைசி வரிகளை நீக்கி,தமிழ் இனத்திடமும் குறிப்பாக ஒவ்வொரு தமிழரின் தாய்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க பணிவாக கோருகிறேன். இல்லையெனில் கடுமையான பின்னோட்டம் எதிர்கொள்ள நேரிடும்.//

இதனை முடிந்தால், மேலே குறிப்பிட்ட மூவருக்கும், அதனை ஏற்கனவே ஒலிநாடாவாக குறுந்தட்டாக வெளியிட்ட நிறுவனங்களுக்கும், அந்தப் பாடலை தொலைக்காட்சி நிகழ்ச்சியாக்கிய விஜய் டிவிக்கும், அதனை காணொளியாக உலகம் முழுதும் பரப்பிய யூ டியூப்புக்கும் அனுப்பி வைப்போம்!

//தமிழர் மரபியல் (பாலியல் நோக்கு) பதிவிற்காக நான் அனுப்பிய 2 பின்னோட்டங்களை அமுக்கியது போல் இதையும் அமுக்கைனால் என் பின்னோட்டங்கள் பதிவாகவே வரும்.//

அப்பின்னூட்டங்களை வெளியிடாமைக்குக் காரணமும் சொல்லியிருக்கிறேன். தயவுகூர்ந்து பார்க்கவும்.

கோவி.மதிவரன் said...

வணக்கம்

நல்ல அருமையான பாடலைப் போட்டிருக்கின்றீர்கள் . தொடர்ந்து இம்மாதிரியான் இன முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் பாடல்களை வெளியிடுங்கள்.

தமிழனாகப் பிறந்திருக்கின்ற நமக்கு நமக்கு நமது மொழியையும் பண்பாட்டையும் காக்கின்ற மிகப்பெரிய பொறுப்பு இருக்கின்றது. ஆனால், பலர் இன்றைய நிலையில் "தமிங்கிலனாக" மாற்றம் கண்டு வருகின்றனர். மொழியின் பெருமையினை உணராதவர்களாக விளங்கி வருகின்றனர். அப்படி இருப்பவர்களுக்கு இப்பாடல் நல்ல மருந்து. வளர்க உங்கள் பணி.

Admin said...

என் வலைப்பதிவில் தமிழ் மொழிக்கொலை பற்றிப்பேசப்படும் போது என் ஞாபகத்துக்கு அடிக்கடி வந்த பாடல்.

பகிர்வுக்கு நன்றி நண்பா..

Unknown said...

வணக்கம், பாடல் சாட்டையடியாக இருந்தது.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர்கள்
கோவி.மதிவரன்,
சந்ரு,
இராசு,

மூவருக்குமே மனமார்ந்த நன்றி!

//தமிழனாகப் பிறந்திருக்கின்ற நமக்கு நமக்கு நமது மொழியையும் பண்பாட்டையும் காக்கின்ற மிகப்பெரிய பொறுப்பு இருக்கின்றது.//

நல்ல கருத்து! இன்று மிகப் பெரிய பின்னடைவை எதிர்கொண்டிருக்கும் நமது குமுகாயம் சிந்திக்க வேண்டிய கருத்து.

கும்மாச்சி said...

நல்லக் கேள்வி, இதுதான் இன்றைய தமிழ்.

தமிழ் காதலன் said...

//அன்னையைத் தமிழ்வாயால் 'மம்மி' என்றழைத்தாய்...
அழகுக் குழந்தையை 'பேபி' என்றழைத்தாய்...
என்னடா, தந்தையை 'டாடி' என்றழைத்தாய்...
இன்னுயிர்த் தமிழைக் கொன்று தொலைத்தாய்...//

வெளுத்து வாங்கிவிட்டீர்கள்.

உங்களது தமிழ் வழி தொடரட்டும்,
சுத்தியலால் அடித்தாற்போல் சொற்கள் மிரட்டுகின்றன.
யாமும் தமிழ் வழி நடப்போம்.
வாழ்க தமிழ்,வளர்க தமிழ்.
வந்தே மாதரம்.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர்கள்
கும்மாச்சி,
தமிழ்க் காதலன்,

உங்கள் இருவரையும் புதிதாகக் காண்கிறேன். வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி.

தொடர்ந்து வருக!

தமிழரண் said...

"தமிழா! நீ பேசுவது தமிழா?"

என்ற பாடல் ஒவ்வொரு தமிழனின் செவ்வியிலும் எப்பொழுதும் ஒலித்துக்கொண்டே இருக்க வேண்டும் என நான் விருபம்புகிறேன். குறிப்பாக கடைசி வரி.
//வெள்ளைக்காரன்தான் நமக்கு அப்பனா?//

நல்ல பாடலைப் பதிவுசெய்தமைக்கு என் நன்றி.

