Monday, August 03, 2009

நவின இலக்கியம் + பாலியல் = எச்1என்1 பன்றிக்காய்ச்சல்

நேற்று முன்தினம் எங்கள் ஊரில் இரண்டு தமிழ்ப்பள்ளிகள் மூடப்பட்டன. காரணம் வேறொன்றுமில்லை. எச்1என்1 நோய்க்கு எதிராக மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைதான். ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதைவிட கொடுமை என்னவென்றால், இதுவரை பேராவிலும் சொகூரிலும் இரண்டு மாணவர்கள் இந்த எச்1என்1 எமனுக்கு இறையாகி உள்ளனர்.

இன்று உலகத்தையே குலைநடுங்க வைத்திருக்கிறது இந்த எச்1என்1 எனப்படும் பன்றிக் காய்ச்சல். மெக்சிக்கோ நாட்டில் எங்கோ ஓர் மூலையில் ஏதோ ஒரு பன்றிக் கொட்டகையில் எந்தவொரு பன்றியிடமிருந்தோ பரவியதுதான் இந்தக் கிருமி. ஆனால் பாருங்கள். கண்டங்கள் கடந்து – நாடுகள் கடந்து – கடல் கடந்து – வெளி கடந்து – பல்லாயிரக் கணக்கில் மனிதர்களைக் கடந்து இன்று மலேசியாவில் – ஒரு மாநிலத்தில் – ஒரு வட்டாரத்தில் – ஒரு சிற்றூரில் – ஒரு தமிழ்ப்பள்ளியில் – ஒரு வகுப்பறையில் பயிலும் ஒரு மாணவனை வந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. என்ன ஒரு வியப்பு! என்ன ஒரு விந்தை!


அறிந்தோ அறியாமலோ எவனோ – எங்கோ – எப்போதோ செய்த ஒரு சிறு தவறினால் இன்று இவ்வளவு பெரிய பேராபத்து நடந்துகொண்டிருக்கிறது.

மெக்சிக்கோவில் உருவான இந்த உயிர்க்கொல்லிக் கிருமியானது நமது ஊர் வரை – வீட்டு வாசல் வரை வந்து உயிரை அச்சுறுத்தும் என யாராவது கனவிலும் நினைத்திருப்பார்களா? அவதானித்திருப்பார்களா? அல்லது தின்றுகொழுத்த அந்த அறிவுகெட்டப் பன்றிகள்தான் இதனை அறியுமா? சிந்தித்துப் பாருங்கள்! ஆனால், இது நடந்திருக்கிறது என்பதுதான் இன்றைய நடப்பியல்(நிதர்சனம்).

இதைத்தான் கயாசு கோட்பாடு (Chaos Theory) அதாவது வண்ணத்துப்பூச்சி விளைவு (Butterfly Effect) என்கிறார்கள் போலும். இது என்ன கோட்பாடு என்று நீங்கள் கேட்கலாம். உடனே ஓடிப்போய் கமலின் ‘தசாவதாரம்’ படத்தை மீண்டுமொரு முறை போட்டுப் பார்த்தால் இந்தக் கயாசு கோட்பாடு புரிந்துவிடும்.

அதாவது, உலகத்தில் நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் ஏதோ ஒரு பின்னணி இருக்கிறது. காரணமே இல்லாமல் எதுவும் நடப்பதில்லை. இன்று 21ஆம் நூற்றாண்டில் நிகழும் ஒரு பேரழிவுக்கான பின்னணி 12ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கியிருக்கலாம் என கூறுவதே இந்த கயாசு கோட்பாடு..

சரி இருக்கட்டும். இதற்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்று இந்நேரம் உங்கள் மண்டையில் மணி அடித்திருக்கும். சொல்கிறேன்.

இன்று, தெரிந்தோ தெரியாமலோ - அறிந்தோ அறியாமலோ நவின இலக்கியம், பாலியல் கதை, நவின மொழி என்றெல்லாம் வரைமுறை தெரியாமல் சிற்சிலர் செய்துகொண்டிருக்கும் வேலையற்ற வேலைகள் பிறகு ஒரு காலத்தில் நமது மொழிக்கும் – இனத்திற்கும் – மக்களுக்கும் பெரும் கேடாகவும் கொடுமையாகவும் பேரிடராகவும் மாறக்கூடும்.

அப்படி ஒரு நிலைமை வரும்போது ஒருவேலை இன்று இந்தக் கேடுகளைச் செய்பவர்கள் உயிரோடு இல்லாமல்கூட போகலாம். ஆனால், இவர்கள் தூவிவிட்டுச் செல்லுகின்ற நச்சுக்கிருமிகள், எச்1என்1 போல சமூகத்தில் பரவி பெரும் சீரழிவை ஏற்படுத்துமா இல்லையா? அப்போது இதற்கு தீர்வு காண்பது இயலுமா?

தசாவதாரம் படத்தில் எப்போதோ கடலில் வீசப்படும் பெருமாள் சிலைக்கும் அண்மையில் நடந்த சுனாமிக்கும் தொடர்பு இருக்கிறது என்று காட்டுகிறார்களே.. அப்படித்தான் இதுவும்.

மரபு இலக்கியங்களில் மிக நயமாகச் சொல்லப்பட்ட பாலியல் விடயங்களைத் தப்பும் தவறுமாக – அரையும் குறையுமாகப் புரிந்துகொண்ட சிலர், நாங்களும் அப்படித்தான் நவின இலக்கியம் படைக்கிறோம் என்று கிளப்பியுள்ளார்கள். இந்தக் குறைகுடங்களால் ஏற்படும் சங்கடங்களே இன்று எல்லைமீறிக் கொண்டிருக்கின்றன.

அப்படி என்றால், இந்தக் குறைகுடங்கள் வாரி இறைக்கும் வரம்புமீறிய பாலியல் கதைகள் – பாலுணர்ச்சிப் படைப்புகள், தமிழ் அறிவும் மரபியல் தெளிவும் அறவே அற்றுப்போய் மக்குப்பிண்டங்களாக இருக்கும் இன்றைய / நாளைய இளையோர்களை என்ன செய்யும்? எப்படி பாழ்படுத்தும்? எவ்வாறு சீரழிக்கும்? என்று சிந்தித்துப் பாருங்கள்..!!

ஐயகோ! நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது..!! உயிரின் வேர்வரையில் நடுக்கம் ஏற்படுகிறது..!!

இதனை இன்றைய நவினப் படைப்பாளிகள் எண்ணிப்பார்க்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. அவர்களைக் கட்டுப்படுத்த நமக்கு உரிமையும் இல்லை. ஆனாலும், அவர்களுக்கு ஒரு பொறுப்புணர்ச்சி வேண்டாமா? சமூகக் கடப்பாடு வேண்டாமா? மொழிநலம் – இனநலம் வேண்டாமா? இதுவே நமது கேள்வி – ஆதங்கம் எல்லாம்.

இந்த உணர்வின் காரணமாகத்தான்,

“இலக்கணமும் இலக்கியமும் தெரியாதான்
ஏடெழுதுதல் கேடு நல்கும்”
என்று பாவேந்தர் உணர்ந்து பாடினார் போலும்!

அதேபோலத்தான், பாவலரேறு பெருஞ்சித்திரனார் இசை, நடனம், நாடகம், திரைப்படம், இலக்கியம் என அனைத்து கலைகளிலும் ஈடுபட்டுள்ள கொடுங்கேடர்களைக் கண்டு மனம்நொந்துபோய் இவ்வாறு பாடினார் போலும்!!படித்த மடையர் பாழ்செய்யும் உலகம்!
படித்த கயவரே வலம்வரும் உலகம்!
வீணர் நிறைந்த விளம்பர உலகம்!
நாண மற்றவர் நடக்கின்ற உலகம்!
கலையெனும் பெயரால் காமத்தைப் பாய்ச்சும்
புலையர் புகுந்த புழுக்கறை உலகம்!

23 comments:

Admin said...

உங்கள் வலைப்பக்கம் நான் வருவது இதுவே முதல் தடவை தமிழ் மொழி சார்ந்தவைகளையும், தமிழ் இலக்கியம் சார்ந்த விடயங்களையும் தேடிப்படிக்கும் எனக்கு உங்கள் வலைப்பதிவு கிடைத்தது சந்தோசமே...

உங்கள் பதிவுகள் அருமை நரிகள்...

Admin said...

அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

VIKNESHWARAN ADAKKALAM said...

//ஐயகோ! நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது..!! உயிரின் வேர்வரையில் நடுக்கம் ஏற்படுகிறது..!!//

கலைஞர் ஈழப் போரின் போது பேசிய வசம் மாதிரியே இருக்கு... :)

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் சந்ரு,

தங்களை அன்புடன் வரவேற்கிறேன். தொடர்ந்து வருக!

//உங்கள் பதிவுகள் அருமை நரிகள்.//

புரியவில்லையே..??

வாழ்த்துக்கு நன்றி.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் விக்கினேசுவரன்,

//கலைஞர் ஈழப் போரின் போது பேசிய வசம் மாதிரியே இருக்கு... :)//

எழுத்துப் போரில் பேனா முனைகளும் ஒரே மாதிரிதான் பேசுமோ விக்கி..:)

கலைஞர் அளவுக்கு என்னையும் தூக்கியோ அல்லது இறக்கியோ விடாமல் இருந்தால் சரி...!!