Tamilvanan said...

//காசி ஆனந்தன் அவர்களின் இப்பாடலைத் தமிழிசைப் பாடகர்கள் தேனிசை செல்லப்பாவும் புஷ்பவனம் குப்புசாமியும் பல மெட்டுகளில் பாடியிருக்கிறார்கள்.//

இவ்வரிகள் ஒவ்வொரு தமி்ழனுக்கும் படைப்புகளில் வீர உணர்வு ஊட்டிய காசி ஆனந்தனின் வரிகளாகவே இருக்கட்டும்.அதனால் வெறும் பாட்டின் மெட்டுக்காக எழுதப்பட்ட அவ்வரிகள் ஏற்றுக்கொள்ளப் பட வேண்டிய அவசியமி்ல்லையே.
//வெள்ளைக்காரன்தான் நமக்கு அப்பனா?//

இந்த வரிகளின் அர்த்தம் என்ன என்று உணர்ந்துதான் பதிவிட்டீர்களா? அல்லது உங்களால் இவ்வரிகளை அர்த்ததோடு விளக்க முடியுமா?

தமிழை பிறமொழி கலப்போடு பேசினால் எழுதினால் அவனின் பிறப்பையே சந்தேகிப்பீர்களா?

தவறு யார் செய்தாலென்ன தவறு தவறுதான்.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் தமிழ்வாணன்,

மீண்டும் வருக!

//தமிழை பிறமொழி கலப்போடு பேசினால் எழுதினால் அவனின் பிறப்பையே சந்தேகிப்பீர்களா?//

கண்டிப்பாக!!

தமிழன் யாருக்கும் மண்டியிடான்..
மண்டியிட்டால் பிறப்பின்மேல் ஐயம்!
பெற்றவர்மேல் ஐயம்!
என்று தயக்கமின்றிச் சாற்று..!!

இது தமிழறிமா பாவலரேறு பாட்டு!

எப்போதும் நவின இலக்கியமே படித்துக்கொண்டிராமல்....
அப்பப்போ இப்படிப்பட்ட நல்ல இலக்கியங்களையும் படிப்பது நற்சிந்தையாளருக்கு அழகு!

தமிழநம்பி said...

நற்குணன் ஐயா,

பாவலரேறு பாட்டு இதுதான்:


ஒற்றைத் தமிழ்மகன் உள்ளவரை உள்ளத்தே

அற்றைத் தமிழ்த்தாயிங் காட்சி புரியும்வரை

எற்றைக்கும் எந்நிலத்தும் எந்த நிலையினிலும்

மற்றை இனத்தார்க்கே மண்டியிடான்
மண்டியிட்டால்

பெற்றவர்மேல் ஐயம் பிறப்பின் மேல் ஐயமெனச்

சற்றும் தயக்கமின்றிச் சாற்று.

----------------------------------

தமிழ்வாணன் என்ற பெயரில் வந்து எழுதிய அனபர் பார்வைக்கு :-

பிறப்பால் உயர்ந்தவர்கள் குறிப்பிட்ட சிலர் மட்டுமே மற்றவர்கள் இழிந்தவர்கள் என்று கூறியதை அறியும்போது வராத சீற்றம் -

தமிழை நீசமொழி என்று கூறியதை அறியும்போது வராத சீற்றம் -

மநுவின் கொடுமை சான்ற செய்திகளை அறியும் போது வராத சீற்றம் -

தமிழினத்தைச் சான்றுகளற்ற போரில் கொடுங் கொடுமையான முறையில் கொன்று குவித்தபோது வராத சீற்றம் -

தமிழ்த் தாய்க்குலத்தைச் சீரழித்து நாசமாக்கிய போது வராத சீற்றம் -

உங்களுக்கு-

தமிழர்க்கு உணர்வு கொளுத்த எழுதப்பட்ட பாடல் வரியைப் படித்ததும் பீறிட்டிருக்கிறது.

உங்களை அடையாளம் காட்டுதற்கு இதுவே போதும்.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் தமிழநம்பி ஐயா,

நீண்ட காலத்திற்குப் பின்னர் தங்களை இங்குக் காண்பதில் மகிழ்ச்சி. தங்கள் நலம் நாடுகிறேன்.

பாவலரேறு ஐயா பாடலுக்கும்,அடுக்கிச் சொல்லியிருக்கும் 'பாட்டுக்கும்' உள்ள பொருள் ஆழமானது; தமிழரின் சிந்தனைக்கு அவசியமானது.

நன்றி, தொடர்ந்து வருக.

Blog Widget by LinkWithin