Anonymous said...

//அறிந்தோ அறியாமலோ எவனோ – எங்கோ – எப்போதோ செய்த ஒரு சிறு தவறினால் இன்று இவ்வளவு பெரிய பேராபத்து நடந்துகொண்டிருக்கிறது.//

அறியாமல் செய்யும் தவறுக்கே உலகம் பலியாகிக்கொண்டிருக்கிறது. நவின குறைகுடங்களால் அறிந்து செய்துகொண்டிருக்கும் படைப்பினால் தமிழுகத்திற்கு ஏற்படவிற்கும் கொடுமை எத்தகையதோ??

குறைகுடங்கள் அனைத்தும் நிறைகுடங்களாக மலரும் நாள் எப்போதோ??? செவியில் நுழைந்தால் சரி.

மு.மதிவாணன்
கூலிம்

Anonymous said...

ஐயம் கொண்டேன் என் வாழ்வில்..
எச்1என்1 கிருமியைக் கண்டு அல்ல...
அதைவிட ஒரு கிருமி உலகில் உள்ளதோ என்று...

நவின இலக்கியம் என்ற ஒரு கிருமி...
நாசமாய் போகிறது என் மொழி...
எடுத்துக்கூறயாரும் இல்லையேஎன்று கலங்கினேன்...
கண்ணீரை துடைத்தது திருத்தமிழ் என்ற வளைப்பதிவு...

ஐயா சுப.நற்குணன் அவர்களுக்கு நன்றி.

-செந்தமிழன்(சிம்பாங் அம்பாட்)-

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் மு.மதிவாணன்,

தொடர்ந்து வருவதற்கு நன்றி. நான் தமிழன்; என் இனம் தமிழினம்; என் மரபு தமிழ் மரபு என்ற ஆழ்ந்த எண்ணம் இருந்தால் அல்லது ஏற்பட்டால் ஒழிய எவரையும் திருத்த முடியாது! அப்படி திருத்த முயல்வதும் அறிவுடைமை ஆகாது!

தமிழனைப் பார்த்து நீ தமிழன்டா என்று சொல்லவேண்டிய அவலநிலைக்கு இன்று நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.

அடுத்த 50 ஆண்டுகளில் மலேசியா மற்றொரு மொரிசியசாக மாறிவிடும் என்பதை என்னைப் போலவே நீங்களும் நம்புங்கள்!!

தமிழனின் இன - மொழி அடையாளத்தை அடியோடு அழித்ததற்காக எதிர்காலத் தமிழர்களால் நிகழ்காலத் தமிழர்கள் கண்டிப்பாகப் பழிக்கப்படுவார்கள் - சபிக்கப்படுவார்கள்.

அப்படி பழிக்கப்படுபவர்களில் - சபிக்கப்படுபவர்களில் மொழி - இனக் கேடகர்களுக்கே முதலிடம் கிடைக்கும். இதையும் கண்டிப்பாக நம்புங்கள்.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் செந்தமிழன்,

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

//நவின இலக்கியம் என்ற ஒரு கிருமி...
நாசமாய் போகிறது என் மொழி...
எடுத்துக்கூறயாரும் இல்லையேஎன்று கலங்கினேன்...
கண்ணீரை துடைத்தது திருத்தமிழ் என்ற வளைப்பதிவு...//

சமூகக் கடப்பாடு (Social Responsibility) என்பது எல்லாருக்கும் இருக்க வேண்டும்.

குமுகாயத்தில் ஆங்காங்கு நடக்கும் சின்ன சின்ன தப்புகளும் தவறுகளும் நச்சுப் புழுவாக நமது மொழியையும் இனத்தையும் அழித்துக்கொண்டிருக்கிறது.

அணையப் போகும் தீபம் சுடர்விட்டு எரிந்துகொண்டிருக்கிறது.

விரைவில் சாகப் போகும் 'பிணம்' சிரித்துக்கொண்டிருக்கிறது.

இதைப்பற்றியெல்லாம் இன்று எவருக்கும் கவலையில்லை. நான் வாழ வேண்டும்.. என் குடும்பம் குட்டி வாழ்ந்தால் போதும்.. என்ற கடைந்தெடுத்த தன்னல வட்டத்துக்குள் எல்லாருமே செக்குமாடாய் வட்டமடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன அடையாளத்தை அழித்துவிட்டு தங்கள் குழந்தைகளை கோடிசுவர 'அகதிகளாக' ஆக்குவதற்கு இன்றைய தமிழர்கள் பெரும் பாடு படுகிறார்கள்.

அழிந்துபோவதற்கு ஆளாய் பறந்துகொண்டுருக்கிறார்கள்.

Anonymous said...

வணக்கம்

நவின இலக்கியம் தொடர்பாக தாங்கள் வங்கிவரும் கருத்துகள் சிறப்பு. என்ன செய்வது இந்த கேடு கெட்ட தமிழர்களை என்ன வென்று சொல்வது. அதுவும் தமிழால் வேலைக்குச் சேர்ந்து தமிழால் வயிற்றைக் கழுவிக் கொண்டிருக்கும் தமிழாரியரே இப்படிச் செயல்படுவது வெட்கக் கேடு .ஆபாசமாக எழுதுவதும் அதை இலக்கியம் என்பதும் தம்பட்டம் அடிப்பதும் அவர்களின் இறுமாப்பைக் காட்டுகின்றது. தானும் முறையாய்ப் படிப்பதில்லை தகுந்தவர் சொன்னால் கேட்பதில்லை .

தமிழுடன்

சந்திரன் மலாக்கா

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் சந்திரன் (மலாக்கா),

உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி. தொடர்ந்து வருக! உங்கள் எண்ணங்களைத் திருத்தமிழில் பகிர்ந்துகொள்க!

*****

>திருத்தமிழ் அன்பர் மூர்த்தி (கூலிம்),

முதன்முறையாக உங்கள் மறுமொழியைக் கண்டேன். உண்மை பெயரோடு எழுதியிருந்தீர்கள்.

என்றாலும், உங்கள் மறுமொழியை இங்கே வெளியிட இயலாமைக்கு வருந்துகிறேன்.

அதில் மிகமிகக் கடுமையான சொல்லாடல்கள் இருப்பதால் அப்படியே பத்திரப்படுத்தி வைத்துள்ளேன்.

எனினும், உங்கள் சீற்றத்தில் ஒரு நியாயம் இருப்பதை உணர்ந்துகொண்டேன்.

தனிமனித சாடல் - பண்பாடு கெட்ட செயல் - சட்டமீறல் = மான நட்டம் என்று வரிந்துகட்டிக்கொண்டு ஒரு கூட்டமே வந்துவிடும்.

ஆனால், இவர்கள்தான் தமிழையும் தமிழ் மரபையும் பண்பாட்டையும் இலக்கியத்தையும் மூர்க்கத்தனமாகத் தாக்குவார்கள் - சிதைப்பார்கள் - சின்னபின்னப்படுத்துவார்கள்.

அதைப்பற்றியெல்லாம் அவர்களுக்குக் கவலையில்லை. இவர்கள் மூக்குநுனியைப் பற்றி யாராவது ஏதாவது சொல்லிவிட்டால் இவர்களின் மேதாவித்தனத்தையும் அடாவடியையும் பார்க்க வேண்டுமே!!

கடைந்தெடுத்த தன்னலப் பேர்வழிகள் இவர்கள்!!

தொடர்ந்து வருக! மறுமொழி தருக!

சுப.நற்குணன்,மலேசியா. said...

>நவின இலக்கியம் + பாலியல்= எச்1என்1 என்ற என் பதிவுக்குப் பதில்சொல்வதற்காக, கே.பாலமுருகன் எனும் வலைப்பதிவில் (3.8.2009) எழுதப்பட்ட இடுகைக்கு மறுமொழியாக இதனை எழுதுகிறேன்.

“தின்றுகொழுத்த அந்த அறிவுகெட்டப் பன்றிகள்தான் இதனை அறியுமா?” என்ற என் வரிகள் அவருடைய மண்டைக்குள் டங்கு டங்கு என்று மணியடித்துவிட்டது போலும். வரிக்கு வரி வாயில் நுரைதள்ளும் அளவுக்கு வசைபாடி தீர்த்திருக்கிறார் அந்த அன்பர்.

1.//மெத்த படித்தவர்கள் இப்படி ஒரு மிருக இனத்தை சூட்சமத்திற்குள் சொருகி தனது அறிவியல் அறியாமையின் மூலம் மிருகவதை செய்ய முற்படுகிறார். ஒரு மிருகத்தை அவமானப்படுத்தும் ஒருவர் மிருகத்திற்கு நிகரானவர் என்று சொல்லலாமா? //

2.//பன்றியும் ஒரு மிருகம்தானே. அதை இப்படியொரு உவமைக்கு ஆளாக்கி தனது வெறித்தனத்தைக் காட்டியிருக்கும் இந்த நபரை என்ன செய்யலாம்?//

வள்ளற்பெருமானையே மிஞ்சிவிட்ட சீவக்காருண்யமப்பா இது!!

சீவகாருண்யரான அன்பரே, கீழே வருபவை நீங்கள் எழுதிய வரிகள்தான். பன்றிக்காகத் துடிக்கும் உங்கள் இளகிய மனம் இவற்றை எப்படி எழுதத் துணிந்தது?

அ.//“எமன் உயிரைப் பறிக்க எருமைமாட்டின் மீது வருகிறார்” இவர் செய்யும் தொழிலுக்கு எருமை மாட்டையும் உடந்தையாக்குகிறார்.//

ஆ.//அவர் ஒரு “தெர்ரர்” போல தெரிய வேண்டும் என்பதற்காக இருக்கலாம்.//

இ.//“மொத்த குதிரைகளும் நம்ப முனியாண்டி சாமி எப்பொழுது குத்தகைக்கு எடுத்தார்” என்பதைச் சற்றுக் கூர்ந்து கவனித்து அவதானிக்க வேண்டும்”//

இவை, 'சாமி வதை' எனச் சொல்லாமா? இப்படியொரு உவமைக்கு ஆளாக்கி வெறித்தனத்தைக் காட்டியிருக்கும் உங்களை என்ன செய்யலாம்?????????

ஈ.//“யானையை விநாயகர் என்று சொல்லும் இந்து சமூகம்தான் அதைக் கோவில் வாசலில் பிச்சையெடுக்கவும் பழக்கப்படுத்திருக்கிறது” //

அடடா யானையை - விநாயகரை இப்படி கேவலப்படுத்தலாமா? இதனைத் 'தெய்வ வதை' என்று சொல்லலாமா?

உ)//என்றாவது ஒருநாள் மிருகங்களெல்லாம் அழிந்துவிட நேர்ந்தால் அன்று அனாதையாக நிற்கப் போவது இந்து கடவுள்கள்தான் போல.//

கடவுளுக்கே அறுவாவா? இதை 'கடவுள் வதை' என்று சொல்லலாமா?

ஊ)//தலைவியோட உடம்புக்கு ஆசைப்பட்ட தலைவன் (கணவன் அல்ல) அவளை அவனோடு படுக்கும்படி தோழியைத் தூது அனுப்புகிறான்.//

இதை 'தலைவன் வதை' என்று சொல்லலாமா?

எ)//8 வயது சிறுமியைக் கடத்தி அவளின் யோனியில் கத்திரிக்காய், முள்ளங்கி போன்றவற்றைத் திணித்து பாலியல் வன்கொடுமைப்படுத்திய மனம் சிதைந்தவர்கள் இருக்கும் பல மனிதர்களை கொண்ட சமூகமும்தான் இங்கேயும் உள்ளன.//

இதை உங்கள் நவின மொழியில் 'யோனி வதை' எனச் சொல்லலாமா?

இப்படியொரு உவமைக்கு ஆளாக்கி வெறித்தனத்தைக் காட்டியிருக்கும் உங்களை என்ன செய்யலாம்?????????

இப்படி அடுக்கிக்கொண்டே போக முடியும். மிருக வதை என்று பதறும் நீங்கள் அந்தப் பதற்றத்தை...

மரபியலை வதை செய்தபோது
பண்பாட்டை வதை செய்தபோது
பாலுறுப்பை வதை செய்தபோது
மொழியை வதை செய்தபோது

கொஞ்சமேனும் காட்டியிருக்கலாமே? அங்கெல்லாம் பதறாத நீங்கள் பன்றிக்காக பதறுகிறீர்களே..!!

இருந்தாலும் வாழ்க உங்கள் சீவகாருண்யம்!

VIKNESHWARAN ADAKKALAM said...

உங்களுக்கு பின்னூட்டம் வரும் திசைகளும் மொழி புலமையும் காண்கையில்....

சரி வேண்டாம்....

சுப.நற்குணன்,மலேசியா. said...

>நவின இலக்கியம் + பாலியல்= எச்1என்1 என்ற என் பதிவுக்குப் பதில்சொல்வதற்காக, கே.பாலமுருகன் எனும் வலைப்பதிவில் (3.8.2009) எழுதப்பட்ட இடுகைக்கு மறுமொழியாக இதனை எழுதுகிறேன்.

1.//காமக்கிளர்ச்சியை ஏற்படுத்தும் எழுத்துக்கும் யதார்த்தவாத எழுத்துக்கும் வித்தியாசம் தெரியாத பரந்துபட்ட வாசிப்பாளுமை இல்லாதவர்களுக்கு தவறான கடுமையான ஒப்புவமைகள்தான் மேற்கோளாக வந்து சேரும்.//

உங்கள் பரந்துபட்ட வாசிப்பாளுமை இடுப்புக்குக் கீழேயே சுற்றிக்கொண்டிருக்கிறது. இடுப்புக்கு மேலே மனம் - மூளை - புத்தி என்றெல்லாம் இருக்கிறது. அதற்காகவும் சேர்த்து உங்கள் வாசிப்பாளுமை எப்போதாவது மேல்வளர்ச்சி கண்டதுண்டா? உங்கள் சட்டியில் இருப்பது தானே அகப்பையில் வந்துகொண்டிருக்கிறது!!

2.//நவீன இலக்கியத்தை வாசித்துச் சீரழிந்து போவதற்கு. புறஉலகின் பாதிப்புகள் எவ்வளவோ இருக்க இது என்ன சிறுபிள்ளைத்தனமான புரிதல் மற்றும் அளவுகோல்.//

எப்போதோ ஒரு நாள் சாகத்தான் போகிறோம். அதற்காக, இப்போதே தற்கொலை செய்துகொள்வோம் என்று அழைப்பது போலிருக்கிறது.

3.//சங்க இலக்கியம் ஓர் ஆழ்நதியைப் போன்றது, அதில் இன்னமும் எனது சமக்காலத்தைத் தூக்கிக் கொண்டு நீந்தும் ஒரு மீன் குஞ்சுதான் நான். இதைச் சொல்லிக் கொள்வதில் எனக்கு எந்தத் தடையும் இல்லை.//

இதைத்தான் கண் கெட்ட பிறகு கதிரவ வணக்கம் என்பார்களோ? மீன் குஞ்சு இத்தனை நாளும் திமிங்கிலம் போல 'பந்தா' காட்டியதே! எப்படி?

4.//உலகமயமாதலின் தன்மைகள் பற்றியும் உலகம் சிறு கிராமமாக மாறிவிட்டதன் பாதிப்புகள் பற்றியும் விழிப்புணர்வே இல்லை என்பது தெரிகிறது.//

உலகமே சிறு கிராமமாகிவிட்டதால், இங்கென்ன எல்லாரும் நீச்சலுடையில் அலைகிறார்களா? ஒட்டுத்துணிகூட இல்லாமல் ஒட்டுமொத்த குடும்பமே ஒன்றாக குளிக்கிறதா? எவனும் எவளுடனும் குடித்தனம் பண்ணலாம், வேண்டாமென்றால் வெட்டிவிடலாம் என்று வாழுகிறார்களா?

வெள்ளைக்காரக் குப்பையின் துர்நாற்றாம் இவை. உங்கள் கைகளைக் கற்பனை உலகத்தை நோக்கியே நீட்டிக் கொண்டிருக்காமல், கால்கள் ஊன்றியிருக்கும் நடப்பியல்(நிதர்சன) பூமியைக் கொஞ்சம் பார்த்தால் ஒரு வேளை தெளிவு பிறக்கலாம்..!!

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் விக்கினேசுவரன்,

//கையில்..//.....?????????

Unknown said...

கமலின் தசாவதாரம் படம் பாகிஸ்த்தானிய இஸ்லாமியர்களின் வாழ்வையும் தெலுங்கு இனத்தவரின் மொழி உணர்வையும் கேலி செய்த ஒரு சினிமாவும்கூட, மேலும் பெரியாரிசத்தை முன்னெடுக்க வேண்டும் என்கிற சில இடங்களில் சலிப்பை ஏற்படுத்தும் பழைய விவாதங்களைக் கொண்டு வந்தது. படம் முழுக்க துரத்துதலும் தப்பித்தலும் என (butterfly effect) என்கிற தியோரியைத் தவறாகப் பயன்படுத்திய சினிமா என்று பல திரை விமர்சகர்கள் விமர்சித்து பழைய கதையாகிவிட்ட ஒன்றை மலேசியாவின் ஒரு வலைப்பதிவாளர் மிகவும் புகழ்ந்து தனது விவாதங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளும் கூத்து சிரிக்க வைக்கிறது//

நீங்க பேசினா மாற்றுக் கருத்துகள்; நாங்க பேசினா கூத்து கும்மாளமாய்யா???
அது சரி, Butterfly effectனா துரத்தலும் தப்பித்தலுமா? புதுசா இருக்கே விளக்கம்.. அண்ணே பாலமுருகன் பெரிய சயிண்டிஸ்ட் போல...
நற்குணரே, பேசாம கே.பா-வை விண்வெளிக்கு அனுப்பலாம்.

//சில புனைவுகளும் கற்பனைகளும் உவமைகளும் அழகியலுக்காகச் சேர்ந்தே வரும்//
தூசிகள் படர, அந்த முதல் போஸ்டரில் நின்றிருந்தது ஒரு நிர்வாணப் பெண். சிறு அதிர்வுக்குள்ளிருந்து மீண்டு வருவதற்குள் அடுத்த போஸ்டர் கீழே சரிந்து தானாக விரிந்தது, யோனி காட்டியபடி இரு கால்களையும் அகல பரப்பி அமர்ந்திருக்கும் பெண்ணின் படத்தைக் காட்டியது.
இதுதான் அழகியல் சார்ந்த புனைவுகளா?

வலைப்பதிவு வாசக பெருமக்களே,
மனசாட்சியோடு பேசுவோம்.
மேற்சொன்னவைகள் நல்ல செய்திகளா? வெறுமனே நீ நான் எனும் குடுமிப் போர் வேண்டாம்.
நல்லவைகளை மனந்திறந்து பாராட்டுவோம். மற்றவைகளைச் சுட்டிக்காட்டுவோம். எழுத வருபவர் விமர்சனங்கள் ஏற்க துணிய வேண்டும். மாறாக, சப்பைக்கட்டு கூடாது. அதற்கு, வாசகராகிய நாமும் துணை நிற்கக் கூடாது.
வைரமுத்துவுக்கு வராத எதிர்ப்பா?

குமாரின் சிதறல்கள் said...

//அடுத்த போஸ்டர் கீழே சரிந்து தானாக விரிந்தது, யோனி காட்டியபடி இரு கால்களையும் அகல பரப்பி அமர்ந்திருக்கும் பெண்ணின் படத்தைக் காட்டியது.
இதுதான் அழகியல் சார்ந்த புனைவுகளா?//

சரி கருத்து உடன்பாடுகளுடன் கொஞ்சம் நாகரிகமாகவே உரையாடலாம். அது அழகியல் சார்ந்த புனைவுகள் என்று அதை எழுதியவரும் சரி பிரரும் சொல்லக் கிடையாது. யதார்த்தவாத எழுத்துக்குள் அழகியலும் புனைவுகளும் செர்ந்துகொண்டது என்றுதான் குறிப்பிடப்பட்டிருந்தது.

1.//யோனி காட்டியபடி அமர்ந்திருக்கும் பெண்//

2.// கால்களைக் காட்டியபடி அமர்ந்திருக்கும் பெண்//

பாலமுருகன் மேலே(1) சொன்னது தவறென்றால் அதில் எந்த இடத்தில் காமக்கிளர்ச்சி ஏற்படும் என்று சொல்கிறீர்கள்? அல்லது அந்த ஒரு வரி அல்லது அந்த ஒரு “யோனி” என்கிற சொல் எப்படிக் காமக் கிளர்ச்சியை ஏற்படுத்தும்? இது யோனி என்கிற வார்த்தையை வெறும் காமக்கிளர்வுக்குத் தூண்டும் ஒரு பொருளாக நீங்கள் கற்றுத்தருவது போல இருக்கிறது.

அப்படியென்றால், யோனியைப் பாவத்தின் அடையாளம் என்று சொல்லிவிட்டு, (2) இல் சொல்வது போல சொல்லிவிட்டு ஒளிந்துகொள்ள வேண்டியதுதான்.

குமாரின் சிதறல்கள் said...

//வரிக்கு வரி வாயில் நுரைதள்ளும் அளவுக்கு வசைபாடி தீர்த்திருக்கிறார்//

அப்படித் தெரியவில்லை. உங்களின் பன்றிக்காய்ச்சல் சூட்சமத்தின் அடாவடித்தான் அதிகமாக இருக்கிறது. தொடர்ந்து நீங்கள்த்தான் வாயில் அல்ல எல்லாம் இடங்களிலும் நுரைத்தள்ளும் அளவிற்கு அழுது தொலைத்திருக்கிறீர்கள்.

//தின்றுகொழுத்த அந்த அறிவுகெட்டப் பன்றிகள்தான் இதனை அறியுமா?”//
பன்றிகளுக்கு வாய் இருந்தால், உங்களை முட்டி மோதி தள்ளியிருக்கும். பிர மிருகங்களை பலிக்கும் ஓர் இந்துத்துவ ஆசாமித்தான், அதனால்தான் மதம் மிருகங்களின் மீது ஏற்படுத்திய அரசியலை அன்பர் பாலமுருகன் எழுதியதற்கு இதென்ன மதவதையா என்று கோமாளியைப் போல கேட்டுருக்கிறாய்.

//வள்ளற்பெருமானையே மிஞ்சிவிட்ட சீவக்காருண்யமப்பா இது!!//
மிருகங்கள் மீது கருணை காட்ட வள்ளலாராக இருக்க வேண்டியதில்லை, மனிதனாக இருந்தால் போதும் ஆனால் அந்த மனிதத்தன்மை உங்களிடம் இல்லை.

யானையைக் கோவில் வாசலில் பிச்சையெடுக்க வைத்தது இன்றும் உண்மையே. இன்னமும் கோவில்களில் நடந்துகொண்டிருப்பது. மதத்திற்கும் கடவுளுக்கும் வக்காளத்து வாங்கும் நீங்கள் உங்கள் அருகில் பூமியில் வாழும் சக உயிர்களுக்கு மதிப்பளியுங்கள்.

//8 வயது சிறுமியைக் கடத்தி அவளின் யோனியில் கத்திரிக்காய், முள்ளங்கி போன்றவற்றைத் திணித்து பாலியல் வன்கொடுமைப்படுத்திய மனம் சிதைந்தவர்கள் இருக்கும் பல மனிதர்களை கொண்ட சமூகமும்தான் இங்கேயும் உள்ளன.//

ஐயா, நடப்பியல் அறியாதவரே. மலேசியாவில் 8 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கேட்கக்கூட காது கூசும் ஒரு வன்முறைத்தான் இது. இதைச் செய்தவர்கள்தான் யோனிவதை செய்துள்ளார்கள். இதைச் சொல்பவர்களெல்லாம் யோனிவதை செய்கிறார்கள் என்றால் செய்தி வாசிப்பாளர்கள் எல்லாம் “யோனிவதை” செய்பவர்கள் என்று ஆகிவிடுவார்களோ?

உங்களைக் கேள்விக்கேட்டிருக்கும் இந்தப் பபின்னூட்டத்தை நீங்கள் போடவில்லையென்ராலும் பரவாயில்லை. பின்னூட்டம் போடுபவர்களுக்கே புத்திச் சொல்லி கருத்துரைக்கும் தமிழ் ஆசாமியே. . . .

குமாரின் சிதறல்கள் said...

மேற்சொன்னவைகள் நல்ல செய்திகளா?

சுரேஸ்குமார், ஒருமுறை போதைப்பித்தன் ஒருவன் 60 வயது மூதாட்டியை ஒரு பழைய வீட்டில் வைத்துக் கற்பழித்துவிட்டான். (கெடாவில் நடந்தது) இது நடந்தது நம் நாட்டில்தான், இது நல்ல செய்தி இல்லாமல் இருக்கலாம், அதனால் இதை மறைத்துவிடலாமா? அட நீயும் உன் சிந்தனையும். . குப்பை. . குப்பை.

“யோனி என்றதும் உனக்கு வேண்டுமென்றால் ஏதாவது கிளறலாம் ஆனால் எல்லோருக்கும் அது பாதிப்பு என்று கூச்சலிடாதீர். “யோனி” ஆபாசம் கிடையாது. மேலும் அது தமிழ் சொல் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் குமார்,

புதிதாக வந்திருக்கிறீர்கள். அதிகம் எழுதினால் 'புத்தி சொல்கிறீர்களா?' என்று கேட்பீர்கள் என்று நடுநடுங்கிப் போயிருக்கிறேன்.

ஆனாலும் ஒன்று மட்டும் சொல்வேன்.

'இடக்கரடக்கல்' என்ற ஒரு மரபைக் கண்டவர்கள் தமிழர்கள். அதனை மீறாதிருப்பதே எங்களின் பண்பாடு; இதில்தான் உங்களுக்கெல்லாம் முரண்பாடு.

'புத்திசொல்வதைக்' கண்டிக்கும் நீங்கள் தீட்டித்தள்ளியிருக்கிறீர்களே....!!!!!?

முடித்துக்கொள்கிறேன்.
நன்றி வணக்கம்!

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் கண்ணன்,

கடுமையான சொல்லாடல்களின் காரணத்தால் உங்கள் மறுமொழியைத் தவிர்த்துள்ளேன். கடுஞ்சொற்களைத் தவிர்த்து எழுதுங்களேன்!

Unknown said...

எனக்கு ஓர் ஐயம்.. நவீன இலக்கியம் எப்போதும் பாலியல் சிந்தனை அறியாமை;மேம்பாடு;முக்கியத்துவம்;கற்பழிப்பு;காமவெறி பற்றி மட்டும் அலசுவது ஏன்? மற்றதில் எல்லாம் நாம் தேவையான அளவு தேறி விட்டோமா?

Unknown said...

யார் என்ன வேண்டுமானாலும் பேசட்டும் ஐயா. மறுப்புக் கருத்துரைகளையும் மறைக்காமல் வெளியிடும் நீர் நேர்மையான படைப்பாளன் மட்டுமல்ல உண்மையில் திண்மையுள்ள ஆண்மகன். மெச்சுகிறேன். இருந்தால் உம்மைப் போல் இருக்க வேண்டும்.

Blog Widget by LinkWithin